“இல்லாத குறைகளை எடுத்து நடுநாயகமாக வைத்து பேசிக்கொண்டிருந்தால், உண்மையில் இருக்கின்ற குறை என்னவென்று தெரியாமல் போய்விடும்” அரசியல் பற்றிய உரையாடல்களின் பொழுது இதை நாம் எப்போதும் எம் நண்பர்களுக்கு கூறிவந்துள்ளோம். கதிர்விஜயம் மூலம் விரிவடைந்திருக்கும் நட்பு வட்டத்திற்கு இது சம்மந்தமாக எடுத்துரைக்கவே நாம் இடையறாத பணிகளுக்கு இடையில்,தனிப்பட்ட மனசிக்கல்களை புறந்தள்ளி இந்த கட்டுரையை எழுத முற்பட்டு எழுதிக்கொண்டிருக்கின்றோம்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது முதலாக எதிர்கட்சிகளால் சரியான நேர்மையான மக்களிடையே பெரிதாக கொண்டு சேர்க்க முடிகிற அளவிலான எந்த குறைகளை சுட்ட முடிகிறதில்லை. அதன் பொருட்டாய் இன்று வரையில் எப்போதும் இல்லாத குறைகளையே தான் எடுத்து பேசிக்கொண்டிருக்கின்றார்கள். தேச உணர்வுகளுக்கு எதிராக மாநில கட்சிகளின் முன்னோடியான தி.மு.க. தி.க போன்ற இயக்கங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற பிம்பத்தினால், தி.மு.க பின் தமிழகத்தில் தொடங்கப்பட்ட கட்சிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தவிர்த்து நேற்று கட்சி தொடங்கிய விஜய் வரைக்கும். இந்தியா தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று பிதற்றிக்கொண்டிருப்பது,தமிழகத்தில் சரியான மாற்று அரசியல் கட்சியை எதிர்நோக்கி கொண்டிருப்பவர்களுக்கு சோர்வை தருகிறது.
இப்ப என்ன? பா.ஜ.க. நல்ல கட்சி என்று பா.ஜ.க. நல்ல ஆட்சியை தருகிறது என்றால் சொன்னால் போதுமா என்று சிலர் நம்மை நினைக்கலாம். நிர்வாகம் அரசியல் என்பது வேறு, கட்சிகள் செய்து கொண்டிருக்கும் அரசியல் என்பது வேறு, இரண்டிற்குமான வேறுபாட்டை உணர்ந்து அரசியல் அணுகும் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் கதிர்விஜயம் குழுவின் நோக்கம்.
நீட் எதிர்ப்பு தொடங்கி மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பு வரை, இல்லாத குறைகளைத் தான் மையமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
சமூக நீதி சமத்துவம் என்று பேசிக்கொண்டிருக்கும் தமிழகத்தில், கல்வியில் சமத்துவம் எங்கிருக்கிறது. பொறியியல் கல்வியில் வருடத்திற்கு 3லட்சம் பேர் சேர்க்கிறார்கள். எல்லோரும் 3லட்சம் பேரும் ஒரே மாதிரியான கல்விச்சூழல் கிடைக்கப்பெற்று கல்லூரியில் சேர்வதில்லை.அரசுப் பள்ளி,கிராமப்புற அரசுப் பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளி,சி.பி.எஸ்.ஈ. என்று வெவ்வேறு சூழலில் இருந்து கல்லூரியில் சேரும் மாணவர்கள் பொறியாளர்களாகும் பொழுது ஒரே மாதிரியான அல்லது குறிப்பிட்ட ஒரு தர வரம்பிற்குள் இருப்பதில்லை. அநேகமானோர் பெயரளவில் மட்டுமே தான் அவர்கள் பொறியாளர்களாக இருக்கின்றார்கள்.வருடத்திற்கு 3 லட்சம் பொறியாளர்களில் எத்தனை திறன் மிகுந்த பொறியாளர்களை நாம் உருவாக்குகிறோம்? இப்படியான வேறுபாடுகள் ஒருவருக்கு கிடைக்கும் அடிப்படை கல்வி தொடங்கி, அவர் வளரும் ஊரின் சூழல், குடும்பத்தின் பொருளாதார நிலை தொட்டு பல்வேறு காரணிகளால் வேறுபடுகிறது. அவைகள் பற்றியெல்லாம் ஆராயாமல், அவற்றையெல்லாம் சரி செய்யாமல், நீட் வந்து எல்லாம் கெடுத்தது என்று எதிர்க்கட்சிகளின் தூண்டுதலுக்கு ஏற்ப மக்களாகிய நாமும் ஆடிக்கொண்டிருந்தோம். அரசியல் கட்சிகள் எப்போதும் மக்களை அரசு இயந்திரத்திற்கு எதிரானவர்களாகவே தான் வைத்திருக்கின்றார்கள்.நாமும் அதற்கேற்றாற்போலவே நம் அரசியல் அறிவை வைத்திருக்கின்றோம்.
குடியுரிமை சட்ட திருத்தத்தின் பொழுதும் அரசியல்வாதிகள் இதே போன்று இல்லாத சிக்கல்களை மக்களிடம் கொண்டு சென்று ஒரு பதட்ட நிலையை உருவாக்கி வைத்திருந்தார்கள். அந்த சட்டத்தின் வரைவு வந்த பொழுது எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு சில அமைப்புகள் மூலம் மக்களைத் தூண்டி போராட்டம் செய்தார்கள் இப்போது அது சட்டமாக ஆகி விட்டது. ஆளும் கட்சியாக இருந்து கொண்டு போராட்டங்களை தூண்டிவிட்டால், அதை அரசே தான் சமாளிக்க வேண்டும். அதனால், அமைதியாக இருக்கின்றார்கள்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு எடப்பாடி தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அவகாசம் எடுத்துக்கொண்டிருந்த பொழுது, தங்குளுக்குள் குறை சொல்லி அடித்துக்கொள்ள ஆள் இல்லாமல் இருந்தது போல ஒரு தோற்றம் இருக்கவும்; மீண்டும் தேசிய எதிர்ப்பையும் வெறுப்பையும், இங்குள்ள கட்சிகள் கையில் எடுத்தன.
அது எத்தனை கீழ்த்தரமாக போய் விட்டது என்பதற்கு உதாரணம், கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் அவர்கள் குடியரசு தலைவரின் பட்ஜெட் உரை மீதான விமர்சனம்.குடியரசு தலைவரின் பட்ஜெட் உரையில் குறை சொல்ல முடியாமலோ; அல்லது அவர் அறிவிற்கு எந்த குறையும் எட்டாத காரணத்தாலோ; யாரோ ஒருவர் எங்கோ நடந்த பொங்கல் விழாவில் பேசியதை எடுத்துக்கொண்டு வந்து கிண்டல் செய்திருக்கிறார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், பட்ஜெட் தொடர்பான குடியரசு தலைவரின் உரையை பற்றிய தன்னுடைய கருத்தை முன்வைக்கும் பொழுது எத்தனை பொறுப்புடன் இருந்திருக்க வேண்டும். நேர்மறையான எத்தனை கருத்துக்களை எத்தனைவிமர்சனங்களை முன்வைத்திருக்கலாம். ஆனால், பாராளுமன்றத்திற்கும் பட்ஜெட் உரைக்கும் சம்மந்தமில்லாத ஒருவரின் பேச்சை தூக்கிக்கொண்டு வருகிறார்.
மதுரை-கம்யூனிஸ்ட்-தி.மு.க இந்த மூன்றையும் நினைக்கும் பொழுது, சொந்த கட்சி(கம்யூனிஸ்ட்) கவுன்சிலரை கொலை செய்தவர்களை விடுவித்த கட்சியோடு நட்பு பாராட்டிக் கொண்டிருப்பவர்களிடம் வேறு எந்த மாதிரியான அரசியலை எதிர்பார்க்க முடியும்.
இத்தகையவர்கள் இன்னும், இந்தியா தமிழகத்தை வஞ்சிக்கிறது என்கிற கோஷங்களை நிறுத்தப்போவதில்லை. அதில், புதிதாக விஜய்யும் சேர்ந்துகொண்டிருக்கின்றார்.நடிகர் விஜய்யின் பார்வையில், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாம் இந்த பட்ஜெட். அது என்ன தத்துவம் எந்த வகையில் எதிரானது என்றெல்லாம் அவரை கேட்க வேண்டும் இல்லையேல் நாம் சிந்திக்க வேண்டும். அவருக்கு தன்னையும் சங்கி என்று சொல்லிவிடுவார்களோ என்கிற பயமும் உள்ளூர இருக்கத்தான் செய்கிறது. என் நண்பர்கள் சிலர், ப்ரொபைலில் சாமி படம் வச்சா கூட சங்கீ ன்னு சொல்றாய்ங்க என்று நொந்து கொண்டார்கள். தமிழகம் இப்படி சூழலில் இருக்கும் பொழுது, கட்சி தொடங்கியிருக்கும் விஜய்க்கும் அந்த பயம் இருப்பது நியாயம் தான்.
பட்ஜெட் என்பது கட்சி அலுவலங்களில் இருந்து தயாரிக்கப்படுவதில்லை, என்னுடைய பார்வையில், ஒரு நாட்டின் பட்ஜெட்டை தயாரிக்கும் அளவிற்கு திறன் கொண்டு எந்த கட்சி அலுவலகமும் இந்தியாவில் இல்லை. தமிழக பட்ஜெட் வெறும் பி.ஏ. படித்த அல்லது அந்த அளவு படிப்பு தகுதியும் இல்லாத அமைச்சர்களாலும் கூட தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றது. அதையெல்லாம் அவர்கள் வீட்டிலிருந்து தயாரித்து கொண்டு வந்திருப்பார்களா?பட்ஜெட் என்பது தொலைக்காட்சிகளிலும் சமூகம் வலைத்தளங்களிலும் தோன்றும் தற்காலிக பொருளாதார வல்லுநர்களை காட்டிலும் நிர்வாகம் சார்ந்த அனுபவம் உள்ள ஒரு குழுவால், எல்லா காரணிகளையும் ஆராய்ந்து தயார் செய்யப்படுவது.
எப்படியான காரணிகள் ஆராயப் பட வேண்டும் என்பதற்கு ஒரு குட்டி கதை. ஒரு வீட்டில், இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள், இருவருக்கும் நான்கு வருட இடைவெளி. முதல் குழந்தையை இந்த வருடம் கல்லூரியில் சேர்க்க வேண்டும். அந்த குழந்தைகளின் அப்பா, முதல் குழந்தைக்காக அந்த வருடத்தில் சில லட்சங்களை ஒதுக்குகிறார். அப்போது அங்கே ஒரு மாமா வந்து, இரண்டாவது குழந்தையிடம் உங்க அப்பா உனக்கு ஒன்னும் பண்ணலையா என்று கிள்ளி விடும் வேலையை செய்கிறார்.குழந்தை என்ன செய்யும். அந்த தருணத்தில், அப்பா தனக்கு ஓரவஞ்சனை தான் செய்கிறாரோ என்று நினைக்கும்.இந்த மாமா வேலையைத் தான் எதிர்க்கட்சிகள் பிராந்திய கட்சிகள் தேசிய கட்சிகளுக்கு எதிராக எப்போதும் செய்து கொண்டிருக்கிறது.அப்பாவின் வருமானம், கடன், மூத்த குழந்தையின் தற்போதைய தேவை தன்னுடைய தற்போதைய தேவை இப்படியான எதைப்பற்றியும் எந்த காரணிகள் பற்றியும் குழந்தை அறிந்திருக்க நியாயம் இல்லை. ஆனால், மாமாவான இந்த அரசியல் கட்சிகளுக்கு நிச்சயம் தெரியும்.
1999இல், மதுரையில் புதிதாக ஒரு பேருந்து முனையம் திறந்தார்கள். 1970க்கு பின் திருச்சியில் இப்போது தான் புது பேருந்து நிலையம் கட்டிக்கொண்டிருக்கின்றார்கள். எல்லா வருடங்களும் எல்லா ஊர்களிலும் பேருந்து நிலையங்கள் கட்டிக்கொண்டிருக்க முடியாது. இது போன்ற திட்டங்களில், மாநகராட்சி,ஊராட்சி, பஞ்சாயத் என்று அந்த அந்த நிலைகளில் உள்ள நிர்வாக அமைப்புகளின் பங்கும் முன்னெடுப்பு இருக்கும். அதோடு காலமும் தேவையும் நகர மயமாக்கலும் தான் இப்படியான திட்டங்களின் தேவையை தீர்மானிக்கிறது. சென்னை தவிர்த்து இன்னுமும் ஒரு ஊரில் மெட்ரோ திட்டம் வரவில்லையே ஏன் ? சிவகங்கை போன்ற மாவட்டங்களுக்கு மெட்ரோ திட்டம் அறிவிக்காமல் அரசு வஞ்சிக்கிறதா?சிவகங்கையில் பேருந்து வசதிகள் கூட இன்னும் பெரிதாக வளர்ச்சி அடையவேண்டும் தான்.
தற்போது, மத்திய அரசு வெளியிட்டிருக்கும் பட்ஜெட்டில், நமக்கு தனிப்பட்ட அளவில் கவலையளிக்கின்ற விஷயம், அணு மின் சக்திக்கு 20000 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது. “இந்தியாவில் டேட்டா சென்டர்கள் அதிகரிக்கும் மின் தேவை அதிகரிக்கும் அது குறித்து நாம் மின் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும்” என்பன போன்ற கருத்துக்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தது ஒரு காணொளி கண்ணில் பட்டது. அவரின் பேச்சு மின் உற்பத்தியில் அணு மின் உற்பத்தி தவிர்க்க முடியாதது என்கிற வாதத்தை ஆதரிப்பது போலவும். அணுமின் உற்பத்தி நாட்டிற்கு தேவை என்பதை நம்ப வைப்பதை போலவும் இருந்தது. பட்ஜெட் அறிவிப்பிற்கு முன்னரே அந்த கட்சியின் தலைவர் ஒருவர் அணுமின் நிலையத்தின் தேவையைப் பற்றி பேசுகிறார்.விமர்சனங்கள் இதைப்பற்றியதாகத் தான் இருக்க வேண்டும்.
பழைய கட்சிகளைப் பற்றி நமக்கு தெரியும். சகித்துக்கொள்ள பழகிக்கொண்டோம். ஜி.எஸ்.டி வரி குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று ஒரு விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் நடிகர் விஜய். நமக்கு தெரிந்த வரையில், ஜி.எஸ்.டி வரி குறைப்பு பற்றி தீர்மானிப்பதையும் அறிவிப்பதையும் ஜி.எஸ்.டி கவுன்சில் தான் செய்துகொண்டு வருகிறது. நடிகர்கள் வருமான வரி வகைப்படுத்தலில் இப்போது வருவதில்லை, அதனால் அவர் , ஜி.எஸ்.டி வரி குறைப்பு பற்றி பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து இருக்கிறார் போலும்.சரி! அணு மின் சக்திக்கு 20000 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது பற்றி தொடர்வோம்.
முன்பொரு முறை ராகுல் காந்தி காங்கிரஸ் ஆட்சியின் பொழுது மின் தேவையை பூர்த்தி செய்ய அணுமின் உற்பத்தி தேவை என்று பேசிய பொழுது அப்போதைய எதிர்க்கட்சிகள் அவரை பேச விடவில்லை. இங்கும் கூட கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக பேசியவர்களும் போராடியவர்களை இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களில் ஒருவரும் பட்ஜெட்டில் அணுமின் உற்பத்திக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 20000 கோடியை பற்றி விமர்சித்ததாக தெரியவில்லை. நம்மை பா.ஜ.க ஆதரவாளர் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நாம் சொல்லிக்கொள்வது இது தான், “பாஜகவிற்கு எதிரான அல்லது பாஜக அரசிற்கு எதிரான இது போன்ற சரியான விமர்சனங்களை எடுத்துவாருங்கள் நாம் உங்களுடன் நிற்போம்”. தேர்தலில் நிற்க விருப்பமில்லை என்று வெளிப்படையாக அறிவித்தவரைத் தான் பாஜகவில் மீண்டும் அமைச்சர்கள் ஆகியிருக்கிறார்கள்.இதையெல்லாம் எந்த கட்சிகளும் விமர்சனம் செய்வதில்லை என்பதில் எமக்கு நிறையவே ஏமாற்றம் இருக்கின்றது. ஜெய்ஷ்ங்கர் நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் கேபினட் இல் தேவைப் படுகிறார்கள் என்றால். அடுத்த ஜெய்ஷ்ங்கர் எங்கு செல்வார்கள். தேசிய கட்சிகளை பொறுத்தவரையில் அல்லாத மத்திய அரசை பொறுத்தவரையில் நிர்வாக பொறுப்புகளை கையாள திறனுள்ள அமைச்சர்களும் வேண்டும் என்பதை எல்லா கட்சிகளும் உணர்ந்திருந்தாலும் கூட அத்தையாகவர்களை தேடி வாய்ப்பளிக்கின்ற வேலையை செய்கிறதில்லை.
ஜப்பானில் நடந்த விபத்தை குறித்து ஜெர்மனி அணுமின் நிலையங்களை மூடுகிறது அது சரியான நிர்வாகம். கூடங்குளம் அணுமின் நிலையத்தை பொறுத்தவரையில் அது ராஜிவ் காலத்தில் முன்மொழியப்பட்டது, அப்போது இந்திய சமூகத்திற்கு அது பெரிய வரமாக தெரிந்திருக்கலாம். அதில் நாம் அதிகம் முதலீடு செய்துவிட்டோம். இனியும் அணுமின் உற்பத்தியில் இந்தியா கவனம் செலுத்தியாக வேண்டிய கட்டாயம் இருக்கின்றதா?
20000 கோடி ஒதுக்கீடு செய்து 2047 வருடத்திற்குள் 100GW மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயத்திருக்கிறார்கள். 2047க்கு ஜெர்மனி போன்று இன்னும் சில நாடுகள் அணுமின் உற்பத்தியை நிறுத்தக்கூடும்.2047க்கு மின் உற்பத்தி யில் உலகம் சில புதுமைகள் காணலாம். நாம் அப்போது அந்த புதுமைகளை விட்டு அணுமின் உற்பத்தியை சார்ந்திருக்க வேண்டுமா?
பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் நடுநாயகமாக இருந்திருக்க வேண்டிய கேள்வி இது தான்.இது போன்ற கேள்விகளை விவாதங்களை முன்னெடுப்பதை விட்டுவிட்டு தமிழகத்திற்கு அறிவிப்பு இல்லை. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. நான் வருமான வரி வகைப்படுத்தலில் வருவதில்லை.எனக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு பற்றி அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம். ரோட்ல ஒருத்தன் கோமியம் பத்தி பேசின அது பற்றி குடியரசு தலைவர் பேசவில்லை என்றெல்லாம் வரும் விமர்சனங்களை பார்க்கும் பொழுது, உங்களுக்கும் கோபம் வந்தால். முன் வைக்க பட வேண்டிய சரியான விவாதம் இது தான் என்பதை உங்கள் அறிவும் உங்களுக்கு அறிவுறுத்தினால்.இந்த கட்டுரையை ஷேர் செய்யுங்கள்.😀😀😀😀