நம் நாட்டில் ஊடகமானது,அரசியல் களத்தில் ஒவ்வொவொரு காலத்திலும் சில சித்தார்த்தர்களையும் மகாத்மாக்களையும் காண்பிக்கின்றது. இந்த ஊடகம் வழியே நாம் காணும் சித்தார்த்தர்களும் மகாத்மாக்களும் புத்தராகவும் காந்தியாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை.
நம் நாட்டு அரசியலில் அரசியல்வாதிகள், மக்களை அவர் அவர் கட்சிகளின் எண்ணவோட்டத்திற்கு ஏற்பவே சிந்திக்க வைக்கிறார்கள் அல்லது அதற்கான பெரு முயற்சி செய்கிறார்கள். இதற்காகவே நமக்காக(மக்களுக்காக) குரல் கொடுப்பவர்கள் போல சிலர் ஊடகங்கள் வழியே தோன்றுகிறார்கள் அல்லது தோற்றுவிக்கப்படுகிறார்கள். ஆங்கிலத்தில் Influencer என்கிற வார்த்தை உண்டு அத்தகையவர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள் அல்லது அப்படி அல்லாதவர்களைக்கூட அவர்களுக்கேற்றது போல அப்படியாக உருவாக்கி உலவ விடுகிறார்கள். அவர்களில் அநேகர் அரசியல்வாதிகளின் எண்ணத்திற்கும் ஆசைக்கும் வடிவம் கொடுப்பதற்காக மட்டுமே குரல் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.
சமூக வலைத்தளத்தில் நடிகர் சித்தார்த் அவர்கள் மக்களுக்கு ஆதரவாக அல்லது அரசிற்கு எதிராக அல்லது ஆளும் கட்சிக்கு எதிராக கருத்துக்களைப் பதிவிட்டு வருவதற்காக நடிகர் என்பதைத் தாண்டி பிரபலமானவர். அவரின் கருத்துக்கள் நியாயமானதாக இருக்கலாம் அவரின் கருத்துக்களில் உண்மை இருக்கலாம். ஆனால், அவரின் குரல் ஒரு கட்சிக்கு எதிரானதாக மட்டுமே கூட இருக்கலாம் அது அவரின் உரிமையும் கூட. ஒரு தலைப்பட்சமான கருத்துக்கள் மக்களின் குரல்களாக கொண்டாடப்படும் இடங்களிலும் கொண்டாட வைக்கப் படும் இடங்களிலும் தான் நாம் கவனம் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அப்படியான ஒரு தலைப்பட்சமான கருத்துக்களுக்கு சம்மந்தப்பட்ட கட்சியினர் எதிர்வினை ஆற்றும் போது உண்மையான பிரச்சனைகளை பற்றிய கவனம் கட்சி சார் எதிர்ப்புகளாக மாறிவிடுகிறது.
இவரை போன்ற மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் சமயங்களில் தவறான புரிதல்களை நியாயப்படுத்தவும், மக்கள் மத்தியில் தவறான கற்பிதங்களை புகுத்தவும் செய்கிறது.
மிக சமீபத்தில் தமிழகத்தில் முதல்வர் பதவியேற்று இருக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது அவர் இப்படியாக ட்வீட் போடுகிறார்,”ஜெயலலிதாவிற்கு பின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின்” என்று. இது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அநேகமான பிரபலங்கள் அநேகமான சமயங்களில் சார்பு நிலை கருத்துக்களையே வெளிப்படுத்துகிறார்கள்.
மக்கள் எப்போதும் சட்டமன்ற அல்லது பாராளுமன்ற பிரதிநிதிகளையே தான் தேர்ந்து எடுக்கின்றார்கள். ஆனாலும் கட்சிகளின் முகமாக இருப்பவர்களை பார்த்தே வாக்களிக்கும் சூழலில் அவரின் கருத்தை ஏற்றுக்கொண்டாலும் கூட ஒருவரை வாழ்த்தும் குறிப்பில் மற்றொருவரை கீழ்மை படுத்தவேண்டிய அவசியத்தை கேள்விக்குட்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.
காரணம், இங்கே மக்களுக்கான குரல்களாக முன்னிறுத்தப்படும் அல்லது பிரதானப்படுத்தப்படும் குரல்கள் நம்மை எதிர்திசை நோக்கி அழைத்துச் செல்கிறதே தவிர தீர்வுகளை நோக்கி அழைத்து செல்வதில்லை. அதோடு, நம் நாட்டில் மன்மோகன் சிங் உள்ளிட்ட சில முன்னாள் பிரதமர்களே நேரடி தேர்தல்களை சந்திக்காதவர்களாக இருக்கும் போது இத்தகைய கருத்துக்கள் எதிர்திசை நோக்கி மக்களை ஈர்க்கச் செய்யும். தன் மீதான ஒரு கவனத்தை தக்க வைக்கவுமே செய்கிறது. பிஹாரில் தொடர்ந்து 15 ஆண்டுகளாகப் பதவி வகிக்கும் முதல்வர் நிதிஷ்குமார், சட்டப்பேரவைக்கு போட்டியிட்டது இல்லை. மகாராஷ்டிராவின் முதல்வர் உத்தவ் தாக்கரேவும் நேரடியாக தேர்தலில் போட்டியிடாத முதல்வரே. இப்படியிருக்க நேரடி தேர்தலை சந்தித்து முதல்வரான ஒருவரை இழிவுபடுத்தும் விதமாக கருத்தைப் பதிவு செய்வது கட்சி சார் காழ்ப்புணர்ச்சியாகவே கொள்ளமுடியும்.
இங்கு ஊடங்கங்கள் வழியே நாம் பார்க்கும் சித்தார்த்தர்கள் எல்லாம் புத்தர்கள் இல்லை. இதைப் படிக்கும் போது யாரோ சங்கி எழுதியதை போன்ற கோபம் உங்களுக்குள் தோன்றுமானால்,நினைவுகொள்ளுங்கள் இந்த ஊடகம் வழியே கண்ட குஜராத் முதல்வர் மோடியோடு தான் உங்கள் மாநில முதல்வர்களை ஒப்பிட்டு கீழ்மைப்படுத்தினீர்கள். அப்போது அவர் மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிர்பக்கத்தில் இருந்தார்.