படிப்பை முடித்துவிட்டு ஷாராவைத் தேடிக்கொண்டிருந்த வீராவிற்கு வேலையும் கிடைக்கவில்லை. ஷாராவும் கிடைக்கவில்லை
அவள் வீட்டின் தொலைபேசி எண்ணைக்கொண்டு அவனுக்கு கிடைத்த அவள் வீட்டின் முகவரி, அவனிடம் தான் இருந்தது.அவள் பணிபுரியும் அலுவலகத்திற்கு வேலை தேடிச் சென்ற வீராவிற்கு அவள் அலுவலகம் எங்கு இருக்கிறது என்பதும் இப்போது தெரிந்தே தான் இருந்தது. ஆனால், அவளாக பேசாமல் விலகிவிட்டதால் காரணமில்லாமல் இந்த இரன்டு இடங்களைச் தேடிச் செல்லும் தைரியமில்லாமல் இருந்தான் வீரா.”நான் உன்ன தேடுறேன் நீ என்ன தேடவே இல்லையா ” என்று அவனுக்கு கத்த வேண்டும் போல் இருந்தது. அவன் அவளைத் தேடி என்னவெல்லாம் செய்துகொண்டிருந்தான் என்பதையெல்லாம் அவளிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது. கேட்கும் தூரத்தில் அவள் இல்லை. கேட்பதற்கு அவள் விரும்பவும் இல்லை. அதனால் வீராவின் இந்த உணர்ச்சி தீவிரங்கள் அவனுடைய கவிதைகளாக ஆனது.
என் வீட்டு முற்றத்தில் தனியாக நான் பேசிக்கொண்டிருந்த போது
என்னை பார்த்து ஏளனம் செய்த காக்கைகள் எதுவும்
நீ வைக்கும் விருந்திற்கு வந்ததில்லையா
வந்திருந்தால் சொல்லியிருக்குமே!
“வானத்தை பார்த்து ஒருவன் வெட்கம் கொள்கிறான்” என்று.
நான் தினந்தோறும் பயணம் செய்யும் பேருந்தில்
ஒரு நாளும் உன் பயணம் இருந்ததில்லையா?
இருந்திருந்தால் சொல்லியிருக்குமே!
“கூட்டத்தின் நடுவே ஒருவன் தனியாக சிரிக்கிறான்” என்று .
என் நண்பர்களின் காதலை வளர்க்க நான் எழுதிய கவிதைகள்
உன் தோழிகள் மூலம் ,உன் காதுகளை எட்டவில்லையா ?
எட்டியிருந்தால் உன்னால் உயிர் பெற்ற என் கவிதைகள் சொல்லியிருக்குமே!
அவை உனக்காக எழுதப்பட்டவை என்று .
நான் அவ்வப்போது செல்லும் கோவிலுக்கு
நீ ஒரு போதும் சென்றதில்லையா?
சென்றிருந்தால் அங்கிருந்த சிலைகள் சொல்லியிருக்குமே!
“வரமாய் ஒருவன் உன்னை கேட்கின்றான்” என்று.
உன் வீட்டு வாசற்படியை
நீ கடந்து செல்லும் போது
அது உன்னிடம் சொன்னதில்லையா?
“நீ வெளியே வரமாட்டாயா என்ற ஏக்கத்துடன்
இவ்வழியே ஒருவன் வந்து செல்கிறான்” என்று.
என்னைச் சுற்றி இருப்பதெல்லாம்
உன்னை எனக்கு நினைவுப்படுத்துகிறதே!
உன்னைச் சுற்றி இருக்கும் எதுவும்
என்னை உனக்கு நினைவுப்படுத்துவதில்லையா!
ஒருநாளும் நான் உன் கனவில் வந்ததில்லையா ?
இல்லை! அங்கும் நான் பேச தயங்கி கொண்டிருந்தேனா?
“உன்னை யாரேனும் காதலிப்பதாக சொன்னால் என்ன நினைப்பாய்?” என்று கேட்டதற்கு,
“இவனின் இரசனை இவ்வளவு மோசமானதா!”
என்று நினைப்பேன் என்றாய்,
அந்த உரையாடலின் போது உனக்கு புரியவில்லையா?
அந்த மோசமான இரசனைக்கு சொந்தக்காரன் நான் என்று.
நான் சொல்லாத என் காதலை
யாரும் எந்த நிகழ்வும்
உனக்கு உணர்த்தவில்லையா?
நானே உன்னிடம் சொல்லிவிட நினைத்து தான்
வார்த்தைகளை தெரிவு செய்து கொண்டிருந்தேன்
அதற்குள் பொறுமையிழந்து கிளம்பிவிட்டாய்
அன்று புதைக்கப்பட்ட அந்த ஊமை வார்த்தைகள் தான்
இன்று என் கவிதைகளாய்!
இந்த கவிதை தான் வீராவின் அந்த தேடல்.கவிதை தேடும் தேடலில் கவிதைகளை ஈன்று கொண்டிருந்தான் வீரா.
அவன் தேடலின் முடிவாக அவளின் முகநூல் பக்கம் அவன் கண்ணில் பட்டது. அவளுக்கு ஒரு friend request அனுப்பி காத்துக்கொண்டிருந்தான். அவள் அவன் அந்த அறிவிக்கையை தவறவிட்டுவிட கூடாது என்று,அந்த friend request ஐ தினமும் cancel செய்துவிட்டு புது request அனுப்பிக்கொண்டிருந்தான்.அவள் எதையும் சட்டை செய்யவே இல்லை. முகநூல் வழியாக அவளுக்கு பல குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொண்டிருந்தான், ஒவ்வொரு குறுஞ்செய்திகளையும் அவள் பார்த்துவிட்டதாக முகநூல் அவனுக்கு சொன்னது. ஆனால், ஷாராவிடம் இருந்து எந்த பதிலும் வந்த பாடில்லை.
“நம்ம தேடிட்டு இருக்கோம்! ஆனா நம்ம request, message பாத்து எந்த response இல்லை ன்னா நம்ம மேல எதுவுமே இல்லையா அப்ப?” அவளுடைய முகநூல் பக்கத்தைப்பார்த்துக்கொண்டிருந்த வீராவின் மனது குமுறிக்கொண்டிருந்தது.
“யாரோ ரெண்டு நாள் பழகின stranger கூட இவங்க அவங்க தான? ன்னு request accept பண்ணிருப்பாங்க; reply பண்ணிருப்பாங்க; so! she is avoiding you! அப்ப avoid பண்ற அளவு மனசு ல ஏதோ இருக்க தானே செய்யனும்!” அவன் மனதின் மற்றொரு முகம் ஆறுதல் சொல்லியது.
“அப்படின்னா ஏன் avoid பண்ணனும்?” அவன் மனதின் மற்றொரு முகம் சந்தேகத்தை கிளப்பியது.
இப்படி அவன் மனதின் ஒவ்வொரு மூலையிலும் நின்று அவனே அவனிடம் பேசிக்கொண்டிருந்தான்.
“வேற யாரையும் பிடிச்சருக்கும்! அவங்களுக்கு உன்ன மாதிரி பசங்கள்ட்ட பேசுறது பிடிச்சிருக்காது ”
“அப்படி இருக்குமா?” பயம் கலந்த கவலையோடு அவனே அவனுள் அவனைக் கேட்டுக்கொண்டான்.
“வாய்ப்பே இல்லை!”உறுதிபட உள்ளிருந்து கத்தியது அவன் மனம்.
“அப்பறம் ஏன் சும்மா கூட உனக்கு ஒரு பதில் சொல்ல மாட்றாங்க?”அந்த உறுதியையும் அவன் மனமே,இந்த கேள்வி கொண்டு குழைத்தது.
அவள் முகநூல் பக்கம், அவள் கல்லூரி வலைப்பக்கம், அவள் நிறுவனத்தின் வலைப்பக்கம், அவள் நண்பர்களின் வலைப்பக்கம் பொழுதும் இவைகளை அலசுவதே வேலையாக வைத்துக்கொண்டிருந்தான் வீரா.
“இது relative அ இருக்கும்! இவன் நம்மை விட சின்ன பையன்” அவளின் நண்பர்களின் பக்கங்களை அலசிக்கொண்டிருந்தான் வீரா.
“நீ செய்யுறதா சரியா?!” அவன் மனதிற்குள் ஒரு அதட்டல் கேட்டது.
“அப்ப ஏன் என்கிட்ட பேசலை?” கொஞ்சம் கோபமாகவும் பாவமாகவும் மெதுவாகவும் ஒரு குரல் அவனுள் பதிலளித்தது.
“ரெண்டு நாள் பேசினவங்க கூட ஞாபகம் வச்சு friend request accept பண்ணுவாங்க தானே?” அந்த பாவமான குரல் தொடர்ந்தது, “நான் இதெல்லாம் பாத்து இதெல்லாம் வச்சு என்ன செய்ய போறேன்! ஒன்னும் கிடையாது.”
வீராவின் நாட்கள் இப்படியே ஓடிக்கொண்டிருந்தது.அவனைச்சுற்றி நடந்த எல்லாவற்றிலும் அவன் கலந்து கொண்டாலும், அவன் மனம் ஷாராவை தேடிக்கொண்டே இருந்தது.
2013ம் வருஷம் பிப் மாதம், அவனுக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அந்த மின்னஞ்சல் வந்ததை காட்டிய அந்த அறிவிக்கையில் அவள் பெயர், அதை பார்த்த நொடியில் வீராவின் கன்னங்கள் குவிந்து உதடுகள் பிரிந்து அவன் கண்கள் நிறைய மகிழ்ச்சி ததும்பிக் கொண்டிருந்தது.ஒரே உற்சாகம். அது முகநூல் வலைதளத்தின் அறிவிக்கை மின்னஞ்சல், ஷாரா அவன் friend request ஐ ஏற்றுக்கொண்டிருந்தாள்.இனி பேசிவிடலாம் என்று வீரா கொஞ்சம் நம்பிக்கை கொண்டான்.ஆனால்,அதற்கு பின்னரும் கூட அவள் அவனிடம் பேசவேயில்லை.
“ஏன் பேசலை? என்ன ஆச்சு? என்ன ஏன் purpose அ avoid பண்ணனும்?” இந்த கேள்விகள் வீராவின் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. மாதங்களும் ஓடிக்கொண்டே இருந்தது.
அவன் படிப்பை முடித்து ஒருவருடம் ஆகிவிட்டது. தங்கை கல்யாணம், அப்பாவிற்கு ஏற்பட்ட விபத்து, வீராவின் கால் எழும்பில் ஏற்பட்ட முறிவு என்று அத்தனை நிகழ்வுகளையும் வீரா இன்னும் வேலைக்கு செல்ல முடியாமல் இருப்பதற்கு காரணமாக சொன்னாலும், உண்மையான காரணம் அவன் மனதின் கவனம் முழுக்க, “ஷாரா ஏன் பேசறதில்ல?” என்பதில் மட்டுமே இருந்தது தான்.
அன்று வீராவின் அத்தான் வீட்டிற்கு வந்திருந்தார், இருவரும் சேர்ந்தால் சினிமா கிரிக்கெட் என்று பேசிக்கொண்டே இருப்பார்கள். மாலை வேளையில்,இருவருமாக மொட்டை மாடிக்கு சென்றார்கள். அங்கு நடந்துகொண்டே பேச ஆரம்பித்தவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள். என்ன பேசுகிறார்கள் என்றில்லாமல் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“‘ஆதலால் காதல் செய்வீர்’ படம் பாத்துட்டிங்களா அத்தான்? சுசீந்திரன் direction” ஆவலோடும் எதிர்பார்ப்போடும் கேட்டான் வீரா.
“பாத்தேன் ப்பா அது ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல!” கொஞ்சம் சலிப்போடு வந்த பதில் வீராவை ஏமாற்றம் அடையச் செய்தது.
“ஏன் அத்தான்? நான் மகான் அல்ல படம் எடுத்த ஆளு! அது என்ன மாதிரி கதை! ரொம்ப பிடிச்சு இருந்துச்சு! சாதாரணமா.. ரொம்ப ஜாலியா; வீட்டு கஷ்டம் தெரியாம வளர ஒரு பையன்; friends யே நம்ப வேணாம் ன்னு சொல்ற friend யும் கூட நம்புற ஆளு; ரவுடிய கூட மனுஷனா பாக்குற கேரக்டர்; மனசுல பொய் இல்லாம எல்லார்கிட்டயும் பழகுற மனசு; இப்படி ஒருத்தன் ஒரு நாலு பேரை கொலை பண்ணறான்! அந்த படம் பேர் ‘நான் மகான் அல்ல’, எப்படி கதை, அதுக்கு ஏத்த டைட்டில்” கண்கள் விரிய விரிய வீரா சொல்லிக்கொண்டிருந்தான். அத்தனை தூரம் அந்த கதையும் இயக்குனர் சுசீந்திரனும் அவனை ஈர்த்து இருந்தார்கள். அத்தனை சொல்லிய வீரா, சொல்லாமல் சொல்லியது, “அப்படி ஒரு படைப்பை தந்த சுசீந்திரனின் ஒரு படைப்பு எப்படி மோசமானதாக இருக்க முடியும்.சம்மந்தமில்லாத தலைப்பை அவர் எப்படி வைத்திருப்பார்!” என்பது தான். வீராவின் இந்த சந்தேகத்தை அவனுடைய அத்தான் புரிந்து கொண்டார்.
“இரண்டு பேர் காதலிக்கிறாய்ங்க. அப்பவே அந்த பொண்ணு மாசமா ஆகிடுறா; அது தெரிஞ்சு பிரச்னையாகுது, சரி! கல்யாணம் பண்ணலாம் பேச்சு எடுக்கிறாய்ங்க அதுக்கு அப்பறம் பிரச்சனை இன்னும் பெருசாகுது, ஒரு கட்டத்துல இரண்டு பேரும் பிரிஞ்சு போய்டுறாங்க; அவளுக்கு குழந்தை பிறக்குது; அதை அனாதை ஆசிரமத்தில் சேர்த்துட்டு, அந்த பொண்ணுக்கு வேற பையன் கூட கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. இப்படி நடக்கிறதால நிறைய குழந்தைகள் அனாதைகளாக இருக்கு ன்னு…”என்று சலிப்போடு அந்த படத்தின் கதையை சொல்லிக்கொண்டு வந்த வீராவின் அத்தான், “ஏன் இந்த படத்துக்கு ஆதலால் காதல் செய்வீர்ன்னு பேர் வச்சாங்க ன்னு தெரில?” என்று இன்னும் சலித்துக்கொண்ட பொழுது. வீராவின் கண்கள் கொஞ்சம் விரிந்தது அவன் உதடுகளும் கூட பிரிந்து ஆ என்று நிற்பதற்குள் அவன் பேச தொடங்கினான், “correct தான் அத்தான்! ஆதலால்…… காதல் ….. செய்வீர்” வேகமாகவும் அழுத்தமாகவும் சொன்னான் வீரா.
“அவங்க லவ் பண்ணியிருந்தா இப்படி நடந்திருக்காதே! so அவங்க பண்ணது லவ் இல்லை, ஆதலால்…… காதல் ….. செய்வீர்”என்று பரவசமாக சொல்லி முடித்தான் வீரா.
இந்த உலகத்தில் நம்முடைய எண்ணத்திற்கு ஏற்றாற்போலவே ஒருவரின் எண்ணம் இருக்கிறது என்று நமக்கு தெரியும் தருணங்களில் நாம் பரவசம் அடைவது இயல்பு தானே. வீராவின் மனதிற்குள் ஷாரா மீதிருந்த காதலை வீரா உணர்ந்து எட்டு வருடங்கள் வரை யாரிடமும் சொல்லவில்லை. காரணம், இந்த உலகம் காதல் என்பதின் மீது கொண்டிருந்த பார்வை. விமலிடமும் செல்வாவிடம் சொன்ன பின்பும், நண்பர்கள் பலர்க்கும் யாரோ ஒருவரை வீரா காதலிக்கிறான் என்று தெரிய ஆரம்பித்த பின்னும் கூட யாரிடமும் அவன் ஷாரா பற்றி பேசாமல் இருந்ததற்கு அது தான் காரணம். இந்த உலகம் காதலை எப்போதும் பாலியல் ஈர்ப்போடு சேர்த்து பார்த்து பழகிவிட்டது.
ஷாராவுடம் கூட உன்னை யாரும் காதலிப்பதாக சொன்னால் என்ன செய்வாய் என்று கேட்டதற்கு அவனுக்கு இவ்வளவு மோசமான ரசனையா என்று நினைப்பேன் என்று தான் சொன்னாள். அங்கு அவள் பதிலும் கூட காதல் வெளிப்புற அழகோடு தொடர்புடையது என்கிற சமூகத்தின் பொதுப்புத்தி எண்ணமே வெளிப்பட்டது.
“இது அது இல்லை!” வீரா மனசு லட்சம் முறை அவனுக்கு சொல்லியிருக்கும் அதே வேளை அதை யாரும் நம்ப மாட்டார்கள் என்றும் அவனுக்கு சொன்னது.இப்படி சூழலில் அந்த கதையும் அந்த தலைப்பும் அவன் எண்ணங்களை ஒட்டி இருப்பதாக அவன் நினைத்துக்கொண்டான். If there is lust, it cannot be love.
பெண்களை ரசிப்பதற்காகவே அங்கங்கே கூடியிருக்கும் பத்து பேரில் ஒருவனாக வீரா இருந்ததில்லை அதே போல் எதச்சையாக அவன் எதிரே அழகான பெண் ஒருத்தி வந்தால் கண்ணை மூடிக்கொள்கிறவனும் இல்லை. அவனுக்கு பிடித்த நடிகைகளோடு அவன் கனவுலகில் கிருஷ்ண லீலை எல்லாம் கூட நடத்துவதுண்டு. ஆனால், அவன் கனவுலகில் நடக்கும் அதுபோன்ற லீலைகளில் ஒருபோதும் ஷாரா இருந்ததில்லை. “அது வேற ஆனா யாரும் நம்ப மாட்டாங்க” என்று அதன் காரணமாகவே வீரா இந்த காதலைப் பற்றியோ ஷாராவைப் பற்றியோ பேசுவதில்லை.
ஷாரா பேசாமல் இருந்த அந்த நாட்களில் ஷாராவிடம் பேச நினைத்ததெல்லாம் கவிதைகளாக ஆக்கி கொண்டிருந்த வீரா அந்த கவிதை தொகுப்பிற்கு ஊமை வார்த்தைகள் என்று பெயர் சூட்டியிருந்தான். ஷாரா மீண்டும் பேசும் பொழுது அவளிடம் காட்ட வேண்டும் என்று அவன் வைத்திருந்த பொக்கிஷங்களில் ஒன்று, “ஊமை வார்த்தைகள்”. ஆனால், அந்த ஊமை வார்த்தைகளில் ஒன்று கூட அவளை வர்ணிப்பதாக இல்லை என்று அவனுக்கு தோன்றியது.
அவளிடம் காண்பிக்கும் பொழுது, “என்னைப்பற்றி ஒன்னு கூட இல்லை” என்று அவள் கேட்டுவிட்டாள் என்ன செய்வது! என்று யோசித்த வீரா ஷாராவை எப்படி பார்த்தானோ? அவளிடம் எதைப் பார்த்தானோ அதை அப்படியே எழுதினான்.
“பார்ப்பதை அறியா குழந்தை போல் பார்வை
வளர்ச்சி அடையாத நடை
தூக்கம் கலைந்தெலுந்த சிறு பிள்ளை போல் பேச்சு
மொத்தத்தில் பருவம் தாண்டிய குழந்தை அவள்!”
அவன் கண்ணில், அவளுடைய பார்வையும் பேச்சும் தான் அவள்.நடை பழகும் சிறு குழந்தை போல் தான் அவள் இன்னும் நடக்கிறாள் என்னும் எண்ணம் வீராவிற்கு.இப்படி அவளைப் பற்றிய வீராவின் வர்ணனைகளும் கூட இந்த எல்லையில் தான் இருந்தது.
வீராவை பொறுத்தவரையில் காதலும் காமும் இரு வேறு துருவங்கள். அவன் அப்படி நம்பிக்கொண்டிருந்ததற்கு ஷாரா மட்டுமே தான் காரணம். வீராவின் ஆன்ம உணர்வை தொட்ட ஷாராவால் அவன் ஆண்மை உணர்வுகளை நெருங்கியதேயில்லை . “அது ஏன்?” என்கிற கேள்விக்கு வீராவிற்கு கிடைத்த பதில் ‘காதல்’. இந்த எண்ணம் தான், “Correct தான் அத்தான்! ஆதலால்…… காதல் ….. செய்வீர்” என்று வேகமாகவும் அழுத்தமாகவும் வீரா சொல்ல காரணமாக இருந்தது.
“LIFE LONG கூட இருக்கனும். கல்யாணம் பண்ணிக்கிட்டா தானே கூட இருக்க முடியும் அதுக்கு தான் லவ் பண்றவங்க எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிறாங்க” என்கிற அதீதமான நம்பிக்கையை கொண்டிருந்தான் வீரா.
சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் வீராவின் காதலை இப்படி சொல்லலாம், “A Love without Lust” . ஆனால், வீரா நம்பிக்கொண்டிருந்தது என்னவோ, “if there is love there cannot be lust & if there is lust & it cannot be love” அவனுடைய இந்த நம்பிக்கை வெகு காலம் நிலைக்கவில்லை.
அவனுடைய இந்த நம்பிக்கை எப்படி உடைந்தது? எப்போது உடைந்தது? அதை உடைத்தது காலமா? ஷாராவா ?தெரிந்து கொள்ள ஷாராவுடனும் வீராவுடனும் தொடர்ந்து பயணியுங்கள்.