ஒரு கதையில், கதையோடு கதை மாந்தர்களோடு, கதையை வாசிப்பவர்களையோ அல்லது கதையை காட்சிகளாக காண்பவர்களையோ பயணிக்கச் செய்வது, அத்தனை சாதாரணமான விஷயம் இல்லை. அதை அத்தனை சாதாரனமாக நிகழ்த்தியும் விட முடியாது.
நீங்கள் ஒரு கதையை வாசிக்கும் பொழுதோ அல்லது ஒரு திரைப்படத்தை காணும் பொழுதோ நீங்கள் அந்த கதையோடு பயணிக்க போகிறீர்களா என்பதை அந்த கதையின் ஆரம்பம் தான் தீர்மானிக்கிறது.ஒரு ஊரில் என்று ஆரம்பிக்கும் பொழுது நாம் ஒரு ஊரை கற்பனை செய்யத் தொடங்குவதில் ஆரம்பிக்கிறது வாசிப்பாளர்களின் அல்லது பார்வையாளர்களின் பயணம் அவர்களை வண்டியில் ஏற்றிக்கொள்ளாமல் வண்டியை எடுத்தால், அவர்கள் எப்படி அந்த கதையோடு பயணிப்பார்கள்?!
கதையை எழுதுபவர்களுக்கும் பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுப்பவர்களுக்கும் இது பெரிய சவால். விஜய்யின் சில நல்ல திரைப்படங்கள் அதிகமான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்ததற்கு காரணமாக அமைந்தது கதையின் ஆரம்ப காட்சிகள் தான்.
கதைகள் சாதரணமாக ஆரம்பிக்க வேண்டும், காரணம் பார்வையாளர்கள் சாதாரணமானவர்களே,அவர்கள் கதையோடு தங்களை தொடர்புபடுத்திக்கொள்ள நேரம் கொடுக்க வேண்டும்.கதையின் போக்கு பார்வையாளர்களின் உணர்வுகளோடு ஒன்றிய பின்னரே தான் அசகாய சூரத்தனங்களை அவிழ்த்து விட வேண்டும்.விஜய் போன்ற பெரிய ஹீரோக்களை கையாள்பவர்கள் இங்கு தான் தவறு இழைக்கிறார்கள்.
கதை ஆரம்பிக்கும் முன்னரே, சாக்கடைக்குள் இருந்து பறந்து வருவது, கடலில் இருந்து துள்ளிக்குதித்து கொண்டு வருவது, ஒற்றை ஆளாய் சென்று தீவிரவாத கூட்டங்களோடு சண்டையிடுவது இவையெல்லாம், கதை ஆரம்பிக்கும் முன்னரே பார்வையாளர்களை நெளியச் செய்யும் வஸ்துக்கள்.
கதையின் ஆரம்ப காட்சியோ கதாநாயகனின் அறிமுக காட்சியோ இது இரண்டும் கதையோடு பார்வையாளர்களை ஒன்றவிடாமலோ அல்லது கதாநாயகனின் பாத்திர படைப்பை கெடுக்கும் படியோ அமைந்து விடக்கூடாது. இது தான் மொத்த கதையையும் பார்வையாளர்கள் எப்படி எடுத்துக்கொள்ள போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் காட்சிகள்.
கத்தி திரைப்படத்தை எடுத்துக்கொள்ளுங்கள், மிக அமைதியான ஒரு இரவில், அமைதியான ஒரு சிறைச்சாலையின் வெளிப்புறம் காண்பிக்கப்படும்,அந்த அமைதியை அடுத்த சில நொடிகளில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும், அங்கிருந்தே பார்வையாளர்கள் கதைக்குள் ஒன்றி விடுவார்கள். என்ன ஆச்சு? என்கிற கேள்வி பார்வையாளர்களின் மனதில் எழுதும் பொழுதே பெரிய போலீஸ் பட்டாளம் கைதி ஒருவரை துரத்திக்கொண்டு ஓடும், விஜய் தான் கைதியா என்று நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதே அவரை போலீஸ் சுற்றிவளைக்கும்,இப்பொழுது, பார்வையாளர்களிடம் நிறைய கேள்விகள் உருவாகியிருக்கும், அவர்கள் கதை கேட்க தயாராகி இருப்பார்கள், என்ன ஆச்சு? ஏன் விஜய் சிறையில் இருக்கிறார்? எதற்காக தப்பிக்கிறார்? இப்போது அவரை போலீஸ் சுற்றி வளைத்து விட்டதே? இத்தனை கேள்விகளுக்கும் பார்வையாளர்களுக்கு பதில் தெரிந்து ஆக வேண்டும்,அடுத்தடுத்த காட்சிகள் அந்த கேள்விகளுக்கு பதில்களை சொல்லிக்கொண்டு வரும் பொழுது, எத்தனை கிராபிக்ஸ் காட்சிகள் இருந்தாலும், எத்தனை அசகாய சூரத்தனம் வந்தாலும் நம்பிக்கொண்டு கதை கேட்பார்கள்.
காட்சிகள், பரபரப்பாக ஆரம்பிக்க வேண்டும் என்பதில்லை, சாதரணமாக ஆரம்பித்தும், பார்வையாளர்களை கதைக்குள் கொண்டு வர முடியும், கதாநாயகன் கபடி வீரர், சாதாரணமாக அவருடைய நாள் எப்படி ஆரம்பிக்கும், கில்லி படம் விஜய் பயிற்சி ஓட்டம் செய்வதில் இருந்து ஆரம்பிக்கும். பெரிய பெரிய ஹீரோக்களை வைத்து எடுக்கப்பட்ட பெரிய பெரிய வெற்றி திரைப்படங்களின் ஆரம்பம் இத்தனை சாதாரணமாகவே தான் இருந்திருக்கின்றது. முதலாளிக்கு பிறந்தநாள், எல்லா வேலைக்காரர்களும் வீட்டில் இருக்கும் பொழுது ஒருவனை மட்டும் காணவில்லை, அவனை எல்லோரும் தேடும் பொழுது “அவன் கோவிலில் இருப்பான்” என்கிறார்கள் . கோவில் சென்று மகிழ்ச்சியோடு அவன் வீடு திரும்புவது, தான் அறிமுக காட்சி. ஹீரோ விஞ்ஞானி, மிக சாதாரணாமாக அவர் ரோபோவை உருவாக்கி கொண்டிருப்பார்.
சரி! G.O.A.T. திரைப்படத்தில் என்ன நடந்தது?
விஜயகாந்த் அவர்களை AI மூலம் மறுஉருவாக்கம் செய்ய யாரும் அனுமதி பெறவில்லை என்பதில் ஆரம்பித்து, அனுமதி கொடுத்ததற்கு விஜய் நன்றி சொன்ன பொழுதே,விஜயகாந்த் படத்தில் இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது தான், சர்ப்ரைஸ் இல்லாத சர்ப்ரைஸாக வந்தாலும், இது விஜயகாந்த் என்று முழுமையாக நம்ப முடியாதது போலவே இருந்தாலும், அந்த முகத்தை அத்தனை பெரிய திரையில் மீண்டும் காணும் பொழுது நம் முகத்தில் ஒரு புன்முறுவல் பூக்கின்றது, அந்த இடத்தில் ஏன் வருது, அப்படியெல்லாம் வரக்கூடாது என்று சொல்லி சூழலுக்கும் காட்சிக்கும் சம்மந்தமில்லாமல், “ஆட்டமா தேரோட்டமா” பாடலை ஒலிக்கவிடுகிறார் யுவன். இப்படி ஏதோ ஒரு உணர்வு உங்களை அந்த கதைக்குள் கொண்டு சென்றாலும், “நீ வெளிய வந்தே ஆகனும்” என்பது போல இசையமைத்து வைத்திருக்கிறார் யுவன்.
பிரபுதேவா பிரசாந்த் விஜய் என்று ஒவ்வொருவராக அறிமுகமாகும் ஆரம்ப காட்சிகள், கதைக்குள் நம்மை இழுக்காமல் இருக்க, அந்த சண்டை காட்சிகள் முடிந்தவுடன், “பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா” பாடல் “படத்தை எப்ப ஆரம்பிப்பீர்கள்” என்கிற கமெண்ட்களை நம் காதில் விழச் செய்தது.
அந்த சண்டைக்காட்சியும் பாடலும் இல்லாமல் படம் ஆரம்பித்து இருந்தாலும்,கதைக்கு பெரிய பாதிப்பு இருந்திருக்காது, முன்னாள் இயக்குநர்கள் எடிட்டர்கள் இந்நாள் இயக்குநர்கள் சிலர் இதை எப்போதும் குறிப்பிடுவார்கள், “ஒரு காட்சியோ பாடலோ இல்லாமல் இருந்தால் அது கதையை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றால் நிச்யமாக அதை தவிர்த்து விட வேண்டும்” என்று. ஆரம்ப சண்டை காட்சியில் இருக்கும் சில விஷயங்கள் கதைக்கு தேவைப்பட்டிருந்தது. ஆனாலும் அதை படத்தின் தொடக்கமாக வைத்திருக்க வேண்டியதில்லை.
சண்டையும் பாடலும் முடிந்த பின்னர் இன்னும் இரண்டு காட்சிகள் தாண்டி, “மருதமலை மாமணியே” பாடல் தொடங்கும் இடத்தில் இருந்து படத்தை-கதையை தொடங்கி இருந்தால், பார்வையாளர்களை கதைக்குள் கொண்டுவர நேரம் கிடைத்து இருக்கும்.
சாதரணமான குடும்பத்தின் தினசரி எப்படி இருக்கும்?அப்படி இருக்கும் அந்த காட்சி. அதிலிருந்து கதை தொடங்கியிருந்தால், எல்லோரும் கதையோடு தங்களை இணைத்துக்கொண்டிருந்திருப்பார்கள்.
தூங்கிக்கொண்டிருக்கும் மனைவியை எழுப்பும் “மருதமலை மாமணியே” பாடல்; பட்டையோடு பள்ளிக்கு கிளப்பப்பட்டு உட்கார்ந்திருக்கும் ஒரு குழந்தை; “அப்பா எங்க டா” என்றவுடன் “மருதமலை மாமணியே” பாடலை பாடிய படி வெளியே வரும் விஜய். விஜய்யின் அறிமுக காட்சியாக இந்த காட்சியை வைத்திருந்தால் சேட்டையாக இருந்திருக்கும். எல்லோரும் கதையோடு தங்களை தொடர்பு படுத்திக்கொள்ள ஆரம்பித்து இருப்பார்கள்.
இங்கிருந்து கதை தொடங்கி ஒரு இருபது நிமிடங்கள் கழித்து தீ பறக்கும் ரயிலில் இருந்து பறக்கும் ஹெலிகாப்டருக்குள் கயிறு கட்டி ஏறும் கிராபிக்ஸ் காட்சிகளை வைத்திருந்தால், கிராபிக்ஸ் எத்தனை மோசமாக இருந்தாலும் கதையோடு ஒன்றிய பார்வையாளர்களை அது நெளியச் செய்திருக்காது. ஆனால், நீங்கள் உள்ளே சென்று அமர்ந்ததும் ஒரு செய்திவாசித்துவிட்டு அந்த சண்டைக்காட்சிக்குள் சென்று விடுவார்கள். ஆனால், இந்த ஹெலிகாப்டரில் கயிறு கட்டி ஏறுவது, விமர்சனங்களுக்கு உள்ளானதால் பட்டி பார்க்கப்பட்ட பார்ட்டி பாடல் இவைகள் தான் படத்தின் தொடக்கமாக இருந்தது.
அந்த சண்டையும் பாடலும் இல்லாமல் கதை ஆரம்பித்து இருந்தாலும் ஒரு பாதிப்பும் கதைக்கு நேர்ந்திருக்காது.
“சின்ன சின்ன கண்கள்” பாடலைத் தவிர எந்த பாடலும் படத்தில் இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். படம் மூன்று மணி நேரம் என்றால், பாடல்கள் மூன்று மணி நேரமோ என்பது போல நீள்கிறது பாடல்கள். விஜய் படப்பாடல்கள் என்று நினைத்துக்கொண்டு நீங்களாக வலிய அந்த பாடல்களை மண்டைக்குள் திணித்தாலும் அந்த பாடல்கள் உங்களுள் ஒட்டப்போவதில்லை, த்ரிஷா வரும் பாடலும் ஒரு நிமிட பாடலாக இருந்திருக்கலாம், ஒரு நிமிட நீளத்திற்கும் மட்டுமே தான் அந்த பாடல் ரசிக்கும் படியாக இருந்தது. பாவம் செல்லத்தை(த்ரிஷா) அழைத்துக்கொண்டு வந்து சிம்ரன் அளவிற்கு ஆடச் சொன்னால் என்ன செய்யும்!
பாடல் முடிந்து நிகழும் ஒரு கொலை பாடலை ஒரு நிமிடத்தில் இடைநிறுத்தும் கொலையாக இருந்திருந்தால், அந்த கொலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.பாடல் இப்படி சட்டென்று முடிந்துவிட்டதே என்று இருந்திருக்கும் ஒரு நிமிடத்திற்கு மேல்,யுவனின் வேலையும் அந்த பாடலில் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.ஒரு நிமிடத்திற்குள் பாடல் முடிந்திருந்தால், பாடலை இடைமறித்து கொலை நடந்திருந்தால்; “yellow saree எங்க டா” என்று விஜய் தேடியது போல எல்லோரும் தேடி இருப்பார்கள். ஆனால், yellow saree சென்று உடைமாற்றிக்கொண்டு வீட்டிற்கு சென்ற பின்னரே தான் கொலை நடப்பது போல், yellow saree மின்னல் போல வந்து மறைந்துவிடுகிறது.
நாயக வேஷம் கட்டுபவர்கள் மீது இருக்கும் பிம்பத்தை எடுத்துக்கொண்டு கதை செய்வது, அல்லது ஒரு கதையை வைத்துக்கொண்டு அந்த கதைக்குள் நாயகர்களை பொருத்துவது இதில் எதை எப்படி செய்வது என்பதில் அநேகமானான இயக்குநர்கள் அநேகமான சமயங்களில் தடுமாறி போகிறார்கள்.தடுமாறாமல் அதில் ஒரு கதாசிரியரோ இயக்குனரோ வெற்றி பெறும் பொழுது படம் பெரும் வெற்றியை அடைகிறது.
மோகன் லால்க்கு லூசிபர். ரஜினிக்கு பாட்ஷா,ஜெயிலர்,அண்ணாமலை.விஜய்க்கு மெர்சல். இந்த திரைப்படங்கள் எல்லாம் கதாநாயகர்களுக்கு திரைக்கு வெளியே இருந்த பிம்பத்தை கதைக்குள் எடுத்துக்கொண்டு கதைக்கு சாதகமாக பயன்படுத்தி வெற்றி அடைந்த படங்கள். இளமையில் இருந்தே தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தி வந்திருக்கின்றார் விஜய், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த எம்.ஜி.ஆர். விஜயகாந்த் மற்றும் அரசியலில் பெரிய வாய்ப்பு இருந்தும் வராமல் போன ரஜினிகாந்த் இவர்கள் யாரும் தமிழர்கள் இல்லை என்கிற விமர்சனம் இருந்த பொழுது, அரசியல் ஆசையை பல இடங்களில் வெளிப்படுத்திய விஜய்யின் திரைப்படத்தில், ‘ஆளப்போறான் தமிழன்‘ என்கிற பாடல் கதைக்குள் சரியான இடத்தில் சரியாக பொருந்தி விஜய்க்கும் பொருந்தி போக அந்த ஒரு பாடல், அந்த ஒரு வரி, அந்த படத்தை வேறு ஒரு நிலைக்கு எடுத்துச்சென்றது. (That song elevated that movie to different level)
கதைக்குள் ஒட்டாமல், அந்த பாடலுக்கு கதைக்குள் சரியான இடம் இல்லாமல் அந்த பாடல் திணிக்கப்பட்டு இருந்தால் அந்த பாடலே திரைப்படத்தை வாரிவிட்டிருக்கும்.
G.O.A.T. படத்தில், அப்படியான வசனங்களும் காட்சிகளும் நிறைய இருக்கிறது. லிங்கா படம் தோல்வியுற்றதற்கு காரணமான கிளைமாக்ஸ் பைக் காட்சியை நினைவூட்டும் ஒரு காட்சி, “இவனை பார்த்துக்கோ” சிவா என்று விஜய் கிளம்பி கதவை சாத்தும் பொழுது அவரை வலிய அழைத்து, “இத நான் பாத்துக்கிறேன் உங்களுக்கு இதை விட முக்கியமான வேலை இருக்குன்னு நினைக்கிறேன்” என்று போகிறவரை வலிய அழைத்து சிவாவே வலிய பேசும் வசனம் நம்மை நெளிய வைக்கிறது.
விசிலடித்து எல்லோரையும் சீட்டைவிட்டு எழச்செய்திருக்க வேண்டிய காட்சி, எடுக்கப்பட்ட விதம், வசனம் இந்த இரண்டிலும் இருந்த பலவீனத்தால் சிவ கார்த்திகேயன் வரும் அந்த காட்சி பலவீனப்பட்டு போகிறது.
எனக்கு ஒரு சின்ன கற்பனை, மூன்று மணி நேரம் படத்தை பொறுமையாக பார்த்தவர்கள் இதையும் கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்.
சிவகார்த்திகேயன் வரும் காட்சியின் உரையாடல் இப்படியிருந்திருந்தால்
சிவா: சார்! சார்! என்ன சார்! உங்க வேலைய என்ன செய்ய சொல்றீங்க
விஜய்: புரிஞ்சிக்கோ சிவா! இதை உன்கிட்ட விட்டுட்டு போறேன்ன்னா இதை விட பெரிய வேலை எனக்கு இருக்குன்னு அர்த்தம் !
சிவா : என்ன சார் இதை விட பெரிய வேலை! நான் சும்மா சின்ன பசங்களோடு விளையாடுற சினிமா ஹீரோ சார். என்ன இந்த வில்லன் கிட்ட விட்டுட்டு
விஜய்: இவனை விட பெரிய வில்லன் வெளிய இருக்கான்! நான் அவனோடு விளையாட வேண்டியது இருக்கு. சினிமா ஹீரோவே இருந்தாலும், You are man ! I believe in you. Take care
அந்த காட்சியின் உரையாடல் அப்படியிருந்திருந்து, காட்சியில் இருவரையும் எப்படி எந்த கோணத்தில் காட்டுகிறார்கள் என்பதில் சில மாற்றங்கள் செய்திருந்திருந்தால். All time greatest scene ஆக அது இருந்திருக்கும்.அந்த காட்சி ஏனோ தானோ என அமைந்தது. ஏன் இப்படி என்று கேட்க வைக்கிறது.
கதைக்குள் ஒட்டாத நாயக போற்றல்கள் கதையையும் கதாநாயகர்களையும் பலவீனப்படுத்தும் அது அங்கங்கே G.O.A.T. திரைப்படத்தில் நிகழ்ந்திருக்கிறது.
விஜய் போன்ற கதாநாயகர்களை வைத்து கதைகள் செய்யும் பொழுது இயக்குநர்கள் மீது பெரிய நிர்பந்தங்கள் ஏற்படுகிறது. எப்படியும் படத்தில் போட்ட முதலீடும் வந்து லாபமும் கிடைத்துவிடும் என்றாலும், அது பத்தாது என்கிற நிர்பந்தமே அது.ப்ப்ப்ப்ப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டும், என்ன செய்வது?! இந்த பழைய பாடல்களை அங்கங்கே வைத்தால், ஹிட் ஆகிறது வைத்துவிடலாம். பெரிய நடிகர் பட்டாளங்களை உள்ளே கொண்டு வந்தால் ஹிட் ஆகிறது செய்துவிடலாம். கூடவே வெங்கட் பிரபு என்றால், கிரிக்கெட் இல்லாமல் எப்படி? அதையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று இந்த கதைக்கு தேவையற்ற பல விஷயங்கள் உள்ளே கொண்டுவரப்பட்டு, கதைக்கு சம்மந்தமில்லாத நாயக போற்றல்கள், தோனிக்கும் சேர்த்து அங்கங்கே தெளித்து, படம் நல்லா வர என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சிந்தித்து நல்லா வந்திருக்க வேண்டிய படத்தை கெடுத்து இருக்கிறார்கள்.
பிரசாந்த் பிரபுதேவா விஜய் சேர்ந்து வரும் காட்சிகளில் இந்த கெமிஸ்ட்ரி என்பார்களே அதைத் தேட வேண்டியதாக இருந்தது.மோகன் கதாபாத்திரம் மீது நமக்கு பல கேள்விகள் எழுகிறது.ஆனால், இனி அதில் ஒன்றும் மாறப்போவதில்லை என்பதால் அதை கேட்காமல் விட்டுவைக்கிறோம்.சினேகா ஒருவரின் நடிப்பு எல்லா இடங்களிலும் இயல்பாக இருந்தது.
மூன்று மணி நேர படத்தில், பல காட்சிகளில் நடிகர்கள் சரியான நடிப்பை வெளிப்படுத்தவில்லையோ என தோன்றும் அளவிற்கு காட்சி அமைப்பும் வசனங்களும் இசையும் படத்தின் பெரிய பலவீனங்களாய் அமைந்து கதைக்குள் நம்மை ஒன்ற விடாமல் செய்து படத்தை பாதித்துவிட்டது. ஏதோ ஒரு கட்டத்தில் நாமாக கதைக்குள் மூழ்கினாலும், நம்மை கதையை விட்டு வெளியே கொண்டு வருவது போன்ற பாடல்கள், சில காட்சிகள், சில வசனங்கள் என்று படத்தில் அத்தனை பலவீனங்கள். This is not Venkat prabhu’s hero this is Venkat Prabhu’s game. He played football with Vijay and Vijay fans, ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதுவே தான் நிஜம்.
ஆனால், நாம் எப்போதும் சுட்டிக்காட்டுவது போல், ஒவ்வொருவரின் ரசனையும் ஒவ்வொரு மாதிரியானது.சிலருக்கு படம் பிடித்தும் இருக்கிறது. ஆனால், வெகுஜன மக்களை ஈர்த்து அவர்களை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் கொண்டாட்டமான திரைப்படமாக இந்த திரைப்படம் அமையவில்லை தான்.
படத்தை re-edit செய்து ஒரு முப்பது நிமிடத்தை குறைத்தால் இன்னும் நல்ல படமாக இருக்குமோ என்னவோ!ஆனால், நிச்சயமாக விஜய்யின் All time greatest படங்கள் என்று வரிசைப்படுத்தினால் ஐந்து ஆறு இடங்களேனும் தாண்டியே தான் இந்த படம் இருக்கும்.
அந்த ஐந்து ஆறு படங்கள் என்னவென்று comment இல் சொல்லுங்கள்.