வீட்டிற்கு வீடியோ காலில் பேசிக்கொண்டு இருந்தேன். பேசுவதைத் தவிர முக்கியமான எதுவும் அந்த பேச்சில் இருக்காது. அதனால், இப்படி பேசிக்கொண்டிருக்கும் பொழுதுகளில் முக்கியமில்லாத வேலைகளை செய்வது என் வழக்கமாகி போனது.நீங்கள் தனித்து இருக்கும் பொழுது உங்களை எது ஆக்கிரமிக்கிறதோ அது உங்களை எப்போதும் ஆக்கிரமித்து இருக்கும். அப்படியாக என் news feed இல் வரும் news கள். அதில் ஒரு செய்தியின் தலைப்பு வடிவேல் அவர்கள் பாடிய படலைப்பற்றியதாக இருந்தது. மணியை பார்த்தேன், நான் இருக்கும் ஊரில் மணி எட்டு, இந்தியாவில் இருந்து 5 மணிக்கு பாடலை வெளியிட போகிறார்கள் என்கிற செய்தியை முன்னமே அறிந்திருந்தேன். ஆனாலும் கூட, அந்த 5 மணிக்கு அந்த ஞாபகம் வரவில்லை.
என் news feed இல் வந்த அந்த செய்தியை திறக்காமல் youtube ஐ திறந்து அந்த பாடலை தேடினேன், அந்த 5 நொடி விளம்பரம் முடிய காத்திருந்து அதை துரத்திவிட்ட பின், சத்தமில்லாமல் சத்தமாய்
“தந்தான தானா தன தந்தான தானா” எண்று ஒரு குரல். அதை கேட்ட மாத்திரத்திரத்தில் மனைவியிடம் ஒரு ஐந்து நிமிடம் கழித்து பேசுகிறேன் என்று அந்த call ஐ துண்டித்துவிட்டேன்.
“தந்தான தானா தன தந்தான தானா” தொடர்ந்தது. How can it be Rahman என்று மனம் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அங்கே ரஹ்மான் அவர்கள் தோன்ற அதே நொடியில் It can only be Rahman என்று புன்னைகைத்து மனம்.
Yes ! It cannot be Rahman. But, It can only be Rahman.
ஒரு முறை ஈரானிய இசை கலைஞர் ஒருவர் ரஹ்மானிடம் உங்கள் இசையில் ஏன் அதிகம் உங்கள் மண் சார்ந்த பண்புகள் இருப்பதில்லை என்னும் அர்த்தத்தில் ஒரு கேள்வியை கேட்டதாக ஒரு துண்டு செய்தியில் படித்த ஞாபகம்.
எட்டு ஒன்பது வயதில் ரஜினி படம் மூலம் அறிமுகமான ரஹ்மான், அப்போதிலிருந்தே மனதில் ஒட்டிக்கொண்டார். அப்போதிலிருந்தே அவரை கவனித்து இருக்கின்றேன்.
ஒன்றிலிருந்து இரண்டை விட்டு விட்டு மூன்றுக்கு போவார், அங்கிருந்து பூஜ்யத்திற்கு வருவார். அவர் எப்போதும் மரபுகளை கொண்டே மரபுகளை உடைத்து பாடல்களை செதுக்கியவராகவே இருந்திருக்கின்றார். அதன் காரணமாகவே அவர் இசையில் எந்த மண்ணின் மரபுகளும் அப்படியே இருந்ததில்லை. ஆஸ்கார் வாங்கிய பின் அவர் மரபுகளை இன்னும் அதிகமாக உடைக்க தொடங்கியிருந்தார்.அவ்வப்போது அதிலிருந்து வெளியில் வந்து என்னைப்போன்றவர்களை குஷிப்படுத்த கொஞ்சம் அவரின் 90s mode க்கு செல்வார்.
இப்படி எல்லா விதமான பாடல்களையும் வித விதமாக கொடுத்த ஒரே ஒரு இசையமைப்பாளராக ரஹ்மான் மட்டுமே தான் இருக்கின்றார்.
ஆனால், இந்த ரஹ்மான் தொடாத அல்லது செய்யாத பாடல்களும் இருக்கின்றது. அது தான் மக்களுக்குள் இருக்கும் இசை. அதை அப்படியே எடுத்து எப்போது ரஹ்மான் தந்ததில்லை. ஒரு கிராமிய படம் அல்லது படையப்பா படம் போன்ற ஒரு படம் என்று நீங்கள் ரஹ்மானிடம் சென்றால் அவரும் கிராமிய வாசத்திற்கு ஏற்ப, அந்த ஒரு கலாச்சாரத்திற்கு ஏற்ப ஒரு இசையை அமைத்து தருவார் அது அத்தனை அருமையாக இருக்கும். ஆனால், அது மக்கள் இசைக்கு நெருக்கமாக இருக்காது.
மக்கள் இசை என்றால் என்ன? MSV விடம் சென்று ஒரு தாலாட்டு பாட்டு கேட்கிறார்கள். தாலாட்டு பாடும் மக்கள் என்ன செய்வார்கள்?அந்த தொட்டில் ஆடும் அந்த தாளத்திற்கு பாடவார்கள்.
என் கண்ணே ஏ…. உறங்கு! மேலே ஏறி சட்னு மெதுவாய் கீழே இறங்கும்.அந்த தொட்டில் மாதிரி, அந்த ஊஞ்சல் மாதிரி. அதே pattern இல் MSV இசையமைத்த பாடல் தான், மலர்ந்தும் மலராத பா ஆ தி மலர்போல..
இது போன்ற வேலைகளை ரஹ்மானும் கூட செய்து இருக்கின்றார். எந்திரன் படத்தில் ஆடு கத்துவது போன்ற ஓசையையே பின்னணி இசையில் வேறு மாதிரி கொடுத்தது. இந்தியன் படத்தில் வந்தே மாதரம் என்னும் இரண்டு வார்த்தைகளை இசை கருவிகளுக்குள் புகுத்தி நம் நரம்புகளை புடைக்க செய்தது. படையப்பா படத்தில் தத்தி தத்தி ஒரு குழந்தை போல் தன் வீட்டை நோக்கி ஓடும் சிவாஜிக்கு குழந்தை அழும் pattern இல் பின்னணி இசை அமைத்தது.அதே படையப்பா படத்தில், இடிந்து நொறுங்கி உட்காரும் சிவாஜிக்கு அந்த உட்காரும் அந்த அளவிற்கு இடிந்து நொறுங்குவதை போலவே ஒரு இசையை கொடுத்தது என்று இத்தனை செய்த ரஹ்மான். நம் கிராமத்து folk வகையாறாக்களை அப்படியே தொட்டு அப்படியே தந்ததில்லை.
தாலாட்டு, நாத்து நடுவது,கல்யாணம் சடங்கு, எல்லாவற்றிக்கும் நம்மிடம் ஒரு சந்தம் இருந்தது ஒரு பாடல் இருந்தது. ஒப்பாரியும் ஒரு வகை சந்தம் தான். மனதின் மூலையில் சோகத்தை அடைத்து வைத்து இருக்கும் எல்லோரையும் ஒரு நொடி ஸ்தம்பிக்க செய்யும் ஆற்றல் கொண்டது இந்த ஒப்பாரி வகை சந்தம்.
அப்படியான ஒப்பாரி வகை சந்தத்தில் ஒரு வகையாக தான் இருந்தது இந்த, “தந்தான தானா தன தந்தான தானா” அதுவும் வடிவேல் அவர்களின் குரலில்.
இந்த வகை சந்தங்களுக்கு உயிர் கொடுக்க தொழில் முறை பாடகர்கள் தேவை இல்லை. வடிவேல் போன்றவர்கள் தான் தேவை.
வடிவேல் அவர்கள் பாடிய, “சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன் தாயீ நீ கண் வளரு தாலே லல்லேலோ” கேட்டு இருக்கின்றீர்களா? எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதில், “எந்த ஒரு புள்ளைக்குமே இந்த வரம் கிடைக்கலை ஆனந்தம் பொங்குதம்மா விட்டு விட்டு கண்ணுல” என்கிற வரியை headset இல் கேட்கும் பொழுது நம் கண்களும் கலங்கி விடும்.அந்த உணர்வுகளை அப்படியே நமக்குள் கடத்த கூடிய வல்லமை அவருக்கு உண்டு. அதற்கு அதிகம் பிரயத்தனப் பட தேவை இல்லை, அந்த உணர்வுகளும் அந்த வகை இசையும் இயல்பாக அவருக்குள் இருப்பது.
அது என்ன சத்தமா ஒரு பாட்டு சத்தமில்லாமல்? மனதிற்குள் இருக்கும் சோகம் நம்மை வீறிட்டு அழுக சொன்னாலும் நாம் அதை மனதிற்குள்ளேயே வைத்துக்கொள்வோம். ஒப்பாரியின் சந்தமும் கூட ஒரு வகையில் அப்ப்டியானது தான்.
high pitch க்கு போகும் போதே அதை பாதியில் நிறுத்தி அதே இடத்தில் travel செய்ய வைத்து பாடுவது அந்த வகை சந்ததின் இயல்பு. ரஹ்மான் இப்படியான இயல்புகள் எப்போதும் அப்படியே கையாள்வதில்லை. அதன் காரணமாகவே மரபு சார் இசை தேவையான இடங்களிலும் கூட அவருடைய பாடல்கள் அப்படி தெரியாமல் கொஞ்சம் தனித்து தெரிந்து வந்தது. ஆனால்,இந்த பாடல் அப்படியில்லை. அந்த வகை சந்தம் எப்படி பாடப்படுமோ அப்படியே அதன் இயல்பு மாறாமல் இருக்கின்றது. அது தான், “How can it be Rahman!” என்னை கேட்க வைத்தது. அதே வேளையில் எல்லா வகையான பாடல்களையும் அதிகம் மெருகேற்றி கொடுத்த, கொடுக்க கூடிய,கொடுக்கின்ற ஒரே ஒரு இசைமைப்பாளராக அவரே தான் இருக்கின்றார். So, it can only be Rahman.
இதை உங்கள் playlist இல் சேர்த்து அடிக்கடி கேட்க தோன்றும் ஆனால், கேட்காதீர்கள், சந்ததிலேயே சோகம் கொண்ட பாடல். வரிகளில் வலிகளை தாங்கி நிற்கின்றது. இந்த சமூகம் செய்த தவறுகளை சுட்டி சுடுகிறது.ரஞ்சித் மாரி செல்வராஜ் போன்றவர்களின் திரைப்படங்களை பலரும் பாராட்டும் வண்ணம் கலைப் படைப்பின் உச்சமாக என்னால் பார்க்க முடிவதில்லை.ஆனால், அவர்கள், சொல்ல வைத்திருக்கும் கதைகள் சொல்லப்படவேண்டியதே. திருந்திவிட்டதாய் நினைத்துக்கொண்டு இருக்கும் சமூகத்திற்கான நினைவூட்டல்.