திடமான நம்பிக்கையுடன் இருக்கும் போது விடியும் எல்லா பொழுதுகளும் நல்ல பொழுதுகளாகவே அமையும். இந்த பெருந்தொற்றும் அது தந்து கொண்டிருக்கும் அனுபவமும் நம் நம்பிக்கையை உடைத்து கொண்டே இருக்கின்றது.
போரில் வீரர்களை இழக்கும் போது ஒரு படை தோல்வியடைவதில்லை நம்பிக்கையை இழக்கும் போது தான் அந்த படை தோல்வி அடைகிறது.
பெருந்ததொற்றுக்கு எதிரான இந்த போரில் நாம் இழப்புக்களை பற்றியே அதிகம் அறியப்பெறுகிறோம்.இழப்புக்களில் சிறியது பெரியது என்கிற பேதம் இல்லை.இழப்புகள் ஈடு செய்யமுடியாததே. ஆனால்,இழப்புகளையும் பலவீனங்களையும் பற்றி மட்டுமே நம் கவனமும் சிந்தனையும் இருக்குமானால், அது நம் மிச்ச நம்பிக்கைக்கையும் சிதைத்து நம்மை பலவீனப்படுத்தும்.எதிரியை பற்றிய புரிதல் இல்லாத போது இருக்கும் பதற்றம் எதிரி மீது ஓரளவு ஆதிக்கம் செலுத்திய பின்னரும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.ஆனால், பெருந்தொற்று என்னும் எதிரியின் மீது நம் சமூகம் ஆதிக்கம் செலுத்தியிருந்தும் கூட நம் சமூகமானது அதன் பலவீனங்களை மட்டுமே அதிகம் அறியப்பெற்று மேலும் பலவீனம் அடைந்துவருகிறது.
ஊடகங்கள், அரசியல்வாதிகள் என்று இந்த பாரத சமூகம் தனித்தனி பிரிவுகளாக நின்று ஒருவர் மாற்றி ஒருவர் குறை கூறுவதாக பலவீனங்களை பற்றி பேசுவதோடு பெருந்தொற்றின் தாக்கத்தை மட்டுமே பேசி வரும் போக்கு அநேகமான மனங்களை பலவீனப்படுத்திவருகிறது.
https://www.worldometers.info/ என்கிற வலைத்தளத்தில் 26 மே 2021 அன்று எடுக்கப்பட்ட தரவுகளின் படி 139 கோடி (1392160765) மக்கள் தொகை கொண்ட இந்த பாரத சமூகத்தில் 2.7(27157795) கோடி பேர் இதுவரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அறியப்படுகிறது.உண்மை நிலவரம் இதைவிட அதிகமாக கூட இருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களில் 2.4 கோடி (24350816) பேர் குணம் அடைந்திருக்கிறார்கள்.தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் சுமார் 25 லட்சம் பேர் (2,495,558) நம்முடைய மக்கள் தொகையில் 0.17 சதவீதம்.இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கையில் , 10 லட்சம் பேருக்கு 19,508 பேர் என்கிற விகிதாசாரத்திலேயே பாதிப்பு இருக்கின்றது. இதன் அடிப்படையில் இந்தியா 105ஆவது இடத்தில் இருக்கின்றது. 10 லட்சம் பேருக்கு 224 பேர் பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக அறியப்படுகிறது.இந்த விகிதாசார அடிப்படையில் நாம் 114 வது இடத்தில் இருக்கின்றோம்.பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கின்றது.
இந்தியாவில் 13கோடி டோஸ்கள் 95 நாட்களில் செலுத்தப்பட்டிருக்கின்றது. இதே அளவிலான டோஸ்களை நிர்வகிக்க அமெரிக்கா 101 நாட்களையும் சீனா 109 நாட்களையும் எடுத்துக்கொண்டிருக்கின்றது.
எதிர்மறையான சிந்தனைகளையும் எண்ணங்களையும் வெறுப்புகளையும் மட்டுமே வெளியிட்டு பழக்கப்பட்ட ஊடங்கள் இப்படியான விஷயங்களை பேசுவதில்லை.
நாம் , இந்த தரவுகளை இங்கே சுட்டிக்காட்டியிருப்பது, நம் சமூகத்தின் இயல்பான நோய் எதிர்ப்பாற்றலை சுட்டிக்காட்டவும். ஒப்பீட்டளவில் குறைவான வசதிகளை கொண்டிருந்தாலும் இது போன்ற சவால்களை நம் சமூகம் திறம்பட கையாண்டு இருக்கின்றது, இப்போதும் அதுவே நடக்கின்றது என்பதை சுட்டிக்காட்டவுமே தவிர பாதிப்புகளையும் இழப்புகளையும் பெருந்தொற்றையும் மக்கள் உதாசீனப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல.நம்முடைய உதாசீனமே இரண்டாம் அலையில் இந்த பெருந்தொற்று நம் மீது ஆதிக்கம் செலுத்த காரணமாய் அமைந்துவிட்டதை யாரும் மறந்துவிடக்கூடாது.
தினமும் ஊடகங்களும் சமூக ஊடகங்களும் தரும் செய்திகளால் ஏற்படும் அச்சம்,தொற்று ஏற்படும் முன்னரே நாம் இதை எதிர்க்க முடியாது என்கிற பலவீனத்தை வளர்க்கும் வேலையை இங்கே செய்து கொண்டு இருக்கின்றது.இந்நிலையில் ஒருவர் தொற்றினால் பாதிக்கப்படும் போது அவரின் நோய் எதிர்க்கும் உறுதி ஏற்கனவே சோர்வுற்றிக்க பாதிப்பை அறிந்த பின் அந்த உறுதி மேலும் பலவீனம் அடைந்து நோய்க்கு எதிரான போராட்டத்தை கடினமாக்கி விடுகிறது.இதை தவிர்க்க மேலே சுட்டிக்காட்டிய நேர்மறையான தரவுகளை நம் சமூகம் அறிந்து கொள்ளவேண்டியிருக்கின்றது.
இதுவரை இந்தியாவில் 20 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டு இருக்கின்றது. இதில், 4.2 கோடி பேருக்கு ரெண்டு டோஸ்களும் போடப்பட்டுள்ளது.இது அதிகப்படுத்தப்பட வேண்டும் அதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.எண்ணிக்கையில் இது எத்தனையோ நாடுகளை விடவும் அதிகம். சதவீத அடிப்படையில் இது மிகவும் குறைவே ஆனாலும் கூட இந்த பெரிய எண்ணிக்கை நேர்மறையாக அணுகப்படவேண்டிய ஒன்றே ஆகும்.
தற்போது இந்தியா,பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கண்டுபிடித்த தீநுண்மிக்கு (virus) எதிரான மருந்தையும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டது இது, இன்னும் சில மாதங்களில் பரவலப்படுத்தப்படலாம்.
இது போன்ற செய்திகளே மக்களை அதிகம் சென்றடைய வேண்டும்.மக்கள் மனதில் நம்பிக்கையையும்.கடிமான சூழல்களில் நேர்மறையாக நடக்கும் உண்மைகளையுமே நாம் அதிகமாக கொண்டு சேர்க்க வேண்டும். அது சமூகத்தின் நம்பிக்கையை அதிகரிக்க செய்யும். ஊடகங்களின் கருத்துக்கள் படி இந்தியாவில் பாதிப்பு அதிகம் என்கிற எண்ணமும் இந்தியா என்னத்தை கிழித்துக்கொண்டிருக்கின்றது எண்ணமும் அரசியல்வாதிகளுக்கு எதிரானது அல்ல மக்களுக்கு எதிரானது.மக்களின் நம்பிக்கையை குலைக்க வல்லது.
ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும் நம் நாட்டின் மொத்த பாதிப்பை விட குறைவான மக்கள் தொகையை கொண்ட நாடுகள் இங்கே ஏராளம்.பெருந்தொற்றை ஒரு சமூகமாக வென்றெடுக்க நாம் நம் மீதான நன்மதிப்புகளை உணர்ந்து நம் நம்பிக்கையை பலப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது. அச்சம் தவிர்க்கப்பட்டு நம்பிக்கை ஓங்க வேண்டும்.அந்த நம்பிக்கை உதாசீனமாகி விடக்கூடாது.
இந்த பெருந்தொற்றை எதிர்கொள்வதில் நம்மை விட வளர்ந்த நாடுகளும் கூட தடுமாறவே செய்தன.ஒப்பீட்டளவில் நம்மை விட வளர்ந்த சில நாடுகளை விட இன்று வரை நாம் திறமையாகவே செயல்பட்டு இருக்கின்றோம். நம்முடைய உதாசீனம் தவிர்க்கப்பட்டு இருந்தால் பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இன்னும் சிறப்பாக முன்னேறியிருப்போம். அதனால் நம்பிக்கை கொள் பாரதமே!விடியும் ஒரு நன்னாள். பரப்பரப்பிலாத அந்த நாளில் நம் ஊடகங்கள் வேறு ஒரு பரப்பரப்பை தேடிக்கொண்டிருக்கும். அப்போது நாம் சுதந்திரமாக காற்றை சுவாசிக்க தொடங்கியிருப்போம்.