மக்களவைக்கு ஒரு கடிதம்-08: கடிவாளம் இல்லாத குதிரைகள்: இன்றைய ஊடகங்கள்!

நாம் பொது வெளியில் இருக்கும் சில விஷயங்களைப் பற்றி வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பொது வெளியில் பேசத் தயங்குகிறோம். அதன் காரணமாக அந்தப் பிரச்சனைகளும் சிக்கல்களும் அப்படியே இருந்து விடுகின்றன.

என்னுடைய பதின்ம வயதில், நான் பேருந்தில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த பொழுது, அன்றைய தேர்வுக்குப் படித்துக்கொண்டே சென்றேன். ஒரு சிக்னலில் பேருந்து நின்ற பொழுது, கணப்பொழுதில் ஜன்னலுக்கு வெளியில் இருந்த ஒரு வார நாளிதழின் விளம்பரம் என் கவனத்தை ஆக்கிரமித்தது. அந்த விளம்பரத்தில் ஒரு நடிகையின் உச்சபட்ச கவர்ச்சியான ஒரு புகைப்படம் இருந்தது. அதன்பின்னர் எங்கே படித்தோம்? இத்தனைக்கும் அந்த நடிகை ஒன்றும் எனக்குப் பிடித்தமான நடிகைகள் பட்டியலில் இருந்ததில்லை.

எந்த வயதாக இருந்தாலும், ஆண்களைக் கவர்வதற்காகத்தான் அந்த கவர்ச்சியை அந்தப் பத்திரிகை விளம்பரத்திற்குப் பயன்படுத்திக்கொண்டிருந்தது. அது ஒரு திரைப்படத்தின் பாடல் காட்சியில் வரும் ஒரு பிரேம் (Frame) அவ்வளவே. திரைப்படங்களைப் பொறுத்தவரையில், தொலைக்காட்சிகள், மொபைல் போன் இல்லாத காலத்தில், ஒரு ஊரில் இருக்கும் ஆயிரம் பேரை மீண்டும் மீண்டும் படம் பார்க்க வைக்க, கூட்டத்தைக் கவர அல்லது ஈர்க்க கவர்ச்சியான காட்சிகள் தேவைப்பட்டன. யார் மறுத்தாலும், இன்றுவரை அதே வியாபார நோக்கத்துடனேதான் அந்த கவர்ச்சி பயன்படுகிறது என்பதுதான் உண்மை.

இப்படி போஸ்டர்கள் இன்னமும்கூட ஒட்டப்படுகிறதா என்பது தெரியவில்லை. ஆனால், இந்த போஸ்டர்கள் எல்லாம் குழந்தைகள் பார்க்கும் இடங்களில் ஒட்டப்பட்டுக்கொண்டுதான் இருந்தன. இது ஒரு சிக்கல். பொது வெளிகளில் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் விளம்பரப்படுத்திக்கொள்ளலாம் என்பது தவறானது.

குழந்தைகளும் பார்க்கக்கூடும் பொதுவெளிகளில் கவர்ச்சியான போஸ்டர்கள், பொய்ப் பிரச்சாரங்கள், வெறுப்புப் பிரச்சாரங்கள் என்று பொதுவெளியில் ஒட்டப்படும் அல்லது வைக்கப்படும் விளம்பர போஸ்டர்கள் அல்லது பேனர்களுக்கு என்று எந்த ஒரு வரையறையோ, கண்காணிப்போ இல்லாமல் இருக்கிறது.

இந்தியாவில் Indecent Representation of Women (Prohibition) Act, 1986 என்ற சட்டம் உள்ளது. இது பெண்களை இழிவாகச் சித்தரிப்பதைத் தடை செய்கிறது. மேலும் நெடுஞ்சாலைகளில் விளம்பரம் வைப்பதற்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கடுமையான விதிகள் உள்ளன (விபத்துகளைத் தவிர்க்க). ஆனால், களத்தில் இது சரியாகப் பின்பற்றப்படுவதில்லை என்பதே உண்மை.

அதனால், இதையெல்லாம் கண்காணிப்பதற்கென நாம் ஒரு தனி அமைப்பை உருவாக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள தடுப்புச் சுவர்களில்கூட விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இந்த விளம்பரங்கள் எல்லாம் பெரிய பெரிய கட்சிகளின் விளம்பரங்களாகவேதான் இருக்கின்றன. தடுப்புச் சுவர்களின் கருப்பு வெள்ளைக் கோடுகளை மறைக்கும் ஆபத்தான, பொறுப்பற்ற விளம்பரங்களை அரசியல்வாதிகளே செய்ய அனுமதிக்கிறார்கள்.

பெரிய அளவிலோ சிறிய அளவிலோ, எப்படியான விளம்பரமாக இருந்தாலும், அதைச் செய்வதற்கு என்று உரிமங்களையும் வழிமுறைகளையும் நாம் உருவாக்க வேண்டும். அந்த வழிகாட்டுதல்களை மீறுபவர்களின் உரிமங்களைத் தற்காலிகமாக ரத்து செய்வதோடு, பெரிய அபராதங்கள் விதிக்க வேண்டும். இது தீர்க்கப்பட வேண்டிய ஒரு சிக்கல்.

அடுத்து, இந்தக் கவர்ச்சி விளம்பரப் படங்களுக்கு வருவோம். நான் நினைப்பதுண்டு, இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள் இவர்களுக்கெல்லாம் பதிப்புரிமை, காப்புரிமை கிடைப்பது போல, நடிகைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்துகிற பொழுது அவர்களுக்கு இந்த காப்புரிமைத் தொகை கிடைக்குமா என்று. இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று கேட்டால், பிரச்சனைதான். ஒரு நடிகை கவர்ச்சியாக நடிக்கிறார் என்பதற்காக, அவர் நடித்த கவர்ச்சியான படங்களை அவர் அனுமதியில்லாமல் எங்கு வேண்டுமானாலும், எந்த விளம்பரங்களுக்கு வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும் என்கிற நிலை நியாயமானதா?

இது சட்டப்படி தவறாக இருந்தாலும் அந்தத் தவறு நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அப்படியான கவர்ச்சிப் புகைப்படங்கள், என்னையும் ஈர்க்கிறதுதான். இங்கே எல்லா ஆண்களையும் ஈர்க்கும்தான். முன்னமே சுட்டிக்காட்டியது போல சினிமா என்கிற வியாபாரத்திற்குக் கூட்டம் சேர்க்க கவர்ச்சியும் ஒரு கருவி. அதைப் புரிந்தும் தெரிந்தும்தான் அதில் நடிப்பவர்கள் அப்படி நடிக்கிறார்கள். அதுதான் எல்லை. அந்த எல்லையில் அவர்களை ரசிப்பதோடு இருப்பதுதான் நியாயமானதும் கூட. ஆனால், அவர்களின் புகைப்படங்கள் எல்லா இடங்களிலும், பல விதங்களில், பலபேரின் விளம்பரங்களுக்கு அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவது எப்படிச் சரியாகும்? இந்தச் சுதந்திரம் அவர்களின் தனிமனித கௌரவத்தைப் பெரிதும் பாதிக்கிறது என்பதை யாருமே கருத்தில் கொள்வதில்லை.

இது ஒரு விதமான சுரண்டல் இல்லையா? இதை நாம் தடுக்க வேண்டும். விளம்பர மற்றும் ஊடக வெளியீடுகளைத் தணிக்கைக்கு உட்படுத்துவது மூலம் நாம் இதைச் சரிசெய்யலாம்.

இந்தக் காரணங்களுக்காக மட்டும் நாம் இதற்கென்று ஒரு அமைப்பும் தணிக்கையும் ஏற்படுத்த வேண்டும் என்று நாம் சொல்லவில்லை.

இங்கே ஊடகம் மற்றும் விளம்பரங்கள் மூலம் பல பொய்கள் பரப்பப்படுகின்றன. அவையெல்லாம் இந்தச் சமூக முன்னேற்றத்தைத் தடுத்துக்கொண்டிருக்கின்றன. இங்கே நாம் பிரதான ஊடகங்களைத் தாண்டி, ஆயிரம் பேர் பின்தொடரும் எல்லா பொதுத் தளப் பக்கங்கள் வைத்திருப்பவர்களையும் நாம் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அல்லது அவர்கள் பொய்யான கருத்துக்களையோ, அல்லது மற்றவர்களின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் எதையும் போகிற போக்கில் பதிவு செய்து விடாமல் இருக்கும்படி, அவர்களை நெறிப்படுத்த ஒரு கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும்.

மிக முக்கியமாக, ‘அவர் இவரோடு பழக்கம் வைத்திருக்கிறார்’, ‘அவர் இவரோடு நெருக்கமாக இருக்கிறார்’ போன்ற அனாவசியமான செய்திகள் எல்லாம் ஊடகச் சுதந்திரத்தில் வராது என்று சட்டத்தின் மூலம் பறைசாற்ற வேண்டும். ஊடகச் சுதந்திரம் என்கிற பெயரில் நடிகர், நடிகைகள் அல்லது அரசியல் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நேரடியாகவோ மறைமுகமாகவோ யாரும் எந்த வகையிலும் எந்தச் செய்தியும் வெளியிட அனுமதிக்கவே கூடாது. அப்படி வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு பிரபலமான தொழில் அதிபரோ, நடிகையோ அவர்கள் திருமணம் பற்றியோ, காதல் பற்றியோ அவர்களாக மனமுவந்து பொதுவெளியில் அறிவிக்கும் வரை யாரும் பொதுவெளியில் எந்தச் செய்தியும் வெளியிடவே கூடாது என்று சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்.

கடிவாளம் இல்லாத விளம்பரம் மற்றும் ஊடகத்தைக் கொண்ட சமூகம் முன்னேறுவது மிகக் கடினமான ஒன்று. ஊடகச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் தனிமனித உரிமைகளில் தலையிடுவதையும், பொய்களைப் பரப்பும் தண்டனைக்குரிய குற்றங்களையும் எப்படி நாம் அனுமதிக்கலாம்?

ஊடகங்கள் இங்கே எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கேதான் சில நெறிமுறைகளைக் கொண்டுவர வேண்டும்.

விமான நிலையங்களில், நீதிமன்ற வாசலில் என்று சர்வ காலமும் “அவர் அதைச் சொல்லியிருக்கிறார், அது பற்றி உங்கள் கருத்து என்ன? உங்கள் கருத்து என்ன?” என்று கேட்பதற்கும், வெளியிடுவதற்கும் செய்தி அமைப்புகள் தேவையில்லையே?

இப்படியான மோசமான அணுகுமுறை, அரசியல் நிர்வாகம் சார்ந்து மக்கள் சிந்திக்க வேண்டிய சரியான பிரச்சனைகள் சார்ந்து சிந்திக்க விடாமல் மடைமாற்றுகிறது.

ஏதேனும் ஒரு பிரச்சனை நடந்தால், அரசு சார்ந்த செய்தித் தொடர்பாளரோ, துறை சார் அரசுச் செயலரோ ஊடகத்தைச் சந்தித்து விளக்கம் அளிக்கும் வரை காத்து இருப்பது இல்லை. அல்லது ஊடகங்கள் அதுவரை பொறுமை காப்பதும் இல்லை. ஒரு குற்றச் சம்பவம் நடக்கிறது என்றால், நடந்து முடித்து, காலையில் நடைப்பயிற்சியை முடித்து விட்டு வரும் அமைச்சரிடம் அது பற்றிக் கேள்வி கேட்டுச் சர்ச்சையாக்குவதற்குப் பெயர் எப்படி ஊடகச் சுதந்திரம் ஆகும்? இது பொறுப்பற்ற செயல் ஆகாதா?

ஒரு அரசியல்வாதியோ நடிகர்களோ ஏதேனும் பொதுவெளியில் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தால், அவர்களாக ஊடகங்களை அணுக வாய்ப்பு இருக்கிறது. அல்லது ஊடகங்கள் அவர்களை அணுக வேண்டுமென்றால், சரியான அனுமதி கேட்டு, நேரம் கேட்டு அவர்களைச் சந்திக்க வேண்டும். இது இரண்டும் இல்லாமல் செல்லும் இடங்களில் எல்லாம் மைக்கை நீட்டுவது சுதந்திரமாகாது. இதைச் சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தத்தான் வேண்டும். இங்கே தனிமனிதச் சுதந்திரத்திற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டாமா?

ஊடகங்கள் எல்லாவற்றிலும் கட்சிகளின் ஆதிக்கம் இருப்பதால், அரசு சார் நிர்வாகச் சிக்கல்களைச் சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை. பொய்களும் போலிச் செய்திகளும் பிரதான ஊடகங்கள் மூலமாகவே மக்களுக்குக் கடத்தப்படுகின்றன. அதில் சில நேரங்களில் பாதிக்கப்படும் பிரபலங்கள் மட்டும் வழக்கு தொடுக்கிறார்கள். ஆனால், பரப்பப்பட்ட பொய்கள் சமூகத்தில் அப்படியே தேங்கி விடுகின்றன. இங்கே நாம் ஊடகச் சுதந்திரத்தைப் பறிக்கச் சொல்லவில்லை. பொய்களைப் பரப்புவதைத் தடுக்கச் சொல்கிறோம்.

ஊடகங்கள் அரசியல் கட்சிகளால் நடத்தப்படும்போது, அங்கே “சந்தைப்போட்டி” (Competition) என்பது உண்மையை வெளிக்கொண்டு வருவதற்காக இருக்காது; அது ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவதற்கே பயன்படும். எனவே, இந்த ஊடகங்களைக் கட்டுப்படுத்த, அரசையும் தாண்டி, அரசியல் சார்பற்ற பொதுமக்களைக் கொண்ட ஒரு சுயாதீன அமைப்பு (Independent Body) அவசியம்.

அரசு இதில் தலையிட்டால், அது ஆளும் கட்சிக்குச் சாதகமாக அமையலாம். அதனால், இதற்கென்று நாம் அமைக்கும் தணிக்கை அமைப்போ, ஒழுங்கு அமைப்போ அரசின் மேற்பார்வையில் கல்லூரி மாணவர்களையும் சட்ட நிபுணர்கள் மற்றும் துறை சார் வல்லுநர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இது எதிர்காலச் சமூகத்திற்கு உண்மைகளை எப்படி ஆராய வேண்டும் என்று கற்றுத் தரும்.

பொய்யான செய்திகள் அரசியலில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. பொய்ச் செய்திகள் வெளிவந்தபின் நடவடிக்கை எடுப்பதில், அது சார் வழக்கு பல வருடம் நடப்பதிலும் ஒரு பயனும் இல்லை.

உண்மையான செய்திகளை மட்டுமேதான் ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்பதை உறுதி செய்ய நாம் ஊடக ஒழுங்கு அமைப்பை உருவாக்க வேண்டும்.

இதெல்லாம் போக, அரசு சார் விளம்பரங்கள் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதற்கும் நாம் சட்ட வழிகாட்டுதல்களைக் கொண்டு வர வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரையில், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அரசு சார் விளம்பரங்கள் ஒரு கட்சியின் பிரச்சார விளம்பரமாகவேதான் இருந்திருக்கின்றன.

அரசு சார் விளம்பரங்கள், அவசர காலத்தில் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இருக்க வேண்டுமா? சில நோய்கள் பற்றிய விழிப்புணர்வு விளம்பரமாக இருக்க வேண்டுமா? சமூகப் பொறுப்புகள் பற்றியும் சட்ட விழிப்புணர்வு பற்றியும் இருக்க வேண்டாமா?

உச்சநீதிமன்றம் (Common Cause vs Union of India வழக்கில்) அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அந்தந்த மாநில முதல்வர், ஆளுநர் மற்றும் நீதித்துறைத் தலைவர்கள் தவிர மற்ற அரசியல்வாதிகளின் படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இருப்பினும், “சாதனை விளக்கங்கள்” என்ற பெயரில் மறைமுகப் பிரச்சாரங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இங்கே முதல்வர் பிரதமர் படங்கள் பயன்படுத்துவதே அவசியமற்றதுதான் என்பது நம் கருத்து. சில திட்டங்களை மக்கள் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி விளம்பரம் இருக்கலாம். ஆனால், திட்டங்களைப் பற்றியே மிகைப்படுத்தல்தான் விளம்பரங்களாக இருக்கிறது. அதுதான் சிக்கல்.

இப்படியெல்லாம் இல்லாமல் ஆளும் கட்சிகள் அவர்களின் கட்சி விளம்பரமாக அரசு விளம்பரத் துறையைப் பயன்படுத்துவதையும் நாம் சட்டத்தின் மூலம் சீர் செய்ய வேண்டும்.

மேற்சொன்ன சிக்கலுக்கான தீர்வுகளாக நமக்குத் தேவைப்படுவது:

  1. ஊடகத்திற்கு என்று சட்ட நிபுணர்களையும் மாணவர்களையும் துறை சார் வல்லுநர்களையும் கொண்ட கடுமையான கட்டுப்பாட்டு அமைப்புகள் (Regulatory Bodies).
  2. ஊடக விளம்பரங்களுக்கென்று கண்காணிப்பு மற்றும் தணிக்கை அமைப்புகள்.
  3. ஊடகங்களைக் கண்காணித்து உடனுக்குடன் சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் தீர்ப்பாயங்கள்.
  4. ஊடகங்கள் செயல்படுவதற்கான விதிமுறைகள் அல்லது சட்ட வழிகாட்டுதல்கள்.
  5. அரசு சார் விளம்பரங்கள் பொதுப் பிரச்சனைகள் சார்ந்த விழிப்புணர்வாகவோ அல்லது அரசு உதவிகளைப் பெறுவது எப்படி என்பது தொடர்பாகவோ மட்டும்தான் இருக்க வேண்டும் என்கிற கடுமையான விதிகள்.
  6. விளம்பர ஏஜென்சிகள் ஒருவரின் படத்தை உபயோகிக்கும் முன், அவரிடம் வாங்கிய எழுத்துப்பூர்வமான ஒப்புதல் (Written Consent) நகலைச் சமர்ப்பித்த பின்னரே விளம்பரத்தை வெளியிட அனுமதி அளிக்க வேண்டும் என்ற விதிமுறையைக் கொண்டுவர வேண்டும்.

நாம் மேற்சொன்னவைகள் எல்லா டிஜிட்டல் மீடியா முதல் போஸ்டர் வரை எல்லா பொது வெளியீடுகளுக்கும் பொருந்தும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *