அன்று வீராவிற்கு ஒரு வேலையும் இல்லை. இருந்தாலும் அவனுக்கு ஒரு வேலையும் ஓடியிருக்காது. காரணம்,அன்று தான் ஷாரா ஜெர்மனி கிளம்புவதாக இருந்தது. எல்லா சனிக்கிழமைகளும் ஞாயிற்றுக்கிழமைகளும் வீராவின் விடுமுறை நாட்கள் தான். ஆனாலும் அந்த சனிக்கிழமை, வீராவிற்கு நான்கு மணிக்கெல்லாம் தூக்கம் கலைந்து விட்டது. அவன் இருக்கும் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் உள்ள நேர வித்தியாசங்களை கணக்கிட்டு, எத்தனை மணிக்கு அவளுடைய விமானம். எப்போது அவள் விமானம் நிலையம் செல்வாள் என்றெல்லாம் சிந்தித்துக்கொண்டிருந்தான்.
“Good Morning! Have a Nice Trip” இந்த மெசேஜை இந்த நாளில் அனுப்ப இத்தனை நாள் காத்துக்கொண்டிருந்தது அவனுடைய விரல்களும் அவனுடைய ஃபோனும்.
சில நிமிடங்கள் கழித்து , “செக்-இன் முடிஞ்சுச்சா?” என்றான், முடியவில்லையென்றாலும் கூட அவன் என்ன செய்து விட போகிறான். முதல் முறையாக அவன் விமானம் நிலையம் சென்ற பொழுதில் கூட அவனுள் இத்தனை பரபரப்பு இருந்திருக்காது.ஷாராவிற்கும் வீராவிற்கும் இடையில் தோராயமாக மூவாயிரம் கிலோமீட்டர்கள் அளவில் இருக்கும் இடைவெளி இந்த மூன்று வாரங்கள் பத்தாயிரம் கிலோமீட்டர்களாக இருக்க போகிறது.
“Yes Done! waiting for flight” வீராவின் கேள்விக்கு ஷாராவிடம் இருந்து பதில் வந்தது.
“அந்த ஊர்ல சீக்கிரமே விடிஞ்சுரும்;long trip வேற என் கவிதை கதையெல்லாம் அப்ப படிங்க” கொஞ்சம் விளையாட்டாக வீரா வைத்த அந்த வேண்டுகோளுக்கு ஒரு பதிலும் வரவில்லை.
சில நிமிடங்கள் கழித்து, “Bye Dears!” விமானத்திற்குள் இருந்த புகைப்படத்தை எல்லோரும் பார்க்கும் படியாய் பதிவிட்டு இருந்தாள் ஷாரா.
பொம்மைகள் எப்போதும் பேசுவதேயில்லை, பொம்மைகளுக்கும் சேர்த்து குழந்தைகளே தான் பேசும். எல்லோரும் பார்க்கும் படியாக இருந்த அந்த “Bye” மெசேஜ் வீராவிற்கு மட்டுமானதாக வீரா எடுத்துக்கொண்டான்.
விமானம் கிளம்பும் நேரமானது.விமானத்தின் சக்கரங்கள் மெதுவாக சூழல் ஆரம்பித்தது.விமானம் மெதுவாக நகரத் தொடங்கியது.
“F….L…I…G..H..T.. R..A” போனை திறந்து வேகமாக இந்த எழுத்துக்களை தட்டினான் வீரா, “Flight Radar 24” என்கிற அப்ளிகேஷனை காட்டியது வீராவின் போன். வேகமாக அதை திறந்தான். ஷாரா கிளம்பும் விமானத்தை அதில் தேடினான். விமானம் கிளம்பியது. பார்த்துக்கொண்டே இருந்தான் வீரா.விமானம் மட்டும் இல்லை. வீராவும் பறந்துகொண்டிருந்தான். கையில் போனை வைத்து அந்த விமானத்தை பார்த்துக்கொண்டிருந்த வீராவின் மூளை மடிப்புகளுக்குள் வீராவின் குரல் கேட்டது , “வானத்தில் அவள்; தரையில் நான், தரை தொடாமல்”
வானத்தில் அவள்!
தரையில் நான்
தரை தொடாமல்
அரபிக்கடலின் வான்பரப்பில் அந்த விமானம் பறந்துகொண்டிருந்தது.”அவள் செல்லும் இந்த விமானத்தை தேடி இந்த அலைகளும் கூட துள்ளுமோ!” வீராவிற்குள் இருந்து வீராவே வீராவிடம் கேட்டான்.
எத்தனை அலைகள் இந்த கடலில்
அவள் பறக்கும் விமானம் கண்டு
அத்தனையும் எத்தனித்தது
எட்டாத விமானம் அதை
எட்டி பிடித்து விட;
எட்டாத விமானம் அது
எட்டாமல் பறந்து போக
கடலோடு கடலாய்
துடித்ததந்த அலைகள்
கடலின் அலைகளாய்!
அலைகளை விட்டு தூரமாக விமானம் சென்றது போல தான், இந்த பொம்மை காதலும்.
அந்த அப்ளிகேஷனை வீரா மூடவில்லை.வீராவின் அந்த சின்ன ஃபோனுக்குள் ஷாரா கடல் தாண்டி பறந்துகொண்டிருந்தாள்.
நாடுகளுக்கிடையே இருக்கும் நேர வித்தியாசங்கள் எப்போதும் மனிதர்களை தூரமாக்கி விடுவதுண்டு, உறவுகளிடமிருந்தும் நண்பர்களிடம் இருந்தும் இரண்டு மணி நேர வித்தியாசத்தில் இருக்கும் வீராவிற்கு இந்த நேர வித்யாசங்கள் தந்த அனுபவம், இந்த மூன்று வாரங்களில் ஒரு நாளேனும் , ஷாரா அவனிடம் பேச வாய்ப்பிருக்கின்றது என்று அவனை நம்பச் செய்தது. செயலில்லா பொம்மைகளும் கூட சாப்பிடுவதாகவும் தூங்குவதாகவும் நம்பிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் நம்பிக்கைக்கு ஒப்பானது தான் இதுவும்.
விடிந்தும், அவளுக்கு விடியும் வரை காத்திருந்தான் வீரா.”எனக்கு முன் விழிக்கும் என் பொழுது இன்று நீ விழிக்கும் வரை விடியவில்லை இன்னும் என்று சொல்லி துங்குதடி” வீரா முன்னம் எழுதிய கவிதை ஒன்றை அவன் மூளைக்குள் அவன் குரல் வாசித்தது. 2011இல் விடுமுறை நாட்களில் வீரா ஆறு மணிக்கு அனுப்பும் குட் மார்னிங் பத்து மணிக்கு தான் திரும்ப வரும். அதை நினைத்து அவன் எழுதிய கவிதை. இந்த முறை அந்த குட் மார்னிங் திரும்பி வரவில்லை.
“எங்க ஊரு ஏர்போர்ட்டை நாங்க செய்தில தினம் பார்க்கிறோம் உங்க ஊர் ஏர்போர்ட்டை காமிக்கலாம்ல? ” அடுத்த மெசஜை அனுப்பினான் வீரா. இந்த மெசேஜை பார்த்த ஷாரா, வானத்தில் இருந்து அவள் பிடித்து வைத்துக்கொண்ட வானத்தையும் மேகங்களையும் சூரியனையும் வீராவிற்கு அனுப்பி வைத்தாள்.இப்போது ஷாரா பிடித்த வானமும் மேகமும் வீராவின் கையிலும் கண்களிலும் இருந்தது.
வீராவின் மன வெளியில் தூங்கிக்கொண்டிருந்த பத்து வீராக்களும் எழுந்தார்கள், அந்த பத்து வீராக்களும் கூடி வீராவின் இரண்டு கண்கள் வழியாக அவள் பிடித்த வானத்தைப் பார்த்தார்கள். அந்த பத்து வீராக்களில் ஒருவன் ஆரம்பித்தான்,”வானெல்லாம் நுரைகள்; தன்மையாய்..முகம் கழுவி நின்றானோ சூரியன்! அவள் வானேறி வருகிறாள் என்று”
வானெல்லாம் நுரைகள்
தன்மையாய்
முகம் கழுவி நின்றானோ சூரியன்-அவள்
வானேறி வருகிறாள் என்று.
வீராவின் விரல்கள் அடுத்த அடுத்த புகைப்படங்களை நகர்த்திக்கொண்டிருந்தது. இன்னொரு வீரா ஆரம்பித்தான், “நீலம் அள்ளி பூசிக்கொண்டது வானம்; அவள் வரும் விமானம் கண்டு”
“நீலம் அள்ளி பூசிக்கொண்டது வானம்;
அவள் வரும் விமானம் கண்டு”
ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஒவ்வொரு வீராக்கள், கவிதை சொன்னார்கள்.ஜெர்மனியில் ஷாராவின் முதல் நாள் வீராவிற்கு இப்படித்தான் கழிந்தது.
சாப்பாடு எப்படி? வேலை எவ்வளவு நேரம்? இந்த சாப்பாடு போதுமா? இந்த நல விசாரிப்புக்களுக்கும் கூட தாமதாகவும் சிக்கனமாகவுமே தான் வீராவிற்கு பதில்கள் வந்தது.
பொம்மைகளிடம் எப்போதும் எந்த மாற்றங்களும் இருப்பதில்லை; குழந்தைகளின் மனமாற்றங்களே தான் பொம்மையின் மாற்றங்களாக குழந்தைகள் எடுத்துக்கொள்ளும். ஷாராவிடம் எந்த மாற்றமும் இல்லை. ஜெர்மனி செல்வதைப் பற்றி அவளாக சொன்னதை நினைத்து பெரு மகிழ்ச்சி கொண்ட வீரா, ஷாராவிற்கு நம்மிடம் பேசுவதில் எந்த பிரச்சனையோ தயக்கமோ இல்லை என்று நினைத்தான். எப்போதும் போல, அவள் இப்போதும் அதிகம் பேசவில்லை.இப்படியே சில நாட்கள் கடந்தது.
வீரா கிடைக்கும் நேரங்களில் எல்லாம் மணி பார்த்துக்கொண்டிருந்தான்.
“எப்படியும் வேலை முடிச்சுட்டு வரும் பொழுது இந்தியா எல்லோரும் தூங்கிடுவாங்க! வேலை இல்லாம தனியாக இருக்கப்ப யார்கிட்டையாவது பேச தோணாது; போர் அடிக்காதா?” நாடுகளுக்கிடையே இருக்கும் நேர வித்தியாசம் வீராவிற்கு தனிமையை தந்தது போல ஷாராவையும் கூட இந்த நாட்களில் அது பாதிக்கலாம் என்று எண்ணினான் வீரா. வீராவின் மனமெல்லாம் இப்படியான சிந்தனைகள் ஆக்கிரமித்து இருந்தது, இந்த எண்ணங்கள் தான் அவள், அவனிடம் இந்த மூன்று வாரங்களில் ஒரு நாளேனும் பேசுவாள் என்று அவனை நினைக்கவும் வைத்தது.
இப்படி எண்ணங்களோடு திரிந்த வீராவை அந்த நாளில்,பணியிடத்தில் நடந்த ஒரு சிறிய சம்பவம் மிகவும் பாதித்தது.
அந்த பாதிப்பில் இருந்து மீள, பொடி டப்பா அளவில் இருக்கும் அந்த ப்ளூடூத் ஹெட் செட் இருக்கும் பெட்டியை திறந்தான், ‘pairing’ என்று ஒலித்தது. ஹெட் செட்டை விரல்கள் கொண்டு எடுத்த வேகத்தில் காதில் மாட்டியிருந்தான்.
அதன் பின், அந்த விரல்கள் youtube window ஐ scroll செய்து கொண்டு இருந்தது. அவன் அந்த பாதிப்பில் இருந்து தன்னை வெளிக்கொண்டு வர முயற்சி செய்துகொண்டு இருந்தான். எதாவது பாட்டு கேக்கணும். உடனே! ஆனா என்ன பாட்டு கேட்பது என்று தெரியவில்லை. சில பாடல்கள் ஒலித்து கொண்டு இருந்தும், அவன் மனம், அன்று பணியிடத்தில் நடந்த நிகழ்வில் இருந்து வெளிவரவில்லை.
மொத்தமாக ஒரு பத்தில் இருந்து நூறு வயலின் நரம்புகளில் இருந்து ஒரே நேரத்தில் பின்னணி இசை ஒலிக்க அந்த இசையோடு வரும் பாடல்களை அவன் அதிகம் ரசிப்பதுண்டு.
“ம்ம்! அந்த பாட்டு கேட்கலாம்!” அந்த பாடலில், ஒரே ஒரு வரி மட்டுமே அவன் மனதில் எப்போதும் ஒட்டிக்கொண்டு இருக்கும்; இப்போதும் அது ஒட்டிக்கொண்டு இருக்கின்றது.
பாடல் ஒலிக்க ஆரம்பித்தது, அவன் மனம் இப்போது பாடலில் லயிக்கவில்லை. அந்த நாளில் பணியிடத்தில் நடந்த பிரச்சன்னைப்பற்றியும் யோசிக்கவில்லை.
அவன் மனம் முழுதும் அந்த ஒரு வரி மட்டுமே தான் ஆக்கிரமித்து இருந்தது.
“மேகம் போலே என் வானில் வந்தவளே!”
அந்த பாடலில், அதற்கு அடுத்து என்ன வரி என்பதும் கூட அவனுக்கு தெரியாது.காருக்குள் இருந்த படி அவனும் காருக்கு வெளியில் சூரியனும் மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தார்கள்.
அன்று காலையில் அவன் அவளுக்கு அனுப்பிய, ‘Good Night’ பற்றி சிந்திக்க தொடங்கிவிட்டான்.Sentimentally அந்த ‘Good night’ ஐ அவளுக்கு அனுப்புவதில் அவனுக்கு எப்போதும் ஒரு தயக்கம் இருக்கவே செய்தது. முன்பொரு முறை பேச்சைத் தொடங்க அவன் அனுப்பிய, “HI” மெசேஜ்க்கு, பேச்சை வெட்டிவிடுவது போல் அவள் அனுப்பிய குட் நைட் தான். அந்த தயக்கத்திற்கு காரணம். 2011இல் அந்த குட் நைட்க்கு அப்புறம் தான் வீராவிடம் பேசுவதை ஷாரா நிறுத்திக்கொண்டாள்.
வீராவின் வாழ்க்கையில் அவன் எதிர்பார்க்காத நேரங்களில் வந்து அவனை மகிழ்ச்சியில் நனைத்து அவன் எதிர்பார்க்கும் நேரங்களில் மறைந்து கொள்ளும் மேகமாவே இருந்தாள் ஷாரா.அந்த மேகத்திற்கு காலையில் அவன் அனுப்பிய ‘Good Night’ பற்றித் தான் அவன் யோசித்து கொண்டு இருந்தான்.
பூமி பந்தில் அவன் நின்று கொண்டிருந்த தீர்க்கரேகையில் (longitude) இருந்து 91 டிகிரி தள்ளி இருக்கும் தீர்க்கரேகையில் அவள் உறங்கிக்கொண்டு இருந்தாள். அவள் அந்த இடத்தை அடைந்தது முதல், அவனுக்கு நேரம் கிடைத்த பொழுதெல்லாம் இப்ப அங்க என்ன நேரம் என்று கூகுளை கேட்பது அவன் வழக்கமாகி போனது. அவள் அங்கே சென்ற பின் அவளுக்கு அனுப்பிய மெசேஜ்கள் deliver ஆக தாமதமாவது வழக்கமாக இருந்ததால், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நேரம் பார்த்துக்கொண்டு இருந்தான்.
அந்த நாளில் அவன் எழுந்து வேலைக்கு கிளம்புவதற்கு இரண்டு மணி நேரம் இருந்த சமயத்தில் ஒரு வழியாக message deliver ஆனது. அவள் பதில் அனுப்பிய பொழுது கிட்டத்தட்ட இவன் பக்கம் விடிந்து விட்டது.
“இனி தூங்க போகும் பொழுது எனக்கு ஒரு குட் மார்னிங் அனுப்புங்க” வீரா அனுப்பிய மெசேஜை பார்த்த மாத்திரத்தில் ஒரு குட் மார்னிங் அனுப்பிவைத்தாள் ஷாரா. தொடங்காத பேச்சை முடிக்க முன்பு அவள் அனுப்பிய குட் நைட்க்கு சற்றும் மறுபாடில்லாதது இந்த குட் மார்னிங்.ஆனாலும், வந்த அந்த ‘குட் மார்னிங்’ அவனை பரவசப்படுத்தாமல் இல்லை.
அந்த குட் மார்னிங்கை பார்த்த கண்ணோடு கிளம்பி வெளியே வந்த வீரா, எப்போதும் போல் அந்த மரங்களைப் பார்க்கிறான், வானத்தைப் பார்க்கிறான், மேற்கே நகர்ந்து கொண்டிருக்கும் நிலவைப் பார்க்கிறான். தினமும் அவன் இதையெல்லாம் பார்க்கும் பொழுது ஒரு பக்தி இருக்கும், அந்த மரம் வானம் நிலா எல்லாம் அவனுக்கு கடவுள். ஆனால், அன்று அந்த பக்தி இல்லை ; அன்று அவை எல்லாம் அவனுடைய அந்த பரவசநிலையை கவிதைகளாக்க கிடைத்த பிடிப்புகள்.நடந்து செல்லும் பொழுது அவன் மனதில் கவிதைகள் கொட்டிக்கொண்டு இருந்தது.
‘கூடு திரும்பும் நிலா ஒன்று
‘குட் மார்னிங்’ சொல்ல
விடிந்தது என் பக்கமாய்’
மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலா அவனுக்கு ‘Good morning’ சொன்னால் எப்படி இருக்கும்!தமிழ்நாட்டில் இன்னும் விடியவில்லை அந்த குட் மார்னிங்கோடு அவன் பக்கம் விடிந்தது வானம்.
நிலவும் சூரியனும் போல் பூமி பந்தின் ஒரு மூலையில் இவனும் எதிர்மூலையில் அவளும் இருக்க இவர்களின் அந்த உரையாடலோடு அந்த நாள் தொடங்கியது.வீராவிற்குள் இருந்த வீராவின் குரல் ஒன்று நடந்துகொண்டிருந்த வீராவின் காதில் அவன் நிலைகளை கவிதைகளாய் சொல்லிக்கொண்டிருந்தது.
ஒரு பக்கம் ஞாயிறு
எதிர்ப்பக்கம் நிலா
இந்த சந்திப்பில்
பிறந்தது என் நாள்
“பேச தொடங்கும் பொழுதே அத்தனை மகிழ்ச்சியோடு தானே நாம் பேச தொடங்குகிறோம் ஆனால், வெறுப்பும் இல்லாமல் கோபமும் இல்லாமல் எப்போதும் போல் ஒதுக்குகிறாள், பேச கூட கூடாதா?” என்கிற எண்ணம் அவனுக்கு. அடுத்த கவிதை அவனுக்குள் ஒலிக்கிறது.
“சிரித்துக்கொண்டே தான் வருகிறான் ஒரு சூரியன்
முறைக்காமல் ஒளிந்து கொள்கிறது நிலவு”
காலையில் எத்தனை தன்மையாய் இருக்கிறது இந்த சூரியன். ஆனால், அந்த சூரியன் வந்த மாத்திரத்தில் ஒளிந்து கொள்கிறது நிலா. அந்த கவிதையில் மறைந்து என்கிற வார்த்தை வர வேண்டாம் என்று அவன் மனம் சொல்கிறது.நிலவிடம் பேசுவதற்காகவே அத்தனை தன்மையாய் வருமோ இந்த சூரியன்!
கல்லூரி காலத்தில்,அவள் இந்த பக்கமாக தான், கல்லூரிக்கு செல்வாள் என்று நினைத்துக்கொண்டு அதற்கு எதிர்ப்பக்கம் நின்று அவளை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தான். இப்படியாகவே அவர்கள் வாழ்க்கையில் இவனை ஒரு முனையில் வைத்து அவளை மறுமுனையிலேயே வைத்திருந்தது விதி.There can be no nodes of parallel and opposite lanes.
கிழக்கே சூரியன்
மேற்கில் நிலா
மேற்கில் சூரியன்
கிழக்கில் நிலா
விதி!
அது எழுதாமல் விட்ட கதை
என் கவிதைகள் சொன்ன கதை
சூரியன் கிழக்கில் இருந்தால் இந்த நிலா மேற்கில் இருக்கிறது, அவன் மேற்கில் இருக்கும் பொழுது நிலா கிழக்கே வந்துவிடுகிறது.விருப்பும் இல்லை வெறுப்பும் இல்லை. சூரியனுக்கும் நிலவிற்கும் இடையில் காதலும் இல்லை நட்பும் இல்லை. இது ஒரு விதி. இது இப்படித்தான் இருக்கும்.
நடந்து , train எடுத்து, office car ஏறி நடக்கும் பொழுது அவனுக்குள் தோன்றிய எண்ணங்கள் எல்லாம் கவிதைகளாகவே தான் அவனுக்கு ஒலித்துக்கொண்டிருந்தது.அந்த கவிதைகளை எழுதி வைத்துக்கொண்டு, வேலைக்கும் வந்து சேர்ந்து விட்டான், clock-in machine இல் அவன் கை ரேகை வைத்த பொழுது மணி 07:54, எட்டு மணி ஆக போகிறது, அவள் பக்கம் ஒரு மணி தான் ஆகிறது.
இந்த கடிகாரத்தில், ஒரு முனையில் இருக்கும் இந்த ஒன்றும் (1) மறுமுனையில் இருக்கும் இந்த எட்டும்(8) என்ன நடந்தாலும் எந்த வகையிலும் சேர்ந்திருந்திருக்காது தானே! அவன் எண்ணங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
“It would never have worked between us darling!” அவனுக்கு பிடிச்ச “Pirates of Caribbean ” திரைப்படத்தில் வரும் காட்சியில் வரும் வசனம் அவன் நினைவிற்கு வருகிறது.
“நமக்குள் காதல் என்கிற ஒன்று சாத்தியப்பட்டு இருக்காது. ஆனால், ஒரு நல்ல நட்பு வளர்ந்திருக்கலாம். ஆனால் அதுவும் கூட சாத்தியப்படாமல் போய்விட்டது ” என்று அவன் மனதில் நினைத்தது அவளுக்கு கேட்டு இருக்குமா தெரியாது. அவளிடம் சொல்ல வேண்டுமே!அதையும் எழுதினான்.
சின்ன முள்ளும்
பெரிய முள்ளும்
பாலாமாய் நின்றும்
தூராமாகவே நின்றது
‘அ’ன்றும் ஒன்றும்
என்றும் இணைவதில்லை
காலத்தில் முன்னும் பின்னும்
(தமிழில் ‘அ’ என்றால் எட்டு.)
“என்ன நடந்திருந்தாலும், It would never have worked between us” அவள் பேசுவாள் என்கிற எதிர்பார்ப்பில் இருந்து எப்போதும் அவள் பேசவேயில்லை என்கிற ஏமாற்றம் தான் ஓயாத எண்ணங்களாக அவனுள் பொங்கிக்கொண்டிருந்தது.
” It would never have worked between us என்று நீயே சமாதானம் சொல்ற அவள் உன்னை விட்டு தூரம் சென்றும் ரொம்ப நாள் ஆகிடுச்சு அப்பறம் இன்னும் ஏன் பேசனும்? ” அவனை அவனே கேட்டுக்கொண்டான்.
வீரா வீராவிடமே பேசிக்கொண்டிருந்தான், “from the beginning, until today தப்பான எந்த எண்ணமும் இல்லை. பேசுறதே எனக்கு சந்தோசமா இருக்கு! தப்பா ஒரு எண்ணம் அங்க இருந்தா நிச்சயமா இந்த சந்தோசம் இருக்காது. நான் எதுவும் தப்பும் பண்ணலை தப்பா பேசவும் இல்லை, இதெல்லாம் விட, பேசாமல் இருந்த காலத்தில மறுபடி பேசனும்னு தேடிட்டு இருந்த என்னால பேசாம இருக்க முடியல மறுபடி ஒரு stranger ஆக கூடாது ன்னு ஒரு பயம் இருக்கு”
இந்த எண்ணங்கள் எல்லாம் வீராவிற்கு ஒன்றும் புதிதில்லை. கொஞ்ச நாள் அவள் பேசாமல் இருந்துவிட்டாலோ அல்லது இவனே பேசாமல் இருந்துவிடலாம் என்று இருந்துவிட்டாலோ அவனுக்கு இந்த சிந்தனைகளெல்லாம் வந்துவிடும். அன்றும் அந்த பாட்டு கேட்டு கொண்டிருந்த பொழுது இந்த எண்ணங்களெல்லாம் அலை மோதியது.
அன்று அந்த ‘good morning’ க்கு பிறகு அவள் ஒன்றும் பேசவில்லை. தூங்க செல்லும் முன் அவனுக்கு ஒரு குட் monring அனுப்ப சொன்னதை நினைவுப்படுத்தவே, sentiment பயங்களை தாண்டி good night அனுப்பியிருந்தான். அதற்கும் அவள் எந்த பதிலும் அனுப்பவில்லை.
வண்டியை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தான் பாட்டு நின்று விட்டது. head set ஐ கழட்டவில்லை.
“மேகம் போலே என் வானில் வந்தவளே !” இப்போது headset இல் இருந்து இல்லை அவன் மனதின் ஒரு மூலையில் இருந்து இந்த வரி ஒலித்து கொண்டு இருந்தது.
அது ஒரு வித்தியாசாமான உணர்வு! ஏக்கம் ஆச்சரியம் சந்தோசம் எல்லாம் கலந்த உணர்வு.
நீங்கள் உங்கள் வானில் ஒரு மேகத்தை காண்பீர்கள் அது உங்களை பரவசப்படுத்தலாம். அதை கண்டு நீங்கள் மகிழ்வீர்கள். அதற்காக அந்த மேகம் நீங்கள் பார்க்கும் உங்கள் வானில் அப்படியே இருந்துவிட போவதில்லை. தூரமாகவே இருக்கும் அந்த மேகம் எப்போது உங்கள் வானை கடக்கும் என்பதை நீங்களும் தீர்மானம் செய்யமுடியாது; அந்த மேகமும் தீர்மானம் செய்ய முடியாது. காலமும் காற்றும் தான் தீர்மானம் செய்யும்.
அவன் வாழ்க்கையில்; அவன் வானில்; அவள் ஒரு மேகம்! அவன் எதிர்பார்க்காத நேரங்களில் அவனிடம் பேசிவிடுவாள்; அவன் எதிர்பார்த்து காத்து இருந்தாலும் சமயங்களில் பேசமாட்டாள். பள்ளிக்காலத்தில் கொஞ்ச காலம்; பின் கல்லூரி காலத்தில் கொஞ்ச காலம்; என்று அவ்வப்போது தூரமாய் அவன் பார்வையை கடக்கும் மேகம் அவள். இப்போதும் அவன் தேடும் மேகமாய் அவள்.
இப்படி அவள் பேசாத தருணங்களில் வீராவிற்குள் எழும் இத்தனை எண்ணங்களும் மீண்டும் பேசாமல் யாரோ என்றோ ஆகிவிடுவாளோ என்கிற அச்சமும் எப்போது சரியாகும்? அவளிடம் வீரா கேட்க நினைத்தது எல்லாம் பேச நினைத்தது. அவள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று வீரா நினைத்தது இதையெல்லாம் பேச வீராவிற்கு எந்த சந்தர்ப்பமும் அமையவேயில்லையா? அவள் மீண்டும் பேசாமலேயே இருந்துவிடுவாளா? இது இன்னும் இப்படியே தான் நீண்டு கொண்டிருக்குமா?