ஆண்-பெண் சமத்துவம், சம உரிமை என்கிற பேச்சு எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் இருந்தாலும், ஒவ்வொரு நாடுகளிலும் இடங்களிலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு படிநிலைகளைக் கடந்து வந்து இருக்கிறது. இன்று இங்கே நம் நாட்டிலும் இந்தச் சம உரிமை என்பது ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமாக இருந்தாலும், அதில் இருக்கும் அடிப்படை ஒற்றுமை ‘சம உரிமை’ என்கிற தளத்தில் இருந்து விலகி நகைப்புக்குரிய ஒன்றாக நிற்கிறது.
பெண்களும்கூட இது பற்றிய தவறான புரிதலையேதான் கொண்டிருக்கிறார்கள். முதலில் இயற்கையில் ஆணும் பெண்ணும் சமம் இல்லை என்கிற அடிப்படையை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இயற்கையில் ஆண்கள் செய்ய முடிகிற விஷயங்களைப் பெண்களாலும், பெண்கள் செய்ய முடிகிற விஷயங்களை ஆண்களாலும் செய்ய முடியாது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். இந்தச் சம உரிமை எங்கெல்லாம் வரவேண்டும்? இருவரும் பொதுவாகச் செய்ய முடிந்த எல்லாக் காரியங்களிலும் வர வேண்டும். அது அப்படி இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை.
ஒரு வீட்டில் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் பொழுதே பெண் பிள்ளைகளுக்கான சில உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது என்பதுதான் நிதர்சனம். நாம் முன்னம் குறிப்பிட்டது போல, இருவரும் இயற்கையில் சமம் இல்லை என்பதை ஏற்கிறோம்; பின்னர் ஏன் குழந்தை வளர்ப்பில் காட்டப்படும் வேறுபாட்டைத் தான் விமர்சிக்கிறோம்? நிச்சயம் பெண் பிள்ளைகளையும் ஆண் பிள்ளைகளையும் ஒரே மாதிரியாக வளர்த்தெடுக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளும் நாம், பெற்றோர்கள் காட்டும் இந்த வேறுபாடு எல்லை தாண்டி நீள்கிறது என்பதுதான் விமர்சனம்.
பெண் பிள்ளைகளை வெளியில் விளையாட அனுப்பத் தயங்குகிறோம். தூரமான இடங்களுக்கு வேலைக்கு அனுப்பத் தயங்குகிறோம். சில சூழல்களை எடுத்துச் சொல்லி அவர்களின் வேலை சார்ந்த தெரிவுகளில் குறுக்கிடுகிறோம். இதில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையும் அக்கறையும் இருப்பதை நாம் ஏற்றுக்கொண்டாலும், இந்தச் சமூகம் ஒரு மாற்றத்தை முன்னெடுக்கத் துணிந்து இருக்கிறதா என்றால், பெருவாரியான பெண்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பேசினால் ‘இல்லை’ என்பதுதான் பதிலாக இருக்கும்.
ஒரு ஆண் வெளியில் செல்லத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக மது, புகை என்கிற பழக்கங்களுக்கு ஆளாகும் பொழுது, ஆரம்பத்திலும் அவ்வப்பொழுதும் கண்டித்தாலும் நம் மனம் ஏற்றுக்கொள்கிறது. “இதுவே ஒரு பெண் செய்தால் அது ஏற்குமா?” என்கிற நவீன பெண்ணியவாதிகள் வைக்கும் அபத்தமான கேள்வி நம்முடையது அல்ல. தவறான பழக்கவழக்கங்கள் ஒரு பெண்ணுக்கு எப்படி ஆகவே ஆகாத ஒன்றென்று வரையறுக்கப்பட்டு இருக்கிறதோ, அதுவேதான் ஆணுக்கும் என்பதுதான் சம உரிமை.
ஆண்கள் செய்யும் தவறுகளைப் பெண்கள் செய்வதற்குப் பெயர் சம உரிமை இல்லை. அந்தத் தவறுகளை ஆண்களையும் செய்ய விடாமல் வைத்திருப்பதுதான் சம உரிமை. துரதிர்ஷ்டவசமாக இந்த கெட்ட பழக்கங்களெல்லாம் வீரம் மற்றும் சமூக உறவுகளைப் பலப்படுத்துதல் போன்றவைகளோடு தொடர்புபடுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது.
பல நேரங்களில் குற்றம் எதுவாக இருந்தாலும் இந்தச் சமூகம் அதை யார் செய்கிறார்கள் என்பதை வைத்துதான் அளக்கிறது. ஆண் ஒன்றைச் செய்யும்பொழுது சாதாரண விஷயமாகக் கடந்து செல்கின்ற சமூகம், பெண் செய்யும்பொழுது பூதக்கண்ணாடி கொண்டு பெருங்குற்றமாகப் பார்க்கிறது.
இந்த இரட்டை நிலைப்பாடு (Double Standard) குடும்பங்களுக்குள் மட்டுமல்ல, நாம் கொண்டாடும் அரசியல் பிம்பங்களுக்குள்ளும் ஊடுருவி இருக்கிறது
நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் அவர்களின் மனைவி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவில் இருந்த புகார்களை விஜய்யின் ஆதரவாளர்கள் எப்படியாக அணுகுகிறார்கள் என்பதைப் பார்க்கும்பொழுது, நாம் எப்படியான சமூகமாக இருக்கிறோம் என்கிற கவலை எழுகிறது. அவர்களின் ஆதர்ச நாயகன் – அவர்களின் தளபதி – அவர்களின் தலைவனின் மனைவி என்கிற குறைந்தபட்ச மரியாதை ஏதும் இல்லாமல் வலைதளங்களில் அவரை ஏகத்துக்கும் சாடுவதோடு, ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு அவரை தி.மு.க. கைக்கூலி என்று சித்தரிப்பது வருத்தமளிக்கிறது. இங்கே அவரை விடவும் நீங்கள் விஜய்யைப் பல தி.மு.க நிகழ்ச்சிகளில் கண்டிருக்க முடியும்.
தலைவர் பக்கம் இருக்கும் குற்றங்களை அவர்கள் உப்புக்கும்கூட கண்டுகொள்ளவில்லை. “இப்போது இதை ஏன் கிளப்ப வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகிறார்கள். அவருடைய மனுவில் குறிப்பிட்டு இருப்பது போல, நடிகை, தொடர்ந்து விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களைப் பொதுவில் வெளியிடுவது மன உளைச்சல் தருகிறது என்று டிசம்பரில் மனு கொடுத்திருக்கிறார். அந்த மனு எடுத்துக்கொள்ளப்பட்டு அதை விசாரிக்கத் தேதி ஒதுக்கப்பட்டதும் அது செய்தியாகி இருக்கிறது. டிசம்பருக்கு முன்னர் சில மாதங்களாக மனுவில் குறிப்பிட்ட விஷயங்கள் நடந்ததை விஜய்யே கூட மறுக்க முடியாது. நடந்தது உண்மை; ஆனால் அது வெறும் நட்பு மட்டும் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
சில மாதங்களாக நீதிமன்றம் வராத வழக்காக இது நடந்து கொண்டிருந்தது என்பதையும் அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். விஜய்யின் ஆதரவாளர்கள் விஜய் தரப்பு விளக்கம் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அவருடைய சுய விருப்பு வெறுப்புகளை நாம் இங்கே விட்டுவிடலாம். சில மாதங்களாக நடந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தையைச் சுமூகமாக முடித்து வைத்திருக்கலாம். அதை ஏன் செய்யவில்லை என்று விஜய்யிடம் அவர்கள் கேள்வி எழுப்ப நினைக்கவில்லை.
இது “அரசியல் சதி” என்பது மட்டுமேதான் இவர்களின் கோஷமாக இருக்கிறது. பிரசாந்த் போன்ற திரைவிமர்சகர் எல்லாம், “சங்கீதா அக்கா நல்லவர்தான், யாரோ இதை இந்த நேரத்தில் வெளியிட வேண்டும் என்று பல காலமாக வேலை பார்த்து இருக்கிறார்கள்” என்கிறார். உங்கள் அண்ணன் கட்சி தொடங்கி சரியாக இரண்டு வருடம் தான் ஆகிறது. இரண்டு மாதங்களுக்கு முன் தான் மனு அளிக்கப்பட்டு இருக்கிறது.
நீங்கள் குற்றம் சொல்வது போல், சங்கீதா அவர்கள் வேண்டுமென்றே இந்த கட்டத்தில் இப்படிச் செய்து விட்டார் என்று வைத்துக்கொள்வோம். அது கணவர் மீது இருந்த அதிருப்தியின் வெளிப்பாடாக ஏன் இருக்கக்கூடாது? சரி, எதிர்க்கட்சி சதி என்றே வைத்துக்கொள்வோம், அதற்கு இடம் கொடுத்தது யாருடைய தவறு?
இங்கே மிக லாவகமாக நீங்கள் உங்கள் தவறுகளை உதாசீனம் செய்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிகிறதா? இதே புகார்களை உங்கள் அண்ணன் வைத்திருந்து விவாகரத்து கேட்டிருந்தால், நீங்கள் உங்கள் அண்ணனை “2021 முதல் எப்படி அண்ணா பொறுத்துக் கொண்டீர்கள்?” என்று பொங்கியிருக்க மாட்டீர்களா? பெண்களுக்கான இலக்கணம் என்ன என்று வகுப்பெடுத்திருக்க மாட்டீர்களா? ஆண்களுடைய சில தவறுகள் உதாசீனப்படுத்தப்படுவது போன்ற போக்குதான் இதில் நிலவுகிறது என்று நாம் பார்க்கிறோம். “இது தனிநபர் வாழ்க்கை, பேச வேண்டாம்” என்கிற நீங்களும், “இது அரசியல் லாபத்திற்காகச் செய்யப்பட்டது” என்று பேசுவதை நிறுத்த வேண்டாமா? உங்களுடைய அந்த குற்றச்சாட்டுக்கு பின்னால் ஒரு பெண்ணின் வலி இருப்பதை நீங்கள் உணரவில்லையா?
புதிய அரசியலை முன்னெடுக்கிற நீங்கள் “மற்ற தலைவர்கள் ஒழுங்கா?” என்கிற கேள்விகளை வைத்தாலும் அது உங்களை நோக்கித்தான் திரும்பும். தனிநபர் விருப்பு வெறுப்புகளில் யாரும் தலையிடவில்லை. இங்கே நாம் எதிர்பார்ப்பது குறைந்தபட்ச வெளிப்படைத்தன்மையை. மனுவில் குறிப்பிட்டபடி பார்த்தால் வீட்டில் அது இல்லை. ஆனால், இந்தச் செய்தி வெளிவந்து தன் குழந்தைகளின் தாய் தன் ஆதரவாளர்களையே தார்மீகத் தாக்குதலுக்கு உட்படுத்தும் பொழுது, “இதுதான் பிரச்சனை, இதை நான் பார்த்துக் கொள்கிறேன். இது பற்றி என் அன்பிற்குரிய ரசிகர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள் யாரும் எந்தக் கருத்தையும் யாருக்கும் எதிராகவும் தெரிவிக்க வேண்டாம்” என்றும் சொல்லலாம் தானே?
உங்கள் தலைவரின் இந்தப்போக்கு, வாக்குறுதியளிக்கும் நேர்மையான அரசியலை அவர் தருவாரா என்கிற கேள்வியை இயல்பாக எழுப்பத்தானே செய்யும்? பைபிள், கீதை, குரான் எல்லாம் கையில் ஏந்தி கட்சி ஆரம்பித்துவிட்டு, பைபிள் எதிர்க்கும் விவகாரத்தில் வந்து நிற்பதைக் குறித்து, “ஓட்டுக்காக மட்டும்தான் பைபிளா?” என்று வருகிற கேள்விகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும். இதற்கு யாரும் தனியாகச் சதி செய்ய வேண்டியதில்லை. மற்ற பிரபலங்களின் விவாகரத்து பேசு பொருளானதா என்றால்? பேசு பொருளானதுதான். ஒரு எலி கீழே விழுவதற்கும் யானை கீழே விழுவதற்கும் வித்தியாசம் இல்லையா? எலி விழுந்த பொழுது சத்தம் இல்லை, யானை விழும் பொழுது ஏன் இந்தச் சத்தம் என்று கேட்டால் உங்களை அப்படித்தான் அழைப்பார்கள்.
கடந்த பத்தாண்டுகளில் உங்கள் தலைவர் தன்னை யானையாக வளர்த்தெடுக்கச் செய்த பிரயத்தனங்கள் எல்லோரும் அறிந்தது தானே. யானையாக நம்மை நாம் முன்னிறுத்திக் கொண்டால், யானைக்கு வரும் பிரச்சினைகளையும் யானையாக முன்னிறுத்திக் கொண்டவர்தான் சமாளிக்க வேண்டும்.
நல்ல தொண்டர்கள் கேள்வி கேட்பார்கள், நல்ல ரசிகர்கள் விமர்சனம் செய்வார்கள். குறுக்குவழியில் பயன்பெறும் அரசியல் கொத்தடிமைகள்தான் தலைமை என்ன செய்தாலும் தலையாட்டும். தலையாட்டிப் பொம்மையாக இருந்து விடாதீர்கள். நாம் புதுமையைத் தேடுகிறோம். அது தலைவர் முதல் தொண்டர் வரை அந்தப் புதுமை வெளிப்பட வேண்டும். இன்னொரு தி.மு.க., அ.தி.மு.க. நமக்குத் தேவையில்லை. த.வெ.க. என்னவாக உருவெடுக்கப்போகிறது என்பது விஜய்யைப் பின்பற்றுகிற ஒவ்வொருவரின் நடவடிக்கையைப் பொறுத்துத்தான் இருக்கிறது என்கிற பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்.
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்றில்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
பொருள்: பொறாமை உடையவனிடம் செல்வம் நிலைக்காது; அதுபோல, ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு (மேன்மை) இருக்காது.
ஒழுக்கம், தர்மம் என்பதெல்லாம் வேறுபடும் விழுமியங்கள் என்றாலும் நீங்கள் மதிப்பளிக்கும் தர்மத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு. மேலும், எல்லாவற்றையும் ஆதரிக்காமல், கேள்விகள் எழுப்புகின்ற சரியான தொண்டர் படையாக த.வெ.க. தொண்டர்கள் வளர்ந்தால் மகிழ்ச்சி.