பொதுவாக, ஐ.பி.எல். போன்ற விளையாட்டு ஆட்டங்களில் தன்னை விட பலமான அணியுடனான போட்டியில், வெற்றிக்காக போராடியும் வெற்றி பெற முடியாத பலம் குறைந்த அணியின் போராட்டம், அந்த அணி வென்றிருக்க வேண்டும் என்னும் எண்ணத்தை மக்கள் மனதில் உண்டாக்கும். அப்படியானதொரு தாக்கத்தை அநேக மனங்களில் ஏற்படுத்தி இருக்கின்றார் எடப்பாடியார் அவர்கள். இது அவர் தலைமைக்கு கிடைத்த முதல் வெற்றியாகவே பார்க்கப்பட வேண்டும் அப்படியாகவே பார்க்கப்படுகிறது.
திராவிட கட்சிகளின் எழுச்சிக்கு பின்னால், தமிழகத்தில் ஒரு கவர்ச்சி அரசியலே இது வரை வென்று கொண்டிருந்த வேளையில், இந்த முறை அ.தி.மு.க. பெற்றிருக்கும் வெற்றியானது ஒரு கட்சியின் வெற்றி! ஜனநாயகத்தின் வெற்றி! இத்தகைய புகழுரைகளை எழுதும் முன்னர் பொதுவான சில விஷயங்களை வங்கிகளின் Write off கணக்குகள் போல் ஒதுக்கிவிட்டே எழுதுகிறேன்.
ஆம், எல்லா தேர்தல்களையும் போலவே இந்த தேர்தலிலும் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் சாதி மற்றும் பணம் ஆகியவை தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளாக இருந்தது மறுப்பதற்கில்லை. அத்துடன் எல்லா கட்சிகளின் மீதான மக்கள் சகித்துக்கொண்ட ஊழல் விமர்சனங்களையும் ஒதுக்கிவைத்து விட்டே எழுதுகிறேன்.
வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் சாதி பலங்களை தன் கட்சியின் பலமாக தக்கவைத்துக்கொண்டதில் ஜெயித்து இருக்கின்றார் எடப்பாடியார்.
ஒரு கட்சி என்பது லட்சோபலட்சம் மனித மனங்களின் கூட்டு அந்த கூட்டு உடையாமல் இருக்க; அதனை ஒருமுகமாக செலுத்த கவர்ச்சியான ஒரு ஆளுமை எல்லாக் காலங்களிலும் எல்லா கட்சிகளுக்கும் தேவைப்பட்டு இருக்கின்றது. அப்படியான ஒரு கவர்ச்சி இல்லாமல் அ.தி.மு.க.வின் அத்தனை மனங்களும் இணைந்து பணியாற்றி வென்றிருப்பது ஜனநாகயத்தின் வெற்றியே. அதன் மையப்புள்ளியாக இருக்கும் எடப்பாடியார் அ.தி.மு.க அல்லாத மனங்ககளையும் இதயங்களையும் கூட வென்றுவிட்டார்.
அண்ணா,எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா என்று மக்களை ஈர்க்கும் கலைக்கூடத்தின் பின்னனியில் அல்லது கலைத்துறையில் இருந்து வந்ததால் கிடைத்த ஒரு வகை ஆதாயம் என்று எதுவும் இல்லாமல் சாமானிய தொண்டராக இருந்து எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அ.தி.மு.க. தலைமையின் வெற்றி ஒரு வகையில் சாமானியனின் வெற்றி.
சாமானியர்களுக்கும் ஜனநாகயத்தில் ஒரு பெரிய வாய்ப்பு என்றாவது கிடைக்கும் என்கிற நம்பிக்கையை விதைத்த வெற்றி. வாரிசு அரசியல் என்கிற கோஷத்தை கையில் எடுத்து அந்த விமர்சனம் தன் மீது விழுந்து விடக்கூடாது என்பதற்காகவே தன் உறவுகளை கட்சியில், ஆட்சியில் சேர்த்துக்கொள்ளாமல் இருந்த புரட்சித் தலைவி இதயதெய்வம் டாக்டர் அம்மா ஜெயலலிதா அவர்களின் வைராக்யத்திற்கு கிடைத்த வெற்றி. ஜெயலலிதா அவர்களின் தொண்டர்களிடம் கேட்டு பழகிய இந்த புகழ் கோஷங்களை நான் அதிகம் வெறுத்ததுண்டு.
இன்று அந்த பட்டங்கள் அவருக்கு சரியானதே என்று என்னை மட்டுமில்லை என் போன்ற இன்னும் பலரை ஏற்றுக்கொள்ள நிர்பந்தித்து இருக்கின்றது, அ .தி.மு.க வின் இந்த வெற்றி. கலைத்துறையில் இருந்து இல்லாமல் பெரிய அரசியல் தலைவரின் வாரிசாகவும் இல்லாமல் மக்களை சாதரணமாக கவர முடியாத ஒரு சாதாரணமானவர் எதிர்க்கட்சி தலைவராக முடிந்ததற்கு வாரிசு அரசியலை ஒதுக்கி வைத்திருந்த ஜெ. அவர்களின் புரட்சியே காரணம்.
மிகவும் விலை உயர்ந்த தேர்தல் நிபுணர்கள், மிக பெரிய அரசியல் பின்புலம், தமிழகத்தில் வியாபார ரீதியாக எல்லாத் துறைகளிலும் விஸ்தரித்து இருக்கும் இரண்டு பெரும் குடும்பங்களின் பெரும் படையை, சாதாரண பின்புலத்தை கொண்டு சில வருடம் அமைச்சர் பொறுப்பில் இருந்ததால் மட்டும் எதிர்த்து விட முடியாது. ஆனால், எதிர்த்து இன்று எதிர் கட்சி என்னும் அந்தஸ்தை பெற்று இருக்கின்றது அ.தி.மு.க. இது சாதாரணமானவரின் வெற்றி மட்டும் இல்லை ஒரு அரசியல் கட்சியின் தொண்டர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. இந்த ஒற்றுமை தொடர்ந்தால் மட்டுமே எதிர்வரும் காலங்களில் அ.தி.மு.க தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முடியும்.
ஆட்சி பொறுப்பில் கட்சிப் பொறுப்பில் இல்லாமலும் கூட மக்கள் பிரதிநிதிகளை அடைத்துவைக்க கூடிய அளவு பண பலமும் ஆள் பலமும் கொண்ட தமிழகத்தின் இரண்டு பெரும் குடும்பத்தில் ஒரு குடும்பத்தை அவர்களின் கூடாரத்திற்குள் இருந்து கொண்டே நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு எதிர்த்துவிட முடியாது என்பதை புரியவைத்திருக்கின்றார் எடப்பாடியார். அதோடு முதலமைச்சராக இருக்கும் போது அவர் சாமர்த்தியமாக எதிர்கொண்ட அநேகமான சிக்கல்களை தன்னை விட சிறப்பாக கையாள வேண்டிய நிர்பந்தத்தை தி.மு.க விற்கு ஏற்படுத்திவிட்டு சென்று இருக்கின்றார் என்பதனை மறுத்து ஒதுக்கிவிட முடியாது. மத்திய அரசோடு ஓரளவு இணக்கமாக இருந்து ஒரு தேசிய கட்சியின் எல்லா நிர்பந்தங்களுக்கும் அடிபணியாமல் அதே வேளையில் முழுதும் அவர்களை எதிர்க்காமல் எதிர்ப்பது மட்டுமே அரசியல் இல்லை என்பதையம் காட்டிவிட்டு சென்று இருக்கின்றார் .
தவழ்ந்து சென்று முதல்வர் ஆனார் என்கிற அர்த்தமற்ற விமர்சனங்களை காலம் இனி மறையச் செய்யும். காரணம் , அவரின் தலைமையில் அவர் கட்சி கம்பீரமாகவே எதிர்க்கட்சி பொறுப்பை ஏற்க இருக்கின்றது.