வளுக்கு அவன் வைத்த பெயர்- ஷாரா.

 

“சரி! அந்த பொண்ணு பேர் என்ன?” செல்வா கேட்டான்.

 

அந்த கல்லூரியில் வீரா சேர்ந்து 2 வருடங்கள் முடிந்து விட்டது.  பள்ளிக்காலத்தில், கணக்குப் பாடம் படிக்க அவள் வீட்டிற்கு அழைத்தபொழுது, “இல்ல! நான் வரலை”  என்பதை சொல்ல அவள்  வீடு வரை சென்று,  “சரி வரேன்! ” என்று அவன் அவளிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

 

இன்று வரை, ‘அவள் எங்கு இருக்கிறாள்? என்ன செய்து கொண்டு இருக்கின்றாள்?’ எதுவும் வீராவிற்கு  தெரியாது. அவளுக்கு அவனை ஞாபகம் இருக்குமா? என்பதும்  கூட அவனுக்கு தெரியாது.

 

இந்த இரண்டு வருடங்களில், அந்த கல்லூரியில் படித்த அத்தனை பெண்களில், அவன் கண்களை கடந்த ஒவ்வொரு பெண்களிடமும் அவன் தேடியது, அந்த வட்டமான முகம்; சின்ன பொட்டு; அந்த சின்ன பொட்டுக்கு மேல் மெல்லிசான  சந்தனம்;அழகில்லா உடைகளை கூட அழகாக அவள் உடுத்தும் அந்த நேர்த்தி. இது எதையும் அவன் எந்த பெண்களிடமும் இன்னமும் காணவில்லை.

 

ஏதோ! அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறது என்பதை வீரா உணர்ந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிறது. ஆனால்,  அதைப்பற்றி அவன் யாரிடமும் பேசியதே இல்லை.

“இதுன்னா இது தான்! அதுன்னா அது தான்!” என்று பொதுப்புத்தி வகுத்து வைத்திருக்கின்ற இலக்கணங்களுக்கு பொருந்தாத ஒன்றை யாரிடம் சொன்னாலும் அவர்கள் அதை தவறாகவே தான் புரிந்து கொள்வார்கள் என்கிற எண்ணம் அவனுக்கு.

அவன் வயதொத்தவர்களும் அவனை விட பெரியவர்களும் கூட எதிர்பாலின ஈர்ப்பும் காமமும் தான் காதலாக இருக்க முடியும் என்று நம்புகிறார்கள் என்று அவன் எண்ணிக்கொண்டு இருந்தான். “இது அது இல்லை!” என்பதை யாரிடமாவது சொல்ல வேண்டுமென்று  அவன் மனம் தேடிக்கொண்டு இருந்தது.

 

மனித மனம் எதையும் தன்னுள் வைத்துக்கொள்ள விருப்புவதில்லை.அது அதன் அடியாழத்தில் உள்ள ரகசியங்களை பகிர்ந்துகொள்ள ஒரு மனதை தேடி துடித்துக்கொண்டே தான் இருக்கும்.

 

இரண்டு வருடங்களாக ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் இருந்தும் கூட அன்று வரை அவனுக்கும் செல்வாவிற்கும் இடையில் பெரிய நட்பு வளர்ந்திருக்கவில்லை.

 

ஏதோ காரணத்திற்காக ஒரு நாள் செல்வாவும் வீராவும் ஒரே வரிசையில் உட்கார்ந்தார்கள்.அதன் பின் அவர்கள் இடம் மாறவே இல்லை.

 

அவர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்த அந்த வகுப்பறையில், அவர்கள் உட்கார்ந்திருந்த அந்த வரிசையில், செல்வாவிற்கு இடது பக்கம், சீவியிருந்தாலும் கலைத்து விட்டதை போலும் கலைத்து விட்டாலும் கலையாதது போலவும் இருக்கும் அடர்த்தியான முடியோடு ஒருவன் உட்கார்ந்திருந்தான். அவன் தான் விமல்.

 

வளர்ந்தும் வளராத மூன்று பேர் அன்று ஒரே வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள்.

