எல்லா நாடுகளுக்கும், எல்லா மதத்தினருக்கும் என்று பிரத்யேக நம்பிக்கைகளும் சடங்குகளும் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. அறிவியல் மேதைகளிடமும் கூட இந்த நம்பிக்கைகள் இருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம். இந்த நம்பிக்கைகளும் சடங்குகளும் ஒரு இனக்குழுவின் அடையாளமாக எடுத்துக்கொள்ள முடிகிற அளவு பிரத்யேகமானதாக இருந்திருக்கின்றன.
இதில் பாரத சமூகத்திடம் இருந்த நம்பிக்கைகளும், அது பின்பற்றி வந்த சடங்குகளும் இயற்கையோடு ஒன்றுபட்டவை. இதில் பாரதம் என்று பிரித்துச் சொல்வதைக்காட்டிலும் தெற்காசியா முழுவதுமே இந்தச் சடங்குகள் ஏறக்குறைய ஒரே மாதிரியானதாக, இயற்கையோடு ஒன்றுபட்டதாக இருந்திருக்கின்றன.
நிர்வாக அரசியல், எப்போதும் இப்படியான நம்பிக்கைகளுக்கும் சடங்குகளுக்கும் மதிப்பளிப்பது பற்றியும், சரியான முறையில் நிர்வகிப்பது பற்றியும் கருத்தில் கொண்டதில்லை. நம்பிக்கைகளும் சடங்குகளும் கலாச்சாரம் சார்ந்தது. அதைக் காப்பதும் அதற்கு மதிப்பளிப்பதும் கூட அரசின் பொறுப்புதான்.
இங்கே என்ன பிரச்சனை என்றால், மக்கள் தங்கள் நம்பிக்கைகளின் படியும், அவர்கள் பின்பற்றி வரும் சடங்குகளின் படியும், எந்தச் சமரசமுமின்றி அவர்கள் நினைத்ததை நினைத்தது மாதிரி மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் செய்ய முடிகிறதா? நிச்சயமாக இல்லை. முக்கியமாக இறுதிச் சடங்குகள், முன்னோர் வழிபாடுகள் இவற்றிலெல்லாம் பாரத சமூகம் பின்பற்றி வந்த அதன் தனித்துவமான வழக்கங்களை அது கைவிட்டுக்கொண்டிருக்கிறது. இதெல்லாம் முக்கியமா என்றால்? இதுவும் முக்கியம்தான். சமூகத்தின் எல்லா உணர்வுகளையும் நம்பிக்கையையும் மதித்து அதற்கான இடமளிப்பதும் முக்கியம்தான்.
பல நாடுகள் அவை வளரும் பொழுது இதையெல்லாம் கருத்தில் கொண்டு, இதற்கான இடத்தைக் கொடுக்கின்றன. வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவோ இது எப்படிச் சீர்கெட்டுக்கொண்டிருக்கிறது என்றும், இது நம் தனித்துவங்களை எப்படி மாற்றுகிறது என்றும் சட்டை செய்வதில்லை.
ஒரு அரசியல்வாதி இறந்துவிடுகிறார். அவருக்கு ஒரு பெரிய சுற்றுலாத்தளத்தின் அருகே நூறு கோடிகள் செலவழித்து நினைவிடம் அமைத்து, வருடமானால் வடை வைத்து வணங்கும் அளவு அந்த அரசியல்வாதியின் குடும்பத்திற்குப் பிரத்யேகமான வசதிகள் செய்யப்படுகின்றன. சாமானியர்களுக்கு இந்த வசதி இருக்கிறதா? இத்தனை பெரிய வசதி ஒன்றும் வேண்டாம். சாமானியர்களுக்கான இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் இடம் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறதா? இல்லை. அங்கே குளிப்பதற்கான வசதிகள் இருந்தாலும் பயன்படுத்த முடியாத அளவில்தான் இருக்கின்றன. நான் தமிழகத்தின் சாதாரணமானவர்களுக்கு இறுதி காரியங்கள் நடக்கும் இடங்களை வெவ்வேறு ஊர்களில் பார்த்து இருக்கிறேன். அநேகமான இடங்களில், அது குப்பைக்கிடங்காகப் பாவிக்கப்பட்டு, குப்பை கொட்டும் இடமாகவேதான் இருக்கிறது. இது மக்களையும் அவர்கள் உணர்வுகளையும் அவமதிப்பது போன்றது இல்லையா?
ஒரு ஊரில், ஒரு சிறிய அரசியல்வாதி இறந்து போகிறார். அவர் மாமன்ற உறுப்பினர் கூட கிடையாது. ஒரு கட்சியில் நகர அமைப்பு அளவில் ஒரு பதவி வகிக்கிறவர். இறுதி ஊர்வலம் என்கிற பெயரில், அவர் ஆதரவாளர்கள் மது அருந்திவிட்டு, இருசக்கர வாகனத்தில் அணிவகுத்துச் செல்கிறார்கள். அதோடு ஒரு சந்திப்பில் ஊர்வலத்தை நிறுத்தி “வீரவணக்கம்” என்று கோஷமிடுகிறார்கள். போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அங்கே வரும் ஒரே ஒரு காவலரால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்த ஒருவர் மீதும் ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாமல், ஊர்வலத்தில் இருந்த பெரியவர் ஒருவரிடம் கூட்டத்தைக் கலைத்து வழிவிட உதவி கோருகிறார். அவர்கள் கலைந்து சென்றதும், போக்குவரத்தைச் சீர் செய்வதை மட்டுமே அவர் செய்கிறார்.
இந்த நிகழ்வு நம்மைப் பல சிந்தனைகளுக்கு உள்ளாக்குகிறது. அரசியல்வாதி என்று இல்லை, பொதுவாக இப்படி ஊர்வலங்கள் ஓரளவுக்குப் போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் தான். நாம் இப்படி ஊர்வலங்கள் கூடவே கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், அதற்கென்றும் கூட நாம் சில ஒழுங்குகளைக் கொண்டு வர வேண்டும். சடங்குகளை மதிக்கின்ற அதே வேளையில், பொது ஒழுங்கைக் காப்பதும் அரசின் கடமையாகிறது.
இந்த பாரத சமூகத்தின் இப்படியான ஊர்வலங்களுக்கு முன்னால், நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் எடுத்து இறுதி மரியாதை செய்வதும் ஒரு வழக்கமாக இருந்தது. இப்போது அதற்கான வாய்ப்பு அரிதாகிவிட்டது. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. நீர்நிலைகளை விட நீர்த்தேக்கத் தொட்டிகளும் குழாய்களுமே தண்ணீர் ஆதாரமானது ஒரு காரணம் என்றால், நீர்நிலைகளில் பாதியை நாம் அழித்துவிட்டதும், மீதியை அசுத்தமாக்கிவிட்டதும் கூட ஒரு காரணம் தான்.
கழிவறைகள் இல்லாத காலங்களில் கூட நீர்நிலைகள் இத்தனை அசுத்தமாய் இருந்ததில்லை. நாம் நம் நம்பிக்கைகளிலும் சடங்குகளிலும் கொஞ்சம் அக்கறை காட்டியிருந்தால் கூட நீர்நிலைகளைச் சுத்தமாக வைத்திருந்திருப்போம். ஆறுகளில், குளங்களில் சாக்கடையைக் கலக்க விட்டிருக்க மாட்டோம். ஆற்றங்கரைகளையும், கடற்கரையையும், குளக்கரைகளையும் குப்பை மேடுகளாக ஆக்கியிருக்க மாட்டோம்.
நாம் நம் முன்னோர்களுக்குச் செய்யும் வணக்கங்கள், அவர்களுக்குச் செய்யும் மரியாதைகள் எல்லாம் நீர்நிலைகளைச் சார்ந்தே இருந்து வந்திருக்கின்றன. இன்றோ நீங்கள் ஒரு கோவிலுக்குச் சென்று முன்னோருக்கான திதி கொடுப்பது போன்ற விஷயங்களைச் செய்தாலும், அங்கே நீரில் கரைக்க வேண்டியதை ஒரு பிளாஸ்டிக் குப்பைத் தொட்டியில் கொட்ட வேண்டிய அவல நிலை இருக்கிறது.
இந்தச் சடங்குகளால் நீர்நிலைகள் அசுத்தமாகாதா என்றால், இதெல்லாம் சரியாக நடந்துகொண்டிருந்தவரை இதற்காகவேனும் நீர்நிலைகள் சரியாகப் பராமரிக்கப்பட்டு வந்தன. தென்னாட்டில், சில தெய்வ வழிபாடுகளில் ‘முளைப்பாரி‘ திருவிழா நடத்துவார்கள். அவர்கள் ஆறுகளில், குளங்களில் கொண்டு கரைக்கும் அந்த முளைப்பாரிகள் ஒன்றும் பிளாஸ்டிக் குப்பைகள் அல்ல; செடிகள். இயற்கை இயற்கையை ஒன்றும் செய்யாது.
சாக்கடைக் கழிவுகளையும் குப்பைகளையும் விடக் கீழானதை இந்தச் சமூகம் நீரில் கொட்டி எந்தச் சடங்குகளையும் செய்ததில்லை. இந்தச் சமூகம் எப்போதும் நீரைத் தெய்வமாக வணங்கியிருக்கிறது. மோசமான அரசியல் நிர்வாகம், நீரில் குப்பை கொட்டலாம், சாக்கடை கழிவுகளைச் சேர்க்கலாம் என்று மக்களின் மூளையைச் சலவை செய்திருக்கிறது.
சீனர்கள், ஜப்பானியர்கள் போன்ற இன்னும் சில ஆசியர்கள் எத்தனை வளர்ந்தாலும், அவர்கள் முன்னோர் வழிபாடுகளைச் சரியாகத் தொடர்கிறார்கள். அவர்கள் வீடுகளுக்குக் கீழே அவர்கள் வழிபாடு செய்யச் சுத்தமான இடம் கிடைக்கிறது. அவர்கள் சடங்குப்படி எதையும் எரித்து அவர்கள் தெய்வங்களையோ முன்னோர்களையோ வணங்க வேண்டும் என்றால், அதற்கும் கூட அவர்களுக்குப் பிரத்யேகமான ஏற்பாடுகள் செய்து தரப்பட்டு, அவர்கள் அதற்கான இடங்களில் அதனைச் செய்து கொள்கிறார்கள்.
நம் மக்கள் திருஷ்டி சுற்றுவதை நம்புகிறார்கள். நாம் அதற்கு மதிப்பளிக்காமல் அதைக் கேலி செய்கிறோம். நீர்நிலைகளின் அழிவாலும், நீர்நிலைகள் சார்ந்து நம் மக்கள் செய்யும் சடங்குகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படாததாலும் இங்கே இந்தியர்களாக நாம் குறுகிக்கொண்டே வருகிறோம்.
நூடுல்ஸ், பிட்சா எல்லாம் ஏதோ ஒரு இனக்குழுவின் உணவு முறைகளில் பிரதானமாக இருந்தது தான். இன்றோ அதெல்லாம் பிராண்ட் ஆக்கப்பட்டு இருக்கிறது. காரணம், அவர்கள் அவர்களின் வழக்கங்களுக்கும் அடையாளங்களுக்கும் மதிப்பளித்து வந்ததுதான் என்பது நம் எண்ணம்.
இது பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டிய பிரச்சனையா என்றால், ஆம். பாராளுமன்றம் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் தான். இது தேசிய இனக்குழுவின் கலாச்சாரம் சார்ந்தது.
இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் இருக்கும் சுடுகாடுகளே குப்பை மேடுகளாய், குளிப்பதற்கான வசதிகளில் சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது என்றால் மற்ற இடங்கள் எப்படி இருக்கும்? ‘தூய்மை பாரதம்‘ என்கிற கொள்கை எல்லா இடங்களிலும் பிரதிபலிக்க வேண்டும் தானே!
கங்கை மட்டுமல்ல, நீர்நிலைகள் எல்லாமும் மீட்டெடுக்கப்பட வேண்டும். நீர்நிலைகள் இல்லாத இடங்களிலும் கூட முன்னோர் வழிபாடுகள் செய்ய, இறுதிச் சடங்குகளுக்கான சில முறைகளைப் பின்பற்ற, ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் 500 மீட்டருக்குள் ஒரு இடம் அமைத்து அதைச் சரியாகப் பராமரிக்க வேண்டும்.
ஒருமுறை உறவினர் ஒருவருடன் சேதுக்கரை சென்றிருந்தேன். அங்கே முன்னோர்களுக்குத் திதி கொடுப்பது போன்ற சடங்குகள் நடக்கின்றன. அங்கே உடை மாற்றிக்கொள்ள ஒரு அறை இருந்தது. கழிவறையில் கூட அத்தனை மோசமான வாடை வராது. இப்படியான இடங்கள் எல்லாம் நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான். இப்படி விஷயங்களுக்கான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியது ஊராட்சியோ, நகராட்சியோ, மாநில அரசோ தான். ஆனால், நாடு முழுமைக்கும் நாம் ஒரு வழிகாட்டுதலைக் கொண்டு வர வேண்டும். இந்தியாவில் ‘ஸ்மார்ட் சிட்டி‘ திட்டங்கள் வந்தாலும், ‘மயானங்கள்‘ மற்றும் ‘சடங்குத் தலங்கள்‘ இன்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னுரிமைப் பட்டியலில் கடைசி இடத்திலேயே உள்ளன என்பதை நாடாளுமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடம் எப்படி இருக்க வேண்டும்; அது எப்படிப் பராமரிக்கப்பட வேண்டும்; அங்கே தண்ணீர் வசதிகள் எப்படி இருக்க வேண்டும்; எத்தனை பேர் பணியில் இருக்க வேண்டும்; எப்படி அந்த இடங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்; மதம் சார்ந்த சடங்குகள் செய்வதற்கான இடமும் வசதிகளும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கெல்லாம் தேசிய அளவில் நாம் சில தரநிலைகள் வகுக்க வேண்டும்.
இறுதி ஊர்வலங்களுக்கான ஒழுங்குகளை நாம் வரையறுக்க வேண்டும். முன்னோர்களுக்குத் திதி கொடுக்கும் நடைமுறைகளில் போலியான பல விஷயங்கள் நடக்கின்றன. அதையும் நாம் வரைமுறைப்படுத்த வேண்டும். மத விஷயங்களிலோ சடங்குகளிலோ அரசு தலையிடலாமா என்று கேட்டால், அரசு நிர்வாகத்தில் மதம் தலையிடக்கூடாது. ஆனால், இந்தச் சடங்குகளிலும் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களிலும் போலித்தன்மை இருப்பதைக் களைவதில் அரசு தலையிடத்தான் வேண்டும். அது மக்களின் உணர்வுகள் மற்றும் நம்பிக்கையோடு தேசிய கலாச்சாரம் சார்ந்தது..
இந்தியாவிற்கு வெளியில் சில நாடுகளில் கூடத் திதி கொடுப்பதற்கென்று சரியான இடம் ஒதுக்கப்பட்டு, அந்த இடமும் அங்கு இருக்கும் அதற்கான வசதிகளும் சரியான முறையில் நிர்வகிக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவிலோ, இருக்கின்ற இடங்களையும் குப்பைகளாகவும் சாக்கடைகளாகவும் ஆக்கி வைத்து இருக்கிறோம்.
ஜப்பான் சீனா போன்ற நாடுகளின் பொது மயானங்கள் மிகத் தூய்மையாக, அமைதியான பூங்காக்கள் போலப் பராமரிக்கப்படுகின்றன. சடங்குகள் செய்யத் தனியாக ‘Ritual Halls’ உள்ளன.
மக்களின் எல்லா தேவைகளும் அந்த நாட்டின் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது தான். ஒரு அரசின் எல்லா சீர்திருத்த நடவடிக்கைகளும் அதன் பொருளாதாரத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது தான்.
நாம் சொன்னது போல, ஒவ்வொரு வீடுகளிலும் இருந்தும் 500மீட்டர் தொலைவிற்குள், இறுதி மரியாதை செய்ய தனியாக தண்ணீர் வசதிகள் செய்துகொடுப்பது, மாயனங்களை சரியாக பராமரிப்பது. திதி கொடுப்பது போன்ற சட்டங்களுக்கு எல்லா ஊர்களிலும் சரியான வசதிகளை செய்துகொடுத்து அதை நெறிப்படுத்துவது. மிக முக்கியமாக இருக்கின்ற நீர்நிலைகளை இதற்காகவேனும் மீட்டெடுத்து தூய்மையாக பராமரிப்பது இதெல்லாம் ஒரு பொருளாதார சுழற்சியை கொண்டு வரும். மயானங்கள் மற்றும் சடங்குத் தலங்களைப் பராமரிக்கப் பணியாளர்களை நியமிப்பது வேலைவாய்ப்பை உருவாக்கும். பொருளாதாரத்தில் இது ஒரு நேர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தும், இதற்கான கட்டுமானப் பணிகள் (500 மீட்டருக்கு ஒரு இடம்) உள்ளூர் அளவில் பொருளாதாரச் செயல்பாட்டை தூண்டும். மேற்கத்திய நாடுகளில் Funeral Management’ என்பது ஒரு பெரிய பொருளாதாரத் துறையாக (Industry) வளர்ந்துள்ளது. அதற்கு அவர்கள் அவர்களின் சடங்குகளை மதித்து அதற்கான சரியான இடத்தை கொடுக்கும் அதே வேளையில் பொது ஒழுங்கையும்,சுத்தத்தையும் பேணிக்காப்பது தான் காரணம்.
அது இந்தியாவிலும் சாத்தியப்பட வேண்டும்.
இந்தியா முழுவதும் உள்ள மயானங்கள் மற்றும் சடங்குத் தலங்களுக்கு ஒரே மாதிரியான தரநிலைகளை (Standard Operating Procedures) உருவாக்க வேண்டும்.ஒவ்வொரு 500 மீட்டர் அல்லது ஒரு குறிப்பிட்ட சுற்றளவிற்குள் இருக்கும் சடங்குத் தலங்களை கொண்டு வர வேண்டும்.நீர் நிலைகளை மாசுபடுத்தாத வண்ணம், இயற்கையான பொருட்களைக் கொண்டு சடங்குகள் செய்வதை ஊக்குவித்து, அதற்கான கட்டமைப்பை (Eco-friendly Ritual Zones) அரசு உருவாக்க வேண்டும்.மத்திய/மாநில பட்ஜெட்களில் ‘கலாச்சார உள்கட்டமைப்பு‘ (Cultural Infrastructure) என்ற தலைப்பின் கீழ் இதற்கெனத் தனியாக நிதி ஒதுக்கப்பட வேண்டும்