நாம் இந்த வாக்குறுதிகளும் செயல்பாடுகளும் தொடர் எழுத ஆரம்பித்த பொழுது, இப்பொழுது தான் ஆட்சிக்கு வந்து இருக்கிறார்கள் அவர்களை விமர்சனம் நாம் செய்கிறோம் என்றார்கள். ஆனால், தி.மு.கவின் வாக்குறுதிகளிலையே பல குறைகளும் ஆடி ஆபர்களும் இருப்பதை சுட்டவே தான் இந்த தொடரை எழுதத் தொடங்கினோம். விஜயின் அரசியல் சுற்றுப் பயணத்தை தொடர்ந்து, விஜய் செல்லும் ஊர்களில், தி.மு.க வின் நான்காண்டு சாதனைகள் என்று போஸ்டர் ஒட்ட தொடங்கியிருக்கிறார்கள். அதோடு, சமீபத்தில், மரியாதைக்குரிய நம்முடைய முதல்வர், திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், பொத்தாம் பொதுவாக தி.மு.க. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பேசுகிறார்கள் என்று சொல்லியிருந்தார். எதையும் மரியாதைக்குரிய முதலமைச்சரிடம் எடுத்துச்ச்சொல்லும் பொழுது சரியாய் ஒவ்வொன்றாக தெளிவாக சொல்ல வேண்டுமில்லையா அதனால், இன்றே, முடிந்த அளவு ஒரே கட்டுரையில், முடிந்தால் இரத்தின சுருக்குமாக தி.மு.கவின் அனைத்து வாக்குறுதிகள் பற்றியும் எழுதவிட வேண்டும் என்கிற முனைப்பில் இந்த கட்டுரையை ஆரம்பித்து இருக்கிறோம். பார்க்கலாம் எத்தனை வாக்குறுதிகளை பற்றி எழுத முடிகிறது என்று.
“வாங்க வீடியோ குள்ள போகலாம்!” சாரி மக்களே வீடியோ போடுகிறவர்கள் எல்லாம் இப்படி சொல்லி ஆரம்பிக்கிறார்கள் இல்லையா அதை கொஞ்சமாக அப்படி தட்டி விடலாம் என்று. சரி ! இப்போது நாம் முழு கவனத்தோடு தி.மு.கவின் வாக்குறுதிகளைப் பற்றி படிக்க போகிறோம்.தூங்காமல் துவளாமல் படியுங்கள்!
1. மாநில சுயாட்சி–இவர்கள் இயக்கம் தொடங்கிய ஆரம்பத்தில், தனி, நாடு கோஷம் போட்டு பலிக்காமல், பின்னர் மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று கோஷம் போட ஆரம்பித்தார்கள். அம்பேத்கர்! அம்பேத்கர்! என்று சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்கு மட்டும் அவரை கொண்டாடுகிறவர்கள் அவர் உருவாக்கிய அரசியலமைப்பிற்கு எதிராக இவர்கள் எழுப்பும் கோஷங்களில் இதுவும் ஒன்று. ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபத்தி ஒன்பதில் ஆரம்பித்த உருட்டு, மன்னிக்க! ஆரம்பித்த கோஷம். 2021 தேர்தல் வாக்குறுதி வரை தொடர்ந்து, 2026 தேர்தல் வாக்குறுதியில் இயல்பாக(default) இடம்பெறும் . இந்திய அரசியலமைப்பை பொறுத்தவரை நாடுளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தான் தேர்வு செய்கிறார்கள் அப்படியிருக்க மாநில சுயாட்சி என்கிற கோஷம் மக்களுக்கு எதிரானது தான். தற்போதைய நிலையில் மத்திய மாநில அரசாங்கம் இரண்டும் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டதாக இருப்பதோடு, இரண்டு அரசாங்கங்களும் ஒன்றுக்கு ஒன்று கடிவாளமாக இருப்பது ஒரு அனுகூலம். மாநில சுயாட்சி என்கிற நிலைமை வந்தால்,நிலைமை கலைஞர் டீ கடை,ஸ்டாலின் ஆட்டோ ஸ்டாண்ட், கனிமொழி பேருந்து நிலையம், உதயநிதி விளையாட்டு திடல், இன்பநிதி கொசுவத்தி சுருள் என்று ஆகிவிடும். இதை நாம் இப்படி எழுதாமல் விட்டு இருந்தாலும், இது தான் நடக்கும் என்று நம் எல்லோருக்கும் தெரியும்.
