ஒரு புறம் பெறுந்தொற்றின் கோர தாண்டவம் நம் நம்பிக்கையை உடைத்துக்கொண்டிருக்கும் வேளையில் சமூகத்தில் நாம் சகித்துக்கொண்ட இயல்பலாதவைகள் இந்த நேரத்தில் இன்னும் பெருகி நம்மை அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றது.
இன்றைய நவீன காலத்தில், ஆன்லைன் வர்த்தகம் பெருகிவிட்டது, அப்படியான வர்த்தகங்கள் பெருகிவிட்ட போதே அதில் நடக்கும் ஏமாற்று வேலைகளும் பெருகிவிட்டது என்பது நம்மில் அநேகமானவர் அறிந்ததே.இது போன்ற ஏமாற்று வேலைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் போதும் சமயங்களில் நாமே ஏமாறும் போதும் கூட நம்மில் பலர் சாதாரணமாக கடந்துவிட்டிருக்க வாய்ப்பு இருக்கின்றது. வெகு சிலரே காவல்துறையில் புகார் அளித்து இருப்பார்கள், அப்படியான புகார்களில் எத்தனை சதவீத புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமோ தெரியாது இன்று வரை இந்த ஏமாற்றுவேலைகள் அதிகரிக்கவே செய்து இருக்கின்றது.நம் ஊரில் சில குற்றங்களை புகார் செய்ய நாம் காவல்துறையை அணுகும் போது அநேகமான நேரங்களில் அவர்களிடம் ஒரு அலட்சிய போக்கு இருப்பதையே பார்க்க முடிகிறது.
என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கே பதிவு செய்கிறேன், 4 வருடத்திற்கு முன் திருநெல்வேலி ரயில் நிலையம் என் நினைவு சரி என்றால், இரவு சுமார் 8-10 மணி இருக்கும் ரயிலுக்காக என் உறவுக்காரர் ஒருவருடன் காத்திருந்தபோது பயணிகள் உட்கார வசதி செய்யப்பட்டிருந்த ஒரு திண்டின் மேல் பைகளை வைத்துவிட்டு நான் தண்டவாளத்தை ஒட்டி நின்றுகொண்டு இருந்தேன். அதற்கு முந்தைய நாட்களில் உறக்கம் இல்லாமல் வேலை இருந்ததால் அவர் அசந்து விட்டார் தனிப்பட்ட இழப்புகளை எண்ணி என் மனம் எங்கோ உலவிக்கொண்டிருந்தது. பைகள் இருந்த இடத்தில் இருந்து 3 அடி தள்ளி நின்றிருந்த நான் திரும்பி பார்த்த போது அது திருடப்பட்டிருந்தது. சுற்றி யாரும் இருக்கிறார்களா? என்று தேடிவிட்டு ரயில்வே போலீசில் புகார் அளிக்க சென்றேன். சினிமாவில் வருவது போன்று என்னுடைய 5000 ரூபாய் மதிப்பு பெரும் பொருள்களுக்காக அவர்கள் பாய்ந்தோடி சாகசம் புரிந்து திருடனை தேடி பிடிப்பார்கள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை என்னசெய்வதென்று அறியாத திகைப்பில் அவர்களிடம் சென்றேன். அவர்களிடம் இருந்து ஆறுதலான பதிலோ பெயருக்காவது அங்கிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யும் அணுகுமுறையோ கிடைக்கவில்லை. அங்கிருந்த காவலர், திருடு போனால் இங்கு புகார் செய்ய சொல்லி யார் சொன்னார்கள், உன் பொருளை நீ தான் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றார் அதிகாரமாக.
என்னுடைய அலட்சியமாகவே இருந்தாலும் களவு ஏற்றுக்கொள்ள படவேண்டியதாக ஆகிவிட்டதை நாம் உணரவில்லை.அலட்சியமாக இருந்தால் திருடு தான் போகும், அலட்சியமாக இருப்பவர்களிடம் திருடுவது தவறில்லை என்ற அலட்சியப் போக்கு நம்மிடையே உருவாக்கப்பட்டுவிட்டது.
அந்த ரயில் நிலையத்தில் இன்னமும் யாரேனும் தங்கள் பொருள்களை பறி கொடுத்துக் கொண்டிருக்க கூடும். அதே இடத்தில் இன்னமும் அந்த காவல் நிலையமும் இருக்க கூடும். இதற்கு காவல்துறையை மட்டும் குற்றவாளிகளாக்கி விட முடியாது.இயல்பில் அவர்களும் மனிதர்கள் தானே. சிஸ்டம் கெட்டுப்போயிருக்கு , சிஸ்டம் கெடுவதற்கு சகிப்புத் தன்மையே காரணமாகியிருக்கிறது.
சின்ன சின்ன திருட்டுக்களை நாம் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டோம் சைக்கிள் திருடுபோனால் நாமே கூட காவல் நிலையத்தில் புகார் அளிக்க தயங்குகின்றோம். அப்படியே காவல் நிலையம் சென்றாலும் மேலே சொன்னது போல நடக்கவே அதிகம் வாய்ப்பு இருக்கின்றது. சைக்கிள் திருடு போனால் நம்மை தான் நொந்து கொள்கிறோம்,பணப்பை திருடுபோனாலும் சகித்துக்கொண்டு நகர்ந்து விடுகிறோம்.
அரசாங்கத்தில் நடந்தேறும் பெரிய பெரிய ஊழல்களை எல்லாம் ‘அரசியலில் இதெல்லாம் சாதரணமப்பா’ என்று ஒரு வேட்பாளர் மீது எத்தனை பெரிய குற்ற வழக்குகள் இருந்தாலும் அதையெல்லாம் மிகச் சாதாரணமாக கடந்துவிடுகிறோம். இப்படி நம் சமூகத்தில் இயல்பலாதவைகள் எல்லாம் இயல்பானதாக மாறிவிட நாம் அனுமதித்து இருக்கின்றோம்.
இந்த சகிப்புத்தன்மையானது தற்போது பரிணாம வளர்ச்சி அடைந்து ஆன்லைன் வர்த்தகத்தின் ஏமாற்று வேலைகளை சகித்துக் கொள்ள வைத்திருக்கிறது. ஏன் ஆன்லைனில் வாங்கவேண்டும் கடைகளுக்கு சென்று வாங்க வேண்டியது தானே என்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் காலம் ஒரு மாற்றத்தை நோக்கி நம்மை எடுத்து செல்கையில் நான் வர மாட்டேன் என்று இருந்து விட யாராலும் முடியாது.
இப்படியாக திருட்டுக்களையும், ஊழல்களையும், குற்றங்களையும் இயல்பு என்று நாம் ஏற்றுக்கொள்ள பழகி இருப்பது, இந்த பெருந்தொற்று காலத்தில் கொலைகள் நிகழ காரணமாகி இருக்கின்றது. ரெமிடிசிவ்ர், TOCIL 12 UMAB போன்ற மருந்துகள் கொரோன தீவிரம் அடைபவர்களுக்கு பரிந்துரைக்கப்படுவதும் அது எளிதில் கிடைக்காமல் இருப்பதும் அனைவரும் அறிந்ததே. இது கள்ளச் சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது என்பது பரவலாக எல்லோரும் அறிந்ததே.
இந்த சூழலை பயன்படுத்திக்கொண்டு இந்த மருந்துகளை ஆன்லைனில் விற்கிறேன் என்ற பேர் வழிகள் 50000 த்தில் ஆரம்பித்து லட்சங்கள் வரை பணத்தைப் பெற்றுக்கொண்டு மருந்துகளை அனுப்பாமல் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களிடம் பணத்தை பெற்றுக்கொள்வதோடு மருந்து கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கையை தந்து பல உயிர்கள் பறிபோக காரணமாகியிருக்கிறார்கள் இந்த நவீன திருடர்கள்.
பணம் திருடு போகின்றது என்பது நம் சமூகத்திற்கு பழக்கப்பட்டுவிட்ட ஒன்றே ஆயினும் அந்த உயிர் காக்கும் மருந்து கிடைத்து விடும் என்ற நம்பிக்கையை கொண்டு நடத்தப்படும் இந்த ஏமாற்று வேலைகள் உயிர்களை பலி வாங்கிக்கொண்டு இருக்கின்றது.
நம் நிர்வாகம் இத்தகைய ஏமாற்று வேலைகளுக்கு இது நாள் வரை இடம் கொடுத்து வந்ததாலேயே இந்த பெருந்தொற்று காலத்தில் நம்மை அது இன்னும் அச்சுறுத்துகிறது.
இதற்காக ஆளும் கட்சி மீதோ எதிர் கட்சி மீதோ காவல் துறை மீதோ யாரையேனும் ஒருவரை மட்டும் நாம் குற்றம் சொல்லி தப்பித்துக்கொள்ள முடியாது. ஒரு சமூகமாக இப்படியான ஏமாற்று வேலைகளுக்கு ஒவ்வொவொருவரும் பொறுப்பு ஏற்க வேண்டும். நம் அணுகுமுறைகளை இனியேனும் மாற்றிக்கொள்ள வேண்டும் அப்படி மாற்றிக்கொண்டால் மட்டுமே இப்டியான ஏமாற்று வேலைகள் நடக்காத இடத்தை நாம் அடைய முடியும்.
புதிதாக பதவியேற்று இருக்கும் ஸ்டாலின் அவர்கள், மருந்து பதுக்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் இத்தகைய செயல்கள் நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.
இயற்கையாகவோ செயற்கையாகவோ தேவை அதிகரிக்கும் போது தான் மக்கள் இப்படியாக ஏமாற்றப் படுகிறார்கள். இந்த மருத்துகளின் தேவை அரசாங்கத்தால் பூர்த்தி செய்திருக்கப்படுமாயின் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்க மாட்டார்கள். சிலர் தக்க நேரத்தில் மருந்து கிடைக்காமல் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்திருக்க மாட்டார்கள். காலம் காலமாக எல்லாவற்றிக்கும் வரிசையில் நின்று கொண்டிருப்பதை சகித்துக்கொண்டிருந்த மக்கள் உயிர்காக்கும் மருந்திற்காக வரிசையில் காத்துகொண்டு இருக்க மாட்டார்கள்