நீங்கள் எப்போதாவது அடுத்தவர் வெற்றியை உங்களுடைய வெற்றியாக கொண்டாடி இருக்கிறீர்களா? யோசியுங்கள்.

அதை யோசிக்கும் பொழுது, “வெற்றி என்றால் என்ன மாதிரி வெற்றி?” என்கிற கேள்வி உங்களுள் எழுந்திருக்க கூடும். நாம் யாருமே பெரிதாக யாருடைய வெற்றியையும் நம்முடைய சொந்த வெற்றியாக நினைத்து கொண்டாடுவதில்லை. அதிகபட்சம், பெற்றோர்கள் என்னும் ஸ்தானத்தில் இருக்கும் பொழுது மட்டும் ,நம் பிள்ளைகள் குப்புற விழுந்து தலை நிமிர்வது தொடங்கி அவர்கள் நல்ல வேலையில் சேர்வது வரைக்கும் அவர்களின் ஒவ்வொரு வெற்றியையும் நம்முடைய சொந்த வெற்றியாக நினைத்து உற்சாகம் கொண்டிருப்போம், அதையும் விட்டால், நாம் மிகவும் நேசிக்கும் யாரோ ஒருவரின் ஒரு சின்ன வெற்றி நம்மை மகிழ்வித்து இருக்கும்.

சரி, அதை விடுங்க! நம்முடைய வெற்றிக்காக எத்தனை பேர் எத்தனை முறை மகிழ்ந்திருப்பார்கள்? முதல் கேள்வியை விட இந்த கேள்வி ஒரு சுலபமான கடினமான கேள்வி. பெற்றோர்கள் தாண்டி நம்முடைய வெற்றியை கொண்டாடுபவர்களை எண்ண விரல் கூட தேவைப்படாது.

“தமிழ் சமூகத்தில் கோடான கோடி பேருக்கு நட்பு ரீதியிலும் உறவு ரீதியிலும் எவ்வித தொடர்பும் இல்லாத ரஜினிகாந்தின் வெற்றியை மட்டும் எப்படி என்னையும் சேர்த்து கோடான கோடி பேரால் தங்குளுடைய சொந்த வெற்றியாகவே கொண்டாட முடிகிறது!?” என்கிற ஆச்சிரியமான கேள்வியை எழுப்பியது ஜெயிலர் திரைப்படம்.

காதலிக்க தொடங்கியது முதல், மனைவியுடன் ஒரு ரஜினி படம் கூட ஒன்றாக திரையரங்கில் காணும் சூழல் எனக்கு இருந்திருக்கவில்லை . இந்த முறை அந்த வாய்ப்பிருந்தது, ஆனால் கூடவே எங்கள் கையில் ஆறு மாத குழந்தையும் இருந்தது. என்ன செய்யலாம் என்கிற முனைப்பில் மொத்த திரையரங்கையும் புக் செய்துவிட வேண்டும் என்கிற பேராசை எழாமல் இல்லை. டிக்கெட் புக் செய்ய முயற்சிகள் எடுத்துக்கொண்டிருந்த பொழுது, வேகமாக நடக்கும் டிக்கெட் புக்கிங், மற்றும் அதை தொடர்ந்து வந்த செய்திகளை மக்கள் கொண்டாடியதையும் கண்ட பொழுது,நம் மனதிற்குள்ளும் ஒரு கொண்டாட்டம். ஒரு வழியாக இரண்டாவது நாள் மாலை நேர காட்சிக்கு மொத்தமாக ஒரு முப்பது டிக்கெட் புக் பண்ணிவிட்டு காத்துக்கொண்டிருந்த பொழுது, எல்லா பக்கமும் ஒரே கொண்டாட்டம், அது படம் வெளியானது பற்றிய கொண்டாட்டம் இல்லை,படம் ரொம்ப நல்லா இருக்கு எப்போதும் போல் ரஜினி ஜெயித்துவிட்டார் என்கிற கொண்டாட்டம். “Yes It’s Thalaivar again!”என்கிற பூரிப்பு .

“ரஜினி தோக்கிறத மக்கள் விரும்ப மாட்டாங்க” யாரோ ஒரு விமர்சகர் ஒரு பேட்டியில் இப்படி சொல்லக் கேட்டு ஞாபகம். எத்தனை பேருக்கு இது நடக்கும், எத்தனை பேருக்கு இத்தனை பெரிய அன்பு கிடைக்கும்!

நமக்குள் என்ன இருக்கிறதோ அதுவே தான் நமக்கு வெளியில் நமக்கானதாக இருக்கும். நமக்குள் கோபம் இருந்தால், அதன் பிரதிபலிப்பாய் ஒரு கோபம் நமக்காக நமக்கு வெளியில் இருக்கும். அன்பும் அது மாதிரி தான். நமக்குள் ஒரு மகிழ்ச்சி இருந்தால் தான், அந்த மகிழ்ச்சியை மற்றவர்களுக்கு கொடுக்க முடியும்.நாம் யாருக்கெல்லாம் மகிழ்ச்சியை தருகிறோமோ அவர்கள் எல்லாம் தான் நம் மீது அன்பு செலுத்துவார்கள். நம் குடும்பத்தை தாண்டி எத்தனை பேரை நம்மால் மகிழ்விக்க முடிகிறது! குடும்பத்திற்குள்ளேயே சமயங்களில் எரிந்து விழுந்து கொள்கிறோம்.

சரி! எப்படி ரஜினியுடைய வெற்றியை எல்லோரும் தங்குளுடைய வெற்றியா கொண்டாடுறாங்க?

மொத்த தமிழ் சமூகத்தையும் அரை நூற்றாண்டாக மகிழ்விக்கும் ஒருவன் மேல் அத்தனை அன்பு இருப்பதும்; அவனுடைய வெற்றியை தன்னுடைய வெற்றியாக எல்லோரும் கொண்டாடுவதும் பெரிய ஆச்சிரியம் இல்லை பாருங்க!

ஆச்சிரியம் என்னவென்றால்? கலாநிதி மாறன் போன்ற ஒரு வெற்றி பெற்ற பெரிய நிறுவனத்தின் தலைவரின் பெரிய பாராட்டுகளையும், தான் எடுத்துக்கொண்ட துறையில் சிறிய வெற்றி கூட பெற முடியாத கருநீல காக்கை மாறன் போன்றவர்களின் தூற்றல்களையும் ஒரே தட்டில் வைத்து ஓரமாக ஒதுக்கி வைக்க முடிகிற ரஜினியின் பண்பு. இது தான் ஆச்சிரியம்.

இப்படியான ஒருத்தர் மீது ஒரு பத்து பேராவது பொறாமை கொள்ளாமல் இருந்தால்; வயிறு எறியாமல் இருந்தால் அதுவும் ஆச்சிரியம் தான். ஆனால், அதற்கு இடமளிக்காமல் ரஜினியை சுற்றியும் வயிற்றிச்சலோடு ஒரு பத்து பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த பத்து பேரும் கூட ரஜினியை திட்டித்தான் ஜீவனம் செய்கிறார்கள்.இது தான் ரஜினி என்னும் பிராண்ட் உடைய value . ரஜினியை பாராட்டானாலும் திட்டினாலும் நல்லா கல்லா கட்டலாம் என்று தெரிந்து வைத்திருப்பவர்களே தான் அதை செய்கிறார்கள்.

“எல்லாரும் என்னை மாத்தி மாத்தி திட்டிகிட்டே இருக்கீங்க ஒரு நாள் நான் யார் ன்னு காட்டுறேன்” ஜெயிலர் படத்தில் கவனம் ஈர்த்த முதல் வசனம் இது.

“என்னோட ராசி மட்டும் எல்லாருக்கும் சேரும் என்னால ஆன மட்டும் எல்லாருக்கும் லாபம்” முதல்
“பட்டத்தை பறிக்க நூறு பேரு”வரை

ரஜினிக்காக எழுதப்படுகின்ற வசனங்களும் ரஜினிக்காக எழுதப்படுகின்ற பாடல்களும் அவருடைய நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமாக அமைவதாலேயே அதிகம் கவனம் பெறுகிறது, அதன் காரணமாகவே தான் அதிகம் கொண்டாடப்படவும் செய்கிறது.

 

இயக்குனர் மனோபாலாவிடம் தாயரிப்பாளர் ஆர். எம் வீரப்பன் சொன்னதாக மனோபாலா அவர்கள் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டது, “ரஜினி மாதிரி ஒரு பெரிய ஹீரோ வச்சு கதை பண்ணும் போது அந்த ஹீரோ என்ன பண்றான், அதை சுத்தி தான் கதை இருக்கனும் மக்கள் அதை தான் எதிர்பார்பாப்பாங்க மக்கள் அந்த ஹீரோவுக்காக தான் படம் பார்க்க வராங்க”

ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் ஊர்காவலன் படம் எடுப்பதற்கு முன்பு சொன்னது. இன்று ஜெயிலர் வரை மக்கள் ரஜினி படத்தில் ரஜினி என்ன செய்கிறார் என்பதை எதிர்பார்த்து தான் வருகிறார்கள். அதை உணர்ந்தே தான் ஜெயிலர் கதை அமைக்கப்பட்டு இருக்கின்றது.இரண்டே முக்கால் மணி நேர படத்தில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீங்கள் ரஜினியை திரையில், கதையில் காணலாம்.

இப்படி ஒரு கதை அமைக்கிறதே சவாலானது தான். காரணம், என்ன செய்தாலும் அந்த படத்தில் அப்பா மகன் இந்த படத்துலயும் அப்பா மகன். அந்த படத்தில் புருஷன் பொண்டாட்டி இந்த படத்துலயும் புருஷன் பொண்டாட்டி என்று இது நரசுஸ் காபி! விஜயா காபி! நித்ரா காபி! பத்மா காபி என்று கிளம்பிவந்து விடுவார்கள்

 

சங்கர் விகடனுக்கு அளித்த பேட்டியில் சொன்னது,”முதல் தடவை படம் பார்க்கிற அந்த 3 மணி நேரத்தில் ஆடியன்ஸ யோசிக்க விடாம கதையோடு ஒன்றவைக்கிறது தான் முக்கியம்” அது ஜெயிலர் படத்தில், ரொம்ப சாதாரணமா நிகழ்ந்து இருக்கு.

‘கூட்டத்தை ஈர்க்க குரங்கு தான் குட்டி கரணம் அடிக்கனும் சிங்கம் நடந்து வந்தாலே போதும் ன்னு’ சொல்ற மாதிரி, இரண்டு மணி நேரதுக்கு மேல படத்தில் வர ரஜினி ஒரு மணி நேரம் நடக்க மட்டும் தான் செய்றார் மீதி ஒரு மணி நேரம் உட்கார்ந்து இருக்காரு, அதில் அரை மணி நேரம் கிளோஸ்அப் ஷாட்டில் அவர் கண்களை காட்டுகிறார்கள்.அவர் நடந்து வரும் அந்த தருணங்களில் அவர் கால்களை காண்பிக்கும் தருணங்களில், அந்த கண்ணாடியை காண்பிக்கும் தருணங்களில் என்று அத்தனை இடங்களிலும் பின்னணி இசைக்கும் அவசியம் இல்லாமல் விசில் சத்தம் இருட்டை கிழிக்கிறது. ராஜா சபைக்கு வருவதற்கு முன்னர் ஒலிக்கப் படும் அறிவிப்புக்கு கொஞ்சமும் குறைவில்லாதது. ரஜினியை திரையில் காண்பிக்கும் முன் அவர் கால்களை கண்ணாடியை காண்பிப்பது என்பது. இது திரும்ப திரும்ப நிகழந்தாலும் சலிக்காமல் உற்ச்சாகத்தை கூட்ட வேண்டுமென்றால். கதையில் அதற்கான அவசியம் இருக்க வேண்டும். This story has more than enough space for such Rajini Elements.

வெறுமனே நடக்கிறது என்று சொல்லிவிடலாம், எழுதிவிடலாம். ஆனால், நடக்கும் பொழுது காட்சிக்கு தேவைப்படுகின்ற உணர்வுகளுக்கு ஏற்றாற்போல உடல் மொழியை வெளிப்படுவது என்பது அத்தனை சாதாரணமானது அல்ல. ஆனால், அதை அவர் செய்யும் பொழுது சாதாரணமாகவே தெரிகிறது.

சவாலாகவே இதை சொல்கிறேன், எந்த நடிகருடைய படத்தை வேண்டுமென்றாலும் தேடுங்கள் கண்ணுலயே கோபம் சோகம் போன்ற எல்லா உணர்வுகளையும் ஆண்மை தன்மையோடு திரையில் காட்டுகிற ஒரே ஹீரோவாக ரஜினி மட்டுமே தான் இருப்பார், இருக்கிறார். Manly Hero. அந்த manliness தான் இன்று வரை எல்லோரையும் ஈர்க்கிறது.

அண்ணாத்தே திரைப்படத்தில், தங்கை முன் கிட்டத்தட்ட கதறி அழும் ரஜினியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த அழுகை நிறைய ஆண்களால் relate செய்து கொள்ள முடியாததாக இருந்திருக்கும். சாமானியமாக ஆண்களின் கண்ணீர் எல்லார் பார்வைகளிலும் பட்டுவிடுவதில்லை. வெளியே அழுகாமல் உள்ளே அழுவதை வெளியே காண்பிப்பது எப்படி என்று அநேகமான படங்களில் ரஜினி காண்பித்துவிட்டார். அவரை எல்லா மாதிரியும் நாமும் பார்த்திருப்போம், ஆனால், நெல்சன் இந்த திரைப்படத்தில் வைத்திருக்கும் frame களை இதுவரை நம்மில் அநேகர் பார்த்திருக்க வாய்ப்பில்லை, சினிமா அறிவுஜீவிகள் வேண்டுமென்றால் பார்த்திருக்க கூடும்.

மகன் இறந்துவிட்டான் என்கிற செய்தியை முதலில் கேட்டு சோகம் உள்ளே ஊரும் பொழுதே அடுத்து அதை மனைவியிடமும் மருமகளிடமும் சொல்வதற்கு முன்னர் இருக்கும் ஒரு சின்ன gap, இல் அவர் காட்டும் உடல் மொழி  திரும்பி அவர்களைப் ரஜினி பார்த்து அவர் கேட்ட செய்தியை அவர்களுக்கு கண்களால் உறுதி செய்யும் பொழுதும், அந்த கண்களை கிளோஸ் அப்பில் பார்க்கும் பொழுதும், உடைந்து அழுக முடியாத அந்த ஆணின் கண்ணீர் துணைக்கு நம் கண்களின் கண்ணீரை அழைக்கிறது.

திரையில் சிரித்துக்கொண்டே நம்மை அழுக வைக்கும் வித்தையை ரஜினியை விட எந்த நடிகரும் செய்திருக்க வாய்ப்பே இல்லை. நாம் நம்பிக்கொண்டிருக்கும் ஒருவர் நமக்கு தரும் ஏமாற்றம் எப்போதும் நமக்கு கண்ணீரை தருவதில்லை; அது ஒரு கோபத்தை தரும்.நம்மை நாமே எள்ளி நகையாட ஒரு சிரிப்பை தரும். அந்த சிரிப்பு நம் இயலாமையின் வெளிப்பாடாக இருக்கும்.எல்லாருக்கும் மேலே நாம் இருக்கும் பொழுது நம்மை அரவணைக்க நம்மை விட பெரிதாய் யாரும் இல்லாத பொழுது, தனிமையில் அத்தகைய ஏமாற்றத்தை சந்திக்கும் பொழுது, அது எப்படி இருக்கும்? திரைப்படத்தில், தனியாக உட்கார்ந்திருக்கும் ரஜினி மேலே பார்த்து சிரிக்கும் பொழுது மேலே இருந்து அவரை காட்டுவார்கள் அப்போது அவரை கவனியுங்கள்.அந்த ஏமாற்றம் தரும் வழி அப்படி தான் இருக்கும். நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் நீங்களும் அப்படியான ஏமாற்றங்களை சந்தித்து இருந்தால், அந்த காட்சி உங்களுக்குள் இருக்கும் அந்த ஏமாற்றத்தை தோண்டி எடுக்கும்.

 

முப்பது பேரை ஒரு படத்துக்கு ஒன்றாக அழைத்துச் செல்வதே பெரிய சவாலா இருக்கு. என்ன சவால்? முப்பது பேர் ல யார் மனசுக்கும் எந்த சங்கடமும் இல்லாம இருக்கனும். அது தான் பெரிய சவால்.

ரஜினி ரசிகனா பெருந்தன்மையோடு இதை எழுதறேன், மூன்று சூப்பர்ஸ்டார் களை ஒரு கதைக்குள் கொண்டு வந்து அவர்களை பின் தொடரும் ஒரு முப்பது கோடி ரசிகர்களுக்கு எந்த சங்கடமும் இல்லமாக கையாள்வதே பெரிய விஷயம். ஆனால், நெல்சனோ மூன்று சூப்பர் ஸ்டார்களின் முப்பது கோடி ரசிகர்களும் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டாடும் அளவிற்கு கதைக்குள் காட்சிகளை வைத்து மிக அருமையாக கையாண்டு இருக்கின்றார். அந்த மூன்று சூப்பர்ஸ்டார்களை திரையில் கண்டு, இது மோகன்லால் ஷோ, no! no!சிவராஜ்குமார் ஷோ, basically ரஜினி படம் என்று ரசிகர்கள் பூரித்து கிளம்பும் பொழுது, மெல்லிய இசையின் பின்னணியில், எழுத்து இயக்கம் நெல்சன் என்று திரையில் தோன்றுகிறது. அதை கண்ட நொடியில், “இது என் படம் “ என்று அழுத்தமாய் ஒரு இயக்குனர் சொல்வது போன்று இருந்தது.

கதையை விட காட்சியமைப்புகளுக்காக பேசப்படுகிற படமாக இது இருக்கும். beast திரைப்படத்திலும் கூட நெல்சன் அந்த வித்தைகளை இறக்காமல் இல்லை. கதையில் இருந்த பலவீனம் அந்த காட்சிகளை நம்மை கதையோடு சேர்த்து ரசிக்க செய்யவில்லை. இந்த கதையில் அப்படியான பலவீனங்கள் இல்லாததால், அத்தனை காட்சி அமைப்புகளும் நம்மை ரசிக்க வைக்கிறது.

மிக முக்கியமாக, கதைக்குள் நாம் ஒன்றுவதற்கு முன்பவாகவே அந்த ஹீரோ தனி ஒருவனாக தீவிரவாதிகளை துவம்சம் செய்வது, கடலுக்கு அடியில் இருந்து வான் நோக்கி பறப்பது என்கிற கதைக்கு தேவைப்படாத அறிமுக காட்சிகள் ஜெயிலர் படத்தில் இல்லாமல் இருந்ததே ஜெயிலர் திரைப்படத்திற்கு பெரிய ப்ளஸ். சிவாஜி எந்திரன் போன்ற பல ரஜினி படங்களின் சாதாரணமான அறிமுக காட்சி போல மிக சாதாரணமாகவே ரஜினியை அறிமுகம் செய்கிறார்கள். கதைக்குள் நாம் ஒன்றிய பின்பு, ரஜினியை அவர்கள் காட்டும் அநேகமான காட்சிகள் எல்லாமே Hero introduction காட்சிக்கான material கள்.

container கவிழ்ந்து அதன் கதவுகள் தானாக அடித்துக்கொள்ளும் பொழுது அங்கே தூரமாக ரஜினியை காண்பித்து, கதவு ஒரு முறை மூடி மறுமுறை திறக்கும் பொழுது, அங்கே ஸ்டைலா மாஸா இன்னும் க்ளோஸா ரஜினியை திரையில் காண்பிக்கும் பொழுது, போலீஸ் சீருடையில் இரண்டு கதவுகள் திறக்க அங்கே இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு ரஜினி வருகிற பொழுது;பின்னால் இருந்து ரஜினி சட்டையை ஒருவர் பிடித்து இழுக்க அங்கே முன்னால் ரஜினியின் கோபாமான கண்களை காட்டி அடுத்து அவர் என்ன செய்யப்போகிறார் என்று நம்மை எதிர்பார்க்க வைக்கிற பொழுது என்று , இப்படி படம் நெடுக இருக்கும் ரஜினி elements களை பார்க்கும் பொழுது நமக்கு அப்படித் தான் இருக்கிறது. (எல்லாம் போடு தகிட தகிட moments).

அந்த காட்சிகள் எல்லாம் அனிருத்தின் பின்னணி இசையில் ஓடுகிறது. அந்த இசை நம் உணர்வை ஒரு உச்சத்தின் உச்சிக்கு அருகில் கொண்டு போய், அந்த உச்சியை தொடவிடாமல் கீழே இறக்கி விளையாடுகிறது. master படம் முதற்கொண்டு எல்லா படங்களில் அனி இதே வேலையை தான் செய்கிறார். You can’t do this to us Ani!

அலப்பறை கிளப்புறோம் என்னும் சத்தம் trumpet வழியாக ஒலித்து அது அப்படியே இன்னும் தொடராமல் நிற்கும் பொழுது, புடைத்துக்கொண்டு கிளம்பும் நம் உணர்வுகள், Why Ani? என்று அந்த பின்னணி இசையின் போதையை தேடுகிறது.

படத்தில் இருக்கும் வன்முறை காட்சிகள் எல்லாம்,கோவிகளில் இருக்கும் சிலை மாதிரி, எப்படி அந்த சிலைகள் நம்முள் எந்த வக்கிரத்தையும் தோற்றுவிப்பதில்லையோ அது போன்று ரஜினி படத்தில் வருகின்ற சண்டைக்காட்சிகளில் எல்லாம் ரஜினியே தான் நம் கவனத்தை ஆக்கிரமித்து இருப்பார் அதோடு அந்த சண்டைக்காட்சிகள் aesthetic காக எடுக்கப்பட்டு இருக்கின்றது. பாலா அமீர், படங்களில் வருவது போல குழந்தைகள் பார்க்க கூடாத காட்சிகளாக இல்லை.கம்சனை கிருஷ்ணர் வதம் செய்த கதைகளை சொல்லி குழந்தை வளர்க்கும் சமூகத்தில் கிருஷ்னர் வன்முறையை விட கிருஷ்ணர் கவனம் பெறுவது போல், ரஜினி படத்தில் சிகரெட்டை விட வன்முறையை விட கவனம் பெறுவது ரஜினியாகவே தான் இருக்கிறார் ஜெயிலர் வரை. காந்தம் சார்!

எந்த ஒரு படமும் நாம் என்ன மனநிலையில் இருந்து பார்க்கிறோம் என்பதில் சமயங்களில் வேறுபட்டுப்போகிறது. ஒரு பெரிய மகிழ்ச்சியான ஆரவாரமான  கொண்டாட்டம் வேண்டுமென்றால், திரையரங்கிற்கு சென்று இந்த படத்தை பாருங்கள். OTT இல் ரிலீஸ் ஆன பின் பத்து வேலை பார்த்துக்கொண்டு பதினோராவது வேலையாக இந்த படத்தை பார்த்தீர்கள் என்றால் நீங்கள் ஒரு கொண்டாட்டமான தருணத்தை உங்கள் வாழ்வில் தவறவிட வாய்ப்பிருக்கிறது.

அதனால் ஒன்றும் கெட்டு விட போவதில்லை தான். ஆனால், வாழ்வின் அழகான தருணங்களை இப்படியாக தான் அமைத்துக்கொள்ள வேண்டும்.

So, Sometimes Make time to Watch movies like this. And do not bother others opinion 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *