பொய்ச் செய்திகளுக்கு உடனடி பதில் தாருங்கள் என்று தி.மு.க ஐ.டி அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தி.மு.க.வின் கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் பேசியிருக்கிறார். வாரிசு உரிமைப்படி பார்த்தால், அப்பா தாத்தா எல்லாம் தி.மு.க.காரர்கள் என்கிற முறையில் நானும் தி.மு.க.காரன் என்பதால், ஸ்டாலின் அவர்களின் கட்டளைக்கு இணங்க ஒரு பொய் செய்திக்கு உடனடி பதில் கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன், ஆனால், கொஞ்சம் தாமதமாகி விட்டது.
சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிராவில் நடந்த சாதாரணமான நிர்வாக பணியை சுட்டிக்காட்டி, “பார்த்தீர்களா! தப்பித்தவறி கூட NDA கூட்டணி தமிழகத்திற்குள் வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா? வந்தால் நம் அனைவரின் இட ஒதுக்கீடும் காலி! இவர்களுக்கு ஒரு நாளும் வளர்ச்சி அரசியல் பிடிக்காது; தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும் தான்” என்று கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்த வசனங்களை கேட்கும் உண்மையான சிந்தனையாளர்களுக்கு அது “கண்ணாடி தலைவரே” என்று சொல்லத் தோன்றியிருக்கும்.
2008-இல் மகாராஷ்டிரா மாநிலம் ஒரு கமிட்டி அமைத்து முஸ்லிம்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலையை ஆய்வு செய்து அவர்களின் நிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க பணித்தது. அந்த கமிட்டி 2013-இல் கொடுத்த அறிக்கைக்கு பின், 2014-இல் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன், முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு என்று ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. மசோதாவாக இருந்த சமயத்திலேயே அதற்கு மும்பை உயர்நீதி மன்றம் பகுதி தடை விதித்திருந்தது. நீதிமன்றம், கல்வி சார்ந்து இட ஒதுக்கீடுகள் மீது தடை விதிக்காமல், வேலைவாய்ப்பு தொடர்பான இட ஒதுக்கீட்டை மட்டும் போதுமான தரவுகள் இல்லை என்று தடை செய்திருந்தது. இந்த மசோதா சட்டமாகவே இல்லை. சட்டமாகாத ஒரு மசோதா தானாகவே காலாவதியாகிவிடும், ஆனாலும் அது திரும்பப் பெறப்படாததால் நிர்வாகத்தில் சில குழப்பங்கள் தொடர்ந்திருந்திருக்கும். அதற்காகவே தான், காலாவதியான ஒரு மசோதாவை திரும்பப் பெற்று இருக்கிறார்கள்.
இந்தக் காலாவதியான மசோதாவைத் திரும்பப் பெற்றதற்குத் தான் நம்முடைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இதென்ன முஸ்லிம்களுக்கு ரம்ஜான் பரிசா? இவர்களுக்கு வளர்ச்சி அரசியல் பிடிக்காது என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
மேற்கொண்டு நாம் படிப்பதற்கு முன்னர் நம் மனசாட்சியை கொஞ்சம் தட்டி எழுப்புவோம். பொய் செய்திகளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுங்கள் என்று ஸ்டாலின் அவர்கள், தி.மு.கவினர்க்கு சொன்னது போல, குரான் உலக மக்களுக்கு ஒன்றை சொல்லியிருக்கிறது:
“முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.”
இங்கே நடைமுறையில் இருந்த சட்டம் ஒன்றும் திரும்பப் பெறப்படவில்லை. நடைமுறைப்படுத்தப்படாத ஒரு மசோதா திரும்பப் பெறப்பட்டு இருக்கிறது.
முதலில் மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவையா? தேவையில்லை என்று தமிழக கிறிஸ்தவ அமைப்புகள் அரசு கொடுத்த இட ஒதுக்கீட்டை வேண்டாம் என்றதாக ஒரு செய்தி படித்தேன். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு இருப்பது போல், கிறிஸ்தவர்களுக்கும் 3.5% இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. 3.5 சதவீத வாய்ப்புகளை சுருக்குவது போல் இருக்கிறது; அதனால், எப்போதும் போல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 26.5% ஒதுக்கீட்டில் இருந்து கொள்கிறோம் என்று விட்டார்கள்.
சரி! கிறிஸ்தவர்கள் வேண்டாம் என்பார்கள். அநேகம் பேர் இந்து சாதிச் சான்றிதழ் வைத்துக்கொண்டு கூட கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் எப்படியும் அந்தந்த பிரிவுகளின் கீழ் இட ஒதுக்கீடு கிடைத்துவிடும். அதற்காக மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்வது நியாயம் ஆகுமா? மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்பது நியாயம் தான்.
காரணம், இங்கே ஒருவர் நேற்று வரை இந்துவாகவோ பௌத்தராகவோ சீக்கியராகவோ இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், அவர் இந்த வருடம் மதம் மாறிவிட்டால், அடுத்த வருடம் மதம் சார்ந்த இட ஒதுக்கீட்டை பெற தகுதியானவர் ஆகிவிடுவார்.
இதெல்லாம் யதார்த்தத்தில் நடக்குமா? நடக்குமா நடக்காதா என்பது கருத்து இல்லை. இப்படியும் நடக்க சாத்தியங்கள் இருக்கிறது. மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்பதற்கு இது ஒரு காரணம்; வேறு என்ன காரணம் இருக்கிறது?
நேற்று ஆசிரியர் குழுவில், இந்த இட ஒதுக்கீடு பற்றி பேசிக்கொண்டிருந்தோம். ஒருவர் இட ஒதுக்கீடு இருக்க கூடாது,அரசியல் சாசன வரைவு 15 மற்றும் 16-இன் படி சமமான வாய்ப்பை வழங்க வேண்டும் என்றார். அதோடு அம்பேத்கர் இது குறிப்பிட்ட காலம் வரை தான் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்றெல்லாம் சொன்னார்.
அவரிடம் வடிவேல் கேட்பது போல, “அப்ப நீ நம்ம வலைத்தளத்தில் நாம் எழுதுவது எதையும் படிப்பதில்லை?” என்று கேட்டுவிட்டு, ஏற்கனவே நாம் பல கட்டுரைகளில் எழுதியிருந்த கருத்துக்களை சொல்லி எங்கள் நண்பர் கூட்டத்தில் இருக்கின்ற வேறுபாடுகளையும் கூடுதலாக சொன்னேன். அது என்ன?
இங்கே இட ஒதுக்கீடு பொருளாதாரம் சார்ந்தது மட்டும் இல்லை. அது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சமூகத்தில் அதிகாரம் தர ஏற்படுத்தப்பட்டதும் கூட. ஒடுக்கப்பட்டவர்களுக்கு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லாவிட்டால், அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் அதிகாரம் அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு இருக்கிறது. அதற்காக கொண்டுவரப்பட்டது என்பதால் இது தேவை என்று நாம் சொன்னோம். அதோடு, இதில் ஒரு முன்னுரிமை பட்டியல் கொண்டு வரவேண்டும்,ஒவ்வொரு பிரிவிலும் மூன்று தலைமுறைக்கு வாய்ப்புகளையும் பயன்களையும் அடையாதவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று நாம் முன்னம் எழுதியிருந்ததை எடுத்துக் கூறினோம்.
அப்போது குறுக்கிட்ட இன்னொரு ஆசிரியர், இது தகுதியானவர்களின் வாய்ப்பை பறிக்காதா என்று கேட்டார். 100 பணியிடத்திற்கு ஆயிரம் பேர் விண்ணப்பிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்,அதில் தகுதி அடிப்படையில் ஒரு 100 பேர் பட்டியல் பிரிவினர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்றால், இந்த 100 பேரில், யார் ஒருவர் முதல் தலைமுறையாக இந்த பயன்களை பெறுகிறாரோ அவருக்கு முன்னுரிமை தருகிறோம். இப்படி 100 பேரில் இருந்து 15 பேருக்கு தான் வேலை என்கிற பொழுது, தகுதியான 15 பேர் தானே வாய்ப்பை பெறப்போகிறார்கள். அந்த ஆசிரியர் புரிந்துகொண்டார். உங்களுக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
கல்லூரியில் நாங்கள் நண்பர்கள் 30 பேர். இந்த 30 பேரில் ஒரே ஒரு நண்பனுக்கு மட்டும் அவனுடைய வட்டத்தில் அவனுக்கு முந்தைய தலைமுறையில் பட்டம் முடித்து வேலை சார்ந்த விஷயங்களில் வழிகாட்ட சரியான ஒருவர் கிடைத்தார். ஒரு வழிகாட்டி என்று வைத்துக்கொள்ளுங்களேன். அதே மறுபக்கம் திரும்பி பார்த்தால், பட்டிக்காட்டு பள்ளிக்கூடத்தில் இருந்து தேர்ச்சி பெற்று கல்லூரிக்கு வந்தவர்கள், சிலருக்கு பெற்றோர் மட்டும் இல்லை, அவர்கள் வட்டத்திலேயே யாரும் படித்தவர்கள் இருக்க மாட்டார்கள், சிலரின் வீடுகளில் அண்ணன் பட்டயப்படிப்பு முடித்து தம்பிக்காக மேற்படிப்பை தொடராமல் வேலைக்கு சென்று கொண்டிருப்பார்.
கல்வி சலுகைகள், அரசு வேலை, அதிகாரத்தில் வாய்ப்பு ஏன் இன்னமும் தேவை என்பதற்கு காரணம், 30 பேர் இருக்கும் நண்பர்கள் குழுவில் அவர்களின் பின்னணியில் இருந்த ஏற்ற தாழ்வு மூலமாகவே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
கல்லூரி காலத்தில், மூன்று நண்பர்கள் பேசிக்கொண்டிருந்த பொழுது, அவர்களுக்கு மட்டும் விண்ணப்ப படிவங்கள் கூட 100 ரூபாய் நமக்கு ஐந்நூறு ரூபாய் என்றெல்லாம் தன் விரக்தியை கொட்டிக்கொண்டிருந்தான். அப்போது அதில் ஒரு நண்பன் சலுகைகள் கிடைக்கப்பெறுகிறவனாக இருந்தான். அவன் ஒன்றும் பேசவில்லை.
இதில் விரக்தியை வெளிப்படுத்திய நண்பனின், அவன் வீட்டுடைய மாத வருமானம் மற்றும் தினசரி பொருளாதாரத்தை கணக்கில் கொண்டால் அவனுக்கு இந்த சலுகைகளை பார்த்து மனம் வெதும்ப தான் செய்யும். ஆனால், அவனோ நிலச்சுவான்தாரராக இருக்கின்ற சமூகத்தை சார்ந்தவன். அவனுக்கு ஏதோ ஒரு விதத்தில் ஒரு அடிப்படை ஆதரவு இருக்கிறது.
இந்த நண்பன் போலவே தான் நாம், நமக்கு பின்னால் மலைகளை வைத்துக்கொண்டு, இன்றைய தேதியில் நம் கையில் பணமில்லாததை குறித்து அவனுக்கு மட்டும் என்ன அத்தனை சலுகை என்று இட ஒதுக்கீட்டு முறையை கடிந்து கொள்கிறோம். இந்த இட ஒதுக்கீடு முறை தேவை தானே. ஆனால், முன்னுரிமை பட்டியல் போன்ற மாற்றங்களும் கொண்டுவரப்பட வேண்டும்.
அல்லாஹ்விற்கு அஞ்சி நேர்மையாக வாழ்கிற முஸ்லிம்களுக்கு சிந்தித்துப்பார்த்து சொல்லுங்கள், மத அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு தேவையா? எப்படி அந்த நிலச்சுவான்தார பின்னணி கொண்ட நண்பனுக்கு ஒரு அடிப்படை ஆதரவு இருந்ததோ அது போன்று இங்கு இஸ்லாமியர்களுக்கு ஒரு சொத்து சார்ந்த ஆதரவு இருக்கிறது தானே. அதோடு அரசு வேலைவாய்ப்புகளில் எத்தனை பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். எப்படி ஒரு சமூகம் நிலச்சுவான்தாரர்களாக இருக்கிறதோ அது போன்று இஸ்லாமிய சமூகத்தில் பெரும்பான்மையினர் வாணிபம் மற்றும் வெளிநாட்டு வேலைகளில் இருப்பவர்களாக இல்லையா? எங்கள் நண்பரில் ஒருவனுக்கு எப்படி வழிகாட்டி கிடைத்தாரோ அப்படி தொழில் அல்லது வெளிநாட்டு வேலை சார்ந்த விஷயங்களில் வழிகாட்டும் அளவிற்கு மேம்பட்டு இருக்கிறோம் தானே?!
இப்படியான தனிமனித கூட்டு முன்னேற்றங்கள் ஒருபுறம் இருக்க, ஒட்டுமொத்த ஏழை இஸ்லாமியர்களின் கல்விக்கும் பொருளாதாரத்திற்கும் பயன்பட வேண்டிய மாபெரும் சமூகச் சொத்துக்கள் இங்கு என்னவாகிக் கொண்டிருக்கின்றன என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா?
இந்தியாவில் வக்பு வாரிய சொத்துக்களின் மதிப்பு மட்டும் 1.2 லட்சம் கோடியாக இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. இந்த சொத்துக்களின் மூலம் வருடத்திற்கு 12 ஆயிரம் கோடி ஈட்ட முடியும். ஆனால், வக்பு வாரியங்கள் அதை விட குறைவான அளவிலேயே தான் வருமானம் ஈட்டுகிறது. முதல்வர் ஸ்டாலின் பார்வையில் வளர்ச்சி அரசியல் பிடிக்காத பா.ஜ.க சரிசெய்ய நடவடிக்கை எடுத்து இருக்கிறது. பா.ஜ.க என்றாலே எதிர்க்கும் முஸ்லிம்களுக்கு பா.ஜ.க அரசு செய்த ஒரு நன்மை வக்பு வாரிய திருத்த மசோதா கொண்டுவந்தது. 2025 ஆம் ஆண்டின் வக்ஃப் திருத்தச் சட்டம் வக்பு வாரிய சொத்துக்கள் குறைவான வருவாயை பெறுவதை நிவர்த்தி செய்து வருவாய் அதிகரிக்க வழிவகை செய்து வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக கடிவாளம் இல்லாத நிர்வாகம் போன்று இருந்து அது பயனாளிகளுக்கு சரியாக பயன்படாமல் இருந்ததை மாற்றும் ஒரு முன்னெடுப்பு இந்த சட்டம் என்று சொல்லலாம்.
சரி! முதல்வர் ஸ்டாலின் சொன்னது போன்ற முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு இருக்கிறதா என்றால் இல்லை. இப்போதும் வருவாய் மற்றும் முஸ்லீம் உட்பிரிவுகள் அடிப்படையில் முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட பிரிவில் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் அல்லது சிறப்பு பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்து சலுகைகளை பெற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
நாம் பொதுப் பிரிவு என்றாலே ஆரிய எதிரி பார்ப்பான் மட்டும் தான் இருக்கிறான் என்று நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால், முஸ்லிம்களில் பதான் போன்ற சில பிரிவினரும் கூட பொதுப்பிரிவில் வருவார்கள். பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்காக பா.ஜ.க. கொண்ட வந்த இட ஒதுக்கீட்டில் முஸ்லீம் சமூகத்தில், பொது பிரிவில் பொருளாதார ரீதியாக பின் தங்கியிருப்பவர்களும் பயன் பெறலாம்.
10 ஆண்டு காலம், மத்திய ஆட்சியில் அதிகாரம் கொண்டிருந்த பொழுது, வக்பு சொத்துக்கள் நெறிப்படுத்தப்பட வேண்டும் அதன் வருவாயை பெருக்க வேண்டும் என்று எந்த நடவடிக்கையையும் தி.மு.க. எடுக்கவில்லை. பாஜக பரவல் படுத்துவதற்கு முன்புவரை எய்ம்ஸ் பற்றிய பேச்சே இல்லை. வளர்ச்சி அரசியல் யாருக்கு பிடிக்கவில்லை முதல்வர் அவர்களே.
தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சிறுபான்மையினரை “சமூக நீதி மற்றும் இடஒதுக்கீடு” என்ற ஒற்றைப் புள்ளியிலேயே அணுகுகின்றன. சிறுபான்மையினரின் உள்விவகாரங்களில் (Personal Laws) தலையிடாமல் இருப்பதே அவர்களுக்குப் பாதுகாப்பானது என்று அவர்கள் நம்புகிறார்கள் (அல்லது அப்படி நம்ப வைக்கிறார்கள்). அதனால் தான் முத்தலாக் மற்றும் வக்பு போன்ற நீண்டகாலச் சீர்திருத்தங்களை அந்த சீர்திருத்தங்கள் இஸ்லாமிய சமூகத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது தொடவில்லை.
அரசியலில் ஒருவர் பொய்களை கொண்டே எதிரிகளை தாக்கி கொண்டிருந்தால், எதிரி பலம் பெறுவான் பொய்களை கொண்டு தாக்குகிறவர்கள் பலவீனம் அடைவார்கள், தமிழகத்தில் பா.ஜ.க. அப்படித்தான் பலம் பெறுகிறது. இஸ்லாமியர்களை வெறும் வாக்கு வங்கிகளாக மட்டும் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் அவர்களின் நன்மைக்காகவே செய்யப்படும் சில கசப்பான சீர்திருத்தங்களுக்கு எதிராக கருத்து சொல்லிவிட்டு, ஒப்பனைக்கு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வேணும் என்றும் பேசிக்கொண்டிருப்பார்கள்.
உண்மையை தேடி உணர்ந்து அரசியலை அணுகுகிறவர்களை அல்லாஹ் காப்பாற்றுவார். பொய்களை நம்பி குருட்டுத்தனமாக மத வெறுப்பின் காரணமாக ஒருவர் என்ன நன்மை செய்தாலும் நிந்தித்து, மற்றொருவரின் பொய்களுக்காக அவரை ஆதரித்தும் வந்தால், அல்லாஹ் அவர்களை நிச்சயம் தண்டிப்பார்.