தோனி பினிஷெர் தான் ஆனால், நீங்கள் எல்லோரும் நினைத்துக்கொண்டு இருப்பது போன்ற பினிஷர் இல்லை. அதிலும், ஒரு பந்து மட்டுமே மீதம் இருக்க, அதில் நிச்சயமாக நான்கு அல்லது ஆறு ஓட்டங்கள் எடுத்தாக வேண்டும் என்கிற கட்டாயமான அழுத்தமான சூழலில் பௌண்டரியோ சிகஸ்ரோ அடித்து வெற்றி அணியை வெற்றி பெற செய்யும் பினிஷர் இல்லை.
நம் வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்ட பொழுது, சினிமா கிரிக்கெட் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களைப் பற்றி எழுதுவதை கூடுமானவரையில் தவிர்க்க வேண்டும் என்றே எண்ணியிருந்தோம். காரணம், நம் நாட்டில், உள்ள மனிதவளம் சரியான பயன்பாட்டிற்கு உட்படாமல் இருப்பதற்கு பொழுதுபோக்கு அம்ஸங்களைப்பற்றி பேசுவதை பற்றி பேசுவது அதைப்பற்றி மீண்டும் பேசுவது என்று தொடர்கிறது.
ஒரு சினிமாவை பற்றி இரண்டு பேர் விமர்சனம் செய்தால், அந்த இரண்டு பேரின் விமர்சனத்தைப்பற்றி இன்னும் இரண்டு பேர் விமர்சனம் செய்ய அதைப்பார்த்து இன்னும் இன்னும் இரண்டு பேர் அதைப்பற்றி பேசுவதும் எழுதுவதும் என்று நீள்கிறது. யாருடைய நேரமும் அப்படியொரு விரயத்திற்கு நம்மால் உட்படக்கூடாது என்கிற எண்ணம்.
திரைப்படங்கள், விளையாட்டு போட்டிகள் போன்ற பொழுது போக்கு அம்ஸங்களை நாம் இங்கே குறை கூறவில்லை. ஒரு பொழுதுபோக்கு tool ஐ பற்றி தொடர்ந்து பலர் பேசி அது ஒரு பொழுதுபோக்காக ஆகும் போக்கையே நாம் குறையாக பார்க்கிறோம்.
சரி! அப்பறம் என்ன இதுக்கு தோனியைப் பற்றி ?
அதை தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள். அதே சமயம் நீங்கள் தோனியின் தீவிர ரசிகர் என்றால் இதற்கு மேல் படிக்காதீர்கள்.
நீங்கள் வெறுக்கும் ஒருவர் செய்யும் காரியங்களை உங்களால் ரசிக்க முடிந்திருக்கின்றதா?
என்னால் முடிந்துஇருக்கின்றது. கிரிக்கெட் பார்க்க தொடங்கிய 2000களில் கங்குலி தான் அணித்தலைவர். ஒரு அணித்தலைவராக கங்குலியை பார்த்து இரசித்த என்னைப்போன்ற என் நண்பர்கள் பலரும் கூட தோனியை வெறுக்கவே செய்தார்கள்.
பின்னாளில், “உனக்கு தோனியை பிடிக்காதா எனக்கும் பிடிக்காது!” ஏற்கனவே நண்பர்களாக இருப்பவர்களை இன்னும் நெருக்கமான நண்பர்களாக செய்யும் அளவிலான வெறுப்புணர்வாக அது வளர்ந்து இருந்தது.
ஏப்ரல் 5 2005, செவ்வாய்க்கிழமை- இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒரு நாள் போட்டி, அந்த போட்டியை நேரலையில் பார்க்க முடியவில்லை. பள்ளியில் இருந்து இடைவேளையில் வீட்டிற்கு வந்து பார்த்தபொழுது,41 ஓவர்களில் 289 ரன்களை இந்தியா கடந்திருந்தது. வீட்டிற்கு வருவதற்கு முன்னதாகவே, “தோனி ன்னு ஒருத்தன் அடி பொளந்து எடுக்கிறான்” என்கிற செய்தி பள்ளி முழுதும் பரவியிருந்தது. அந்த செய்தி பள்ளி முழுதும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. அங்கு இருந்து ஒவ்வொருவருக்கும் யார் இந்த தோனி புது பேரா இருக்கு, மேட்ச் எப்படி போகுது என்கிற என்கிற ஆர்வம் இருந்தது போல எனக்கும் அந்த ஆர்வம் இருந்தது.
நான் வீட்டிற்கு சென்று பார்த்தபொழுது, ஒரு வெள்ளை நிற துண்டு, அதை தோள்களில் போட்டிருந்த படி நீளமான முடியுடன் ஒரு முழு சோபாவையும் ஆக்கிரமித்தபடி ஒருவர் அமர்ந்திருந்தார்.அந்த தொலைக்காட்சியின் திரைமுழுதும் அவரே தான் ஆக்கிரமித்து இருந்தார். எந்த தோனி விளையாடுவதை பார்க்க வேண்டுமென்று நினைத்தேனோ அந்த தோனி தான் அவுட் ஆகி ட்ரெஸ்ஸிங் ரூமில் உட்கார்ந்திருந்தார். அவுட் ஆன ஒருவரை பற்றித்தான், வர்ணனையாளர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள்.யுவராஜ் போன்ற அதிரடி ஆட்டக்காரர்களை முன்னமே இந்தியா பார்த்து இருந்தாலும், தோனியின் அந்த அதிரடி ஆட்டம் இந்தியாவிற்கும் இந்தியர்களுக்கும் முற்றிலும் புதிதாக இருந்தது.
2006, பிப்ரவரி 19 ஞாயிறுக்கிழமை , பாகிஸ்தானில் பாகிஸ்தானுடன் ஒருநாள் போட்டி அந்த தொடரின் ஐந்தாவது போட்டி , 31 ஓவர்கள் முடிந்திருந்த பொழுது, ஓவருக்கு 7.42 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற நிலை. அன்றைய காலகட்டத்தில், இந்தியா போன்ற ஒரு அணி இப்படி நிலைக்கு வந்துவிட்டால் தோல்வி உறுதி என்று தீர்மானித்துக்கொண்டு ஏதேனும் அதியசம் நிகழாதா என்று பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியது தான். 52 பந்துகளில் 50 ரன்கள் அடித்து யுவராஜ் ஆடிக்கொண்டு இருந்தார். அன்று ஒரு அதிசயம் நிகழ்ந்தது, யுவராஜும் தோனியும் ஒரே ஓவரில் இரண்டு பௌண்டரிகள், அல்லது சிக்ஸர் கள் என்று அடித்து பாகிஸ்தான் கையில் இருந்த போட்டியை முழுமையாக இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார்கள்.
அந்த தொடரின் மூன்றாவது போட்டியிலும் இதே போன்ற சூழலில் இருந்து யுவராஜும் தோனியும் அணியை வெற்றி பெற செய்து இருப்பார்கள். அந்த இரண்டு போட்டியிலும் யுவராஜை விட தோனியின் ஸ்ட்ரைக் ரேட் அதிகம்.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்த மூன்று அதிரடி ஆட்டம் தான், தோனியை எல்லாரும் கவனிக்க வைத்தது. 3 வந்து மற்றும் ஐந்தாவது போட்டியில் சேஸ் செய்யும் பொழுது அவர் அடித்து ஆடிய விதம் தான் அவரை பினிஷெராக உலகிற்கு காட்டியது.
அதன் பின்னர், இந்திய அணிக்கான ஆடிய ஆட்டங்களில், ஒரு பேட்ஸ்மேன் ஆக, எல்லோராலும் அறியப்படும் பினிஷெராக அவர் எந்த பெரிய அற்புதங்களையும் நிகழ்த்திவிடவில்லை.
தோனிக்கு முன்னர் அணியில் இடம்பிடித்த தினேஷ் கார்த்திக் தோனியை விட நிச்சயமாக சிறந்த பேட்ஸ்மேன்,சிறந்த விக்கெட் கீப்பர் உம் கூட.
ராஜஸ்தான் மற்றும் சென்னை franchise அணிகளுக்கு இடையிலான சமீபத்திய போட்டியில், தோனி இரண்டு சிக்ஸர்கள் அடித்துவிட்டு கடைசி ஒரு பாலில் சிக்ஸர் அடிக்க முடியாமல் போனதை, தோனியின் ரசிகர்கள் தொடங்கி செய்தி ஊடங்களும் வரை ஒவ்வொருவரும் ஏதோ முதல் முறையாக தோனியால் இப்படியான சூழலில் இருந்து அணியை வெற்றிபெற செய்ய முடியவில்லை என்பது போல பேசிக்கொள்கிறார்கள்.
இது ஒரு வகையான collective illusion, தோனிக்கு கொடுக்கப்பட்ட அல்லது கிடைத்துவிட்ட இந்த பினிஷெர் பட்டமும் ஐபில்லும் கிரிக்கெட் பார்க்கும் சமூகத்தில் ஏற்படுத்திய விளைவு.
கடைசி ஒரு பந்தில் ஆறு ரன்கள் அடித்தால் தான் வெற்றி என்கிற சூழலுக்குள் ஒரு பேட்ஸ்மேன் தானாக தள்ளப்பட்டு, அப்படி ஒரு அழுத்தமான சூழலில் அந்த ஆறு ரன்களை இந்திய அணிக்காக அடித்தவர்கள் வரிசையில் நிச்சயம் தோனி இருக்கமாட்டார்.
ஆனால், இதை படித்த மாத்திரத்தில் நிச்சயம் உங்கள் மனதில் தினேஷ் கார்த்திக் வந்து சென்று இருப்பார். மிக சமீபமாக நடந்த போட்டி என்பதால் மட்டும் அல்ல இந்திய அணி அனேகமாக வேறு எந்த போட்டியிலும் அப்படியான ஒரு வெற்றியை அடைந்து இருக்காது.
தினேஷ் கார்திக்க்கை விட்டுவிடுவோம், ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் அவுட் ஆகிவிட்டால் இந்தியா தோற்றுவிடும் என்கிற மனநிலையை மாற்றியவர் யுவராஜ்.
இந்த யுவராஜ், தினேஷ் கார்த்திக் இருவரையும் விட்டுவிட்டு தோனியை தான் இந்த உலகம் பினிஷெர் என்று கொண்டாடுகிறது. Technically தினேஷ் கார்த்திக் தோனியை விடவும் சிறந்த பேட்ஸ்மேன்.
இந்தியாவின் மோசமான ஒருநாள் உலகக்கோப்பை தொடராக அமைந்த 2007 உலகக்கோப்பை தொடரில் தோனியும் கூட இடம் பெற்று இருந்தார்.
பல சில போட்டிகளில் ஆட்டம் கடைசி ஓவர் வரை செல்வதற்கு தோனியின் மந்தமான ஆட்டமும் கூட காரணமாக இருந்திருக்கின்றது.அத்தனை மந்தமாக ஆடிவிட்டு கடைசி ஓவர்களில் சில பௌண்டரிகள் அடித்து கடைசி பந்தில் பௌண்டரியோ சிக்ஸரோ அடிக்க வேண்டிய சூழலுக்குள் அணியை அவரே கொண்டு சென்று அந்த பௌண்டரியை அடிக்க முடியாமல் அணி தோல்வி அடையவும் கூட காரணமாக இருந்திருக்கின்றார்.
கிரிக்கெட் பரீச்சயமான காலத்தில் இருந்து தற்போது வரை தோனியை விட மிக சிறந்த கீப்பர்கள் பல பேர் இருந்து இருக்கின்றார்கள். இப்போதும் இருக்கின்றார்கள். தனக்கு வந்த 100 கேட்சுகளில் 22 கேட்சை தவறவிட்டிருக்கும் தோனியை சிறந்த விக்கெட் கீப்பராக இந்த உலகம் கொண்டாடுகிறது.
உலகக்கோப்பை இறுதி போட்டி 4.3 ஓவர்களில் 50 ரன்கள் அடிக்க வேண்டும். 6 விக்கெட் விழுந்த பின்னர் எட்டாவதாக ஒருவர் களமிறங்குகிறார். 27 பந்துகளில் 50 ரன்களை எட்டி ஒரு அணி ஜெயிக்கும் என்று தீர்மானமாக சொல்ல முடியாது.
போட்டி கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுக்க வேண்டும் நிலையில் வந்து நிற்கிறது.போட்டி பரபரப்பான நிலையில் இருக்கின்றது. எட்டாவதாக இறங்கிய அந்த பேட்ஸ்மேன் தன் காலை நோக்கி வந்த பந்தை கால் பக்கமாகவே சிக்ஸருக்கு பறக்க விடுகிறார். அடுத்த பந்தை லாங் ஆன் திசையில் பறக்க விடுகிறார். 3ஆவது பந்து லாங் ஆப் திசையில் சிக்ஸர். நாலாவது பந்தும் சிக்ஸர். இத்தனை பரபரப்பான போட்டியில் வர்ணனை தானாகவே பரபரப்பாக அமைந்துவிடும். அத்தனை கடிமான சூழலில் இருந்து அணியை வெற்றி பெற செய்தவர் கார்லோஸ் பரத்வெய்ட்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 434 ரன்களை தென் ஆப்ரிக்கா விரட்டிய பொழுது தென் ஆப்ரிக்கா அணி 432 ரன்களை எடுத்திருக்கும் பொழுது ஒன்பதாவது விக்கெட்டை இழந்துவிடும் அப்போது பதினோராவது பேட்ஸ்மேனாக வந்த நிட்டினி ஒரு ரன் எடுப்பார். அடுத்த பந்தில் பவுச்சர் பௌண்டரி அடிக்க தென் ஆப்ரிக்கா வெற்றி பெறும்.
மேலே சொன்ன இரண்டு சூழல் அளவிற்கோ அல்லது அதற்கு நெருக்கமான அளவிலோ எந்த அழுத்தமும் இல்லாத நிலையில்,
ஜாஹீர் கான், யுவராஜ், காம்பிர், கோஹ்லி எல்லோரும் சேர்ந்து வெற்றிக்கு பக்கமாய் அழைத்து வந்து விட்ட அணியின் வெற்றி ஊர்ஜிதமாகி விட்ட சூழலில் ஒரு சிக்ஸர் அடிக்கப்பட, Dhoni finishes off in style என்று உச்சஸ்தாயில் ரவி சாஸ்திரி தன் மூச்சை கொடுத்து கூவிய கூவல், அந்த சிக்ஸரை ரசிகர் மனதில் இடம் பெற செய்துவிட்டது.
இப்படி, கமெண்ட்ரி பாக்க்ஸில் உட்கார்ந்துகொண்டு போட்டியின் சுவாரசியத்தை கூட்ட ரவிசாஸ்திரி உதிர்த்த வார்த்தைகள் அத்தனையும் தோனியின் பிராண்ட் value ஐ ஏற்றும் விதமாகவே அமைந்தது.
தோனியின் அந்த சிக்ஸர் இல்லாமலும்,ஏன் தோனியே இல்லாமலும் கூட அன்று இந்தியா வெற்றி கண்டு இருக்கும்.ஆனால், தோனியின் மீது இந்த கிரிக்கெட் உலகம் கொண்டிருக்கும் தீராத மோகத்திற்கு ரவி சாஸ்திரி மட்டுமே காரணமில்லை.
அப்ப வேற யாரு காரணம்? தோனியே தான் காரணம்.
அவர் நல்ல பேட்ஸ்மேன் இல்லை. நல்ல கீப்பர் இல்லை. நல்ல பினிஷெரும் இல்லை. நல்ல கேப்டன் கூட இல்லை. ஆனால், 42…
இரு! இரு! இரு! நல்ல கேப்டன் இல்லை ன்னு நீ எப்படி சொல்லலாம் ன்னு நீங்க கெட்ட வார்த்தைகளில் திட்டுவது தெரிகிறது. ஏன் என்று பின்னால் விவரிக்கிறேன்.
அவர் நல்ல பேட்ஸ்மேன் இல்லை. நல்ல கீப்பர் இல்லை. நல்ல பினிஷெரும் இல்லை. நல்ல கேப்டன் கூட இல்லை. ஆனால், 42 வயதிலும் அவரிடம் இருக்கும் எந்த குறைகளையும் கருத்தில் கொள்ளாமல் வெறித்தனமாக அவரை இந்த கிரிக்கெட் உலகம் கொண்டாட காரணம் அவர் மட்டுமே.
எப்படி பந்து வீசினாலும் அதை பௌண்டரிகளாக்க தெரியாத ஒரு பேட்ஸ்மேன் தான் அதிரடி ஆட்டக்காரராக அறியப்படுகிறார். 100இல் 22 கேட்சை தவறவிட்டவர் தான் சிறந்த விக்கெட் கீப்பராக தெரிகிறார்.இக்கட்டான சூழலில், (ஐபில் தவிர்த்து) ஆட்டத்தை முடிக்கும் திறன் இல்லாதவர் தான் நல்ல பினிஷெராக அறியப்படுகிறார். அத்தனைக்கும் காரணம் அவரின் அணுகுமுறை.
தோனியிடம் இருந்து எந்த பேட்ஸ்மேனும் எந்த விக்கெட் கீப்பரும் எதுவும் கற்றுக்கொள்ள முடியாது. ஆனால், எல்லோருமே அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது அவரின் அணுகுமுறை.ராஜா மாதிரி இருக்கிறது.எவனையும் எதையும் சட்டை செய்யாமல் தான் செய்வதை மட்டும் கவனிப்பது.
தன்னைப்பற்றிய தன் செயல்களை பற்றிய பிறரின் எந்தவிதமான அபிப்ராயங்களுக்கும் இடம் கொடுக்காமல் இருப்பது.
எத்தனை சிறந்த வீரர்களாக இருந்தாலும் மற்றவர்களின் கருத்துக்கள் நம்மை ஆக்கிரமிக்குமாயின், முடிவுகளை நினைத்து கவலைப்படும் புத்தி இருக்குமாயின் உங்களை ஒரு தாழ்வுமனப்பான்மை தொற்றிக்கொள்ளும். மீசை மயிரின் நீளத்தில் கால் அளவு தாழ்வுமனப்பான்மை இருந்தாலும் அவன் ராஜாவாக இருக்க முடியாது. ராஜாவாக இல்லாத ஒருவன் ராஜராகவே இருந்தாலும் அவனை இந்த உலகம் கொண்டாடது.
தோனியின் காலத்தில் தோனியால் ஒதுக்கப்பட்ட தோனியை விட சிறந்த வீரர்கள், அவர்களைப்பற்றி அவர்கள் மீது கொண்டு இருக்காத நம்பிக்கையை தோனி தன் மீது கொண்டு இருந்தார்.அதனால் திறமையான வீரர்கள் அவருக்கு தேவைப்படவில்லை.அவருக்கு சர்க்கஸ் சிங்கங்கள் தான் தேவைப்பட்டது. ஆம், கங்குலி சிங்கங்களை கொண்டு ஒரு அணியை உருவாக்கி வழி நடத்தினார் என்றால், தோனி சர்க்கஸ் சிங்கங்களைத் தான் அணியில் வைத்துக்கொண்டார்.அது அவருக்கு போதுமானதாக இருந்தது, அல்லது அது தான் அவருக்கு தேவையாக இருந்தது.கங்குலியும் ட்ராவிடும் கேப்டன் களாக சில streotype களை உடைத்து இருந்தாலும் கூட வெளி கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் அவர்கள் மனதில் சில தயக்கம் இருந்தது.தோனியிடம் எந்த தயக்கமும் இல்லை,streotype களை உடைப்பதை தாண்டி அவர் trend setter ஆகிவிட்டார்.புதிய முயற்சிகளை சில முறை எடுத்துவிட்டு மாற்றிக்கொள்ளாமல் அதே முயற்சியில் தன்னை நிலை நிறுத்திக்கொள்பவர்கள் தான் trend setter ஆகிறார்கள்.
தோனிக்கு அந்த அளவு தன்னம்பிக்கை இருந்தது என்று சொல்வதை விட, அவருக்கு அவரைப்பற்றிஅவர் முடிவுகளைப் பற்றி யார் என்ன சொன்னாலும் கவலையில்லை.
திமிரும் கோமாளித்தனமும் சேர்ந்த ஒரு நிலை அது. அந்த நிலையில் இருந்துகொண்டு அந்த திமிரும் கோமாளித்தனமும் திமிராகவும் கோமாளித்தனமானாகவும் வெளிப்படாத வண்ணம் இருப்பவர்கள் தான் ராஜாவாக இருக்கின்றார்கள் .
தன்னைத்தானே பரிகாசம் செய்துகொள்கிறவர்கள் கோமாளிகள் என்றால், மற்றவர்கள் தவறை சுட்டிக்காட்ட தன்னைப்பற்றிய உண்மைகளை சொல்லி தன்னை தானே பரிகாசம் செய்யும் கோமாளிகள் கோமாளிகளாக தெரிவதில்லை தலைவனாக தெரிகிறார்கள்.ரஜினியும் தோனியும் அந்த வகை.இதை செய்யும் அவர்கள் எப்போதும் தங்களை தாழ்த்திக்கொள்வதே இல்லை மேலும் உயர்திக்கொள்கிறார்கள் அதோடு அவர்களை தாழ்த்தும் மனங்களை அவர்கள் கீழே தள்ளிவிடுகிறார்கள்.
“91ரன்களை எடுத்திருக்காவிட்டால், அஷ்வினை விட்டுவிட்டு ஏன் ஸ்ரீசாந்த்தை எடுத்த, ஏன் யுவ்ராஜ்க்கு முன்ன நீ இறங்கின ன்னு பல கேள்விகளுக்கு பதில் சொல்லணும்” என்று தன்னை தாழ்த்திக்கொள்வது போல் வெளியில் உட்கார்ந்துகொண்டு எது நடந்தாலும் நடந்து முடிந்த பின் முடிந்ததைப்பற்றி கருத்து சொல்பவர்களை வாரியிருப்பார்.
தன்னுடைய கேப்டன் பதவி பறிபோகும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்த பொழுது, என்னை விட்டால் அணியை வழி நடத்த தகுதியானவர் வேறு யாரும் இப்போதிருக்கும் அணியில் இல்லை என்று தோனி பேசும் போது அது திமிராக வெளிப்படுகிறதில்லை. அதற்கு எதிர்வினையாக ஐபில் கோப்பையை வென்று விட்டு கேப்டன் பதவியை எப்போது கொடுத்தாலும் ஏற்க தயாராக இருக்கிறேன் என்று சொன்ன காம்பிர் திமிர் பிடித்தவராக தெரிகிறார்.
காரணம் தோனியின் வார்த்தைகள் சுயமதிப்பீட்டின் வெளிப்பாடு. காம்பிர் இன் வார்த்தைகள் வெளிப்புற காரணிகளின் உந்துதலால் அவர் காட்டிய எதிர்வினை.
இந்த மேட்ச் ல நல்ல விளையாடாட்டி அணியில் இடம் இருக்காதோ! நான் இந்த மேட்ச் நல்ல விளையாடியே ஆகணும்! இப்படி எந்த காலத்திலும் தோனி நினைத்திருக்க வாய்ப்பு இல்லை. ரஹானே தினேஷ் கார்த்திக் போன்ற தோனியை விட சிறந்த பேட்ஸ்மேன்கள் தோற்று போனது இந்த இடத்தில் தான்.
நாம் யாரும் எதையும் யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிற இயங்கினால் நமக்குள் எந்த தாழ்வுமனப்பான்மையும் இருக்காது. நாம் ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள் அதன் காரணமாக நாம் எந்த ஒரு நிலையிலும் நம்மை எந்த ஒரு நிர்பந்தத்திற்கும் ஆட்படுத்திக்கொள்ள தேவையில்லை.
எவன் ஒருவன் தன்னை கவனித்து தன் செயல்களை கவனித்து, தன்னுடைய தனித்துவத்தை மதிக்கின்றானோ அவன் தன்னை வெறுப்பவர்களாலும் கூட கொண்டாடப்படுகிறான்.
நல்ல தலைவனுக்கு கீழ் நல்ல தலைவர்கள் உண்டாக வேண்டும், தோனியின் இந்திய அணியிலும் சரி CSK விலும் சரி அப்படி ஒரு தலைவன் உருவானதாக தெரியவில்லை. ஜாகிர் கான் , கிட்டத்தட்ட ஒரு பௌலிங் கேப்டனாக செயல்பட்டதை தோனியே ஒப்புக்கொண்டு இருக்கின்றார்.இப்படி கங்குலி உருவாக்கிய அணியை கொண்டு தான் தோனி உலக கோப்பை வென்று தந்தார்.
ஆனால், அதே அந்த அணியை கொண்டு கங்குலியாலும் கூட உலக கோப்பை வெல்ல முடியாததற்கு காரணம், அணுகுமுறை.
பேட்ஸ்மேன்களின் தடுமாற்றத்தை பயன்படுத்தி மின்னல் வேக stumping களுக்கு சொந்தக்காரர் என்று பெயர் எடுப்பது. லோ புல் டாஸ் டெலிவெரிகளை சிக்ஸர் களுக்கு பறக்க விட்டு அதிரடி ஆட்டக்காரர் என்று பெயர் எடுப்பது என்று எல்லாவற்றிலும் ஒரு நிதானமும் விவேகமும் தான் இருக்கின்றதே அன்று மின்னல் வேகம் ஒன்றும் இல்லை.
இந்த விவேகமும் நிதானமும் நமக்குள் இருப்பதற்கு நமக்குள் தாழ்வுமனப்பான்மை இருக்கக்கூடாது. அதற்கு நம்மை பற்றிய மற்றவர்களின் எந்த விதமான தீர்மானங்களுக்கும் நாம் இடம் கொடுக்க கூடாது.
ஒரு சமூகமாக 130 கோடி பேரில் ஒரு தோனி தான் இருக்கின்றார் என்பதை இந்தியா கவனிக்க வேண்டும்.இன்னும் சிலர் இருந்தாலும் 130 கோடி பேரில் 100 தோனி கூட இருக்க மாட்டார்கள். தமிழிகத்தை எடுத்துக்கொண்டால், சமூகமாக பெரிய குறையை கொண்டிருக்கும் சமூகமாகத் தான் நாம் இருக்கின்றோம். அப்படியே தான் வளர்கிறோம்.நம்முடைய சமூகம் இதை மாற்றிக்கொள்ளவே இல்லை. நீங்களே யோசியுங்கள்! உங்களைச் சுற்றி இருப்பவர்கள் பற்றி உங்கள் பிள்ளைகளைப்பற்றி..
மற்றவர்களின் தீர்மானங்களுக்கு மதிப்பளித்து தான் எல்லோரும் வாழ்கிறோம் நம் பிள்ளைகளையும் அப்படியான சூழலுக்குள் தள்ளிவிடுகிறோம் இப்படியே தொடர்ந்து ஒரு சமூகமாக நம் சமூகத்தில் நாம் ஒவ்வொருவரும் மனதின் அடியாழத்தில் தாழ்வு மனப்பான்மை கொண்ட சமூகமாகவே தான் இருக்கின்றோம்.
நாம் செய்யும் செயல்களைப்பற்றிய நல்ல விமர்சனங்களை நாம் பிறரிடம் இருந்து எதிர்பார்க்கும் பொழுதே நாம் தாழ்த்துவிடுகிறோம் அது நம்மைப்பற்றி மற்றவர்கள் குறைவாக சொல்லும் சமயங்களில் நம்மை இன்னும் கீழே தள்ளிவிடுகிறது.
ஆயிரம் குறைகள் இருந்தாலும் தோனி ரஜினி போன்றவர்களைத் தான் யாரும் கீழே தள்ள முடியவில்லை.காரணம், they respect their individuality.
“தன்னை கவனிக்கின்றவனை உலகம் கவனிக்கும் “
இத்தனை தூரம் எழுதிய பிறகும் கூட இதை இன்னும் விரிவா எழுதியிருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.இந்த இடத்தில் தான் தோனி என்னில் இருந்தும். இந்த சமூகத்திடம் இருந்தும் வேறுபடுகிறார். “இந்த கட்டுரை பேசும் விஷயம் எல்லோருக்கும் புரியுமா” என்று விளைவுகளை பற்றி கவலை கொள்ளும் மனிதர் அவர் இல்லை.
தில்லு முள்ளு படத்தில் விசு எழுதிய ஒரு வசனம்,”உலகத்தில் உன்ன விட பெரியவன் யாரும் இல்லை அதனால யாருக்கும் பயப்படாத உன்ன விட சின்னவன் யாரும் இல்லை அதுனால யாரையும் தாழ்வா நினைக்காதே”
Actually this is what Bagavat Gita talks about. Some people who read just praise and take it in different way, Some people who might have not read living as example.