2. பொதுப்பட்டியலில் இருக்கின்ற கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது: இன்று வரை செய்யவில்லை. செய்தாலும் அம்மஞ்சல்லிக்கு பிரோயோஜனம் இல்லை. மெட்ரிகுலேஷன் பாடத்திட்டம் இருந்த பொழுது, அரசு பள்ளி மாணவர்களை விட மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளும் நிலை இருந்தது, அதில் சமச்சீர் கல்வி திட்டம் என்று ஒன்றை புகுத்துகிறேன் என்று புகுத்தி; அரசு பள்ளி பாடத்திட்டத்தை மெட்ரிகுலேஷன் தரத்திற்கு உயர்த்தாமல், மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தை தாழ்த்தி மக்களையும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்திக்கொண்டிருந்தவர்களையும் சி.பி.எஸ்.ஈ பாடத் திட்டத்தை நோக்கி படையெடுக்க வைத்துவிட்டு; கவுண்டமணியின் இனி வயசுக்கு வந்தால் என்ன என்கிற வசனம் போல், கல்வி எந்த பட்டியலில் இருந்தால் என்ன?தள்ளிவிட்டார்கள்.பெரும்பான்மை மக்கள் மாநில பாடத்திட்டத்தின் மீது ஏற்கனவே இருக்கின்ற அவநம்பிக்கையின் வெளிப்பாடாகவும் தரமான மேம்பட்ட கல்வி பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டுமென்றும் தேசிய பாடத்திட்டத்தையும், சர்வதேச பாடத்திட்டத்தையும் நோக்கி நகர்ந்துவிட்டார்கள்.இன்னும் வருகிற காலத்திற்கு எல்லோரும் சர்வதேச பாடத்திட்டத்தை நோக்கி செல்லவே வாய்ப்புகள் இருக்கிறது. கல்வி இனி மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தால் என்ன! வராவிட்டால் என்ன!
3. தமிழகத்திற்கு என்று தனி கல்விக்கொள்கை: கிட்டத்தட்ட தமிழ் படத்தின் கன்னட ரீமேக் போன்று தேசிய கல்வி கொள்கையில் சில மாற்றங்கள் செய்து, முக்கியமாக மும்மொழி கொள்கையை நிராகரித்து ஒன்றை தயாரித்து இருக்கிறார்கள். எல்லோரும் சி.பி.எஸ்.இ பள்ளிகளை நோக்கி செல்லும் நிலையில், வரும் காலங்களில், இது சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சேர்க்க முடியாத ஒரு சாராரை பாதிக்க மட்டுமே செய்யும். ஒரு பக்கம் உருது கற்றுக்கொடுக்க முனைகிறார்கள்,, மறுபக்கம் ஆங்கிலம், தாய் மொழி வேறு ஒரு இந்திய மொழி கற்றுக்கொள்ளுங்கள் என்றால் முடியாது என்கிறார்கள். தமிழகத்தில், தெலுங்கு பேசுகிறவர்கள், உருது பேசுகிறர்வர்கள், ஹிந்தி பேசுகிறவர்கள், என்று பல்வேறு மொழி பேசும் மக்கள் பல காலமாய் தமிழகத்தில் இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் தமிழும் படிக்கச் செய்து, அவர்களின் தாய் மொழியும் படிக்கச் செய்யலாம். மும்மொழியை ஆதரிக்கும் பொழுது, இதே அனுகூலம் வெளிமாநிலத்தில் வசிக்கும் தமிழர்களுக்கும் கிடைக்கும்.அதனை மறுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.குடும்பம் உருப்பட வேண்டும்! மக்கள்?
4. 2004ம் ஆண்டு நாடுளுமன்ற கூட்டுக்கூட்டத்தில், உரையாற்றிய அப்போதைய குடியரசுத் தலைவர் மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் எல்லா மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்க ஆய்வு செய்யப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார், எனினும் இதுவரை மத்திய அரசாங்கம் ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. தேசிய மொழிகள் அனைத்தையும் ஆட்சி மொழியாக்க அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரச் சொல்லி தி.மு.க வலியுறுத்தும்: இதை இவர்கள் 2021இல் தமிழகத்தில் ஆட்சி அமைத்து தான் செய்ய வேண்டும் என்பதில்லை, இவர்கள் வாக்குறுதியில் குறிப்பிட்ட 2004இல் இருந்து 2014 வரை மத்திய அரசில் அதிகாரம் கொண்ட மாநில கட்சியாக தான் இருந்தார்கள், அப்பொழுதும் இது சம்மந்தமாக ஒரு ஆணியும் புடுங்கியதாக தெரியவில்லை, அதன் பின்னரும் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பவோ நீதிமன்றகளை நாடியது போலவோ தெரியவில்லை, தெருவிலும் ட்விட்டரிலும் மொழி சார்ந்து கூச்சலிடுவதை நானும் நீங்களும் கூட செய்யலாம் சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள் தேசிய மொழிகளை ஆட்சி மொழியாக்க நாங்கள் கூச்சலிடுகிறோம் என்று கேட்கவேண்டியதில்லை. 2019இல் இவர்கள் தான் நாடாளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் இருந்து பெரும்பான்மை உறுப்பினர்களை அனுப்பி வைத்தார்கள்.அங்கு சென்று பெரியார் வாழ்க கலைஞர் வாழ்க என்று பேசியதை தான் காண முடிந்தது.
5. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலங்களில் தமிழ் ஆட்சி மொழி அதற்காக அரசியலமைப்பு 343 இல் திருத்தம் கொண்டு வர வலியுறுத்துவோம்: நான்காவது வாக்குறுதி படி நடவடிக்கை எடுத்திருந்தால், இது தானாக நடந்திருக்கும். இதெல்லாம் 1969 தொட்டு தொன்று தொட்டு உருண்டுக் கொண்டிருக்கும் வாக்குறுதிகள். இடையில் பல காலம் இவர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது ஒரு வகையில் நிர்வாக சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.மத்திய அலுவலங்களில் அலுவல் மொழியாக ஆங்கிலம் இருப்பதே நன்று.
6. உயர்நீதிமன்ற வழக்காட மொழியாக தமிழ், மேலும் உச்ச நீதிமன்றத்தின் பரவலாக்கும் நோக்கத்தில் மேல்முறையீட்டு நீதி மன்றகளை அமைப்பது தொடர்பாக வலியுறுத்துவது : இதில் வழக்காடு மொழியாக தமிழை உயர்நீதி மன்றங்களில் கொண்டுவருவது அலுவல் சுமையை ஏற்படுத்தும் அது சட்ட சிக்கல்களையும் கூட ஏற்படுத்தும், அலுவல் சுமை என்பது செலவுகளையும் கூட அதிகரிக்கும். உயர்நீதிமன்றத்தில் இருந்து அப்பீல் செல்லும் பொழுது அதை மொழி மாற்றம் செய்ய நேர விரயமும் பண விரயமும் ஆகும். அதோடு, நம் மாநிலத்தின் சில அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் அந்த அரசியல் தலைவர்களின் இடையூறுகளால் பாதிக்கப்ப்பட கூடாது என்பதற்காக பிற மாநிலங்களில் நடத்தப்பட்டு இருக்கிறது. இப்படியான விஷயங்களை கருத்தில் கொள்ளும் பொழுது, உயர்நீதி மன்றத்தில் ஆங்கிலம் வழக்காடு மொழியாக தொடர்வது சரி தான் எனப்படுகிறது. ஹிந்தி வேண்டாம் ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்கிறவர்களுக்கு இதில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை இதிலிருக்கும் சாதக பாதகங்களை சரியான முறையில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துச் சென்றது போலவும் தெரியவில்லை.அம்பேத்கர் உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகள் வழக்காடு மொழியாக இருப்பதை ஆதரிக்கவில்லை. இந்த வாக்குறுதி தொடர்பாக இதற்கு முன் எப்படி வலியுறுத்தினார்களோ இனியும் வலியுறுத்துவார்கள். மேல்முறையீட்டு நீதி மன்றகளை அமைக்க வேண்டும் என்கிற கருத்து இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே எழுப்பப்பட்ட கருத்து. இது நடக்க வேண்டுமென்றால், முதலில் இதற்கான சாத்தியங்களை, சாதக பாதகங்ளை ஆராய்ந்து, அதன் பிறகு அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இதில் இன்னும் ஒரு படி கூட இந்தியா எடுத்துவைக்கவில்லை. சொல்லுங்க தி.மு.க.வலியுறுத்தும்.
7. மொழி வளர்ச்சி- திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவது : மத்திய அரசுடன் 2004 முதல் 2014 வரை கூட இருந்த குமாராக செயல்பட்ட காலத்தில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று தோன்றவில்லை. ஏன் தோன்றவில்லை? சமீபத்தில், தேசிய நூலாக ‘திருக்குறளை’ அறிவிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.காரணம்,இந்தியா பல மொழி இனக்குழுக்களை கொண்ட நாடாக இருப்பதால், இந்த கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் திருக்குறளை தேசிய நூலாக அறிவியுங்கள் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தால், நாட்டின் பல்வேறு உயர்நீதிமன்றங்களிலும் இது போன்ற பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்படும் என்பது தான். இப்படி குழப்பம் எல்லாம் வரும் என்று 2004 முதல் 2014 வரை கூட இருந்த குமார் அமைதியாக இருந்து விட்டு 2021 தேர்தல் வாக்குறுதியில் திருக்குறளை இழுத்துவிட்டு இருக்கிறார்.இதுவரை இந்திய அரசாங்கம் எந்த ஒரு நூலையும் தேசிய நூல் என்று அறிவித்தது இல்லை. அப்படியொரு தேவை எந்த ஒரு நூலுக்கும் இல்லை. திருவாசகம் திருக்குறள் எல்லாம் இவர்கள் காப்பாற்றி கொடுத்தா நாம் படித்துக்கொண்டிருக்கின்றோம்.
8. ஈழத் தமிழர் நல் வாழ்வு:இலங்கை தமிழர் விருப்பத்திற்கு ஏற்ப நிரந்தர அரசியல் தீர்வு ஏற்பட ஐ.நா. தலைமையில் பொது வாக்கெடுப்பு, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கி இலங்கை அரசை நிர்பந்திக்க சொல்லி மத்திய அரசை வலியுறுத்துவோம். இலங்கை தமிழர்ககளோ, இலங்கை அரசு திவால் கடன் பிரச்சனை இதையெல்லாம் தாண்டி இயல்பு நிலைக்கு திரும்பி கிரிக்கெட் பார்த்துக்கொண்டு நம் ஊர் கிரிக்கெட் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் வம்பிழுத்துக்கொண்டு fun பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க அரசியலுக்கு இலங்கை தமிழர்களை பயன்படுத்துவது மட்டும் இன்னும் தொடர்கிறது. அது சரி! வலியுறுத்துதல் தானே! வலியுறுத்துங்கள். இன்னும் எத்தனை தேர்தல் இருக்கிறது.
9. வெளிநாடு வாழ் தமிழர்கள் நல துறை ஏற்படுத்தப்படும்: இது தொடர்பான சட்டம் 2011 இல் இயற்றப்பட்டு விட்டது, அதன் தொடர் நடவடிக்கையாக சில திருத்தத்தங்கள் செய்து வாரியம் அமைத்து இருக்கிறார்கள்.இவர்களை விளம்பரம் செய்து கொண்ட அளவில் இந்த திட்டத்தை விளம்பரம் செய்து இது எப்படி வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு பயன்படுகிறது என்பதை அவர்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. இதிலிருக்கும் சாதக பாதகங்களை நாம் தனியாக வேறொரு கட்டுரையில் பார்க்கலாம்.
10. லோக் ஆயுக்தா செயல் பட வைத்தல், இந்த அமைப்பு முழுமையாக செயல் பட தி.மு.க நடவடிக்கை எடுக்கும்- ஊழலற்ற நேர்மையான நிர்வாகம்: மக்களே இது அரசியல் கட்டுரை, வடிவேல் காமெடி என்று நினைத்து விட வேண்டாம். செந்தில் பாலாஜி மீது இவர்களே ஊழல் குற்றச்சாட்டை வைத்துவிட்டு அவரை அமைச்சராக்கி அவர் மீது வழக்கிருந்த போதும் இலாகா இல்லாத அமைச்சராக அவரை பதவியில் தொடர வைத்தார்கள், அதனைத்தொடர்ந்து மத்திய அரசு, இப்படி வழக்குக்குளில் 30 நாட்களுக்கு மேல் காவலில் இருக்கும் பிரதமர் உட்பட எந்தவொரு அமைச்சரின் பதவியும் பறிக்கப்படும் என்கிற சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்தார்கள். டாஸ்மாக் கில் 50 சதவீதம் அரசிற்கு வர வேண்டிய வருவாய் வருவதில்லை, வணிக வரியில் 40 முதல் 50 சதவீதம் அரசிற்கு வர வேண்டிய வருவாய் வருவதில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர். பேசியிருந்தார் அதை சரி செய்யாமல், தி.மு.க அமைச்சர்களே ஊழல் செய்கிறார்கள் என்று பி.டிஆர் பேசியிருந்ததாக சொல்லப்பட்ட ஆடியோ வெளியிடப்பட்ட பின் அதை சரியாக விசாரிக்காமல், பி.டி.ஆரை வேறு துறைக்கு மாற்றி ஊழலை ஒழித்து வைத்து நேர்மையான நிர்வாகத்தை தி.மு.க படம் போட்டு காட்டியது என்பதை யாரும் மறுக்க முடியாது.
11. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை: வடிவேல் சொல்வது போல இறந்து புதைத்த வாக்குறுதி இது தான். எடப்பாடி ஆட்சியிலேயே விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு அவர்கள் சில பரிந்துரைகளை அரசிற்கு கொடுத்து அது இன்று வரை மூலையில் கிடக்கிறது, இவர்கள் வந்த பின் ஒரு விசாரணையும் நடத்தவில்லை, ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணை பரிந்துரைகளை ஏற்று நடவடிக்கையும் எடுக்க வில்லை. முன்னாள் முதலமைச்சர் மரணத்தை பொறுத்தவரையில், குற்றவாளி யார் என்பதை தேடுவதை தாண்டி சுகாதார துறையில் இருக்கும் கொண்டு வர வேண்டிய சீர்திருத்தங்கள் அதிகம் இருக்கிறது என்பதையே தான் அது காட்டுகிறது. அதையும் இவர்கள் செய்யவில்லை.
12. அரசு அதிகாரிகள் அமைச்சர்களின் தேவையற்ற பயணங்கள் குறைக்கப்படும்: ஏற்கனவே இங்கு முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தான பின், குடும்பத்துடன் முதலமைச்சரே ஜப்பான் சென்று வந்தார். ஒரு அரசு முதலீடுகளை ஈர்க்க, சாலையோர உணவகங்கள் கார்களை கை காட்டி அழைப்பது போல அழைக்கவேண்டியதில்லை, சரியான அரசியல் சூழலையும் கொள்கைகளையும் திட்டங்களையும் ஏற்படுத்தினால் போதும், முதலீடுகள் தானாக வந்து சேரும்.
13. மாநிலத்தின் கடன் சுமையை குறைக்க சிறப்பு பொருளாதார குழு அமைக்கப்படும்; இரண்டு குழுக்கள் அமைத்தார்கள், அதில் ரகு ராம் ராஜன் பெயர் மற்றும் சில பெயர் தெரியாத வெளிநாட்டு பெயர் எல்லாம் பார்த்ததும், நிதிமைச்சராக பி.டி ஆர் என்றதும் நம் ஆட்கள் ஆகா ஓகோ என்று பூரித்து கிடந்தார்கள், காலையில் சுடும் பூரி மதியமே புஸ் என்று ஆகிவிடும் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை கடன் சுமை தோராயமாக 4 லட்சம் கோடியில் இருந்த 10 லட்சம் கோடியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், சிறப்பு பொருளாதார குழு என்ன அறிவுரைகள் வழங்கியது என்று உங்கள் யாருக்கும் தெரிந்திருந்தால் மற்றவர்களுக்கு சொல்லாதீர்கள் கடன் வாங்குறதுக்கு எதுக்கு ரகு ராம் ராஜன் போன்ற நிபுணர்களின் அறிவுரை.
மக்களே என்னால் நிறுத்த முடியவில்லை இருந்தாலும் இதையே நீங்கள் வாசிக்க பெரு மூச்சு விடுவீர்கள் என்கிற காரணத்தினால் கடைசியாக ஒன்று மட்டும் சொல்லிக்கொண்டு மீதத்தை அடுத்த கட்டுரைக்கு வைத்துக்கொள்கிறேன்.
நீங்கள் பிறப்புச் சான்றிதழோ, சாதிச் சான்றிதழோ, வாரிசு சான்றிதழோ வாங்க அரசு அலுவலகங்களை நாடுகிறீர்கள் அவர்கள் உங்களை அலைக்கழிக்காமல் உங்களிடம் லஞ்சம் வாங்காமல் குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த சான்றிதழை உங்களுக்கு வழங்கச் செய்யும் வகையில் சேவை உரிமை சட்டம் என்று ஒன்றை இயற்றப்போகிறோம் என்றார்கள். வட மாநிலங்களில் இந்த சட்டம் எப்போதோ கொண்டுவரப்பட்டு விட்டது. வாக்குறுதியில் தான் தேதி அறிவிக்கப்படவில்லையே அதனால் நாம் காத்திருப்போம்.
இந்த காமெடியில் சுதாகர் கோபியை பார்த்து சொல்வது போல எல்லா வாக்குறுதிகளிலும் அரியர். ஆனால், கோபி சொல்வது போல நாம் நெகட்டிவிட்டியை பரப்பாமல் இருப்போம் அப்படினா என்னங்கயா என்றால், கிறிஸ்துவர்கள் என்றால் இயல்பாக தி.மு.கவிற்கு தான் ஓட்டு இசுலாயமியர்களா தி.மு.கவிற்கு தான் ஓட்டு, அப்பா தி.மு.க.வா அதனால் தி.மு.கவிற்கு தான் ஓட்டு, இதையெல்லாம் தாண்டி படித்து நல்ல வேலையில் சொகுசாக வெளிநாட்டில் இருந்து கொண்டு தி.மு.க தான் ஜாதியை ஒழித்தது என்று நம்பிக்கொண்டு தி.மு.கவிற்கு தான் ஓட்டு என்று இப்படி தி.மு.க வை பரப்புகிறவர்கள் தி.மு.காவிற்கு பி.ஆர்.ஓ. வேலை செய்யாமல் இருப்பதற்கு பெயர் தான் நெகட்டிவிட்டியை பரப்பாமல் இருப்பது என்பதாகும்.