“அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க– அப்படியென்றால் என்ன?” இந்த கேள்வியை என்னிடம் நிறைய பேர் கேட்டு இருக்கின்றார்கள். காரணம், சில மாதங்களுக்கு முன்பு வரை வாட்ஸ் அப்பில் என்னுடைய ப்ரொபைலில் அந்த வாக்கியத்தை வைத்திருந்தேன். அது ஒன்றும் என்னுடைய சிந்தனை கிடையாது. அது திருவள்ளுவரின் போதனை. நாம் எல்லோருமே திருக்குறள் படித்து இருப்போம் தான். ஆனால், எல்லா திருக்குறளும் படித்திருக்க வாய்ப்பில்லை. அப்படி அதிகம் பேர் படித்திருக்க வாய்ப்பில்லாத ஒரு திருக்குறளின் ஆரம்பம் தான்,”அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க“
ஒரு குறளின் ஆரம்பம் தான் கதை; அந்த மூன்று வார்த்தைகள் தான் கதை; அதை எப்படி ஆரம்பிக்கலாம்?
நம் எல்லோருக்கும் திருக்குறள் எத்தனை வயதில் அறிமுகம் ஆகியிருக்கும். நமது மூன்றாவது வயதிலேயே அறிமுகம் ஆகியிருக்கும்?! அப்போதிலிருந்து தொடர்ந்து வருடத்திற்கு ஒரு குறளேனும் படித்திருப்போம். குழந்தைகளுக்கு குறள் கற்பிப்பது என்பது சாதாரணமானது அல்ல; அவர்களுக்கு எந்த குறள்கள் எளிமையானதாக இருக்கும் என்று தேர்வு செய்ய வேண்டும். எது அவர்கள் புரிந்து கொள்ளும்படி இருக்கும் என்று அதற்கும் ஏற்ப அந்த தேர்வு இருக்க வேண்டும். இப்படி தெரிவு செய்யப்பட்ட ஒரு குறள் என்னுடைய மூன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்தது.
தமிழ் அம்மா பொன்னி, யானை எத்தனை பெரியது? என்று ஒரு கேள்வியை முன்வைத்த பொழுது எல்லோர் மனதிலும் ஒரு யானை தோன்றியது, பொன்னி மிஸ், யானையின் தந்தங்கள் எத்தனை பெரியது என்று கேட்டவுடன் எல்லோர் மனதிலும் தோன்றிய யானைக்கு தந்தம் முளைத்தது. தொடர்ந்து பொன்னி மிஸ், இப்போது புலி ஒன்று இருக்கிறது, புலி பெரிதா? யானை பெரிதா? என்று கேட்டு நிறுத்தி, யானை தான் பெரிது என்று முடித்தவுடன், புலிக்கு முன்னே யானை மிகப்பெரிதாய் தெரிந்தது. ஆனால், புலியை கண்டு யானை அஞ்சுமா? யானையை கண்டு புலி அஞ்சுமா? என்றதும் எல்லோரும் ஒட்டு மொத்தமாக புலியை பார்த்து யானை தான் அஞ்சும் என்று ஆர்பரித்தார்கள். இப்படி பாடம் எடுத்துக்கொண்டிருக்கும் தமிழ் ஆசிரியரை ஒரு பக்கம் காட்டி, மறுப்பக்கம் அந்த புலியாக ரஜினியை காட்டினால் எப்படி இருக்கும்?! அப்படித் தான் ரஜினியின் அறிமுக காட்சியை அமைத்திருந்தார்கள்.
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
ஆனால், இந்த குறளுக்கும் ரஜினியின் அறிமுக காட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. கதையில் ஒரு காட்சியின் பின்னணியில் இந்த குறள் எழுதப்பட்டிருக்கும் கதைப்படி ரஜினியை புலி என்றும் வில்லனை யானை என்றும் குறிக்கும்படியும் கதைக்கும் காட்சிக்கும் பொருந்தி போகிற படியும் அந்த காட்சியில் இந்த குறள் இடம் பெற்றிருக்கும்.
வியாபார ரீதியில் வெற்றி பெற்ற படங்களில்………….. இல்லை! இல்லை! தனித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை! பொதுவாக அனேமான ரஜினி படங்களில், ரஜினியின் அறிமுக காட்சி சாதாரணமானதாகவே தான் இருந்திருக்கின்றது. அதை அசாதாரணமாக மாற்றுவது ரஜினியின் தோற்றம் மட்டுமே.
ஜெயில் கம்பிகளுக்கு பின் நின்று கொண்டு சாதாரணமாக திரும்புவது; பூஜையறையில் இருந்து வெளியே வருவது;கோவிலில் சாமி கும்பிடுவது என்று சாதாரணமானதாகவே தான் இருந்திருக்கின்றது ரஜினியின் அறிமுக காட்சிகள்..இது எப்படி அசாதாரணமானதாக ஆகிறது?!
நீங்கள் ஏன் ரஜினி படத்தை காண தியேட்டருக்கு செல்லுகிறீர்கள் என்று உங்களையே கேளுங்களேன்.
“அது!.. அந்த பெரிய ஸ்க்ரீன்ல மொத்தத்துக்கும் அந்த மனுஷனை தெரியும் போது; அதென்னன்னு சொல்ல முடியாது; அந்த மனுஷன்கிட்ட என்னமோ இருக்கு” இது தான் அநேகமானவர்களின் பதிலாக இருக்கும்.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்;
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்;
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்;
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்;
அன்னையையும் அத்தனையும் அன்றே
நீத்தாள்; அகன்றாள், அகலிடத்தார் ஆசாரத்தை;
தன்னை மறந்தாள்; தன் நாமம் கெட்டாள்;
தலைப்பட்டாள், நங்கை தலைவன் தாளே!.
இது ஒரு தேவாரப் பாடல், இந்த பாடல் போன்றே தான் ரஜினியின் அறிமுக காட்சிகளும் இருந்திருக்கின்றது. ரஜினியை காண வரும் மக்களுக்கு ரஜினியை முழுமையாக காட்டாமல், கதையில் அவர் யார் அவர் பெயர் என்ன என்பதெல்லாம் பற்றி யாரேனும் சொல்லவோ பேசவோ செய்வார்கள். பின் மின்னல் போல கடக்கும் நொடிகளில் கொஞ்சமாக அவரின் முகத்தையோ உருவத்தையோ காட்டுவார்கள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவரை காட்டி அந்த பெரிய திரை முழுதையும் ஆக்கிரமித்து அவரின் முழு உருவம் தோன்றும் அந்த ஒரு நொடியில் பார்வையாளர்கள் அத்தனை பேரும் தன்னை மறந்து தன் பெயரை மறந்து ரஜினியெனும் ஆதர்சத்தால் ஆட்கொள்ளப்பட்டிருப்பார்கள்.
சமீபத்திய ரஜினியின் அதிரடி மசாலா படங்களில் கூட இல்லாதது போன்ற ஒரு அறிமுக காட்சி இயக்குநர் ஞானவேலிடம் நான் எதிர்ப்பாராத ஒன்று.
ரஜினி போன்ற பெரிய கதாநாயகர்களை வைத்து கதை செய்யும் பொழுதோ அல்லது அவர்களை ஒரு கதைக்குள் கொண்டு வரும் பொழுதோ கதை அவர்களை மையப்படுத்தி நகர்ந்தால் போதும், மற்றபடி மாற்றங்கள் எதுவும் செய்து கதையை கெடுக்க வேண்டியது இல்லை. வேட்டையன் படம் முழுதும் ரஜினியை தொட்டே தான் நகர்கிறது, அப்படி நகரும் கதைக்கும் அந்த கதையின் மையமாக இருக்கும் ரஜினி கதையில் யார் எப்படியானவர் என்பதை காட்டும் படியான அறிமுக காட்சி. அந்த அறிமுக காட்சி கதைக்கு பங்கம் வராமல், ரசிகர்களை திருப்தி செய்து இருக்கின்றது.
பேட்ட திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஒரு பேட்டியில், பார்வையாளர்கள் ரஜினியை காண்பதற்கு தான் திரையரங்கு வருகிறார்கள். அவரை எப்படியெல்லாம் glorify பண்ணலாம். இது தான் எங்களின் நோக்கமாக இருந்தது. இதை மனதில் வைத்து தான் வேலை செய்தோம் என்றார். இப்படி, ரஜினி படத்தில் பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் Rajnification எல்லாம் சேர்த்து கதைக்கும் குறையில்லாமல், பார்வையாளர்கள் ரஜினியால் ஆட்கொள்ளப்பட்டு கொண்டிருக்கும் பொழுதே கொஞ்சம் கொஞ்சமாக ரஜினியோடு அவர்களை கதைக்குள் இட்டு சென்றார் இயக்குநர் ஞானவேல்.
இப்படி நாற்பது நிமிடங்கள் ரஜினியை காட்டி கட்டிப்போட்டு நம்மையும் ரஜினியையும் கதைக்குள் கூட்டி வந்து விட்டிருப்பார் இயக்குநர் ஞானவேல்.
நாம் எல்லோரும் ஜெய் பீம் படத்தில் எப்படி கதையால் கட்டிப் போடப் பட்டிருந்தோமோ அதே மாயத்தை இந்த திரைப்படத்தின் சில காட்சிகளும் செய்கிறது. மிக முக்கியமாக ரஜினியும் அமிதாப்பும் வாதிடும் காட்சி. ஆங்கிலத்தில் intense என்று ஒரு வார்த்தை இருக்கிறது. அதை மிகச்சரியாக மொழிபெயர்த்தாலும் மிகச்சரியான அர்த்தத்தை தருகிறதில்லை. அந்த intense என்கிற வார்த்தையின் அர்த்தமாக ரஜினியும் அமிதாப்பும் தங்கள் தரப்பு நியாங்களை வாதிடும் அந்த காட்சி அமைந்திருக்கிறது. ரஜினியின் திரைப்படத்தில், ரஜினியின் கண்கள் செய்யும் மாயம், ரஜினியின் கண்களில் இருக்கும் அந்த intense, ஜெயிலர் படத்தில் சிவராஜ் குமார் கண்களில் இருந்தது.அதற்கு பின்னர் இப்போது, வேட்டையன் திரைப்படத்தில், ரஜினியும் இருக்கும் காட்சியில் அமிதாப்பின் கண்களில் அதையெல்லாம் விட பெரிய intense; அமிதாப் கண்களுக்கு நிகராக ஒரு பக்கம் ரஜினி யின் presence, காட்சியை இன்னும் intense ஆக்கியிருந்தது. அந்த மாஜிக்கை விவரிக்க ஆங்கிலத்திலும் கூட எந்த வார்த்தைகளையும் தேட முடியாது.
Theatre moments என்பார்கள். சில காட்சிகள் திரையரங்கில் பெரிய திரையில் காணும் பொழுது தரும் உணர்வை மொபைல் போனிலோ டிவியிலோ காணும் பொழுது தருவதில்லை. ரஜினிக்கும் அமிதாப்பிற்கும் இடையில் நடக்கும் அந்த உரையாடல் theatre moments களில் ஒன்று.
கதையும் காட்சியும் அத்தனை intenseஆக நகர்ந்து கொண்டிருக்கும் பொழுது, சில காட்சிகளின் பின்னணியில், கதையின் அந்தந்த அத்தியாங்களுக்கு பொருந்தி போகிற படி சில திருக்குறளை எழுதி வைத்திருந்தார் இயக்குநர். அதில் அவர் முழுமையாக காட்டாத, பெரிதும் அறியப்படாத குறள்களில் ஒன்று,
“அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை“
அறம் செய்வதை அப்போதே செய்ய வேண்டும்; பின் செய்துகொள்ளலாம் என்று தள்ளிப் போடக் கூடாது.
இது தான் கதையின் கரு என்று நான் எடுத்துக்கொள்கிறேன். நீதி விரைவாக கிடைக்க வேண்டும். விரைவாக கிடைக்கும் முடிவு நீதியாக இருக்க வேண்டும் அநீதியாக இருந்துவிடக்கூடாது.அறம் செய்கிறேன் என்கிற ஆர்வத்தில் அறத்தை மறந்து விடக்கூடாது.கதையின் பொருள்(சப்ஜெக்ட்) இது தான்.
இதை இயக்குநர் அவருக்கு தெரிந்த அரசியல் நியாங்களோடு ரஜினி படமாக கொடுத்து இருக்கின்றார். அழுத்தமான கதையை காட்சியை உரையாடல்களை எழுதுவதில், இயக்குனருக்கு எந்த சிரமங்களும் இருந்தது போல் தெரியவில்லை. ரஜினி படமாக இந்த கதையை எப்படி செய்வது என்பதில் தான் அவருக்கு கொஞ்சம் சிரமங்கள் இருந்திருக்கும். இயக்குநர் ஞானவேலை பொருத்தமட்டில், அவருக்கு அது புது முயற்சி, பயிற்சியும் கூட. அந்த புது முயற்சியில் 85 சதவீதம் வெற்றியும் கண்டுவிட்டார்.
இந்த 85 சதவீத வெற்றியை அதாவது, தான் எடுத்துக்கொண்ட கதையை ரஜினி படமாக மக்களிடம் கொண்டு சேர்க்க அவர் எடுத்த பெரும் முயற்சியில் அவர் தடுமாறியது ஆங்காங்கே வெளிப்பட்டிருக்கும், அப்படி வெளிப்பட்டது தான் மீதம் உள்ள 15 சதவீதம்.
ஒரு காட்சியில், “அவனுடைய(வில்லன்) செக்யூரிட்டியை கூட உங்களால் தாண்ட முடியாது” என்று ஒருவர் சொல்லி முடித்ததும். அடுத்த காட்சியில் கண்ணாடி கதவுகளை உடைத்துக்கொண்டு பறந்து வந்து வில்லனின் அறைக்குள் வில்லனின் செக்யூரிட்டி விழுகிறார், உடைக்கப்பட்ட கதவிற்கு வெளியே ரஜினியை காட்டுகிறார்கள். மாஸ் சீன்! மாஸ் Entry! தியேட்டரில், அனிருத் இசையை தாண்டி விசில் சத்தம் காதை கிழிக்கிறது. அதோடு அதை அப்படியே விட்டிருக்க வேண்டும். அங்கே வெளியே ஒரு சண்டை நிகழ்ந்து முடிந்திருப்பது அந்த சண்டையை காண்பிக்காமலேயே பார்வையாளர்களுக்கு அந்த ஒரு காட்சி மூலம் கடத்தப்பட்டிருக்கும்.ஞானவேல் அதோடு விடாமல், அங்கு இருந்து பின்னே சென்று அந்த சண்டை எப்படி நடந்தது என்று நமக்கு காண்பிப்பார்.அந்த சண்டை கத்திருக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது கச்சிதமாக எடுக்கப் பட்டிருக்க வேண்டும். அந்த சண்டையில்லாமலேயே மாஸாக இருந்த ஒரு காட்சியை அந்த சண்டையை காட்டி தமாஷாக ஆகிவிட்டார்கள்.இப்படி ரஜினியை மாஸாக காட்டுவதற்கு எது போதும் என்பதை ஒரு இயக்குநர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒரு காட்சியில், அபிராமி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பார்; அவர் உட்கார்ந்திருந்த தோரணை மாறி, ரஜினி கால் மேல் கால் போட்டு உட்காருவார், அவ்வளவு தான் அது போதும்; அவரை மாஸாக காட்ட. அந்த இடத்தில் அந்த காட்சி கதையையும் எதையும் உறுத்தாமல் மாஸாக இருக்கும். இப்படி எது போதும் என்று உணராமல் இரண்டே இரண்டு இடங்களில் ரஜினிக்காக அமைக்கிறேன் என்று ஞானவேல் அமைத்த காட்சிகள் தவிர்த்து. இது முழுமையான ரஜினி படமாக இருக்கும் அதே வேளையில் இயக்குநர் ஞானவேலின் படமாகவும் இருக்கிறது.
வேட்டையன் என்று பெயர் வைத்து, கதாநாயகனை வேட்டையனாகவே காட்டி; அந்த கதாநாயகனை வைத்தே காவலர்கள் வேட்டையனாக இருக்க கூடாது என்று முடிதத்தே மாஸ் தான்.
துஷாராவை அத்தனை இயல்பாக நடித்திருந்தார். நாசர் போன்ற சில நடிகர்களை நீங்கள் கவனித்து இருந்தீர்கள் என்றால் ஒன்று புலப்படும்; நடை உடை பாவனை என்று அவர்கள் முன்னம் நடித்த கதாபாத்திரத்திற்கும்; அடுத்த நடிக்கும் கதாபாத்திரத்திற்கும் அத்தனை வேறுபாடுகள் இருக்கும். இரண்டையும் ஒரே நேரத்தில் கண்டால் வேறு வேறு ஆட்கள் நடித்தார்களோ என்னும் அளவிற்கு அந்தந்த கதாபாத்திரமாகவே மாறியிருப்பார்கள். பஹத் பாசில் அப்படியானவராக தான் இருக்கின்றார். மாமன்னன் படத்தில் பார்த்த பகத் பாசிலும், வேலைக்காரன் படத்தில் பார்த்த பகத் பாசிலும், வேட்டையன் படத்தில் இருக்கும் பகத் பாசிலும் முற்றிலும் வேறு வேறு ஆட்களாக தெரிகிறார்கள். மனசிலாயோ பாடலில் அற்புதமாக ஆடியது என்னவோ மஞ்சு வாரியார் தான். ஆனால், கருப்பு கோட் கண்ணாடி என்று ரஜினியின் charisma எல்லோரையும் ஓரம் கட்டியிருந்தது. அனிருத் ரஜினி மஞ்சுவாரியர் தினேஷ் இவர்களில் யார் காரணம் என்று தெரியாது, மனசிலாயோ பாடல், நம்மை எழுந்து ஆடச் சொல்கிறது.
ஒரு சண்டைக்காட்சி முழுமையாக வெட்டப்பட்டிருக்க வேண்டும்; மற்றொரு சண்டைக்காட்சி இன்னும் தீவிரமாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
சண்டைக்காட்சிகள் தொடங்கும் முன்னதான வசனங்கள் அல்லது அதற்கு முந்தைய காட்சிகள் மிக முக்கியமானது; அங்கே ஒரு சண்டை தேவை என்பதை வசனமோ அல்லது முந்தைய காட்சிகளோ அல்லது கதையின் ஓட்டமோ தீர்மானிக்க வேண்டும். இதில் ஒன்றும் பிசகி விடக்கூடாது.ஆனால், கடைசி சண்டைகாட்சியில் சில பிசகுகள் எட்டிப்பார்த்து விட்டது.. தப்பி ஓட இருக்கும் வில்லனை தேடி பறந்து வந்து தலைவர் இறங்கும் பொழுது எல்லோரும் சில்லறையை சிதற விட்டுக்கொண்டிருக்க இதெல்லாம் எனக்கு எடுக்க வராது என்பது போல செய்து இருக்கிறார் ஞானவேல்.
கத்தரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் சொன்ன சண்டை காட்சியும்; கடைசி சண்டைக்காட்சியின் ஆரம்பத்தில் நிகழ்ந்த சில பிசகுகளும் தவிர்த்து. மொத்தமாக சரியான ஒரு பொழுது போக்கு படமாக இருக்கும் அதே வேளையில் படத்தின் மூலம் இயக்குநர் சொல்ல வந்த அத்தனையும் சொல்லியிருக்கின்றார்.
நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று ஞானவேல் சொல்லியது போல தோன்றவில்லை. ஆனாலும், ஒரு பக்கம் சில பாஜக சார்பு வலைப்பக்கங்கள் ஞானவேலுக்கு எதிராகவும் படத்திற்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.இந்த பிரச்சாரம் புரிதலற்றது அனாவசியமானது.
படம் பேசும் அரசியல் கருத்துக்களில் சில கருத்துக்களில் இருந்து நாம் மாறுபடுகிறோம்.எல்லா வியாபாரங்களிலும் நேர்மை அருகி போய் விட்டது தான். நாம் நம்ப மறுத்தாலும் எல்லாமே எல்லா காலத்திலுமே வியாபாரம் தான். நேர்மை எங்கெல்லாம் அருகி போகிறதோ அங்கெல்லாம் குற்றம் அதிமாகிறது.உழைப்பிற்கான மதிப்பு கிடைக்காத இடங்களில் தான் நேர்மை தடுமாறுகிறது.நேர்மை தடுமாறாமல் இருக்கும் சமூகம் எல்லோர் உழைப்பையும் மதிக்க வேண்டும்.
சமூகத்தில் எந்த ஒன்றும் நமக்கு இலவசமாக கிடைக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. நான் சொல்லும் இலவசம் என்பது கட்டணம் பற்றியது அல்ல உழைப்பை பற்றியது. ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருக்கின்றார்கள் என்றால், அப்பா உடல் வழு இருக்கும் வரை வேலைக்கு செல்வார். அம்மா வீட்டு வேலைகளை பார்த்துக்கொள்கிறார். இந்த இரண்டு பொறுப்புகளையும் அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகள் எடுத்துக்கொள்ள முடியாது.அதே வேளை அவர்கள் வளர்ந்துவிட்ட பின், அதுவரை அவர்களுக்காக உழைத்த அப்பா அம்மாவிற்காக அந்த குழந்தைகள் உழைக்க வேண்டும். இப்படி சமூகத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் எல்லாம் யாரோ ஒருவரின் உழைப்பால் கிடைப்பது; அதன் பலனை பெற்று அதை கொண்டு வளர்ந்த நாம் இந்த சமூகத்திற்கு கைமாறாக ஏதும் செய்யாமல் போனால், அது தான் இலவசம்; அது தான் ஊழல்.
இந்த சமூகத்தில் யாரோ ஒருவரின் உழைப்பின் பலனால் நாம் பெறும் பயன் கொண்டு நாம் வளர்ந்துவிட்ட பின் நம்முடைய உழைப்பை இந்த சமூகத்திற்கு எந்த அளவில் திருப்பி தருகிறோம் என்று எல்லோரும் சிந்திக்க வேண்டும். அந்த சிந்தனை இருந்தால். எல்லா இடங்களிலும் நேர்மை இருக்கும். அந்த இடத்தை நோக்கி தான் நம் சிஸ்டம் நகர வேண்டும்.
அப்படி ஒரு இலக்கை நோக்கி நாம் நகராத வரை சமூகத்தின் எல்லா தேவைகளும் வியாபாரம் ஆக்கப்பட்டு அதை சுற்றி குற்றங்கள் நிகழ்வதை தவிர்க்க முடியாது.
‘நுழைவுத் தேர்வு வேண்டாம்’ என்பது விவாதத்திற்குரியது ;அதே வேளையில் எல்லோருக்கும் சமமான தரமான கல்வி கிடைக்க வேண்டும்; எல்லோர்க்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும் என்கிற வாதம் மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது.
எல்லோருடைய உழைப்பிற்கும் ஏற்ற மரியாதையை எப்போதும் எல்லா நேரங்களில் சமூகம் கொடுத்திருந்தால், எப்போது எல்லா வியாபாரங்களிலும் நேர்மை இருந்திருக்கும். ஒன்றை பெற்றுக்கொண்டு எந்த வகையிலும் அதற்கு எதையும் திருப்பி தராமல் இருக்க வேண்டும் என்று நாம் நினைக்க தொடங்கிய பொழுது தான் வியாபாரம் திருட்டாக மாறி. மருத்துவம் கல்வி நீதி போன்ற வியாபாரங்கள் சாமானியர்களுக்கு எளிதாக கிடைக்காத ஒன்றாக மாறியிருக்கிறது. இதில் குற்றம் என்னவென்று ஆராயவேண்டுமே தவிர யார் மேல் தப்பு என்கிற ஆய்வு தேவையற்றது.அதோடு அதற்கு யாரையோ குற்றம் சாட்ட நினைப்பதும் அநியாயமானது.
எப்போதும் போல், இயக்குனரின் இந்த படமும் ஒரு அரசியல் விவாதத்தை ஏற்படுத்தவே செய்திருக்கின்றது. ஆங்கிலேயர் வருவதற்கு முன் இங்கு சட்டமும் கல்வியும் எல்லோருக்கும் சமமாக இருக்கவில்லை என்பது இயக்குநரின் புரிதல்.
திருடன் தான் வான்மீகியானார். ஒரு இளவரசன் தான் இளங்கோவடிகள் ஆனார்.மாட்டுக்கும் நீதி சொன்னான் தமிழன்.ஒரு சமூகத்தையே மொத்தமாக குற்றவாளிகள் என்று ஆங்கிலேயர்கள் சட்டமியற்றி வைத்திருந்தார்கள் என்கிற செய்திகள் எல்லாம் அவருக்கு தெரிந்தா இல்லையா என்கிற வாதங்கள் கொண்டு இந்த திரைப்படத்தை மழுங்கடித்து விட வேண்டாம் என்பதும் எம் எண்ணம்.
காரணம், என்கவுண்டர் பற்றி திரைப்படம் எடுத்து வைத்திருக்கும் கருத்து சமூகத்தின் மனதில் ஆழ பதிய வேண்டிய ஒன்று. நுழைவுத் தேர்வு வேண்டும் வேண்டாம் என்பதை தாண்டி வேலைக்காக நடக்கும் தேர்வுகளுக்கான கோச்சிங் சென்டர்களில் நடக்கும் குற்றங்கள் இதுவரை பெரிய கவனம் பெற்றதில்லை. அந்த கவனத்தை இந்த திரைப்படம் கொண்டு வந்திருக்கின்றது. அரசியல் பேசும் படங்களை தரும் இயக்குனர்கள் சார்பு நிலை எடுக்க கூடாது.அவர்கள் கூடுமான வரையில் எந்த பக்கமும் சாராமல் எல்லா பக்கமும் இருக்கும் குறைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். 90 சதவீதம் ஞானவேல் அதைத்தான் செய்து இருக்கின்றார் ரஜினி படமாக.
நேரம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.