அன்று பணியிடத்தில், நடந்த ஒரு சிறிய சம்பவம் அவனை மிகவும் அதிகம் பாதித்திருந்தது.
பொடி டப்பா அளவில் இருக்கும் அந்த bluetooth headset இருக்கும் பெட்டியை திறந்தான், ‘pairing’ என்று ஒலித்தது. headset ஐ விரல்கள் கொண்டு எடுத்த வேகத்தில் காதில் மாட்டியிருந்தான்.
அதன் பின், அந்த விரல்கள் youtube window ஐ scroll செய்து கொண்டு இருந்தது. அவன் அந்த பாதிப்பில் இருந்து தன்னை வெளிக்கொண்டு வர முயற்சி செய்துகொண்டு இருந்தான். எதாவது பாட்டு கேக்கணும். உடனே! ஆனா என்ன பாட்டு கேட்பது என்று தெரியவில்லை.
சில பாடல்கள் ஒலித்து கொண்டு இருந்தும், அவன் மனம், அன்று பணியிடத்தில் நடந்த நிகழ்வில் இருந்து வெளிவரவில்லை.
மொத்தமாக ஒரு பத்தில் இருந்து நூறு வயலின் நரம்புகளில் இருந்து ஒரே நேரத்தில் பின்னணி இசை ஒலிக்க அந்த இசையோடு வரும் பாடல்களை அவன் அதிகம் ரசிப்பதுண்டு.
“ம்ம்! அந்த பாட்டு கேட்கலாம்!” அந்த பாடலில், ஒரே ஒரு வரி மட்டுமே அவன் மனதில் எப்போதும் ஒட்டிக்கொண்டு இருக்கும்; இப்போதும் அது ஒட்டிக்கொண்டு இருக்கின்றது.
பாடல் ஒலிக்க ஆரம்பித்தது, அவன் மனம் இப்போது பாடலில் லயிக்கவில்லை. அன்று நடந்த பிரச்சன்னைப்பற்றியும் யோசிக்கவில்லை.
அவன் மனம் முழுதும் அந்த ஒரு வரி மட்டுமே தான் ஆக்கிரமித்து இருந்தது.
“மேகம் போலே என் வானில் வந்தவளே!”
அந்த பாடலில், அதற்கு அடுத்து என்ன வரி என்பதும் கூட அவனுக்கு தெரியாது.
காருக்குள் இருந்த படி அவனும் காருக்கு வெளியில் சூரியனும் மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தார்கள்.
அன்று காலையில் அவன் அவளுக்கு அனுப்பிய, ‘Good Night’ பற்றி அவன் சிந்திக்க தொடங்கிவிட்டான்.
sentimentally அந்த ‘Good night’ ஐ அவளுக்கு அனுப்புவதில் அவனுக்கு எப்போதும் ஒரு தயக்கம் இருக்கவே செய்தது.காரணம்,கல்லூரி காலத்தில் விடுமுறையின் போது மட்டுமே அவளுடன் பேச முடியும் என்கிற சூழலில்; ஒரு 5 நாள் சேர்ந்தாற் போல ஒரு விடுமுறை கிடைத்திருந்தது. அவளிடம் ஒவ்வொரு முறையும் பேச வேண்டும் என்பதே அவனுக்கு ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பை தருகிற விஷயம். அதுவே அவனுக்கு பெரிய கனவு மாதிரி.இந்த 5 நாள் விடுமுறை அவனுக்கு பல எதிர்பார்ப்புகளை தந்தது.
படித்து முடிப்பதற்கு முன்னதாகவே அவளுக்கு வேலை கிடைத்து இருந்தது. அதற்காக அந்த ஐந்து நாளும் எங்கெங்கோ கோவில்களுக்கு செல்வதாக அவள் வீட்டில் திட்டமிட்டிருப்பதாக சொன்னாள். ஐந்து நாளும் நிச்சயம் அவள் பேச போவதில்லை.
ஐந்தாவது நாள் மாலை, ‘Halo’ என்று ஒரு message இவன் பக்கம் இருந்து பறக்கிறது. ஹலோ என்பதை அவள் ‘Halo’ என்று அனுப்பியது முதல் அவனுக்கு ‘Hello’ வை விட ‘Halo’ தான் பிடித்திருந்தது .
‘just came home’ என்று ஒரு Message வந்தது.
அவன் மனதுக்குள் பேச வேண்டும் என்கிற ஆசை. ஆனாலும் அதே அவன் மனது, “சரி! சரி! களைப்பா தானே இருக்கும்!”என்று சொல்ல ‘take your time, refresh, take some rest’ என்று message அனுப்பிவிட்டு, அந்த போனை கையிலேயே வைத்துக்கொண்டு இருந்தான்.
கொஞ்ச நேரம் கழித்து அவளாக message அனுப்புவாள் என்கிற எண்ணம். அவனால் அதற்கு மேல் பொறுமை காக்க முடியவில்லை, வேகமாக போனை unlock செய்து, நான்கை ஐந்து முறை அழுத்தி (44444) ‘send’ button ஐ தட்ட ‘your message to shara delivered’ என்கிற flash message வந்த மாத்திரத்தில், அவளிடம் இருந்து ‘Good Night’ என்கிற message வந்தது.
பேச்சை தொடங்க அவன் ‘Hi’ அனுப்ப வாசலில் வந்து ஒருத்தர் நிற்கும் பொழுது ‘பட்’ என்று கதவை அடைத்து சாத்துவது போல், வந்த அந்த ‘Good Night’ அவனுக்கு பெரிய அதிர்ச்சியை தந்தது.அந்த அதிர்ச்சியில் இருந்து அவன் சில நாட்கள் வரை மீளவில்லை.
அதன் பின் அவள் அவனிடம் பேசவே இல்லை. “அந்த ஐந்து நாளில் என்ன நடந்திருக்கும்? அவன் என்ன தப்பு பண்ணான்; பேசக்கூடாத அளவு என்ன நடந்துச்சு” இதெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்கும் ஆசையாய் இருக்கிறது! இல்லை!
அவனுக்கும் ஆசையாய் மட்டுமே தான் இருக்கிறது.இன்று வரை அவன் அதை தெரிந்துகொள்ளவேயில்லை.
அவனுக்கு ஒரு வகையில் அவள் நிலா மாதிரி, அவனை விட தூரமாக உயரத்தில் இருக்கும் நிலா! அந்த நிலவில் இருந்து வந்த வெளிச்சம் மட்டும் தான் அவனுக்கு தெரியும். அந்த நிலவில் என்ன இருக்கிறது. அந்த நிலாவின் மறுபக்கத்தில் என்ன இருக்கும்? விஞ்ஞானிகளுக்கே இன்னும் புலப்படாத விஷயம் அவனுக்கு எப்படி தெரியும்? None of us know what is at other side of the moon. But we adore the moon.
அதே அந்த நிலவு தான் அவன் வானின் மேகம் போல. அந்த மேகத்திற்கு காலையில் அவன் அனுப்பிய ‘Good Night’ பற்றித் தான் அவன் யோசித்து கொண்டு இருந்தான்.
பூமி பந்தில் அவன் நின்று கொண்டிருந்த தீர்க்கரேகையில் (longitude) இருந்து 91 டிகிரி தள்ளி இருக்கும் தீர்க்கரேகையில் அவள் உறங்கிக்கொண்டு இருந்தாள். அவள் அந்த இடத்தை அடைந்தது முதல், அவனுக்கு நேரம் கிடைத்த பொழுதெல்லாம் இப்ப அங்க என்ன நேரம் என்று ‘Google’ ஐ கேட்பது அவன் வழக்கமாகி போனது. அவள் அங்கே சென்ற பின் அவளுக்கு அனுப்பிய message கள் deliver ஆக தாமதாகவும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நேரம் பார்த்துக்கொண்டு இருந்தான். Like scientist he is always curious to know about the moon. And for him she is the Moon. “வீட்டுக்கு வந்துவிட்டாளா ? அங்கு என்ன சாப்பிட்டா?”
இன்னும் இரண்டு மணி நேரத்தில் அவன் எழுந்து வேலைக்கு கிளம்ப வேண்டும். ஒரு வழியாக message deliver ஆனது. அவள் reply செய்த பொழுது கிட்டத்தட்ட இவன் பக்கம் விடிந்து விட்டது.
‘இனி தூங்க போகும் பொழுது எனக்கு ஒரு, ‘Good Morning அனுப்பு ‘ என்று இவன் சொன்ன மாத்திரத்தில் ஒரு ‘Good Morning’ வந்தது.
முன்பு அவள் அனுப்பியிருந்த, ‘Good Night’ message க்கு கொஞ்சமும் மாறுபட்டதில்லை இந்த ‘Good Morning’.இரண்டும் பேச்சை முடித்துக்கொள்ள அனுப்பப்பட்டது.
ஆனாலும், வந்த அந்த ‘Good Morning’ அவனை பரவசப்படுத்தாமல் இல்லை.
கிளம்பி வெளியே வந்து எப்போதும் போல் அந்த மரங்களைப் பார்க்கிறான், வானத்தைப் பார்க்கிறான், மேற்கே நகர்ந்து கொண்டிருக்கும் நிலவைப் பார்க்கிறான். தினமும் அவன் இதையெல்லாம் பார்க்கும் பொழுது ஒரு பக்தி இருக்கும், அந்த மரம் வானம் நிலா எல்லாம் அவனுக்கு கடவுள். ஆனால், அன்று அந்த பக்தி இல்லை ; அன்று அவை எல்லாம் அவனுடைய அந்த பரவசநிலையை கவிதைகளாக்க கிடைத்த leadகள் .நடந்து செல்லும் பொழுது அவன் மனதில் கவிதைகள் கொட்டிக்கொண்டு இருந்தது.
‘கூடு திரும்பும் நிலா ஒன்று
‘குட் மார்னிங்’ சொல்ல
விடிந்தது என் பக்கமாய்’
மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலா அவனுக்கு ‘Good morning’ சொன்னால் எப்படி இருக்கும்! தமிழ் நாட்டுக்கு விடிஞ்சுச்சுச்சோ இல்லையோ “*&*&*& எனக்கு இன்னிக்கு விடிஞ்சுருச்சு டா” என்கிற உணர்வு.(நிலா was at work ,when he was sleeping).
நிலவும் சூரியனும் போல் பூமி பந்தின் ஒரு மூலையில் இவனும் எதிர்மூலையில் அவளும் இருக்க இவர்களின் அந்த உரையாடலோடு அந்த நாள் தொடங்கியது.
ஒரு பக்கம் ஞாயிறு
எதிர்ப்பக்கம் நிலா
இந்த சந்திப்பில்
பிறந்தது என் நாள்
“பேச தொடங்கும் பொழுதே அத்தனை மகிழ்ச்சியோடு தானே நாம் பேச தொடங்குகிறோம் ஆனால், வெறுப்பும் இல்லாமல் கோபமும் இல்லாமல் எப்போதும் போல் ஒதுக்குகிறாள், பேச கூட கூடாதா?” என்கிற எண்ணம் அவனுக்கு. அடுத்த கவிதை வந்து விழுகிறது.
“சிரித்துக்கொண்டே தான் வருகிறான் ஒரு சூரியன்
முறைக்காமல் ஒளிந்து கொள்கிறது நிலவு”
காலையில் எத்தனை தன்மையாய் இருக்கிறது இந்த சூரியன். ஆனால், அந்த சூரியன் வந்த மாத்திரத்தில் ஒளிந்து கொள்கிறது நிலா. அந்த கவிதையில் மறைந்து என்கிற வார்த்தை வர வேண்டாம் என்று அவன் மனம் சொல்கிறது.நிலவிடம் பேசுவதற்காகவே அத்தனை தன்மையாய் வருமோ இந்த சூரியன்!
கல்லூரி காலத்தில்,அவள் இந்த பக்கமாக தான், கல்லூரிக்கு செல்வாள் என்று நினைத்துக்கொண்டு அதற்கு எதிர்ப்பக்கம் நின்று அவளை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தான். இப்படியாகவே அவர்கள் வாழ்க்கையில் இவனை ஒரு முனையில் வைத்து அவளை மறுமுனையிலேயே வைத்திருந்தது விதி.There can be no nodes of parallel and opposite lanes.
கிழக்கே சூரியன்
மேற்கில் நிலா
மேற்கில் சூரியன்
கிழக்கில் நிலா
விதி!
அது எழுதாமல் விட்ட கதை
என் கவிதைகள் சொன்ன கதை
சூரியன் கிழக்கில் இருந்தால் இந்த நிலா மேற்கில் இருக்கிறது, அவன் மேற்கில் இருக்கும் பொழுது நிலா கிழக்கே வந்துவிடுகிறது.விருப்பும் இல்லை வெறுப்பும் இல்லை. சூரியனுக்கும் நிலவிற்கும் இடையில் காதலும் இல்லை நட்பும் இல்லை. இது ஒரு விதி. இது இப்படித்தான் இருக்கும்.
நடந்து , train எடுத்து, office car ஏறி நடக்கும் பொழுது தோன்றிய கவிதைகளை எழுதி வைத்துக்கொண்டு, வேலைக்கும் வந்து சேர்ந்து விட்டான், clock-in machine இல் அவன் கை ரேகை வைத்த பொழுது மணி 07:54, எட்டு மணி ஆக போகிறது, அவள் பக்கம் ஒரு மணி தான் ஆகிறது.
இந்த கடிகாரத்தில், ஒரு முனையில் இருக்கும் இந்த ஒன்றும் (1) மறுமுனையில் இருக்கும் இந்த எட்டும்(8) என்ன நடந்தாலும் எந்த வகையிலும் சேர்ந்திருந்திருக்காது தானே! “it would never have worked between us darling” அவனுக்கு பிடிச்ச “Pirates of Caribbean ” திரைப்படத்தில் வரும் காட்சியில் வரும் வசனம் அவன் நினைவிற்கு வருகிறது.
“நமக்குள் காதல் என்கிற ஒன்று சாத்தியப்பட்டு இருக்காது. ஆனால், ஒரு நல்ல நட்பு வளர்ந்திருக்கலாம். ஆனால் அதுவும் கூட சாத்தியப்படாமல் போய்விட்டது ” என்று அவன் மனதில் நினைத்தது அவளுக்கு கேட்டு இருக்குமா தெரியாது. அதனால் ஒரு கவிதை எழுதினான்.
சின்ன முள்ளும்
பெரிய முள்ளும்
பாலாமாய் நின்றும்
தூராமாகவே நின்றது
‘அ’ன்றும் ஒன்றும்
என்றும் இணைவதில்லை
காலத்தில் முன்னும் பின்னும்
தமிழில் ‘அ’ என்றால் எட்டு. என்ன நடந்திருந்தாலும், “It would never have worked between us”
“அப்பறம் ஏன் பேசனும்? ” அவனை அவனே கேட்டுக்கொண்டான்.
அவன் மனம் சொன்னது, “from the beginning, until today தப்பான எந்த எண்ணமும் இல்லை. பேசுறதே எனக்கு சந்தோசமா இருக்கு! தப்பா ஒரு எண்ணம் அங்க இருந்தா நிச்சயமா இந்த சந்தோசம் இருக்காது. நான் எதுவும் தப்பும் பண்ணலை தப்பா பேசவும் இல்லை, இதெல்லாம் விட, பேசாமல் இருந்த காலத்தில மறுபடி பேசனும்னு தேடிட்டு இருந்த என்னால பேசாம இருக்க முடியல மறுபடி ஒரு stranger ஆக கூடாது ன்னு ஒரு பயம் இருக்கு”
கொஞ்ச நாள் அவள் பேசாமல் இருந்துவிட்டால் அல்லது இவனே பேசாமல் இருந்துவிடலாம் என்று இருந்துவிட்டால் அவனுக்கு இந்த சிந்தனைகளெல்லாம் வந்துவிடும். அன்றும் அந்த பாட்டு கேட்டு கொண்டிருந்த பொழுது இந்த எண்ணங்களெல்லாம் அலை மோதியது.
அன்று அந்த ‘good morning’ க்கு பிறகு அவள் ஒன்றும் பேசவில்லை. தூங்க செல்லும் முன் அவனுக்கு ஒரு குட் monring அனுப்ப சொன்னதை நினைவுப்படுத்தவே, sentiment பயங்களை தாண்டி good night அனுப்பியிருந்தான். அதற்கும் அவள் எந்த பதிலும் அனுப்பவில்லை.
வண்டியை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தான் பாட்டு நின்று விட்டது. head set ஐ கழட்டவில்லை.
“மேகம் போலே என் வானில் வந்தவளே !” இப்போது headset இல் இருந்து இல்லை அவன் மனதின் ஒரு மூலையில் இருந்து இந்த வரி ஒலித்து கொண்டு இருந்தது.
அது ஒரு வித்தியாசாமான உணர்வு! ஏக்கம் ஆச்சரியம் சந்தோசம் எல்லாம் கலந்த உணர்வு.
நீங்கள் உங்கள் வானில் ஒரு மேகத்தை காண்பீர்கள் அது உங்களை பரவசப்படுத்தலாம். அதை கண்டு நீங்கள் மகிழ்வீர்கள். அதற்காக அந்த மேகம் நீங்கள் பார்க்கும் உங்கள் வானில் அப்படியே இருந்துவிட போவதில்லை. தூரமாகவே இருக்கும் அந்த மேகம் எப்போது உங்கள் வானை கடக்கும் என்பதை நீங்களும் தீர்மானம் செய்யமுடியாது; அந்த மேகமும் தீர்மானம் செய்ய முடியாது. காலமும் காற்றும் தான் தீர்மானம் செய்யும்.
அவன் வாழ்க்கையில்; அவன் வானில்; அவள் ஒரு மேகம்! அவன் எதிர்பார்க்காத நேரங்களில் அவனிடம் பேசிவிடுவாள்; அவன் எதிர்பார்த்து காத்து இருந்தாலும் சமயங்களில் பேசமாட்டாள். பள்ளிக்காலத்தில் கொஞ்ச காலம்; பின் கல்லூரி காலத்தில் கொஞ்ச காலம்; என்று அவ்வப்போது தூரமாய் அவன் பார்வையை கடக்கும் மேகம் அவள். இப்போதும் அவன் தேடும் மேகமாய் அவள்.
நல்ல வரி! இல்லை! மேகம் போலே என் வானில் வந்தவளே! பாட்டும் நல்ல பாட்டு என்ன பாட்டு என்று தேடி கண்டுபிடிச்சு கேளுங்க