வருடம் 2006, “என் முஹுர்த்தத்துக்கு என்ன கலர் புடவை கட்டலாம்?” என்று தொலைக்காட்சியில், நடிகை ஜோதிகா எல்லோரையும் கேட்டுக்கொண்டிருந்த வருடம் அது.உலகின் முதல் ஐம்பதாயிரம் கலர் பட்டு புடவையை ஆர்.எம்.கே.வி நிறுவனம் அறிமுகப்படுத்திய வருடம்.
அந்த வருடத்தின் அக்டோபர் மாதம். ஓரிரு தினங்களில் வரப்போகும் தீபாவளியை எதிர்நோக்கி எல்லோரும் உற்சாகமாக இருந்தார்கள்.ஆனால், வீராவின் மனதில்,வரப்போகும் தீபாவளியை நினைத்து பெரிய எதிர்பார்ப்போ உற்சாகமோ ஒன்றும் இருந்திருக்கவில்லை. அன்று வானத்தின் வண்ணங்கள் எல்லாம் மங்கிக்கொண்டிருந்த , மாலை நேரத்தில் மங்கிக்கொண்டிருந்த அந்த அத்தனை வண்ணங்களையும் கட்டம் கட்டி அவள் சுடிதாரில் பூட்டிக்கொண்டு வந்தாள் ஷாரா.
உலகின் முதல் ஐம்பதாயிரம் கலர் பட்டு புடவை விளம்பரத்தைப் பார்த்து, “எப்படியெல்லாம் ஏமாத்துறாய்ங்க” என்று சொல்லி தன் மேதாவித்தனத்தை வெளிக்காட்டிக்கொண்ட வீராவிற்கு இப்போது அந்த கட்டங்களுக்குள் அடங்கியிருந்த அந்த வண்ணங்களும் டிசைனும் அழகாய் தெரிந்தது.
ஆண்களை போன்றே ஆடை அலங்கார விஷயங்களில் ஷாராவிடம் பகீரத பிரயத்தனங்கள் எல்லாம் எப்போதும் வெளிப்பட்டதில்லை. மொத்தமாய் மூன்று வண்ணங்களில் சாதாரணமான ஒரு ஐந்து சுடிதார், அது தான் ஷாராவின் தினசரி. அவள் இப்படி புத்தாடைகள் அணிந்து வருவதெல்லாம் பண்டிகை நாட்கள் போல் வருடத்தில் அரிதாக நடக்கும் நிகழ்வுகள். தினமும் ஷாராவைப் புதிதாக பார்க்கும் வீராவிற்கு, அவள் புத்தாடை அணிந்து வருவது இன்னும் புதிதாக இருந்தது.அந்த உற்சாகத்தில் இருந்து அவன் மீண்டு வருவதற்குள், வீரா அன்று ஷாராவை கண்ட அடுத்த ஒரு மணி நேரத்தில், ஷாரா, வீராவின் வீட்டிற்கே வந்துவிட்டாள். பட்டாசு சத்தங்கள் எல்லாம் கேட்க ஆரம்பித்தது; வீராவின் வீட்டிற்கு ஷாரா வந்தது அது தான் முதல் முறை.
தீபாவளிக்காக காத்துக்கொண்டிருந்த யாரும் பட்டாசுகள் வெடிப்பதற்கு காத்துக்கொண்டிருக்கவில்லை. வீராவோ தீபாவளிக்காக இனி காத்துக்கொண்டிருக்க போவதுமில்லை. This is festival for him! ஷாரா வீட்டிற்கு வந்ததே அவனுக்கு தீபாவளி வந்தது போலத் தான்.அன்று ஷாராவின் maths டியூஷன் முன்னதாகவே முடிந்து, வேறு வேலை நிமித்தமாக ஆசிரியரும் வெளியில் கிளம்பிவிட்டார். ஷாராவை அவள் அண்ணன் வந்து அழைத்துச் செல்ல இன்னும் அரை மணி நேரமாவது ஆகும்.அதுவரை காத்திருப்பதற்காகவே தான் அருகில் இருந்த வீராவின் வீட்டிற்கு வந்தாள் அவள்.
அன்று வரை அவர்கள் இருவரும் அதிகம் பேசிக்கொண்டிருக்கவும் இல்லை. வீராவும் கூட எப்போதும் பேச முற்ப்பட்டதில்லை, ஏன்! அவன் அவள் இருக்கும் திசையை திரும்பி பார்த்ததும் இல்லை.அன்றோ,வீரா தனக்குத்தானே வைத்துக்கொண்டிருந்த அத்தனை கட்டுப்பாடுகளையும் மறந்து போனான்; சுற்றி யார் எல்லாம் இருந்தார்கள் என்கிற எந்த அக்கறையும் அவனுக்கு இல்லை. ஒரு குழந்தை போல் ஆகி, “இங்க பாத்தீங்களா! இது நான் வரைஞ்சது; இங்க பாருங்க! இது நான் எழுதினது” என்று எதை அவள் காதில் வாங்கினாள் ; எதை அவள் கவனித்தாள் என்கிற எந்த சிந்தனையும் இல்லாமல் அவளிடம் ஒரு குழந்தை போன்று பேசிக்கொண்டிருந்தான். வீராவின் வீட்டில் ஷாரா; ஷாராவிடம் பேசிக்கொண்டிருக்கும் வீரா; இது தான்! இது மட்டும் தான்! அந்த நேரத்தில் அவன் கவனத்தில் இருந்தது . அன்று வரை அவளிடம் சொல்வதற்கும் பேசுவதற்கும் என்று வீரா எதையும் திட்டமிட்டு வைத்துக்கொள்ளவில்லை.அவளிடம் பேச வேண்டும் ஆனால், என்ன பேச வேண்டும் என்று தெரியாது. ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான். என்ன பேச வேண்டும் என்பது ஏதும் இல்லாமல் அவன் மட்டுமே அவளிடம் பேசிக்கொண்டே இருந்தான்.இப்படி பேசிக்கொண்டே இருக்க வேண்டும் அவனுக்கு.பேசிக்கொண்டே இருந்த வீரா வேறு ஒரு உலகத்தில் இருந்தான்.நிஜத்தில் அவனைச் சுற்றி இருந்த உலகம் அவன் கவனத்திலேயே இல்லை.
“அக்கா உங்க அண்ணன் வந்துட்டாங்க” என்கிற குரல் கேட்டதும் தான் நிஜ உலகத்திற்கு வந்தான் வீரா. அடுத்த நான்கு நாட்கள் விடுமுறை என்பது அப்போது தான் அவனுக்கு உரைத்தது. தீபாவளி வந்து முடிந்துவிட்டது போல் இருந்தது வீராவிற்கு.ஆனால், வீராவிற்கு தெரியாது, “இனிமேல் ஷாரா அந்த maths டியூஷனுக்கு வரப்போவதில்லை” என்று.அது ஷாராவிற்கும் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அவர்கள் இருவரும், இல்லை! இல்லை! தன்னை மறந்து வீரா ஷாராவிடம் பேசியது அது தான் முதல் முறை. சில வருடங்கள் வரை அது தான் கடைசியாக இருக்க போகிறது என்பதை வீரா உணர்ந்திருக்கவில்லை. அந்த வருடத்தில், அது தான் அவர்களின் கடைசி சந்திப்பாக இருக்கும் என்பதை அவர்கள் இருவருமே அறிந்திருக்கவில்லை.
வருடம் 2019, இன்னும் ஒரு வாரத்தில் வீராவின் திருமணம்.வேலையில் இருந்த வீராவின் மனம் வேலையில் இல்லை. தனித்தீவிற்குள் இருந்த அவனுடைய சைட் ஆபீஸ் இல் இருந்து வெளியில் வந்து கடலுக்கு பக்கமாய் இருந்த வேலிக்கு அருகில் நின்றுகொண்டு ஷாராவிற்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்தான்.
“19ம் தேதி வரை ஊர்ல தான் இருப்பேன். இடையில் எப்போவாவது வர முடியுமா?” வீராவின் திருமணத்திற்கு வர வாய்ப்பில்லை என்று தீர்மானமாக சொல்லிவிட்ட ஷாராவிடம் வீரா கேட்டான்.
அவளிடம் இருந்து பதில் வரவில்லை. “உங்க 3 பேருக்கும் flight டிக்கெட் போடட்டா?” என்று கேட்ட வீராவிற்கும் தெரியும்; நிச்சயமாக அவள் இதை ஏற்றுக்கொண்டு வரப்போவதில்லை என்று. அவள் வர வேண்டும் என்பதில் அவன் எத்தனை தீவிரமாக இருக்கிறான் என்பதை எண்ணி அவள் வந்துவிட மாட்டாளா என்பதற்காக அவன் அதைக் கேட்டான். ஷாராவை அவன் சந்திப்பதற்கு வேறு வாய்ப்பில்லை என்று நினைத்ததால், அவன் திருமணத்திற்கு ஷாரா வர வேண்டும் என்பதில் அவன் அத்தனை தீவிரமாக இருந்தான்.
“இன்னொரு நாள் பார்க்கலாம்” என்றாள் ஷாரா.
“எப்ப?” என்கிற வீராவின் கேள்விக்கு அவளுக்கும் கூட விடை தெரியவில்லை.
“இதை பாத்தீங்களா?!” 2006 ல் அவள் வீட்டிற்கு வந்த போது வீராவிடம் வெளிப்பட்ட அதே குழந்தைத்தனம் ஷாராவிடம் இந்த கேள்வியை கேட்கும் பொழுதும் வெளிப்பட்டது. அவள் என்ன சொல்லப்போகிறாள் என்று வீரா எதிர்பார்துகாத்துக்கொண்டிருந்த பொழுது, “இதை ஏன் எடுத்து வச்சுருக்க?” என்று அவளிடம் இருந்து மெசேஜ் வந்தது.
“எடுத்து வைக்கலை; தூக்கி போடாம வச்சிருக்கேன்!” என்கிற வார்த்தைகளை விரல்களால் தட்டிக்கொண்டிருக்கும் பொழுது வீராவின் புன்னகைகள் கீழே சிந்தி அந்த கடலின் மட்டத்தை அதிகரித்துக்கொண்டிருந்தது.
வீரா : என்னன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா?
ஷாரா: என் எழுத்துன்னு தெரியுது!
வீரா : உங்க maths note. மறுபடி பேசுறப்ப காமிக்கணும் வச்சு இருந்தேன்.
ஷாரா: ம்ம்
வீரா: அப்பப்ப பேசுங்க! நான் பேசி நீங்க பேசலைன்னா நான் உங்களை டிஸ்டர்ப்(disturb) பண்ற மாதிரி இருக்கு
ஷாரா: லீவு நாள் போன் எடுக்க மாட்டேன்! பையனோடவே நேரம் போகிடும்.மத்த நாள் அவனுக்கு நேரம் அதிகம் ஸ்பென்ட் பண்ண முடியறதில்லை.
“உங்களுக்கு இன்னொன்னு அனுப்பட்டா?” என்று வீரா கேட்டதற்கு ஷாரா “ம்” என்று அனுப்பியது தான் தாமதம். வீரா வரைந்து வைத்திருந்த ஷாராவின் ஓவியத்தை அவளுக்கு அனுப்பிவைத்தான்.
“ஹா ஹா” “nice” என்று ஷாரா பதில் அனுப்பினாள்.
அவளும் கூட வேகமாய்,இங்க பாத்தீயா! நான் வரைஞ்சது என்பது போல் அவள் வரைந்த ஓவியங்களையெல்லாம் அவனுக்கு அனுப்பிவைத்தாள். அவளாக அவனிடம் அவள் வரைந்த ஓவியங்களை காட்ட முற்பட்டது அவனை மகிழ்ச்சியில் மூழ்கடித்தது.அங்கே அந்த தருணத்தில் அவளும் கூட குழந்தையாகி போனதை உணர்ந்த வீராவின் மகிழ்ச்சி அளவில்லாமல் கூடிக்கொண்டே போனது.உண்மையில் அந்த தருணத்தில் இருவருமே குழந்தைகளாகி போனார்கள்.
அவன் இழுத்த மூச்சு காற்றை அவனால் வெளிவிட முடியவில்லை. வேலியை பற்றிக்கொண்டு ஆடும் அலைகள் கண்ட அவன் மனம் அதிலே மிதந்து கொண்டிருந்தது.
“மொத்த காற்றையும் மூச்சாய் இழுத்து
இழுத்த காற்றை உள்ளே நிறுத்தி
நொடியில் பொழிந்து
நினைவில் விரிந்த
மகிழ்ச்சி கடலதில்
மூழ்க துடித்து மிதந்த போதையில்
என்னை நானே பூட்டிக் கொண்டேன்
இன்னும் வேண்டும் இது போதாதென்று”
தீடிரென்று ஒரு மழை பொழிந்து நொடியில் கடல் போல் பெருகி நின்றால் எப்படி இருக்கும்! அப்படி தான் இருந்தது, வீரா அந்த தருணத்தில் அடைந்த அந்த மகிழ்ச்சி.அந்த மகிழ்ச்சி கடலில் அவன் மூழ்க துடித்தும்,மகிழ்ச்சியில் அவன் இழுத்த மூச்சுக்காற்று உள்ளேயே நிற்க; மூழ்க முடியாமல் அவன் மிதந்த அந்த தருணத்தை அவன் மனம் கவிதையாய் பிரதி எடுத்துக்கொண்டிருந்தது.
ஷாராவும் பார்க்கும் படி அவன் வலைப்பக்கத்தில் அந்த கவிதையை பதிவு செய்தான் , அவளோ பார்த்ததாக காட்டிக்கொள்ளவில்லை.அவர்களின் அந்த உரையாடல் தொடர்ந்தது.
வீரா: ரொம்ப வருஷம் காத்துட்டு இருந்தேன்
ஷாரா: எதுக்கு?
வீரா: நான் வரைஞ்ச உங்க படத்தை உங்களுக்கு காட்றதுக்கு
ஷாரா: ம்ம்
வீரா: நீங்க மெசேஜ் ல சில நேரம் கேள்வி கேட்கிறது என்னை மிரட்டுற மாதிரி இருக்கு. என்ன மாடுலேஷன் ல எதுக்கு ன்னு கேட்டீங்க ன்னு தெரில
ஷாரா: சாதாரணமா தான் கேட்டேன். நீ என்கிட்ட பயந்து தயங்கி பேசுறதால உனக்கு அப்படி தோனுது.
அவள் தன்னை புரிந்தும் கூட வைத்திருக்கிறாள் என்று நினைத்த வீராவின் கால்கள் தரையில் இல்லை. வானம் தாண்டி பறந்து கொண்டிருந்தான் அவன்.
வீரா: உங்கள்ட்ட பேசவே பயமா இருக்கு! நான் எதாவது பேசி; நீங்க எதாவது தப்பா எடுத்துகிட்டு பேசாம இருந்துருவீங்களோ ன்னு.
ஷாரா: பயப்படாதா பேசாமெலாம் இருக்க மாட்டேன்.
இதை 2011 லையும் சொல்லிருக்கீங்க என்று வீராவிற்கு சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால், அவன் அதைச் சொல்லவில்லை.
வீரா: உங்க முகம் நிறைய மாறிடுச்சு. ஆனா! நான் வரைஞ்சதுல இருக்க கண்ணு மட்டும் அப்படியே இருக்கு. மூக்கு வாய் எல்லாம் சரியா வரைய வரல.
ஷாரா: YES
கண்களை கடைசியாக தான் வரைவார்கள். வீரா அந்த நெற்றியை வரைந்து முடித்தவுடன் கண்களை வரைந்துவிட்டான். அவ்வளவு தான்! அவ்வளவே தான்!அவன் கண்ணில் அந்த நெற்றியும் சந்தனமும் அந்த கண்களும் தான் ஷாரா. “ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது; உற்று பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது” என்பது போல் அவன் வரைந்திருந்த அந்த ஓவியத்தில் அவள் நெற்றியும் அதிலிருந்த சந்தனமும் அவளின் கண்களையும் தாண்டி எதுவும் சரியாக அமையவில்லை.அவன் பார்த்தது அது மட்டும் தான்.
வீரா: என்ன ஸ்பெஷல் ஒன்(special one) எல்லாம் சொல்லிருக்கீங்க. ஞாபகம் இருக்கா?
ஷாரா: இல்லையே சார்!
வீரா: அன்னிக்கு பேசும் போதே தெரிஞ்சுச்சு எதுவும் உங்களுக்கு ஞாபகம் இல்ல ன்னு (ஷாரா என்கிற பெயரே அவளுக்கு ஞாபகம் இல்லை என்கிற பொழுது அவனிடம் பேசிய எதுவும் அவளுக்கு ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்து வீரா இதைச் சொன்னான்)
வீரா:ஒரு ஹெல்ப்(help) கேட்டேன் ல என்னன்னு கேட்டீங்களா?
ஷாரா: என்ன
வீரா: எப்பவும் டச் லேயே இருங்க, நம்பர் மாத்துனா சொல்லுங்க.
ஷாரா: கண்டிப்பா
வீரா: என் இன்விடேஷனுக்கு நீங்க பதில் அனுப்பாம இருந்திருந்தா உங்க maths டீச்சர்ன்னு, யார் மூலவமாவது தேடி வந்திருப்பேன். ஒரு regret இருந்துகிட்டே இருந்துச்சு நெறைய பேசனும் நிறைய கேட்கனும் ன்னு அதுல பாதி பேசிட்டேன் பாதி கேட்டுட்டேன். ஆனா என் எல்லா கேள்விக்கும் பதில் கிடைக்கபோறதில்லை ன்னு தெரியுது
கடைசியாக “அந்த புக் வாசிச்சீங்களா?” என்று வீரா அனுப்பிய மெசேஜ் க்கு பதில் வரவில்லை.
“கிழித்துப்போட்ட தேதித் தாள்களை எடுத்து ஒட்ட வைத்தால்
மீண்டும் வருமா?
“யாரையோ நீ காதலிப்பது போல் தெரிகிறதே” என்று என்னை நீ கேட்ட அந்த நாள்
கடிகார முட்களை பின்னே சுழல செய்தால் மீண்டும் வருமா?
நீயாக என்னை தொலைபேசியில் அழைத்து பேசிய அந்த நிமிடங்கள்
அலமாரியில் விரிக்கப்பட்டிருக்கும் பழைய காலண்டரின் தாள்கள்களை
எடுத்து ஒன்று சேர்த்தால் மீண்டும் வருமா?
நீ என்னுடன் பேசிக்கொண்டிருந்த அந்த மாதங்கள்
என் கைபேசி காட்டும் நேரத்தை மாற்றி அமைத்தால்
மீண்டும் வருமா?
நாம் குறுந்தகவல்கள் பரிமாறிக்கொண்ட அந்த தருணங்கள்
பொம்மைகதைகளில் காட்டுவது போல் மந்திர ஜாலங்கள் செய்தால்
மீண்டும் வருமா?
என்னைப்பார்ப்பதற்காக நீ என் வீட்டிற்கு வந்த அந்த நாள்
இதில் ஏதேனும் ஒன்று மீண்டும் வந்தால்
பேசிவிட வேண்டும் நான் உன்னிடம் பேச நினைத்தெல்லாம்”
2012இல் வீரா எழுதிய கவிதை, கிழித்துப்போட்ட தேதித்தாள்களை ஒட்ட வைக்காமலேயே அவர்கள் பேசும் நாட்கள் வந்தது.ஷாராவிற்கு வீரா அனுப்பிய புத்தகத்தில் இருந்த இந்த கவிதையை வீரா வாசித்த முடித்த பொழுது, “கால் வாசி வாசிச்சேன் நல்லா இருந்தது” என்று ஷாராவிடம் இருந்து பதில் வந்தது. அவன் பேச நினைத்தது; கேட்க நினைத்தது; என்று கொஞ்சம் கொஞ்சமாக அவன் மனதில் இருந்ததையெல்லாம் பேசிக்கொண்டிருந்தான். அதே வேளையில், அவன் மனதில் இருந்த எல்லா கேள்விகளுக்கும் அவனுக்கு பதில் கிடைக்கப்போவதில்லை என்பதையும் உணர்ந்துகொண்டிருந்தான்
கால்வாசி படித்தேன் என்று அவள் சொன்னதும். எல்லாம் வாசிச்சுட்டு சொல்லுங்க என்றான். “அவள் எதுவரை படித்திருப்பாள்? ‘கண்ணாடியின் காதல்’ கவிதையை படித்திருப்பாளா? அவள் சோகம் எண்ணி எழுதிய ‘மகளின் தேடல்’ படித்திருப்பாளா?” என்றெல்லாம் நினைத்துக்கொண்டு, எது அந்த கால்வாசியாக இருக்கும் என்று அவன் எழுதிய அந்த கவிதை தொகுப்பை திறந்தான்; ஷாராவிடம் வாசிச்சுட்டு சொல்லுங்க என்று அவன் அனுப்பிய செய்திக்கு, ‘சரி’ என்று அவள் பதில் அனுப்பவும் தொடர்ந்து அவளிடம் பேசினான்.
அவன் அன்று வரை எழுதியிருந்த கவிதைகளில் எழுபது சதவீத கவிதைகள் எல்லாம் ஷாராவிற்காக மட்டுமே எழுதியது. அதை அவளிடம் பேசும் பொழுது காட்ட வேண்டும் என்பதற்காகவே அவளுக்காக எழுதியது என்று சொல்லாமல் அனுப்பி வைத்தான். ஆனால், அந்த தொகுப்பில் இருந்த அத்தனை கவிதைகளும் ஷாராவிற்காக எழுதப்பட்டது இல்லை.அப்படி அத்தனையும் ஷாராவிற்காக மட்டுமே எழுதப்பட்டிருந்தால் தயங்காமல் சொல்லியிருப்பான் உங்களுக்காகவே எழுதியது என்று.
வேறு யாருக்காக அவன் காதல் கவிதைகள் எழுதி வைத்தான். எல்லாமே காதல் கவிதைகள் என்றாலும் பொதுவாக எல்லாம் உங்களுக்கு எழுதியது என்று சொல்ல முடியாத அளவில் ஷாராவிற்காக எழுதப்படாத கவிதைகளில் என்ன இருந்தது. காதலில் என்ன பெரிய வித்தியாசம். தொடர்ந்து படியுங்கள்.