ஒரு பத்தாண்டுகளுக்கு முன் தொலைக்காட்சிகளில் ஒரு விளம்பரம் பார்த்திருப்பீர்கள். அது கழிவறை சுத்தம் செய்யப் பயன்படும் ஒரு பொருள் தொடர்பான விளம்பரம்.

அதில், ஒருவர் வீட்டிற்கு விருந்தினர் வந்திருப்பார்கள். விருந்தினர், “உங்கள் வீட்டு கழிவறையை பயன்படுத்திக்கொள்ளட்டுமா?” என்று கேட்டுவிட்டு, கழிவறையை பார்த்ததும் வெளியில் வந்துவிடுவார்.இது அந்த வீட்டிற்கு கௌரவப் பிரச்சினை போன்று காட்டப்பட்டிருக்கும். குறிப்பிட்ட அந்த கழிவறையை சுத்தம் செய்யப் பயன்படும் பொருளை வாங்கினால் வீட்டின் கௌரவம் காப்பாற்றப்படும் என்பது போல காட்டியிருப்பார்கள்.

வீடும் நாடும் ஒன்றுதான். ஒரு வீட்டின் கழிவறையின் சுத்தம் எப்படி அந்த வீட்டின் கௌரவப் பிரச்சினையோ, அதேதான் ஒரு நாட்டிற்கும்.

நாம் அதற்காக ஃபீனால் (Phenol) வாங்குவதற்கோ, ஹார்பிக் வாங்குவதற்கோ நிதி ஒதுக்க வேண்டும் என்பது கருத்து இல்லை.

மோடி அவர்கள் ஆட்சி பொறுப்பெடுத்த புதிதில், ‘தூய்மை பாரதம்’ என்கிற முழக்கத்தை எடுத்தார். கட்சி தலைவர்களே கூட சுத்தம் செய்வது போல விளம்பரம் செய்தார்கள். விளம்பரமாகவே இருந்தாலும் அந்த விளம்பரம் ஒரு விழிப்புணர்வை தரும் என்று நினைத்தேன். பள்ளிக்காலத்தில் இருந்து என்னுள் இருந்த ஏக்கம், “நம் நாடு மட்டும் ஏன் நாம் தொலைக்காட்சிகளில் காணும் வெளிநாடுகள் போல் இல்லை?” என்பது. இந்த ஏக்கத்தை தீர்க்க ஒரு தலைவர் வந்துவிட்டார், எல்லாம் மாறிவிடும் என்று நினைத்து பூரித்துப் போனேன். அந்த நேரத்தில் இங்கு பலரும் பூரித்து இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், பெரிய அளவில், நாட்டையே தலைகீழாக புரட்டிப் போடுகிற அளவில் எந்த மாற்றமும் நிகழவில்லை. சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பது மறுப்பதற்கில்லை; ஆனால் அது நிச்சயமாக போதாது.’தூய்மை பாரதம்’ முழக்கம் தொடங்கிய பொழுது இருந்த ஆர்ப்பரிப்புக்கே கூட அந்த மாற்றம் போதாது.

“தூய்மை பாரதம்” வந்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆனாலும், கண்ணுக்குத் தெரியும் மாற்றம் (Visible cleanliness) இன்னும் முழுமையடையவில்லை

இன்றுவரை, நம் வீட்டுப் பெண்கள் யாரும் வெளியில் செல்லுகின்ற பொழுது பொது கழிப்பறையை பயன்படுத்தத் தயங்கும் நிலைதான் நாட்டில் இருக்கிறது. முதலில், நம் நாட்டில் போதுமான அளவு பொது கழிப்பறைகள் இருக்கிறதா என்றால், அதுவும் கிடையாது.

இது ஒரு நாட்டின் கௌரவப் பிரச்சினை இல்லையா? இது எப்படி கௌரவப் பிரச்சினை? நம் நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அவர்கள் நெரிசலான நகரங்களுக்கு செல்லுகிறார்கள். இப்படியான சுற்றுலாப் பயணிகள் ஒரு கழிவறையை கண்டுபிடிப்பதே பெரிய விஷயமாகத்தான் இருக்கும். அப்படி ஒன்றை கண்டுபிடித்தாலும், அது பயன்படுத்துகின்ற அளவில் சுத்தமாக இருக்குமா என்பது அடுத்த கேள்வி. சுத்தமாக இருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும், அந்த சுத்தத்திற்கு நாம் வைத்திருக்கும் அளவுகோல் என்ன?

நாம் ஒப்புக்கொள்கிறோம், இந்த தூய்மை பாரதம் முழக்கத்திற்கும் முன்னெடுப்புகளுக்கும் முன்னதாக விமான நிலையங்களில் கழிப்பறைப் பராமரிப்பு எந்த அளவில் இருந்தது, எப்படியிருந்தது; இப்போது எத்தனை முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்று நாம் பார்க்கிறோம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும் பொழுது, இது போதுமானதாக இல்லை. வளர்ந்த நாடுகளில், விமான நிலையங்களில் பொது இடங்களில் உள்ள கழிவறையை சுத்தமாக பராமரிப்பது என்கிற நிலையைத் தாண்டி, அவர்கள் அதை எப்போதும் புதிது போலவே தோற்றம் அளிக்கும் அளவிற்கு பராமரிக்கிறார்கள்.

நம் நாட்டில்,தாஜ்மகாலைத் தாண்டி, ஒரு சுற்றுலா பயணி அதிகம் பயன்படுத்துவது கழிவறைதான். அது அசுத்தமாக இருந்தால், நாட்டின் பிம்பமே உடைந்துவிடும்.இந்த விஷயத்தை வளர்ந்த நாடுகள் புரிந்து வைத்திருக்கின்றன.

ஒரு நாடு தங்களைக் குறித்தும், தங்கள் நாட்டினைக் குறித்தும், அவர்களின் கௌரவம் குறித்தும் எத்தனை சிந்தித்தால், மற்ற நாட்டினர் வந்து சொல்லும் இடங்களில் உள்ள கழிவறையை சுத்தமாகவும், அழகாகவும், புதிது போலவும் பராமரிப்பதில் அத்தனை சிரத்தை எடுத்துக்கொண்டு அதை குறையில்லாமல் செய்து வருவார்கள்! இது எப்படி சாத்தியமாகிறது? அவர்கள் இந்த வேலைக்கென்று தரப்படுத்தப்பட்ட நடைமுறை (Standard Procedure) உருவாக்கி, அதன்படி அந்த வேலைகள் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கி, அந்த வேலைகளை செய்யவும் நிர்வகிக்கவும் படித்தவர்களை ஈடுபடுத்துகிறார்கள். நாம் இன்னும் இந்திய அளவில் தூய்மை பணியாளர்களின் அடிப்படைத் தேவைகளையும் கோரிக்கைகளையும் கூட இன்னமும் முழுமையாகப் பூர்த்தி செய்யாமல் இருக்கின்றோம்.

நாம் இங்கே மேலே, விமான நிலையங்களில் உள்ள கழிவறைகள் இப்போது பராமரிக்கப்படுவதை விட இன்னும் மேம்பட்ட பராமரிப்பை பெற வேண்டும் என்கிறோம். அதுவே விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து பாருங்கள்; அங்கே பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் உள்ள அந்த கழிவறைகளில் அசுத்தம் நிரந்தர குடியுரிமை பெற்று வாழ்ந்துகொண்டிருக்கும்.

இங்கு கௌரவம் ஒரு பக்கம், அதைக்கூட இரண்டாம் பட்சமாக வைத்துவிடலாம். ஆனால், இந்த அசுத்தமான கழிவறைகளைத்தான் நிர்பந்தத்தின் பெயரில் சாமானிய மக்கள் பயன்படுத்த நேரிடுகிறது. இதுவே கொடுமையானது. அத்தனை அசுத்தமான கழிவறையை பெயருக்கு ஒரு நாள் ஒரு சுத்தம் செய்ய நேரிடும்; அந்த வேலையை அந்த ஒரு நாள் செய்யும் மனிதரைப்பற்றி நினைத்துப் பாருங்கள்.அது இன்னும் கொடுமையானது.தீவிரவாதிகளுக்காகவும், கொலை குற்றவாளிகளுக்காகவும் எழும் மனித உரிமை குரல்கள் இந்த இடங்களில் கேட்பதே இல்லை.

இங்கே சுத்தம் செய்யும் பணிகளுக்கென்று சரியான பொதுவான நடைமுறைகளும் வழிகாட்டுதல்களும் இருந்து, அதற்கேற்ற போதுமான ஆட்கள் நியமிக்கப்பட வேண்டும்.

பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் உள்ள கழிவறைகள் எல்லாம் மாநகராட்சியின் பொறுப்பில் இருப்பது என்று நாம் தட்டிக்கழித்துவிட முடியாது. இது தேசம் முழுமைக்கும் உள்ள பிரச்சினை. இதைச் சீர்படுத்த நாம் நாடு முழுமைக்குமான சட்ட வரைவுகளைக் கொண்டு வர வேண்டும்.

சுத்தம் பற்றிய விவாதத்தில் கழிவறை ஒரு பகுதி என்றால், பொது இடங்களின் சுத்தம் இன்னொரு பகுதி.

நாட்டின் பல பகுதிகளில், தேவையான அளவு குப்பைத் தொட்டிகள் இருப்பது இல்லை. குப்பைகளை மேலாண்மை செய்வதற்கு என்று சரியான திட்டங்கள் இல்லை. கடுமையான சட்டங்கள் இல்லை. “ஏன் இல்லை? இருக்கிறது” என்கிற வாதங்களை நாம் இங்கே ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 (Solid Waste Management Rules, 2016) மிகவும் வலிமையானது. குப்பைகளைத் தரம் பிரித்தல் (Source Segregation) கட்டாயம் என்கிறது. எதார்த்தத்தில் அது நடக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. ஒரு வேளை சில இடங்களில் உப்புக்கு பெயரளவில் நடக்கலாம்.

எங்கள் ஊரில் ஒரு நதி இருக்கிறது. நகரத்தின் மையத்தில் அந்த நதி ஓடுகிறது. அந்த நதியில், வருடம் முழுதும் நீர்வரத்து இருப்பதில்லை. அந்த நதிக்கரையில் ஒரு மாட்டுக்கறி கடை வெகுகாலமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்; அவர்கள் அந்த கறியின் கழிவுகளை நதியின் கரையை ஒட்டிய பகுதியில்தான் கொட்டுவார்கள். இவர்கள் ஏன் இதைச் செய்கிறார்கள் என்று பார்த்தால், நகரத்தின் கழிவுநீர் மொத்தத்தையும் ஆங்காங்கே மாநகராட்சியே நதியில்தான் சேர்க்கிறது. ஆக, அது யார் கண்ணுக்கும் நதியாகத் தெரிவதில்லை. மோசமான கெட்டுப்போன மாமிசக் கழிவுகளைக் கொட்டலாம், பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டலாம், சாக்கடையைக் கொட்டலாம்… யார் கேட்கப்போகிறார்கள்? அரசாங்கம் தொடங்கி கடைசி குடிமகன் வரை இந்த மனநிலையில் இருப்பதற்கு காரணம், நிர்வாகக் குறைபாடு. நாம் நம்முடைய கழிவுகளை எப்படி மேலாண்மை செய்கிறோம் என்பதில் இருக்கின்ற பெரிய குறைபாடு.

சட்டம் இருப்பதை விட, ‘அமலாக்கம்’ (Enforcement) மிக முக்கியம் இல்லையா?

ஒரு கடை இருக்கிறது, அந்த கடை எப்படி அவர்களின் வாசலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், அவர்களின் குப்பைகளை எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்று சட்டங்களை வகுத்து அவர்களைப் பின்பற்ற வைக்கலாம். சரியான முறையில் குப்பைகளை அப்புறப்படுத்தாத கடைகளையோ நிறுவனங்களையோ உடனடியாகத் தண்டிக்க நாம் சட்ட வழிவகைகளைக் கொண்டு வரலாம்.

சாலைகளை நிர்மாணிக்க தனியார் துறைகளை ஊக்குவித்து டோல் (Toll) கொண்டுவந்தது போல, நகரங்களை கழிவு மேலாண்மைக்கும் நாம் தனியார் பங்களிப்போடு, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஏற்படுத்துவது, குப்பைகளில் இருந்து உரம் தயாரிப்பது, குப்பைகளை எரித்து மின் உற்பத்தி செய்யும் நிலையங்கள் ஆகியவற்றை உருவாக்கலாம். ஒவ்வொரு வீடுகளில் இருந்தும், கடைகளில் இருந்தும் குப்பைகள் எப்படி சேகரிக்கப்பட வேண்டும், ஒவ்வொரு வீடுகளும் கடைகளும் எப்படி சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்கான ஒரு பொதுவான திட்டத்தை, வழிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும்.

சாலைகளில் டோல் (Toll) முறை போல் கழிவு மேலாண்மையில் தனியார் துறையை முழுமையாக ஈடுபடுத்துவது (Pay-for-use or Tax-based models) சேவையின் தரத்தை உயர்த்தும்.

நகர்ப்புறங்களில் வசிப்பிடங்களில் பெரிய குப்பைத் தொட்டி ஒன்றை வைத்துவிட்டு, அது நிரம்பக் காத்திருந்து, மக்கிக்கொண்டிருக்கும் குப்பைகளை மனிதர்கள் உதவியோடு அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இப்படியான இடங்களில் இருக்கின்ற பெரிய குப்பைத் தொட்டிகளைச் சுற்றி ஒரு இரண்டு மீட்டருக்கு குப்பையாகத்தான் இருக்கும். சில வசிப்பிடங்களில் அப்படிப் பெரிய தொட்டிகளும் இருப்பதில்லை. அப்படி குப்பைத் தொட்டிகள் இல்லாத இடங்களில் குறிப்பாகப் புதிதாக வீடுகள் உருவாகும் பகுதிகளில், குப்பைகள் வெற்று இடங்களில் கொட்டப்பட்டு கொண்டிருக்கிறது. இது நகரமயமாக்கலில் நாம் சரியான திட்டமிடல் இல்லாமல் கண்களை மூடிக்கொண்டு முன்னேறுவது போல இருக்கிறது. வீடுகள் வருவதற்கு முன்பே இருக்க வேண்டிய வசதிகள் அங்கே இருப்பதில்லை.

நாட்டைச் சுத்தமாக வைத்திருப்பதிலும், அழகாக வைத்திருப்பதிலும் கழிவுகளை எப்படி மேலாண்மை செய்கிறோம் என்பது மட்டும் முக்கியம் இல்லை. நாட்டை எப்படி நிர்மாணிக்கின்றோம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நாம் எப்படி இருந்தோம் என்பதைச் சொல்வதற்கு ஒரு விஷயத்தை இங்கே சொல்கிறேன். பொறியியல் படித்து முடித்த சமயத்தில், ராமேஸ்வரம் சென்று இருந்தேன். அங்கே கோவில்களில் உள்ள தூண்களைப் பார்த்து அதிசயித்துப் போனேன். காரணம், மேற்கூரையாக நிற்கும் கற்களைத் தாங்கும் அளவிற்கு தூணின் வடிவமைப்பும் தாங்குதிறனும் இருக்க வேண்டும். இதுதான் இன்று கட்டிடக்கலைத் துறையில் படிப்பாகப் படிக்கிறார்கள். மேற்கூரையைத் தாங்கும் அளவிற்கு இருக்க வேண்டிய ஒரு தூணில் ஒரு சிலையை அந்த வடிவத்திற்கு ஏற்பவும், தாங்குதிறன் குறையாமலும் எப்படி செதுக்கலாம் அல்லது என்ன மாதிரியான சிலை அந்த வடிவத்தோடும், தாங்குதிறனோடும் பொருந்தும் என்று திட்டமிட்டு தூண்களைக் கட்டியிருந்தார்கள். இப்படியிருந்த நாம் இன்று எப்படித் தேய்ந்து போய் இருக்கிறோம் என்றால், நாட்டின் கட்டுமானத்தைத் திட்டமிடும் பொழுது இது போன்ற விஷயங்களில் நாம் பெரிய கவனத்தை இதுவரை செலுத்தியதில்லை.

மழைநீர் வடிகால் இல்லாத சாலைகளை அமைக்கிறோம். மழை பெய்தால், நீர் தேங்குகிறது, அசுத்தமாகிறது; போதாக்குறைக்கு சாலையும் சேதப்படுகிறது. மனையிடங்களுக்கு அங்கீகாரம் தருகிறோம். ஆனால், அந்த இடத்திற்கு கழிவுநீர் வடிகால், மழைநீர் வடிகால், குப்பை சேகரிப்பதற்கான திட்டமிடுதல் ஏதும் இல்லாமல் தந்துவிட்டு, பின்னால் அது ஒரு அசுத்தமான பகுதியானதும் ஒரு ஒரு வசதியாகக் கொண்டு சேர்க்கிறோம்.

விமான நிலையங்களை கட்டுகிறோம், பொது கழிவறைகளை கட்டுகிறோம். இந்தத் தரை எப்படியிருந்தால் பராமரிக்கச் சரியாகி இருக்கும்? புதிது போன்ற தோற்றத்தோடு பராமரிக்கும் அளவில் நாம் அதை எப்படி நிர்மாணிக்க வேண்டும்? இது பற்றியெல்லாம் நாம் கருத்தில் கொள்வதே இல்லை. உட்புற வேலைகள் (Interior Works) எப்படி செய்யப்படுகிறது, மெருகூட்டல் பணிகள் (Finishing Works) எப்படி செய்யப்படுகிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்வதில்லை. சில இடங்களில் சில பொதுக் கட்டிடங்கள் கட்டி முடித்து முதல் நாளிலேயே பார்க்கச் சகிக்காததாக அமைந்து விடுகிறது.

தேசிய கட்டிடக் குறியீடு 2016 (National Building Code – NBC) மற்றும் RERA சட்டங்கள் மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை வலியுறுத்துகின்றன.நடைமுறையில் பழைய நகரங்களுக்கும் (Retrofitting), பஞ்சாயத்து அனுமதியுடன் கட்டப்படும் கட்டிடங்களுக்கும் இது பெரும்பாலும் மீறப்படுகிறது.உள்ளாட்சி அமைப்புகள் (Municipalities) மனைப் பிரிவுகளுக்கு (Layout approval) ஒப்புதல் அளிக்கும்போது, இந்த உள்கட்டமைப்புகள் முழுமையாக இருப்பதை உறுதி செய்வதில் பெரும் தேக்கம் உள்ளது.நகரத் திட்டமிடல்’ (Town Planning) தோல்வியே இங்கு முக்கியப் பிரச்சினை.

நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

  1. தரப்படுத்தப்பட்ட நடைமுறை (Standardization): “எப்படிச் செய்ய வேண்டும்”, “யார் கண்காணிக்க வேண்டும்” என்ற வரைமுறையை கொண்டு வருதல்

    பொதுக் கட்டடப் பணிகள் எப்படி நடைபெற வேண்டும், முடிக்கப்பட்ட வேலைகள் எப்படித் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டுதல்களைக் கொண்டு வர வேண்டும். அந்த வழிகாட்டுதல்கள் எதிர்கால விரிவாக்கம், தூய்மைப் பணிகளையும் பராமரிப்புப் பணிகளையும் எளிமையாக்குவது போன்றவைகளை கருத்தில் கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக எல்லா சாலைகளுக்கும் தெருக்களுக்கும் மழைநீர் வடிகால் இருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்குவது போன்றதாக இருக்க வேண்டும். பொது கழிப்பறைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் கூட வழிகாட்டுதல்களை நாம் உருவாக்க வேண்டும். வளர்ந்த நாடுகளில், எல்லா இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக கழிவறைகள் கட்டப்பட்டிருக்கும்.

  2. பொறுப்புடைமை (Accountability):

    கடைகள், மால்கள், பேருந்து நிலையங்கள் என்று பொதுக் கழிவறைகள் தனியாரிடம் இருந்தாலும், அரசு அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் பொதுவான மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்கள் ஃபீனால், டெட்டோல் போன்ற வஸ்துக்களின் வாடை அடிக்காத, எப்போதும் ஈரமில்லாமல் இருக்கும் சுத்தமான மருத்துவமனைத் தரைகளையும், கழிப்பறைகளையும் நமக்குத் தருகின்ற வழிகாட்டுதல்களாக இருக்க வேண்டும்.

    அனைவரையும் பொறுப்பேற்கச் செய்தல்: அரசு அமைப்போ, தனியார் அமைப்போ ஒரு இடத்தின் தூய்மையைப் பராமரிக்கும் அமைப்பு தொடங்கி, அந்த இடத்தைப் பயன்படுத்துபவர்கள் வரை அத்தனை பேரையும் அந்த இடத்தின் சுத்தத்திற்குப் பொறுப்பாக்கும் சட்ட வரைவுகளை நாம் கொண்டு வர வேண்டும்.

    தற்போது Swachh Bharat Mission (SBM) வழிகாட்டுதல்கள் உள்ளன, ஆனால் இவை ‘ஆலோசனைகள்’ (Advisory nature) அளவிலேயே உள்ளன. நமக்கு தேவை சட்டபூர்வமான SOP (statutory SOP)

  3. கழிவு மேலாண்மை ‘கிரிட்’:

    மின்சாரத் துறைக்கு ‘பவர் கிரிட்’ (Power Grid) இருப்பது போல கழிவுகளை மேலாண்மை செய்வதற்கு ஒரு ‘கிரிட்’ உருவாக்கப்பட வேண்டும். கழிவுகளை சேகரித்து உரம் தயாரிப்பது, குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிப்பது, கழிவுநீரைச் சுத்திகரித்து தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்துவது என்று அந்த கிரிட் போன்ற அமைப்பு இந்தப் பணிகளை ஒருங்கிணைத்துச் செய்ய வேண்டும். இதை நாம் தனியார் பங்களிப்போடு செய்யலாம்.

    4. பள்ளிப் பாடத்திட்டம்: ஜப்பானைப் போல, குழந்தைப் பருவம் முதலே பள்ளிகளைச் சுத்தம் செய்வது, குப்பையைப் பிரிப்பது போன்றவற்றை ஒரு பாடமாகவே மாற்ற வேண்டும். அடுத்த தலைமுறையாவது குப்பை போடாத தலைமுறையாக வளரட்டும். சட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும்; பொதுச்சொத்தை தன் சொத்தாக மதிக்கும் ‘குடிமைப் பண்பு’ (Civic Sense) பள்ளிகளிலிருந்தே தொடங்கப்பட வேண்டும்

நம் வருங்கால சந்ததிக்கு சொத்துக்களைச் சேர்த்து வைப்பதை விட, சுத்தமான காற்றையும், சுகாதாரமான பொது இடங்களையும் விட்டுச் செல்வதே உண்மையான கௌரவம்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *