வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும்.
வாசகர்களே! சிறு வயதில், தாத்தா பாட்டின்னு யாரும் உங்களுக்கு கதை சொல்லிருக்காங்களா?
அந்த கதைகளில் எத்தனை கதைகள் காட்சி வரிசை மாறாமல் உங்கள் நினைவில் இருக்கின்றது.கதைகளை விட்டுத்தள்ளுங்கள்.
நீங்கள் கனவு கண்டதுண்டா?நீங்கள் கண்டா கனவுகளில் எத்தனை கனவுகள் உங்கள் நினைவில் இருக்கின்றது.
பொதுவாகவே நாம் காணும் கனவுகள் நாம் விழிக்கும் பொழுதே பாதிக்கும் மேல் மறந்துவிடும்.
கனவில் நீங்கள் கண்ட காட்சிகளை உங்களால் தெளிவாக நினைவு கூற முடியாது. ஆனால்,மொத்தமாக ஒரு கனவாக அது உங்கள் நினைவில் ஒட்டிக்கொண்டு இருக்கும்.
கனவு மாதிரி ஒரு படம் இருந்தால் எப்படி இருக்கும்!
சரி, கனவு எப்படி இருக்கும்?
அடுத்தடுத்த காட்சிகளை நோக்கிய உங்கள் பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கும் பொழுது முந்தைய காட்சியில் என்ன நடந்தது என்பதை நீங்கள் மறந்து இருப்பீர்கள்.உங்கள் புலன்கள் தன்னிச்சையாக செயல்படும்.
உங்கள் அனுமதியின்றி உங்கள் கைகள் யாருடனோ சண்டையிட்டு கொண்டு இருக்கும்.தீடீரென்று நீங்கள் அழுது கொண்டு இருப்பீர்கள்.லாஜிக்கே இல்லாமல் ஏதேதோ நடந்து கொண்டு இருந்தாலும் அத்தனையும் உண்மை என்று நீங்கள் நம்பிக்கொண்டு இருப்பீர்கள்.
கண்விழித்து பார்த்த பின் தான் உணர்வீர்கள், எல்லாம் கனவு என்று . என்ன கனவு வந்தது? என்று காட்சிகளை நினைவுகூற முயற்சிப்பீர்கள். எல்லா காட்சிகளையும் உங்களால் நினைவுகூற முடியாது.
இப்படி ஒரு படம் இருந்தா எப்படி இருக்கும்? அது தான் KGF.
KGF முதல் பாகம் வந்த பொழுது அந்தப் படத்தின் போஸ்டர் மட்டுமே பார்த்து இருந்தேன். படத்தைப் பார்க்கவேண்டும் என்கிற எண்ணம் ஏற்படவே இல்லை.அந்த கலர்(colour),டப்பிங் படம், இப்படி ஏதோ ஒரு காரணம்.
ஒரு நாள் எதேச்சையாக KGF முதல் பாகத்தின் ஒரு காட்சியை பார்க்கும் சூழல் ஏற்படுகிறது.அதில் என்ன இருந்ததோ தெரியவில்லை, KGF படம் முழுவதையும் பார்த்து முடிக்கின்றேன்.
கதைகளை விரும்பி கேட்டு வளர்ந்த இந்த மனித சமூகம், கதை கேட்கும் விஷயத்தில் துளியும் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. ‘நான் ஒரு கதை சொல்றேன் கேளு’ என்று நீங்கள் யாரையும் உட்கார வைக்க முடியாது. ஆனால், கதை சொல்லி உட்கார வைக்க முடியும். நீங்கள் சொல்லும் அந்த கதையில்,கதையின் போக்கில் உங்கள் நாயகன் வானத்தையே வளைக்கிறான் என்றாலும் கதைமுடியும் வரை யாரும் அதைப்பற்றி சிந்திக்க மாட்டார்கள் அப்படி சிந்திப்பார்களெனில் நீங்கள் சொல்வது கதையே இல்லை.
KGF திரைப்படம் முதல் பாகமும் சரி CHAPTER -2 என்று வெளிவந்து இருக்கும் இந்த இரண்டாவது பாகமும் சரி கதைகளை கொண்ட ஒரு கதை.
KGF திரைப்படம், காட்சிகளை கொண்ட ஒரு படம் என்று சொல்வதை விட கதைகளை கொண்ட ஒரு திரைப்படம் எனலாம். ஒவ்வொவரு கதையின் முடிவும் என்னவாக இருக்கும் என்பதை நோக்கியே கதை நகர்கிறது.
தெரிந்த கதையாகவே இருந்தாலும் நம்முடைய இதிகாசங்களான மகாபாரதமும்,இராமாயணமும் இன்றும் யாரோ ஒருவர் சொன்னால் அல்லது யாரோ ஒருவர் திரைப்படமாகவோ நாடகமாகவோ எடுத்தால் உட்கார்ந்து ‘ஆ’ என கேட்கத்தான் செய்கிறோம்.அதற்கு காரணம்,இரண்டு இதிகாசங்களும் ஒரு ஆயிரம் கதைகளை உள்ளடக்கிய ஒரு பெரிய கதை அதில் இல்லாத emotion யே கிடையாது.அதே போன்ற இதிகாசங்களை இனி எழுதவும் முடியாது.
அந்த வகையில் KGF is an epic film.சுவாரசியமான ஒரு கதையை கேட்கும் பொழுதும் படிக்கும் பொழுதும் அந்த சுவாரசியத்தை தருவதே, “முடிவு என்னவாக இருக்கும்?” என்கிற கேள்வி தான்.முடிவு என்ன? என்கிற கேள்வியை வைத்துக்கொண்டு அந்த கதையோடு நாம் பயணிக்கும் பொழுது நம் மனதில் ஒரு ஆசை இருக்கும் இந்த கதை முடிந்துவிடக்கூடாது என்று அந்த ஆசையை இந்த திரைப்படம் தருகிறது.
படத்தில், கதை முடிந்து பெயர் போடுகிறார்கள் ஆனால், திரையரங்கில் இருந்து ஒருவரும் எழுந்திருக்கவில்லை முடிவு இதுவாக இருக்க கூடாது என்கிற எண்ணமோ அல்லது இந்த முடிய கூடாது என்கிற எண்ணமோ, ஒருவரும் இருக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை.அவர்கள் ஏமாறவும் இல்லை.
காட்சிகளாய் நகரும் இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு கதையின் முடிவிலும் நாயகனே தான் ஜெயிக்கின்றான்.காட்சிக்கு காட்சி நாயகனே தான் ஜெயிக்கபோகிறான் என்றாலும் அடுத்த என்ன என்றே மனம் தேடுகிறது.கதாநாயகன் தானே எப்பொழுதும் ஜெயிப்பான்.இதென்ன புதுசா! கதாநாயகன் ஜெயிப்பதில்லை ஜெயிப்பவர்கள் தான் கதாநாயகர்களாகிறார்கள் என்பதை சொல்லும் கதை தான் KGF.
ஒரு வகையில், கதைகள் நமக்கு பிடிப்பதற்கு காரணமே நாம் செய்ய முடியாததை செய்ய வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருப்பதை அந்த கதையின் நாயகன் செய்து முடிப்பதால் தான். அந்த வகையில் கதாநாயகர்கள் நம் ஆழ்மனதின் தாகம் தீர்ப்பவர்கள். சிறு வயதில் ரஜினி படம் பார்த்த எல்லாரு ம்நிச்சயமாக ஒரு அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா போன்று பேர் புகழ், படை என்று இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருப்போம் . இப்படி நம்முடைய ஆசைகளையும் கதைகளே நமக்குள் விதைக்கிறது. அந்த வகையில் KGF is an inspiring story.
கதை சொல்லும் பொழுது எதை முதலில் சொல்கிறோம் எதை பின்னால் சொல்கிறோம் என்பதில் தான் கதையின் ஆச்சரியங்கள் ஒழிந்துஇருக்கின்றது. காட்சிக்குக்காட்சி ஆச்சரியங்களை தந்துகொண்டே கதை நகர்கிறது.
எல்லாவற்றிக்கும் மேல்,ஒரு கதையை படமாக காட்டும் பொழுது அந்த ஹீரோ performance செம்ம என்கிற எண்ணம் ஏற்படுமாயின் அது கதையின் தோல்வியே. KGF பார்த்துவிட்டு இந்த கட்டுரையை எழுத எத்தனித்தபொழுது எனக்கு அந்த hero பெயர் கூட நினைவுக்கு வரவில்லை.என் நினைவு முழுதும் ஆக்கிரமித்திருக்கும் பெயர் rocky bhai.
முதல் பாகத்தில் கேட்டு பழகிய அதே இசை காட்சிகளின் ஓட்டத்தில் அந்த இசைக்கோர்வைகள் எங்கு வர வேண்டும் என்று மனம் எதிர்பார்க்குமோ அங்கெல்லாம் வந்து பரவசமடைய செய்கிறது.
அப்பா தான் நம்முடைய தைரியம் -நாம் எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கும் விஷயம், நான் ஒரு காலம் வரை நம்பிக்கொண்டு இருந்த விஷயம், ‘அப்பா தான் நம்முடைய தைரியம்’ என்று.
அப்பா இல்லாத வெறுமையில் தான் அம்மா என்னவெல்லாம் செய்தார்கள் என்று எனக்கு உரைத்தது. அப்பாவைப்பற்றி நமக்குள் இருக்கும் அத்தனை ஆதர்ச பிம்பங்களும் அம்மா கட்டியமைப்பது. சில அப்பாக்கள் அந்த பிம்பங்களுக்கு ஏற்றவர்களாகிறார்கள். அப்பா தான் நம்முடைய தைரியம் என்பதும் அப்படியான பிம்பங்களில் ஒன்று.
பாரதியும் கூட அதையே நம்பியிருந்ததால் தான்,
“எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” என்று பாடினான்.
ஆனால், பிள்ளைகளின் தைரியமாக இருப்பது தாய் தான்.பயத்தில் யார் ஒருவரும் நிச்சயமாக அம்மா என்று தான் கத்துவார்கள்(naturally). வலியில் வேண்டுமென்றால் அப்பா என்று கத்துவார்கள். யாரை எப்பொழுது தேட வேண்டும் என்று இயற்கையாகவே நமக்கு தெரிந்து இருக்கின்றது. அம்மா தைரியசாலியோ இல்லையோ அம்மா பக்கத்தில இருந்தா எல்லோரும் தைரியசாலி தான்.அழுகின்ற குழந்தைக்கு “அம்மா இங்க தான் இருக்கேன்” என்கிற குரல் போதும். எத்தனை வளர்ந்தாலும் நாம் அத்தனை பேரும் குழந்தை தானே! இந்தப் படத்தில் அதை காட்சிப்படுத்தியதற்காகவே இயக்குனருக்கு ஒரு claps.
இந்தப்படத்திற்கு மனைவியுடன் சென்று இருந்தேன்,என்னுடைய மனைவி சில காட்சிகளில் என் கன்னங்களை தொட்டுப்பார்த்துக்கொண்டார் ஈரம் தட்டுப்படுகிறதா? என்று. கண்ணை கலக்கிய வசனங்களும் காட்சிகளும் தந்த கண்ணீர் கண்களை தாண்டிவிடவில்லை, என் மனைவியின் விரல்களுக்கு எதுவும் தட்டுப்படவும் இல்லை.நம் வெளியை விட இதயம் கனத்திருக்கும் பொழுது gravitational force தோற்றுப்போகிறது.
கதையெல்லாம் விடுங்க. திரைப்படத்தில் அழுகின்ற குழந்தைக்கு அம்மா பாடுவது போல் ஒரு தாலாட்டுப் பாட்டு , திரையரங்கின் இருட்டை கிழித்துக்கொண்டு உங்கள் காதுகளை தீண்டும் பொழுது உங்கள் ரத்தத்தில் கிச்சுகிச்சு மூட்டி உடலை சிலிர்க்க செய்கிறது அந்த குரல். நிச்சயமாக உங்கள் போனில் headset மாட்டிக்கொண்டு இந்த அனுபவத்தை நீங்கள் பெற முடியாது.அதனால்,முடிந்த இந்த திரைப்படத்தை திரையரங்கில் பாருங்கள்.
மதுரையில் இறங்கிய அழகரை தென்தமிழகமே கொண்டாடுகிறது. அது மாதிரி இந்த திரைப்படத்தை ஆசியாவே கூட கொண்டாடும்.