து ஒரு வெள்ளிக்கிழமை மாலை நேரம். வேலை முடிந்து வீரா வீடு திரும்பிக்கொண்டிருந்தான். இன்னும் இரண்டு நாட்களுக்கு பணியிடம் பற்றிய எந்த சிந்தனையும் வீராவின் மனதில் இருக்க போவதில்லை. ஆனால், அவன் மனதில் எப்போதும் இருக்கும் சிந்தனை இருந்து கொண்டே தான் இருக்கப் போகிறது. ஷாரா ஜெர்மனி சென்ற நாளில் இருந்து, வீராவிற்குள் இருந்த எதிர்பார்ப்பு வெள்ளிக்கிழமை மாலைகளில் அதிகமாவது உண்டு. அவள் ஜெர்மனி சென்று இது மூன்றாவது வெள்ளிக்கிழமை. ஷாராவின் அந்த பயணத்தில் ஜெர்மனியில் ஷாராவின் கடைசி வார விடுமுறையின் தொடக்கம் அது. இதுவரையிலும் ஷாரா பேசவே இல்லை. ஒரு நாளில் நாற்பத்தியெட்டு மணி நேரம் இருந்தாலும், மொத்த உலகத்திலும் வீராவும் ஷாராவும் மட்டுமே இருந்தாலும் கூட வீராவிடம் பேசுவதற்கு மட்டும் ஷாராவிற்கு நேரமிருப்பதில்லை.

அவனே ஏற்படுத்திக்கொண்ட எதிர்பார்ப்புகளால் கிடைத்த ஏமாற்றங்களை சுமந்துகொண்டே வீரா வீட்டிற்கு நடந்துகொண்டிருந்தான். கீழ் வானத்தின் மேலே, நிலவிற்கு பக்கமாக வெள்ளி, நட்சத்திரம் போல் மின்னிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்தபடிக்கு  ஷாரா பற்றிய நினைவுகளை சுமந்துகொண்டு நடந்த வீராவின் மனம் பேசியது.

நிலவுக்கு பக்கமாய்
ஒரு நட்சத்திரம்
ஆனாலும் தூரமாய்
நானும் நிலவும் போல்!

It looks closer but never been closer. அவன் ஒரு போதும் ஷாராவின் மனதிற்கு பக்கமாக இருந்திருக்கவே இல்லை என்று அவன் மனம் சொல்லியது. கையில் இருந்த மிச்ச சந்தனத்தை யாருக்கு வைத்து விடுவது என்று அவள் அன்று தேடிக்கொண்டிருந்திருக்கலாம்.அவளே சொன்னது போல், ஸ்பெஷல் ஒன் என்று அவள் சொன்னதில் பரிகாசம் இருந்திருக்கலாம். வானில் தெரிந்த பிறைக்கு பக்கமாக தெரிந்த வெள்ளி நிச்சயமாக நிலவை விட வெகு தூரமாக தானே இருக்கிறது. அப்படித்தான் நீயும் அவளும் என்றது வீராவின் மனம்.

நிலவுக்கு பக்கமாய்
ஒரு நட்சத்திரம்
ஆனாலும் தூரமாய்
நானும் நிலவும் போல்!

அந்த நிலவையும் வெள்ளியையும் பிடித்து அவளுக்கு அனுப்பிவைத்தான். அவர்கள் இருவரும் இருக்கும் வாட்சப் குழுவிலும் அனுப்பிவைத்தான் அவன் எழுதிய கவிதையை அந்த குழுவில் தான் அவனால் அனுப்ப முடியும்.

நிலவும் அந்த வெள்ளியும் வானத்தில் அருகருகே தான் இருக்கிறது. நீ தான் தூரமாக தரையில் இருக்கின்றாய் என்றது வீராவின் மனம்.அதில் வீராவிற்கு மகிழ்ச்சியே தான்.

நிலவுக்கு பக்கமாய்
ஒரு நட்சத்திரம்
தூரமாய் நான்
வருத்தமில்லாமல்
பெரும் மகிழ்ச்சியில்

ஒரே காட்சி ஒரே மாதிரியான சூழல் வீராவின் மனதின் இருவேறு துருவங்களில் தோன்றிய இருவேறு எண்ணங்களால் இரு வேறு கவிதைகளானது.

இதே இந்த வெள்ளி, ஷாராவின் வானத்தில் தெரிய இன்னும் எட்டு மணி நேரம் ஆகும்.

நிலவையும் வெள்ளியையும் ஷாராவிற்கு அனுப்பி வைத்த வீரா, “ஜெர்மனியில் இருந்து நீங்களும் இந்த டைம்க்கு போட்டோ எடுத்து அனுப்புங்க” என்று கேட்டான். ஷாராவிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை.

ஒரு மணி நேரம் கழித்து ,”இப்ப இதை படிசீங்களான்னு கேட்பேன் அதுக்கு ஒரு பத்து நாள் பேசாம இருப்பீங்க” என்றான் வீரா. அதற்கும் பதில் இல்லை. அவன் கவிதைகளை பற்றி அவனே எழுதிய விளக்கங்களை பற்றிய கட்டுரைகளை அவளுக்கும் அனுப்பியிருந்தான் வீரா. அவள் படித்திருப்பாளா என்று தெரிந்து கொள்ள வேண்டும்; ஆனால், அவளோ அந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை.

விடியும் வரை வீரா காத்திருக்கவில்லை. ஜெர்மனியில் மணி எட்டு ஆனதும், “பார்க்கலையா?” வீரா அவன் பார்த்த நிலவையும் வெள்ளியையும் பற்றி கேட்டான்; அதற்கும் பதில் இல்லை. தூங்காத வீராவின் இரவு விடிந்தும்விட்டது. அந்த சனிக்கிழமையில் வீராவிற்கு ஒரு வேலையும் ஓடவில்லை. ஜெர்மனியில் ஷாராவின் கடைசி விடுமுறை நாள். இந்த மூன்று வாரங்களில் ஓரிரு நிமிடங்கள் கூட வீராவிடம் பேசுவதற்கு அவள் கடிகாரத்தில் இடமில்லை.ஓடிக்கொண்டிருந்த கடிகாரம், எந்த காலத்திலும் நீ அவளுடைய மனதில்,விருப்பத்திற்குரிய,நட்பிற்குரிய,மதிப்பிற்குரிய என்று இதில் எதுவாகவும் இருந்திருக்கவே இல்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தது.

அந்த மொத்த சனிக்கிழமையும், வீராவும் கடிகாரமும் மட்டுமே தான் பேசிக்கொண்டிருந்தார்கள். மறுநாள் ஊர் திரும்புவதற்கு ஆயத்தமாக போகும் அவளுக்கு கடிகாரம் பார்ப்பதற்கும் கூட நேரம் இருக்க போவதில்லை என்றது வீராவின் நாட்காட்டி.

ஓடாத வீராவின் அந்த சனிக்கிழமையும் ஓடி முடிந்தது. வீராவின் வானத்தில் ஞாயிறு விடிய காத்திருந்தது.வேகமாக ஓடிய ஷாராவின் சனிக்கிழமை ஓய்வு எடுக்க தொடங்கியிருந்தது.அவள் வானத்தில் பிறை தோன்றிக்கொண்டிருந்தது.

ஜெர்மனியை சுற்றி அன்று அவள் எடுத்த புகைப்படங்களை எல்லாம் வீராவும் பார்க்கும்படிக்கு பதிவேற்றியிருந்தாள். அவளின் வாட்சப் ஸ்டேட்டஸ் இல் இருந்த புகைப்படங்களை ஒன்று ஒன்றாய் பார்த்துக்கொண்டிருந்தான் வீரா. ஒவ்வொன்றிற்கும் ஒரு மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்தான்.

“நல்லா இருக்கு”

“அந்த ரோட்டை பார்த்தா மூஞ்சி தெரியுது மாப்ள மூஞ்சி”

“நான் யாரோ உங்க friend ன்னு நினச்சேன் நீங்க தானா இது”

“ஒவ்வொரு வாரமும் ஒரு இடத்துல வேலையா இல்லை வீக்கெண்ட் ட்ரிப் ஆ? ”

 

வீராவின் ஒரு மெசேஜ்க்கும் பதில் இல்லை. விடிந்தும் விட்டது. விடிந்ததும் வீராவிற்கு கோபம் அதிகம் ஆனது. வீராவின் பக்கம் விடிகிறது என்றால், ஷாரா உறங்கச்சென்றிருப்பாள்.

இன்னும் எட்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும்.இப்படியான காத்திருப்புகளில் காத்திருப்பதை தவிர மனம் ஒருவரை ஒன்றும் செய்ய விடுவதில்லை. வீரா குளித்துவிட்டு மீண்டும் வந்து தூக்கம் தராத அதே அந்த மெத்தையில் படுத்துகொண்டான்.

வீராவின் ஜன்னல் திரைகளை ஊடுருவி சூரியன் உள்ளேவந்ததும்  வீரா மணி பார்த்தான். இன்னும் நான்கு மணி நேரமாவது ஆகும், ஷாராவின் பக்கம் விடிவதற்கு. அவன் அவளுக்கு அனுப்பிய மெசேஜ்களையும் அவள் பதிவேற்றிய புகைப்படங்களையும் மீண்டும் பார்த்தான். அவனுக்குள் ஒரு கோபம். “இதுக்கெல்லாம் நேரம் இருக்கு!”அந்த விரக்கத்தியையும் இப்படியான உரிமையான கோபத்தையும் ஷாராவிடம் கொட்டுவதற்கு வீராவிற்கு எப்போதும் இடம் இருந்ததில்லை.

ஃபோனை மெத்தையின் ஓரத்தில் தூக்கி எறிந்தான். “டேய்! டேய்! இரு!” வீராவின் மனதின் ஆழத்தில் வீராவின் குரல் கேட்டது.

“என்ன செஞ்சாலும், குட் மார்னிங் அனுப்பினா கூட, அதுக்கு ஒரு கவிதை எழுதுறோம்! இதுக்கும் எதாவது எழுதுவோம்ன்னு எதிர்பார்த்து இருந்தா?” அவள் பேசாமல் இருப்பதற்கான தீர்மானமான காரணங்களையும் அவள் இப்படியும் கூட யோசிப்பாள் என்கிற குழப்பங்களையும் எப்போதும் போல் வீராவின் மனம் அவனுக்கு இப்போதும் ஏற்படுத்தியது.

அந்த குழப்பத்திற்கு காரணமும் இருந்தது, அசாதாரணமாக ஷாரா வீராவிடம் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை. அவள் இப்படி புகைப்படங்களை பதிவேற்றுவதும் கூட அரிதிலும் அரிதான நிகழ்வு. ஜெர்மனியில் அவள் காணும் உலகத்தை வீராவிற்கும் காட்ட வேண்டும் என்பதற்காக கூட அவள் அப்படி செய்திருக்கலாம் என்று வீராவின் மனம் ஏற்படுத்திய குழப்பத்திற்கு அவனுடைய மனமே இத்தனை வாதங்களையும் எடுத்து வைத்தது.

“யோசித்தெல்லாம் கவிதை எழுதியதில்லையே” என்று யோசித்தான் வீரா. Yes! Its a spark. அது (spark), காலையில் வீரா அந்த புகைப்படத்தை கண்ட பொழுது நிகழவும் இல்லை. அவன் ஏற்படுத்திய குழப்பம் பொய்யாகவே இருக்கட்டும், ஆனால், ஒரு வேளை அது உண்மையாக இருந்து வீராவின் கவிதைகளை ஷாரா தேடினால்? அவள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்று நினைத்தான் வீரா. அந்த புகைப்படங்களை மீண்டும் பார்த்தான். வீராவின் மனம் ஜெர்மனிக்கே சென்று எட்டு மணிநேரத்திற்கு முன் அவள் புகைப்படம் எடுத்த தருணங்களில் போய் நின்றது.

ஷாரா அங்கு ஓடிக்கொண்டிருந்த நதி ஒன்றை படமெடுக்க முனைத்தாள், அவள் போனை உயர்த்தியதும் அந்த நதி அவள் போனின் திரையில் ஓடிக்கொண்டிருந்தது விரல் தொட்டு அவள் அந்த நதியை உறைய வைத்தாள் . ஜெர்மனியில் அந்த தருணத்தில் நின்றுகொண்டிருந்த வீரா அதை அப்படியே எழுதினான்.

நிழற்படம் எடுக்க எத்தனித்தாள்
ஓடும் நதி
ஓடி வந்து சிறைப்பட்டுக்கொண்டது
தொடுதிரையில்
விரல் ஒன்று தொடுவதற்கு!

அவள் புகைப்படம் எடுக்க வருகிறாள் என்பதை பார்த்தும் கூட அந்த நதி நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தது.

நிழற்படம் ஒன்று எடுக்க
நெருங்கி வந்தாள்
நிற்காமல்
ஓடியது பெண் நதி
நெளிந்து
வழிந்து .

கடந்து போகும் நதியை கடக்கும் பாலத்தில் அவள். அவளை கடந்து செல்ல முடியாத வீராவிற்கு நதியின் மீது அத்தனை பொறாமை ஒரு பக்கம் அந்த நதியும் கூட அந்த புகைப்படத்தில் அவளை கடக்காமல் நின்றுவிட்டது என்கிற பூரிப்பு ஒரு பக்கம்.

நதி கடக்கும் மதில் மேல் அவள்
கடக்க மனமில்லாமல் நதி!

***

சுற்றம் பூமியில்
அவளைத் தேடி
சுற்றிகொண்டிருந்த நகரம்
இனியும் சுற்றும்
அவள் பாதம் பட்ட பரவசத்தில்.

வீராவின் மனம், ஜெர்மனியில் இருந்து வீராவிடம் திரும்பியது. ஜெர்மனியில் இருந்த நிலா வீராவின் பக்கமும் வீராவின் ஜன்னல்களுக்கு ஊடுருவிய சூரியன் ஷாராவின் பக்கமும் சென்றது.ஷாரா மீண்டும் சில புகைப்படங்களை பதிவேற்றினாள்.

“castle உள்ள போக allow பண்ணுவாங்களா?” வீரா மீண்டும் அவளுக்கு மெசேஜ் அனுப்பினான்.

“yes yes” ஒரு வழியாக அவளிடம் இருந்து ஒரு பதில் வந்தது.

“இதுக்கு முன்ன அனுப்பின ஒரு மெசேஜும் கண்ணுக்கு தெரியல?” அவன் கவிதைகளையும் அதை விவரித்து அவனே அவன் வலைப்பக்கத்தில் எழுதிய கட்டுரைகளையும் அவள் படித்தாளா? என்று அவன் முன்னம் கேட்டிருந்ததை சுட்டியே இந்த கேள்வி வந்திருக்கிறது என்பதை புரிந்துகொண்ட ஷாரா, வானமும் கூட அவள் போனை பார்த்துவிடாத படி அவள் முகம் கொண்டு அந்த போனை மறைத்துக்கொண்டு, “எனக்கு தெரியும்! நீ என்னைப்பற்றி தான் எழுதற’ன்னு நான் ரீயாக்ட் பண்ணா கபினி இரிடேட் ஆகலாம்” என்று வீராவிற்கு மெசேஜ் அனுப்பினாள்.

மொத்த வீட்டிலும் ஒத்தை ஆளாக தனியாக இருந்த வீரா அந்த மெசேஜை பார்த்த நொடியில் தன் வலது கை கொண்டு ஒரு கண்ணை மூடிக்கொண்டான்.

“எனக்கு இப்ப எப்படி ரீயாக்ட் பண்றது’ன்னு தெரில But finally peace” வழித்தோடிய அவன் வெட்கம் இந்த மெசேஜ் வழியாக ஜெர்மனி சென்று ஷாராவின் போனையும் நனைத்தது.

நான் ரீயாக்ட் பண்ணா கபினி இரிடேட் ஆகலாம் என்பதை மீண்டும் படித்த வீராவின் மனம் வாய்ப்பில்லை என்றது. ஆனால், ஷாரா அதை ஏற்றுக்கொள்ள போவதில்லை. அதனால் அவனும் சொல்லவில்லை. ஆனால், புரிந்துகொண்டான். அவன் என்ன புரிந்துகொண்டான்  என்பதை  அவன் மனதிற்குள்ளும் கூட அவன் சொல்லிக்கொள்ளவில்லை.

“என்னைப்பற்றி யாருக்குமே தெரியாத விஷயங்களும் கபினிக்கு தெரியும். she knows me better than anyone else” கொஞ்சம் பெருமை அதோடு, கபினி தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்கிற செய்தி எல்லாம் வீராவின் அந்த ஒரு மெசேஜில் வெளிப்பட்டது.

ஷாராவின் புன்னகையை பார்த்துக்கொண்டிருந்த ஷாராவின் போனில் இருந்து வீராவிற்கு அடுத்த மெசேஜ் வந்தது. “இந்த நாடோடி படத்துல அவன் எங்க போனாலும் பேனர் வைப்பாய்ங்களே அந்த மாதிரி”  இதைப்பார்த்ததும் சிரிப்பு, புன்னகை, வெட்கம், மகிழ்ச்சி எல்லாம் சேர்ந்து வீராவின் முகத்தை ஏதோ ஏதோ செய்துகொண்டிருந்தது. அவள் அந்த படத்தின் காட்சியை அனுப்பி வைத்தாள். வெட்கத்தில், “போதும்! போதும்!” என்றான் வீரா.

“அப்பவே தெரியுமா?” அந்த பொண்ணு அவளா தான் இருக்கும்ன்னு ஷாரா சொன்ன நாளை சுட்டி வீரா கேட்டான்.

“but finally peace” வீரா மீண்டும் சொன்னான். அவன் மனம் அவளுக்கு தெரியவேணும் வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தது நடந்தும் இருக்கிறது. அதை இன்று வீரா தெரிந்தும் கொண்டான்.

“அப்ப நான் ஒவ்வொரு கவிதை எழுதும் பொழுதும் உங்களுக்கு சிரிப்பா இருந்திருக்கும்’ல” சிரித்துக்கொண்டே கேட்ட வீராவிற்கு சிரித்தபடியே பதில் வந்தது, “ஆமா! எதுக்கெடுத்தாலும் உடனே உடனே ஒரு கவிதை” என்று ஷாராவிடம் இருந்து வந்த அந்த பதிலுக்கும் ஒரு கவிதை எழுதினான் வீரா,

எதையெல்லாம் கண்டு- எப்படியெல்லாம் சிரித்திருப்பாள் என்று
எழுதிய என் கவிதைகளையெல்லாம்
எடுத்து படித்து கொண்டிருந்தேன்
எழுத்துக்கூட்டி சிரிக்கிறது
என் எழுத்துகளெல்லாம்
எழுதிய என்னைப்பார்த்து

இந்த கவிதைக்கும் ஒரு பொம்மை சிரிப்பை அனுப்பி வைத்தாள் ஷாரா .

“I know it from the beginning” அப்பவே தெரியுமா என்கிற வீராவின் கேள்விக்கு ஷாராவிடம் இருந்து பதில் வந்தது.

கடல் கொண்ட ஆழம் கொண்டு கொட்டினாலும் நிரம்பி வழியும் இந்த மகிழ்ச்சியை யாரிடம் பகிர்ந்து கொள்வது. கபினியின் போன் சிலிர்த்தது, கபினி பேச தொடங்குவதற்கு முன்னமே அவன் புன்னகை அவள் காதுகளை வருடியது. “அவய்ங்களுக்கு தெரியுமாம் டா! I know it from beginning ன்னா எப்ப இருந்து டா இருக்கும்” கபினி புரிந்து கொண்டாள்,”இரு நான் விமல் அண்ணாவை ஆட் பண்றேன்!” என்று கபினி சொன்ன சில நொடிகளில், “ஹலோ!” விமல் குரல் ஒலித்தது.

“உங்க நண்பர் ஒரு வழியா சொல்லிட்டார்’ண்ணா!” என்று கபினி முடிப்பதற்குள். “இப்பவும் நான் எங்க சொன்னேன் அவய்ங்களுக்கே தெரியுமாம் எனக்கு இன்னிக்கு இது போதும் அப்படி இருந்தது. இனி என்ன பேச! இனி பேசினாலும் சரியா இருக்காது!”.என்று மகிழ்ச்சி பெரு மூச்சு விட்டான் வீரா.

“அப்பறம் என்ன! இனி… அவங்கள disturb பண்ணாத” என்றான் விமல்.

“இதுக்கு முன்னாடியுமே நான் பெருசா அப்படி பண்ணலை! தெரியணும்ன்னு நினச்சேன் எல்லாம் பேசணும்ன்னு நினச்சேன் கேட்கணும்ன்னு நினைச்சேன் இன்னிக்கு இருக்க சந்தோஷத்துக்கு எதுவும் வேணாம் இது போதும்ன்னு இருக்கேன் இனி disturb இல்ல பேச கூட வேணாம் எனக்கு” என்றான் வீரா.

அவர்கள் மூவரும் பேசிய அந்த கால் முடிந்தது. போதும் என்று நினைத்த வீராவின் மனதிற்குள் பதில் கிடைக்காமல் இருந்த கேள்விகள் எல்லாம் அப்படியே இருந்தது. வீராவிற்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் இப்போது பதில் தெரிந்தால் போதும்.

“அந்த beginning எப்ப 2011ஆ இல்ல 2019 ” வீரா கேட்டும் விட்டான். “எனக்கு ஞாபகம் இல்லை” என்றாள் ஷாரா. ஞாபகம் இல்லாமல் போக வாய்ப்பு இல்லை தான். ஆனாலும், வீரா அதோடு ஒன்றும் பேசவும்வில்லை. அந்த சந்தோசத்தை கெடுத்துக்கொள்ளவும் விரும்பவில்லை.

இந்த காதலின் தொடக்கம் (beginning) எது என்று வீராவிற்கும் தெரியாது. 2006ல் அவள் அந்த மாடிப்படிகளை ஏறி வந்த தருணத்தில் வீரா அவனுள் இருந்த அந்த காதலை உணர்ந்துகொண்டானே தவிர அதுவும் கூட இந்த காதலின் தொடக்கம் கிடையாது. அவனுக்குள் இருந்த ஒன்றை தான் அன்று அவன் உணர்ந்து கொண்டான். ஷாரா சொன்ன தொடக்கம் (beginning) அதற்கும் முன்னதாக கூட இருக்கலாம். அல்லது ஷாராவிற்கு வீரா மீது எந்த பிடிப்பும் இல்லாமல் இருந்து வீராவின் மனதை அவள் தெரிந்த கொண்ட தருணத்தை கூட அவள் சுட்டியிருக்கலாம். என்னவாக இருந்தால் என்ன? இந்த தொடக்கத்தை தெரிந்து கொள்வதால் வீராவின் இந்த காதலில் அது என்ன மாற்றத்தை தந்து விட போகிறது.

அவர்கள் இருவரும் சேரவில்லை தான். அதனாலேயே அவர்கள் பிரிய வேண்டியதும் இல்லை.அவர்கள் சேர்ந்திருந்தாலும் பிரிந்திருந்தாலும் இந்த கதை முற்றுப்பெற்று இருக்கும். இந்த காதல் உறவெனும் பிடிப்பை பெற்று உருமாறி இருக்கும்.

அவர்கள் சேரவும் இல்லை பிரியுவும் இல்லை. அதனால், ஆதியும் அந்தமும் இல்லாத இந்த காதல் முடிவில்லாமல் தொடரும். அது வீராவின் மனதில் ஒரு ஓரத்திலும் எழுத்தில் மையமாகவும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

“அவர்கள் சேரவும் இல்லை பிரியுவும் இல்லை. அதனால், ஆதியும் அந்தமும் இல்லாத இந்த காதல் முடிவில்லாமல் தொடரும். அது வீராவின் மனதில் ஒரு ஓரத்திலும் எழுத்தில் மையமாகவும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.” புத்தகத்தின் கடைசி வரிகளை மீண்டும் படித்த தாணு,”முடிவில்லாத ஒரு காதல் கதையில் என்ன மாதிரியான ஒரு முடிவு!” என்று கண்களில் ஆச்சிரியத்தை நிரப்பிக்கொண்டிருந்தார். அவர் வாழ்க்கையில் அவரை கடக்காமல் அவர் மனதோடு நின்றவிட்ட ஒரு ஷாராவின் முகம் அவர் மனதில் நிழலாடியது.

“ராதை மனதில்! ரா ஆ தை மனதில் என்ன ரகசியமோ!” வெற்றியின் வீட்டு தொலைக்காட்சியில் இந்த பாடல் ஓடிக்கொண்டிருந்தது. “வெற்றி உனக்கு போன்!” வெற்றியின் மனைவி வெற்றியின் போனை கொண்டு வந்து வெற்றியிடம் கொடுத்தார்.

“சொல்லுங்க சார்!” உற்சாகமாக வெற்றியின் குரல் ஒலித்தது.

“இப்ப தான் முடிச்சேன்!பொம்மை காதல்! யப்பா! உனக்கு என்ன தோணுது? அவங்க மறுபடி பேசிக்க மாட்டாங்களா? வீரா இது போதும்ன்னு பேசாம இருந்திருவானா?”கதை படித்து முடித்தும் அந்த தாக்கத்தில் இருந்து வெளிவராத தாணுவின் கேள்விகள் அது.

“போதும்’ன்ற நிறைவும் மனநிலையும் மனசுக்கு தற்காலிகமானது சார்! கபினிக்கு புரியும்; அவ இரிடேட் ஆக வாய்ப்பு இல்லை. ஆனா எல்லோரும் புரிஞ்சிக்க மாட்டாங்க அதுனால எப்போதும் போல அவங்க எப்போதும் பேசிக்க மாட்டாங்க. எப்பாவது பேசவும் செய்யலாம்.அவங்க ரெண்டு பேமிலி நட்பாகலாம்.who knows? life is full of surprises” அந்த கதையை ஆழமாக புரிந்துகொண்ட வெற்றியின் பதில் இது.

“என்ன கதைய்யா! 65 வயசு ஆச்சு எனக்கு; நானே என் ஸ்கூல் டியூஷன்கெல்லாம் போய்ட்டு வந்துட்டேன்ய்யா!  தாணு சொன்னதும்; “நமக்கு மட்டும் இல்லை சார் எல்லார்க்கும் இந்த கதை அப்படி தான் இருக்கும்” சிரித்த படியே வெற்றி பதிலளித்தார்.

“கரெக்ட்! நீ லாஸ்ட் ஆ சேர்க்கணும் சொன்ன சீனை யோசிச்சு பார்த்தேன். நல்ல ஐடியா! கபினி நிவாஷினிகிட்ட சொல்றா, “உனக்கு ஒன்னு தெரியுமா? ஷாராவுக்கு முன்னாடியே தெரியுமாம்!” உடனே நிவாஷினி வீராவைப் பார்த்து, அப்ப தெரிஞ்சதுனால தான் அந்த பொண்ணு உன்கிட்ட பேசலை; அது தான் பொம்பள புள்ள! அது செஞ்சது தான் கரெக்ட் அப்படி தான் இருக்கணும் சொல்றா. இதையெல்லாம் கேட்டுட்டு இருக்கும் போதே வீரா அமைதியா ஆகுறான். ஃபான் பண்ணி அவனுக்கு கிளோஸ் அப்! சூப்பர்ய்யா!” தாணு வெற்றியின் யோசனையை மெச்சினார்.

“பார்த்தீங்களா சார்! நீங்க படிங்க நான் சொன்ன சீன் உங்களுக்கு புரியும்ன்னு சொன்னேன்.இப்போ  வசனமெல்லாம் நீங்க சொல்றீங்க! வீராவோட அம்மா சொன்ன மாதிரி வீராவுக்கு தெரியும் ஷாரா நல்ல பொண்ணுன்னு! ஷாரா அவன்கிட்ட பேசாம இருந்ததும் கூட அவனுக்கு பிடிச்சுருக்கும்! ஆனா, அந்த கிளோஸ் அப் அதுக்காக இல்லை.தெரிஞ்சதுனால அவ பேசலைன்னா? தெரிஞ்சே அவ பேசிட்டு இருந்திருக்கலாம் ஒரு வேளை அவ சொன்ன beginning 2006ஆவோ 2011ஆவோ இருக்குற பட்சத்தில்.  அதோடு ஷாரா பேசாம இருந்தது சரின்னு நினைக்கிற அளவில மட்டுமே இதை புரிஞ்சிக்க முடியுற நிவாஷினிகிட்ட கபினி இதை சொல்லிருக்க கூடாதுன்னு அவன் யோசிச்சுருக்கலாம்; ஷாரா மனசுல என்ன தான் இருந்திருக்கும்னு யோசிச்சுருக்கலாம். Because that secret is not revealed. ராதை மனதில் இருந்த ரகசியம் போல். இப்ப தான் அந்த பாட்டு ஓடிட்டு இருந்துச்சு! ” என்று சொல்லி சிரித்த வெற்றி, அவர்கள் கூடுதலாக சேர்த்த கடைசி காட்சியை விளக்கிக் கொண்டிருந்தார்.

“அது என்ன யோசனையவோ கேள்வியாவோ இருக்கட்டும் எனக்கு இன்னும் பத்து நாளைக்கு அந்த கதையோடு கடைசி வரி மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கும்.அந்த கிளோஸ்அப் ஷாட்டை ஜூம் அவுட் பண்ணி, அந்த வரியை போட்டு தான் நம்ம முடிக்கணும்”அழுத்தமாய்ச் சொன்னார் தாணு.

“அவர்கள் சேரவும் இல்லை பிரியுவும் இல்லை. அதனால், ஆதியும் அந்தமும் இல்லாத இந்த காதல் முடிவில்லாமல் தொடரும். அது வீராவின் மனதில் ஒரு ஓரத்திலும் எழுத்தில் மையமாகவும் வாழ்ந்து கொண்டே இருக்கும்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *