அரசியலுக்கு லாயக்கு இல்லாதவரா விஜய்?
அரசியலுக்கு லாயக்கு ஒன்றும் தேவையில்லை. செல்வாக்கான முகம் தேவை. பதிவு செய்துவிட்டு வெளியில் தெரியாமல் இருக்கிற ஒரு 100 கட்சிகளையும் காட்டிலும், செயல்பாட்டில் இருக்கின்ற ஒரு சில கட்சிகளைக் காட்டிலும் செல்வாக்கான முகம் விஜய்க்கு இல்லை என்று நீங்கள் சொல்வீர்களா? இல்லை நான் அப்படிச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

5000 ரூபாய் கொடுத்தது, பொருளாதாரத்தை வளர்க்கும் என்று இந்தியா டுடே நிகழ்ச்சியில் கார்த்திக் சிதம்பரம் சொன்னார், அது சரியா?
இது, “இந்தக் கண்ணாடியைத் திருப்பினா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்?” என்கிற காமெடியைப் போன்றது. ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் ஒரு லட்சம் இந்தியாவிற்கு அனுப்புகிறார்; இந்தியா உருவாக்காத ஒரு லட்சத்தை வெளியில் இருந்து அவர் அனுப்புகிறார். அந்த ஒரு லட்சம் பொருளாதாரத்தை வளர்க்கும். ஏற்கனவே கதிர் விஜயம் தளத்தில் இவர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். நான் மீண்டும் உங்களுக்குச் சொல்கிறேன்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானியம் கொடுத்தார்கள். இது 60 ரூபாய்க்குப் பொருள் வாங்கினால் 20 ரூபாய் இலவசம் என்பதைப் போன்றது. பெண்கள் தூரமாக இருந்தாலும் வேலைக்குச் செல்ல ஊக்குவிப்பது, இருசக்கர வாகன உற்பத்தியை ஊக்குவிப்பது, பெட்ரோல் விற்பனையை ஊக்குவிப்பது என இது அமையும்.
ஆட்டுக்குட்டி கொடுத்து வளர்க்கச் சொன்னார்கள். ஆட்டுக்குட்டியை வாங்கி மக்கள் வளர்த்தார்கள், வளர்த்து விற்றார்கள் – ஏதோ செய்தார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். படிக்கின்ற மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார்கள். இவை எல்லாம் உழைப்பை ஊக்குவிப்பது; உழைப்பு தான் பொருளாதாரம்.
இந்த 5000 எப்படி கதை என்று கேட்டால், உங்களிடம் 5000 இல்லை, நீங்கள் 5000 வட்டிக்கு வாங்கி உங்கள் பிள்ளையிடம் கொடுக்கிறீர்கள். அது போன்றது இது. ஒரு வீட்டில் ஒரு குழந்தையிடம் “நீ படி, உனக்கு இது செய்கிறேன்” என்பது போன்ற ஊக்கம் வேறு. “நீ எதுவும் செய்யாமல் இருந்தாலும், இதை வைத்துக்கொள்” என்பது என்ன மாதிரியான பொருளாதாரம்? ஐயாயிரத்திற்கு எத்தனை பொருள்கள் நேரடியாக வரி விதிக்கப்படும் பொருள்கள் வாங்கப்படும்? நீங்கள் செலுத்தும் வட்டியை விட இது பொருளாதாரத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? எத்தகைய உழைப்பை இது ஊக்குவிக்கிறது?
தேர்தலுக்குக் கட்சி காசைச் செலவு செய்யவானேன் என்று இப்படிச் செய்கிறார்கள். படித்து முடிக்கப் போகும் மாணவர்களுக்கு வேலை கிடைத்தால் பணியிடத்தில் லேப்டாப் தரப்போகிறார்கள். பள்ளி மாணவர்களுக்கு ஓட்டு கிடையாது. இதெல்லாம் கார்த்திக் சிதம்பரத்திற்குத் தெரியாமல் இருக்காது; அவருடைய அப்பா மத்தியில் நிதியமைச்சராக இருந்தவர். ஆனாலும் இப்படிப் பேசுகிறார் என்றால் அது ‘கூட்டணி தர்மம்’. இதற்கு மேல் கார்த்திக் சிதம்பரத்தைப் பற்றி நான் விமர்சித்தால், கதிர் விஜயம் ஆசிரியர் என் பெயரில் வெளிவரும் தொடரை நிறுத்திவிடுவார். அவருக்கு கார்த்திக் சிதம்பரம் போன்றவர்கள் ஏன் காங்கிரஸின் தலைவராகக் கூடாது என்கிற விபரீத ஆசை இருக்கிறது.

அண்ணாமலைக்கு எதிராகவும் ஆதரவாகவும் தமிழக பாஜகவில் இரண்டு கூட்டம் இருப்பது போன்ற தோற்றம் இருக்கிறதே?
இரண்டு தேசிய கட்சிகளுக்கும் இடையில் மாநிலங்களில் தங்களைப் எப்படிப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற போட்டி இருக்க வேண்டும். அந்தப் போட்டிக்கு வர காங்கிரஸ் தயாராக இல்லை. அதனால், இவர்கள் கோஷ்டி பூசலில் காங்கிரஸை முந்துகிறோம் பாருங்கள் என்று கிளப்புகிறார்கள் போலும்.

எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் பெயர் இருப்பதாகச் சொல்கிறார்களே?
என்னுடைய டைரியில் கூட நான் ஸ்டாலின் பெயரை எழுதி வைத்திருக்கிறேன். அதற்காக நான் ஒருவரிடம் கடன் வாங்கியிருக்கிறேன் என்றால் அதற்கு அவரைப் பொறுப்பாக்க முடியுமா? “எனக்கு அமைச்சரைத் தெரியும், அதிகாரிகளைத் தெரியும், அரசு வேலை வாங்கித் தருகிறேன்” என்று மோசடி செய்பவர்களைப் போன்றுதான் எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் பெயர் இருக்கிறது. “பெயர் இருக்கிறது” என்று சொல்கிறவர்கள் அதைத் தாண்டி ஏதும் சொல்வதில்லை. காரணம், ‘அதுல ஒன்னும் இல்ல… கீழ போடு!’ என்கிற காமெடி கதையாகிவிடும் என்பதால்.ஆனாலும், அப்படியே எதாவது சொன்னாலும் கதைகளைத் தான் சொல்கிறார்கள். மேற்படி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் போனில் தேடிப் பார்த்து, ஏதேனும் குற்றச் செயல்களோடு பிரதமர் பெயர் இணைக்கப்பட்டிருக்கிறதா என்று தெரிந்து கொண்டு சொல்லுங்கள்.

காங்கிரஸ் த.வெ.க-வோடு கூட்டணி வைக்குமா?
த.வெ.க-வோடு கூட்டணி வைத்தால் நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளில் எத்தனை நமக்குக் கிடைக்கும் என்கிற சந்தேகம் இருப்பதால் தான், அவர்கள் இன்னமும் தி.மு.க கூட்டணியில் இருந்தபடி பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் – எது பி-டீம், எது ஏ-டீம் என்று!

இந்த முறையும் பயற்சி எடுக்கப்போகும் அண்ணன் சீமான் குறித்து?
மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் எப்படி வாக்களிக்க வேண்டும், என்பதற்கு இன்னம் பயற்சி எடுக்க வேண்டும்.யார் வென்றாலும் வெல்பவர்களுக்கு மகிழ்ச்சி தான்.மக்களுக்கு எது மகிழ்ச்சி என்பதை புரிந்து கொண்டு வாக்களிக்க மக்கள் இன்னும் நிறைய பயிற்சி பெற வேண்டும்.

விஜய் – திரிஷா – நயினார்: உங்கள் கருத்து என்ன?
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘completely nonsense’. ஏன் ‘completely nonsense’ என்பதை விரிவாகச் சொல்கிறேன். இங்குப் பல பேருக்குப் பல விஷயங்களில் விஜய் மீது ஒரு வெறுப்பு இருப்பது போல், எனக்கும் அவர் செய்யும் சில விஷயங்களில் இருக்கத்தான் செய்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்காகவெல்லாம் இதைப் பேசிக்கொண்டிருந்தோம் என்றால், என்னையும் சேர்த்து நான் ‘முட்டாள்’ என்றுதான் சொல்ல வேண்டும்.
இது ஏன் முட்டாள்தனம்? ஒரு அறைக்குள் இரண்டு பேர், மூன்று பேர் உட்கார்ந்து கொண்டு கிசுகிசுக்கள் பேசுவது நம் எல்லோருக்கும் நன்றாகத்தான் இருக்கும். அது ஒரு வகையில் சமூகத்தின் அல்லது மனித இயல்பு என்றுகூட ஏற்றுக்கொள்ளலாம். அதற்காக அந்த அறையை விட்டு வெளியில் வந்த பிறகும் சத்தமாக நீங்கள் அதைப் பேசிக்கொண்டிருந்தால், உங்கள் மீதுதான் தவறான பார்வை ஏற்படும்.
இங்குச் சிலர், ஒரு பக்கம் நயினாரைக் கண்டித்தாலும், “தலைவனாக இருக்கிறவன் ஒழுக்கமாக இருக்க வேண்டும்” என்றெல்லாம் பேசுகிறார்கள். ஒழுக்கம் அல்லது தர்மம் என்பது மாறுபடும்; அறம் மாறாதது. இந்த விஷயத்தைச் சுட்டி விமர்சிப்பது அறமாகாது என்பது நம் கருத்து.
“தலைவன் இப்படி இருக்கலாமா?” என்று நிறைய பேர் பேசுகிறார்கள். விஜய் இன்னமும் அவர் தொடங்கிய ஒரு கட்சியின் தலைவர் மட்டும்தான். “அவர் தலைவர் என்றால் அவரைப் பின்பற்றுகிறவர்கள் கெட்டுப் போகமாட்டார்களா?” என்று அக்கறை கொள்கிறவர்கள் ஒன்றைப்புரிந்து கொள்ள வேண்டும்.
சரி, தலைவன் எப்படி இருக்கலாம் என்பதைப் பற்றி வள்ளுவர் என்ன சொல்கிறார்? இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை கூடாது என்கிறார்.
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து (குறள்-431)
அதே வள்ளுவர், மனித இயல்புகளைப் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்கிறார். காமம் போன்ற விஷயங்களில் நாட்டம் அதிகம் இருந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருப்பதுதான் அரசனுக்கு நல்லது என்கிறார்.
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல். (குறள் -440)
அரசனுக்கோ தலைவனுக்கோ தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கலாம் அது தெரியாமல் இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.என்னை கேட்டால், இப்படியான ரகசியமான விஷயங்களை ரகசியமாகவே விட்டுவிடுவதுதான் சமூகத்திற்கும் நல்லது.
காரணம், இங்கே ஊர்ஜிதப்படுத்தப்படாத யாரோ ஒருவரின் யூகமே வதந்தியாக்கப்பட்டு, அது பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். இது உண்மையாக இல்லாமல் இருக்கிறது என்றாலும், இதைப் பேசியே இது போன்ற விஷயங்களைச் சமூகத்தில் நாம் இயல்பாக்குகிறோம் (normalising). எதுக்குப் பேசணும்? தனிப்பட்ட விருப்பங்கள் ரகசியமாகக் காக்கப்படுகிறது என்றால் அதைக் கிளறக்கூடாது. அதைக் கிளறுவதால் சமூகத்திற்கு ஒரு நன்மையும் கிடையாது; ஆனால், தீமை நிறைய இருக்கிறது.
இங்கே ஒரு பெண் தான் ஏமாற்றப்பட்டதாகச் சொன்னால், அல்லது ஒரு மனைவி “என் கணவர் என்னை ஏமாற்றிவிட்டார்” என்று சொன்னால் அப்போது அதைப்பற்றிப் பேசலாம். அப்போதும் கூட அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியது; இரண்டு மூன்று பேரின் விருப்பு வெறுப்பு பற்றியது. நீதிமன்றம் சென்றால், நீதிமன்றம் அதை கவனித்துக்கொள்ளும்.
இங்கே சில அமைச்சர்களின் வீடியோக்கள் வெளியான பின்பும் கூட அவர்கள் அமைச்சர்களாகத்தான் இருக்கிறார்கள். வீடியோவில் இருந்தவரே தான் வீடியோ எடுக்கிறார், ஆனாலும் எந்த வழக்கும் தொடரப்பட்டதாகத் தெரியவில்லை.சம்மதத்தோடு நடக்கிற தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பொதுவில் பேசி இயல்பாக்குவது (normalise) அறமில்லை
உண்மையோ பொய்யோ, இதையெல்லாம் பொது வெளியில் பேசிச் சமூகத்தில் இதெல்லாம் சாதாரணமாகிவிட்டது என்கிற தோற்றத்தை நாம் ஏற்படுத்த வேண்டியதில்லை. சச்சினைப் பற்றிப் பேசினால், அதிகபட்சம் அவரின் விளையாட்டு சம்பந்தமாகவோ அல்லது பொது வெளியில் அவர் வைக்கும் கருத்து குறித்தோ மட்டும்தான் நாம் பேச வேண்டும்.அது சச்சினிற்கு இல்லை சமூகத்திற்கு நல்லது.

![]()