இன்று காலை என் ஆசிரியர் ஒருவர் எனக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார். அந்தச் செய்தி, இந்த மக்களவையின் கவனத்திற்குக் கொண்டு வர நான் குறித்து வைத்திருந்த பணிப்பட்டியலில் (To-do List) உள்ள விஷயத்தை எனக்கு நினைவூட்டியது.
கல்வி பற்றி நாம் அதிகம் விவாதிக்கிறோம். புதிய கல்விக் கொள்கையையே இன்னும் சில மாநிலங்கள் ஏற்காமல் இருக்கின்றன. நாட்கள் நகர நகர அந்தக் கொள்கையும் பழசாகிப் போய்க்கொண்டிருக்கிறது. நாம் இன்னும் பெரிய மாற்றங்களைக் கல்வியில் முன்னெடுக்க வேண்டும். தேசம் முழுமைக்குமான பொதுவான, தரமான ஒரு கல்வி முறை இருக்க வேண்டும். அது இந்தியர்களைப் பற்றி உலகம் கொண்டிருக்கும் பார்வையை மாற்ற வேண்டும்.
‘கதிர்விஜயம்’ வலைத்தளம் கல்வியில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்துச் சில கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளது. அதில் அவர்கள் மேற்கோள் காட்டுவது, கல்வியில் பாரதம் எப்படி இருந்தது என்கிற நம்முடைய பழைய கல்வி முறைகளைத்தான். ஆனால், இன்றோ ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக’ நம்முடைய கல்வியின் தரம் இருக்கிறது.
நீங்கள் நம்மிடம் ஐ.ஐ.டி (IIT) இருக்கிறது, ஐ.ஐ.எம் (IIM) இருக்கிறது என்று வாதிடலாம். ஆனால் நிதர்சனத்தில், நாம் உருவாக்கும் பல பட்டதாரிகள் தரமற்ற கல்வி நிலையங்களில் ஏனோ தானோவென்று படித்து வெளியாகிறவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
கல்வியில் என்ன மாதிரியான மாற்றங்களை எல்லாம் நாம் கொண்டுவர வேண்டும்?
பூஜ்ஜிய தோல்வி கல்வி முறை (Zero Failure Education Model)
முதல் மாற்றமாக நாம் செய்ய வேண்டியது: பூஜ்ஜிய தோல்வி கல்வி முறை (Zero Failure Education Model). இதுபற்றி ஜூலை 2020-இல் கூகிளில் வெளியான ‘தமிழகத்தின் கடைசி வாய்ப்பு ரஜினிகாந்த்’ என்கிற புத்தகத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது.
ஒருவர் பத்தாம் வகுப்பு வரை படித்து, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வைச் சந்திக்கிறார். ஐந்து பாடங்களில் ஆங்கில மொழிப் பாடத்தில் மட்டும் அவர் தோல்வி அடைகிறார் என வைத்துக்கொள்வோம். அவரை நாம் என்ன செய்கிறோம்? ‘பத்தாவது தேர்ச்சி அடையாதவர்’ என்று முத்திரை குத்திக் கீழே தள்ளுகிறோம். ஆங்கிலம் பெரிதாகத் தேவைப்படாத, பத்தாம் வகுப்புத் தேர்ச்சியைத் தகுதியாகக் கொண்ட பிற துறைகளில் அவரால் சிறப்பாக வேலை செய்ய முடியும். ஆனால், ஆங்கிலப் பாடத்தில் அவர் அடைந்த தோல்வியை, அவரின் முழுத் தோல்வியாக முத்திரை குத்தி அவரைச் சிறு வட்டத்துக்குள் தள்ளிவிடுகிறோம்.
NEP-ல் திறன் மதிப்பீடு இருந்தாலும், “பெயில்” (Fail) எனும் முறையை அது முழுமையாக நீக்கவில்லை.
இதற்கு நாம் என்ன செய்யலாம்? நாடு முழுதும் இருக்கிற மாணவர்களுக்கு என்று ஒரு ‘சுயவிவரப் பதிவேட்டை’ (Profile Record) உருவாக்கலாம். ஒருவர் பள்ளியில் சேர்ந்தது முதல் அவர் எந்தெந்தப் பாடங்களில் சிறப்பாகச் செயல்படுகிறார், எவற்றில் மந்தமாக இருக்கிறார் என்பதை அந்தப் பதிவேட்டில் குறித்துக் கொண்டே வரலாம். அவருடைய திறன் எப்படி இருக்கிறது, சிந்தனைப்போக்கு எப்படி இருக்கிறது என்ற முழு விவரங்களையும் அதில் பதிவு செய்யலாம்.
இப்படி நாம் பதிவு செய்துகொண்டே வரும்பொழுது, ஒருவர் பத்தாம் வகுப்பில் எந்தெந்தப் பாடங்களில் எவ்வளவு நிபுணத்துவம் பெற்று இருக்கிறார் என்பது நமக்குத் தெரியவரும். அவர் ஆங்கிலப் பாடத்தில் மந்தமாகவே இருந்தாலும், அவருக்கு மற்ற பாடங்களில் இருக்கும் நிபுணத்துவத்தைப் பொறுத்து, அவரை நாம் அடுத்த கட்டத்தில் எந்தப் பிரிவில் அனுமதிக்கலாம், எந்தத் துறையில், எந்த வேலைக்குச் சரியாகப் பொருந்துவார் என்று பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவேளை ஏதேனும் மேற்படிப்புக்கோ அல்லது வேலைக்கோ ஆங்கிலத்தில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்றால், அந்தப் படிப்பைத் தேர்வு செய்யவோ அல்லது வேலைக்கு விண்ணப்பிக்கவோ, அவர் தனியாக ஆங்கிலம் கற்றுக்கொண்டு தேர்ச்சி பெற்றுவிட்டுப் பிறகு விண்ணப்பிக்கலாம் என்பது போன்ற ஏற்பாட்டை நாம் செய்ய வேண்டும்.
நாம் இப்படி ஒருவரின் நிபுணத்துவத்தைத் தரம் வாரியாகப் பிரித்து அவரை அடுத்தக் கட்டத்திற்கு அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.
நிர்வாக அரசியல் கல்வி
அடுத்த மாற்றமாக நாம் செய்ய வேண்டியது: நிர்வாக அரசியல் பற்றிய கல்வியைக் கட்டாயமாக்குவது.
முதல் வகுப்பில் ‘அரசியல் நிர்வாகத்தில் இந்த நாடு எப்படி இயங்குகிறது’ என்பதைப் பற்றிய எளிமையான பாடங்களில் தொடங்கி, கல்லூரிக்குச் செல்லும்பொழுது அவர்கள் துறை சார்ந்த அரசு நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பதுவரை, அரசியல் பாடம் எல்லோருக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
இங்கு அரசியல்வாதிகள் மக்களுக்கு நிர்வாகத்தைப் புரிந்து கொள்கிற வாய்ப்பைத் தராமல், எப்போதும் பொய்களைக் கொண்டு நிர்வாகத்திற்கும் நாட்டிற்கும் எதிரான மனநிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஒரு நாடு எப்படிச் செயல்படுகிறது? நம்முடைய வரி வருமானம் எவ்வளவு? நாம் அதை எப்படியெல்லாம் செலவழிக்கிறோம்? ஒரு அமைச்சரின் பொறுப்புகள் என்னென்ன? செயலாளரின் பொறுப்புகள் என்னென்ன? பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை நிர்வாகம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றிய விரிவான பாடம் முதல் வகுப்பு முதல் கல்லூரி வரை எல்லோருக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
நான் படித்த காலத்தில், மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தில் ஒரு ஓரத்தில் ‘குடிமையியல்’ (Civics) என்கிற பாடம் இருந்தது. அதுவே போதாது என்கிற நிலையில், இப்போது அந்தப் பாடமும் கூட இருப்பதாகத் தெரியவில்லை.
NEP-ல் “Constitutional Values” (அரசியலமைப்பு விழுமியங்கள்) மற்றும் “Citizenship” பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறை நிர்வாக அரசியல் பற்றியும் நாம் கட்டாயமாகக் கற்றுத்தர வேண்டும். இந்த அமைப்பு (System) எப்படி இயங்குகிறது என்பது எதிர்காலச் சந்ததியினருக்குப் புரிந்தால்தான், அவர்களால் இதை எப்படி மேம்படுத்த முடியும் என்று சிந்திக்க முடியும். அவர்களால் நாட்டை மதிக்கின்ற சரியான குடிமகனாக இருக்க முடியும். அரசியல்வாதிகளிடம் நியாயமான, சரியான கேள்விகளை முன்வைக்க முடியும்.
நாட்டில் எத்தனை பேருக்கு நிர்வாக அரசியல் சார்ந்த தெளிவான பார்வை இருக்கிறது? அரசியல் கட்சிகளில் இருக்கும் பல தலைவர்களுக்கே அது இருப்பதில்லை என்பதுதான் கடினமான உண்மை.
ஒழுக்கமும் தூய்மையும்
இந்தக் குடிமையியல் பாடத்தோடு நாம் அவர்களுக்கு நீதியையும் ஒழுக்கத்தையும் கற்றுத் தர வேண்டும். நாட்டின் சட்டங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்கிற மனநிலையைக் கல்வி மூலம் நாம் உருவாக்க வேண்டும். இப்போது நம்முடைய சமூகம் சட்டத்தையும் விதிமுறைகளையும் பெரிதாக லட்சியம் செய்யாத சமூகமாக இருக்கிறது; இதைக் கல்வி மூலமாகவே நாம் மாற்ற வேண்டும்.
அதேபோல், எல்லா மாணவர்களுக்கும் தாங்கள் இருக்கும் இடத்தைச் சுத்தப்படுத்துவது குறித்த பயிற்சி கட்டாயமாக்கப்பட வேண்டும். அவர்கள் கற்கும் கல்வி நிறுவனங்களைச் சுத்தம் செய்யப் பழக்கப்படுத்த வேண்டும். சுத்தம் செய்வது ஒன்றும் இழிவான வேலையல்ல என்பதை அவர்கள் மனதில் இது நிலைநிறுத்தும். அதோடு இப்படியான பயிற்சியைக் கல்வியோடு சேர்த்துப் பெறுகிற சமூகம், பொது இடங்களை அசுத்தம் செய்யாது. சுத்தத்திற்கான பயிற்சியைப் போலவே, உப்பளவிற்கேனும் தோட்டக்கலை பயிற்சியையும் விவசாயப் பயிற்சியையும் கொடுக்க வேண்டும்.
அறிமுகமும் தேர்வும் (Exposure vs Choice)
முடிவாக நாம் கொண்டு வர வேண்டிய பெரிய மாற்றம்: எல்லா மாணவர்களுக்கும் ஆரம்பக்கட்டத்தில், எல்லாத் துறை பற்றிய அறிவையும் (Exposure) கொடுத்து, அவர்கள் அதில் எந்தத் துறையில் சரியாகப் பொருந்துவார்கள் என்று அடையாளம் காண வேண்டும்.
நான் குறிப்பிட்ட இந்த முறையும், பூஜ்ஜிய தோல்வி முறையும் (Zero Failure Model) இந்தத் தேசத்திற்கு ஒன்றும் புதிதானது அல்ல. மகாபாரதக் கதைகளில், துரோணர் வில் பயிற்சி கொடுத்த கதையைக் கேட்டிருப்பீர்கள். துரோணர் எல்லா மாணவர்களையும் வரிசையில் நிறுத்தி எல்லோரிடமும் வில்லைக் கொடுத்து, முடிவாக வில்வித்தைக்குத் தேவையான கவனம் அர்ஜுனனிடம் இருப்பதைக் கண்டறிகிறார்.
நம் தேசத்தில், மும்மொழிக் கொள்கை போன்ற விஷயங்களிலும் சரி, கல்வி பற்றிய விவாதங்களிலும் சரி, “அவரவருக்குப் பிடித்ததைப் படிக்க வேண்டும்” என்று வாதிடுவதை நீங்கள் பார்க்க முடியும். நமக்குக் கிடைக்கிற அறிமுகமும் அனுபவமும் (Exposure) தான் நமக்கு எது பிடிக்கிறது என்பதைத் தீர்மானிக்கிறது. நம்முடைய கல்வி எல்லாத் துறை சார்ந்த அறிவிற்குமான அறிமுகத்தைத் தருகிற ஒன்றாக இருக்க வேண்டும்.
நீங்கள் நினைத்துப் பாருங்கள், துரோணர் எல்லோர் கையிலும் வில்லைக் கொடுக்காமல், “யாருக்கெல்லாம் வில்வித்தை பயில ஆசை?” என்று கேட்டிருந்தால், அர்ஜுனன் ஒருவேளை வில்லை எடுக்காமல் விட்டிருக்கலாம். வில்லைக் கையில் எடுத்து கவனம் இல்லாத பீமனிடம், “இவன் வில்வித்தையில் தோல்வி அடைந்துவிட்டான், அதில் தேர்ச்சி அடையாமல் அடுத்தக் கட்டக் கல்வியைப் பீமனுக்குக் கொடுக்க முடியாது” என்று சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும்?
Exposure இல்லாத காரணத்திலேயே இங்கே பலர் அவர்கள் திறன்சாராத துறைகளுக்குள் தள்ளப்படுகிறார்கள்.
நம்முடைய தற்போதைய கல்வி முறை ஓரளவிற்கு அந்தத் தவறைத்தான் செய்கிறது. இங்கே அரசியல்வாதிகள், “மொழி பிடித்தால் படிக்கட்டும்” என்கிறார்கள். என்னென்ன மொழிகள் இருக்கின்றன, அது எப்படி இருக்கும், கற்றுக்கொள்ளச் சுலபமானதா இல்லையா என்பதைப் பற்றிய எந்த அறிமுகமும் (Exposure) இல்லாமல், “பிடித்தால் படிக்கலாம்” என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்? “பிடித்ததைப் படி” என்று சொல்வது ஜனநாயகமாகத் தோன்றலாம். ஆனால், “எதுவென்றே தெரியாமல் எதைப்பிடிக்கும்?”
ஹீப்ரு என்கிற மொழி இருப்பதே தெரியாத ஒரு குழந்தைக்கு அதன் மேல் எப்படி நாட்டம் வரும்? வானியல் துறை பற்றி ஏதும் தெரியாத குழந்தைக்கு அதன் மேல் எப்படி நாட்டம் வரும்? ஒரு குழந்தைக்கு மருத்துவத் துறை மேல் ஆர்வம் இருக்கலாம். ஆனால், அந்தத் துறைக்குத் தேவையான தைரியம் போன்ற திறன் இல்லாமல் இருந்து அந்தக் குழந்தை மருத்துவத் துறையில் சேர்ந்தால் என்ன செய்வது?
“பிடித்தால் படிக்கலாம்” என்கிற வாதம் மொழிக்கு மட்டும் அல்ல, துறைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் கூட அபத்தமானதுதான். வெளிப்புறச் சூழல்கள்தான் நாம் எதை விரும்பித் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைத் தீர்மானிக்கின்றன. ஆனால், கல்விமுறை ஒருவனுக்குள் என்ன திறன் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்றவாறு அவனைச் செதுக்க வேண்டும்.
தற்போதைய நிலையும் தீர்வும்
இங்கே நம் கல்வி முறையில், ஏனோ தானோவென்று எல்லோரும் ஏதாவதொரு துறையைத் தேர்வு செய்கிறார்கள். செவிலியர்களாக இருக்கத் தேவையான திறன் இல்லாதவர்கள், பெண்கள் என்பதாலும், அதிகமான செவிலியர் பட்டப்படிப்புக் கல்லூரிகள் உருவாகிவிட்டதாலும், புற உந்துதலால் அதில் தள்ளப்படுகிறார்கள். அதிகமான பொறியியல் கல்லூரிகள், குமாஸ்தாக்களையும், யூடியூபர்களையும் (YouTubers) தான் உருவாக்கியிருக்கின்றன. பொறியியல் படித்த இன்னும் பல பேர் கூலிவேலை செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்-ஐ மட்டும் வைத்துக்கொண்டு நம் கல்வித் தரத்தைப் பேசக்கூடாது.
“பொறியியல் படித்தவர்கள் கூலிவேலை செய்கிறார்கள்” என்பது மிகையான கூற்றாகத் தோன்றலாம், ஆனால் “Skill Gap Report” போன்ற அறிக்கைகளின்படி, இந்தியாவில் 50% பொறியாளர்களுக்கு வேலைக்குத் தேவையான திறன் (Employability) இல்லை என்பது உண்மை இல்லையா?
இந்தச் சமூகம் சட்டதிட்டங்கள், விதிமுறைகளைப் பின்பற்றுவதில் எத்தனை மேம்பட்டு இருக்கிறது? இந்தச் சமூகத்திற்கு நிர்வாக அரசியல் சார்ந்து எத்தனை தெளிவான பார்வையும் அணுகுமுறையும் இருக்கிறது? இந்தச் சமூகத்தில் சுத்தம் எத்தனை முக்கியத்துவம் பெறுகிறது? இந்தச் சமூகம் சுத்தம் செய்கிற வேலையைக் கீழான வேலையாகப் பார்க்காமல் இருக்கிறதா? சமூகத்தில் எல்லோருக்கும் விவசாயம் பற்றிய அடிப்படைப் பயிற்சி இருக்கிறதா? பொறியியல் கல்லூரிகள் பொறியாளர்களைத்தான் உருவாக்குகிறதா? சரியான திறன் கொண்டவர்களைத்தான் நாம் மருத்துவர்களாகவும் செவிலியர்களாகவும் ஆக்கிக் கொண்டிருக்கிறோமா? என்பதையெல்லாம் பொறுத்துத்தான் நாம் நம் கல்வியின் தரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இப்போது இருக்கும் தேர்வு முறைகளின்படி, மதிப்பெண்கள் அடிப்படையில் யார் வேண்டுமானாலும் எந்தத் துறைக்குள் வேண்டுமானாலும் சென்று பட்டம் பெற முடிகிற நிலை இருக்கிறது. மதிப்பெண் ரீதியில் ஒருவர் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துவிட்டாலும்கூட, அவரைக் கல்லூரி எப்படித் தயார் செய்கிறது என்பதிலாவது மாற்றம் கொண்டு வர வேண்டும்.
கல்வி நிலையங்கள் வெறும் பட்டங்களை வழங்கும் தொழிற்சாலைகளாக இல்லாமல், மாணவனின் தனித்திறனை (DNA of Talent) கண்டறியும் ஆய்க்கூடங்களாக மாற வேண்டும்.