நாம் எப்போதும் எந்த திரைப்படத்தை பற்றிய விமர்சனத்தின் போதும் அந்த திரைப்படத்தின் கதையைப் எடுத்துச் சொல்வதில்லை.

 

ஆனால், நம்முடைய வழக்கத்திற்கு மாறாக இந்த திரைப்படத்தின் கதையை எடுத்துச்சொல்ல நினைக்கின்றோம். அதற்கு காரணமும் இருக்கிறது.

இந்த உலகத்தில் நிகழும் எல்லாவற்றிக்கும் ஏதோ காரண காரியங்கள் இருக்கவே தான் செய்கிறது. அந்த காரண காரியங்களையும் நம்முடைய கதைகளின் முன்கதை பின் கதை எல்லாவற்றையும் யார் தான் தெரிந்து வைத்து இருப்பார்கள்!? ஆயிரம் வருடத்திற்கு முன்னர் பிறந்த நம்முடைய பூட்டன் ஓட்டன் பற்றிய கதைகளை எல்லாம் நாம் யாரிடம் கேட்டு தெரிந்து கொள்ள முடியும்?! ஆயிரம் வருடமாக இந்த பூமியை சுற்றி வரும் நிலவிடம் தான் கேட்க முடியும். அந்த நிலவிற்கு மட்டும் தான் இந்த பூமியில் நடக்கும் அத்தனை கதைகளுக்கும் காரண காரியங்கள் தெரியும்;அந்த நிலவிற்கு மட்டும் தான் ஆயிரம் வருடங்களுக்கு  முன் நடந்த  நம்முடைய முன் கதை தெரியும் என்று ஆயிரத்து எழுபதாம் வருடத்தில் ஒரு பாட்டி குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருப்பதாக கதை ஆரம்பிக்கிறது. அந்த பாட்டி கைககாட்டும் நிலவை நமக்கு காட்டி நிகழ்காலத்திற்கு வருகிறார்கள். அங்கே குழந்தைகளை வைத்து சட்டவிரோதமான ஆராய்ச்சி ஒன்று நடக்கிறது. மூளைக்கு செயற்கையாக சக்திகளை கொடுப்பது போன்றதாக அது நமக்கு கடத்தப்படுகிறது. அங்கிருந்து ஒரு சிறுவன் தப்பிச் செல்கிறான். அவன் எங்கு தப்பிச்சென்றான் என்பதை டிராக்கர் மூலம் கண்டு, அந்த சிறுவனுக்கு அந்த ஊரில் யாரும் சொந்த பந்தம் இல்லை அவன் ஏன் அங்கு சென்றான் என்று தெரியவில்லை என்று அந்த ஆராய்ச்சி கூடத்தின் தலைமைக்குச்(வில்லனுக்கு) சொல்கிறார்கள்.

“அவன் பிறந்ததுக்கு அப்பறம் நடந்த கதை தான் உனக்கு தெரியும்; அவன் பிறக்கிறதுக்கு முன்ன நடந்த கதை உனக்கு தெரியாது ” என்று பதில் சொல்கிறார் அவர். அதாவது அந்த சிறுவனின் பூர்வீகம் பூர்வ ஜென்மம் பற்றியெல்லாம் தெரிந்தே தான் வில்லன் அந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தியிருக்க வேண்டும்.அந்த சிறுவனை பயன்படுத்துகிறான் என்று நமக்கு சொல்லாமல் சொல்கிறார்கள்.

தப்பிச்சென்ற சிறுவன் நிகழ்காலத்தில் இருக்கும் சூர்யாவிடம் தஞ்சம் அடைகிறான். அந்த சிறுவனின் மூளைக்குள் இவர்கள் பொருத்திய ஏதோ சில வஸ்துகள் அவனுக்கு அசாத்திய சக்திகளை அளிப்பதோடு பூர்வ ஜென்ம நினைவுகளையும் கொடுக்கிறது. வில்லன், சிறுவன் இருவருக்கும் பூர்வ ஜென்மத்தில் நடந்தது தெரிந்து இருக்கிறது. கதாநாயகனுக்கு மட்டும் தெரியவில்லை. ஆனால், ஏதோ ஒரு உணர்வு கதாநாயகனுக்கு அந்த சிறுவன் மேல் ஏற்படுகிறது.அதனால் அவனை பிரிய முடியாமல் இருக்கிறார். சிறுவனை தேடிக்கொண்டிருந்த வில்லனின் ஆட்கள் பெரிய படை பலத்தோடு சிறுவனை மீண்டும் கடத்த வருகிறார்கள்.கடத்தியும் விடுகிறார்கள். கதாநாயகன் அவர்களை துரத்திக்கொண்டு செல்லும் போது நிலவை காட்டி காலத்தில் பின்னோக்கி நம்மை இட்டு செல்லகிறார்கள்.

பாரத தேசத்தை சுற்றியுள்ள கடலில் தற்போது லட்சதீவுகள் இருக்கும் பக்கத்தில் ஐந்து தீவு நாடுகள் இருக்கிறது. அந்த ஐந்து தீவுகளின் அரசர்களுக்கிடையில் நட்பு பகைமை எல்லாம் இருக்கிறது. பாரத தேசத்தை கைப்பற்ற ரோமானிய படை நடுக்கடலில் கேம்ப் போட்டு திட்டம் தீட்டிய படி , அவர்கள் இளைப்பாறி பயிற்சி பெறுவதற்கு இடம் தேடுகிறார்கள். அதற்கு அவர்கள் தேர்வு செய்யும் இடம் தான் நாயகன் இளவரசனாக இருக்கும் பெருமாச்சி. பெருமாச்சி அரசரும் மக்களும் பாரத தேசத்தின் மீது போர் தொடுப்பதற்கு துணை போக மாட்டார்கள் என்றதும் அவர்களை வீழ்த்த சூழ்ச்சி நடக்கிறது.

எப்போதும் தந்தையுடன் சுற்றித்திரியும் ஒரு சிறுவன். ரோமானிய படையெடுப்பு அந்த சிறுவனின் வாழ்க்கையை புரட்டி போடுகிறது.

ரோமானியர்களுக்கு உதவியாக பெருமாச்சி படையை தந்திரத்தால் வீழ்த்த அந்த சிறுவனின் தந்தை துணை போகிறார்.

அதை தெரிந்து கொண்டு சிறுவனின் தந்தைக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மொத்த குடும்பத்திற்கும் மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று மக்கள் எல்லோரும் கொந்தளிக்கிறார்கள்.

நாயகன் அந்த முடிவை எதிர்க்கிறார். ஊர் மக்கள் எல்லோரும் கணவர் செய்த பிழையால் நம்மை வெறுக்கிறார்கள் என்பதை உணர்ந்து மகனை நாயகனிடம் ஒப்படைத்து விட்டு அந்த சிறுவனின் தாய் தற்கொலை செய்து கொள்கிறார்.

பெருமாச்சி தீவிற்கு பரம்பரை எதிரியான அராத்தி தீவின் அரசன் ரோமானியர்களுடன் சேர்ந்து கொள்கிறான்.

போருக்கு முன்னமே நாயகனை தீர்த்துக்கட்ட பார்க்கிறார்கள். அந்த சண்டைக்கிடையில் நாயகன் மன்னித்து காப்பாற்றி வளர்த்து வந்த அந்த சிறுவனே நாயகனை கொல்ல முயற்சிக்கிறார். சும்மா  விட்டு கத்தியை கழுத்தில் இறக்கியும் விடுகிறார். அவ்வளவு தான் கதையா என்று நினைப்போம். ஒரு கத்தி குத்தில் இறந்துவிட்டால் நாயகனுக்கு என்ன மரியாதை; சிகஸ் பேக்குக்கு என்ன மரியாதை?!போதாகுறைக்கு பெருமாச்சி தீவுக்காரர்கள் பெரிய மருத்துவர்கள் வேறு.

அன்றே அந்த சிறுவனை கொன்றிருக்க வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். “பெற்றவர்கள் கண் முன் இறந்ததை கண்ட ஒருவனுக்கு கோபம் இருக்கத்தான் செய்யும் அவன் செய்தது துரோகம் இல்லை” என்று அப்போதும் சிறுவனுக்காக பேசுகிறார் நாயகன்.

ஆனால் இந்த முறை மக்களையும் தன் தந்தையான அரசரையும் நாயகனால் சமாதானம் செய்ய முடியவில்லை.

தீர்மானமாக விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் காட்டுக்கு சிறுவனை அனுப்ப வேண்டும் என்று முடிவு எடுக்கப்படுகிறது. “அவன் உயிரை காப்பேன் என்று அவன் அம்மைக்கு வாக்கு கொடுத்து இருக்கிறேன் நானும் அவனோடு காட்டுக்குச்செல்கிறேன்” என்று சிறுவன் போல அடம்பிடித்து சிறுவனோடு செல்கிறார் நாயகன் .

சிறுவனுக்கு நாயகன் மீது இருக்கும் வெறுப்பு துளியும் மாறவில்லை. ஆனாலும் நாயகன் சிறுவனின் நிழலாக இருந்து அந்த காட்டில் இருக்கும் ஆபத்துகளில் இருந்து சிறுவனை காப்பாற்றுகிறார்.

நாயகன் நாட்டில் இல்லை; ரோமானியர்கள் நடுக்கடலில் வெயிடிங்; பரம்பரை பகையாளி வேறு பெருமாச்சியை வீழ்த்த வேண்டும் நாயகனை கொல்ல வேண்டும் என்று திரிகிறான்.

அராத்தி அரசனுக்கு மூன்று மகன்கள். போர் தொடங்கும் முன்னர் நாயகனை கொல்ல நடக்கும் முயற்சியில் மூன்று மகன்களையும் இழந்து விடுகிறார்.

மூன்றாவது மகன் பெருமாச்சி பெண்களால் கொல்லப்படுகிறான். “எங்க ஊரு பொண்ணை கைய பிடிச்சு இழுத்தீயா” என்கிற கேஸ் அராத்தி ஊர்கார்கள் மீது போடப்பட்டு அதற்கு ஐந்து தீவு அரசர்கள் முன்னிலையில் ஒரு விசாரனை நடக்கிறது. விசாரனைக்கு முன்பே மகனின் சோலி முடிந்தது தெரியாமல் வழக்காடு மன்றத்திற்கு வருகிறார் அராத்தி அரசர். மகன் கொல்லப்பட்டது தெரிந்ததும் கோர்ட்டாவது மயிராவது என்று அங்கிருந்தே போரை ஆரம்பிக்கிறார்.

இளவரசனோ காட்டில் இருக்க; பெருமாச்சி அரசர் மீது தாக்குதல் நடக்க பயமறியாத பெருமாச்சி அரசர் ஓடுகிறார். ஓடி ஒரு பிரமிட் உச்சியில் நின்று சாகும் தருவாயில் இளவரசனை அரசனாக எதிரிக்கு அறிவித்து மகனுக்கு சேதி அனுப்பிவிட்டு இறந்து போகிறார். இந்த இடத்தில் வரும் இசை அத்தனை கச்சிதமாக
செமையாக இருந்தது.

பெருமாச்சியில் நாயகன் இல்லை என்பது தெரியாமல் பெருமாச்சி மீது அராத்தி அரசன் படையெடுத்துச்செல்கிறான் .காட்டில் இருந்தபடி இதை அறிந்து கொண்ட நாயகன் படையை தான் இருக்கும் காட்டின் பக்கம் திசை திருப்பி; அப்பகிளிப்படோ (Apocalypto) ஸ்டைலில் காட்டின் துணையோடு தனி ஆளாக படையை எதிர்த்து சண்டையிட்டு கொண்டிருக்கும் பொழுது சிறுவனை கடத்திக் கொண்டு கடலுக்கு சென்று விடுகிறார்கள்.

நடுக்கடலில் சண்டை நடக்கிறது. நங்கூரத்தோடு சிறுவனை கட்டி கடலில் இறக்க அந்த கயிற்றை ஒரு கையில் பிடித்துக்கொண்டு நாயகன் சண்டையிட, கயிறா உயிரா என்று வரும் போது உயிர் போனாலும் கயிறை விட மாட்டேன் என்று நாயகன் கயிறை பற்றிக்கொள்ள , சிறுவன் நான் செத்தாலும் நீ உயிரோடு இருந்தால் நிறைய பேரை காப்பாத்துவ என்று கயிறை அறுத்துக்கொண்டு தன் உயிரை மாய்த்துக்கொள்கிறான்.

கோபத்தில் அராத்தி அரசனை சம்பவ இடத்திலேயே சம்பவம் செய்கிறார் நாயகன்.

நாயகன் உயிருக்காக உயிரை விட்ட சிறுவனைத்தான் நிகழ்காலத்தில் கடத்திச்சென்று இருக்கிறார்கள்.

நிகழ்காலத்திலும் சிறுவனை காப்பாற்ற சென்ற இடத்தில் மீண்டும் நாயகன் காணாமல் போக இருக்க; மீண்டும் சிறுவன் தன் முக்கால் உயிரை கொடுத்து நாயகனை காப்பாற்றுகிறான்.

ஆனால், எல்லோரும் நாயகன் சிறுவனை காப்பாற்றி கைப்பற்றி விட்டான் என்று வில்லனுக்குச் சேதி சொல்கிறார்கள். யாருடா அவன்? அவன் பேரு பிரான்சிஸ் என்று நாயகனை வில்லனுக்கு காட்ட அவன் பிரான்சிஸ் இல்லை கங்குவா என்கிறார் வில்லன் . யாருடா அந்த வில்லன் அராத்தி அரசன் மீண்டும் பிறந்து வந்து இருக்கிறானா என்று பார்த்தால்;அராத்தி அரசனுக்கும் யாரோ ஒரு அடிமைக்கும் நடக்காத திருமண உறவில் பிறந்த ஒரு மகன் வருகிறான். தன்னை மகனாக ஏற்காத தந்தையை கொன்றவனை கொன்றுவிட்டு தான் அரியணை ஏறுவேன் என்று அவன் சபதம் செய்கிறான். அவன் தான் நிகழ்காலத்தில் வில்லனாக இருக்கிறான்.

ஆயிரம் வருடங்களாக சபதத்தை நிறவேற்றாமல் என்னடா ஆராய்ச்சி மயிரு பண்ணிக்கொண்டு இருக்கிறாய் என்கிற கேள்விகளுக்கு இரண்டாம் பாகம் பதிலளிக்கும்.

 

எத்தனை பெரிய கதை!
ஒரு மாதம் ஊர் சுற்றவதற்கு தேவையான துணிகளை ஒரு மஞ்சபையில் திணித்தைப்போன்று இத்தனை பெரிய கதையை இரண்டரை மணி நேரத்திற்குள் திணித்து இருக்கிறார்கள். அப்படியென்றால் படம் எத்தனை சுவராசியமாக இருந்திருக்க வேண்டும். சுவராசியமாகவும் விறுவிறுப்பாகவும் இருப்பதற்கு முதலில் காட்சிகள் நாம் கவனிக்கபடியாக இருக்க வேண்டும்.

கும்கி படத்தில் மாணிக்கத்திற்கும் கொம்பனுக்கு இடையில் நடக்கும் சண்டயில் எது மாணிக்கம் எது கொம்பன் என்று நம்மால் சொல்லமுடியாது அப்படித்தான் காட்சிகளில் ஏதோ ஒரு தெளிவில்லாமல் இருக்கிறது. அதோடு ஸ்டேஜ் டிராமா போன்று எல்லோரும் சத்தமாகவே பேசுவது எல்லாம் சேர்த்து ஆரம்பம் தொட்டே நம்மை கதையோடு ஒன்ற விடாமல் செய்கிறது.

நடிகர்களின் பெயர்கள் 3டியில் காண்பிக்கப்பட்ட பொழுது நல்லாத்தானே இருக்கு என்று தோன்றும் நம் கண்ணாடி முன்பு கைகளை அசைத்தால் சூர்யா என்கிற எழுத்து நம் கைகளில் தட்டுப்படும் போல் இருக்கும் நல்லாத்தானே இருக்கு என்று தோன்றும் அதே 3டி திஷா பட்டானியை காண்பிக்கும் பொழுது உசிலம்பட்டி தாண்டி துபாயில் இருப்பது போல காட்டுகியிருப்பது இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்ததோடு அவர்களின் கோபத்தையும் தூண்டியது என்றே தான் சொல்ல வேண்டும்.

3டியில் காட்சிப்படுத்துவதற்கும் 2டியில் காட்சிப்படுத்தி 3டியில் மாற்றுவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது.

சரித்திரித்தின் பக்கங்களில் 2டியில் எடுத்து 3டியில் மாற்றினால் அதை எத்தனை அபத்தமாக செய்ய முடியும் என்பதற்கு அடையாளமாகவும் எடுத்துக்காட்டாகவும் கங்குவா இருக்கும்.

எம்.எஸ்.வி., இளையராஜா, ரஹ்மான், ஜி.வி பிரகாஷ் வரிசையில் சிறந்த இசையமைப்பாளாராக அறியப்பட வேண்டிய தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு தமிழில் இன்னுமும் அவர் பேர் சொல்லும் படியான பெரிய வெற்றி படம் அமையாது இருப்பது யார் விட்ட சாபமோ. சவுண்ட் மிக்ஸ்சிங்கில் நிகழ்ந்த சிக்கல்களுக்கு பொத்தாம் பொதுவாக தேவி ஸ்ரீ பிரசாத்தை குற்றம் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியாவில் சிறப்பாக பின்னனி இசை அமைக்க கூடிய; கதைக்கும் சூழல்களுக்கும் ஏற்ப பாடல்களுக்கு இசையமைக்க கூடிய வெகு சில இசையமைப்பாளர்களில் அவரும் ஒருவர்.பான் இந்தியா ட்ரெண்ட் க்கு முன்னர் பான் இந்தியா பாடல்களை கொடுத்தவர்.

இந்த திரைப்படத்திற்கும் சிறப்பாகவே தான் இசையமைத்து இருக்கிறார். படம் நெடுகிலும் சத்தமாகவே இருப்பதால் சத்தத்தையும் இசையையும் பிரித்தரிய முடியாதததாலும் சவுண்ட் மிக்ஸ்சிங் பற்றி இதுவரை பேசியறியாதததாலும் நாமும் நம் சமூகத்தில் இருக்கின்ற விமர்சன கூட்டமும் பொத்தாம் பொதுவாக இசையமைப்பாளரை குற்றம் சொல்லி கடக்கிறோம்.

 

 

நீங்கள் தனியாக இந்த படத்தின் இசை கோர்வையை டவுன்லோடு செய்து கேட்டீர்கள் என்றால் நிச்சயம் இரசிப்பீர்கள்.படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த பின்னும் இன்னுமும் ஆராரோ பாடல் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.டீஸர் வெளியிட்ட நாள் முதலாய் “கங்குவா! கங்குவா!” ஓடிக்கொண்டே இருக்கிறது.

ஒரு ஓவியத்தை வரைந்து முடித்த பின் அந்த ஓவியம் எழுபது சதவீதம் தான் கச்சிதமாக அமைந்து இருக்கிறது என்றால் அதை அப்படியே விட்டுவிட வேண்டும். அதை மேம்படுத்துகிறேன் என்கிற பெயரில் எதைச்செய்தாலும் அது அந்த ஓவியத்தை மேலும் பாதிக்கும். அப்படியான பாதிப்புகளுக்கு பலியாகி இருக்கிறது கங்குவா, ஒரு பெரிய கதை, நல்ல ஐடியா, நல்ல இசை, ஆங்காங்கே சில நல்ல காட்சிகள் எல்லாம் இருந்தும் இந்த படம் கொஞ்சமும் நம்மால் இரசிக்க முடியாமல் போனதனற்கு இதில் இன்னும் என்ன செய்யலாம் என்று செய்யப்பட்ட வேலைகள் தான் காரணம் என்பது எம் எண்ணம்.

அதோடு இத்தனை பெரிய கதையை சொல்லும் பொழுது எதையெல்லாம் காட்சிகளாக சொல்ல வேண்டும் எதை வாய்ஸ் ஓவரில் கடக்க வேண்டும் என்னும் தெளிவில்லாமல் காட்சிகளையும் வசனங்களையும் திணித்து வைத்து இருக்கிறார்கள். பில்டப் வசனங்களுக்கு இடமில்லாத இடங்களில் பில்டப் வசனங்களை கதை மாந்தர்களை பேச வைத்தது எல்லாம் காட்சியில் ஒட்டாமல் இருக்கிறது. அப்படியான வசனங்கள் வாய்ஸ் ஓவரில் ஒரு கதை சொல்லியால் பேசப்பட்டிருந்தால் கூட எடுப்பட்டிருக்கும்.

வாய்ஸ் ஓவரில் இரண்டு ‘கட்’களில் முடித்திருக்க வேண்டிய சண்டைகாட்சியை பெரிதாக இழுத்த பொழுது நான் வைத்திருத்த சோளப்பொரி கூடையை மாமாவிடம் கொடுத்து இந்த படத்திற்கு அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்துவிடுங்கள் என்று தனிப்பட்ட முறையில் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்.ஆனாலும், படம் முடிந்து வெளியில் வந்த பொழுது நல்ல வந்திருக்க வேண்டிய படம். நல்ல படம் தான் technical fault ஆல் மொத்தமாக விழுந்துவிட்டது என்று ஆதங்கத்தை கொட்டிக்கொண்டே வந்தேன்.

நல்லா வந்திருக்க வேண்டிய படம். தமிழ் ரசிகர்கள், ராணா மட்டும் வந்திருந்தால் கோச்சடையான் அனிமேஷனாக இல்லாமல் படமாக வந்திருந்தால் என்று வாய் பிளந்து பெரு மூச்சு விட்டுகொள்வதை போல கங்குவா படத்தை சரியாக எடுத்து இருந்தால் என்று வாய் பிளந்து பெரு மூச்சு விட வேண்டியது தான். சூர்யாவும் அதை நினைத்து தான் அப்படி சொல்லியிருப்பாரோ!

கங்குவா சத்தம் இல்லாமல் வந்திருந்தால் சின்ன சம்பவமேனும் செய்திருக்குமோ என்னவோ! இப்போது கங்குவாவை வைத்து எல்லோரும் பெரிய சம்பவம் செய்கிறார்கள்.

நிச்சயமாக வன்மமோ சதியோ இந்த படத்தை வீழ்த்தவில்லை. பெரிய பட்ஜட் சின்ன சறுக்கல்கள் கூட பெரிய நஷ்டம் ஏற்படுத்தும். இந்த எண்ணம் படம் எடுபடுமோ என்கிற சந்தேகத்தை படக்குழுவின் ஆழ் மனதில் பதித்து இருக்கக்கூடும். அக்டோபர் மாதம் தான் 3d க்கு மாற்றியிருக்கிறார்கள். இப்படி கடைசி நேரத்தில் என்னவெல்லாம் செய்தார்களோ! போன மாதம் வெளியீட்டிற்கு இந்த படம் தயாராக இருந்திருக்க வாய்ப்பில்லை. வெளியிடப்பட்ட படத்திலேயே சரி செய்ய வேண்டிய அநேக விஷயங்கள் இருக்கிறது.இவையெல்லாம் சேர்த்து தான் படத்தின் சறுக்கலுக்கு காரணமாக அமைந்திருக்கிறது.அதை சூர்யாவை வெறுப்பவர்கள் கொண்டாடுகிறார்கள். இது புரியாமல் காக்கா உட்கார்ந்து தான் பழம் விழுந்தது என்பது போல், ஜோதிகா ஒரு பதிவை போடு இருக்கிறார். இது இந்த நேரத்தில் மேலும் எதிர்வினையை தான் கொண்டு வரும்.

ஒரு வேளை, இத்தனை பெரிய சறுக்கலுக்கு பின் இரண்டாம் பாகம் வெளியிடும் திட்டம் படக்குழுவிற்கு இருக்குமென்றால் முதல் பாகத்தில் இருக்கும் அத்தனை தொழில் நுட்ப கோளாறுகளும் இரண்டாம் பாகத்தில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இத்திரைப்படத்தின் சரி செய்ய முடியாத தவறாக நான் பார்ப்பது, சூர்யாவை இந்த கதைக்கு கதாநாயகனாக தேர்ந்தெடுத்தது. தேசிய விருது பெற்ற நடிகர் என்றாலும் கூட எடுத்துக்கொண்ட கதா பாத்திரத்திற்காக மெனெக்கெடுகிறவர் என்றாலும் கூட கங்குவா சூர்யாவிற்கான பாத்திர படைப்பு இல்லை.சூர்யா அந்த பாத்திர படைப்புக்கு நியாயம் செய்யவில்லை.

ஏன் நாம் இந்த படத்தின் விமர்சனத்தை எழுதும் பொழுது மட்டும் கதையை முதலில் எடுத்துச் சொல்லி ஆரம்பித்தோம்? இந்த திரைப்படத்தில் உடைக்கப்பட்ட நல்ல பர்னிஷர் கதை என்பது நம் எண்ணம்.சரி தானே!? நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ? ஏறிச்சுட்டாய்ங்க மக்களே.திரையரங்கில் பார்ப்பதற்கு கொஞ்சம் பொறுமை தேவை என்கிற அளவில் ஒளி ஒலி இரண்டிலுமே இரைச்சல் இருக்கிறது திரைப்படத்தில். நீங்கள் பொறுமையாக OTT யில் பார்ப்பதற்குள் technical fault சரி செய்யப்பட்டால் ஒரு வேளை இந்த படம் ரசிக்கும் படியாக இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *