“Love for others what you love for yourself.”சில மாதங்களுக்கு முன் என் மருத்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டு திரும்பும் வழியில், ஒரு மசூதியை கடக்கும் பொழுதில் என் கண்ணில் பட்ட வாசகம்,”Love for others what you love for yourself”. நபிகளின் இந்த பொன்மொழி, நான் சிறு வயதில் கேட்ட கதை ஒன்றை எனக்கு நினைவூட்டியது.
கண்ணப்ப நாயனார், பலரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.வேடரான அவர்,காட்டில் ஒரு சிவலிங்கத்தை காண்கிறார்.தான் விரும்பும் இறைச்சியை அதற்கு படைத்து, வாயில் நீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபடுகிறார்.மிகவும் விசித்திரமானதாக தோன்றும் வழிபாட்டு முறை. அதீத அன்பும் பக்தியும் கடவுளின் எந்த ஒரு படைப்பையும் அருவெறுத்து ஒதுக்குவதில்லை.கண்ணப்பரின் வழிபாட்டு முறையும் அதீத அன்பின் வெளிப்பாடே ஆகும் அது வீம்புக்கு செய்யப்பட்டதில்லை. ஆகம விதிகள்பற்றியெல்லாம் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. தினமும் அதே சிவலிங்கத்திற்கு ஆகம விதிகளின்படி பூஜை செய்து வந்தவரின் அறிவில் அது சிவபெருமான் என்ற எண்ணம் இருந்திருந்தாலும் அவரின் அறிவில் அது வெறும் கல்லாலான சிவலிங்கம் என்ற எண்ணமும் இருந்திருக்கும்.
ஒரு வகையில் நாம் கற்று உணரும் அறிவு என்பது நம்மை இயற்கையிடம் இருந்தும்; இயற்கையான நம் இயல்பில் இருந்தும்;கடவுளிடம் இருந்தும் பிரித்தே வைக்கின்றது.
கண்ணப்பர், அது போன்ற உலக அறிவில் இருந்து வெகுதூரம் தள்ளியே இருக்கின்றார். அதன் காரணமாய் அன்பும் பக்தியும் மட்டுமே நிரப்பப்பெற்றவரான அவரின் மனதில் அந்த லிங்கம் சிவனாகவே தெரிகிறது. அவர் விரும்பும் இறைச்சியையே அவர் இறைவனுக்கும் படைக்கின்றார். What he loved for himself he loved for god. கண்ணப்பரின் அந்த அன்பு, ஒரு கல்லில் இருந்து எப்படி இரத்தம் வழிகிறது என்ற ஆராய்ச்சிக்குள் அவரை கொண்டு செல்லவில்லை.சற்றும் யோசிக்காமல் தன் கண்களை எடுத்து பொருத்துகிறார்.மற்றவர்களின் துயரம் கண்டு உடனே நம்மை செயல்பட தூண்டுவது அன்பாக மட்டுமே இருக்கின்றது.அறிவு கேள்விகளை தந்து நம்மை செயல்பட விடாமல் செய்கிறது.
நம்மை போலவே நம் சகோதரர்களை நேசிக்க வேண்டும் என்பதையும் இறைவன் நமக்காக இரங்கியது போல நாம் மற்றவர்களுக்காக இரங்க வேண்டும் என்பதையும் கதைகள் மூலமாக பைபிள் நமக்கு எடுத்துரைக்கின்றது.
மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். (மத்தேயு 25:34-40)
“Love for others what you love for yourself”-இந்த கருத்தை உலக பொதுமறையானது , நடுவு நிலைமை என்னும் அதிகாரத்தில் வியாபாரிகளிடம் இருக்கவேண்டிய அறமாக எடுத்துரைக்கின்றது உலக பொதுமறை.
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின். (௱௨௰ – 120
பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும். (௱௨௰)
—சாலமன் பாப்பையா
நமக்கு எது சிறந்தது என்பதையே பிறர்க்கும் விரும்புவது போலவே நாம் விரும்பாதவைகளை மற்றவர்கள் மீது திணிக்கவும் கூடாது.
மற்றொரு குறளில் நாம் விரும்பாத சூழலுக்குள் மற்றவர்களை திணிக்க கூடாது என்பதையும் வள்ளுவர் கூறி இருக்கின்றார்.
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து.
தன்னை விட மெலிந்தவர், பலவீனமானவர் முன் தன் பலத்தை பிரயோகிக்க முயலும் அருள் இல்லாதவன் , அவ்வாறு செய்யும் முன் , அவனை விட வலிமை உடையவர் முன் அவன் அஞ்சி நிற்க வேண்டிய நிலையம் வரும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும் என உரைக்கிறார் வள்ளுவர்.
எப்போதும் நமக்கு உகந்தது என்று நினைப்பதையே மற்றவர்க்காக விரும்புவதும்; நாம் விரும்பாத சூழல்களுக்குள் மற்றவர்களை திணிக்காமல் இருப்பதையுமே ஆன்மீகம்,அன்பு என்கிறது.
நம்மை யாரும் பலிப்பதை, நாம் யாரும் விரும்புவதில்லை. நம்மை யாரும் குறைகூறுவதை, நாம் விரும்புவதில்லை. ஆனால், பல்வேறு நியாயங்கள் கற்பித்து நாம் மற்றவர்கள் மீது சீற்றம் கொண்டு அசாதாரண சூழலுக்குள் மற்றவர்களை நிறுத்துவதை; மற்றவர்களை குறை கூறுவதை எப்போதும் வாடிக்கையாக கொண்டு இருக்கின்றோம். “ஏன் இப்படி இருக்கின்றோம்?” என்னை நானே கூட கேட்டுக்கொள்கிறேன். எளிமையான பதில், நான் அன்பவனாக இல்லை.நாம் யாருமே இங்கு அன்புடையவர்களாக இல்லை.
நம் சைவ நூல்கள் சிவனை பாசம், பற்று இவற்றை அறுக்கவல்லவன் என்கிறது. கீதை எதனோடும் பந்தம் ஏற்படுத்திக்கொள்ளாதே என்கிறது. அதே வேளையில் அந்த நூல்கள் அன்பே இறைவன் என்கிறது. சிவமே அன்பு;அன்பே சிவம் என்கிறார் திருமூலர்.மிக நுணுக்கமானதை அத்தனை எளிமையாக சொல்லிவிட்டு சென்று இருக்கின்றார்கள்.நாமோ நமது பற்றுக்களை அன்பென்று எண்ணிக்கொண்டு அன்பில்லாமல் இருந்துகொண்டு இருக்கின்றோம்.
நாம் எல்லோருடனும், எல்லாவற்றடனும் நம்மை பந்தப்படுத்திக்கொள்கிறோம். ஆனால், எதன் மீதும் யார் மீதும் அன்பு செலுத்துவதில்லை.
இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவின் அசைவிற்கும் அன்பே பிரதானமாக இருக்கின்றது.கீதையில்,”இந்த ஜட இயற்கையின்(material world) எல்லாமுமாக பரந்தும் விரிந்தும் எங்கும் நிறைந்திருந்தாலும் இந்த ஜட இயற்கைக்கு அப்பாற்பட்டவன் நான்” என்கிறார் கிருஷ்ணர்.சைவ நூல்களும் எல்லையில்லாதையும்; எங்கும் பரந்து எல்லாவற்றிலும் நிறைந்திருப்பதையுமே சிவம் என்கிறது.எங்கும் பரந்து எதிலும் நிறைந்து இருக்கும் சிவத்தையே திருமூலர் அன்பு என்கிறார். பிரபஞ்ச இயக்கத்தின் மூலமாக இருக்கும் சிவமே அன்பு. அன்பே சிவம் என்கிறார்.
இறைவனை, இறை என்பதை இயேசு,அல்லா,சிவன் கிருஷ்ணர் என்று நீங்கள் என்ன மொழியிலான பெயரை வைத்து வேண்டுமானாலும் கொண்டாடுங்கள். ஆனால், அன்போடு இருப்பது என்பது உங்களுக்குள் இருக்கும் இறைவனை வெளிக்கொண்டுவரும் என்பது நிச்சயம். இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொவொரு அணுவிலும் இறைவனே இருக்கின்றார் என்னும் ஆன்மீகம், அன்பு தான் அந்த இறைவன் என்கிறது.எவரிடமெல்லாம் அன்பு பெருகுகிறதோ அவர் மீது மற்றவர்கள் கொள்ளும் அன்பும் பெருகுகிறது. தன்னுடைய நெஞ்சில் அன்பை அதிகமாக கொண்டவர்கள் அதிகமானவர்களின் அன்பை பெறுகிறார்கள்; தன் மனம் நிறைய அன்பை கொண்டவர்கள் மற்றவர்களால் கடவுளாகவே பார்க்கப்பட்டு இருக்கின்றார்கள்.அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்ற வள்ளுவர் துறவறவியலில்
“தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும்”
தன் உயிர் (என்னுடையது)என்னும் பற்றை துறந்தவனை உலகம் தொழும் என்கிறார் வள்ளுவர்.அந்த பற்றை துறப்பதற்கு அன்பே மூலமாக இருக்கின்றது.
நம்மையும் சேர்த்து , பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துளியிலும் இறைவன் இருக்கின்றார்.ஜட இயற்கையின் மாயையில் சிக்கி இருக்கும் நாம், நாம் கற்றுக்கொண்ட அறிவின் காரணமாக நம்மை கடவுளிடம் இருந்தும் இயற்கையிடம் இருந்தும் வெகு தூரம் விலக்கி வைத்திருப்பதன் விளைவு,நாம் அன்பை மறந்துகிடக்கின்றோம்.நாம் கற்றுக்கொள்ளும் அறிவு நமக்கு கேள்விகளையும் சந்தேகங்களையும் தருகிறது. நம் அறிவிற்கு எட்டியதை தவிர்த்து இந்த பிரபஞ்சத்தில் ஏதும் இல்லை என்கிற மூடநம்பிக்கையையும் அதுவே தருகிறது. அன்பு இருக்கும் இடத்தில் கேள்விகளும் சந்தேகங்களும் எழுவதில்லை. நம் கண்ணை பிடுங்கி கல்லுக்கு பொருத்திவிட்டால் நாம் என்ன செய்வது? என்பது போன்ற கேள்விகளை; ஜட இயற்கையின் வலிகளை பற்றிய சிந்தனையை அன்பு தருவதில்லை.
அதிகம் கற்று கொண்ட நாம் அதிகம் கேள்விகளையும் சந்தேகங்களையும் கொண்டு அன்பில்லாதவர்களாகிவிட்டோம். இன்று ஒருவர் துயரத்தில் இருக்கும் போது நாளை நமக்கு தேவை என்றால் என்ன செய்வது? என்கிற கேள்வியை அறிவே தருகிறது. அறிவின் வளர்ச்சி ஏற்றுக்கொள்ளுதலை (acceptance)குறைத்துவிட்டது. நாம் அறிவு என்று நினைக்கும் விஷயங்களை, கல்லாது இருந்த நம் முன்னோரிடம் இருந்த ஏற்றுக்கொள்ளும் தன்மை நம்மிடம் சிறிதும் இல்லாமல் போய்விட்டதன் காரணம், அவர்கள் அன்பவனவர்களாகவும் நாம் அறிவானவர்களும்(modern knowledge) ஆனதே ஆகும். நாம் பெறும் அறிவு என்பது நாம் கொண்டிருந்த அன்பை சுருக்கி கொண்டேவந்தது.இன்னும் சுருக்கி கொண்டே போகிறது. அந்த அன்பை மீட்டெடுக்க ஆன்மீகம் அறிவோம் ஆழமாய்! Love for others what you love for yourself
மிக விரைவில் மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் என்னும் இத்தொடரின் அடுத்த கட்டுரையை வெளியிடப்படும். தொடர்ந்து படிக்க எங்களின் சமூக வலைத்தள பக்கத்தில் எங்களை பின் தொடரவும்.