படைப்பு என்பது தானாக நிகழ வேண்டும்; நிகழ்த்தப்பட கூடாது. அப்படி தானாக நிகழும் படைப்பை அப்படியே விட்டுவிட வேண்டும் அதை மெருகேற்றுகிறேன் என்கிற பெயரில் அதன் தனித்தன்மையை குலைத்துவிடக் கூடாது. அதனாலேயே தான்  காலத்திற்கும் பேசபப்டுகிற கலைப்படைப்புகளை it just happened என்பார்கள். அப்படியான படைப்புகளை அவர்களாலேயே கூட மறுஉருவாக்கம் செய்ய முடியாது. ரஜினியின் திரைப்படங்களை எடுத்துக்கொண்டால்  பாட்ஷா, படையப்பா போன்ற திரைப்படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். படையப்பா திரைப்படத்தில் வரும் ஊஞ்சல் காட்சி இப்போது நீங்கள் நினைத்தாலும் உங்களை மயிர்க்க்கூச்சம் அடையச்செய்யும்; அப்படியொரு காட்சியை எழுதிய பொழுது அந்த காட்சியில் ஊஞ்சல் இல்லை; படப்பிடிப்பிற்கு சென்ற பொழுது அங்கே அந்த வீட்டில் ஊஞ்சல் இருந்தது; அப்போது தான் ஊஞ்சல் மேல இருந்து கீழ வந்தால் எப்படி இருக்கும் என்று அதன் பிறகு அந்த காட்சியை ஊஞ்சல் வைத்து கொஞ்சமாய் மாற்றி அமைத்ததாய் இயக்குனர் ரவிக்குமார் சொல்வார். it just happened.

இதையெல்லாம் இப்போது ஏன் இழுக்க வேண்டும்? அதிமுக்கியமாக இந்த திரைப்படத்தைப் பற்றிய விமர்சனத்தை எழுதவும் வேண்டுமா? எதையும் எழுதுவதால் எதுவும் கெட்டுவிட போவதில்லை. எழுத்து ஏதோ ஒரு வகையில் நிச்சயம் சிந்தனைகள் தூண்டுவதாகவே தான் எப்போதும் இருக்கின்றது.

லால் சலாம் திரைப்படத்தை பொறுத்தவரையில் அது நிகழ்த்தப்பட்ட ஒரு படைப்பாகவே என் பார்வைக்கு தெரிகிறது. தமிழ் சினிமாவில் சிலர் இருந்தார்கள் இப்போதும் கூட இருக்கின்றார்கள்; ஒரு கருத்தை மட்டும்தூக்கிக்கொண்டு வந்தால் அது ஆகச்சிறந்த படைப்பாகவிடும் என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள். சினிமா பார்வையாளர்களில் சிலரும் கூட இதே நம்பிக்கையை கொண்டு இருக்கின்றார்கள். நகைச்சுவை நடிகர் விவேக் சறுக்கியது இங்கே தான்; நகைச்சுவையோடு கருத்து சொல்ல வேண்டும் என்கிற அவரின் ஆர்வம் ஒரு கட்டத்திற்கு பிறகு அவரிடம் இருந்த நகைச்சுவையை குறைத்தே விட்டது எனலாம். லால் சலாம் அப்படியானதொரு படைப்பாக தான் இருக்கின்றது.

தி இந்து தமிழ் நாளிதழ் லால் சலாம் திரைப்படத்தைப் பற்றி எழுதும் பொழுது,”சமூக வலைத்தளங்களில் மதங்களை முன்வைத்து ஒருவர் மீது ஒருவர் வீசும் வன்மக் கணைகளுக்கு நடுவே ஒரு முக்கிய கருத்தை, ரஜினி என்ற ‘பிராண்ட் ‘ உடன் சுமந்து வந்திருக்கும் ‘லால் சலாம்’ படத்தை தாராளமாக வரவேற்கலாம்” என்று சொல்லியிருக்கின்றார்கள். நிச்சயமாக ஒற்றுமையை வலியுறுத்தும் கருத்துக்கள் வரவேற்க பட வேண்டியதே தான்; அதோடு அந்த கருத்துக்கள் எடுத்துக்கொள்ளப்படவும் வேண்டும்.

அப்பா எப்போதும் சொல்லுவார், “யானை படுத்தா குதிரை மட்டம்” என்று. அதிக ஆற்றலும் பலமும் பொருத்திய ஒருவரின் தோல்வியோ வீழ்ச்சியோ கூட சாதாரணமானவர்களின் வெற்றிக்கு நிகரானது என்கிற அர்த்தத்தில் அதைச் சொல்லுவார். அந்த வகையில் ரஜினி எப்போதும் யானையாகத் தான் இருந்திருக்கின்றார். அவருடைய சுமாரான படங்களும் கூட மற்ற நடிகர்களின் வெற்றிப்படங்களுக்கு இணையாகவே தான் வியாபாரம் ஆகியுள்ளது. தொடர்ச்சியான வெற்றி என்பது அதிர்ஷ்டத்தால் நிகழ்வது அல்ல; ஒருவரின் முயற்சியும் அவர் எடுக்கும் முடிவுகளுமே தான் அந்த வெற்றியை தீர்மானிக்கின்றது. இந்த திரைப்படத்தை பொறுத்தவரையில் நிச்சயமாக ரஜினி வெற்றி தோல்வியைத் தாண்டி படத்தில் சொல்லப்பட்ட அந்த கருத்து தன் மூலமாக சொல்லப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கலாம்; ரஜினியின் குரல் அந்த கருத்தை வெகுசனத்திற்கு கொண்டு சேர்க்கும் என்று அவர் நம்பியிருக்கலாம்; அது மட்டுமே தான் அவர் இந்த திரைப்படத்தில் தன்னைச் சேர்த்துக்கொண்டதற்கு காரணமாக இருக்க முடியும். திரைப்படமாக, ஒரு கதையாக இதில் இருக்கும் குறைகளை அவரும் கூட அறிந்தே இருப்பார்.

ஒரு கதையை காட்சிகளாக்குவது என்பது எளிமையாக தோன்றலாம் நிச்சயமாக அது அத்தனை எளிமையானது இல்லை.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நான் காணச் சென்றதற்கு முக்கியமாக ஒரேயொரு காரணம் மட்டுமே தான் இருந்தது. 2012 வருடம்,மனதிற்குள்ளேயே ஒரு காதலை வைத்துக்கொண்டிருந்த காலத்தில் பொன்னியின் செல்வன் கதையை படிக்கும் வாய்ப்பு அமைந்து, படித்துக்கொண்டிருக்கும் பொழுது; ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நான் கற்பனை முகங்கள் கொடுத்துக்கொண்டிருந்தேன். கல்கியின் வார்த்தைகள் மனதில் ஒரு திரைப்படத்தையே ஒட்டிக்கொண்டிருந்தது. வந்தியத்தேவனும் குந்தவையும் சந்தித்துக்கொள்கின்ற ஒரு காட்சியில், வந்தியத்தேவன் அடையும் பரவசத்தை வார்த்தைகளால் எழுதியிருப்பார் கல்கி , அதை படித்துக்கொண்டிருக்கும் பொழுதே மனதிற்குள் ஒரு காதலை வைத்துக்கொண்டிருந்த இளைஞனான நானும் அதே பரவசத்தை அடைந்தேன். அப்போது நான் செய்துகொண்டிருந்ததையெல்லாம் வந்தியத்தேவன் செய்துகொண்டிருப்பதாக எழுதியிருப்பார் கல்கி. இது தான் படைப்பாளிகள் நிகழ்த்தும் அதிசயம்; கதையில் ஒருவன் சோகத்தில் இருக்கும் பொழுது கதையை படிப்பவர்க்கோ பார்பவர்க்கோ அது தொற்றிக்கொள்ள வேண்டும். கதையில் ஒருவன் மகிழ்ச்சி கொள்ளும் பொழுது அந்த மகிழ்ச்சியும் அதே போல் தொற்றிக்கொள்ள வேண்டும்.கல்கி நிகழ்த்திய அதிசயத்தை மணிரத்தினத்தால் திரையில் நிகழ்த்திக்காட்ட முடியுமா என்கிற ஆவலோடு சென்றேன். வந்தியத்தேவனும் குந்தவையும் சந்தித்துக்கொள்கிற அந்த ஒரு காட்சியும் வந்தது. குந்தவையாக திரிஷா நின்றுகொண்டிருந்தார், நின்றுகொண்டிருந்தவர் அப்படியே திரும்பினார், லாங் ஷாட் இல் இருந்து மெதுவாகவும் இல்லாமல் வேகமாகவும் இல்லாமல் குந்தவைக்கு வந்தியத்தேவனுடன் கிளோஸ்அப் போவார்கள். திரை நிறைய குந்தவை; கேமரா குந்தவை நோக்கி நகர்ந்த அந்த ஒரு மிதமான வேகத்திலேயே வந்தியத்தேவன் அடையும் பரவசம் நமக்குள்ளும் தொற்றிக்கொள்ளும்.

 

கதை;கவிதை; திரைப்படம் இதில் இருக்கும் உணர்வுகளெல்லாம் வாசிப்பாளர்களாலோ பார்வையாளர்களாலோ connect செய்து கொள்ள முடியும் படியாக இருக்க வேண்டும்.

இரண்டு பேரும் சந்தித்துக்கொள்கிறார் அதை எப்படியெல்லாம் காட்சி படுத்தவேண்டும் என்பது தான் திரைக்கதை. அதில் கேமராவின் வேகம் கூட முக்கியத்துவம் பெறுகிறது.அதோடு அந்த கதாபாத்திரம் எப்படி நிற்க வேண்டும் என்று நுணுக்கமான இன்னும் பல விஷயங்கள் சேர்த்தே தான் ஒரு காட்சியை பார்வையாளர்களோடு இணைக்கிறது. இப்படியான நுணுக்களையெல்லாம் அக்கா ஐஸ்வர்யா அவர்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது.ஆனால், இந்த திரைப்படத்தை அக்கா ஐஸ்வர்யா மீதுள்ள அதீத அன்பின் காரணமாகவோ, திரைப்படத்தில் சொல்லப்பட்ட கருத்தின் காரணமாகவோ அல்லது ரஜினிகாந்திற்காகவோ அதிகம் புகழ்ந்து வரும் விமர்சனங்களை அக்கா ஐஸ்வர்யா அவர்கள் நம்பாமல் இருப்பதே அவரின் இயக்குனர் வேலைக்கு உசீதமானதாக இருக்கும்.

அவருடைய சமீபத்திய பேட்டி ஒன்றில்; கொலவெறி பாடலுக்கான வரவேற்பு தான் ஒரு வகையில் ‘3’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடையாததற்கு காரணம் என்பது போல் அவர் பதிலளித்ததாக தெரிகிறது. இப்படியான மூட நம்பிக்கைகளில் இருந்தும் கூட அவர் வெளிவந்து எதிர்காலத்தில் நல்ல இயக்குனராக வர வேண்டும் என்பது நம் ஆசை.

‘3’ திரைப்படமும் சரி; ‘லால் சலாம்’ திரைப்படமும் சரி, நல்ல கதைக்களம் கொண்ட திரைப்படம். ஆனால், திரைக்கதையும் இரண்டு கதையும் படமாக்கப்பட்ட விதமும் எழுத்து அளவில் ஒரு முதிர்ச்சின்மை இருப்பதையே தான் காட்டுகிறது. திரைக்கதை வசனம் இவையெல்லாம் தான் படத்திற்கு வலுசேர்ப்பது அந்த வலு இரண்டு படங்களிலுமே பெரிதாக இல்லை. ரஜினி பேசும் கருத்துக்களும் வசனமும் ஏற்கனவே அவர் சில பேட்டிகளில் பேசியது தான்.

வராங்க பேசுறாங்க போறாங்க என்பது போலவே தான் இரண்டு படங்களின் வசனமுமே இருந்தது. அதோடு ஒரு உணர்வை வெளிப்படுத்த ஒரு கதாபாத்திரம் என்ன செய்ய வேண்டும் என்கிறதையும் தீர்மானிக்க முடியாத இயக்குனராகவே தான் ஐஸ்வர்யா இன்னமும் இருக்கின்றார். நேற்று என்னை அறிந்தால் படம் பார்த்தேன்;”நம்ம எப்பாவது ஜாலியா பேசும் பொழுது நாட்டிய பேரொளி ஹேமானிக்கா சாகுறதுக்கு பத்து செகண்ட் முன்ன என்ன சொன்னான்னு சொல்றேன்” என்று விக்டர்(வில்லன்) சொன்னதும்; கதாநாயகன் சத்யாவால் அந்த ஜீப்பிற்குள் உட்கார்ந்திருக்க முடியாத அவனை அதுவரை யாரோ பிடித்துக்கொண்டிருந்த போல்; என்னை விடுங்க என்பது போல் அவன் அந்த ஜீப்பை விட்டு இறங்கி ஒரு emptiness இல் எதையோ தேடுவான் உள்ளுக்குள்ளேயே இருக்கின்ற சோகமும் இயலாமையும் இப்படியாக தான் வெளிப்படும்.அந்த நொடியில் கதாநாயகன் என்ன செய்ய வேண்டும் அதை எப்படி படமாக்க வேண்டும் என்பதை நேர்த்தியாக செய்திருப்பார் கெளதம்; இந்த நேர்த்தியை இயக்குனர் ஐஸ்வர்யாவால் அடைய முடியாமலும் கூட போகலாம் என்று தோன்றுகிறது. காரணம் அவர் தி கிரேட் ரஜினிகாந்தின் மகள்.அநேகமான படைப்பாளிகளும்; எழுத்தாளர்களும் மக்களோடு மக்களாக கலந்து இருந்து வந்தவர்கள்; ஐஸ்வர்யா அவர் இருக்கும் நிலையில் இருந்து இப்படியான நுணுக்கங்களை தெரிந்துகொண்டிருக்க முடியாது என்று தோன்றுகிறது.

கிரிக்கெட்டையும் மையப்படுத்திய கதையில்; கதையின் இரண்டாம் நாயகனான விக்ராந்தை பெரிய பணக்கார வியாபாரியின் வியாபாரத்தையும் பார்த்துக்கொள்ளும் மகனாக காட்டிய பொழுதே அந்த கதாபாத்திரம் பலவீனம் அடைந்துவிடுகிறது.

பாண்டிய நாடு படத்தை எடுத்துக்கொண்டால், அதே விக்ராந்த் சில காட்சிகள் வந்தாலும் அவரின் கதாபாத்திரம் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கும். கதையில் அவர் என்னவெல்லாம் செய்வார் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள அவரை எப்படி காட்ட வேண்டுமோ அப்படிதான் அவரின் அறிமுகம் பாண்டிய நாடு திரைப்படத்தில் இருக்கும். நண்பர்களுக்காக எதைப்பற்றியும் கவலைப்படாமல் அடிதடியில் இறங்க கூடிய முரட்டு ஆள்; அவர் ஒரு இடத்தில் வேலை செய்வார்; அந்த வேலையே அவரின் உடல் வலுவை காட்டுகின்ற மாதிரி காட்சி இருக்கும்.

படம் நெடுகிலும்; திரைக்கதை நெடுகிலும் இப்படியான நுணுக்கங்களுக்கு இடமே இல்லாமல் இருக்கின்றது. ரஜினியின் மனைவியாக நடித்த நிரோஷா அவர்கள், ஒரு காட்சியில் ரஜினி கூட நடிக்கிறோம் என்கிற பூரிப்போடு இருப்பது போல தெரிகிறது. இதெல்லாமே இயக்குனர் தவறிவிட்டது தான்.

casting-யார் எந்த கதாபாத்திரத்தை ஏற்கலாம் என்பதை தெரிவு செய்வதிலும் எந்த சமரசமும் இல்லாமல் இருந்திருக்க வேண்டும்.நாயகனின் அம்மா நடிப்பிற்கும் டப்பிங்கிற்கும் சம்மந்தம் இல்லாமலே தான் இருக்கின்றது. இந்த நெருடல்கள் எல்லாம் பார்வையாளர்களை அந்த காட்சியோடும் கதையோடும் ஒன்றவிடாமல் செய்யும்.லால் சலாம் திரைப்படத்தை காணும் போதும் அதுவே தான் நடக்கிறது. ரஜினியின் பெரு வெற்றிக்கு தகுதியான இயக்குனராக தன்னை ஆக்கிக்கொள்ள அக்கா ஐஸ்வர்யா இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும்.

எல்லாருக்கும் அப்பாவை பிடிக்கும் தான். அதோடு ரஜினிகாந்தை திட்டுகிறவர்களுக்கும் ரஜினி என்றால் பிடிக்கும் தான். அதற்காக தம்பி ராமையா பேசும் காட்சிகளிலும் ரஜினியின் முகத்தையே காண்பித்துக்கொண்டிருந்ததெல்லாம் காட்சியமைப்பின் குறையாகவே தான் சொல்ல வேண்டும். அதோடு ரஜினி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பதற்காகவே அவர் மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் என்பதற்காகவே அவரை அதிக காட்சியில் காட்டியிருப்பார்களோ என்று தோன்றுகிறது. இடைவெளி வரை ரஜினியை காட்டாமலும் கூட கதையை நகர்த்தியிருக்க முடியும்.

ஒரு கதை அல்லது கலை பல சிந்தனைகளை ஒருவருக்கு தர வேண்டும். ஒரு கருத்தை மட்டும் சொல்ல கலையும் கதையும் தேவை இல்லை. அந்த கருத்து மட்டுமே போதுமானது.

லால் சலாம் திரைப்படத்தை பொறுத்தமட்டில் பலவந்தமாக நிகழ்த்தப்பட்ட படைப்பாகவே தான் தோன்றுகிறது. அது தோன்றுவதற்கு காரணமாக இயக்குனரை மட்டும் தான் கை காட்ட முடியும். அவர் இன்னும் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும். படத்தின் வசனங்களையோ திரைக்கதையையோ எழுத ஒரு எழுத்தாளரை கூட தேர்ந்தெடுத்துக்கொள்வது கூட நல்லது. யாருக்கு நல்லது என்று கேட்காதீர்கள்; தயாரிப்பாளர் இயக்குனர் பார்வையாளர்கள் எல்லோர்க்கும் தான்.

எப்போதும் எல்லா விமர்சனைங்களையும் எழுதும் பொழுதும் எழுதிய பிறகும் நம்மிடம் வரும் கேள்வி படம் பார்க்கலாமா வேணாமா? எப்படியும் ஒரு மூன்று மணி நேரத்தை கடத்த தெரியாமல் தானே திரைப்படம் போன்றவற்றை தேடுகிறோம் அந்த மூன்று மணி உங்களிடம் இருந்தால் பாருங்கள்.ஹா!ஹா!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *