வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும்!

அது ஒரு பிப்ரவரி மாதம்; வெளியூரில் படித்துக்கொண்டு இருந்த நான், ஒரு சனி ஞாயிறு விடுமுறையில் வீட்டிற்கு சென்று இருந்தேன். எல்லா வார விடுமுறைகளிலும் ஊருக்கு செல்லும் வழக்கம் இல்லை.

 

அந்த வாரத்தில், ஒரு வேலையாக விமலுடன் வெளியில் சென்று இருந்த பொழுது, விமல் போனை வாங்கி ஒரு call பண்ணேன்.

 

Junction வரை தான் அந்த call ஐ பேச முடியும்.அதற்கு பின், அவனும் நானும் வேறு வேறு வழியில் செல்ல வேண்டும்.

 

“இந்த வாரம் நான் ஊருக்கு வரேன்! நம்ம meet பண்ணலாம்” என்று அந்த call பேசும் பொழுது தீர்மானம் ஆனது தான், அந்த வார இறுதியில் ஊருக்கு செல்ல வேண்டும் என்கிற முடிவு.

 

call பேசி முடித்தவுடன், விமல் என்னை ஆச்சரியமாக பார்த்தான். காரணம்,அந்த call  பேசிக்கொண்டு வந்த பொழுது,நான் ஒரு பேருந்தில் இருக்கின்றேன் என்பதையும் மறந்து பேசிக்கொண்டு இருந்தேன்.

“என்ன டா இப்படி இருக்க? bus ல இருக்கோம்ன்னு மறந்துட்டு” என்று விமல் சொல்லிக்கொண்டு இருந்த பொழுதும் கூட நான் அந்த call பேசிய தருணத்தை நினைத்துக்கொண்டு இருந்தேனே தவிர வேறு எதையும் சட்டை செய்யவில்லை.

 

அன்று விமலுக்கு ஒரு பயம் கூட இருந்தது,”சும்மா போன் ல பேசுறதுக்கு இவ்வளவு excite  ஆகுறான்” என்று.

 

சனிக்கிழமை முழுதும், அவளுக்கு வேறு ஒரு வேலை இருந்தது.Message க்கு கூட மாலை, ஒரு எட்டு மணிக்கு மேல் தான் reply வந்தது.

 

‘அம்மா போன் ல காசு இல்லை’ அன்று முழுதும், போனை கையில்  வைத்துக் காத்துகொண்டு இருந்த நான், அப்பா போனை எடுத்து, call பண்ணேன்.

 

நான் ‘ஹலோ!’சொன்னேன்

 

அவள் hellooooo  ………… என்றாள் .

 

நானும் helloooooo  ……. என்றேன். அவள் மீண்டும் hellooo….. என்று இராகம் பாடினாள்.

 

அந்த விளையாட்டை நானும் இரசித்தேன். ஆனாலும்  நான் சிரித்துக்கொண்டே சொன்னேன், “Hello சொல்லி விளையாட காசு இல்லை” என்று.

“சரி வை நான் call பண்றேன்” என்றவள் landline  இல் இருந்து எனக்கு call செய்தாள்.

 

அவள் எண்ணில் இருந்து எனக்கு வந்த ஒன்றிரண்டு call களில் அது தான் முதல் call.

 

“meet  பண்ணலாம்” என்று நான் சொல்லியிருந்ததை அவள் பெரிதாக எடுத்துக்கொண்டிருக்கவில்லை.

 

அந்த callஇல் விளையாட்டாகவே சொன்னேன், ‘ஊருக்கு வந்ததே meet பண்ண தான்’ எ

 

இருவரிடமும் ஒரு திட்டமும் இல்லை.

‘எப்போ?’ ‘எங்க’ இதை பேசுவதற்காக தான் அவளுக்கு call செய்தேன்.

ஆனால், எதெல்லாம் சாத்தியமில்லையோ அதையெல்லாம் நாங்கள் பேசிக்கொண்டு இருந்தோம்.

 

“என்கிட்ட cycle? இல்ல வண்டி  இருந்து இருந்தா கூட சல் ன்னு வந்துருவேன்” என்றாள்.

 

“என்கிட்ட வண்டியும் இல்லை இருந்தாலும் ஓட்ட தெரியாது” என்றேன்.😃😃அதற்கு என்னை நக்கல் அடிக்கவும் செய்தாள்.

இப்படியே அந்த உரையாடல் தொடர்ந்து கொண்டு இருந்தது.

“போன் பில் வரப்ப யாருக்கு இவ்வளவு நேரம் பேசின ன்னு கேக்க மாட்டாங்களா” என்றதற்கு, “அது வரும்” என்று அலட்சியமாக ஒரு பதில் தந்தாள்.

நாங்கள் என்றுமே நெருங்கிய நண்பர்களாகவோ காதலர்களாகவோ இஇருந்ததில்லை.we are not lovers and never been thick friends. இப்போது 2k kids கள் வகைப்படுத்தி வைத்திருக்கும் bestie ரகமும் இல்லை.

 

இப்படி எந்த வரையறைக்குள்ளும் இல்லாத  இரண்டு பேர் பேசிக்கொண்ட கொஞ்சம் நீளமான உரையாடல் அது.

 

ஆம்! ஒரு மணி நேரத்திற்கும் குறைவான அந்த உரையாடல் தான் எங்களின் நீளமான உரையாடல். அத்தனை நேரம் பேசியும் எங்கு எப்போது சந்திப்பது என்கிற முடிவுக்கு நாங்கள் வரவேயில்லை.

நேரமானதால் அந்த call ஐ முடித்துக்கொள்ளும் பேச்சை நான் தான் எடுத்தேன். நாங்கள் வளர்க்கப்பட்ட பொழுது எங்களுள் எழுதப்பட்ட ப்ரோகிராம் இல்  09:30 மணிக்கு மேல் “போன் பேசுவது எல்லாம் தப்பு” என்று எழுதப்பட்டு இருந்தது.

அதிலும் எனக்கு முக்கியமாக அவளை யாரும் தப்பு சொல்லிவிடக்கூடாது என்கிற எண்ணம்.

அன்று நான் பேச்சை முடிக்காமல் இருந்திருந்தால் எத்தனை நேரம் அந்த உரையாடல் நீண்டு இருக்கும் என்று தெரியவில்லை.

ஞாயிற்றுக்கிழமை மதியம். அம்மா phoneக்கு ஒரு message  வந்தது.

 

மூன்றிலிருந்து நான்கு வருடம் இருக்கும். அத்தனை வருடம் கழித்து நாங்கள் சந்தித்துக் கொள்ள போகும் அந்த தருணத்தைத் தேடி வாசலுக்கு சென்றேன். நான் இருந்த முதல் மாடியில் இருந்து நான் கீழ் இறங்கவில்லை. கீழே இருந்த அந்த பெரிய வாசலின் ஒரு பக்கம் இருந்து அவள் வெளிப்பட்டாள்.

 

அந்த மாடிபடிக்கட்டில் மேலே நின்று கொண்டு வாசலை பார்த்துக்கொண்டு இருப்பவனை தான் நாம் பார்க்க வந்தோம் என்பது  அவளுக்கு புலப்பட சில நொடிகள் ஆனது.

 

வீட்டில் நாங்கள் இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை, அவளுடைய express music  நோக்கியா போன் இல் இருந்த அவள் தோழியை எனக்கு அறிமுகம் செய்தாள்.

 

நானும் ஊருக்கு கிளம்பினேன்.

 

நான் ஊருக்கு செல்லும் பொழுது என்னுடன் ஒன்றாக வந்து project  centre செல்லலாம் என்று அவளாக ஒரு முடிவுடன் வந்து இருக்கினறாள்.

 

இருவரும் ஒன்றாக நடந்து செல்லும் பொழுது  கேட்டாள்,

“எப்பவும் வேகமா தான் நடப்பியா?”(இப்போதெல்லாம் அத்தனை வேகமாக நடப்பதில்லை)

 

“இல்லை இன்னிக்கு கூட நடக்கிறதால கொஞ்சம் மெதுவா தான் நடக்கிறேன்” என்றேன்.

 

பேருந்து நிறுத்தத்தில் அவள் தோழிக்காக காத்து இருந்தோம்.

” எங்கையோ பார்த்த மாதிரி…. அப்ப நீ வெள்ளையா… ” என்றாள். ( மாடிப்படியில் நான் நின்றிருந்த போது அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை என்று அப்போது தான் புரிந்தது).

இரண்டு பேர் இடையில் நிற்கும் அளவு இடைவெளியில் இருவரும் நின்று கொண்டு இருந்த பொழுது .இந்த வானத்தில் நான் எங்கு பறந்து கொண்டு இருக்கின்றேன் என்று பார்த்துக்கொண்டு இருந்தேன். சட்டென்று என் வலது கையை ஒரு விரல் தீண்டியது.

அவள் தோழியை அறிமுகம் செய்தாள். வந்த தோழி அவள் காதில் ஏதோ முணுமுணுக்க; “நம் இருவரையும் சேர்த்து கிண்டல் பண்ணுது”என்றாள் இது தான் அவள் அன்று என்னிடம் கடைசியாக பேசிய வார்த்தைகள்.

அதற்கு நானும் கூட எந்த பதிலும் சொல்லாமல் வானத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டேன்.

இதற்கு மேல் நாங்கள் அன்று பெரிதாக பேசிக்கொள்ளவும் இல்லை.

அன்று வந்த அத்தனை பேருந்துகளும் கூட்டமாகவே வந்தது. அவர்கள் பேருந்தின் முன் படிகட்டில் ஏறினார்கள்.நான் எப்போதும் போல் அன்றும்  பேருந்தின் பின் படிக்கட்டில் ஏறினேன்.யார் எங்கே நிற்கிறோம் என்று பார்த்துக்கொள்ள முடியாத அளவு கூட்டம். அவள் கையில் கட்டியிருந்த கயிறு மட்டும் எனக்கு தெரிந்தது.

 

அன்று பெரிதாக நாங்கள் பேசிக்கொள்ளவும் இல்லை. பார்த்துக்கொள்ளவும் இல்லை.அப்படியான இந்த சந்திப்பு(meeting) முடிவதற்கு இன்னும் இரண்டு நிறுத்தங்கள்(bus Stop) தான் இருக்கின்றது. என்னுடைய bus  stop க்கு முன்னமே அவர்கள் இறங்க வேண்டும்.

ஒரு விசில் சத்தம். அவர்கள் இறங்கியும் விட்டார்கள்.

நானும் கூட இறங்கியிருந்திருக்கலாம். மறுநாள் ஒருநாள் college க்கு  leave போட்டு இருக்கலாம்.

இப்படியான கடந்த கால கலாம் கனவுகளில் தான் நம்மில் பலரும் காலம் கடத்துகிறோம்.

 

அந்த நிறுத்தத்தில் இறங்கிய நான்கு கண்களில் இரண்டு கண்கள் பேருந்தின் பின் வரிசை பக்கமாக திரும்பி கூட்டத்தில் யாரையும்  தேடுகிறதா? என்று தேடினேன்

 

அந்த கண்கள் திரும்பவும் இல்லை தேடவும் இல்லை.

அந்த கண்கள் பேருந்துகடந்த பின் சாலையை கடக்க காத்து கொண்டு இருந்தது போல் இருந்தது.

இரண்டு விசில் சத்தம். நின்று அவர்களை இறக்கிவிட்ட பேருந்தும் கிளம்பிவிட்டது.

பேருந்து கொஞ்சமாக நகர்ந்தது; பேருந்து இருக்கைகளின்   ஒவ்வொரும் வரிசையும்  அவளை கடந்து கொண்டு இருந்தது. கடைசி வரிசைக்கு முன்னாள்  நான் நின்று கொண்டு இருக்கின்றேன்.

 

அத்தனை நொடிகளும் அவள் கண்களை நான் கடக்கும் நொடிக்காகவே காத்திருந்தவள் போல், தலை திருப்பாமல்; கண் அசைக்காமல்; கொஞ்சமாக அவள் கருவிழிகளை மேல் உயர்த்தி; ஒரு கையில் அவள் தோழியின் வலது கையை பற்றிக்கொண்டு; மறு கையை கொஞ்சமும் உயர்த்தாமல்,அவளின் உள்ளங்கை தரையை பார்க்கும் படி விரித்து.கண் இமைக்கும் அளவில் மட்டுமே அதை அசைத்து; வாய் திறக்காமல்; கண்களை அசைக்காமல் ஒரு ‘bye’ சொன்னாள்.  அதன் பின், அவள் ஒரு bye கூட சொல்லவில்லை.

 

நாங்கள் நெருங்கிய நண்பர்களும் இல்லை. காதலர்களும் இல்லை. அதனால் எங்களுக்குள் எந்த சண்டையும் ஏற்படவில்லை; எங்களுக்குள் எந்த வெறுப்பும் இல்லை. இந்த இரண்டும் இல்லாமலேயே எங்கள் தொடர்பு (contact) அறுந்து போனது.

 

அந்த சந்திப்பிற்கு பின், விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் பொழுதெல்லாம் அவ்வப்பொழுது SMS வழியாக பேசிக்கொள்வோம். அப்படி ஒரு விடுமுறையில் நான்,’HI’ என்று message  அனுப்ப அவள் சட்டு என்று good night என்று அனுப்பினாள். அது தான் அவள் அனுப்பிய கடைசி smsக்கு முந்தைய sms.

 

சில மாதங்கள் போனது, “your message to Shara not delivered ” என்று airtel இல் இருந்து ஒரு delivery report வந்தது. அன்று வரை நானும் sms களை மட்டுமே அனுப்பிக்கொண்டு இருந்தேன்.

அந்த reportஐ பார்த்த மாத்திரத்தில் call பண்ணேன். Ring ஆகவில்லை.

 

மீண்டும் எப்படி பேசுவது?  I was not so expressive to her. அவளிடம் உண்மைகளை என்னால் பேச முடிந்ததே இல்லை.அதே சமயம் நான் பொய் பேசியதும் இல்லை.

 

பள்ளி செல்லும் காலங்களில் அவள் வீடு திரும்பும் வழியில் செல்ல வேண்டும் என்று அவள் பள்ளியில் இருந்து அவள் வீட்டிற்கு பக்கமாக இருக்கும் வழியில் செல்வேன். அவளோ தோழியுடன் நடந்து செல்ல தூரமான வழியை தேர்வு செய்து இருந்தாள். எனக்கு அது மிக தாமதாகவே தெரிந்தது. முன்னமே இதை அவளிடமே கேட்டு இருக்கலாம்,ஆனாலும் நான் கேட்கவில்லை.

இப்படி நாங்கள் பேசிக்கொண்டு இருந்த காலங்களிலேயே அவளிடம் நான் சரியாக பேசியதில்லை. இப்பொழுது contact  யே இல்லை என்று ஆகிவிட்டது.

 

ஒரு நாள், அவளை சந்திக்க வேண்டும். அவளிடம் எல்லா கதைகளையும் சொல்ல வேண்டும். ஆனாலும் எதையும் சொல்லவில்லை.

எதையும் சொல்லாமல் இருந்ததற்கு காரணமேஅவள் பேசாமல் இருந்துவிடுவாளோ என்கிற எண்ணம் மேலோங்கி இருந்தது தான்.

 

ஆனாலும், அவளிடம் சொல்ல வேண்டும்.

 

“காரணம் எல்லாம் தெரியவில்லை. நீ என்று மாத்திரத்திலேயே நான் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்று விடுகிறேன்” என்று அவளிடம் சொல்ல வேண்டும்.

 

facebook இல் அவளைத் தேடி கண்டுபிடித்த பின்னரும் கூட எதையும் சொல்லவில்லை. அவளிடம் சொல்ல நினைத்த அத்தனையும் என் கவிதைகளாகவும் கதைகளாகவும் ஆனது. நான் அவளை கடந்து சென்ற பொழுது, தலை திருப்பாமல் கண் அசைக்காமல், அவள் எனக்கு ‘bye’ சொன்ன தருணங்களை அசைபோட்ட பொழுது வந்த வரிகள் தான்,

 

“நீ திரும்பிப் பார்த்திருக்க வேண்டியதில்லை

நீ பார்த்துக் கொண்டிருந்த திசையில் நான் கடந்ததுண்டு”

 

நீ திரும்பிப் பார்த்திருக்க வேண்டியதில்லை

நீ பார்த்துக் கொண்டிருந்த திசையில் நான் கடந்ததுண்டு

 

நிச்சயமாக தெரியாது! ‘ நீ இருப்பாயா’ என்று

உன்னை தேடியே சென்று வந்தேன்

கோவில்களுக்கும் திருவிழாக்களுக்கும்

 

பள்ளி முடிந்து வீடு செல்ல

பத்து வழிகள் கண்டு இருந்தேன்

ஒரு நாள்

ஒரு வழியில்

நீ எதிர்ப்பட்டு விட்டாலும் கூட

எனை மறந்து சிரித்துக்கொண்டேன்!

 

நீயாக என் வீடு வந்த தருணங்களில்

நானாக இல்லாமல்

காற்றோடு கலந்து இருந்தேன்

கால வெளிகளை கடந்து!

உனை காணும் நேரங்களில்

வீடு கொண்டு செல்ல நினைப்பேன்

நானும் வீடும் வளர்ந்திருக்கவில்லை

கோவில் கடைகள் தந்த இடத்தை பொம்மை உனக்கு தர

 

சிறு வயதில் எங்கேயாவது வெளியில் அழைத்துச்செல்ல சொல்லிக்கேட்டால், “வெளியில் அழைத்துச் சென்றால் எதுவும் கேட்டக்கூடாது” என்று அம்மா அதட்டுவார்.

 

நானும் என் தங்கையும் மீனாட்சி கோவிலுக்கு கூட்டி செல்லுங்கள் என்று கேட்போம். கோவிலுக்கு தானே கூட்டிட்டு போக சொல்கிறோம் என்று அடம்பிடிப்போம்.

மீனாட்சி மீது பெரிய பாசமோ பக்தியோ கிடையாது. அந்த கோவில் கடைகளில் தான் பொம்மைகளும் விளையாட்டு பொருட்களும் வைத்து இருப்பார்கள். இப்படி ஒரு குழந்தை,பொம்மையை எப்படி தேடும்? அப்படித் தான் அவளைத் தேடிக்கொண்டு இருந்தேன்.

 

திருவிழாவிற்கு சென்றால் அங்கே பொம்மை விற்பவர்கள் வருவார்களா? என்பது ஒரு குழந்தைக்கு தெரியாது. ஆனாலும் அதற்காகவே அந்த குழந்தை திருவிழாவிற்கு கிளம்பும்.அவளும் வர மாட்டாளா என்றே நான் திருவிழாவிற்கு கிளம்பியிருக்கின்றேன்.

 

கோவில் கடைகளில் பார்த்து, வீட்டிற்கு கொண்டு செல்ல நினைத்த அத்தனை பொம்மைகளும் வீடு வந்து சேர்ந்துவிடவில்லை.

 

அதில் ஒரு ‘donald duck’ பொம்மை இன்னும் நான்  பார்த்தது போலவே என் நினைவில் ஒட்டிக்கொண்டு இருக்கின்றது.

 

அந்த donald duck  பொம்மையும் கூட என்னை திரும்பிப்பார்க்கவில்லை; அது பார்த்துக்கொண்டு இருந்த திசையில் நான் கடந்து கொண்டு இருந்தேன்.

 

“நீ திரும்பிப் பார்த்திருக்க வேண்டியதில்லை

நீ பார்த்துக் கொண்டிருந்த திசையில் நான் கடந்ததுண்டு”.

 

எனக்குள் இருக்கும் குழந்தை, இன்னுமும் அந்த பொம்மையை நினைத்தாலே பரவசம் அடையத்தான் செய்கிறது. அந்த பரவசத்திற்கு நான் வைத்த பெயர் தான் பொம்மை காதல். அதுவே என் ஒரு கவிதை தொகுப்பிற்குமான பெயர் ஆனது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *