நூற்று முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை, புதிய பாராளுமன்றம் அதனோடு சேர்த்து கட்டப்படும் பிரதமர் இல்லம்.
கொரோனா முதல் அலை வெவ்வேறு நாடுகளில் தீவிரம் அடைந்த பின்னர், சில வளர்ந்த நாடுகளில் பரவ தொடங்கிய போது, அந்த அந்த வளர்ந்த நாடுகளின் தலைவர்களே நேரடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க தயங்கினார்கள். அவர்களின் தயக்கத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை. அவர்களுக்கு இரண்டு வழி மட்டுமே இருந்தது. ஒன்று, ஊரடங்கால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வது. மற்றொன்று, ஊரடங்கு பிறப்பிக்காமல் அதனால் வரும் பெருந்தொற்று பாதிப்புகளை எதிர்கொள்வது. வளர்ந்த நாடுகள் இரண்டாம் வழியை தேர்ந்தெடுத்த போது வளரும் நாடாக அறியப்படும் இந்தியா முதல் வழியை தேர்ந்தெடுத்தது. கடினமான முடிவுகளில் நாம் நிற்கும் போது அக்கரை பச்சையாகவே தெரியும்.
கட்சிகள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது கையாளும் அணுகுமுறை
இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் அக்கறை அக்கரை மீதே இருக்கும்; மக்கள் மீது அக்கறை காட்டுவதாக அக்கரையை காண்பித்து தங்கள் பக்கம் மக்களின் கவனம் திரும்ப செய்யும் வேலையையே எதிர்க்கட்சிகள் செய்துகொண்டிருக்கிறது.
எப்போதும் போல நாம் எதிர்க்கட்சி என்று இங்கு குறிப்பிடுவது கட்சி பாகுபாடின்றி, கால பாகுபாடின்றி எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் பொருந்தும் என்று கொள்ளவும்.
முதல்வர் ஸ்டாலின் அவர்கள், தேர்தலில் வெற்றிபெற்ற போது, அவரை வாழ்த்தி எழுதிய கட்டுரையில் நாம் ஒன்றை குறிப்பிட்டு இருந்தோம்.”எதிர்கட்சி ஆளும் கட்சியாகிவிட்டபின்பு அவர்கள் எதிர்த்த அநேகமான விஷயங்களை அவர்களால் ஒதுக்கிவிட முடியாது. இன்றைய கட்டத்தில் தி.மு.க எதிர்த்த ஆனால் நிர்வாக ரீதியாக ஒதுக்க முடியாத விஷயங்கள் ஏராளம் அதனையெல்லாம் செயல் தலைவராக இருந்த தலைவர் ஸ்டாலின் அவர்கள் எப்படி கையாள்கிறார் என்பது மக்களால் கவனிக்கப்பட்டு கொண்டிருக்கும்” என்று.
அந்த கட்டுரையை படிக்க
வென்றே விட்டார் ஸ்டாலின்! ஆம், தளபதி தலைவராகிவிட்டார்!
அ.தி,மு.க ஆட்சியின் போது, கொரோனா நிலைமையின் காரணமாக ஏற்பட்ட நிதிச்சுமையை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியத்தை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை தி.மு.க வினரால் எதிர்க்கப்பட்டது. இன்று ஆட்சியில் இருக்கும் தி.மு.க. அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியத்தை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்துள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி நிவாரணம் தர வேண்டும் என்றது.;அப்போது அ.தி.மு.க அரசு முன்கள பணியாளர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தால் அவர்கள் குடும்பங்ககளுக்கு 50 இலட்சம் வழங்க ஆணை பிறப்பித்து இருந்தது. அது இன்றைய தேதியில் 25 இலட்சம் ஆகி இருக்கின்றது.
மேற்சொல்லப்பட்ட விஷயங்கள் தி.மு.கவை குறை சொல்வதற்காகவோ அ.தி.மு.க வின் புகழ் பாடவோ எடுத்துசொல்லப்பட்டதல்ல. நம் நாட்டில் எதிர்கட்சிகள் நிர்வாக சிக்கல்களை அறிந்திருந்தாலும் கூட அவர்கள் சுட்டிக்காட்ட வேண்டிய விஷயங்களை தவிர்த்து விட்டு அரசை சரியான பாதையில் செலுத்த உதவும் வேலையை விடுத்து மக்களை ஈர்க்க அரசாங்கத்தின் மீது வெறுப்பை பரப்பும் எதிர்பரசியலையே கையாண்டு வந்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டவே.
எதிர்க்கட்சிகள் இப்படியான அணுகுமுறையே எப்போதும் கையாள்வது தெரிந்தும், ஊடங்கள், அதிலும் முக்கியமாக பிராந்திய ஊடங்கள், ஒரு விஷயத்தை எல்லா கோணங்களிலும் எடுத்து சொல்லும் வேலையை செய்வதில்லை.உதாரணமாக மதுரை AIIMS கட்டிடடத்தை கையோடு எடுத்து வந்துவிட்டேன் என்று சினிமா பாணியில் மக்களை ஈர்க்க ஒரு கட்சிக்காரர் அவரின் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதை செய்தியாக வெளியிடும் போது அதுசார் மற்ற விஷயங்களை பேசுவதில்லை. அவரிடம், தி.மு.க. ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது AIIMS போன்று எத்தனை திட்டங்கள் நாட்டில் பரவலாக முன்னெடுக்கப்பட்டது என்கிற கேள்வியை கேட்பதில்லை. 2014க்கு பிறகு 14 இடங்களில் AIIMS நிறுவ பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி அதில் 7 இடங்களில் செயல்படவும் ஆரம்பித்துவிட்டது( இன்னும் முழு செயல்பாட்டிற்கு வரவில்லை). இன்று ஒற்றை செங்கலாக இருக்கும் திட்டங்கள் அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சியின் காலத்தில் கூட செயல்பாட்டிற்கு வருவதற்கு வாய்ப்பிருக்கின்றது.முன்னர் 2002 இல் அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்ட 6 AIIMS திட்டங்கள் 2012இல் முழுமைபெற்றது.திட்டங்கள் அதற்கான கால அவகாசத்தை எடுத்து கொள்ளும் என்பது அனைவரும் அறிந்ததே.இதற்கு இடையில் தி.மு.க மத்தியில் கூட்டணியில் இருந்த போது இப்படியான திட்டங்கள் முன்னெடுக்க படவில்லை. எதிர்க்கட்சியாக நிற்கும் போது அக்கட்சிக்களால் அரசின் மீது பரப்படும் அவதூறுகளை நாம் ஆராய்வதில்லை.
வெற்று கருத்துக்களை தேடும் ஊடங்களின் அணுகுமுறை
ஊடங்கள் கருத்துக்களை கேட்பதிலேயே தான் ஆர்வம் கொண்டிருக்கின்றது. ஜனநாயக நாட்டில், ஒருவர் கட்சி தொடங்க இருப்பதை எதிர்த்து “மக்கள் ரஜினிகாந்த்க்கு தரும் அடியில் நடிகர்கள் கட்சி ஆரம்பிக்க கூடாது”என்று சொல்லும் போது முந்தைய தேர்தலில் அவர்(சீமான்) வாங்கிய அடியை கருத்தில் கொண்டால் யாருமே தான் கட்சி தொடங்க கூடாது என்கிற எதிர்கருத்து அங்கே எழுப்பப்படவில்லை. அ.தி.மு.க.வின் வெற்றிவாய்ப்பை பற்றி விஜயகாந்த் அவர்களிடம் கேட்ட போது, விஜயகாந்த் அவர்கள் கோபப்பட்டதற்கு காரணம் இல்லாமல் இல்லை.”அவர் சொன்னதை பற்றி உங்கள் கருத்து என்ன?” என்பதை போன்ற அவசியமற்ற கேள்விகளாலேயே இது போன்ற ( “மக்கள் ரஜினிகாந்த் க்கு தரும் அடியில் நடிகர்கள் கட்சி ஆரம்பிக்க கூடாது”) அடாவடியான கருத்துக்கள் பிறக்கின்றது. அடாவடியான கருத்துக்கள்,பொய் அவதூறுகள், வெறுப்பு அரசியல் இவற்றை சுற்றியே அரசியல் இருக்கின்றது. மக்களை இதை தாண்டி சிந்திக்க விடாமல் அரசியல்வாதிகள் கவனமாக பார்த்துக்கொள்கிறார்கள்.
மத்திய அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் பெயரில் மாநிலங்கள் நேரடியாக தடுப்பூசி கொள்முதல் செய்ய முற்பட்டு இன்னும் எந்த ஒரு மாநிலமும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட இறக்குமதி செய்திடாத வேளையில் ஒரு ஊடகம் இப்படி ஒரு கேலி சித்திரத்தை வெளியிடுகிறது.
இந்திய தடுப்பூசி நிறுவனங்களில் கோவிஷீல்டு இன் உரிமம் வெளிநாட்டு நிறுவனமான அஸ்ட்ராஜென்க்கா விடம் இருக்கின்றது. உலகத்தில் எந்த நாடும் தனித்து இயங்க முடியாது, ஒவ்வொரு நாடும் நெருக்கடியான சூழலில் மற்ற நாடுகளுக்கு உதவ வேண்டும் என்பதோடு இந்நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படியே உள்நாட்டு தேவைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதோடு வெளிநாடுகளுக்கு தடுப்பூசி அனுப்பவது நடந்துவருகின்றது.ஒடிஷா, உத்தரபிரதேஷம் , மகாராஷ்டிரா மாநிலங்கள் முன்னமே தடுப்பூசி வாங்குவதற்கான நடவடிக்கையில் இறங்கிவிட்டது. தற்போது டெல்லி,கர்நாடக,தெலங்கானா,ஆந்திரா, தமிழ்நாடு இந்த முயற்சியை தொடங்கியிருக்கின்றது. ஆனாலும் இன்னும் எந்த மாநிலமும் தடுப்பூசியை இறக்குமதி செய்துவிடவில்லை.இந்நிலையில் தான், மேலே காட்டப்பட்டுள்ள கட்சிசார் பரப்புரை போல தோற்றமளிக்கும் கேலி சித்திரத்தை ஒரு ஊடகம் வெளியிடுகிறது.
நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ள போதிய திறன் இல்லாமல் திணறும் இந்தியா
முதல் அலையை ஒப்பீட்டளவில் இந்தியா ஓரளவு சிறப்பாக கையாண்டு இருந்தாலும் இரண்டாம் அலையை எதிர்கொள்ள போராடி வருகின்றது. காரணம், இப்படியான பெருந்தொற்று காலங்களை சமாளிக்க அல்லது எதிர்கொள்ளும் அளவிற்கான திறனை இந்தியா வளர்த்துக்கொள்ளவே இல்லை என்பது தான் உண்மை
சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகள் தங்களின் இத்தனை வருட நிர்வாகத்தால், அவர்களின் உழைப்பை கொண்டு கடினமான சூழல்களை எதிர்கொள்ள தங்களை தயார் நிலையில் வைத்திருக்கின்றார்கள். ஆனால், இந்தியா அந்த நிலையை இன்னும் முழுமையாக எட்டிவிடவில்லை. அதற்கு இதுவரை அதிகாரத்தில் இருந்த எல்லா கட்சிகளும், அந்த கட்சிகளின் வெறுப்பு அரசியலுக்குள் சிக்கியிருக்கும் மக்களும் என்று அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். மிக பெரிய சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ள தேவையான முழுமையான திறன் இல்லாத நிலையில், தேர்தல் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது கட்சிகள் தங்கள் பிரச்சார கூட்டங்களை சுய ஒழுக்கத்துடன், கூட்டம் கூடாத வகையில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்தியிருக்க வேண்டும். அல்லது, ஒவ்வொவொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு கால கட்டத்தில் பல கட்டங்களாக தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். ஆளும் கட்சியையும் சேர்த்து எந்த கட்சியின் அரசியல்வாதியும் தேர்தலை ஒத்திவைக்கவோ அல்லது பல கட்டங்களாக பிரித்து நடத்தவோ முன் மொழியவில்லை மாறாக மீண்டும் ஆளும் கட்சியை மட்டும் குற்றம் சொல்லும் விளையாட்டிற்குள் மக்களை புகுத்தியிருக்கின்றார்கள்.
பா.ஜ.க.வை எதிர்க்க மத சார் கருத்து மோதல்களை கையிலெடுக்கும் எதிர்க்கட்சிகள்
முதல் அலையின் போது நோய் பரவலோடு இசுலாமியர்களை தொடர்படுத்தியதற்காக 155 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.அணைத்து அரசியல்வாதிகளும் சம்மந்தப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டங்களை பற்றி அதிகம் பேசாமல் ஆளும் கட்சி மீது வெறுப்புணர்வை தூண்டுவதாக கும்ப மேளா கூட்டத்தை பற்றியே அதிகம் பேசுவதை காணமுடிகிறது.
ஊரடங்கு தளர்வுகளின் பல்வேறு விளைவுகளில் அதுவும் ஒன்றே தவிர அது தேர்தல் பிரச்சார கூட்டம் போன்று நாடு முழுதும் பரவலான கூட்டமாக இருந்திருக்கவில்லை அதோடு தேர்தல் போன்று அது மாத கணக்கில் நடந்திருக்கவில்லை. உத்தரகண்ட் மாநிலத்தின் வருமானத்தில் பெரும் பகுதி சுற்றுலாவை நம்பி இருப்பதால் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி கும்ப மேளாவை நடத்த திட்டமிட்ட அந்த அரசு கூட்டத்தை கையாளும் அளவிற்கு திறன் கொண்டிருக்கவில்லை.இத்தனை வருடங்ககளில் வளர்ந்த நாடுகளை போன்று நெருக்கடியை சமாளிக்க பல வகையில் பின் தங்கி இருப்பதை பற்றியும் மக்களின் பாதுகாப்பை பற்றியும் சிந்தனை இல்லாமல் கட்சிகள் நடத்திய பிரச்சார கூட்டங்களையும் பற்றிய கவனத்தை கும்ப மேளாவை கொண்டு திசை திருப்பும் வேலையையே கட்சிகள் செய்தது.
இத்தகைய கடிமான சூழலை எதிர்கொள்ள, இந்தியா போன்ற பெரிய நாடு இனிமேல் தயாராவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்(அதற்கான திட்ட முன்னெடுப்பகள் விரைந்து எடுக்கப்படுமானால்.) 1952 இல் AIIMS போன்ற மருத்துவமனைகள் பரவலாக்கப்பட்டிருந்தால் தமிழக்தில் இன்று ஒன்று அல்லது இரண்டு AIIMS மருத்துவமனை இருந்திருக்கும். காங்கிரஸ் போன்ற பழமையான அதிக காலம் ஆட்சியில் இருந்த கட்சி நிலையான ஆளும் கட்சியாக இருந்திருக்கும்.
புதிய நாடாளுமன்றத்தின் அவசியம்
இப்படியான கடினமான சூழலில் புதிய நாடாளுமன்றம் காட்டுவதற்கு என்ன அவசியம் என்கிற கேள்வி பிரதமருக்கு புதிய இல்லம் கட்டுவதற்கு என்ன அவசியம் என்கிற தொனியில் ஒலிக்கின்றது.
37 கோடி கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமையாக ஆங்கிலேய அரசால் இந்திய மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பாராளுமன்றம் தன்னுடைய 100 வயதை தொடப்போகிறது என்பதற்காக மட்டும் கிட்டத்தட்ட 900 கோடியில் புதிய பாராளுமன்றம் பிரதமர் இல்லமும் கட்டப்படவில்லை. மொத்த இந்தியாவையும் நிர்வாகம் செய்யும் ஒரு அலுவலகமாக பார்க்கப்பட வேண்டியதை எதிர்க்கட்சிகள் பிரதமரின் சொகுசு பங்களா போல சித்தரிப்பது வேதனையளிக்கிறது.
இந்தியா வளர வளர அதன் தேவைகள் வளர வளர அமைச்சரவை விரிவாக்கப்பட்டது. அமைச்சரவை விரிவாக்கம் என்பது அலுவலக விரிவாக்கம் என்பதே. வளரும் தேவைக்கேற்ப இடமும் வளர வேண்டிய அல்லது புதுப்பிக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.நான்கு பேர் இருக்கும் வீடுகள் கூட 50 வருடங்களுக்குள் புதுப்பிக்கப்படுகிறது.
தமிழகத்தின் கடைசி வாய்ப்பு ரஜினிகாந்த் என்னும் புத்தகத்தில் பேசப்படாத அரசியல் பிரச்சனைகள் பற்றி பேசும் பாகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப மக்கள் பிரதிநிதிகள் ஏன் அதிகரிக்கப்படவில்லை என்று கேட்கப்பட்டு இருந்தது.
புத்தகத்தை படிக்க தமிழகத்தின் கடைசி வாய்ப்பு ரஜினிகாந்த்
அதற்கான பதில் தான் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடம்.1990களில் நடத்தப்பட்ட ஆய்வின் படி நாடாளுமன்றம் புதுப்பிக்கப்பட்ட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. 29 வருடங்களுக்கு பின் அந்த பரிந்துரை செயல் வடிவம் பெற இருக்கின்றது. 37 கோடி கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமையாக இருந்த பாராளுமன்றம் 139 கோடி ஜனங்களுக்கு பொது உடமையாக இருக்க முடியாது என்று புது வடிவம் பெற இருக்கின்றது. 2026 இல் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இலக்கு நிர்ணியக்கப்பட்டு இருக்கின்றது.அதாவது மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட இருக்கின்றது.அரசாங்கம் பாராளுமன்றம் கட்டப்பட்ட வேண்டிய தேவையை உச்ச நீதிமன்றத்தில் விளக்கியும் இருக்கின்றது.
“இந்த நெருக்கடியான சூழலில் இதை கட்ட வேண்டுமா?” என்று எழுப்பபடும் கேள்வி மக்கள் மனதில் இது தேவையற்றது என்று ஒரு பிம்பத்தை தான் உருவாக்குகின்றது.சென்ட்ரல் விஸ்டா என்னும் இடத்தை புதுப்பிக்கும் பணியின் மொத்த திட்ட மதிப்பீடான சுமார் 20 ஆயிரம் கோடியில் சுமார் 862 மற்றும் 477 கோடி மதிப்பிலான இரண்டு திட்டங்கள் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது. இதை நிறுத்திவிட்டு இதற்கான பணத்தை கொரோனா பணிகளுக்கு செலவிட வேண்டும் என்கிற வாதம் ஏற்புடையதாக தெரியவில்லை. காரணம், மத்திய பட்ஜெட்டில் தடுப்பூசி வாங்குவதற்காக மட்டும் 35ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இன்று வரை எல்லா மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு இருக்கின்றது. இது அல்லாமல் சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 73931.77 கோடி.இவற்றையெல்லாம் சேர்த்து, வெவ்வேறு துறைகளின் கீழ் சுகாதாரம் சம்மந்தமான மேலாண்மைக்காக மொத்தம் 3லட்சம் கோடி அளவில் நிதி ஒதுக்க பட்டு இருக்கின்றது. எல்லா துறைகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியை சேர்த்து இந்தியாவின் 2021-22 பட்ஜெட் 3483235.63 கோடி இதில் பாராளுமன்றம் போன்ற கட்டிடங்கள் கட்ட ஒதுக்கப்பட்ட நிதி 1745.95. கோடி. எதிர்க்கட்சிகள் நம்முள் திணிக்கும் வெறுப்பு அரசியல் எப்படியானது என்றால், படிக்காதவன் ரஜினிகாந்த் போல நாடோடிகள் சசிகுமார் போல கையிலிருக்கும் எல்லாவற்றையும் கொரோனா பணிகளுக்கு கொடுக்க வேண்டும் என்பது போன்ற சினிமாத் தனமானது.
இதனால், சகலமானவர்களும் புரிந்து கொள்ளவேண்டியது, நிலைமையை ஆளும் கட்சி மிக சரியாக கையாள்கிறது என்பது இல்லை. காரணம், இதே கட்சி எதிர்க்கட்சியாக இருந்தால் இன்று எதிர்க்கட்சிகள் செய்யும் வேலைகளையே தான் செய்திருக்கும்.நாம் புரிந்து கொள்ளவேண்டியது நாட்டின் நிர்வாக சிக்கல்களையும் அந்த சிக்கல்களின் வேர்களையும். எப்போதும் நாம் யாரையேனும் குற்றம் சொல்லவே தேடுகிறோம்.நாளையே காங்கிரஸ் ஆட்சிக்கு வரப்போவதில்லை; விடிந்த உடன் ராகுல் பிரதமராக போவதில்லை. தி.மு.க எப்படி நேற்று தான் எதிர்த்த விஷயங்களை இன்று தானே செய்ய நேர்ந்தததோ அது நாளை காங்கிரஸுக்கும் நடக்கும்.நாம் கட்சிகளை மதிப்பிடுவதாக நினைத்து நிர்வாக சிக்கல்களை புரிந்து கொள்ள மறுத்துவருகின்றோம்.அரசாங்கம் எதிர்க்கட்சி உதிரி கட்சி என்று மக்கள் பிரதிநிதிகளை கொண்ட எல்லா கட்சிகளையும் உள்ளடக்கியதே ஆகும் அதோடு நம்மை விட சிறந்த வல்லுனர்களை கொண்டே அது இயங்குகின்றது.என்ன செய்திருக்கலாம் என்பதை பற்றியும் இனி என்ன செய்யலாம் என்பதையும் எந்த எதிர்க்கட்சி பேசி கேட்டிருக்க மாட்டீர்கள். காரணம்,வெறுப்பரசியல்-139 கோடி ஜனங்களின் பொதுவுடைமை.இதுபோன்ற நெருக்கடிகளில் குறை சொல்வதைவிடுத்து ஒன்றுபட்டு இருப்பதும்.விவாதங்கள் குறைகளை பற்றியதாக அல்லாமல் தீர்வுகளை பற்றியதாகவும் இருப்பதே ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்க முடியும்.