மரன்- திரைப்படத்தின் டீஸர் கண்ணில் பட்ட நாளிலேயே ஒரு கதையின் உணர்வு என்னுள்ளும் பற்றிக்கொண்டது.

“who are we?”

“ராஷ்டிரிய ரைபிள்ஸ்”

“who are we?”

“ராஷ்டிரிய ரைபிள்ஸ்”

“தா “who are we?” “ராஷ்டிரிய ரைபிள்ஸ்” என்று மனம் அந்த உணர்வோடு கலந்து சண்டைக்கு கிளம்ப தயாரானது. நிச்சயமாக சண்டை செய்யும் அளவிற்கான திடமோ வீரமோ நம் எல்லோரிடமும் இருப்பதில்லை. ஆனால், உறவுக்காக உரிமைக்காக உணர்வுகிற்காக தர்மத்திற்காக என்று ஏதோ ஒன்றிக்காக நம் மனம் ஒரு போரை முன்னின்று நடத்த நம்மை கேட்கும்;ஆனால், மனதின் அத்தனை ஆசைகளும் நடந்து விடுவதில்லை, இத்தகைய ஆசைகள் நடப்பதேயில்லை.

எல்லோருக்கும் பெரிய பணக்காரனாக ஆக வேண்டும் என்று ஆசை இருக்கும். தங்கச்சிக்காக குழாயை பிடுங்கி சண்டைக்கு கிளம்ப வேண்டும் என்கிற உணர்வு இருக்கும்; நடைமுறையில் சாத்தியமில்லாத இந்த ஆசைகளுக்கும் உணர்வுகளுக்கும் தீனி போடுவதாக ரஜினியின் படங்கள் அமைந்ததாலேயே தான் அவர் சினிமாவில் பெரும் வெற்றி பெற்றார்.இப்படி நாம் செய்ய முடியாத அல்லது முற்படாத நிகழ்வுகளை நிகழ்த்தி காட்டும் அற்புதம் தான் சினிமா.

சினிமா அல்லது ஒரு கதை தரும் உணர்வும் அனுபவமும் ஒரு வகையில் நம் ஆசைகளுக்கான, உணர்வுகளுக்கான தீனி.அப்படி சினிமா போன்று நாம் செய்ய நினைத்து செய்ய முடியாத ஆசைகள் ஒருவர் நிஜமாக வாழ்ந்து இருக்கிறார்.

நம் எல்லோருக்கும் நிறைய ஆசைகள் இருக்கும். அந்த ஆசைகளில் பிரதானமாக இருப்பது, நம்முடைய அன்பிற்குரியறவர்கள் எப்போதும் நம் அருகில் இருக்க வேண்டும் என்கிற ஆசை தான்.

ஸ்கூலுக்கு போகாம அப்பா அம்மா கூடவே இருக்க வேண்டும் என்கிற ஆசை எல்லா பிள்ளைகளுக்கும் இருக்கும். கணவர் கூடவே இருக்க வேண்டும் என்கிற ஆசை எல்லா பெண்களுக்கும் இருக்கும்.

நான் இருக்கும் இடத்தில் இருந்து ஆயிரத்தி எண்ணூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் என்னுடைய மனைவி என்னிடம் பேசும் போதெல்லாம் சொல்வது இது தான், “எனக்கு இப்படி இருக்க பிடிக்கவே இல்லை!” .  நான் அவரிடம் எப்போதும் சொல்வது, “army ல இருக்கவங்களோட wife லாம் மனுஷங்க இல்லையா அவங்க எல்லாம் உன்னை மாதிரி புலம்பிட்டு இருக்காங்களா!”.இந்த பதிலை கேட்டு பழகிய சில வருடங்களில் அவர் கேட்பதை நிறுத்திக்கொண்டார்.

ஆனால், அன்பிற்குரியவர்கள் எப்போதும் அருகில் இருக்க வேண்டும் என்கிற ஆசைகளுக்கு பின்னால், ஒளிந்து இருப்பது என்னவோ ஒரு சுயநலமும் பெரும் பயமும் தான். அரசியல் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதும் நடந்த அறவழி போராட்டத்தின் இடைவெளிகளில் கற்கள் வீசப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டதை நேரில் பார்த்ததும், வேகமாக அம்மாவிற்கு அழைத்து நான் கேட்டது, “அப்பா இன்னிக்கு வேலைக்கு போகலை ல?”.

பேருந்துகள் எரிக்கப்படுவதற்கு வாய்ப்பிருக்கும் நாளில் அப்பா வீட்டில் இருக்க வேண்டும் என்பதே நம் எண்ணமாக இருக்கும். ஏன்னென்றால், எல்லோருக்கும் அப்பா வேணும். அப்பா மட்டும் இல்லை, நம்முடைய அன்பிற்குரியவர்கள் நமக்கு தரும் comfort இல் வாழ்ந்து பழகிக்கொண்ட நாம் அதை எப்போதும் இழப்பதற்கு தயாராக இருப்பதில்லை. அதனால், அவர்கள் எப்போதும் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம் (ஆசைப்படுகிறோம்).

பத்திரமாகவும் அன்பிற்குரியவர்களுக்கு பக்கமாகவும் இருக்க வேண்டும் என்கிற ஆசையோடு இருக்கும் நமக்கே சிவகார்த்தியேன் உரக்க கத்தி “who are we?” என்று கேட்டதும் சண்டைக்கு கிளம்ப வேண்டும் போல் இருக்கிறதே. யார் அந்த மேஜர் முகுந்த் என்று தேடினேன். ஒரு புகைப்படத்துடன் அவர் பிறந்த தேதி வயது எல்லாவற்றையும் கூகுள் காட்டியது. முப்பத்தியொரு வயதில் மூன்று வயது பெண் குழந்தையை  விட்டுச்சென்று இருக்கிறார் என்று தெரிந்த நொடியிலேயே மனம் கனத்து விட்டது. வேகமாக விக்கிபீடியா பக்கத்தை திறந்தேன். அவருடைய கடைசி ஆபரேஷனின் முடிவை படித்த முதல் நொடியிலேயே முதல் ஒரு துளி கண்ணீரை அவருக்காக சிந்தியது கண்கள். யாரோ ஒருவருக்காக ஏன் என் கண்கள் கண்ணீர் சிந்த வேண்டும்!

அந்த யாரோ ஒருவர் யார் என்று பார்ப்பதற்காகவே அமரன் திரைப்படத்திற்கு முதல் நாள் சென்றுவிட வேண்டும் என்கிற முன்முடிவோடு இருந்தேன். இதுவரை நான் எந்த திரைப்படத்திற்காகவும் இத்தனை காத்திருந்ததில்லை. தீபாவளி மற்றுமொரு விடுமுறை என்று ஆகி விட்ட வருடத்தில் இருந்து, தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு இருப்பதில்லை, மாறாக இந்த வருடம் தீபாவளிக்காக அல்லாமல் அமரன் திரைப்பட வெளியீட்ட்டை மனதில் வைத்து தேதிகளை எண்ணிக்கொண்டிருந்தேன்.

முகுந்த் வரதராஜன்-அவரை காண வேண்டும் அவர் கதையை கேட்க வேண்டும் என்கிற வேட்கையோடு மட்டுமே திரையரங்கிற்கு சென்ற என்னை கமல்ஹாசனும் திரைப்படத்தின் எடிட்டர் கொஞ்சம் கோபப்படுத்திவிட்டார்கள்.

நன்றி தெரிவித்து யார் யாரின் பெயர்கள் திரையில் வந்து மறைந்து கொண்டு இருந்தது. பிறகு முகுந்த் வரதராஜன் அவர்களின் முகத்தை காண்பித்து ஏதோ எழுதியிருந்தது, அதை வாசிக்க தொடங்குவதற்குள் மின்னல் போல மறைந்துவிட்டது.அதற்கு பின் கமலஹாசன் எழுதிய ஏதோ சில வரிகள் திரையில் தோன்றியது, அதை வாசிக்க கூட தோன்றவில்லை. அத்தனை கோபம், கமலஹாசனின் வரிகள் தோன்றிய சில நொடிகளை சுருக்கி முகுந்த் வரதராஜன் ஒரு ரெண்டு நொடி சேர்த்து காண்பித்து இருக்கலாம்.

திரைப்படம் ஆரம்பித்தது, கதை ஒரு காட்சியில் இருந்து மற்றொரு காட்சிக்கு தாவிக்கொண்டிருந்ததை போல ஒரு அனுபவம் முதல் சில நிமிடங்களை வரை தொடர்ந்தது. ராணுவத்தில் சேர வேண்டும் என்பது தான் தன் கனவு என்று ஒருவன் சொன்ன பின்பும் ஒருத்தி அவனை காதலிக்கிறாள், இதெல்லாம் சினிமாவில் தான் நடக்கும் என்கிற சூழலில் நடந்த உண்மை ஒன்று தான் இந்த சினிமா ஆகியிருக்கிறது.

காதலன் ஆசையும் கனவுமே தன்னுடைய பெருமிதமாக கொள்ளும் ஒரு காதலி,அவன் ராணுவ வீரனாக வரும் முதல் அணிவகுப்பில் அவனை கண்டதும் அத்தனை பூரிப்பு அடைகிறாள். நீங்கள் அவள் கண்களில் இருந்த பூரிப்பை காண்பதற்கு டைம் ட்ராவல் செய்ய வேண்டியதில்லை,சாய் பல்லவியை கவனியுங்கள். கவனியுங்கள் என்று நான் சொல்லத்தேவையுமில்லை.திரை முழுக்க தெரியும் சாய் பல்லவியின் கண்களும் அதில் தெறித்த பெருமிதமும் சந்தோஷமும், இருபது வயதில் இந்து தன் காதலன் முகுந்திற்காக எத்தனை சந்தோஷப்பட்டார் என்பதை சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது நம் கவனம் அந்த கண்களை விட்டு அகலப்போவதில்லை.

திரையில் முகுந்த்தை சுற்றியுள்ள முகுந்தின் அன்பிற்குரியவர்களாகவே நம்மை பயணிக்க செய்யவைக்கும் அளவிலான காட்சி அமைப்புகள். அன்பிற்குரியவர்களை பிரிந்து இருக்க வேண்டும் என்று தெரிந்தே ஒருவன் அதை தன் ஆசையாகவும் கனவாகவும் ஏற்கிறான் என்றால், அவன் மனம் எப்படியானதாக இருந்திருக்கும்!

“பதினோரு லட்சம் ராணுவ வீரர்களின் அம்மாக்களை நினைத்துக்கொள்” என்றதும், “காலையில் வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பும் எத்தனையோ கோடி அம்மாக்களில் ஒருத்தியாக இருந்துவிட்டு போகிறேன்” என்று மகன் ராணுவத்தில் இருப்பதை விரும்பாமல் புலம்பும் தாயை அந்த மனம் போகிற போக்கில் தேற்றுகிறது.

தெரிந்தே ஏற்றுக்கொண்டிருந்தாலும், தானும் அதில் பெருமிதம் கொண்டிருந்தாலும், “தூரமா இருக்கிறது பரவால்ல நீ பத்திரமாக இருக்கனும்” என்று பயத்தை வெளிப்படுத்தும் மனைவிக்கு அந்த மனம் எப்போதும் தைரியம் சொல்லிக்கொண்டிருக்கிறது.

அம்மாவையும் காதலியையும் விட்டு தூரமாக இருப்பதை ஒருவன் தானே தேடிக்கொள்கிறான் என்றால் இந்த தேசத்தின் மீதான அவனுடைய காதல் எத்தனை பெரிதாக இருந்திருக்கும்.

ஒரு காட்சியில்,விமான நிலையத்தில் அவருக்காக அவருடைய மனைவியும் மகளும் காத்திருக்கின்றார்கள், அவர் வந்ததும்,அந்த குழந்தை அப்பாவை நோக்கி மெல்ல நடந்து போகும் அந்த சில நிமிடங்களில் கிடைக்கும் குட்டி சந்தோசத்தை அனுபவித்து மீண்டும் அதே மனதிடத்துடன் அவர் பறந்து விடுகிறார். ஆனால், அதே காட்சியில் அவர் மகள் மெல்ல நடந்து அவரை நோக்கி சென்றதை கண்ட பொழுதே கலங்கியவர்களின் மனம் கலங்கிய படி கனமாகவே இருந்தது.

திரைப்படம் முடிந்து வெளியில் வந்தோம். “நான் ரெஸ்ட்ரூம் போயிட்டு வரேன்” என்று மாமாவிடமும் தங்கையிடமும் சொல்லிவிட்டுச் சென்றேன். மனம் என்ன நடந்தது என்று சிந்தித்து கொண்டிருந்தது, ஒரு இரண்டு மணி நேரம் முழுதும்  சோகம் ஏன் தொண்டையை அடைத்துக்கொண்டிருந்தது, நம்ம என்ன அவ்வவளவு வீக் ஆகிட்டோமா என்று தன்னை தானே கேட்டு புன்னகைத்தது.

எனக்காக மாமாவும் தங்கையும் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களை நோக்கி நான் செல்வதை பார்த்து “என்ன டாய்லெட் போய்ட்டு சிரிச்சுகிட்டே வர?”என்றார் தங்கை.

“என் குரல் மாறியிருக்கிறது தெரியுதா? உள்ள தியேட்டர்ல,  பேசினா அழுகை வந்திரும் போல இருக்கும் ல அப்படி இருந்தேன்” என்றதும்.”நீங்க நிறைய இடத்துல அழுத்துட்டீங்க கேப்டன்” என்றார் மாமா. “கண்ணுல தண்ணி வந்திருச்சு தான் ஆனா எனக்கு கத்தி அழுகணும் போல இருந்தது” என்றதும். “அவர் ஆமா அப்படியே நெஞ்சை பிழியுறாய்ங்க” என்று நிதானித்துச் சொன்னார்.

கதையின் முடிவில்,இந்து சொல்வது போல, இது சோகமா சந்தோசமா தெரியவில்லை. மனம் எப்படி இப்படி கனத்தது என்று நினைத்து புன்னகைக்கவும் செய்கிறது. பெருமிதாகவும் இருக்கலாம். என்ன ஏது என்று ஏதும் தெரியாமல், மெலிதான போதையில் ஏதோ படத்திற்கு வந்தோம் என்று வந்த சிலர் படம் முடிந்ததும் வெளியேறிக்கொண்டிருந்தார்கள். நானும் கூட வெளியேற வேண்டுமென்று எழுந்தேன், அப்போது மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களை திரையில் காண்பித்தார்கள். அப்படியே நின்று விட்டேன்.இன்னமும் அவரை கடந்து வர முடியவில்லை.

எங்கோ எப்போதோ ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை குறித்து வரும் செய்திகளை செய்திகளாக எப்போதும் கடந்திருப்போம்;அரசியல்வாதிகளை சாடியிருப்போம்; அதை தொடர்ந்து அரசியல் பேசியிருப்போம். மேஜர் முகுந்த் வரதராஜனை அப்படி கடக்க முடியவில்லை, இனி அப்படி செய்திகளையும் சாதாரணமாக கடந்துவிட முடியாது.

நினைக்கிற நேரம் சாப்பிட முடியாது. நினைக்கிற நேரம் தூங்க முடியாது. எல்லோரும் அன்பிற்குரியவர்களுக்காக ஏதோ சில தியாகங்களை செய்து செய்து கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால், எல்லோரும் இத்தனை கடிமான பணியை  எல்லோரும் விரும்பி ஏற்பதில்லை. அத்தனை கடுமையான பணியை விரும்பியேற்ற ஒருவர், அதில் கடினமான பணிக்கு தானே தன்னை முன்னிறுத்திக்கொண்டு செல்கிறார். ஒரு வீடு அங்கு தேசத்துக்கு விரோதமான செயல்களை தேசத்திற்குள் இருந்துகொண்டே செய்யும் ஒரு கூட்டம் இருக்கிறது. உள்ளே எத்தனை பொது மக்கள் சிக்கியிருக்கிறார்கள் தெரியாது, அதனால் மொத்தமாக பெரிய ஆயுதங்கள் பயன்படுத்தவும் முடியாது. “விடுங்க சார்! அப்புறம் பார்த்துக்கலாம்” என்று நினைக்கவில்லை. சரி! வேறு யாரையாவது அனுப்பியிருக்கலாம் அதையும் செய்யவில்லை. தனியொரு நபராக உள்ளே செல்ல முற்படுகிறார்,அவருக்கு பாதுகாப்பாக தானும் வருவதாக சிப்பாய் விக்ரம் சிங் கிளம்புகிறார். இந்த இருவரில் ஒருவருக்கும் “நமக்கு என்ன ஆகுமோ” என்கிற சந்தேகம் எழவில்லை. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு புள்ளைங்களை யார் பார்க்கிறது இப்படியான எந்த உணர்வுகளுக்கும் அவர்கள் இடம் கொடுக்கவில்லை.

உள்ளே சென்ற பின்னரும் கூட அவர்கள் திரும்பி வர வாய்ப்பிருந்தது. அதையும் அவர்கள் செய்யவில்லை. “இன்னிக்கு அவனை விட்ர கூடாது சார்” என்று பறக்கிறார் விக்ரம். ஒரு கட்டத்தில் முகுந்த் முன்னேறிச்செல்ல முற்படும் பொழுது அவரை தடுத்து விக்ரம் முதலில் செல்லுகிறார். அப்போது அவர்கள் எதிர்பாராத விதமாக அவர்களை நோக்கி ஒருவன் சுட, விக்ரம் குண்டடி பட்டு சாய்ந்து விடுகிறார். இப்போதும் கூட முகுந்த் திரும்பியிருக்க முடியும். ஆனால், அதை அவர் செய்யவில்லை.

ஒரேயொரு ஆள், மேலும் முன்னேறிச்சென்று அவர்கள் யாரை தேடிச் சென்றார்களோ அவனை கொன்று முடித்து வெளியே நடந்து வருகிறார்.அவரை காணும் பொழுது அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்று தோன்றும். ஆனால், அப்படியே சரிந்து விழுகிறார். ஒரு மனிதனுக்குள் எத்தனை தீவிரம் இருந்திருந்தால், தான் எடுத்துக்கொண்ட செயலை முடிக்கும் வரை தன் உடம்பில் இருந்து ரத்தம் கசிவது கூட தெரியாமல் இருந்திருக்கும்.

அம்மா பத்திரமாக இருக்கவேண்டும்; அப்பா பத்திரமாக இருக்க வேண்டும்; கணவர் பத்திரமாக இருக்க வேண்டும்; பிள்ளைகள் பத்திரமாக இருக்க வேண்டும்; இவர்கள் எல்லாம் நலமுடம் இருக்க வேண்டும். இவ்வளவு தானே நம்முடைய ஆசைகளும் எண்ணங்களும். அதை ஒட்டிய தானே நம்முடைய செயல்களும் இருக்கிறது. இந்த நாடு பத்திரமாக இருக்க வேண்டும் என்று ஒருவன் தன் கடைசி துளி ரத்தம் இருக்கும் வரை போராடியிருக்கிறான் என்றால் அவன் எப்படி யாரோ ஒருவனாக ஆவான். அவனுக்காக எந்த கண்கள் தான் கண்ணீர் சிந்தாமல் இருக்கும்.அவனை நினைத்து யார் தான் பெருமிதம் கொள்ள மாட்டார்கள்.அவன் கதையில் எதை விமர்சிக்க முடியும். அவன் கதையை மீண்டும் மீண்டும் சொல்லி பெருமிதத்தோடு கண்களை நிறைத்துக்கொள்ளத் தான் முடியும்.

இந்த கதை விமர்சனத்திற்குரியது அல்ல என்பதற்காகவே நாம், தலைப்பை கதை விமர்சனம் என்று அல்லாமல் திரை அனுபவம் என்று மாற்றினோம். நிச்சயமாக சில வசனங்களில் காட்சிகளில் கற்பனையும் கூட கலந்திருக்கலாம், ஆனால், இந்த கதையை பற்றிய எந்த கற்பனையும் உண்மைக்கு தூரமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.

சாய் பல்லவி ஒருவரை தவிர இன்றைய திரை உலகில் இருக்கும் எந்த ஒரு நடிகையாலும் இந்துவின் வாழ்க்கையை நம் கண்களுக்கு காட்டியிருக்க முடியாது.அழுகக்கூடாது ஆனால் சோகம் பெருமிதம் அதிர்ச்சி எல்லாம் ஒரு சேர வெளிப்படுத்த வேண்டும். அப்படியான உணர்வுகளை கடந்துவந்தவர்கள் எல்லோருக்கும் அவர்கள் கடந்து வந்த அந்த தருணங்களை நினைவு ஊட்டுகிறார் சாய்பல்லவி.

என்ன செய்தார்களோ தெரியவில்லை. மிக சாதாரணமாக நமக்கு பழக்கப்பட்ட சிவகார்த்திகேயனை மேஜர் முகுந்த்தாகவே மாற்றியிருந்தார்கள்.

எம்.எஸ்.வி. இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் இவர்களை இசை மும்மூர்த்திகள் என்று ரசிகர்களும் ஊடகங்களும் குறிப்பிடுவதுண்டு. ஜி.வி.பிரகாஷை சேர்த்து இனி இசை நால்வர் என்று ரசிகர்களும் ஊடகங்களும் பேசும்.

இன்னும் நிறைய இசை கொடுங்கள் ஜி.வி. நீங்கள் நடிப்பதில் அதிக கவனம் செலுத்துவதால் நாங்கள் உங்கள் இசையை நிறைய மிஸ் செய்வது போல உணருகிறோம்.படம் பார்த்ததிலிருந்து ஜி.வியின் பாடல்கள் மட்டும் இல்லை, மேஜர் முகுந்த்தும் மனதில் நினைவில் அறிவில் ஒட்டிக்கொண்டார்.அந்த அமரர் கடைசி இந்திய உயிர் இருக்கும் வரை வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *