தி.மு.க.விடம் அதிகாரத்தில் பங்கு கேட்கிறதே காங்கிரஸ்?
அப்படியா தெரிகிறது! பத்து சீட்டில் ரெண்டு சீட்டு அதிகமாக கேட்பதை அதிகாரமாக கேட்பது போல் தெரியவில்லையா?
இந்தியா டுடேவில் வெளியான முதல்வரின் நேர்காணலை பார்த்தீர்களா?
கண்ணில் பட்டது. எதிரில் எலோன் மஸ்க்கே வந்தாலும், அசராமல் தனக்கு தெரிந்த மொழியில் பதில் பேசுகிற தன்னம்பிக்கையை இதுவரை இரண்டு பேரிடம் பார்த்து இருக்கிறேன். ஒன்று கேப்டன் விஜயகாந்த் (2016 தேர்தல் சமயத்தில், கேள்விக்கான பதிலை நேரடியாக சாதாரணமாக, மனதில் இருந்து சொன்னார்) அடுத்து நம் எடப்பாடியார் (சமீபத்தில் எல்லோரும் பார்த்து இருப்பீர்கள்). “இது தான் நான், இது தான் எனக்கு தெரியும்” என்று ஒப்புக்கொள்கிற நேர்மை ஓரளவு இருக்கின்ற இடத்தில் அந்த தன்னம்பிக்கை இருக்கும். முதல்வரிடம் அந்த தன்னம்பிக்கையை நான் தேடவில்லை. தேடியவர்கள் தேடியதாக சொன்னார்கள்.

விஜய்க்கு உங்கள் ஆதரவு உண்டா?
தகுதியான செல்வாக்கு மிக்க மூன்றாவது தேர்வுக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு.
அ.தி.மு.க.வின் பலமாக ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் எதை சொல்வீர்கள்?
சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய எடப்பாடியார், “இன்று நான் தலைமை பொறுப்பில் இருக்கேன் நாளைக்கு வேலுச்சாமியோ வேலுமணியோ யாரோ கூட அ.தி.மு.க.வில் தலைமை பொறுப்புக்கு வர முடியும்” என்று பேசினார். இவர்களெல்லாம் நல்லவர்களா கெட்டவர்களா என்பது பற்றிய சீர்தூக்கலை ஒதுக்கிவிட்டு பார்த்தால், இன்றைய தேதியில், தமிழகத்தில் இது தான் அ.தி.மு.க.வின் பலம்.

அண்ணாமலையைத் தமிழக பா.ஜ.க ஒதுக்குகிறது என்கிற புலம்பல் கட்சி சாராத மக்களிடமும் கூட இருக்கிறதே, மக்களில் பலரும் அதையே தானே எதிர்பார்க்கிறார்கள்?
படித்தவர்; நிர்வாக அரசியலை புரிந்து கொண்ட வெகு சில அரசியல்வாதிகளில் ஒருவர்; தைரியம் இருக்கிறது; வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுகிற விவேகம் இருக்கிறது; நாமெல்லாம் ப்ரோமோஷனை எதிர்பார்ப்பது போல அவரும் ஒரு இலக்கை குறி வைத்துத் தான் அரசியலுக்கு வந்திருப்பார். இத்தனை நல்ல தகுதிகள் கொண்ட ஒருவர் மக்கள் முன் அடிக்கடி தோன்றும்பொழுது அவர் மீது ஏற்படும் ஈர்ப்பு தவிர்க்க முடியாதது தான். ஆனால், பா.ஜ.க.வை பொறுத்த வரையில், தனி நபர் துதிபாடல்களையோ அல்லது வளர்ச்சியையோ விட கட்சியைத் தான் முதன்மையாக இன்னமும் வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒருவரை முன்னிலைப்படுத்தினாலும் கட்சிக்காகத் தான் செய்கிறார்கள். தனிநபர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள், கட்சி நிரந்தரமாக இருக்க வேண்டும் அது ஒரு நபரின் முகமாக இருந்துவிட கூடாது என்கிற தெளிவு பா.ஜ.க.விடம் இருக்கிறது.

தே.மு.தி.க.வின் கூட்டணி அறிவிப்பு நாளை நாளை என்று தள்ளிக்கொண்டே போகிறார்களே?
அவர்கள் கட்சி அவர்கள் உரிமை. மக்கள் வாக்கு மக்கள் உரிமை. தே.மு.தி.க என்கிற கட்சியை பூஜ்ஜியம் என்று எடுத்துக்கொண்டால், கேப்டன் விஜயகாந்த் அதற்கு மதிப்பு கொடுத்த ஏகம். பக்கத்தில் ஒன்று இல்லாமல் இருந்து எத்தனை பூஜ்யம் இருந்தாலும் மதிப்பு கிடையாது.

நிகழ்கால அரசியல் பிரச்சனைகளை பேசாமல், தி.மு.க தி.மு.க என்று மட்டும் விஜய் பேசுகிறார் என்கிற விமர்சனத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
தி.மு.க.வை நிகழ்கால அரசியல் பிரச்சனையாக அல்லது இதுவரை இருந்த எல்லா காலத்திற்குமான பிரச்சனையாக பார்க்கிற வாக்காளர்கள் மட்டும் 60 சதவீதத்திற்கு மேல் இருக்கிறார்கள். இதை நானாக சொல்லவில்லை, தேர்தல் தரவுகள் சொல்கிறது. எனவே விஜய் பேசுவதும் நிகழ்கால அரசியல் பிரச்சனை என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லா காலத்திற்கும் தி.மு.க. பிரச்சனை தான் என்கிற அறுபது சதவீதத்தோடு நான் என்னை சேர்த்துக்கொள்கிறேன். இது ஜனநாயக நாடு இல்லையா?

விஜய்யின் எல்லா செயல்பாடுகளையும் ஆதரிக்கவில்லை என்று சுட்டிக்கொண்டு பெரிதாக அவரின் செயல்பாடுகளை கதிர் விஜயம் தளத்தில் கண்டிக்காதது போல இருக்கிறதே?
அரசியல் பழகும் குழந்தையை கண்டிக்க வேண்டாம் என்கிற எண்ணமாக இருக்கலாம். அவரின் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அதோடு கதிர் விஜயம் ஆசிரியர் குழுவும் வீட்டிலும் வெளியிலும் நடமாட வேண்டும் பாருங்கள்.
தினகரன் சேர்ந்துவிட்டார், சசிகலா, ஓ.பி.எஸ், செங்கோட்டையன் என்ன செய்வார்கள்?
இவர்கள் சேர்ந்துவிடுவார்கள் என்பது எதிர்பார்த்தது தான். போன தேர்தலில் சேர்ந்து இருந்தால் இன்னும் பத்து தொகுதி சேர்த்து ஜெயித்து இருப்பார்கள். திருமதி சசிகலாவை பொறுத்தவரையில் அவர் இப்போது இருப்பது போன்று இருப்பது தான் அ.தி.மு.க.விற்கு நல்லது. செங்கோட்டையன் அவர்கள் த.வெ.க.வில் நாடாளுமன்ற தேர்தல் வரை தொடரமாட்டார் என்பது நம்முடைய யூகம். பொறுத்திருந்து பார்ப்போம். அ.தி.மு.க.வில் இருந்து தே.மு.தி.க சென்றவர்கள் என்ன செய்தார்கள் என்பது நினைவிற்கு வருகிறது.

கட்சிக்கு என்று சில விதிகளை ரஜினி அறிவித்து இருந்தார் அந்த விதிகளை அரசியல் கட்சிகள் பின்பற்றினால் நன்றாக இருக்கும். யாராவது பின்பற்றுவார்கள் என்று நினைக்கிறீர்களா?
‘கனவில் இருக்கிற சந்தோஷம் நிஜத்தில் இருக்காது’ இது ரஜினி சொன்னது. “சில கனவுகள் அவ்வளவு சீக்கிரம் நடக்காது” இது தியான நிலையில் என்னோடு பேசி இந்த பதில்களை எழுதும் கதிர் விஜயம் ஆசிரியர் என்னிடம் சொன்னது.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தமிழகம் கடன் பட்டிருப்பதற்கான காரணத்தைப் புள்ளி விவரத்தோடு பேசினார், அது பற்றி உங்கள் கருத்து?
அவர் எப்போது புள்ளி விவரத்தோடு பேசினாலும், ஒன்றை மிக சரியாக செய்கிறார். தமிழ்நாடு வளர்ந்த மாநிலமாக இருப்பதற்கு அவர்கள் தான் காரணம். ஆனால், அரசின் நிதிச்சுமைக்கும் கடனுக்கும் எடப்பாடியார் தான் காரணம் என்கிற கருத்தை விதைக்க பார்க்கிறார். மற்ற மாநிலங்களோடு வளர்ச்சி வேகத்தை நாம் ஒப்பீடு செய்யலாம், வளர்ச்சியை ஒப்பீடு செய்யக்கூடாது. இன்றைய வீட்டு செலவிற்கு வாங்கும் கடனுக்கு அவர் நேற்று கட்டிய வீட்டை கணக்கு காண்பித்து பேசியிருந்தார். 1940களில் எல்லா நாடுகளும் ஒரே இடத்தில் இருந்து ஆரம்பிக்கவில்லையோ அதே போன்று இந்திய மாநிலங்களும் எல்லோரும் ஒரே இடத்தில் இருந்து ஆரம்பிக்கவில்லை. GST கவுன்சிலில் சிறிய மாநிலத்திற்கும் ஒரு ஓட்டு பெரிய மாநிலத்திற்கும் ஒரு ஓட்டா என்று கேட்டார், அதே அவரின் தி.மு.க. மக்கள் தொகை அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களை அதிகப்படுத்துவதை எதிர்க்கிறது. அவர் நல்லவராகத் தான் தெரிகிறார். அதனால் தான் அப்பாவின் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார் போலும்.

நாம் தமிழர் சாட்டை துரைமுருகன், விஜயை விமர்சிக்கும் வீடியோக்களை பார்த்து நீங்கள் சிரிப்பீர்களா?
இது என்ன முட்டாள்தனமாக இருக்கிறது என்று சிரித்து இருக்கிறேன். நாம் தமிழர் தொடங்கிய நாள் முதல், தமிழரைத் தமிழர் தான் ஆள வேண்டும் என்று கோஷம் போடுகிறார்கள். திராவிட கட்சிகளை விடுங்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக சீமான் நேரலையில் பேசியிருக்கிறார். பின்னாளில் ஐயா நல்லகண்ணு மாதிரி அரசியல் தலைவர் இருக்கிறாரா என்று பேசினார். திருமாவளவன், முன்னாள் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எல்லாம் தமிழர்கள் என்று சீமான் ஏற்றுக்கொண்டார் தானே, விஜயை தமிழர் என்று ப்ரொமோட் செய்தவர்கள் தானே இவர்கள். இப்படித் தமிழர்களுடன் சேர்ந்து இரண்டு பேரை சட்டமன்றத்திற்கு அனுப்பி அங்கு கத்தினாலாவது ஏதோ பிரயோஜனம் இருக்கலாம். தெருவிலும் யூடியூப்பிலும் கத்தி என்ன செய்ய? கல்லா கட்டலாம் அவ்வளவு தான் செய்ய முடியும்.

நீங்கள் பேசியதை ரசித்தது போல் உங்களின் துக்ளக் வாரிசு பேசுவதை கேட்க முடிகிறது இல்லையே?
இப்படி ஒன்று உங்கள் மனதில் தோன்றியதில் ஆச்சரியமில்லை! ஒரு பெரிய மரத்தின் நிழலில் இன்னொரு மரம் உண்டாவதில்லை. பறவைகள் அந்த மரபுகளை எச்சங்களாக எங்கேனும் கொண்டு சேர்க்கும். அப்படி, நீங்கள் தேடும் ஒருவர் துக்ளக்கிற்கு வெளியில் இருக்கலாம். பாஜக, அதிமுக, திமுக என்று எல்லா கட்சிகளின் செயல்பாடுகளையும் சமரசமின்றி தனக்கு பட்டதை தைரியமாக பாண்டே பேசுவதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். பாண்டே வெளியில் தெரிகிறார்.

லேப்டாப் திட்டத்தை தி.மு.க தொடங்கியிருப்பதை பாராட்டுவீர்களா?
எனக்கும் தி.மு.க.வை பாராட்டி எழுத வேண்டும் என்கிற ஆசை இல்லாமல் இல்லை. அதில் சிக்கல் என்னவென்றால், படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதை அ.தி.மு.க தொடங்கி வைத்தது. அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு கொடுத்தார்கள், இவர்கள் படித்து முடிக்க போகிற கல்லூரி வாக்காளர்களுக்கு ஆட்சி முடியும் நேரத்தில் கொடுக்கிறார்கள். மகளிர் உரிமைத்தொகையை முன்பணமாக கொடுக்கிறார்கள். நல திட்டங்களை செய்யவிடாமல் தேர்தல் ஆணையம் தடுக்கிறது என்கிற குற்றச்சாட்டு வேறு. தி.மு.க.வின் இந்த ராஜ தந்திரங்களை நிச்சயமாகப் பாராட்டத் தான் வேண்டும். அதைப் பாராட்டும் வாய்ப்பை தந்த உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.
கதிர் விஜயம் குழுவில் இருந்து யாரேனும் அரசியலுக்கு வந்தால் என்ன செய்வார்கள்?
உண்மையைச் சொல்வார்களாம்! ஒருவேளை அரசியலுக்கு வந்து அதிகாரத்திற்கும் வந்த பிறகு உண்மையைச் சொன்னால் நல்லது தான். இங்கு உண்மையைச் சொன்னாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்.
எல்லோரும் சொல்வது போல பா.ஜ.க மதவாத கட்சியா?
இஸ்லாமிய கட்சிகளோடு கூட்டணி வைத்துக்கொண்டு மதச்சார்பின்மை பேசுவது, ஜமாத் அமைப்புகள் மூலம் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்திற்கு மக்களை கேடயமாக பயன்படுத்துவது. திருச்சபைகளில் கூடி தி.மு.க.விற்கு வாக்களிக்க முடிவு செய்வது. நிர்வாக ரீதியில் அரசியலை அணுகாமல், பா.ஜ.க என்று பார்த்தாலே எதிர்க்கும் மனநிலை, தீவிரவாத தாக்குதல்களை பற்றி பேசினால் மத துவேஷம் என்று விட்டு தீர்த்துவைக்கப் பட்ட அயோத்தி பிரச்சனையை பிரச்சனையாகவே பேசுவது என்று இதையெல்லாம் செய்கிற கட்சிகளும் கட்சி சார்ந்தவர்களும் அல்லது இதையெல்லாம் ஆதரிக்கும் சாமானியர்களுக்கு மதவாதி இல்லை நடுநிலையாளர்கள் என்றால் பா.ஜ.க மதவாத கட்சி தான்.
நீங்கள் பாஜக ஆதரவாளரா?
கட்சிகளின் அந்தந்த கால செயல்பாடுகளுக்குத் தான் ஆதரவும் எதிர்ப்பும் கண்டனங்களும். கட்சிகளுக்கு இது எதுவும் பொருந்தாது.
விஜய்க்காக ஓட்டு போடுவீர்களா?
விஜய் ஓட்டை விஜய் தான் போட வேண்டும். விஜய் நிற்கும் தொகுதியில் என்னை வாக்களிக்க அனுமதிக்க மாட்டார்கள்.
நீங்களும் உங்கள் கேள்விகளை கதிர்விஜயம் முகநூல் கணக்கிற்கு அனுப்பலாம். தேர்தெடுக்கப்படும் கேள்விகளுக்கு வலைத்தளத்தில் பதிலளிக்கப்படும்.