 

“எப்பவுமே சந்தோசமா இருக்கிறதுக்கு எந்த காரணமும் தேவை இல்லை.” செல்வா; விமல்; சரவணன்; இவர்கள் மூன்று பேரையும் வீரா கவனிக்க தொடங்கிய பொழுது வீராவுடைய மனம் வீராவிற்கு சொன்னது அது தான்.

 

“எப்பவுமே சந்தோசமா இருக்கிறதுக்கு எந்த காரணமும் தேவை இல்லை.”

 

செல்வா, விமல், சரவணன் இந்த மூன்று பேரும்  வீராவிற்கு வித்யாசமாக தெரிந்தார்கள். அவன் வாழ்வில் அப்படி ஒரு மூன்று பேரை அதற்கு முன் அவன் சந்தித்திருக்கவே இல்லை. He started to love them.

 

அன்று அந்த வரிசையில் விமல் செல்வா வீரா மட்டும் தான் இருந்தார்கள்.

 

“டேய்! இப்ப நம்ம சின்ன வயசுல யாரையாவது நமக்கு பிடிச்சருக்கும் ல அப்படி உங்களுக்கு யாராவது இருக்காங்களா?” செல்வா தான் அன்று இந்த பேச்சைத் தொடங்கினான். செல்வாவிற்கு அவன் மனதில் இருப்பதை சொல்லவேண்டும் என்கிற ஆசை.

 

“நான் first standard படிக்கும் போது, ஒரு பொண்ணு; பேர் மோனிக்கா.  5th  ல class மாத்துற வரை நாங்க ஒரே class  தான். அதுக்கு அப்புறம் ஒரே school  வேற வேற class அப்பறம் contact இல்லாம போய்டுச்சு. எங்க ஊர் தான், school friends circle ல  சொல்லி தேடிட்டு இருக்கேன்; யாருகிட்ட contact  இருக்கும் ன்னு” விமல் சொல்ல சொல்ல வீராவின் கண்களும் காதுகளும் விரிந்தது.

 

“அஞ்சாவது ல இருந்து!..

எத்தனை வருஷம்!..

இன்னும் தேடிட்டு இருக்கான்..!

நம்மள மாதிரி தான் போல” வீராவின் மனதில் அடியாழத்தில் இருந்த ரகசியம் கொஞ்சம் கொஞ்சமாக மேல் தட்டுக்கு வந்தது.

 

“Jency! எங்க ஊர் தான். நல்ல பழக்கம் ! நல்லா பேசிக்குவோம். இப்ப சென்னை ல படிக்குது. இப்பவும் நல்லா பேசிக்குவோம்!” இதை சொல்லிமுடித்த செல்வா, வீராவை பார்த்து,”இப்ப நீ சொல்லு”என்றான்.

 

வீராவிற்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. காரணம், அவனுடைய இந்த கதை எங்கு தொடங்கியது என்பது அவனுக்கும் கூட தெரியாது.

 

“ஒரு பையன் செல்வா!”  யாருக்குமே சொல்லாத அவன் கதையை, யாரோ இரண்டு பேரின் கதை போல்,அன்று முதன் முதலாக  சொல்லத்தொடங்கினான் வீரா,

 

“கடவுள் இல்லை என்பதை ஆணித்தரமாக நம்பும் ஒருவன்.அவனுக்கு கடவுளை வணங்கும் சடங்குகளெல்லாம்  கேலியாகத் தெரிகிறது.

 

ஒரு நாள், நீலவானத்தின் நீலம் மாறாத மாலை நேரம், இன்னும் இருட்டிவிடாத அந்த மாலை நேரத்தில் நண்பர்கள்  எல்லோரும் சேர்ந்து கோவிலுக்கு செல்கிறார்கள். அவர்கள், வற்புறுத்தி அவனையும் கோவிலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அதே அந்த கூட்டத்தில் தான் அவளும் இருக்கின்றாள்.

 

‘சரி! கோவிலுக்கு வந்துட்டா மட்டும் சாமி கும்புட்டுருவேனா!’ எல்லோரும் கடவுளை வணங்கிக்கொண்டு இருந்த பொழுது, அவன் அவர்களை விட்டு விலகி; அங்கிருந்த அந்த சிலையை விட்டு தூரமாக தள்ளி சென்று, அந்த சிலைக்கு தன்  முகம் காட்டாமல் நின்றுகொண்டு இருந்தான்.

 

ஒரே இடத்தில் எத்தனை நேரம் சும்மா நிற்க முடியும்! அந்த இடத்தில் அங்குமிங்கும் நடந்துகொண்டு இருந்தான், அந்த சிலை இருக்கும் பக்கமாக மட்டும் அவன் திரும்பவில்லை .

 

அப்போது, அங்கே வந்த சில பெண்கள், “நீ வீரா தானே!” என்கிறார்கள்.

 

“யாருன்னே  தெரில” என்று அவன் சொல்லிமுடிப்பதற்குள் அந்த கூட்டத்தில் ஒருத்தி, “தெரி..யா….தா..!” என்று ஆச்சரியத்துடன் இழுத்தாள்.

 

“உன்னை தெரியும். அவங்களை எல்லாம் நான் பார்த்ததே இல்லை!” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே,

“எங்களை கேட்டவாவது கூட படிச்ச பையன் ஞாபகம் இருக்கும் சொல்லுவோம் நீ தெரியாது ன்னு சொல்ற” இப்படி பேசிக்கொண்டே அந்த கூட்டம் அவனை கடந்து சென்றுவிட்டது.

“நமக்கு அதுல ஒருத்தரை தானே தெரியும்! கூட வந்தவங்க யாரு! எப்படி அவங்களுக்கும் என்னை தெரியும்?” என்று அந்த முகங்களை குழப்பத்தோடு நினைவுப்படுத்திக்கொண்டே சிலை இருந்த பக்கமாக திரும்பினான்.அங்கே ஒழுங்கற்று இருந்த மனித கூட்டங்களுக்கு இடையில் ஒருத்தி மட்டும் அவன் கவனத்துக்குள் வந்தாள்.

 

அப்போது அவள், விரல் நுனியில் நுனியளவு சந்தனம் தொட்டுக்கொண்டு, அந்த சந்தனத்தின் ஈரம் காய்வதற்குள் அவனுக்கு வைத்துவிட வேண்டுமென்று அவனைத்தேடித்தான்  வந்துகொண்டு இருந்தாள்.

 

சற்று முன்னமே குழப்பத்தோடு திரும்பியிருந்த  அவன் பார்வையில் பழுப்பு படர்ந்த அடர் சிவப்பு நிற சுடிதார் பதிய; அவன் கவனம் அவள் தன்னை நோக்கி வருகிறாள் என்பதை அவனுக்கு உணர்த்தி அவனின் அந்த  கவனம் மாறுவதற்குள்,ஈரமும் சந்தனமும் தாங்கிக்கொண்டு இருந்த அவளின் அந்த விரல் நுனி அவன் நெற்றியை நோக்கி உயர அவனுடைய இமைகள் தானாக மூடியது.

 

அவனுடைய இமைகள் மூடியிருந்த பொழுதும் கூட அவன் வெளிச்சத்தை உணர்ந்துகொண்டு இருந்தான், அவன் இமைகள் மூடியிருந்த அந்த நொடியில்; அவன் நெற்றியில் அந்த ஈரம் தீண்டிய அந்த கணத்தில், அவன் உடம்பில் உள்ள அத்தனை செல்களும் அந்த ஈரத்தை உணர்ந்து ஒரு சிலிர்ப்பு சிலிர்த்து அவனை ஏதோ செய்தது.

அந்த ஈரம் அவனை தீண்டிய அந்த நொடியிலேயே அந்த சந்தனம் நெற்றியை ஒட்டிக்கொண்டதை உணர்ந்த அவன் அவள் விரலை மட்டும் உணரவில்லை.

அவன் நெற்றியை தீண்டிய அந்த ஈரத்தின் மறு நுனி; அந்த சந்தனத்தின் இன்னொரு நுனி அவள் விரல்களை ஒட்டிக்கொண்டு இருந்தது. ஆனால், அந்த விரலின் நுனியின் நுனியும் கூட அந்த நெற்றியை ஒட்டவில்லை. நுனியளவு சந்தனத்தை விரலில் எடுத்து வந்து; அந்த சந்தனத்தின் இரு நுனிகளுக்கு இடையில் இத்தனை பெரிய இடைவெளி இருக்கிறது என்பதை அவள் அவனுக்கு காட்டிச் சென்றாள். பொட்டு அளவு சந்தனத்தின் இரு நுனிகளுக்கு இடையில் அத்தனை பெரிய இடைவெளி இருக்கின்றது என்பதையும் சந்தனம் அத்தனை குளிர்ச்சியாக இருக்கும் என்பதையும் அன்று அவன் அனுபவித்து உணர்ந்தான்.

விரலில் இருந்த ஈரமும் சந்தனமும் மட்டும் அவனை ஒட்டிக்கொள்ளும்படிக்கு, அவன் நெற்றிக்கு அத்தனை பக்கமாய் வந்தும் அவன் நெற்றியை தீண்டாமல் சந்தனமிட்டு திரும்பிய அந்த விரலைத் தேடி அவன் கண்களை திறந்தான்.

இத்தனை நேரமும் இதை காண்பதற்காகவே காத்திருந்தவன் போல் இருந்த சூரியனும் மேற்கே நகர வானத்தின் நீலம் மங்க தொடங்கியிருந்தது.

ஆயிரம் பேர் இருக்கும் ஒரு இடத்தில் ஒரு பாடலை நீங்கள் கேட்கும் பொழுது அந்த பாடல் உங்களை வேறு ஒரு உலகத்திற்கு இட்டு செல்லும். அந்த ஆயிரம் பேரும் உங்கள் கவனத்தில் இருக்க மாட்டார்கள்.

மங்கும் வானத்தின் நீலமும் மறையும் சூரியனும் அவன் கவனத்தில் இல்லை. அவன் வேறு ஒரு உலகில் நின்று கொண்டு  அந்த விரலை தேடிக்கொண்டு இருந்தான்.

அந்த விரலை அவன் காணவில்லை, அவள் எங்கிருந்து வந்தாள், எந்தப்பக்கம் போனாள் என்று அவள் வந்து திரும்பிய திசையை நோக்கி அந்த விரலை அவன் தேட, அந்த திசையில்  அங்கே ஒரு கடவுள் உட்கார்ந்து இருந்தார். அவர் அவனைப்பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தார்.

 

அவள் அவன் கவனத்தில் வந்த அந்த நொடியில் அவன் உள் சென்ற மூச்சுக்காற்று இத்தனை நொடிக்கும் உள் இருந்து,சிரித்துக்கொண்டு இருந்த கடவுளைப் பார்த்த நொடிக்கு  ஒரு பெரும் சிரிப்புடன் சிறு பெரு மூச்சாய் வெளிவந்தது.

 

கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு இருந்தவனுக்கு கடவுள் தன்னைத்தானே காட்டிக்கொண்ட தருணம் அது.

கடவுள் இருக்கின்றாரா? என்கிற கேள்வியும் அத்தனை பெரிய இடம் இருந்தும் அந்த நெற்றியில், எப்படி அவள் அத்தனை மெல்லிதாய் சந்தனம் இட்டு வருகிறாள் என்கிற கேள்வியும் இனி அவனுக்கு எப்போதும் எழாது”.

 

“சரி! அந்த பொண்ணு பேர் என்ன?” இந்த கதையை சொல்லிக்கொண்டு இருந்த பொழுது தான் செல்வா கேட்டான்.

 

“பேர் மட்டும் கேட்காத செல்வா”

 

“பேர் சொல்றதுல என்னடா இருக்கு?” செல்வாவிற்கு எழுந்த அதே கேள்வி உங்களுக்கும் எழுந்திருக்கும்.

 

“எனக்கு தானே பிடிக்கும்! அதுவும் அது எப்படின்னா! அது அப்படி இல்லை! யாருகிட்டையுமே இதை நான் சொன்னதும் இல்லை. இப்ப பேர் சொன்னா, யாருகிட்ட சொல்றேனோ அவங்க என்னோட சேர்த்து தானே யோசிப்பாங்க…..அது அந்த பொண்ணை தப்பா சொல்ற மாதிரி.. யாருகிட்டேயும் சொல்லாததை உங்ககிட்ட சொல்றேன்… so  பேர் மட்டும் வேணாம்!” மேஜையை பார்த்துக்கொண்டே வீரா இதை சொல்ல, வீராவைப் பார்த்துக்கொண்டு செல்வா இதைக்கேட்டுக்கொண்டு இருந்தான்.

 

“பேசி இருக்கியா?” கண்களை விரித்து இமைக்காமல் கதை கேட்டுக்கொண்டு இருந்த செல்வாவின் கண்கள் இந்த கேள்வியை கேட்டு இன்னும் விரிந்தது. வீரா யார் கண்களையும் காணவில்லை. அவன் கண்களுக்குள் அவனே பார்த்து அவன் மனக்கண்ணில் ஓடியதையெல்லாம் செல்வாவிற்கு சொல்ல ஆரம்பித்தான்.

 

“ரொம்ப நெருக்கமான நட்பு ஒன்னும் இருந்ததில்லை. சில நேரம் ஒருத்தர் ஒருத்தர் கவனிச்சிருக்கோம்.. தெரியாத மாதிரி!  ஒருத்தர் இன்னொருத்தரை  கவனிக்கிறது தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருந்திருக்கோம்!

இந்தா!   இந்த இரண்டு விரலுக்கு இடையில் பேனா வச்சு நான் இப்படி சுத்துவேன். அதைப்பார்த்து அவளும் சுத்த முயற்சி பண்ணுவா!  நான் அவ கவனிக்கிறது தெரிஞ்சும் தெரியாத மாதிரி அவ கவனிக்கனுமே சுத்துவேன்.

அவளும் நான் கவனிக்கிறது தெரிஞ்சு அதை கவனிக்காத மாதிரி ஏதாவது செய்வா..ஏதோ யோசிக்கிற மாதிரி கண்ணை உருட்டுறது, அந்த கண்ணை உருட்டும் போது நான் கவனிக்கிறேனா ன்னு கவனிக்கிறது.

பேசுறதுக்கு காரணம் தேடி நான் எதாவது ஆரம்பிப்பேன், ஆனா நிறைய பேசமாட்டோம்! சமயங்களை அவளும் பேச காரணம் தேடி என்னட்ட பேச நினைச்ச மாதிரி இருக்கும்!ஒருவேளை அவள் இயல்பா கூட பேசி இருக்கலாம்.

“எப்படி இந்த பேனா சுத்துற?என் friend உம் சுத்தும்” அவ என்கிட்ட கேக்கும் போது எல்லார்க்கும் சுத்துற பூமி எனக்கு மட்டும் தனியா சுத்துற மாதிரி இருக்கும்.ஒருநாள், உட்கார இடம் தேடி, அந்த பக்கம் இடம் சரியில்லைன்னு அவளா ஒரு காரணம் சொல்லி சலிச்சுக்கிட்டு வந்து என் பக்கத்துல உட்கார்ந்தா. சாதாரணமா எந்த காரணமும் சொல்லாம உட்கார்ந்து இருந்தா, எனக்கு இயல்பா தெரிஞ்சு இருக்கலாம்.
ஆனா,ஒரு காரணம் தேடி அந்த காரணத்தை சலிச்சுக்கிட்டது, என் பக்கத்தில் உட்கார முடிவு பண்ணி காரணம் தேடின மாதிரி இருந்தது. அவ்வளவு பக்கத்தில் இரண்டு பெரும் இருந்தும் அங்க இரண்டு பேருக்கும் இடையில் பெரிய தூரம் இருந்துச்சு.இப்ப எந்த தொடர்பும் இல்லை ஆனா மறுபடி பேசணும்!” வீரா சொல்லி முடித்தான்.

“மறுபடி பேசுவீங்க! உனக்காக நான் வேண்டிக்கிறேன்!” செல்வாவுடைய இந்த தீர்க்கதரிசனமும் வேண்டுதலும் பலிக்க வெகுநாட்கள் ஆகவில்லை.அவர்கள் பேசிக்கொண்டு இருந்த அதே அந்த 2010 வருடத்தின் இறுதியில் அவளுடைய தொடர்பு எண் வீராவிற்கு கிடைத்தது. ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு பேர் போட்டு அந்த தொடர்பு எண்ணை பதிவு செய்து வைத்து இருந்தான். அந்த பேர் யாருக்கும் தெரியக் கூடாது என்று சமயங்களில் அவன் அவள் தொடர்பு எண்ணை அழித்துவிடுவதும் நடக்கும். அந்த தொடர்பு எண்ணை  போனில் பதிவு செய்து வைக்க வேண்டிய அவசியம் அவனுக்கு இருந்திருக்கவில்லை. அது அவன் மனதில் பதிந்து இருந்தது.

இதற்கு இடையில், விமலிடம் இருந்து கண்ணனுக்கு இந்த கதை தெரிந்து போனது. control system பாடத்தை விளக்க சொல்லி கேட்டுத் தான் கண்ணன் அவனிடம் பழக ஆரம்பித்தான். அப்படியே தொடர்ந்த அவர்களின் நட்பு வளர்ந்தது. ஆனாலும், ஷாரா பற்றி விமலிடமும் செல்வாவிடமும் பகிர்ந்து கொண்ட அளவு எதையும் அவன் கண்ணனிடம் பகிர்ந்துகொள்ளவில்லை.

இந்த control system  பாட தேர்வுக்கு முன்னர் கிடைத்த விடுமுறையில்,  கண்ணன் அவனுடைய பள்ளிக்கால நண்பர்களை, அவன் தங்கியிருந்த அறைக்கு வரவழைத்து இருந்தான். இவர்களுக்கு பாடம் சொல்ல போன இடத்தில், கண்ணனுடைய நண்பன் மணி வீராவிற்கு  நெருக்கமானான். படிப்பதற்காக கூடிய அவர்கள், சாப்பிடுவதற்காக வெளியில் செல்லும் பொழுது, ஒவ்வொருவரின் காதல் கதைகளையும் பேசிக்கொண்டு நடந்தார்கள். அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து சாப்பாட்டு கடைக்கு அவர்கள் நடந்த தூரத்தில் 3 காதல் கதைகள் முடிந்து இருந்தது.

 

“வீரா யாரையும் love பண்ணலயா?” மணி கேட்டவுடன் “எனக்கும் நிறைய தெரியாது நீயே கேளு” என்றான் கண்ணன்.

“love ன்னு எதை சொல்வீங்க?

இதை love ன்னு சொல்ல முடியுமான்னு தெரியல

பேசினாலே அவ்வளவு சந்தோசமா இருக்கும்” என்று வீரா சொல்லிக்கொண்டு இருந்த பொழுது அவர்கள் கடையை நெருங்கிவிட்டார்கள்.

 

“சரி அந்த பொண்ணு பேர் என்ன?” என்று கேட்ட மணியை வீரா பார்த்தான்,  மணி வீவீராவைப் பார்த்தான்

“அதை மட்டும் நீ கேட்க கூடாது” நக்கலாக சிரித்துக்கொண்டே கண்ணன் ஒலித்தது.

“பேர் மட்டும் கேட்க கூடாது dot ” என்று அப்போது வெளியாகி இருந்த எந்திரன் திரைப்பட பாணியில் ஆள்காட்டி விரல் கொண்டு காற்றில் புள்ளி வைத்து மணியும் கண்ணனுடன் சேர்ந்து கொள்ள, “இந்த பேர் நல்லா இருக்கே! dot!” என்று சத்தமாக சிரித்தான் கண்ணன்.

 

வீராவின் நண்பர்கள் மத்தியில் அவள் பேர் dot  என்றே ஆனது. வீராவிற்கு அதுவும் கூட குதூகலமாகவே தான் இருந்தது. அந்த தொடர்பு எண் சமயங்களில் வீராவின் போனில் ‘.'(dot) என்றும் கூட பதிவு செய்யப்பட்டு இருந்தது.

சரி! அவள் பெயர் யாருக்கும் தெரியக்கூடாது என்று வீரா கருத்தாக இருந்தான். ஆனால், அவள் பெயர் தெரியக்கூடாது என்பதற்காகவா அவளுக்கு புதிதாக ஒரு பெயர் வைத்து இருப்பான்!

இல்லை! அவளுடைய பெயரை வீரா விரும்பவில்லையா?

 

வேறு ஒரு பெயர் வைக்க வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு ஏன் வந்து இருக்கும்?

 

இந்த கேள்விகளுக்கான பதில்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம். DOT.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *