“Hi”
“How are you”
2014, பிப்ரவரி மாதம்;வீராவிற்கு ஒரு எண்ணில் இருந்து மெசேஜ் வந்திருந்தது. புது எண்களில் இருந்து அழைப்போ மெஸேஜோ வந்தால், அது ஷாராவாக இருக்குமோ என்று நினைத்துக்கொண்டே தான் யார் என்று கேட்பான் வீரா. ஆனால், இனி எந்த புது எண்களில் இருந்தும் ஷாராவிடம் இருந்து எந்த அழைப்பும் வரப்போவதில்லை என்பதை வீரா தீர்மானித்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தது.
“who are you?” என்று தட்டும் போதே இன்னமும் கூட ஷாராவைத் தேடிக்கொண்டிருக்கும் அவனுக்குள் இருந்த ஒரு சிறு நம்பிக்கை அவன் உதடுகளின் ஓரத்தில் கொஞ்சமாய் எட்டிப்பார்த்தது.
“childhood friend, guess who?” இந்த பதில் கேள்வியை கண்டவுடன்,வீராவின் அந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் தளர்ந்து போனது.
ஷாரா வீராவிடம் இப்படி விளையாட வாய்ப்பே இல்லை. வீராவிடம் இப்படி விளையாடக்கூடிய கல்லூரி நண்பர்கள் ஒவ்வொருவராக அழைத்தான் வீரா.அவர்களில் யாரும் இதை செய்திருக்க வாய்ப்பில்லை என்று தீர்மானம் ஆன பின். அவன் மூளைக்கு உரைத்த பெயர், கவிதா! அடுத்த மூன்று மணி நேரம், தேர்வு கண்காணிப்பாளர் பணி, அதற்கும் முன்னதாக கவிதாவிடம் சென்ற வீரா,”mam! நீங்க தான?” என்று கேட்கும் போதே கவிதா சிரிப்பதை கவனித்துவிட்டான்.
“என்ன வீரா! நீங்க தான?ன்னு கேட்டா! என்ன நான் தான?” கவிதா சமாளித்தது போல இருந்தது.
“அது தான் நீங்க சிரிச்சதை பாத்தேனே!” என்று வீரா சொல்ல; “யோவ்! நான், ராஜ் exam duty போன கூத்தை கேட்டு சிரிச்சுட்டு இருந்தேன். தீடீர்னு நீ வந்து, ‘நீங்க தான’ன்னு கேக்குற” கவிதாவின் முக பாவனைகளில் ஏற்பட்ட மாற்றம் வீராவை குழப்பியது. ‘கவிதாவும் இல்லை என்றால் யாரு?’ என்கிற குழப்பத்ததோடு ஃபோனை கவிதாவிடம் காண்பித்தான்.
“நீ ஏன் ஃபோனை வேணுன்னா பாரு நான் பண்ணலை” என்ற கவிதாவிடம், “சரி! உங்க contact ல இந்த நம்பர் இருக்கும் பாருங்க” என்றான் வீரா.
கவிதா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. “நான் தான் இல்லை ன்னு சொல்றேன் ல. எனக்கு
இந்த நம்பரும் யாரு நம்பர்ன்னு தெரியாது” என்று கவிதா சத்தியம் செய்தாள்.
“என்ன ஒரு பதிலும் இல்ல?” அந்த எண்ணில் இருந்து மீண்டும் மெசேஜ் வந்தது. வீராவின் எதிரிலேயே தான் கவிதா இருந்தாள். கவிதாவும் இல்லை.
“யாரும் நம்மள வச்சு விளையாடுறாங்களா “என்கிற எண்ணத்தோடு, “ம்ம் நல்லா இருக்கேன். இப்ப தான் இரண்டாவது பையன் பொறந்தான்” என்று பதிலளித்தான் வீரா.பதிலளித்துவிட்டு தேர்வு நடக்கும் அறைக்கு விரைந்தான் வீரா. மாலை வரை அந்த எண்ணில் இருந்து எந்த பதிலும் இல்லை.
“சும்மா சொல்லாதீங்க கல்யாணமே ஆகாம எப்படி?” அந்த புது எண்ணில் இருந்து இந்த மெசேஜ் வந்த பொழுது கல்லூரி பேருந்தை விட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான் வீரா.
“நிஜமா கல்யாணம் ஆகிடுச்சு” என்று வீரா பதில் அனுப்ப, “wife பேர் என்ன?” என்கிற கேள்வி வந்து நின்றது. அந்த தெருவின் இரண்டாவது விளக்கை அடைந்த வீராவும் நின்றான்.அந்த நொடியில் அவனுக்கு துணையாக இருந்தது அந்த விளக்கொளி மட்டும் தான்.
“சொல்லுங்க உங்க wife பேர் என்ன!”அந்த மெசேஜ் வீராவிடம் கேட்டது.
“கபினி! “துணையாய் இருந்த விளக்கொளி விட்டு தூரம் வந்த வீராவின் மனதில் ஒலித்த பெயர். அந்த பெயர் ஒலித்த நொடியில் கொஞ்சமாய் வீராவும் ஒளிர்ந்தான்.
யாரு! யாரு! என்று தேடிக்கொண்டிருந்த வீராவின் மனதில் சட்டென்று தோன்றிய பெயர் கபினி.
“mam! நீங்க தான?” முகமெல்லாம் புன்னகையோடு கபினியை அழைத்த வீரா கேட்டான்.
“என்ன சார்! நான் தான?” சலிப்புடன் பேசினாள் கபினி.
“நடிக்காதீங்க! எனக்கு மெசேஜ் பண்ணி கால் பண்ணி விளையாடுறது” என்று வீரா முடிப்பதற்குள் கபினி பொரிந்து தள்ள ஆரம்பித்தாள், “உங்களுக்கு யாரோ மெசேஜ் பண்ணா! கால் பண்ணா! நான் தான் கிடைச்சேன்னா? எனக்கு வேற வேலை இல்லையா?”
“சரி! சரி! விடுங்க mam! இந்த சின்னப்புள்ளத் தனமான வேலையெல்லாம் உங்களைத் தவிர யாரும் பார்க்க மாட்டாங்க ன்னு நினைச்சு கேட்டுட்டேன் sorry” என்று வீரா போனை துண்டித்ததும்.
“இன்னும் நான் யார் ன்னு கண்டுபிடிக்கலயா?” கபினியிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது. இரண்டாவது சிம் இல் இருந்து அனுப்ப வேண்டிய மெசேஜை தவறி முதல் சிம் இல் இருந்து கபினி அனுப்பியது தான் தாமதம்.
வீரா அந்த புது எண்ணிற்கு அழைத்தான். “கண்டுபிடிச்சுட்டேன்! கொஞ்ச நேரம் முன்ன என்கிட்ட ஒருத்தவங்க பெரிய நாடகம் போட்டாங்க அவங்க இப்ப தெரியாம எனக்கு தெரிஞ்ச அவங்க நம்பர் ல இருந்து மெசேஜ் அனுப்பிட்டாங்க” என்று வீரா சொல்லும் பொழுதே கபினியின் வெட்கம் காற்றில் கரைந்து வீராவின் காதுகளை தொட்டுக்கொண்டிருந்தது.
“எப்படியோ நீங்க கண்டுபிடிக்கலைல”கபினி தோல்வியை ஒத்துக்கொள்ளவில்லை.
“அதென்ன அது, எழுத்து.com அ? அதுல நீங்க post பண்ணிருந்த கவிதையை கவிதா காமிச்சா; அதை படிச்சோன உங்கள்ட்ட கொஞ்சம் விளையாடுவோம் ன்னு” என்று அன்றைய தினத்திற்கு வைத்திருந்த வெட்கம் மொத்தத்தையும் தீர்த்துவிட்டு எப்போதும் போல் எல்லோரிடமும் சகஜமாக பேசுவது போல் வீராவிடம் பேச ஆரம்பித்தாள் கபினி.
“உங்களுக்கு விளையாட்டா கிண்டலா இருக்கு!” விளையாட்டாகவே கேட்டான் வீரா.
“இல்லை சார் எனக்கு நிஜமா ரொம்ப பிடிச்சிருந்தது. இப்ப கூட அந்த வெப்சைட் திறந்து படிச்சேன்; ஆனா நான் வாசிச்சா நல்லா இருக்காது. எனக்காக நீங்களே அந்த ‘கண்ணாடியின் காதல்’ கவிதைய
வாசிச்சு காமிங்களேன்!” கபினி கேட்டாள்.
பல வருடங்களாக யாருக்குமே சொல்லாமல் முக்கியமாக ஷாராவிற்கு தெரியாமல் போன கதைகளை கவிதைகளாய் வீரா எழுதிக்கொண்டிருந்தான். அந்த மொத்த கதையின் கவிதை வடிவம் தான் கண்ணாடியின் காதல். ஷாராவின் பெயரைத் தவிர்த்து, அந்த கதைகளை யார் கேட்டாலும் வீராவின் நினைவலைகள் அவனை கடந்த காலத்திற்கு அழைத்துச்சென்று விடும். அந்த கதைகளை பேசும் பொழுது, குழந்தை போன்று வீரா ஒரு பரவச நிலைக்கு சென்று விடுவான். அதை எத்தனை முறை அவன் பேசினாலும் அத்தனை முறையும் அவன் வேறு ஒரு உலகத்தில் இருப்பான். கபினி கேட்டதும் மனதில் ஓடிக்கொண்டிருந்த அந்த கவிதை வடிவிலான அந்த கதையை மனக்கண்ணில் கண்டு வாசிக்க ஆரம்பித்தான்.
“கண்ணாடியின் காதல்
எதிரில் அவள்
அவள் விழிகளில் நான்
நான் மெச்சிக்கொண்டேன் என் அழகை!உருகினேன் நான் எனக்குள்ளேயே
அவள் என்னை பார்த்துக்கொண்டிருக்கும் தருணங்களில்.நாங்கள் சந்திராத நாள் எங்களை சந்தித்ததேயில்லை
ஓர் நாள் ஓர் பொழுது
அவசரத்தில் அம்மாவிடம் தலைவாரிக்கொண்டாலும்
என்னைத்தேடி வருவாள் அவள்
சின்னதாய் பொட்டு வைத்து அதற்கு சந்தனத்தில் மகுடம் சூட்ட!அழகான நெற்றியை அவள் அழகாக்கும் நொடிகளில்
அழகாக ஆனது வரம் வாங்கி வந்த என் பார்வையும்தினமும் நான் அவள் முகத்தில் விழித்தேன்
இல்லை இல்லை அவள் என்னைப் பார்த்து கண்விழித்தாள்.அவள் இரகசியங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டாள்
என் மனதின் ரகசியமாய் அவள் இருந்தாள்!அழகாய் நகர்ந்தது நாட்கள்.
புதிதாய் வந்த புது நாள் ஒன்றில் புதுமுகங்கள் வீட்டில்
அலங்காரத்தில் அவள் அழகாய்!அது நாள் மாலை தொடங்கி -ஒரு
சில நாள் வரையில்
அறையில் இல்லை வெளிச்சமும் கூட!மீண்டும் வந்தது வெளிச்சம் ஒரு நாள்
வெளிச்சம் கொண்டு வந்தது அவளா? இல்லை!
வந்தார்கள் அவளின் அண்ணனும் அன்னையும்
வந்த அந்த வெளிச்சம் தொடர்ந்து‘எங்கே அவள்?’எப்படி கேட்பேன்
எப்போதும் பேசி பழகாத நானும்
மெதுவாய் நகர்ந்தது நாட்கள்-மீண்டும்
புதிதாய் வந்த புதுமுகங்கள் வீட்டில் -அங்கே
இளவரசியாய் சென்றவளும் வந்திருந்தாள் ராணியாய்
பழைய புதுமுகங்களொடு சேர்ந்து”
” ‘இளவரசியாய் சென்றவள் ராணியாய் வந்திருந்தாள்!’ எனக்கு இது ரொம்ப பிடிச்சிருந்துச்சி டைட்டில் ஆரம்பிச்சு வரிக்கு வரி metaphor ” வீராவை இடைமறித்து சிலாகித்தாள் கபினி.
“நீங்க சொல்லவேயில்லையா?” என்றதற்கு ஒரு மூச்சு விட்டு கொஞ்சமாய் வீரா புன்னகைத்ததை கபினியால் உணர முடிந்தது.
“எப்படி ஞாபகமா சொல்றீங்க !” என்றாள் கபினி
“அப்படி தான்!” என்று பெரு மூச்சு விட்டு “ஞாபகத்திலேயே தான இருக்கு!” என்ற போது தான் வேறு உலகத்தில் இருந்து தெளிந்து வந்தான் வீரா.
“எப்ப?” கபினி அமைதியாய் கேட்டாள்.
“எழுதினதா?” என்று வீரா கேட்க “அப்படியும் சொல்லலாம்” என்று கபினியின் குரலில் வீராவின் போன் சொன்னது.
“ஆறு மாசம் ஆச்சு! சரி நடந்துக்கிட்டே வீட்டுக்கு வந்துட்டேன்! Bye! இது உங்க நம்பர் தான? save பண்ணிக்கிறேன்” என்று போனை வைக்க போனான் வீரா.
“நான் அதை கேட்கலை. ஓகே! எனக்கும் வேலை இருக்கு அப்பறம் பேசுறேன்” என்று ஃ போனை வைத்தாள் கபினி.
வீரா வீட்டை அடைவதற்கு இன்னும் கொஞ்சம் தூரம் நடக்க வேண்டும். வீரா ஷாராவை தவிர யாரிடமும் போனில் பேசியதில்லை.எந்த பெண்களும் வீராவிடம் பேச வேண்டுமென்று நினைத்து வீராவை தொடர்பு கொண்டதும் இல்லை. கபினி பேசியது வீராவிற்கு புதிய அனுபவமாக இருந்தது. அந்த புதிய அனுபவம் அவனை கொஞ்சம் பழைய நினைவுகளுக்கு அழைத்துச்சென்றது.
நவம்பர் 18, 2013ம் வருஷம்.
வீரா அங்கு வேலைக்குச் சேர்ந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தாலும் கூட அவனுக்கு இன்னமும் கூட அந்த இடம் புதிது தான்.உமா mam தவிர்த்து அங்கு இருந்த எல்லா முகங்களும் புதியது தான். காரணம், உமா கொண்டிருந்த அந்த வட்ட முகமும் நெற்றியும் ஷாராவுடையது. ஆனால், அந்த நெற்றியில் சந்தனம் இல்லை.அத்தனை வருடங்களில், வீராவின் கண்களில் பட்ட ஒரு நெற்றியிலும் அந்த சந்தனம் இல்லை.
வீரா அமர்ந்திருந்த எலக்ட்ரிகல் டிபார்ட்மென்ட் staff ரூமிற்குள்,வானத்தின் நீலமே வேகமாக வந்தது போல் ஒருத்தி வந்தாள். அவள் வந்ததும் அங்கிருந்தவர்களின் கவனம் எல்லாம் அவள் மீது திரும்பியது.வீரா கவனிப்பதற்குள் அவள் கவிதாவிடம் பேச திரும்பினாள்.
“புது சேலையா? ஏற்கனவே blue வச்சிருக்க அப்பறம் என்ன?” என்று கேட்ட கவிதாவிடம் “ஆமா!
இந்தா சாக்லேட் எடுத்துக்கோ; உங்க HOD எங்க?” என்று கவிதாவிடம் ஒரு சாக்லேட் கொடுத்துவிட்டு வீராவின் பக்கம் திரும்பி, “எனக்கு பிறந்தநாள் சார்! சாக்லேட் எடுத்துக்கோங்க” என்று வீராவிடம் அவள் சாக்லேட்டை நீட்டிய பொழுது, வீராவின் கண்களும் கவனமும் ‘என்ன சாக்லேட்’ என்பதில் இருந்தது. இவர் தான் எங்க departmentக்கு வந்திருக்க புது staff என்று கவிதா சொல்லும் பொழுதுசொல்லிக்கொண்டிருக்கும் பொழுதெல்லாம் வீராவிற்கு எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்ட அவள் வீராவைப் பார்த்தாள், அப்போது தான் வீராவும் சாக்லேட்ட்டை வாங்கி மேசையில் வைத்துவிட்டு அவளைப் பார்க்க நிமிர்ந்தான், வீராவின் கவனத்தை முதலில் ஈர்த்தது, அவள் நெற்றியில் இருந்த சின்ன பொட்டும் அதற்கு மேல் இருந்த சந்தனமும் தான். அந்த கவனம் சந்தனத்தில் இருந்து கண்களுக்கு இறங்கி வந்தது.அந்த நொடியில் தான் வீராவும் கபினியை பார்த்தான்.அந்த நொடியில் வீராவின் கண்கள் முழுதும் கபினியின் கண்கள் இருந்தது.கபினியின் கண்கள் முழுதும் வீராவின் கண்கள் இருந்தது.அந்த நொடி அவர்களின் கண்களுக்குள் கரைந்து உறைந்து போனது.
உறைந்து போன அந்த நொடியில் “இப்படி ஒரு பொண்ணு நம்மள லவ் பண்ணா எப்படி இருக்கும்!” என்று வீரா மனதில் ஒரு குரல் ஒலித்த பொழுதே “வாய்ப்பு இல்லை நிச்சயமா யாராவது ஏற்கனவே propose பண்ணி இருப்பாய்ங்க, அதோட அந்த பொண்ணு அவ்வளோ அழகா இருக்கு! அதனால் நிச்சயமா உன்னை லவ் பண்ண வாய்ப்பே இல்லை வாய்ப்பு இல்லை” என்று வீரா நினைத்துக்கொண்டான்.
அன்றிலிருந்து இரண்டு மாதங்கள் வரை அவனோ கபினியோ ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாமல் அவர் அவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்கள். பெரிதும் பேசி பழகியிருக்காத வீராவிடம் தான் கபினி தன் விளையாட்டை காண்பித்து இருந்தாள். வீராவிற்கு அது புது அனுபவமாக இருந்தாலும், எல்லோரிடமும் அவள் பேசுவது போல் இதுவும் கபினியின் இயல்பான நடவடிக்கைகளில் ஒன்று என்று வீராவும் அன்று அதை கடந்து போனான்.ஆனாலும், அந்த கவிதையை அவள் ஏன் இத்தனை சிலாகிக்க வேண்டும் என்று அவன் மனம் அவனுள் கேள்வி எழுப்பியது. அவளும் யாரையாவது காதலித்திருப்பாள் அல்லது காதலித்துக் கொண்டிருப்பாள் என்று அவன்
மனதின் கற்பனைகளை அங்கேயே நிறுத்தினான் வீரா.
சரி!ஆறு மாதத்திற்கு முன் என்ன நடந்தது? வீராவிற்கு உண்மையில் திருமணம் நடந்துவிட்டதா? ஷாரா ஏன் வீராவின் தொடர்பை துண்டித்துக்கொண்டாள்? வீராவிற்கு ஏன் கபினியை பார்த்தவுடன் அப்படி தோன்றியது? கபினி தீடீரென்று ஏன் வீராவிடம் இப்படியெல்லாம் விளையாட வேண்டும்?
keep reading