அந்த பஸ் காலை எட்டு பதினைந்திற்கு அந்த நிறுத்தத்திற்கு வரும்.காலை ஏழு மணிக்கெல்லாம் தொலைக்காட்சி தட்டி எழுப்பப்பட்டு இருக்கும். வீராவிற்கு ஐந்து நிமிடம் கூட அதிகம் தான் அவன் அந்த பேருந்து நிறுத்தத்தை அடைவதற்கு.
காலையில் கிளம்பி சாவகாசமாக உட்கார்ந்து, அத்தனை நேரம் ஓடிக்கொண்டு இருக்கும் அந்த தொலைக்காட்சியில் ஓரிரு பாடல்களை கேட்டு விட்டு, அந்த பாடல் கேட்ட மகிழ்ச்சியோடு கிளம்பி அந்த பேருந்தை பிடிப்பது தான் கல்லூரி காலங்களில் வீராவின் தினசரியாக இருந்தது.அவன் கேட்கும் அந்த ஓரிரு பாடல்களில் ஒன்று ரஜினி பாடலாக அமைந்துவிட்டால், அந்த நாள் அவனுக்கு இனிய நாள் என்று நினைத்துக்கொள்வான். மகிழ்ச்சி தரும் விஷயங்களோடு ஒருநாளை தொடங்கினால், அந்த நாள் இனிய நாளாக தானே அமையும்.
ஷாராவிடம் மீண்டும் பேச தொடங்கிய சில நாட்களாக, ரஜினி பாடல் அல்லாமல் வேறு ஒரு பாடலையும் கூட வீரா எதிர்பார்த்துக்கொண்டு இருந்தான்.மகிழ்ச்சியும் மென்சோகமும் இழையோடும் ஒரு கமல் பாடல் அது.
ஏழு ஐம்பதில் இருந்து எட்டு ஐந்திற்குள் கமல்ஹாசன் குரலில்,
நீ………….ஈ………..
ளவானம்.
நீ…..ஈ………. யும் நானும் என்று அந்த பாடல் ஒலிக்க கேட்டுவிட்டால்,கடிகாரத்தைப் பார்த்து வெட்கம் கொண்டு ஒரு சிரிப்பு சிரித்துக்கொள்வான். பாடல் முடிந்திருக்காது. கடிகாரம் எட்டை எட்டியிருக்காது. இவன் நடக்க தொடங்கியிருப்பான்.
அத்தனை காலையில் கொஞ்சம் சோகமும் இழையோடும் அந்த பாடலை கேட்டு அத்தனை மகிழ்ச்சியோடு கல்லூரிக்கு கிளம்ப வீராவால் முடிந்தது.
காரணம் அது அவளுக்கும் பிடித்த பாடல்.
ஏதேதோ தேசங்களை சேர்கின்ற நேசம் தனை
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தனை
காதல் என்று பேர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது
பத்து வீடு தள்ளி பதினோராவது வீட்டில் கமலஹாசன் இந்த வரிகளை பாடிக்கொண்டு இருக்கும் பொழுது அந்த பதினோராவது வீட்டையும் வீரா கடந்து இருப்பான்.
அந்த பத்தாவது வீட்டை கடந்து சில தூரம் நடந்த பின் வீராவை கமலஹாசனும் அந்த பாடலும் தொடரப் போவதில்லை. ஆனால், அவன் மனதில் அவளைப்பற்றிய எண்ணங்கள் மட்டுமே தொடர்ந்து ஒட்டிக்கொண்டு இருக்கும்.
அந்த நாள் , power system lab record க்கு எல்லோர்க்கும் சேர்த்து print எடுக்க கணேஷும் வீராவும் கல்லூரியில் இருந்து வெளியில் சென்றார்கள். கணேஷும் வீராவும் அன்று தான் ஒன்றாக ஒரு வண்டியில் சென்றார்கள்.
“என்ன மச்சி யாரையோ லவ் பண்றியாம்?” ஹெல்மேட்க்குள் இருந்து அரைகுறையாய் ஒலித்த குரலை கவனமாக கேட்டு,
“கிட்டத்தட்ட” என்று, கிட்டத்தட்ட லாரியின் பின் சக்கரத்தை ஒட்டி ஒரு பிரேக் அடித்து வண்டியை வளைத்து அந்த லாரியை கணேஷ் கடந்த பொழுது வீரா பதிலளித்தான்.
“அது என்ன கிட்டத்தட்ட?” என்று கேட்டுக்கொண்டே சிக்கனலைப் பார்த்து வண்டியை நிறுத்தினான் கணேஷ்.
“எனக்கு பிடிக்கும்.!. ஊருக்கு போறப்ப பேசுவேன்.. சின்ன வயசுல இருந்து தெரியும். இப்ப தான் நம்பர் வாங்கினேன்!”சிக்கனலை பார்த்தபடியே அவளை நினைத்துக்கொண்டு பதில் சொன்னான் வீரா.
பச்சை விளக்கு எரிந்தது “சொல்லிட்டியா?” என்று கேட்டுக்கொண்டே வண்டியை நகர்த்தினான் கணேஷ்.
“அது எப்படின்னா மச்சி! நம்ம சொல்லக்கூடாது.
நமக்கு பிடிக்கும் அதை நம்மை சொல்லாம அவங்களுக்கு நம்மள பிடிக்கணும்.
அவங்க சொல்ல வரும் பொழுது அது நமக்கே தெரியணும்”முகத்தில் அத்தனை புன்னகையோடும் அத்தனை சந்தோஷத்தோடும் நம்பிக்கையோடும் வீரா இதை சொல்லிக்கொண்டு இருந்தான்.
“எல்லாம் சரி டா அதுக்கு நீ அங்க இருக்கனும். அப்படி இருந்தா.. நீ சொல்ற மாதிரி நடக்க வாய்ப்பு இருக்கு”கணேஷ் எதார்த்தத்தை பேசினான்.
“ப்ச்! நடக்கும் மச்சி” வீராவிடம் ஒரு நம்பிக்கை. வாழ்க்கையில் எல்லாம் சரியாக நடக்கும் பொழுது எல்லாமே சரியாக மட்டுமே தான் நடக்கும் என்கிற நம்பிக்கை மனிதர்களுக்கு இருக்கும். வீரா அன்று கொண்டிருந்த நம்பிக்கையும் கூட அப்ப்டியானது தான்.
“உனக்கு என்னை பிடிக்குமா?” “எவ்வளவு பிடிக்கும்?”இந்த கேள்விகளை நம் மனதிற்கு பிடித்தவர்களிடம் நம்மால் கேட்க முடிவதில்லை. ஆனால், இந்த கேள்விகளுக்கான பதில்களை நாம் அவர்களிடம் இருந்து கேட்டுவிட வேண்டும் என்கிற ஆசை மட்டும் நம்மிடம் இருக்கும்.இந்த முரண்களை எல்லோரும் தாண்டிவிடுவதில்லை. நமக்கு பிடித்தவர்களுக்கு நம்மை பிடித்திருக்கின்றதா என்கிற கேள்விக்கான பதிலை பலர் தெரிந்து கொள்வதேயில்லை.
வீராவிற்கு ஷாரா வை பிடிக்கும். ஷாராவுக்கு வீராவை பிடிக்குமா?
எனக்கு, கணேஷுக்கு, உங்களுக்கு யாருக்கும் இந்த கேள்விக்கான பதில் நிச்சயமாக தெரியாது. வீராவிடம் கேட்கலாம் என்றால் அவனுக்கும் தெரியாது.
“என்னை உனக்கு பிடிக்குமா?” என்று கேட்பதை விட்டுவிட்டு அவளுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று கேட்டுக்கொண்டு இருந்தான்.அதுவும் கூட ‘forward message’ களின் தயவில்.
அவளுக்கு பிடித்திருந்தில் பல அவனுக்கு பரீட்சயம் இல்லாத ஒன்றாகவே இருந்தது.
பிடித்த ஐந்து பாடல்கள்
1. நீள வானம்
2. கண்ணே கலைமானே
3. பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
4. உன் பார்வையில்
5. மன்னிப்பாயா
அவன் அதற்கு முன்னதாக கண்ணே கலைமானே பாடலை அத்தனை விரும்பி வேண்டி கேட்டிருக்க மாட்டான்.பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா பாடலில் அடுத்த வரியை கேட்டு இருக்கவே மாட்டான்.அன்று அவளுக்கு பிடித்த பாடலாக அவள் சொன்ன பாடல்களில் அவனுக்கு பிடித்த ஒரே ஒரு பாடல் தான் அந்த “நீ…..ள வானம்…..” பாட்டு.
“உனக்கு நாயகர்களில் யாரை பிடிக்கும்?”
“யாரையும் பிடிக்காது ” என்றாள்.
“யாரையுமே பிடிக்காதா” என்றதற்கு
“ஹ்ரித்திக் ரோஷன்” என்றாள்.
“ஹ்ரித்திக் ரோஷனா!” வீரா அன்றுவரை பார்த்திருந்த 3 ஹிந்தி படங்களில் ஒன்று கூட ஹ்ரித்திக் ரோஷன் நடித்தது கிடையாது.
நாயகிகளில் யாரைப் பிடிக்கும் என்றதற்கு, “சமீரா” என்று பதில் அனுப்பியிருந்தாள்.
வீராவின் கவனத்தில் அன்று வரை திரிஷா மட்டுமே தான் இருந்தார். “ஏன் திரிஷா பிடிக்காதா?” என்கிற கேள்வியை வீரா கேட்காமல் இருந்திருக்கலாம்.
“திரிஷா பிடிக்காது” என்று பதில் வந்தது.
“ஏன் அவ உன்னை மாதிரி இருக்கா அதுனாலயா?” வீராவிற்கு அப்படி ஒரு எண்ணம். நமக்கு பிடித்தவர்களின் தோற்றத்தில் ஏதேனும் ஒன்று இரண்டு யாருடனாவது ஒத்து போனால் அவர்கள் நமக்கு பிடித்தவர்கள் போலவே தான் தெரிவார்கள். வீராவின் இந்த கேள்வியை அவள் பெரிதாக சட்டை செய்யவில்லை.
வீரா திரிஷாவை கவனிக்க தொடங்கியதற்கு காரணமே ஷாரா தான். அந்த வட்டமான முகம். நிலவில் பாதியை வெட்டி வைத்தது போன்ற நெற்றி.
சமீராவை இனிமேல் வீரா தேடுவான்.
ஷாராவுடன் பேசும் பொழுது வீரா இப்படியான கேள்விகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க, வீராவிற்கு ஒரு message வருகிறது.
“who I am to you?
- Friend
- Best Friend
- Lover
- Brother/sister
- Enemy
- Husband/wife”
அந்த மெசஜை ஐ ஷாரா அவனுக்கு அனுப்பியிருக்கவில்லை. அந்த மெஸேஜில் இருந்து சில விருப்பங்களை (option களை) நீக்கிவிட்டு அதை அவன் ஷாராவிற்கு அனுப்பப் பார்த்தான் அந்த விருப்பங்களை (option களை) நீக்கிய பின் அந்த மெஸேஜில் ஒன்றும் இல்லாதது போல் இருந்தது. இவனாக இரண்டு விருப்பங்களை (option களை) சேர்த்துக்கொண்டான்.
“who I am to you?
- Friend
- Best Friend
- Enemy
- Close friend
- Acquaintance”
அவளிடம் பேசும் போதெல்லாம் “அவள் என்ன நினைப்பாள்? ஏதேனும் நினைத்துக்கொண்டு பேசாமல் இருந்துவிடுவாளா” என்கிற பயம் வீரவிடம் எப்போதும் இருந்தது. அவன் கொஞ்சம் மாற்றியமைத்த அந்த forward message ஐ அவளுக்கு அனுப்பிவைத்தான்.
“அவள் ஏதேனும் நினைத்துக் கொள்வாளோ? கோபம் கொண்டு எந்த பதிலும் அனுப்பாமல் இருந்துவிடுவாளோ? இந்த message சாதரணமான ஒரு forward message என்கிற அளவில் எடுத்துக்கொள்வாளா? அல்லது நாம் மாற்றியமைத்ததை வைத்து எதையும் கண்டுபிடித்து விடுவாளா?” என்று வீரா மனதிற்குள் அத்தனை பயம் அத்தனை கேள்வி
“(special one) ஸ்பெஷல் ஒன் ”
அவனே எதிர்பார்க்காத ஒரு பதில், அத்தனை சீக்கிரம் வந்தது. Special one.
இந்த வார்த்தை எத்தனை ஸ்பெஷலானது பாருங்கள் அத்தனை சரியாக அதே அர்த்தத்தில் இதை மொழி பெயர்க்கவே முடியாது. அந்த வார்த்தை கூட அத்தனை ஸ்பெஷலாக இருக்கின்றது.
அந்த பதிலை பார்த்த மாத்திரத்திரத்தில், போனை ஒரு கையின் விரல்களுக்குள் இறுக பற்றிக்கொண்டு முகத்தை ஒரு பக்கம் திருப்பிக்கொண்டு சுற்றியிருப்பவர்களை எல்லாம் மறந்து,பிரிய துடிக்கும் உதடுகளை சிரமத்தோடு ஒட்டி வைத்துக்கொண்டு,அங்குமிங்கும் நடக்கிறான். அவன் பார்வை நொடிக்கு ஒரு திசையை தேடிக்கொண்டு இருந்தது.
வெட்கம், சந்தோஷம், பரவசம் எல்லாம் சேர்ந்த நிலை. அவன் செல்கள் அத்தனையும் அவனுக்குள் ஆடிக்கொண்டு இருக்கின்றது.அவன் செல்கள் அப்போதே அவனையும் ஆடச் சொல்கிறது. சிரிப்போடு அதையும் கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தான். ஒரு பரவசத்தில் உங்கள் உள் உள்ள நீங்கள் ஆடிக்கொண்டு இருக்கும் பொழுது நீங்கள் ஆடாமல் இருந்து இருக்கின்றீர்களா? வீரா அன்று அப்படித்தான் இருந்தான்.
என்ன என்ன பிடிக்கும் என்று கேட்டுக்கொண்டு இருந்தவனிடம்; “என்னை பிடிக்குமா” என்று கேட்க பயந்தவனிடம்; உன்னையே தான் பிடிக்கும் என்பதை எப்படிச் சொன்னாலும் அதை கேட்டு அவன் மனம் ஆடத்தானே செய்யும் . அந்த நொடியில் அந்த மனம் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் எந்த சித்தனைக்குள்ளும் செல்லாது. விளையாட்டாக சொல்லியிருப்பாளோ என்கிற சந்தேகங்களுக்குள் செல்லாது.
அவன் புலன்களும் தசைகளும் அவன் பேச்சை கேட்க தயாராக இல்லை.
அதையும் மீறி மகிழ்ச்சியில் தடுமாறி அவளிடம் இன்னொரு கேள்வியை கேட்டு வைத்தான், “special one- option லையே இல்லையே?” இதை அனுப்பிய பொழுதே அவன் கட்டி வைத்திருந்த புன்னகைகள் அவன் உதடுகளை முட்டிக்கொண்டு கொட்டியது.அந்த புன்னகைகளோடு அவன் கட்டி வைத்திருந்த மூச்சு காற்றும் முக்கிக்கொண்டு பெரும் மூச்சாய் வெளிப்பட்டது.
“not satisfied with given choice”அத்தனை சந்தோஷத்தில் அவன் இருந்த பொழுதே அவளிடம் இருந்த வந்த இந்த மெசேஜ் (“not satisfied with given choice”) அவனை இன்னும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
அதன் பிறகு அவனுக்கு என்ன பேச வேண்டும் என்றும் தெரியவில்லை. அவளிடம் என்ன பேசினோம் என்பதும் நினைவில் இல்லை.
மதுரையில் இருந்து திருச்சிக்கு வந்துவிட்டான். அந்த ஸ்பெஷல் மெசேஜ் அவன் மண்டைக்குள் ஒரு இடம் பார்த்து உட்கார்ந்து கொண்டது. மறுநாள் கல்லூரிக்கு செல்ல வேண்டும் எல்லாவற்றையும் எடுத்துவைத்துக் கொண்டு இருந்தான். துணிகளை எல்லாம் மடித்துக்கொண்டு இருந்தான். தொலைக்காட்சி ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும், அது அவன் கவனத்தை ஈர்க்கவில்லை.
“ஒத்த சொல்லால என் உசுரு எடுத்து வச்சுக்கிட்டா ரெட்டை கண்ணால என்னை தின்னாடா” சத்தத்தை உயர்த்தாமலேயே சத்தமாய் அந்த பாடலை ஒலித்தது தொலைக்காட்சி. துணி மடித்துக்கொண்டிருந்த வீரா சட்டென்று அவன் கவனத்தை திருப்பி அந்த தொலைக்காட்சி பெட்டியை பார்த்தால் அங்கே அவனைப் போன்ற ஒருவன் ஆடிக்கொண்டு இருந்தான்.
special one என்கிற message ஐ பார்த்த பொழுது அவன் மனம் எப்படி ஆடிக்கொண்டு இருந்ததோ அப்படி திரையில் ஒருவன் ஆடிக்கொண்டு இருந்தான்.அது பொங்கலுக்கு வெளியாக இருந்த ஆடுகளம் திரைப்படத்தின் ட்ரைலர் அது.
ஆஹ்ன்! இது தான் இதே தான் என்றது அவன் மனம். இப்போதும் அவன் ஆடவில்லை அவன் மனம் ஆடிக்கொன்டு இருந்தது.
நாம் செய்யும் செயல்களும் நம் வார்த்தைகளும் தான் காலம் நமக்கு அளித்திருக்கும் தீர்க்கதரிசனங்கள். வீரா மனதில் இருந்த ஒரு பயம் அவனை அந்த சில option களை நீக்கச்செய்ததது. அவள் மனதில் என்ன தோன்றியதோ? என்ன நினைத்து அவள் அந்த பதிலை அனுப்பினாளோ?தெரியாது.ஆனால், ஷாராவுக்கும் வீராவுக்கும் இடையில் இருக்கும் நேசம், அந்த உறவு ஸ்பெஷலானது தான். அதை எந்த வரையறைக்குள்ளும் அடைத்துவிட முடியாது.
ஆனால், இந்த தீர்க்கதரிசனங்கள் எப்போதும் தெளிவாக இருப்பதில்லை. அந்த தீர்க்கதரிசனங்களின் படி எதுவும் நடக்கும் வரை நமக்கு அது புரிவதில்லை.
வீரவிற்கு ஷாரா எப்போதும் special, அவன் அதைச் சொல்லவில்லை. ஆனால் ஷாரா சொன்னாள், “எனக்கு நீ ஸ்பெஷல்!”.
இவன் மனதில் இருந்தது தான் அவள் மனதிலும் இருந்ததா?
அவள் நிஜமாகவே அவள் மனதில் பட்ட உண்மையை தான் சொன்னாளா?
ஷாராவுக்கு நிஜமாக வீராவை பிடிக்குமா?
அவன் மனதில் இருந்ததை இவள் சொன்னாள்.ஆனால் இவள் மனதில் என்ன இருந்தது?
காலம் இவர்களை கொண்டு இன்னும் எத்தனை விளையாட்டுகளை விளையாண்டது. அடுத்தடுத்த பகுதியில் பார்க்கலாம்.