2019ம் வருடத்தின் அக்டோபர் மாதம் அது.
சாலையெங்கும் மழை நீர். காற்றெங்கிலும் ஈரம்.குண்டும் குழியுமான சாலையில் தேங்கியிருந்த மழை நீரிலெல்லாம் முகம் பார்த்துக்கொண்டிருந்தான் சூரியன். காலை விடிந்தது முதல் மேகங்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருந்த சூரியன் அப்போது தான் கொஞ்சமாக எட்டிப் பார்த்தான்.
நகர இடமில்லாத அந்த சாலையில் ஊர்ந்துகொண்டிருந்த பேருந்தில் ஊர்ந்து செல்லவும் மனமில்லாமல் உட்கார்ந்திருந்தான் வீரா. பேருந்து, அந்த நெரிசலில் சிக்கிக்கொண்டு சில நிமிடங்கள் அப்படியே நின்றது. ஜன்னலுக்கு வெளியில் இருந்த பள்ளத்தை மூடியிருந்த மழை நீரில் சூரியனின் சின்னப் பிம்பம் தவிர்த்து ஒன்றும் தெரியவில்லை. ஆனால், வீராவின் கண்கள் அசையாமல் அதையே தான் பார்த்துக்கொண்டிருந்தது. அவன் மனம் அந்த நெரிசலில் சிக்கியிருக்கவில்லை. அவன் மனதில் அவனுக்குள் இருந்த கவிஞனின் குரல் மட்டுமே தான் கேட்டது.அவன் ஒரு உலகத்தில் இருந்தான்.
“மடை இல்லா குழிகள் அதில்
மணல் குளித்த மழைநீர்;
மக்கிய அறிவுகள் கொட்டிய
மக்காத குப்பைகள்;
மந்தை வாகனங்கள் அதில்
மலர்ச்சி இல்லா முகங்கள்;
நகராத காற்று அதை
நசுக்கி கொண்டிருக்கும் புகை
நடுவே நான்!
பிடித்தும் இருக்கிறது இந்த இடம் எனக்கு
இங்கு தான் எங்கோ
இங்கு எங்கும்
இல்லாத இடைவெளியில் உன்
இதயம் தொட்டு திரும்பிய
காற்றும் இருக்கிறதென்று
கண்டதையெல்லாம் விட்டு
காற்றுக்குள் பார்வை துளைத்து
என்னை தொலைத்தேன்
சற்றே நகர்ந்து என்னை தொட்ட காற்று
“என்னை துளைத்தாலும் எப்படி பார்ப்பாய்
காணாத என்னை”
என்று ஏளனம் செய்கிறது
சரி தான் காணாதது
காண பெறுவதில்லை.”
சற்றே பேருந்து நகர்ந்த பொழுது வீராவை தொட்ட காற்று அந்த கவிதையின் கடைசி வரிகளை தந்துவிட்டு கடந்தது. வீரா பிறந்தது முதல் மொத்தமாக ஒரு மூன்று முறை மட்டுமே தான் இந்த நகரத்திற்கு வந்து இருக்கின்றான். அவனை அந்த நகரம் அத்தனை வெகுவாய் ஈர்த்ததில்லை. எல்லோரையும் போலவே தான் வீராவும்; அவனுக்கும் அவன் பிறந்த வளர்ந்த ஊரின் மீதிருந்த காதலை எந்த பெரிய நகரங்களும் மாற்றிவிடவில்லை. குறிப்பாக சென்னையை அவன் அதிகம் வெறுக்கவே செய்திருக்கின்றான். வெறுப்புகளை கடந்து இன்று வீராவின் மனம் சொல்கிறது, “பிடித்தும் இருக்கின்றது இந்த இடம் எனக்கு!”
அந்த பேருந்து நகர்ந்து கொண்டிருந்த திசைக்கு எதிர் திசையில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் தான் தாஸூடைய வீடு. வீராவின் சித்தப்பாவின் மருமகன் தான் தாஸ்.வீராவிற்கு ஒரு சுற்று தள்ளி மச்சான் முறை.
“என்னிக்கு விஷேஷம்? அம்மாவும் ட்ராவல் பண்ண முடியாது! பேசாம எனக்கும் குமார் அண்ணனுக்கும் flight ல டிக்கெட் போடு ஒரே நாள் ல போய்ட்டு வர மாதிரி! ” ஒரு வாரத்திற்கு முன்னதாக இந்தியாவிற்கு கிளம்புவதற்கு முன் தாஸின் அப்பா மறைந்த செய்தி கேட்டு நிவாஷினியிடம் வீரா சொன்னது.
அன்று சனிக்கிழமை, குமார் முதல் நாள் இரவே வீராவின் வீட்டிற்கு வந்துவிட்டார், அதிகாலையில் மதுரை விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானத்தில் கிளம்பிய வீராவும் குமாரும் அடுத்த ஒரு மணிநேரத்தில் சென்னையின் வான் வெளியில் பறந்து கொண்டிருந்தார்கள். அந்த விமானம் தரையிறங்க தயாராகிக் கொண்டிருந்தது. விமானத்தின் அந்த ஜன்னல் வழியே தெரிந்த சின்ன சின்ன வீடுகள், சாலைகள் பறந்துகொண்டிருந்த வாகனங்கள் எல்லாவற்றையும் கூர்மையாக கவனித்துக்கொண்டிருந்தான் வீரா. மனம் நாம் தொலைத்த பொருள் ஒன்றை தேடும் பொழுது, சம்மந்தம் இல்லாத இடங்களில் எல்லாம் நம்மை தேடச் சொல்லும். வீராவும் அப்படி தான் அந்த சின்ன சின்ன வீடுகளில் ஒன்று ஷாராவின் வீடாக இருக்காதா! என்று தேடிக்கொண்டிருந்தான்.
விமானம் தரையிறங்கி விட்டது. இனி அந்த நாளில், அத்தனை வீடுகளை மொத்தமாக வீரா காணப்போவதில்லை.
“பஸ் ல போகலாம் பா” என்ற குமாரிடம் “அங்கிருந்து flight ல கூட்டிட்டு வந்து இருக்கேன் பஸ் ல போலாம் ன்னு” என்று சொல்லிக்கொண்டே ஒரு டாக்ஸியை பிடித்தான் வீரா.
இருக்கும் 10 நாள் விடுமுறையில் வீராவின் ஒவ்வொரு நிமிடமும் அவன் செலவழிக்கும் காசை விட பெரியது என்று நினைத்தான் வீரா. அவர்கள் இருவரும் தாஸின் வீட்டை அடைந்தார்கள். “எல்லோரும் அந்த பூங்கா கிட்ட இருக்க குளத்தாங்கரை ல தான் பா இருக்காங்க” குமாரிடம் உறவினர் ஒருவர் சொன்னதை கேட்ட வீரா, “சரி வாங்க போவோம்” என்று நகர்ந்தான். இருவரும் அந்த உறவினர் சொன்ன பூங்காவை அடைந்தார்கள்.
பூங்காவிற்கு வெளியில் ஒரு வண்டி நின்றுகொண்டிருந்தது, அதில் ஷாராவின் பெயர் எழுதப்பட்டிருந்தது.தன் ஃபோனை வெளியில் எடுத்த வீரா அந்த வண்டியையும் கூட படம் எடுத்துக்கொண்டான். இதற்கு முன்னர் ஒருமுறையும் வீராவை சென்னை இப்படி வரவேற்றதில்லை. கடைசியாக, கபினியிடம், “இனி வீராட்ட நான் பேச முடியாது” என்று ஷாரா சொல்லி சில மாதங்கள் ஆகிறது . இடையில் ஒரேயொரு முறை, வீரா வேலை விஷயமாக தன்னிலை மறந்து கோபத்தில் இருந்த பொழுது மட்டும் கபினி கேட்டுக்கொண்டதற்காக ஷாரா வீராவிற்கு மெசேஜ் அனுப்பினாள். அவர்கள் மூன்று பேருக்கும் தெரியும், ஷாராவின் ஒரு மெசேஜ் வீராவை எந்த மனநிலையில் இருந்தும் மாற்றிவிடும் என்று.
“தீடீர்ன்னு எப்படி! நீ தான் சொன்னியா?” கபினியை கேட்டான் வீரா.
“எனக்கு என்ன பண்றது தெரில! நீ ரொம்ப ஒரு மாதிரி இருந்த, எனக்கே என்ன டா நம்மை போய் இப்படி கேட்ருக்கோம் ன்னு ஒரு மாதிரி தான் இருக்கு! அவங்க என்னை என்ன நினைச்சிருப்பாங்க” என்று சிணுங்கினாள் கபினி
“இனி இப்படியெல்லாம் பண்ணாத முன்னாடியே சொல்லிருக்கேன் அவங்களை டிஸ்டர்ப் பண்ணாத ன்னு நீங்க friends ஆனா கூட பரவால்ல! உன் நம்பர் கூட அவங்க save பண்ணலை! சரி! என்ன பேசுனீங்க ரெண்டு பேரும்” என்று வீரா ஆவலாய் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே “அங்க நின்னு என்ன யோசிச்சுட்டு இருக்க?” குமாரின் குரல் கேட்டது. நினைவுகளில் இருந்து நிஜத்திற்கு வந்தான் வீரா.
அந்த பூங்காவில் இருந்து ஓரிரு கிலோமீட்டர் சுற்றளவில் தான் ஷாராவின் வீடும் இருக்கின்றது; இருந்தும் என்ன செய்ய! இருவரும் பேசிக்கொள்வதில்லையே! விமானம் தரையிறங்கிய நொடி முதலாய்,”நான் இங்க தான் இருக்கேன் உங்க வீடு எங்க?” வீராவின் மனம், மனவெளியில் ஷாராவிடம் கேட்டுக்கொண்டே இருந்தது.ஷாராவின் மனவெளியில் இருந்து வந்த புரியாத பதிலாக தான் ஷாராவின் பெயர் தாங்கிய அந்த நான்கு சக்கர வாகனம் அங்கே நின்றுக் கொண்டிருந்ததாய் அவன் நினைத்துக்கொண்டான். .
message தான் அனுப்ப முடியாது. எல்லாரும் பார்க்கும் படி, வீரா அன்றைய ஒவ்வொரு நிகழ்வுகளையும் whatsapp status இல் பதிவேற்றினான். எல்லோரும் பார்த்தார்கள்; ‘ஷாரா பார்த்தாளா?’ அது தான் தெரியாது. பொம்மைகளுக்கும் உயிர் இருப்பதாய் நம்பிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் நம்பிக்கையை ஒத்தது தான் வீராவின் நம்பிக்கை. அவள் ‘பார்ப்பாளா? பார்த்தாளா?’ எதுவும் தெரியாது. பார்த்தால், வீட்டிற்கு அழைப்பாள் என்று நம்பிக்கொண்டிருந்தான் வீரா. பொம்மை விஷயங்களில் குழந்தைகளின் நம்பிக்கை பொய்யாவது போலவே தான் அன்றும் நடந்தது. ஷாராவிடம் இருந்து அன்றும் எந்த மெசேஜூம் வரவில்லை. சாலையில் கடந்த வாகனங்கள் ஒன்றையும் வீராவின் கண்கள் விட்டுவைக்கவில்லை. ஆனால், வீராவின் கண்களில் அவன் தேடிக்கொண்டிருந்த பொம்மை தான் சிக்கவில்லை.
“flight க்கு இன்னும் time இருக்கு ஏர்போர்ட்க்கு பஸ்லேயே போகலாம் பா” குமார் சொன்னதை கேட்டவுடன் கொஞ்சமாக வீராவின் மனம் கனத்தது. இத்தனை அருகில் வந்தும் சந்திக்க முடியவில்லை. இனி எப்போது இந்த சந்திப்பு நடக்கப்போகிறது! இந்த எண்ணம் தான் வீராவின் மனதை கனக்கச் செய்தது.
இருவரும் பேருந்தில் ஏறினார்கள். ஊரைப் பிடிக்காத வீராவிற்கு ஊரை விட்டு நகர பிடிக்கவில்லை. அவன் மனதின் கனமோ என்னவோ அந்த பேருந்தும் கூட வேகமாக நகர முடியாமல் ஊர்ந்தே சென்றது. அந்த நெரிசல் வீராவை அங்கேயே இருக்கச் சொன்னது போல் இருந்தது.இந்த தாமதங்களுக்கு இடையில் ஷாராவிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தால் போதும், வீரா பேருந்தை விட்டு இறங்கி விடுவான். அந்த சூழலில் வீரா மனதில் உதித்த கவிதை தான் அது.
“மடை இல்லா குழிகள் அதில்
மணல் குளித்த மழைநீர்;
மக்கிய அறிவுகள் கொட்டிய
மக்காத குப்பைகள்;
மந்தை வாகனங்கள் அதில்
மலர்ச்சி இல்லா முகங்கள்;
நகராத காற்று அதை
நசுக்கி கொண்டிருக்கும் புகை
நடுவே நான்!
பிடித்தும் இருக்கிறது இந்த இடம் எனக்கு
இங்கு தான் எங்கோ
இங்கு எங்கும்
இல்லாத இடைவெளியில் உன்
இதயம் தொட்டு திரும்பிய
காற்றும் இருக்கிறதென்று
கண்டதையெல்லாம் விட்டு
காற்றுக்குள் பார்வை துளைத்து
என்னை தொலைத்தேன்
சற்றே நகர்ந்து என்னை தொட்ட காற்று
“என்னை துளைத்தாலும் எப்படி பார்ப்பாய்
காணாத என்னை”என்று ஏளனம் செய்கிறது
சரி தான்! காணாதது
காண பெறுவதில்லை.”
காண முடியாத காற்றை எப்படி காண முடியும்! அப்படியே தான் இனி வீரா அவன் எதிர்பார்த்த சந்திப்பும் நிகழப்போவதில்லை என்று வீரா தீர்மானித்துக்கொண்டான். நெரிசல்களை கடந்து வேகமாக நகர்ந்தது பேருந்து. ஷாரா அப்போது தான் அந்த கவிதையை வாசித்து முடித்தாள்.
குமாரும் வீராவும் விமான நிலையத்தை அடைந்திருந்தார்கள் . பாதுகாப்பு சோதனைகள் முடிந்து தன் போனை கையில் எடுத்த வீராவிற்கு ஒரே பூரிப்பு, அறிவிக்கையில் ஷாராவின் பெயரோடு, “and 2 others liked your post”என்று இருந்தது.
அவன் எழுதிய அந்த கவிதையில் அவள் என்ன புரிந்துக்கொண்டாளோ? சமூக அவலங்களைச் சொல்லும் கவிதை என்று நினைத்தாளோ? எதுவும் தெரியவில்லை. இதற்கு முன்னர் இப்படியொரு அதிசயம் நிகழ்ந்ததும் அதிசயமான ஒரேயொரு தருணத்தில் தான், கபினி கேட்டுக்கொண்டதற்காக ஷாரா வீராவிடம் நலம் விசாரித்த பொழுது அந்த அதிசயம் நடந்தது. இன்று இந்த அதிசயம் எப்படி நடந்தது! நினைத்து பூரித்துக்கொண்டே பறந்தான் வீரா, விமானம் மதுரையில் தரையிறங்கிய பின்னரும் கூட அவன் பறந்து கொண்டே இருந்தான்.
ஆனால், அவன் மனதில் இருந்த அந்த தேடல் முற்றுப்பெறவில்லை. ஷாராவுடனான சந்திப்பு, long conversation, எப்போது நடக்கும்?
வீராவின் திருமணத்திலும் வீரா சென்னை வந்த போதிலும் நிகழாத சந்திப்பு இனி எப்போது நிகழும்? இனி எப்படி நிகழும்? அப்படி வீராவும் ஷாராவும் சந்தித்துக்கொண்டால், விமல் சொன்ன அந்த long conversation நடக்குமா? ஷாராவை நேரில் கண்டால், வீராவால் பேச முடியுமா?தொடர்ந்து படியுங்கள்.