சாராயமும் சமூகமும்!

கள்ளக்குறிச்சி சம்பவம் சில நாட்களாக முக்கிய பேசு பொருளாக ஆகியிருக்கிறது. பேசு பொருள் என்பதைத்தாண்டி அரசியல் பார்வையாளர்களாக நமக்கு பிடித்தவர் பிடிக்காதவர் என்று நம்முள் நாமே மாற்றி மாற்றி வன்மங்களை பரிமாறிக்கொள்ள ஏதுவான கேலி பொருளாக ஆகியிருக்கின்றது.

அரசியல் பாரவையாளர்களான நம்முடைய இந்த கேலிச் சண்டைக்குள் சிக்காத அரசியல் தலைவர்களே இல்லை. 10 லட்சம் இழப்பீடு வழங்கியது முதல் தங்களை தானே பாதிப்புக்கு உள்ளாகிக்கொண்டவர்களை நடிகர் விஜய் நேரில் சென்று பார்த்தது வரையில் எல்லாம் கேலிக்குக்குள்ளாக்கப்பட்டு இருக்கின்றது.

நாளைய முழுநேர அரசியல்வாதியான இன்றைய நடிகர் விஜயை பொறுத்தவரையில், நம்முடைய அரசியல் சூழல் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற நிர்பந்தங்களுக்காகவே அநேகமான விஷயங்களை செயற்கையாகவேணும் அவர் செய்ய வேண்டியுள்ளது. கவனம் பெறும் பிரச்சன்னைகளில் முகம் காட்டுவது; கருத்து தெரிவிப்பது; இவையெல்லாம் அரசியலில் கால் பதிப்பதற்கான தகுதி என்கிறது போல் ஒரு மாயை உருவாக்கி வைத்துஇருக்கின்றார்கள்.அந்த மாய வலைக்குள் தானாக குதித்து இருக்கும் நடிகர் விஜய் அதை செய்வது,அல்லது அவருடன் இருப்பவர்கள் அவரைக்கொண்டு இந்த நாடகங்களை நடத்துவது எல்லாம் மற்ற அரசியல் கட்சிகளுக்கு அரசியல்வாதிகளுக்கும் தானும் ஆட்டத்தில் இருப்பதை பறைசாற்றுவதற்கே தான்.அதை கேலி செய்வதாலும் கொண்டாடுவதாலும் ஒன்றும் மாறிவிடப்போவதில்லை.

ஊடகத்துறை பெரிய செல்வாக்கு கொண்டிருக்கும், ஊடகத்துறையில் பெரிதும் ஆதிக்கம் செலுத்துகின்ற கட்சிக்கு எதிராக மிகப் பெரிய கண்டன குரல்கள் எழாது தான். இவர்கள்(சில நடிகர்கள்) தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த பொழுது நிர்வாக புரிதல் இல்லாமல் எழுப்பிய கண்டன குரல்களையே லட்சியப்படுத்தக்கூடாது என்று “சித்தாத்தர்கள் எல்லாம் புத்தர்கள் இல்லை” என்கிற ஒரு கட்டுரையில் முன்னம் குறிப்பிட்டு இருந்தோம்.

அரசாங்கம் என்பதை தி.மு.க. என்கிற கட்சி என்கிற ரீதியில் நிறுத்தி பத்து லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதை கேலிக்குள்ளாக்குவது வருத்தத்திற்குரிய விஷயம்.

மரணங்கள் செய்திகளாக வாசிக்கப்படும் பொழுதும் நம்முள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கிறதில்லை.அப்படி செய்திகளாக வாசிக்கப்படும் மரணங்களுக்கு நாம் இரங்கும் முன்னர் இறந்தவர்களை தராசு தட்டில் வைத்துப்பார்க்க பழகியிருக்கின்றோம். குழந்தைகள், பெண்கள், இரண்டு பிள்ளைகளுக்கு அப்பா இப்படியான லேபிள்கள் தான் நம்முள் இருக்கும் மனிதனை கொஞ்சம் அசைக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக கள்ளக்குறிச்சி விஷயத்தில் இந்த லேபிள் விஷச்சாராயம் (முதல்வர் அவையில் இப்படித்தான் இதை சுட்ட்டியிருக்கின்றார், டூப்ளிக்ட் சரக்கும் கள்ளச்சாராய வகையில் வரும் தானே என்று நண்பனிடம் கேட்டுக்கொண்டிருந்தபொழுது முதல்வர் அவையில் இப்படியாக குறிப்பிட்டது தெரிய வந்தது).

துரதிர்ஷ்டவசமாக கள்ளக்குறிச்சி விஷயத்தில் இந்த லேபிள் ‘விஷச்சாராயம் அருந்தியவர்கள்’ பலி என்று இருக்கின்றது. “எதற்காக இரங்க வேண்டும்! எதற்கு பரிதாபப் பட வேண்டும்! இவர்களுக்கு எதற்கு பத்து லட்சம் இழப்பீடு?” இது தான் நம் சமூகத்தின் மன ஓட்டமாக இருக்கின்றது.

பரிதாபம் கொள்வதும் இரங்குவதும் அவர் அவர் இயல்பை பொறுத்தது. ஆனால், அரசாங்கம் பத்து லட்சம் இழப்பீடு கொடுத்தது சரியே தான்!

எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்பது விவாதத்திற்குரியது என்றாலும் இழப்பீடு வழங்கியது சரியே தான்.

அரசாங்கம் என்பது தி.மு.க மட்டும் இல்லை, அது இந்த சமூகம் தனக்காக அமைத்துக்கொண்ட ஒரு நிர்வாக கட்டமைப்பு, அது சமூகத்தில் தடுத்திருக்கப் பட வேண்டிய ஒரு குற்றச்சம்பத்தை தடுக்க தவறியிருக்கின்றது. அதாவது இந்த சமூகமானது ஒரு தவிர்க்க முடிந்த ஒரு குற்றத்தை தவிர்க்க தவறியிருக்கின்றது. அது சில குடும்பங்களில் பெரிய இழப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்த குடும்பங்களையும் உள்ளடக்கியதே தான் இந்த அரசாங்கமும் இந்த சமூகமும்.அதனால், இழப்பீடு வழங்கியது சரியே. இன்னும் பல விஷயங்களில் இழப்பீடு தர வேண்டும் என்றாலும் இது பரவலாக நிகழ்ந்திராத ஒரு சம்பவம் என்பதனால் இந்தத் இழப்பீடு கவனம் பெற்றிருக்கின்றது.

இழப்பீடு வழங்கியது சரி என்றால்,எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்பது விவாதத்திற்குரியது என்று ஏன் சொன்னோம். சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்தில் இறந்தவர்களுக்கு இந்த அளவு இழப்புத் தொகை வழங்கப்படவில்லை. சிவகாசி பட்டாசு ஆலைகளில் நடக்கும் தீ விபத்துகளும் விஷச் சாராய மரணங்களும் தமிழகத்தில் தொன்று தொட்டு இடைவெளி விட்டு சீரற்ற ஒரு இடைவெளியில் நடந்துகொண்டே தான் இருக்கின்றது. இனி விபத்துகள் நடக்காமலிருக்க; விஷச்சாராய மரணங்கள் நிகழாமல் இருக்க; தொடர்ச்சியாக என்ன செய்ய வேண்டும் நிர்வாகத்தில் எதையெல்லாம் தொடர்ச்சியாக மேம்படுத்தப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை இதுவரை ஆட்சியில் இருந்த இரண்டு கட்சிகளும் இதுவரை செய்ததாக தெரியவில்லை.

முழுமையான மதுவிலக்கு மது ஒழிப்பு என்பதெல்லாம் ஒருநாளில் ஒரு கையெழுத்தில் சாத்தியப்படாத பொய் கோஷங்கள். மது இந்த மனித சமூகத்தோடு எப்போதும் தொடர்பில் இருந்திருக்கின்றது . இனியும் இருக்கும்.

இந்த நிகழ்வில் அரசியல் களத்தில் பிடித்தவர் பிடிக்காதவர் என்று நாம் கேலிப் பேசிக்கொண்டதும் கூட ஒரு வகை போதையே தான்.

இந்திய சமூகமாக, மாநில அரசாங்ககள் மது உள்ளிட்ட வஸ்துக்களை சமூகத்தில் இருந்து முற்றிலும் ஒழிப்பதில் பெரிய தீவிரம் காட்டி துரிதமாக செயல்பட்டதாக தெரியவில்லை. அதிலும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க மாறி மாறி ஆட்சி செய்த திராவிட மாடலைப் பற்றி தனித்து சொல்லவேண்டியதில்லை. காரணம், அனேகமான மாநிலங்களில் மது அருந்துவதற்கான சட்டபூர்வமான வயது வரம்பு 21 ஆக உள்ளது. பஞ்சாபில் 25 ஆக இருக்கின்றது. திராவிட மாடலில் இன்னமும் அது 18 ஆகவே தான் இருக்கின்றது. இது தான் இப்ப குறையா? என்றால் நிச்சயமாக, எந்த வயதுடையவர்கள் மதுவையோ புகையிலையையோ வாங்க தகுதியுடையவர்கள் ஆகிறார்கள் என்பது மது ஒழிப்பில் மிக முக்கியமான காரணியாக இருக்கின்றது.இந்த வயது வரம்பு கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட வேண்டும்.புகையிலை நுகர்வுக்கான வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் 2021இல் வலியுறுத்தியுள்ளது. இது நிச்சயம் மது ஒழிப்பில் ஒரு பெரிய முன்னெடுப்பாக இருக்கும்.

நிர்வாகம் இது போன்ற விஷயங்களில் தான் கருத்தாக செயல்பட வேண்டும்.அதோடு மெத்தனால் வர்த்தகத்தை அரசு எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பதை ஆராய வேண்டும், மேலும் தற்போதைய கட்டுப்பாட்டு எந்தளவு பயனுள்ளதாக உள்ளன என்பதை தொடர்ந்து மதிப்பாய்வு செய்ய வேண்டும். இத்தனை நுணுக்கமாக நாம் இதை அணுகினால், விஷச்சாராயம் தயாரிக்கின்றவர், விற்கின்றவர் என்கிற வட்டங்களைத் தாண்டி நடக்கின்ற தவறுகள் தெரியவரலாம்.எதிர்காலத்தில் இந்த தவறுகள் நிகழாமல் தடுக்கலாம்.

இந்த நிகழ்வில் நாம் கவனம் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் பாதிக்கப்பட்டவர்களின் பொருளாதார நிலை , இத்தனை ஆபத்து நிறைந்த ஒன்றை அவர்கள் போதைக்காகவே அணுகியிருந்தாலும். அவர்கள் மீது நான் தனிப்பட்ட முறையில் பரிதாப பட காரணமாக இருப்பது அவர்களின் பொருளாதார நிலையே தான். உணவு உட்பட, கலப்படமும் ஆபத்தும் நிறைந்த நுகர்பொருட்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பவர்களையே தான் சென்றடைகிறது அல்லது அத்தகைய பொருள்களுக்கு அவர்களே தான் சந்தையாக இருக்கின்றார்கள்.

(socializing காக குடிப்பது என்பதில்)இதே போதைக்காக வேறு ஒரு துக்க நிகழ்வில் அல்லது ஒரு சந்தோசமான நிகழ்வில் சற்றே பொருளாதார நிலையில் மேல்தட்டில் இருக்கும் மக்களும் கூட மதுவை நாடியிருப்பார்கள், நாடுகின்றார்கள். பொருளாதார நிலை பொறுத்து நுகரப்படும் மதுவின் தரமும் உயர்ந்துகின்றது. தனிப்பட்ட முறையில் நான் மது அருந்துவதில்லையென்றாலும், இதையும் நான் சமூக நீதி பிரச்சனையாகவே தான் பார்க்கிறேன். சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் இப்படியும் கூட வெளிப்பட்டு நிற்கும்.

இந்த ஏற்றத்தாழ்வுகளை எது சரி செய்யும்?சரியான வேலைவாய்ப்பு.

மதுப்பழக்கம் எல்லா நாடுகளிலும் இருக்கின்றது.ஆனால்,மதுவிற்கு அடிமையாக மாறும் சிக்கல் ஏன் இங்கே மட்டும் இருக்கின்றது? வியாபார நோக்கத்திற்காக இங்கே நடக்கும் தவுறுகள் தான் அதற்கு காரணமாக இருக்க முடியும்.மதுப் பழக்கம் தவறானது என்கிற பார்வையில் அதில் நடக்கும் பெரிய சீர்கேடுகளையும் தவறுகளையும் இந்த சமூகம் உதாசீனப்படுத்துகிறதோ என்று தோன்றுகிறது.

மதுவிற்கு அடிமையாக மாற இரண்டு காரணங்கள் இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். சமூகம் ஒவ்வொரு தனி நபரையும் எத்தனை engaging ஆக வைத்திருக்கின்றது என்பது ஒரு காரணம். ஒருவனுக்கு சரியான வேலை இருக்க வேண்டும், அந்த வேலை அவனை சரியாக வேலை வாங்க வேண்டும். மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுவது மட்டும் இல்லை, எந்த வேலையும் மது அருந்தினால் செய்ய முடியாது என்கிற நிர்பந்தத்தை இந்த சமூகம் ஏற்படுத்த வேண்டும். ஆனால், இந்த சமூகம் கடினமான வேலைகளை செய்ய கடிமான சூழல்களை கடக்க மது தேவை என்கிற பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றது.பணிக்கு வெளியில் ஒருவன் எத்தனை engaging இருக்கின்றான் என்பதும் இங்கே முக்கியம். மது அருந்துவதற்கான இடம் நேரம் இல்லாத அளவிற்கு ஒருவன் engaging ஆக இருக்க வேண்டும். சமூகம் ஒவ்வொருவரையும் அப்படி வைத்திருக்க வேண்டும். அப்படியிருந்தால் அவன் எந்த நல்ல கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையாக வாய்ப்பில்லை.

இரண்டாவது காரணமானது, நண்பர் ஒருவர் சொன்ன ஏற்றுக்கொள்ளும்படியான கருத்தின் விளைவாக எனக்கு ஏற்பட்ட நம்பிக்கை. மது நுகர்வு என்பது பெரும் வியாபாரம் ஆகி விட்ட பின்னர், மது நுகர்வில் ஒருவர் எதிர்பார்ப்பது போதை என்றிருக்கும் பொழுது, வியாபார போட்டியில் என்னவெல்லாம் நடக்கும்?! எந்த பிராண்ட் நல்ல போதை தருகிறதோ, எது மீண்டும் மீண்டும் நுகரத் தோன்றுகிறதோ அதுவே தான் போதை அது தான் வியாபாரம். இதில் டூப்ளிகேட் சரக்குகளின் புழக்கம் வேறு ஒரு பக்கம். ஆதாரங்களுக்கான அவசியம் இல்லாமல் நிச்சயமாக டூப்ளிகேட் சரக்குகளின் புழக்கம் இருக்கவே தான் செய்கிறது என்பதை நுகர்வோரை கேட்பீர்கள் என்றால் சொல்லுவார்கள்.

ஒரு மது எப்படி எவ்வாறு தயாரிக்கப்பட வேண்டும் என்பதற்கான தர நிர்ணயம், அதை கண்காணிக்கும் முறை, இதிலெல்லாம் கவனம் செலுத்திக் கூட மதுவை கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்தில் இருந்து ஒழிக்க முடியும் அல்லது மதுவினால் விளையும் கேடுகளை வெகுவாக குறைக்க முடியும்.ஆனால், இது நடக்குமா என்றால்? சந்தேகேமே தான். காரணம், டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருமானம் ஈட்டுகிறது என்பதை விட, மது ஆலைகளை நடத்தும் அரசியல்வாதிகளோ அரசியல் தொடர்புடைய வியாபாரிகளோ தான் அதிக வருமானம் ஈட்டுகிறார்கள் என்கிற பொழுது எப்படி நடக்கும்!

ஒரு நாளில் ஒரு கையெழுத்தில் சாத்தியமில்லாத மது ஒழிப்பு சார்ந்த பருவகால கோஷங்கள் எல்லாம் அரசியல் ஆதாயம் தழுவியதே. சமயங்களில் இந்த கோஷங்களை அரசியல் கட்சிகள் தாங்களே முன்னின்று எழுப்புவதில்லை மாறாக ஆள் வைத்துக்கொள்வது, சிறிய கட்சிகள் மூலம் அறிக்கை விடுவது என்று இருப்பதுமுண்டு.

பூர்ண மது விலக்கை வலியுறுத்தி சிறை சென்ற அக்காவின் பெயரை இங்கே குறிப்பிட்டால் அவரை சிறுமைப்படுத்துவதாகிவிடும். ஆனால், அவர் உட்பட எல்லோருக்கும் நாம் வலியுறுத்தும் கருத்து, ஒரு நாளில் சாத்தியமில்லாத அல்லது சாத்தியமே இல்லாத பூர்ண மது விலக்கை வலியுறுத்துவதை காட்டிலும், சில சீர்திருத்தங்களை முன்னெடுத்து இதன் தீய விளைவுகளை குறைப்பதும், பழக்கத்தை குறைப்பதை விட பழக்கத்திற்கு அடிமையாவதற்கு என்ன காரணம் என்று அலசி அதை சரி செய்வதும் உசிதமாக இருக்கும்.அத்தகைய முன்னெடுப்புகள்  பல இழப்புக்கள் நிகழாமல் தவிர்க்கும்.

சமூக நீதியானது எந்த ஒரு கலப்படமும் இல்லாத ஆபத்தில்லாத  தரமான நுகர்பொருள்களை  வாங்கும் சக்தியை பொருளதார ரீதியில் அடித்தட்டில் இருக்கின்றவர்களுக்கும் சக்தியை தருவதை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *