தினமும் எங்கோ நடக்கும் ஏதோ ஒன்று இரண்டு நிகழ்வுகளையேனும் நாம் செய்திகளாக கேட்கவோ வாசிக்கவோ செய்கிறோம். நாம் கேட்கும், வாசிக்கும் செய்திகளில் ஒன்றிரண்டு நம் உணர்வுகளை அசைத்துப்பார்த்தாலும், கூடுமான வரையில் குறைந்தபட்ச உதவாத எதிர்வினையை வெளிப்படுத்திவிட்டு கடந்து விடுகிறோம். அப்படி நாம் கடந்த கடக்கும் செய்திகளான நிகழ்வுகள் நம் நினைவு பெட்டகத்தில் புதைந்து மறந்து போகிறது. மீண்டும் அதே போன்ற நிகழ்வுகள் செய்திகளாய் நம்மை வந்து சேரும் பொழுது, மீண்டும் அதே குறைந்தபட்ச உதவாத எதிர்வினையை ஆற்றிவிட்டு கடந்து விடுகிறோம்.இது மீண்டும் மீண்டும் நடக்கிறது.

 நாம் இப்படியாக கடக்கும் செய்திகள் எப்படியானதாக இருக்கின்றது?

பைக்கில் சென்று கொண்டிருந்தவரை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள்;

போதையில் நடத்துனரை தாக்கிய இளைஞர்கள்;

பாலியல் சீண்டல்களுக்கு எதிராக போராடிய வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் 100 கிராம் அதிகம் எடை இருந்ததற்காக தகுதியிழப்பு;

மலையாள சினிமா உலகிலும் பாலியில் சீண்டல்கள் இருக்கின்றது. நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை;

கூட்டு பாலியல் வன்முறைக்கு பலியான 23 வயது பெண். 17 வயது சிறுவனும், பெண்ணின் காதலனும் குற்றவாளிகள்;

உச்சமாக கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு

பாலியல் வன்முறைகள், போதை பொருள் புழக்கம், கொலை வழக்குகளில் சிறுவர்கள்/இளைஞர்கள் சம்பந்தம், சாலை விபத்துக்கள், எல்லாவற்றிக்கும் மேலாக, சாலையில் தான் உண்டு வேலையுண்டு என்று சென்று கொண்டிருப்பவர்களை பிடித்து அடிப்பது, நகைக்காக பெண்களை கொலை செய்வது, இப்படியான எல்லா நிகழ்வுகளுக்கும் உச்சு கொட்டி குற்றவாளிகளுக்கு சாபமிட்டு கடந்து விடுகிறோம்.

வேறு என்ன செய்வது!?

ஒரு சமூகத்தில் நடக்கின்ற அத்தனை குற்றங்களுக்கும் அந்த சமூகத்தில்  இருக்கின்ற ஒவ்வொரும் பொறுப்பேற்க தக்கவர்களே தான். குற்றங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க செய்ய வேண்டிய மாற்றங்கள் நம் ஒவ்வொருவரிடமும் இருந்து தொடங்க வேண்டும்.

அதெப்படி எல்லோரும் பொறுப்பாக முடியும்? எவனோ செய்யும் தவறுகளுக்கு நாம் எப்படி பொறுப்பாவது?

நாம் எல்லோருமே  ஒரே மாதிரியான ஒரு தவறை செய்து கொண்டிருக்கின்றோம். அந்த தவறுகளின் விளைவுகள் தான் வேறு வேறு மாதிரியானதாக இருக்கின்றதே தவிர அடிப்படையில் நாம் எல்லோரும் ஒரே மாதிரியான தவறை தான் செய்துகொண்டிருக்கின்றோம். அது என்ன தவறு என்றால்? கோடுகளை மதிக்காமல் வலியவர்களை மதிப்பது. கோடுகளுக்கு அஞ்சாமல் வலியவர்களுக்கு அஞ்சுவது.

விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால், கைப்புள்ள- கட்ட துரை நகைச்சுவை காட்சியை எல்லோரும் பார்த்து இருக்கின்றீர்கள் தானே?!  கைப்புள்ள கட்ட துரையை சந்திக்கும் முதல் காட்சியில் என்ன நடக்கும்?

 

தன் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அடிக்கப் பட்டதற்கு நியாயம் கேட்க கைப்புள்ள கட்ட துரையை சந்திக்கச் சென்றிருப்பார். அங்கே இருவருக்கும் இடையில் ஒரு கோடு வரையப்படும். பேச்சு வார்த்தைக்கு சென்ற கைப்புள்ளையும் அடி  வாங்கி விட்டு வருவார். அங்கே கட்ட துரையையும் அவன் சகாக்களும் அந்த கோட்டை மதித்து இருக்க மாட்டார்கள்.

அந்த இடத்தில், கைப்புள்ள எளியவர் என்றால், கட்ட துரை வலியவன்.எளியவர்களின் பாதுகாப்பாக இருக்கும் கோடுகளை வலியவர்கள் மதிப்பதேயில்லை.

 

யார் வலியவர்கள்? யார் எளியவர்கள்? சில இடங்களில் சிலர் வலியவர்கள், அதே அந்த வலியவர்கள் வேறு சில இடங்களில்  எளியவர்கள். நாம் வலியவர்களாக இருக்கின்ற இடத்தில் நாம் கோடுகளை  மதிப்பதேயில்லை. இங்கு தான் சமூகம் தோல்வி அடைகிறது.

நமக்கு தேவையென்றால் நம் அவசரத்துக்கு நாம் போக்குவரத்து விதிகளை மீறலாம். அதே விதிகளை ஒருவர் மீறுவதால் நாம் பாதிக்கப்பட்டால், அங்கே அந்த சமயத்திற்கு மட்டும் விதிகளை மீறுகிறவர் குற்றவாளி ஆகிவிடுகிறார்.

இந்த சமூகம் வலிமை படைத்தவர்களுக்கு அஞ்சி பழகி விட்டது. எளியவர்களை ஒடுக்கி பழகிவிட்டது. வலியவர் எளியவர் எவராயினும் கோடுகளுக்கு அஞ்சி இருக்க வேண்டும் கோடுகளை மட்டுமே தான் மதித்திருக்க வேண்டும்.

ஒருவர் மீது நம்மால் ஆதிக்கம் செலுத்த முடிகிறது என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற எண்ணம். அது வீட்டில் இருந்து ஆரம்பித்து நாடு வரை விஸ்தரித்து கிடக்கிறது.

ஒடுக்கப்படுவது ஆதிக்கம் செலுத்துவது என்றவுடன் சனாதனத்தை குற்றம் சொல்ல கிளம்பி விடாதீர்கள். சம்மந்தம் இல்லாத சனாதனத்தை குற்றம் சொல்ல பழகியதாலேயே எது குற்றம் என்று அறியாமல் போனோம்.

இங்கே நான் என் நினைவில் இருக்கும் ஒரு நிகழ்வை எடுத்தெழுத விழைகிறேன். ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் ஒன்றின் நான்காம் ஐந்தாம் நிலை தலைவர் ஒருவரின் இறுதி ஊர்வலம், அதில் அநேகமான இளைஞர்கள் போதையில் வாகனம் இயக்கி கொண்டு வந்து போக்குவரத்துக்கும் இடையூறு செய்து வந்தார்கள். வழிநெடுகிலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மூன்று சாலைகள் சந்திக்கும் சந்திப்பில் அவர்கள் அத்தனை பேரும் வண்டிகளை நிறுத்தி கோஷமிட தொடங்குகிறார்கள். போக்குவரத்துக்கு நெரிசல் இன்னும் அதிகம் ஆகிறது. அங்கே வந்த ஒற்றை போக்குவரத்து காவலர், மிக கண்ணியமான முறையில் அந்த கூட்டத்தில் தெளிவாக இருந்த ஒருவரிடம் கோஷிமிடம் இளைஞர்களை கலைந்து செல்ல சொல்லுங்கள் என்று கேட்டுக்கொள்ள ஊர்வலம் நகர்கிறது. இப்போது போக்குவரத்தை சீர் செய்யும் அந்த ஒற்றை காவலர், ஒரு லாரி ஓட்டுனரிடம் கடிந்து கொள்கிறார்.

இந்த நிகழ்வில் ஒடுக்கப்பட்டவர்கள் யார்? ஆதிக்கம் செலுத்தியவர்கள் யார்? எளியவர்கள் யார்?

இடங்களை பொறுத்து நாம் ஒவ்வொருவரும் யாரோ ஒருவரின் மீதோ அல்லது ஒரு கூட்டத்தின் மீதோ தனி நபராகவோ கூட்டமாகவோ சேர்ந்து ஆதிக்கம் செலுத்திகிறோம்.

வாய்ப்பு அளிக்கும் இடத்தில் இருப்பவர்கள். வாய்ப்பு தேடுபவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.  லஞ்சமும் சினிமா மற்றும் விளையாட்டு துறையில் நடக்கும் பாலியல் சீண்டல்களும் இந்த ஆதிக்கத்தின் விளைவானது தான்.

அவனால்/அவளால் நம்மை என்ன செய்துவிட முடியும் என்கிற எண்ணமே நம் எல்லோருள்ளும் இருக்கும் ஆதிக்க மனப்பான்மைக்கு நீரூற்றுகிறது. இப்படி எல்லோரும் யாரோ ஒருவரால் ஒடுக்கப்பட்டு கொண்டும், யாரோ ஒருவர் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டும் இருக்கின்றோம்.

ஆனால், நம் எல்லோர் மீதும் ஆதிக்கம் செலுத்த வேண்டிய சட்டங்களின் மீது நாம் யாரும் எந்த அச்சமும் கொண்டிருக்கவில்லை. அரசியல்வாதிகள் நம்மை அப்படி பழகிவிட்டார்கள்.நம் சமூகத்திடம் சட்டத்தை மதிக்கின்ற பழக்கம் எப்போதும் இருப்பதில்லை. சட்டத்தை-கோடுகளை மதிக்காத சமூகத்தின் போக்கு தான், நடக்கும் எல்லா வன்முறை நிகழ்வுகளுக்கும் காரணமாக ஆகிறது.

இந்த சமூகம் கோடுகளை மதிக்க பழகாத வரை கைபுள்ளைகள் அடி வாங்கிக்கொண்டு தான் இருக்க போகிறார்கள். யாரோ ஒரு பெண் மருத்துவராக, சாலையில் நகையணிந்து செல்லும் பெண்ணாக, நடிகையாக, விளையாட்டு வீராங்கனையாக, கடை நிலை ஊழியராக, சாதிய வகைப்படுத்தலில் ஒரு சாராரால் பெரிதும் கேலிக்கு உள்ளாக்கப்படும் முற்படுத்த பட்டவராக , இன்னமும் தீண்டாமை போன்ற கொடுமைகளை அனுபவிக்கும் பட்டியலினத்தவராக, போதையில் இருக்கும் கூட்டத்திடம் அடி வாங்கும் யாரோ ஒரு வழிப்போக்கராக, பைக்கில் அடாவடியாக சென்று விபத்து ஏற்படுத்துகின்றவரால் பாதிக்கப்பட்டவராக, காதலியாக, காதலனாக, குடும்ப வன்முறைக்குள் சிக்கியிருக்கும் ஏதோ ஒரு உறவாக நாம் எல்லோரும்  எங்கோ ஒரு இடத்தில், கை புள்ளைகளாக அடி வாங்கிக் கொண்டு தான் இருக்கின்றோம்.

இதை தடுப்பதற்கும் தவிர்ப்பதற்கும் ஒரே வழி நாம் அனைவரும் கட்ட துரையாக இருக்கும் இடங்களிலும் கோடுகளை மதித்து பழக வேண்டும். கோடுகளை நாம் மதிக்கப் பழகாத வரையில் கைபுள்ளைகள் அடி வாங்கிக்கொண்டு தான் இருக்கப் போகிறார்கள்.நாம் கட்ட துரையாக இருக்கும் இடங்களில் எல்லாம் கைப்புள்ளை மீது நடத்தப் படும் வன்முறைகள் நமக்கு சாதாரணமாகவும் சிரிப்பாகவுமே தான் இருக்கும்.

சட்டம் ஒன்றே தான் எல்லோர் மீதும் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்க வேண்டும் சட்டம் ஒன்றுக்கு  மட்டுமே தான் எல்லோரும் எல்லா இடங்களிலும் அஞ்ச வேண்டும். பணம் படைத்தவர்கள், பெரு நிறுவனங்கள், பதவி அதிகாரம் படைத்தவர்கள், எல்லோரும் எங்கே சட்டத்திற்கு மட்டும் அஞ்சுகிறாரோக்களோ அந்த நாடுகளில், குற்றச் செயல்கள் விபத்துகள் அன்றாட நிகழ்வாக இருப்பதில்லை.

நம் நாடும் அந்த நிலையை அடைய நாம் எல்லோரும் நம்மை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். ரோடு சரியாக இருக்கிறதோ இல்லையோ ஹெல்மெட் அணிய வேண்டுமென்றால், ஹெல்மெட் அணியுங்கள். எப்போதும் சட்டத்தின் படி சரியாக இருந்துவிட்டு உங்கள் கேள்விகளை கேளுங்கள்.எப்போதும் சட்டத்திற்கு அஞ்சி சட்டத்தின் படியே தான் எப்போதும் நடந்து கொள்கிறோமா? நம்மை விட எளியவர்கள் மீது எந்த நிலையிலும் ஆதிக்கம் செலுத்தாமல் இருக்கின்றோமா? என்னும் சுய பரிசோதனைகளை நாம் எப்போதும் செய்து கொள்ள வேண்டும்.

இப்படி இந்த சமூகத்தின் ஒவ்வொருவரும், இந்த சமூகத்தின் ஒவ்வொருவரும் கடைசி ஒருவரும் கூட சட்டத்தை மதிக்கும் நாளில் குற்ற செயல்கள் அன்றாட நிகழ்வாக இருக்காது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *