காலை நேரம், ஒரு மணி ஒன்பது இருக்கும். வெளிச்சம் மட்டும் தரும் வெயில், அந்த வெயிலும் கூட அவர்கள் மீது படாமலிருக்க, கல்லூரி மைதானத்தின் ஒரு புறம் இருந்த மரத்தடி நிழலில் அவர்கள் எல்லோரும் புத்தகமும் கையுமாக நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களின் அட்ரீனலின் அவர்களின் எல்லா செல்களையும் நிரப்பி வேலை வாங்கிக்கொண்டு இருந்தது.
அங்கு மிச்சமிருந்த நிழலை கடைசியாக வந்து சேர்ந்த வீராவும் விமலும் ஆக்கிரமித்தார்கள்.
“பயமா இருக்கா? பயப்படக்கூடாது சரியா? “மரத்தடியில் புத்தகத்துடன் நின்று கொண்டிருந்த நண்பர்களிடம் கையில் ஹால் டிக்கெட் மட்டும் எடுத்துக்கொண்டு வந்த விமல், ஒவ்வொருவருக்கும் ஊக்கம் கொடுப்பதாக நினைத்துக்கொண்டு சொன்ன வார்த்தைகள் அவை.
எல்லோருக்கும் தைரியம் கொடுத்தபடி “என்ன படிக்கிற” என்று ஒவ்வொருவரின் கையில் இருந்த புத்தகத்தில் இருந்த பக்கங்களை கண்காட்சிக்கு வந்ததை போல், வலது பக்கம் இருந்த ஒருவன் கையில் இருந்த ஒரு பக்கத்தையும் இடது பக்கம் இருந்த ஒருவன் கையில் இருந்த வேறு ஒரு பக்கத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தான் விமல்.அவர்கள் எந்த பக்கத்தை திருப்பி வைத்திருந்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளவே சில நொடிகள் ஆகலாம். ஆனால், அந்த சில நொடிக்குள் அடுத்த கைக்கு விமல் நகர்ந்து விடுவான்.
“உனக்கு பயமா இருக்கு அதானே!” விமலை கவனித்த விஜய் இதை கேட்டவுடன், “கண்டுபிடிச்சுட்டீயா? சரி யார்ட்டையும் சொல்லாத” என்று சிரிக்காமல் சொன்னான் விமல்.
இது தான் விமல்.இப்படித்தான் விமல்.அவனுக்கு உண்மையிலேயே பயம் இருந்ததோ இல்லையோ? நண்பர்கள் மத்தியில், கடிமான எல்லா சூழல்களையும் அவனால் இலகுவாக ஆக்க முடியும்.
விமல் செய்யும் இத்தகைய குறும்புகளை வீரா எப்போதும் இரசிப்பதுண்டு. விமலும் வீராவும் பேசிக்கொண்டிருந்ததை கேட்டு சிரித்த வீராவின் பக்கம் விஜய்யின் கவனம் திரும்பியது.
“உனக்கு பயமா இல்ல?”விஜய் வீராவை கேட்டான்.
விமல் தோள் மீது கை வைத்த படி நின்றுகொண்டிருந்த வீரா ,கொஞ்சம் பெருமிதத்தோடும் புன்னகையோடும்,”கண்ணை மூடிக்கிட்டு போய் பரீட்சை எழுதினாலும் இந்த வீரா பாஸ் ஆகிடுவான்”என்றான்.
அந்த பதில், வீராவின் திமிர் இல்லை. வாழ்க்கையை கவனித்து வாழும் பொழுது, உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்க வேண்டுமென்பதை உங்களால் தீர்மானிக்க முடியும். இப்படி நடந்தா இப்படி நடக்கும், இப்படி கேட்டா இது கிடைக்கும் என்று வாழ்க்கை புரிந்து கவனித்து வாழ்ந்து கொண்டிருந்தான் வீரா. அவன், ஒரு வகையில் தன்னைத் தானே ஆசிர்வதிக்கப்ட்டவனாக நினைத்துக்கொண்டான்.
அன்று அவனும் ராஜாவும் இருசக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள், “மச்சான் உனக்கு பயமா எல்லாம் இல்லை ல?” சின்ன சின்ன விஷயங்களையும் கவனமாக கையாள்கிற ராஜா முதல் முறை வீராவை வண்டியில் அழைத்துச் சென்றதாலும் வேகமாக செல்வதற்காகவும் இந்த கேள்வியை கேட்டான்.
“எங்க போய் முட்ட போறோம்! அதெல்லாம் ஒரு பயமும் இல்லை நீ பாட்டுக்கு ஓட்டு” எப்போதும் போல் காற்றில் அவன் முடி கலைந்து பறப்பதை கண்ணாடியில் ரசித்தபடியே இதை சொன்னான் வீரா.
“ஏன் மச்சி? நான் அப்படி எங்கையும் விட்டுட மாட்டேன் ன்னு நம்பிக்கையா?”என்ற ராஜாவிடம் ,”இல்லை! என் வாழ்க்கையில் அப்படி மோசமா எதுவும் நடக்காது ன்னு நம்பிக்கை” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தான் வீரா.
“இதெல்லாம் கொஞ்சம் ஓவர் மச்சி” என்று ராஜாவும் சிரித்தான்.
ஒருவன் மோசமான நிகழ்வுகளை வாழ்வில் சந்திக்காத வரை;வாழ்க்கையை அவன் கவனித்து வாழும் வரை; வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் மட்டுமே தான் நிகழும் என்று அவனால் ஆழமாக நம்ப முடியும். அந்த கவனம் தவறாத வரை காலமும் அந்த நம்பிக்கையை உடைக்காமல் பார்த்துக்கொள்ளும்.வீரா அப்படித்தான்.
வீரா நினைக்கிறதெல்லாம் நடக்கும். கேட்கிறதெல்லாம் கிடைக்கும்.ஷாராவிடம் அவன் மீண்டும் பேச ஆரம்பித்த அந்த வருடம் வரை வீரா அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தான். அப்படித்தான் நடந்துகொண்டும் இருந்தது. வீரா நினைக்கும் பொழுதெல்லாம் ஷாரா அவன் முன் தோன்றியது. அவன் நினைத்தது போலவே அவள் தொடர்பு எண் கிடைத்து அவர்கள் மீண்டும் பேச தொடங்கியது.
ஆனால், வீரா விளக்கேற்றி எந்த கடவுளிடமும் இறைஞ்சுவதில்லை. எந்த கடவுளுக்கும் நன்றி சொல்வதில்லை. “கடவுள் என்று மனிதர்கள் நம்பிக்கொண்டிருக்கும் எதுவும் கடவுள் இல்லை;ஆனால், கடவுள் பற்றிய நம்பிக்கைகள் எதுவும் பொய் இல்லை” என்கிற விசித்திரமான உத்தேசம் கொண்டிருந்த வீரா, அவன் மனதிற்குள் நடக்க வேண்டும் என்று வைக்கும் கோரிக்கைகள் எல்லாம் நடக்கும்.
அதெப்படி? அது அப்படித்தான்.அது வீராவிற்கு மட்டும் இல்லை. நம் எல்லோருக்கும் நடக்கும். பிரபஞ்சத்தின் கர்ம விதிகளை கொஞ்சம் புரிந்து வாழ்வின் மீதும் செயல்களின் மீதும் கவனம் கொண்டு வாழ்ந்தால் ; நாம் நினைப்பது நடக்கும் ,கேட்பது கிடைக்கும்.
அவள் பேச ஆரம்பித்த சில மாதங்களில், வீராவும் கூட பிரபஞ்ச விதிகளை போனான். அவன் கையில் ஃபோன் இருக்கும் பொழுதெல்லாம் அவள் அவனிடம் பேச வேண்டும் என்கிற பேராசை; அவள் இன்னும் எத்தனை நாள் பேசுவாளோ ? என்கிற கேள்வி; அவளுக்கு நம்மிடம் பேச விருப்பமில்லையோ என்கிற சந்தேகம் இவை எல்லாம் அவன் மனதை ஆட்கொண்டது.
ஒன்றின் மீது அதிகமான பற்று ஏற்படும் பொழுது. அதை இழந்துவிடுமோ என்கிற அவநம்பிக்கை தானாக நமக்குள் ஏற்பட்டு விடுகிறது.அதிகமான ஆசையில் இருந்தே தான் இவை எல்லாம் தோன்றுகிறது.நாம் நினைத்தால் நடக்கும் கேட்டால் கிடைக்கும் என்கிற வீராவின் சித்தாந்தம். அவள் பேசினா போதும் ஆனால், பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற ஆசையில் இருந்த வந்த அவநம்பிக்கைகளால் சிதைய தொடங்கியிருந்தது.
இப்படியான அவநம்பிக்கைகள் நமக்குள் ஏற்படும் பொழுது நமக்கு ஒரு ஊன்று கோல் தேவைப்படும். வீராவின் அத்தகைய ஊன்றுகோல் தான் செல்வா.
மற்றவர்கள் நம்புவதை போல் வீரா கடவுளை நம்புவதில்லை. அவன், கடவுளை நம்பாதவர்களின் கூட்டத்தை சேர்ந்தவனும் இல்லை.கேள்விகளின்றி கடவுளை நம்புகிறவர்கள் பிராத்தனை பலிக்கும் என்பதை வீரா நம்பினான். செல்வா வேண்டிக்கொண்டதால் தான் மீண்டும் ஷாராவின் தொடர்பு எண் கிடைத்தது என்றும் நம்பினான்.
“செல்வா! நாளைக்கு தான் இன்டெர்வியூவ். வேண்டிக்கோ!” என்று வீரா சொன்னதை கவனித்த மோனிகா , யாருக்கு செல்வா என்று செல்வாவிடம் கேட்க, “வீராவுக்கு தெரிஞ்சவங்க முக்கியமானவங்க” என்று சிரித்துக்கொண்டே செல்வா சொல்லிக்கொண்டிருந்த பொழுது, “ஓ! உங்க அவங்களுக்கா” என்று வீராவைப் பார்த்து நக்கலாக கேட்டாள் மோனிகா.
‘தெரிஞ்சவங்க’ ‘முக்கியமானவங்க’ ‘உங்க அவங்க’ இந்த எல்லா வார்த்தைகளிலும் ஒரு பரிகாசம் இருந்தாலும். அந்த வார்த்தைகளில் அவளை அவர்கள் சுட்டும் பொழுது வீராவின் முகமெல்லாம் சிரிப்பாகத்தான் இருந்தது.அவள் அவனை விட மூத்தவள், வீரா நீங்க வாங்க என்றே தான் அவளிடம் பேசுவான் என்னும் கதைகளை ஓரளவு தெரிந்து வைத்து இருந்தவர்கள் அந்த மூன்று பேர் தான். செல்வா மோனிகா விமல்.
“ஆமா! நீயும் வேண்டிக்கோ” என்றான் வீரா.
“ஆனா! பேர் சொல்லாம எப்படி வேண்டிக்க முடியும்? உங்க அவங்க இண்டெர்வியூ ல செலக்ட் ஆகணும்னு சொல்லியா வேண்ட முடியும் ஏன் செல்வா?” என்று மோனிகா கேட்க.
ஆம். அந்த மூன்று பேருக்கும் கூட அன்று வரை அந்த ‘அவங்க’ளுடைய பெயர் தெரியாது தான். வீராவிடம் விசாரிக்கும் பொழுதும் கூட “முக்கியமானவங்க பேசினாங்களா” என்றே தான் விசாரிப்பார்கள்.
“இப்பயாவது பேர் சொல்லு” என்று செல்வாவும் சேர்ந்துகொண்டான்.
“பேர் தான? நான் ஒரு கேள்வி கேக்குறேன். அதுக்கு பதில் கண்டுபிடிங்க. அது தான் அவங்க பேர்” என்றான் வீரா.
“சரி கேளு” மோனிகாவும் செல்வாவும் ஒரு குரலில் சொன்னார்கள்.
“ஒரு நாளின் கடைசி வெளிச்சத்தை என்ன பெயர் சொல்லி அழைப்பார்களோ; அந்த பெயருக்கு நேர் எதிரானது எதுவோ; அந்த எதிரானதை என்னவென்று சொல்வார்களோ; அதற்கு இருக்கும் பெயர்களில் ஒன்று தான் அவள் பெயரின் முதல் பாதி” என்று கேள்வியை முடித்தான் வீரா.
“உன் அளவுக்கு நாங்க ஜீனியஸ் இல்லை! இதுக்கு நீ பேர் சொல்ல மாட்டேனே சொல்லியிருக்கலாம்” என்று மோனிகா அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
சிரித்துக்கொண்டே “மறக்காம வேண்டிக்கோங்க இரண்டு பேரும்” என்றான் வீரா.
“நீ போ டா பேர் கூட சொல்ல மாட்ற! சரி நான் வேண்டிக்கிறேன் அவங்களுக்கு வேலை கிடைச்சுரும்”என்றான் செல்வா.
அவள் வாழ்க்கையில் நடக்கும் அத்தனை நல்ல விஷயங்களுக்காகவும் அத்தனை மகிழ்ச்சி கொள்ளும் வீரா படித்துக்கொண்டிருக்கும் பொழுதே அவளுக்கு வேலை கிடைத்துவிட வேண்டும் என்று நினைத்தான். ஆனால், அவர்களுக்கு இருக்கும் தூரத்தை பெரிதாக்கும் என்று அவன் நினைக்கவில்லை.
சரி! அந்த இண்டர்வீயூ என்ன ஆனது? ஷாராவிற்கு வேலை கிடைத்ததா? வீரா போட்ட அந்த புதிருக்கு விடை கிடைத்ததா?