நீட் பற்றி பலவிதமான கருத்துக்கள் ஊடங்ககளிலும் சமூக வலை தளங்ககளிலும் உலவிக்கொண்டிருக்க, நீட் பற்றிய சீரற்ற மற்றும் அநாமதேய குற்றச்சாட்டுக்களுக்கே நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுத்துவருகின்றோம் அதன் விளைவாய் சரியான பிரச்சனை எது என்றும் பிரச்சனையின் மூலம் எது என்றும் தெரியாமல் அரசியல்வாதிகள் நம்மை செலுத்தும் போக்கிலேயே மக்களாகிய நாம் இந்த நீட் பிரச்னையை அணுகுகிறோம். ஒரு பிரச்சனையின் மூலத்தை அறிந்து அதை கலைவதே பிரச்னையை சரி செய்யும் சரியான யுக்தியாக இருக்க முடியும் அதை விடுத்து சைக்கிள் ஓட்ட பழகும் போது கீழே விழ நேரிடும் என்பதற்காக சைக்கிளில் ஏறக்கூடாது என்பது போன்ற அணுகுமுறையை நோக்கியே நம்மை அரசியல்வாதிகள் சிந்திக்க செய்கிறார்கள்.

நீட் தேர்வின் மீது வைக்கப்படும் குற்றசாட்டுகள்

  • இது சமூக நீதிக்கு எதிரானது.
  • கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை நிர்மூலமாக்குவது.
  • இன்னும் கொஞ்ச நாட்களில் ஹிந்தி பேசும் டாக்டர்களை மட்டுமே பார்க்க முடியும்.
  • இது அல்லாமல் சில மாநிலங்களில் சில இடங்ககளில் நடந்த முறைகேடுகளை கொண்டு மொத்தமாக தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாத நிலையில் வட மாநில மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பது

இந்த குற்றசாட்டுகளின் நியாய அநியாயங்ககளை இந்த கட்டுரையின் முடிவில் நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.

நீட் தேர்வில் இட ஒதுக்கீட்டு முறை

தற்போது தமிழகத்தில் 3450 மருத்துவ படிப்புக்கான இடங்கள் இருப்பதாக தெரிகிறது.இதில் 85% மாநிலத்திற்கும் 15% அகில இந்திய மாணவர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது.
இதில் புரிந்துகொள்ளப்படவேண்டியது என்னவெனில் நம் மாநிலத்தில் 3450 இடங்களுக்கும் நம் மாநிலத்தை சேர்ந்த மாணவர்களே தேர்ச்சி பெற்று கூடுதலாக சில மாணவர்கள் மருத்துவ படிக்க நினைக்கும் போது வேற்று மாநிலத்தில் உள்ள கல்லூரியில் அகில இந்திய அளவில் ஒதுக்கப்படும் மருத்துவ படிப்பிற்கான இடங்களில் சேர்ந்து படிக்க ஒரு வாய்ப்பை நீட் ஏற்படுத்தி தருகிறது என்பதையே.இதை பற்றி மேலும் அலசுவதற்கு முன் நீட் பற்றிய வரலாற்றையும் கட்சிகளின் நிலைப்பாட்டையும் பார்க்கலாம்.

நீட் பற்றிய நீளமான வரலாற்றை முன்னாள் மாநில சுகாதார துறை அமைச்சர் சட்டமன்றத்தில் எடுத்துரைத்திருக்கின்றார். அதன் சாராம்சம்
2005 வரை இருந்த நுழைவது தேர்வை அ.தி.மு.க. அரசு ரத்து செய்து பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவபடிப்புக்கான இடங்கள் நிரப்படும் என்கிற கொள்கை முடிவை எடுத்ததாக சுட்டிக்காட்டிய அமைச்சர்.
அதன் பின்னர், தி.மு.க. அங்கம் வகித்த மத்திய அரசாங்கம் (அந்த காலத்தில் மத்திய அரசாங்கம்) பொது நுழைவு தேர்வான நீட் நடத்துவது தொடரப்பான அறிவிப்பை வெளியிட்டு அதை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டதையும் எடுத்து கூறுகிறார்.அப்போதைய தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் உச்சநீதிமன்றம் சென்று பொது நுழைவு தேர்வு நடத்துவதற்கான தடையை பெற்ற பின்னரும் அப்போதைய தி.மு.க. அங்கம் வகித்த மத்திய அரசாங்கம், உச்சநீதிமன்ற தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி வழக்கு தொடரந்ததை நினைவு கூறுகிறார்.அவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு நடத்துவது தொடர்பான தடை ஆணையை திரும்ப பெற்றுக்கொண்டதாகவும் அதன் பின்னரும் கூட தமிழகத்திற்கு ஓராண்டு தற்காலிக விலக்கை அ.தி.மு.க பெற்று தந்ததையும் அதன் தொடர்ச்சியாக மீண்டும் ஓராண்டு விலக்கு பெற அ.தி.மு.க அரசு முயற்சித்து கொண்டிருந்த போதே காங்கிரஸ் தலைவர் திரு.பா.சிதம்பரம் அவர்களின் மனைவி தொடுத்த வழக்கில் கொடுத்த தீர்ப்பின் படி தற்காலிக விலக்கும் பெற முடியாமல் நீட் தீர்வு நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் தெளிவுபடுத்தியிருப்பார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் சட்டமன்றத்தில்நீட் சம்மந்தமாக ஆற்றிய உரை கீழே உள்ள காணொளியில்

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் நீட் வரலாறு பற்றி சட்டமன்றத்தில் பேசியது.

நீட் தேர்வு பற்றிய காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வின் நிலைப்பாடும் தற்போதைய செயல்பாடுகளும்

மேலே அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டிய விஷயங்களை கொண்டே காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வின் செயல்பாடுகளை பற்றி ஓரளவு புரிந்து கொண்டு இருப்பீர்கள். அதனையடுத்து அவர்களின் நிலைப்பாடும் செயல்பாடும் எப்படி இருந்தது என்பதை பார்க்கலாம்.

இங்கு நாம் இரு கட்சிகளை சேர்த்து குறிப்பிடுவதன் காரணம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இவர்கள் கூட்டணி அமைத்து போட்டியிட்டதும். முன்பு காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. மத்தியில் செல்வாக்கு செலுத்த கூடிய அளவில் மத்திய அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டிருந்ததே ஆகும்.


இந்த இரு கட்சிகளின் 2019 பாரளுமன்ற தேர்தல் வாக்குறுதியை கவனித்த போது. காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதியில் தேசிய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வை நீக்கி அதற்கு பதிலாக மாநில அளவில் அதே தரத்தில் நுழைவு தேர்வு நடத்தப்படும் என்று இருக்கின்றது.

காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில் நீட் பற்றிபற்றிய பகுதி

அதுவே தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியில் , நீட் தேர்வை ரத்து செய்ய பாடுபடுவோம் என்று 2019 பாராளுமன்ற தேர்தல் என்று குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.

2019 தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியில் நீட் பற்றிய பகுதி

கழக ஆட்சி அமைந்தவுடன் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற அணைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று 2021 சட்டப்பேரவை வாக்குறுதியில் தெரிவிக்கப் பட்டு இருந்தது.

2021 தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியில் நீட் பற்றிய பகுதி

தி.மு.க கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் நீட் சம்மந்தமாக எடுத்திருக்கும் நிலைப்பாட்டை கவனிக்க வேண்டும். இது குறை கூறுவதற்காக எடுத்து சொல்லப்படவில்லை. இது போன்ற நுழைவு தேர்வுகள் அவசியமாகி விட்ட காலத்தில் சூழலில் நாம் இருக்கின்றோம் இது அரசியல் கட்சிகளுக்கு புரியாமல் இல்லை என்பதை எடுத்துரைக்கவே சுட்டிக்காட்டியுள்ளோம்.

திரு. ஏ.கே. இராஜன் தலைமையில் உயர் நிலை குழு

பின்னர், ஆட்சி பொறுப்பேற்ற பின், தமிழ்நாட்டில் மருத்துவ மாணவ சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. ஏ.கே. இராஜன் தலைமையில் உயர் நிலை குழு அமைப்பது பற்றி செய்தி வெளியிட்டு இருந்தார் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.இது தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டது போல, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முன்னெடுப்பாகவே பார்க்கப்படுகிறது. அந்த அறிக்கையின் படி ஏ.கே. இராஜன் தலைமையிலான உயர் நிலை குழு தங்களின் முதல் ஆலோசனை கூட்டத்தை நேற்று (14/06/21) அன்று நடத்தியது.அந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீதியரசர் திரு. ஏ.கே. இராஜன்,நீட் தேர்வால் பாதிப்பு உள்ளதாக குழுவில் உள்ள 8 பேரும் தெரிவித்து உள்ளார்கள் என்றும்.நீட் தேர்வால் பாதிப்பு இருக்கின்றது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை அது எத்தகைய பாதிப்பு என்பதை மட்டும் தான் ஆராய வேண்டும். நீட் தேர்வின் தாக்கம் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம்.21ம் தேதி நடைபெறும் 2வது கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்படும் என்றார்.

நீட் தேர்விற்கு முன் நிலைமை எப்படி இருந்தது?

முன்னதாக 2005ல் தொழில் முறை கல்விக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்படுவதற்கு முன்னர் கலைஞர் ஆட்சியிலும் தொழில் முறை கல்விக்கான நுழைவு தேர்வு இருந்தது.இந்த நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டது அரசியல்வாதிகளுக்கு எப்படி பயன்பட்டது என்றும் பொறியியல் கல்வியின் தரம் தேய்ந்து போனது பற்றியும் “தமிழகத்தின் கடைசி வாய்ப்பு ரஜினிகாந்த்” என்னும் நூலில் பேசியிருப்பார்கள் அதோடு அவர்கள் நீட் தேர்வின் அறிமுகத்திற்கு முன்னரே கிராமப்புற மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்பட்டுவிட்டதை மேலோட்டமாக சுட்டிக்காட்டியிருப்பார்கள்.அதனை பற்றி விரிவாக அலசலாம்.

*அமைச்சர் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டியது போல 1995இல் இருந்து 2005 வரை தொழில் முறை கல்விக்காண நுழைவு தேர்வு இருந்த காலத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள், அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் மருத்துவப்படிப்பிற்கு சேர்த்த விகிதம் தனியார் பள்ளி மாணவர்களை விட , நகர்ப்புற மாணவர்களை விட குறைவாகவே இருந்திருக்கும்.

90களின் பிற்பகுதியில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அசுர வளர்ச்சி கண்டு இருந்தது.அதனை தொடர்ந்து 2005இல் தொழில் முறை படிப்புகளுக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டது.நமக்கு கிடைத்த தகவலின் படி 2008ல் மருத்துவப்படிப்பிற்கு 1500க்கும் குறைவான இடங்களே இருந்தது.அதே வேளையில் சுமார் 435 பொறியியல் கல்லூரிகள் இருந்தது.அதில் அநேகமான பொறியியல் கல்லூரிகள் ஏதேனும் ஒரு கட்சி சார் அரசியல்வாதியுடையதாகவே இருந்தது.2005இல் தொழில் முறை படிப்புகளுக்கான நுழைவு தேர்வு தொடர்ந்து இருந்தால் அநேகமான பொறியியல் கல்லூரிகளில் அநேகமான இடங்கள் காலியாக இருந்திருக்கும்.இதில் புரிந்து கொள்ளப்பட வேண்டியது பொறியியல் படிப்பதற்கான தகுதி குறைக்கப்பட்டு அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் நடத்திய கல்லூரிகளுக்கு மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்பட்டது என்பதையே.அதனால் அடுத்த 10 பத்தாண்டுகளில் பொறியியல் கல்வியின் தரம் நம் மாநிலத்தில் குறைகிறது.இது அல்லாமல் 2010 இல் தொடங்கி குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு அவர்களின் கல்லூரி கட்டணத்தில் ஒரு பகுதியில் மானியமாக மாநில அரசு ஏற்றுக்கொள்கிறது.இது மக்களின் நலனுக்கான திட்டம் இல்லை. மக்கள் நலங்கான திட்டமெனில் அரசு கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்கள் ஏழை மாணவர்கள் சேரும் அளவிற்கு பள்ளிகளின் தரம் இருந்திருக்க வேண்டும். இந்த மானியம் மக்கள் வரிப்பணத்தை தனியார் கல்லூரி நிறுவனர்களின் கணக்கில் சேர்க்கும் வேலையை பார்த்தது என்றே சொல்ல முடியும்.
தகுதி குறைக்கப்பட்டு, கட்டணத்தில் மானியம் வழங்கி அரசியல்வாதிகளால் அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்களால் நடத்தபெற்ற பொறியியல் கல்லூரிகள் நல்ல வருமானம் பார்த்தது என்றே சொல்லலாம்.
அதுவே மருத்துவப்படிப்பை பொறுத்தவரையில் 2008 வரை 1500க்கும் குறைவான இடங்கள் மட்டுமே இருந்ததும் தனியார் கல்லூரிகள் ஆதிக்கம் இல்லாமல் இருந்ததும் மருத்துவப்படிப்பின் தரத்தில் பெரிய பாதிப்புகளை செய்யவில்லை இருந்தாலும், 5000க்கும் குறைவான மருத்துவ படிப்பிற்கான இடங்களுக்கான போட்டியில், பத்தாம் வகுப்பிலேயே அநேகமான அரசு பள்ளி மாணவர்களும் குறிப்பாக கிராமப்புற மாணவர்களும் விலக்கி வைக்கப்படும் சூழலுக்குள் தள்ளப்படுகிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

அரசு பள்ளிகளின் தரம் அதுவும் கிராமங்களில் இருக்கும் சூழல் அந்த மாணவர்களை மருத்துவம் சார்ந்த படிப்பை தேர்ந்தெடுக்க பெரிதாக உந்துவதில்லை அவர்கள் இருக்கும் சூழலுக்கும் அவர்களுக்கு கிடைக்கும் பள்ளி கல்வியின் தரத்திற்கும் அவர்கள் வளரும் போதே வரலாறு அல்லது வர்த்தகம் சார்ந்த துறைகளையோ பட்டயபடிப்பையோ தேர்ந்தெடுக்கும் மனநிலைக்கு தான் உந்தப்படுகிறார்கள்.அதே வேளையில் தனியார் பள்ளிகளிலும் நகர்புறத்தை சேர்ந்த மாணவர்களும் வளரும் சூழலை எடுத்துக்கொண்டால் ஒப்பீட்டளவில் அரசுப்பள்ளி மாணவர்களை விட; கிராமப்புற மாணவர்களை விட பத்தாம் வகுப்பிற்கு பின் பள்ளி உயர்நிலை படிப்பில் கணிதம் உயிரியில் படிப்பை தேர்வு செய்கின்றவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள்.இப்படியாக அரசு பள்ளியின் தரம் கிராமப்புற மாணவர்களின் பொருளாதார சூழல் எல்லாம் சேர்ந்து பத்தாம் வகுப்பை தாண்டும் போதே அரசு பள்ளி மாணவர்களை மருத்துவப்படிப்பு சார்ந்த கணிதம் உயிரியில் படிப்பை தேர்ந்தெடுக்க விடாமல் செய்கிறது.அத்தனையும் மீறி கணிதம் உயிரியில் படிப்பை தேர்ந்தெடுக்கும் அரசு பள்ளி மாணவர்கள்;கிராமப்புற மாணவர்கள்,மெட்ரிகுலேஷன் தரத்திலான பள்ளியில் பயிலும் வியாபார ரீதியான போட்டியில் ஒவ்வொரு வருடமும் தங்களை நிரூபிக்க காத்திருந்த தனியார் பள்ளி மாணவர்களோடு போட்டி போட வேண்டிய சூழல் இருந்ததை யாரும் மறுக்க முடியாது.

நமக்கு கிடைத்த தரவுகளின் படி சில கல்வியாண்டுகளில் மருத்துவப்படிப்பிற்காக விண்ணப்பித்தவர்களில் 2000வது(at rank2000) இடத்தில் இருப்பவர்களின் கட் ஆப் மதிப்பெண் :

2009-2010 மெரிட் லிஸ்ட் (தகுதி பட்டியலின் படி) 2000 வது இடத்தில் இருக்கும் மாணவரின் கட் ஆப் மதிப்பெண் 193.50.

2012-2013மெரிட் லிஸ்ட் (தகுதி பட்டியலின் படி) 2000 வது இடத்தில் இருக்கும் மாணவரின் கட் ஆப் மதிப்பெண் 196.50

2013-2014மெரிட் லிஸ்ட் (தகுதி பட்டியலின் படி) 2000 வது இடத்தில் இருக்கும் மாணவரின் கட் ஆப் மதிப்பெண் 196.75

2014-2015 மெரிட் லிஸ்ட் (தகுதி பட்டியலின் படி) 2000 வது இடத்தில் இருக்கும் மாணவரின் கட் ஆப் மதிப்பெண் 198

2015-2016 மெரிட் லிஸ்ட் (தகுதி பட்டியலின் படி) 2000 வது இடத்தில் இருக்கும் மாணவரின் கட் ஆப் மதிப்பெண் 197

2016-2017 மெரிட் லிஸ்ட் (தகுதி பட்டியலின் படி) 2000 வது இடத்தில் இருக்கும் மாணவரின் கட் ஆப் மதிப்பெண் 196.5

இந்த இரண்டாயிரம் பேரில் நகர்ப்புற தனியார் பள்ளி மாணவர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்பதை நிச்சயம் மறுக்க முடியாது.ஒரு தனியார் பள்ளியில் 197க்கு மேற்பட்ட கட் ஆப் பெற்ற மாணவர்கள் 5 முதல் 10 வரை இருப்பார்கள் எனில் அரசு பள்ளிகளில் 10 பள்ளிகளை சேர்த்தாலும் 10 மாணவர்கள் 197க்கும் மேற்பட்ட கட் ஆப் பெறுவது அரிதாக இருத்தது.

சமூக நீதி என்பது என்ன?

எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சூழலை ஏற்படுத்தி தந்து அதில் திறமையான மாணவர்களுக்கு தொழில் முறை படிப்பிற்கான வாய்ப்பை தருவது தான் சமூக நீதியாக இருக்க முடியும். தனியார் பள்ளியில் பயிலும் மாணவனுக்கு கிடைக்கும் கல்வி சூழலை கிராமபுற மாணவர்களுக்கு ஏற்படுத்தி தராமல் அவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த முன்வராமல் அவர்களால் இத்தகைய தேர்வுகளை எதிர்கொள்ள முடியாது என்கிற முன்முடிவோடு இப்படியான நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய சொல்வது எப்படி சமூக நீதி ஆகும்.தனியார் பள்ளிகளின் தரத்திற்கு அரசு பள்ளிகளின் செயல்திறனை அதிகரித்து எத்தகைய போட்டித்தேர்வையும் எதிர்கொள்ளும் திறனை பாகுபாடின்றி எல்லா மாணவர்களிடமும் வளர்ப்பதே சமூக நீதி ஆகும்.ஆனால்,நீட் போன்ற நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் கிராமப்புற அரசுப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பெரிய அளவில் மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளது.காரணம், இங்கு எல்லார்க்கும் ஒரே மாதிரியான சூழல் இருப்பதில்லை.இதுவே மாநிலத்தில் நாம் ஏற்படுத்திவைத்திருக்கும் சமூக சமநிலை.

சமச்சீர் கல்வியும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டமும்

சில வருடங்களுக்கு முன் எல்லார்க்கும் ஒரே தரத்திலான கல்வி என்கிற விளம்பரத்தோடு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஏற்றுக்கொள்ள காலம் எடுத்துக்கொண்டதோடு சில மாற்றங்கள் செய்த பின்னரே அதை நடைமுறைப்படுத்தினார். காரணம், அது அரசுப்பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தை மெட்ரிகுலேஷன் தரத்திற்கு உயர்த்துவதற்கு பதிலாக மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தை குறைத்தது என்று சொல்ல முடியும், அதுவே கூட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தயக்கத்திற்கு காரணமாக இருந்திருக்கும்.இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டதும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தங்களை சி.பி,எஸ்.இ பள்ளிகளாக ஆக்கி கொண்டார்கள். பாடத்திட்டம் எதுவாயினும் பாடம் கற்பிக்கப்படும் முறை மற்றும் இன்ன பிற காரணங்களால் கல்விக்கான போட்டி களம் இங்கு எப்போதுமே ஏழை மாணவர்களுக்கும்;கிராமப்புற மாணவர்களுக்கும்; அரசு பள்ளி மாணவர்களுக்கும் சாதகமாக இருந்ததில்லை.புதிதாக நீட் வந்து தான் எல்லாம் கெட்டது என்று நீட் தேர்வை மையப்படுத்துவது என்பது அரசியல் தவிர வேறொன்றும் இல்லை.

ஐ.ஐ.டி. போன்ற இடங்களில் நேரடியாக பொறியியல் பட்டபடிப்பினில் சேரும் அளவிற்கு நம் மாநில மாணவர்களிடம் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களிடம் பெரிய ஆர்வமோ அதற்கான நுழைவு தேர்விற்கு தயாராகும் அளவிற்கான களமோ இருந்ததில்லை அவர்களுக்கான சூழலை அத்தனை மோசமாகவே நாம் இன்னும் வைத்திருக்கின்றோம்.இதிலும் சமூக நீதி காலம் காலமாகவே காணாமல் தான் இருக்கின்றது.

உயர்த்தப்பட்ட மருத்துவப்படிப்பிற்கான இடங்களும் நடுத்தர குடும்பங்களின் கனவுகளும்

அ.தி.மு.க.வின் கடந்த பத்தாண்டு கால ஆட்சியின் போது மாவட்டம் தோறும் மருத்துவ கல்லூரி திட்டம் அறிவிக்கப்பட்டு படிப்படியாக மருத்துவப்படிப்பிற்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டு 2010-2011 ஆம் ஆண்டில் 1,945 எம்பிபிஎஸ் இடங்களிலிருந்து, மாநிலத்தில் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை இப்போது 3,400 ஆக உயர்ந்துள்ளது. அதோடு 2020இல் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை நிறுவ ஒப்புதல் பெற்று இருக்கின்றது. இருந்தாலும் கூட 10,000க்கும் குறைவான இடங்களுக்கான போட்டியில் நீட் தேர்வு இல்லாவிட்டாலும் லட்சம் பேர் இருக்கின்றார்கள் இதில் பெருபான்மையானவர்கள் நகர்ப்புற மாணவர்களாக இருந்தாலும் அவர்களில் அநேகமானோர் நடுத்தர வர்க்கத்தினராக இருக்கின்றார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு நீட் போன்ற நுழைவு தேர்வு மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான வாய்ப்பை சற்றே அதிகரித்து இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.கிராமப்புற மாணவர்களை பொறுத்தவரையில் சமூகநீதியை நிலை நாட்ட நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் கல்விசூழலை அவர்களுக்கு ஏற்படுத்தி தருவதே அவர்களுக்கான நியாயமாக இருக்க முடியும்.நீட் தேர்வு ரத்து செய்யப்படுமாயின் அரசு பள்ளிகளை சேர்ந்த கிராமப்புற மாணவர்களை விட அதிகமாக இருக்கும்; தங்கள் தகுதிக்கும் மீறி தனியார் பள்ளிகளில் சேர்த்து தங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கும் பெரும்பான்மையான நடுத்தர குடும்பங்களின் கனவை சிதைக்கும் வேலையையே அது செய்யும்.

நீதியரசர் ஏ.கே.இராஜன் அவர்கள் தலைமையிலான குழு என்ன செய்யலாம்?
நீதியரசர் ஏ.கே.இராஜன் அவர்கள் தலைமையிலான குழு நேற்று (14.06.21) அன்று நடைபெற்ற கூட்டத்தில் நீட் தேர்வால் பாதிப்பு இருக்கிறது என்னும் முடிவிற்கு எதன் அடிப்படையில் வந்தது என்று தெரியவில்லை. குழுவின் உறுப்பினர்களின் கருத்து மட்டுமே கேட்கப்பட்டதா என்றும் தெரியவில்லை. நீட் தான் இங்கே பாதிப்பு ஏற்படுத்துகிறது என்கிற பிம்பம் ஏற்படுத்தப்பட்டு இருப்பது போலவே தெரிகிறது.நீதியரசர் ஏ.கே.இராஜன் அவர்கள் தலைமையிலான குழு நாம் மேலே எடுத்து சொல்லியிருக்கும் எல்லாம் தரவுகளையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம், ஒரு மாணவனின் கனவும் கூட அவன் வளரும் சூழல்களாலேயே விதைக்கப்படுகிறது.பத்தாம் வகுப்பிற்கு பின் அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை சதவீதம் பேர் கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களை விருப்பப்பாடங்களாக தேர்ந்து எடுக்கின்றார்கள் என்பது வரையில் அவர்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு நீட் தேர்வுக்கு முன்னான சூழல் நீட் தேர்வுக்கு பிறகான சூழல் அதில் பயனடைந்த நடுத்தர வர்க்க மாணவர்களின் சதவீதம் அதில் சாதிவாரியான சதவீதம் என்று அத்தனையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். நீட் போன்ற தேர்வுகளை அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளமுடியதற்கான காரணிகளை எடுத்துச்சொல்ல வேண்டும்.இது போன்ற நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ளும் அளவிற்கு அரசு பள்ளி மாணவர்களை தயார் செய்வதற்கான பரிந்துரைகளை அளிக்க வேண்டும்.

தி.மு.க வாக்குறுதியின் படி நீட் ரத்து செய்யப்படுமா? உண்மையில் ரத்து செய்யவதற்கான தேவை இருக்கின்றதா? காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து காங்கிரஸ் வாக்குறுதியின் படி மாநில அளவிலான நுழைவு தேர்வு நடத்தப்பட்டால் அப்போது தி.மு.கவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதற்கு காலம் பதில் சொல்லும்.அது வரையில், தற்கொலைகள் நிகழாமல் இருக்க இந்த சமூகம் தன்னை திருத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.தற்கொலைகளுக்கு தேர்வுகள் காரணம் என்பதை விட தேர்வின் பெயரில் சமூகம் ஏற்படுத்தும் அழுத்தமே மிக முக்கிய காரணமாக இருக்கின்றது. நுழைவு தேர்வு என்றில்லாமல் பொது தேர்வுதோல்வியும் தற்கொலைகளில் முடிந்திருக்கின்றது. நீட் ரத்து செய்யப்பட்ட பின் இந்த சமூகம் பொது தேர்வின் பெயரில் இந்த அழுத்தத்தை மாணவர்கள் மீது திணிக்கும்.எவ்வகை தேர்வாகினும் தேர்வுகள் தற்கொலைகளை தூண்டுவதில்லை தேர்வுகளின் மீதான சமூகத்தின் அணுகுமுறையே தற்கொலைகளை தூண்டுகிறது.நீதியரசர் ஏ.கே.இராஜன் அவர்கள் தலைமையிலான குழு என்ன செய்ய இருக்கின்றது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *