கீழ் வானம் வெளுத்துக்கொண்டிருந்தது.அவர்கள் ஏறியிருந்த பேருந்து பிரதான சாலையில் இருந்து இடது பக்கமாக திரும்பி ஒரு குறுகிய சாலையை எடுத்தபின் அவர்களுக்கு தென்பட்டதெல்லாம் வயல்களும் பொட்டல் காடுகளும் தான்.அந்த சாலையும் கூட சீராக இல்லை.

 

முன் பனியா!

முதல் மழையா!

என் மனதில் ஏதோ விழுகிறதே!

விழுகிறதே உயிர் நனைகிறதே ஓ

ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்த வீராவின் கையில் இருந்த சுதாகரின் மொபைலில் எஸ்.பி.பி.குரலில் இந்த பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

 

அந்த படம் வெளியாகி பத்து வருடங்கள் இருக்கும்.அன்று அந்த காலை பொழுதில் பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து செல்வாவின் கிராமத்திற்கு அவர்கள் பேருந்தை எடுத்து அதில் ஏறியதும் சுதாகர் அவன் மொபைலில் இருந்த இந்த பாடலை ஒலிக்கச் செய்ய, வீராவின் கவனம் “என்ன பாட்டு இது!” என்று திரும்பியது.

 

மனசில் எதையோ மறைக்கும் கிளியே

மனசைத் திறந்து சொல்லடி வெளியே

கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு

கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு

மனசைத் திறந்து சொல்லடி வெளியே

 

வீராவின் மனம் காற்றில் அந்த வரிகளோடு கலந்து ஷாராவுடனான ஒவ்வொரு அரட்டைகளையும் அவனுக்கு ஓட்டிக்காட்டியது.

 

வீரா : இந்த நாலு வருஷத்தில் யாராவது propsoe  பண்ணிருப்பாங்களே இன்னும் பண்ணலையா?

நிறைய fans  இருந்திருப்பாங்க வேற! அந்த fans வரிசையில கடைசியா என்னையும் சேர்த்துக்கோங்க madam

 

ஷாரா: அதெல்லாம் யாரும் propose பண்ணலை! உன் கண்ணுக்கு தெரிஞ்ச மாதிரி யார் கண்ணுக்கும் நான் தெரியல போல

 

வீரா: who  am I  To you ?

ஷாரா : special one

 

ஷாரா : யாரையோ லவ் பண்ற மாதிரி தெரியுதே?!

வீரா: அப்படிலாம் இல்ல

 

வீரா: யாரும் தீடீர்னு வந்து ப்ரொபோஸ் பண்ணா என்ன செய்வீங்க?

ஷாரா: அவனுக்கு இவ்வளவு மோசமான டேஸ்ட் அ ன்னு தோனும்.நீ சொல்லு! நீ என்ன பண்ணுவ?

வீரா : என்கிட்ட யாரு ப்ரொபோஸ் பண்ணுவா

ஷாரா : உனக்கு என்ன டா கூட்டத்திலேயே அழகான ஒருத்தனா நீ மட்டும் தான் இருப்ப.

 

ஷாரா: take care  thambu

 

இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்

எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்

 

மூழ்கினேன் நான் உன் கண்ணிலே….என்று  உச்சஸ்தாயில் எஸ்.பி.பியின் குரல் ஒலிக்க நிகழ் காலத்திற்கு வந்தான் வீரா.

 

“போனை குடு, headset ஐ கொடு” சுதாகரின் அந்த expres மியூசிக் போனையும் headset ஐயும் வாங்கிக்கொண்டான் வீரா

 

புரியாத உறவில் நின்றேன்

அறியாத சுகங்கள் கண்டேன்

மாற்றம் தந்தவள் நீ தானே

 

எஸ்.பி.பியும் இந்த வரிகளும் அந்த காலை பொழுதும் வீராவை இன்னும் ஏதோ செய்தது.வீரா, செல்வாவின் வீடு வரை ஒரே அந்த பாடலை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தான்.

 

முன்னமே பேசிவைத்திருந்த படி, முதல் நாள் வீராவின் வீட்டில் இருந்து வீராவின் ஊரைச் சுற்றிவிட்டு இன்று விடியும் முன்னரே வீராவின் வீட்டில் இருந்து கிளம்பி செல்வாவின் வீட்டிற்கு அவர்கள் புறப்பட்டு இருந்தார்கள்.

 

அத்தனை காலையில், அதுவும் சனிக்கிழமை விடுமுறையன்று ஷாரா அத்தனை சீக்கிரம் எழுதிருந்திருக்க வாய்ப்பில்லை. செல்வாவின் வீட்டுக்கு கிளம்பும் போதே அம்மாவின் போனை எடுத்துக்கொண்டான் வீரா.

 

வீட்டைச் சுற்றி விசாலமான இடம், வீட்டுக்குள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மிளகாய் மூட்டைகளையும் தாண்டி வீட்டுக்குள்ளும் விசாலமான இடம். அவர்கள் எல்லோரும் சாப்பிட்டு விட்டு மாடியில் இருந்த செல்வாவின் அறைக்குச் சென்றார்கள்.

 

இருபதடிக்கு ஒரு வீடு, வீட்டுக்கு ரெண்டு பேர், மற்றவர்கள் வெளியூரில்,அமைதியை தாங்கிகொண்டிருந்த அந்த ஊரில் தனியாக இருந்தவர்களும் கூட தனியாக இல்லை. அப்படி ஒரு ஊரில், நண்பர்கள் ஐந்து பேரும், தனியாக ஒரு அறையில் கூடுகிறார்கள்.

 

“எங்க ஊரு எப்படி இருக்கு” செல்வா ஆரம்பித்தான்.

 

“நல்லா இருக்கு செல்வா, பின்னாடி எல்லாம் உங்க இடமா?”அம்மாவுடைய ஊர்; அப்பாவுடைய ஊர் போல் எல்லாம் இல்லாமல் இந்த கிராமம் இன்னும் முழுதான ஒரு கிராமமாகவே இருப்பதை அதிசயமாய் கவனித்த வீரா ஒன்றொன்றாய் கேட்டுக்கொண்டிருந்தான்.

 

“ஆமா டா எல்லாம் எங்க கொல்லை;மிளகா தான் எப்பவும்” செல்வா பதில் சொல்லி முடித்தவுடன்

“பஸ் எப்படி காலைல மட்டும் தானா ?” வீரா அவர்கள் வந்த அந்த மேடும் பள்ளமுமான சாலையில் வந்துகொண்டிருந்த பேருந்தை பார்த்துக்கொண்டே கேட்டான்.

 

“இருக்கு டா சாயந்திரம் 7 மணி வரை நீ கிளம்புறதுக்கு சரியா இருக்கும், இருக்க சொன்ன கேட்க மாட்ற” என்றான் செல்வா.

 

காலையில் சென்று மாலையில் திரும்பும் திட்டத்தோடு தான் கிளம்பியிருந்தான் வீரா.

 

நேரத்திற்கு பசி வருவது போல், ஷாரா எழும் நேரம் என்று அவன் நம்பிக்கொண்டிருக்கும் அந்த நேரத்திற்கு வீராவின் மனதில் மணி அடித்துவிடும்ஷாராவுக்கு ஒரு குட் மார்னிங் ஐ அனுப்பி வைத்தான் வீரா. அவளிடம் இருந்து பதில் வரவில்லை.

 

செல்வா அறையில் இருந்த ஒலிபெருக்கியில் பாடல்களை ஒலிக்க விட்டான் விமல்.

 

வீரா வேகமாக , “ஒத்த சொல்லால”என்று கேட்க, விமலின் கைவண்ணத்தில் அந்த பாடலை பாடியது ஒலிப்பெருக்கி

 

“அட பொட்ட காட்டுல

ஆலங்கட்டி மழை பெஞ்சு ஆறு ஒண்ணு ஓடுறத பாரு”

 

அந்த ‘பாரு’ ல்  இருந்த உயிர் நெடில் ப்+ஆ மேலே சென்று ர்+உ என்று குறிலாக கீழே இறங்க, வீரா மனதும் special one  மெசேஜ் ஐ நினைத்து மேலே ஏறி கீழே குதித்தது.

 

அந்த மெசேஜ் வந்த போதிருந்த மகிழ்ச்சியில் அவனுக்கு ஆட வேண்டும் போல் இருந்தும் அவன் ஆடவில்லை இப்போதும் அவனுக்கு ஆட வேண்டும் போல் இருந்தது, ஆனால், “சரவணா! அன்னிக்கு போட்டீயே ஒரு ஸ்டேப் அந்த பீட் க்கு இப்ப போடுறா” வீரா சரவணனை ஆடச் சொல்லிக் கேட்டான்.

“எந்த ஸ்டேப் டா? என்ன டா வீரா” வெட்கத்தில் சிரித்துக்கொண்டே இழுத்தான் சரவணன்.

 

வீரா எழுந்து கொஞ்சம் அசைந்து அவனுக்கு நினைவூட்ட, சுதாகர் அந்த பீட்டை மீண்டும் ஒலிக்கச் செய்தான்.

 

அந்த மகிழ்ச்சியான தாளம் ஒரு பக்கம் ஒலிக்க , ஆட வேண்டும் என்று உள்ளே துள்ளிக்கொண்டிருந்த வீராவின் மனம் சரவணன் ஆடுவதில் நிறைவு கொள்ள, வீராவின் போன் சிலிர்த்தது, “gooot moorningggg” ஷாரா  மெசேஜ் அனுப்பியிருந்தாள்.

 

அதைப்பார்த்து உதடுகளை சேர்த்துவைத்திருக்க முடியாமல் பிரிக்கவும் முடியாமல் திணறும் புன்னகையோடு நின்றுகொண்டிருந்த வீராவை , “இப்ப நீ ஆடு” என்று இழுத்தான் சரவணன்.

பாடல் மீண்டும் முதலில் இருந்து ஒலிக்கப்பட்டது, நளினம் நயம் தாளம் இதெல்லாம் வீராவின் கவனத்தில் இல்லை, “special one” என்கிற அந்த மெசேஜ் வந்த தருணம் முதல் அந்த பாடல் கேட்கும் பொழுதெல்லாம் அந்த நினைவால் வரும் எழுச்சி,அந்த மொத்த உற்சாகமும் வீராவை அவன் போக்குக்கு ஆட வைத்தது. சுதாகர் அதைப்
படம் பிடித்துக்கொண்டிருந்தான்.

 

“என்ன பண்ணுறீங்க! இப்ப தான் எந்திரிச்சீங்களா?” இந்த மெசேஜ் தட்டிவிட்டு தான் வீரா ஆடிக்கொண்டிருந்தான், ஆடிமுடித்து போனை எடுத்து அவன் பார்த்த பொழுது அந்த மெசேஜ் outbox லேயே இருந்தது.

 

“உங்க ஊர்ல டவர் கிடைக்காதா?” கொஞ்சம் ஏமாற்றத்துடனும் எரிச்சலுடனும் கேட்டான் வீரா.

 

“வோடோபோன் மட்டும் கிடைக்கும் satellite network” வோடோபோன் நம்பர் வைத்திருந்த விமல் நக்கலாக பதிலளித்தான். அந்த ஊரின் எல்லாஇடுக்குகளும் வோடோபோனின் தொடர்பு எல்லைக்குள் இருந்தது.

 

சில நிமிடங்கள் கழித்து வீரா ஷாராவுக்கு அனுப்பிய மெசேஜ் சென்றடைந்தது.

 

“friends கூட வெளிய போறேன் எந்திரிச்சு கிளம்பனும்” ஷாராவிடம்  இருந்து வந்த பதில் வீராவிற்கு அதிர்ச்சியை தந்தது.

 

“friendsகூட வெளிய போறாய்ங்களாம் டா ” விரக்தியோடு வீரா சொன்னான்.

 

“அப்பவே சொன்னேன் முதல் ல எங்க ஊருக்கு வந்துட்டு உங்க வீட்டுக்கு போலாம் ன்னு அப்படி வந்து இருந்தா இன்னிக்கு நம்மளும் அங்க இருந்திருப்போம்” செல்வா சொல்லும் போது வீராவிற்கு உடனே கிளம்ப வேண்டும் போல் இருந்தது.

 

“எங்க போறீங்க யாரெல்லாம்” வீராவிற்கு தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.

 

“இன்னும் முடிவு பண்ணலை எங்க ன்னு, அபி,பாலா சதிஷ்,வினோ” ஷாராவின் இந்த பதில் வீராவின் வயிற்றில் கொஞ்சம் புகைமூட்டியது.அவன் மனதிற்குள் இரண்டு பேரை நிற்க வைத்து, “ஹாஸ்டல் ல எத்தனை பசங்க இருக்காங்க ? காலேஜ் ல அவ்வளவு பெரிய இடம் இருக்கு விளையாட எல்லாம் போக மாட்டிங்களா”  என்று கேட்டுக்கொண்டிருந்தான்.

 

“சரி நம்ம தான் யார்டையும் பேசுறதில்லை..  நம்ம காலேஜ் லேயே, நம்ம friends லேயே நாலு பேரு இப்படித்தானே இருக்காய்ங்க…பசங்கள விட்டுட்டு பொண்ணுங்க கூட வெளிய போறது வரது ன்னு  ” என்று வயிற்றில் கிளம்பிய புகையை கொஞ்சம் அணைத்துவைத்தான்.

 

கிளம்புவதற்கு முன்பு வரை வீராவிற்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்த ஷாரா அதற்கு பிறகு வீராவை தொடர்பு கொள்ளவேயில்லை.

 

வீரா இடையிடையில்  அனுப்பிய எந்த மெசேஜ் க்கும் பதில் இல்லை.அவன் அவளை அழைத்த பொழுது ஷாரா போனையும் எடுக்கவில்லை.

 

நண்பர்கள் பக்கத்தில் இருந்த ஓடையில் குளிக்க போனார்கள் கரையில் நின்றுகொண்டிருந்த வீரா போனில்  ஷாராவைத் தேடிக்கொண்டிருந்தான், அவள் இணைப்பில் வரவே இல்லை.

 

இருட்டியும் விட்டது. “சரி செல்வா நான் கிளம்புறேன்” கொஞ்சம் விரக்தியோடு இருந்த வீராவிற்கு உடனே கிளம்ப வேண்டும், “ஷாரா ஏன் பேசலை?” அவனுக்கு உடனே தெரிந்துகொள்ள வேண்டும்.

 

“சரி டா! 7 மணிக்கு தான் டா பஸ். சாப்பிட்டு போகலாம்” என்றான் செல்வா.

வீராவிற்கு சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் எல்லாம் இல்லை.அவன் மனம் முழுதும் ஷாராவின் மெசேஜ் ஐ தேடிக்கொண்டிருந்தது. 3நாள் விடுமுறையில் ஷாராவிடம் பேசிக்கொண்டே இருக்கலாம் என்கிற எதிர்பார்ப்பில் இருந்த அவனுடைய இரண்டு நாள் விடுமுறை முடியப்போகிறது ஆனாலும், அவள் சரியாக அவனிடம் பேசவில்லை என்கிற உணர்வு.

 

ஆனால், அது எதுவும் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. வீராவும் நண்பர்களும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தார்கள்.அங்கு இருந்த மேடையில் அமர்ந்து அவர்கள் கதைத்துக்கொண்டிருக்க வீராவின் மனம் எதிலும் லயிக்கவில்லை.

 

“இப்ப தான் வந்தேன்”ஒரு  வழியாக ஷாராவிடம் இருந்து மெசேஜ் வந்தது.

 

“காலையில இருந்து எத்தனை மெசேஜ் எத்தனை போன்” வேக வேகமாக இந்த மெசேஜ் ஐ அனுப்பினான் வீரா

“போனை எடுக்கவிடலை டா புடுங்கி வச்சுக்கிட்டாய்ங்க”ஷாரா அனுப்பிய இந்த பதில்,வீராவிற்கு சதிஷ் மீதும் பாலா மீதும் கோபத்தையும் வெறுப்பையும் உண்டாக்கியது.

அவன் அவர்களை பார்த்தது கூட கிடையாது. ஆனால்,அந்த இரண்டு பெயர்களையே வெறுக்க ஆரம்பித்தான் வீரா “அதென்ன பொம்பள புள்ள போனை புடுங்கி வச்சுக்கிறது” அவன் மனதிற்குள் இருந்து ஒருவன் சத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

“பெரிய அப்பா டக்கரா! சரி போன் வந்தா கூட சொல்லமாட்டாங்களா”சதீஷையும் பாலாவையும் அதற்கு மேல் ஷாராவிடம் கடிந்து கொள்ள முடியாது என்று இந்த கேள்வியை மட்டும் கேட்டான் வீரா .

“வாங்கி உள்ள வச்சுட்டாய்ங்க டா” என்றாள்.

“எங்க போனீங்க என்ன பண்ணீங்க” பாலா மீதும் சதிஷ் மீதும் இருந்த கோபத்தில் இருந்து வெளிவருவதற்காக ஷாராவிடம் இயல்பாக பேச ஆரம்பித்தான்.

“டொமினோஸ் போனோம் பிட்ஸா சாப்பிட்டோம்”இந்த மெசேஜ் ஐ பார்த்து , “பீட்ஸா எல்லாம் சாப்பிடனுமா நம்ம” என்று நினைத்துக்கொண்டான் வீரா.

“பீட்ஸா எல்லாம் சாப்பிடுவீங்களா” என்று வீரா கேட்டதற்கு “yeah ! yummieee” என்று பதிலனுப்பியிருந்தாள்.

பீட்ஸா நல்லா இருக்குமோ இல்லையோ அவள் அனுப்பியிருந்த yummieee வீராவிற்கு அத்தனை சுவையாக இருந்தது.

“அப்பறம் பார்க் போனோம். சும்மா அங்க கொஞ்ச நேரம் அடிச்சு விளையாண்டுட்டு”

போனை வலது கையில் இறுக்கமாய் பற்றிக்கொண்டு, இடது கை விரல்களை முறுக்கி யாருமில்லாத இடதுபக்கமாக முகத்தை திருப்பி பற்களை கடித்துக்கொண்டு “அடிச்சு விளையாடுவாய்ங்களா” என்று வீரா கடிந்துகொண்ட பொழுது, பேசிக்கொண்டிருந்த நண்பர்கள் வீராவை கவனித்து,”வீரா! என்ன ஆச்சு ஏன் இவ்வளவு கோபப் படுற” என்று சிரித்துக்கொண்டே வீராவை கேட்க.

 

“அடிச்சு விளையாடுவாய்ங்களாம். லீவு விட்டா கிரிக்கெட் விளையாடலாம் போகாம அங்க இருந்து கிளம்பி வந்து இருக்காய்ங்க” கோபமாக சொன்னான் வீரா. நண்பர்களின் சிரிப்பு அவன் கோபத்தை தணிக்கவில்லை .

 

“டேய் உன்கிட்ட பேசுறதுக்கே உனக்கு என்ன இவ்வளவு அவங்க மேல” செல்வா ஆச்சரியமாய் கேட்டான்.”இதுக்கெல்லாம் இவ்வளவு உணர்ச்சிவச படாத டா” என்றான் சரவணன்.விமல் ஒன்றும் சொல்லவில்லை விமலுக்கு அளவிற்கு வீராவை புரிந்து கொண்டவர்கள் இல்லை.அதனால் அவன் ஒன்றும் பேசவில்லை.

வீராவிற்கு  தோழிகள் யாரும் கிடையாது, அவன் பெரிதாக பெண்களிடம் பேசியதும் இல்லை. மோனிகாவிடம் பேசுவதற்கும் கூட விமலும் செல்வாவும் தான் காரணம்.விமலும் செல்வாவும் மோனிகாவும் நல்ல நண்பர்கள். ஆனால், அவர்கள் எப்போதும் தொட்டு பேசிக்கொண்டதில்லை.

 

‘சகோதரி மாதிரி,just friend ‘ என்றெல்லாம் உப்புக் காரணம் தேடிக்கொண்டு பேசும் பலரையும் அவன் கவனித்து இருக்கின்றான்.வீராவின் கல்லூரி வட்டத்திலேயே பலர் சகோதரி என்பதும்; கண்டிப்பதாய் சொல்லி அடிப்பதும் அந்த பெண்களை தொடுவதற்கு அவர்கள் தேடிக்கொள்ளும் காரணம் என்று அவன் புரிந்து வைத்திருந்தான்.

“வீட்ல இருக்க தங்கச்சிட்டியே இவ்வளவு உரிமையா இருக்க மாட்டாய்ங்க, ஒரே ஒரு கிளாஸ்! ஒரே வயசு! அப்பறம் என்ன தங்கச்சி! உன்னை என்னையும் தம்பி ன்னா கூப்பிடுறான். அடிக்கிற சாக் ல தொடணும்!” என்று விமலிடம் இப்படி அடித்து விளையாடும் நண்பர்களை அவன் கடிந்துகொண்டதுண்டு.

 

பெண்கள் இதை பெரிதாய் லட்சியம் செய்வதில்லை. இதை ஷாராவிடம் அவன் விளக்கி கொண்டிருக்க முடியாது. அவனுடைய கோபம் எல்லாம் பாலா மீதும் சதீஸ் மீதும். அங்கே ஷாரா இதில் பெரிதும் ஈடுபட்டிருக்க மாட்டாள் என்பது அவள் எண்ணம், அபிக்காகவும் வினோவிற்காகவும் தான் அவள் அங்கே சென்றிருப்பாள் என்று நினைத்துக்கொண்டான்.

ஆனால், ஷாராவிடம் இதையெல்லாம் சொல்ல வேண்டும் என்கிற தவிப்பு இருந்தும் அவன் சொல்லவில்லை. சொன்னால் ஷாரா வீராவை தவறாக நினைத்துக்கொண்டால் என்ன செய்வது என்கிற பயம். வீரா இதைப்பற்றி ஷாராவிடம் பேசியிருப்பானா? பாலா மீதும் சதிஷ் மீதும் இருந்த கோபத்தை வெளிக்காட்டினானா? கொஞ்சமாக பாலா மீதும் சதீஸ் மீதும் வீரா வெளிக்காட்டிய கோபம் ஷாராவிற்கு எரிச்சலூட்டியதா?அதற்கு பிறகு அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள்?

அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *