17.06.21 அன்று வந்த செய்திகளின் படி மாண்புமிகு பாரத பிரதமரை சந்தித்த மாண்புமிகு தமிழக முதல்வர் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்ததாக தெரிகிறது. அதில் உள்ள ஒரு கோரிக்கை தி.மு.க. வின் 2021 சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக இருப்பது போல தோற்றமளிக்கிறது.
குடியுரிமை சட்ட திருத்தம் 2019
முன்னதாக பா.ஜ.க அவர்களின் தேர்தல் வாக்குறுதியின் படி 2019 டிசம்பர் இல் குடியுரிமை சட்ட திருத்ததை கொண்டு வந்தார்கள். அதன் படி, ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில்(இஸ்லாமிய நாடாக தங்களை அறிவித்து கொண்ட இந்தியாவின் அண்டை நாடுகளில்) மதம் சார்ந்த துன்புறுத்தல்களுக்கு ஆளாகி அல்லது அத்தகைய அச்சுறுத்தலுகளுக்கு பயந்து 2014ம் ஆண்டிற்கு முன் இந்தியாவிற்குள் அகதிகளாக வந்த அந்நாடுகளில் உள்ள சிறுபாண்மையினாரான ஹிந்து,கிறிஸ்துவம்,பார்ஸி ,ஜெயின்,மற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள் இந்திய குடியுரிமை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டது அல்லது அவர்கள் இந்திய குடியுரிமை பெறுவதற்கான வழிகள் எளிதாக்கப்பட்டது. இந்த சட்டம் அரசியலமைப்பின் 6வது அட்டவணையில் உள்ள பகுதிகளான அசாம்,திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்கு பொருந்தாது என்றும் சட்ட திருத்தத்தில் கூறப்பட்டிருந்தது.
குடியுரிமை சட்டத்தின் மீதான சர்ச்சை
ஒரு சட்ட திருத்தம் கொண்டுவரும் போது அதன் மீதான ஆக்கபூர்வமான விவாதங்களை முன்னெடுக்க வேண்டிய எதிர்க்கட்சிகள், அந்த சட்டத்த்தை பற்றிய தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி நாடு முழுவதும் தேவையற்ற போராட்டங்களை அரசியல் ஆதாயத்திற்காக தூண்டிவிடும் பணியை தெரிந்தோ தெரியாமலோ செய்தனர் எனலாம். இந்த குடியுரிமை சட்டமானது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சட்டம் என்பது போலவும். இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்பது போலவும் வதந்திகள் பரப்பட்டது.
அன்றே தெளிவுபடுத்திய ரஜினி
தமிழகத்தின் கடைசி வாய்ப்பு ரஜினிகாந்த் என்னும் நூலில் இது சம்மந்தமாக பேசும் இடத்தில், அரசை வழிநடத்த வேண்டிய எதிர்க்கட்சிகள், மக்கள் மத்தியில் ஒரு அச்சமோ சந்தேகமோ ஏற்பட்டாலும் கூட எதிர்க்கட்சிகள் முன்வந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை என்று தெளிவுபடுத்தி இது சிறுபான்மையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பட்சத்தில் அதற்கு எதிரான சட்டபூர்வமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்போம் என்கிற உறுதியை கொடுத்திருக்க வேண்டும் ஆனால், துரதிஷ்டவசமாக கட்சி தொடங்காத ரஜினியிடம் இருந்தே அப்படியான வார்த்தைகள் வருகிறது என்கிற அர்த்தத்தில் சொல்லியிருப்பார்கள்.
அதில் சொன்னது போலவே, ஒரு சட்ட திருத்தம் என்பது மீண்டும் திரும்ப பெற முடியாததோ அல்லது திருத்த முடியாததோ அல்ல சட்ட திருத்தம் உண்மையில் மக்களுக்கு எதிரானது என்கிற பட்சத்தில் அதனை உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்கு உட்படுத்தமுடியும்.ஆனால், நீதிமன்றங்களில் தீர்ப்புகள் சட்டத்தின் படியும் அடிப்படையின் படியும் இருக்க வேண்டிய காரணத்தால் அடிப்படை இல்லாமல் அரசியல் காரணங்களுக்காக பரப்பப்படும் வந்ததிகளை வைத்து அங்கே வாதாட முடியாது.உண்மையாக அந்த சட்ட திருத்தம் அரசியலமைப்பிற்கு முரணாக இருப்பின் நிச்சயம் அரசாங்கம் அதை சரி செய்ய வேண்டிய இடத்திற்கு தள்ளப்படும்.ஜனநாயகநாட்டில் அரசியல் லாபங்களுக்காக போராட்டங்களை தூண்டுவதற்கு பதில் சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றுவது, உச்ச நீதிமன்றத்தை அணுகுவது இப்படியான அணுகுமுறைகளே எதிர்கட்சிகளிடம் காணப்படவேண்டும். அதோடு இன்றைய எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் சட்டதிருத்தத்தின் மீதான அவர்களின் குற்றச்சாட்டுகளில் நியாயம் இருப்பின் அவர்களால் அதை திருத்த முடியும் என்கிற போது போராட்டம் சாமானியர்களின் இயல்பை பாதித்து அரசியல்வாதிகளுக்கே ஆதாயத்தை தரும்.
ரஜினிகாந்த்,இந்த சட்டதிருத்தத்தை பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போது, தேசிய குடியுரிமை பதிவேடு பற்றி இன்னமும் எந்த முடிவும் செய்யவில்லை, அதோடு இந்த குடியுரிமை சட்ட திருத்தம் இந்தியாவில் உள்ள இந்திய இஸ்லாமியர்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்த போது இந்தியா எங்கள் தேசம் என்ற உரிமையோடு நாங்கள் இங்கு தான் இருப்போம் என்று இருக்கும் இந்திய இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிக்கப்பட நேர்ந்தால் நான் , ரஜினிகாந்த் முதல் ஆளாக போராட்டத்தில் இறங்குவேன்.மாணவர்கள் எதையும் முழுமையாக தெரிந்து கொண்டு போராட்டங்களில் இறங்க வேண்டும்.என்று தெளிவுபடுத்தி இருப்பார். ஆனாலும் கூட இந்த சட்டம் இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக சித்திரக்கப்பட்டு வந்ததில் எந்த மாற்றமும் நிகழவில்லை.எப்போதும் போல ரஜினியை மிகவும் தெரிந்து வைத்திருப்பதாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள். சட்ட திருத்தத்தை பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் ரஜினி சொன்னதையும் முழுதாக உள்வாங்காமல் ரஜினியை பழிக்கும் வேலையையே செய்து வந்தனர்.
தி.மு.க.வின் 2021ம் ஆண்டு சட்ட பேரவை தேர்தல் வாக்குறுதி
தி.மு.க.வின் 2021ம் ஆண்டு சட்ட பேரவை தேர்தல் வாக்குறுதியில் 498 மற்றும் 500 வது வாக்குறுதியின் படி குடியுரிமை சட்ட திருத்தத்தில் நான்காவது நாடாக இலங்கையை சேர்க்க வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது தி.மு.க., குடியுரிமை சட்டத்தை திருத்தத்தை ஏற்று கொண்டது என்றும் இந்த சட்ட திருத்தத்தின் படி இந்திய இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் வயதான ரஜினி சொன்ன கருத்தை ஆமோதிப்பது போலவுமே இருக்கின்றது.
காரணம் அவர்களின் வாக்குறுதியில் இலங்கையை நான்காவது நாடக குடியுரிமை சட்ட திருத்தத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றே இருக்கின்றது. அதோடு இந்த சட்ட திருத்தம் இந்திய இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் வாக்குறுதியில் கூட சுட்டப்பெறவில்லை.
ஆனால், தி.மு.க.வின் போராட்டத்தின் பொழுது இந்த சட்டத்திருத்தம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்ற கருத்தே முன்வைக்கப்பட்டு அவர்களுக்காக கழகம் போராடும் என்றதை மக்களும் மறந்துவிடவில்லை; வயதானவர்களை வீட்டிலேயே விட்டு வரவும், நடிகராக இருப்பதால் ரஜினிக்கு அரசியல் தெரியவில்லை என்று விமர்சித்ததை ரஜினி ரசிகர்களும் மறந்துவிடவில்லை.
முதல்வரின் கோரிக்கை
செய்திகளின் படி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வாய்த்த கோரிக்கைகளில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கேட்டுக்கொண்டதாகவும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.
முன்னதாக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்து இருந்தாலும் கூட அதை நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகளை இன்னமும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டதாக தெரியவில்லை.அதனை சுட்டிக்காட்டி 2019டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் சட்டத்தின் மீது இடைக்கால தடை விதிக்க வைத்த கோரிக்கையை நிராகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.பிப்ரவரி மாதம் டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தியின் படி குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுப்பதற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான துணை சட்டம் தொடர்பான குழு கூடுதல் அவகாசம் அளித்து இருப்பதாக(9ஜூலை 2021 வரை) பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தெரிவித்தாக அறியப்படுகிறது.இந்த துணை சட்டம் தொடர்பான குழுவில் தி.மு.க.வின் சட்ட மேதை ஆ.ராசா அவர்களும் உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
குடியுரிமை சட்டதிருத்தத்தை நடைமுறைபடுத்த வேண்டிய வழிமுறைகள் அனேகமாக முடிவு செய்யப்பட்டுவிட்டாலும் நீதிமன்றத்திடம் இருந்து சில விஷயங்களில் தெளிவு பெற வேண்டி அரசாங்கம் காத்திருப்பதாக தெரிகிறது. குடியுரிமை சட்ட திருத்தும் மீதான அடுத்த விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்னும் தொடங்கவில்லை.
இந்த நிலையில் தான் மாண்புமிகு முதல்வர் அவர்கள் சட்டத்தை திரும்ப பெற கோரிக்கை வைத்திருப்பதாக தெரிகிறது.எது எப்படியிருந்தாலும்; எத்தனை சட்ட திருத்தம் வந்தாலும்; இந்தியாவின் அரசியலமைப்பானது எந்த ஒரு சட்ட திருத்தத்தின் மூலமும் அதன் குடிமக்களை வெளியேற்ற செய்யும் அளவிற்கு மோசமமானதாக இல்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டு அனாவசியமான போராட்டங்களை தவிர்க்க வேண்டும். அதோடு, அரசியல் கட்சிகளின் அறிக்கைகளை தாண்டி செய்திகளை இன்னும் ஆழமாக தேடி படித்து நிர்வாக ரீதியிலான அரசியலை புரிந்து கொள்ள வேண்டும்.நிர்வாக ரீதியிலான அரசியல் புரிதல் இல்லாமல் கட்சிகளின் செயல் திறனையும் அணுகுமுறையையும் நம்மால் மதிப்பீடு செய்ய முடியாது.ரஜினி சொன்னது போன்று வன்முறையும் போராட்டமும், வலிமையான எல்லாருக்கும் சமமான அரசியலமைப்பை கொண்ட ஜனநாயக நாட்டில், எந்த பிரச்சனைக்கும் தீர்வை தராது. அதனால், அரசியல் கட்சிகள் போராட்டம் தாண்டிய அணுகுமுறைகளை கையாள மக்களாகிய நாம் நிர்பந்தப்படுத்த வேண்டும் அதற்கு முதலில் நாம் அதிகம் நிர்வாக சம்மந்தமாக தெரிந்து கொள்ள வேண்டும்.