தாணு அவர் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்தார். கடைசி பகுதியை படிக்காமலேயே அவர் மூடி வைத்தார். புத்தகத்தை மூடியவர்; பரபரப்பாக ஃபோனைத் தேடினார். அவரின் ஆள்காட்டி விரல் த்ரெட் மில்லில் ஓடும் கால்களைப் போல், வேகமாக அந்த தொடுதிரையில் ஓடியது. கடைசியாக அவர் தேடிய பெயர் வந்ததும் அவர் விரலின் ஓட்டம் நின்றது. போனை காதில் வைத்து மேலே பார்த்தார்.

“மேகம் போலே என் வானில் வந்தவளே!” அவர் காதில் ஒலித்தது.

“கதையோடு பாதிப்பா?” என்று நினைத்து அந்த காலர் ட்யூனை கேட்ட மாத்திரத்தில் புன்னகைத்தார் தாணு.

“நீங்கள் அழைத்த நபர் பதில் அளிக்கவில்லை”

“எங்கய்யா போன” என்று சலித்துக்கொண்டே அதே எண்ணுக்கு மீண்டும் அழைத்தார்.

“மேகம்..! .. சார் சொல்லுங்க! கொஞ்சம் வேலையா இருந்தேன்.வந்து போன் எடுக்கிறதுக்குள்ள கட் ஆகிடுச்சு” வெற்றியின் குரல் கேட்டதும் அசுவாசம் அடைந்தார் தாணு.

“வெற்றி! நீ அனுப்பின புக் படிச்சேன்யா! நல்லா இருக்கு! பொம்மை காதல்!” என்று தாணு முடிப்பதற்குள் “முழுசா படிசீங்களா?” தாணு சொன்ன, “நல்லா இருக்கு!” என்பதில் ஒரு முழுமை இல்லை என்று புரிந்துகொண்ட வெற்றி கேட்டார்.

“அதுக்கு தான்யா உனக்கு போன் அடிச்சேன். படிச்சுக்கிட்டே வரேன்; கடைசி சாப்டர் வந்திருச்சு! என்னய்யா கதை படிச்ச எனக்கே ஆயிரம் கேள்வி வருது. எல்லாத்துக்கும் எப்படிய்யா! ஒரு சாப்டர்’ல பதில் சொல்ல முடியும்!” கதைக்குள் மூழ்கி ஆழம் தொடாமல் திரும்பிய தாணு ஆர்வத்தோடு வெற்றியிடம் கேட்டார்.

“சில சமயம் கேள்வி ஒன்னு தான் சார் இருக்கும். நம்ம குழப்பம் அதை ஆயிரம் கேள்வி ஆக்கியிருக்கும். அதோட, எல்லா கேள்விக்கும் பதில் கிடைக்கனும்னு என்ன சார் இருக்கு?” வெற்றியின் இந்த கேள்வி, இந்த கதை எப்படி முடிந்து இருக்கும் என்கிற ஆர்வத்தை தாணுவிற்கு இன்னும் அதிகப்படுத்தியது.

“ரெண்டு பேரும் சேர மாட்டாங்கன்னு பாதி கதையிலேயே தெரிஞ்சுருச்சு! இதுவரைக்கும் பேசாததை இனி என்ன பேச போறான் வீரா? ஷாரா மனசுல என்ன தான் இருந்துச்சு. எப்படி இந்த கதை இன்னும் ஒரு சாப்டர்ல முடியும்?! யோவ்! நீ முழுசா படிச்ச தானே நான் கேட்கிறதுக்கு எல்லாத்துக்கும் பதில் சொல்லு!” தாணு மட்டும் இல்லை; கதையை படிக்கும் யாருக்கும் கேள்விகள் எழும் என்பதை வெற்றியும் கூட யூகித்தே தான் இருந்தார்.

“2011ல அந்த அஞ்சு நாள் லீவு ல என்ன ஆச்சு? ஷாரா வீட்ல தெரிஞ்சுருச்சுசா? அப்படி தெரிஞ்சு அவங்க ரீயாக்ட் ஆகுற அளவு ரெண்டு பேரும் பெருசா ஒன்னும் தினம் தினம்  பேசிக்கலையே! ஷாராவுக்கே வீரா மனசு தெரிஞ்சு விலகிட்டாளா! ஷாராவுக்கு வேற யாரையும் பிடிச்ருந்துச்சா? ஷாரா ரொம்ப சீரியஸ் அண்ட் சின்சியர் கேரக்டர் ஆ! வேலை கிடைச்சு பிறகு அதுவே அவங்க ரெண்டு பேரும் பேசாம இருக்க காரணம் ஆகி இருந்ததா? இல்லை ஷாரா சொன்ன மாதிரி அவங்க வீட்ல இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாங்கன்னு பேசுறது நிறுத்திகிட்டாளா? அப்படின்னா வீரா மனசுல இருந்தது ஷாராவுக்கு தெரிஞ்சு இருந்து இருக்கனும்! அப்படி தெரிஞ்சு இருந்தா எப்ப தெரிஞ்சுச்சு எப்படி? அவங்க தான் சேர மாட்டாங்கன்னு ஆகிடுச்சு!அதுனால, இதெல்லாம் விட்ருவோம்! அவன் பேச நினைச்ச அந்த long conversation நடந்துச்சா? ப்ப்ஃ பூஉ…….. ” என்று  கேள்விகளை அடுக்கி கொண்டே போன தாணு பெரு மூச்சு விட்டு முடிக்க , “சார்! சார்! சார்!” என்று வெற்றி சிரிக்க ஆரம்பித்தார்.

“யோவ் என்னையா சிரிக்குற! இதெல்லாம் சொல்லாம எப்படிய்யா? கதை வீரா பக்கம் இருந்தே தான் போகுது; ஷாரா மனசுல என்ன இருந்துச்சுன்னு சொல்லவே இல்லை.ஷாரா பேர் கூட சொல்லலை; அதுவாவது கடைசி சாப்டர்ல இருக்குமா இல்லையா?” ஆர்வம், இத்தனை கேள்விகளுக்கு பதில் கிடைக்காத சலிப்பு எல்லாம் சேர்ந்து தாணுவின் இந்த கேள்வியாக வந்தது.

நிதானமாக பதில் சொல்ல ஆரம்பித்தார் வெற்றி,”சார்! பொறுமையா யோசிங்க! ஒரு குழந்தை பொம்மை வச்சு விளையாடுது! நீங்க அந்த குழந்தைகிட்ட பேசுங்க! அந்த பொம்மை என்னலாம் செய்யுது; என்னலாம் பேசுது; எல்லாம் அந்த குழந்தை சொல்லும்! பொம்மைக்கு பேர் கூட குழந்தை தான் வச்சிருக்கும்! பொம்மை எதுவுமே செய்யறது இல்லை எல்லாமே குழந்தையோடு கற்பனை. அது கற்பனைன்னு கூட குழந்தை நம்புறது கிடையாது.”

“அப்ப! ஷாராவே கற்பனை தானாய்யா?” தாணு இடைமறித்தார்.

“இல்லை சார்! குழந்தை கையில் ஒரு பொம்மை இருக்குங்கிறது நிஜம். எதுவுமே செய்யாத பொம்மை சாப்பிடும் தூங்கும்ன்னு குழந்தை நம்புறது தான் கற்பனை! உங்களுக்கு வந்த எல்லா கேள்வியும் வீராவிற்கும் இருந்திருக்கும் ஷாராவுக்கு அவனை பிடிச்சுருக்குமோ இல்லை பிடிக்கலையோ! இது இரண்டுமே அவனோடு கற்பனை மட்டும் தான். இது இரண்டுமே இல்லாமலும் கூட ஒருத்தர் ஒருத்தர்கிட்ட பேச முடியும் காரணமே இல்லாம பேசுறதை நிப்பாட்டிக்கவும் முடியும்”

“இதெல்லாம் எல்லார்க்கும் எப்படிய்யா புரியும்!” மீண்டும் தாணு இடைமறித்தார்.

“ம்ம்ம்” ஒரு சின்ன சிந்தனைக்கு பின் வெற்றி தொடர்ந்தார், “வீராவுக்கே லேட்டா தானே புரிஞ்சது! வீரா புரிஞ்சுக்கிட்டதை புரிஞ்சிக்கிட்டது ரெண்டு பேர்; இல்லை! என்னையும் சேர்த்து மூனு பேர்! கதை ல ரெண்டு பேர்”.

“அந்த விமலும் கபினியும்?” தாணு கேட்டார்.

“ஹான்! ஆமா. அழகான விஷயங்களை ஏன் புரிஞ்சுக்கணும்? அனுபவிக்கலாம்! நம்ம இப்ப ஒன்னு பார்க்கிறோம்; அழகாக இருக்கு; பார்ப்போம்! ஒரு மியூசிக் கேட்கிறோம் அழகா இருக்கு; கேட்போம்! அந்த மியூசிக் நமக்கு ஏன் புரியனும்? இந்த கதை அப்படி ஒரு அழகான கதை! A feel good story. புரிஞ்சுக்க கஷ்டமா இருக்கிறதே கூட அதோட அழகா இருக்கலாம்!” என்று வெற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, கண்கள் விரிய தன்னை மறந்து தலையசைத்தார் தாணு.

“ஏன்! விமல் நிவாஷினி கபினின்னு யாருமே பேசும் போது அந்த பேர் சொல்லலை” தனக்கு எழுந்த அடுத்த கேள்வியை கேட்டார் தாணு.

“இது ஏன் இப்படி எழுதப்பட்டு இருக்கும்ன்னு நான் நினைக்கிறேன்னா! இவங்க யாருக்கும் ஷாராவை பத்தி யார்கிட்டையும் கேட்க வேண்டிய பேச வேண்டிய அவசியம் இல்லை! வீரா தான் இவங்க கிட்ட அந்த சந்தோசத்தை சொல்றான். அதுலயும் ஒரு கட்டத்துக்கு அப்புறம் கபினியும் வீராவும் மட்டும் தான் ஷாராவை பத்தி பேசிக்கிறாங்க. நிவாஷினி விமல் எல்லாம் ஒரு சில இடத்துல தான் வராங்க. ஷாராவை பத்தி வீரா பேசுறது எல்லாமே கபினிகிட்ட மட்டுமா தான் இருக்கு! சுவருக்கும் காது இருக்குன்னு வீராவும் நம்பிருப்பானோ என்னவோ! இவங்க மூனு பேர்கிட்டையும் ஷாரா பத்தி பேசினாலும் அந்த பேர் மட்டும் யாரும் சொல்லக்கூடாது சொல்லிருப்பானோ என்னவோ? ‘ஏன் பேர் சொல்லலை?’ இந்த கேள்வி மட்டும் இல்லை இன்னும் நிறைய கேள்விக்கு படிக்கிறவங்களே அவங்க அவங்க புரிதலுக்கு ஏத்த மாதிரி பதில் தேடிக்கிற மாதிரி இருக்கு இந்த கதை. அதுனாலையே எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு! இதெல்லாம் எதுக்கு சார்! ‘பேர் ஏன் சொல்லலை?’ வீரா எப்படி அந்த பேரை சொல்லுவான்! அதான் சார் நம்ம எடுக்கப்போற படத்துல அந்த கேள்விக்கு பதில்.  யாருக்கும் வீரா அந்த பேரை சொல்லமாட்டான் அவ்வளவு தான்” என்று சொல்லிவிட்டு கதையின் கனத்தில் இருந்து வெளி வந்து சத்தமாக வெற்றி சிரிக்க தாணுவும் சிரித்தார்.

“நீ எதுவும் சேர்கிற ஐடியா ல இருக்கீயா?”கதையின் தாக்கத்தில் இருந்து மீண்டு இயல்பான நிலைக்கு திரும்பி தாணு இந்த கேள்வியை கேட்டார்.

“ஹான்! யெஸ்! புக் ல கதை ஒரு இடத்துல முடியுது; ஆனா நீங்க சொன்ன கேள்வியெல்லாம் எல்லார்க்கும் வரும். முதல்ல இதை என்ன பண்றது’ன்னு எனக்கும் தெரியல! அப்பறம் ஓகே! இப்படி பண்ணலாம் ன்னு ஒரு பொறி தட்டுச்சு. புக் ல வீராகிட்ட ஷாரா சொன்ன ஒரு பதிலோட கதை முடியுது. அங்க இருந்து நம்ம வீராவை நிவாஷினி வீட்டுக்கு கூட்டிட்டு போறோம். அங்க இருக்கும் போது அவனுக்கு கபினிகிட்ட இருந்து வீடியோ கால் வருது. ஏற்கனவே ஷாரா சொன்னதை பத்தி கபினிகிட்ட விமல்கிட்ட எல்லாம் அவன் சொல்றான். வீராவுக்கு கால் பண்ண கபினி நிவாஷினிக்கு எல்லாம் தெரியாதுன்னாலும் ஆரம்பத்துல வீரா பேசினான்ன்னு தெரியும் ஏன் பேசினான் தெரியும்னு விளையாட்டா நிவாஷினிகிட்ட ஷாரா சொன்னதை சொல்ல, அது தான் பொம்பள புள்ள! அது பண்ணது தான் கரெக்ட்! அப்படி தான் இருக்கனும்! என்று அழுத்தமாய் நிவாஷினி சொல்லும் போதே pan பண்ணி வீராவுக்கு கிளோஸ் அப் போறோம்.அங்க கபினியும் நிவாஷினியும் பேசிக்கொண்டிருக்கும் போதே, வீரா மட்டும் அமைதியா இருக்கான் அதோட நம்ம முடிக்கிறோம்” மீண்டும் வெற்றி கதைக்குள் போக, கதைக்குள் போக முடியாமல் தவித்தார் தாணு.

“புரியல!அப்படி ஷாரா என்ன சொன்னா?” என்றார் தாணு.

“நீங்க போய் லாஸ்ட் சாப்டர் படிச்சுட்டு வாங்க நான் அந்த லாஸ்ட் சீனை புரியவைக்கிறேன். இல்லை படிங்க நீங்களே புரிஞ்சுக்குவீங்க! நம்ம அப்பறம் பேசுவோம்”என்றார் வெற்றி.

“சரிய்யா! பேசுவோம்! நான் படிச்சுட்டு கூப்பிடுறேன்!” என்று சொல்லி போனை வைத்தார் தாணு.

“புக்கை எங்க வச்சேன்” சுற்றியும் தேடினார் தாணு.

“இங்க இருக்கா!” என்று கையில் எடுத்தார்.

 

அந்த புத்தகத்தின் கடைசி பகுதிக்கும் கடைசி பகுதிக்கு முந்தைய பகுதிக்கும் இடையில் தனியாய் ஒரு கவிதை மட்டும் இருந்தது.தாணு வாசிக்க ஆரம்பித்தார்.

கை அசைக்காமல்
கண் சிமிட்டாமல்
வாய் திறக்காமல்
சொல் இல்லாமல்
எழுத்து இல்லாமல்
இரகசியம் சொன்னது பொம்மை
இரகசியமாய் சொன்னது பொம்மை
நான் அறிவேன் நான் பொம்மை” என்று
கேட்டுக்கொண்டேன் நானும்
அந்த இரகசியத்தை இரகசியமாய்!”

“அப்ப ஷாராவுக்கு தெரியுமா? எப்ப தெரியும்! எந்த செய்கையும் இல்லாம! பேசாம! எழுதாம! எப்படி? எனக்கு தெரியும்ன்னு சொல்லிருக்க முடியும்?” என்று தாணுவின் மனதில் கேள்விகளின் அலை ஆர்ப்பரிக்க தொடங்கியதுமே வெற்றியின் குரல் அவர் மனதில் கேட்டது, “பொம்மை எதுவுமே செய்யறது இல்லை எல்லாமே குழந்தையோடு கற்பனை”. நிதானித்து அடுத்த பக்கத்தை திருப்பினார் தாணு.

“பொம்மை காதல்-38; ஆதி அந்தம் இல்லாமல் ஒரு காதல்!”கடைசி பகுதியை வாசிக்க தொடங்கினார் தாணு.

தாணு படித்து முடித்ததும் அவர் கேள்விகளுக்கான விடைகள் எல்லாம் கிடைத்ததா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *