உலகமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தாலும், வீராவின் மொபைல் போன் ஷாராவின் பெயரை காட்டி சிணுங்கினால் போதும், வீரா தனி ஒரு உலகத்தில் மெல்லிய சிரிப்போடு அந்த மொபைலை போனை இறுகப் பற்றி வானத்தைப் பார்த்து பெரு மூச்சுவிட்டுக்கொண்டிருப்பான். எப்போதும் போல் அன்றும் அதே தான் நடந்துகொண்டிருந்தது. வீராவின் பணியிடம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது,அந்த பரபரப்பு வீரா மதிய உணவு எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் கூட தள்ளிப்போட்டு இருந்தது. ஒரு சிறிய தீவு முழுதையும் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட எண்ணெய் கிடங்கு நிறுவனத்தின், ஒரு பகுதியை புதுப்பிக்கும் பணிகள் அந்த தீவு முழுதும் அத்தனை பரபரப்பு, வெயிலும், வெயிலில் எண்ணெய் கிடங்கு ஏற்படுத்தும் தாக்கத்தால் இருக்கும் வெப்பமும் பணியாளர்களின் வேர்வையை கொண்டு கடல் நீர் மட்டத்தை அதிகரித்துக்கொண்டிருக்கும் சூழலில், எல்லா இடங்களுக்கும் வீராவால் அவன் மொபைல் போனை கொண்டு செல்ல முடியாது. அங்கிருந்த அநேகமான குழுவில், ஒரு பெரிய குழுவை வழிநடத்தி, அந்த குழுவின் பணிகளை மேற்பார்வை செய்யும் பெரும் பொறுப்பு வீராவை தோள்களில் இருக்க, தீவு முழுதும் ஓடிக்கொண்டிருந்தான் அவன். வீரா தீவின் ஒரு முனையில் இருக்கும் பொழுது மறுமுனையில் இருப்பவர்கள் அவனை தேடுவார்கள். இத்தனை பரபரப்புக்கு மத்தியில், ஒரு இடைவெளி எடுத்துக்கொள்ள அலுவலகம் வந்தான். அவன் வந்து அமர்ந்தது தான் தாமதம், வாக்கி டாக்கிகள், “calling வீரா” என்று அலற தொடங்கியது. மணி பார்க்க கையில் போனை எடுத்தவன், அந்த வாக்கி டாக்கிகளை மதிக்கவில்லை. கையில் இருந்த வரைபடங்களை மேசையில் தூக்கிபோட்டுவிட்டு உட்கார்ந்து கொண்டான். அங்கு என்ன நடந்தது என்று ஷாராவிற்கு சொல்லிவிட வேண்டும் ஆனால், அது ஷாராவிடம் சொல்லாமல் சொல்ல வேண்டும். எப்படிச் சொல்வது? எழுதினான் எல்லோரும் படிக்கும் கவிதையாக!
சற்றே முடித்திருந்தேன் சமயம்
தவறிய மதிய உணவை
திறக்காத மின்னஞ்சல்கள்
திறக்காத குறுந்தகவல்கள்
காற்றில் என் பெயரை கூவி
எனக்காக காத்துக் கொண்டிருந்தவர்கள்
நான் தொட்டு விட்டு
விட்டு வந்த பணி
இப்படி எல்லாம் காத்து கொண்டிருக்க
‘உச்’ கொட்டி ஊமை சிரிப்புடன்
உட்கார்ந்து கொண்டேன்
மணி பார்க்க எடுத்த அலைபேசி அதன்
அறிவிப்புகளில் உன் பெயர் பார்த்த நொடியில்
அத்தனை பெரிய அதியசமாய் ஒன்றும் நடந்துவிடவில்லை, அவன் இருந்த நாட்டில் மதியம் ஒரு மணிக்கு அவன் அனுப்பிய ‘குட் மார்னிங்’ இரண்டு மணிக்கு திரும்ப வந்திருந்தது. அவளிடம் செல்லும் குட் மார்னிங்கள் தினமும் திரும்புவதில்லை. அது திரும்புபோதெல்லாம் ஒரு கவிதை வாங்கிக்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தது.
“மறுபடி ஷாரா உன்கிட்ட பேசினா உன் லைப் ல வந்தா என்ன பண்ணுவ?” வீராவின் எண்ணங்களில் கபினியின் குரல் ஒலித்தது. 2015இல் கபினி வீராவிடம் கேட்ட கேள்வி.
“சினிமா நிறைய பார்ப்பியா? நடக்கும் போது பார்க்கலாம்! எனக்கும் தெரியாது! ஆனால், பேச நினைச்சதெல்லாம் பேசனும் கேட்க நினைச்சதெல்லாம் கேட்கனும்” என்று கபினிக்கு பதிலளித்த வீராவின் முகமெல்லாம் வெட்கமும் கூச்சமும் கலந்த குதூகலம். அவன் கேட்க நினைத்தை கேட்கவும் இல்லை, பேச நினைத்தையெல்லாம் பேசவும் இல்லை. ஆனால், ஷாரா மீண்டும் பேசினால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொண்டான்.
அன்று இரவு முதல், அவனுடைய எட்டு நாள் விடுமுறை தொடங்கியது. கபினியும் வீராவின் திருமண நாளும் வீராவின் வரவிற்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.எத்தனையோ சிக்கல்கள் தாண்டி நடக்கப்போகும் திருமணம். வீராவை பொறுத்தவரையில், அந்த திருமண நிகழ்வு என்பது ஊருக்கு உறவுகளுக்கமான ஒரு அறிவிப்பு. கபினி தான் மனைவி என்பதை அவன் தீர்மானித்த நாளிலேயே அவனும் கபினியும் தம்பதிகள் தான். தீர்மானிக்கப்பட்ட திருமண நிகழ்வைத் தாண்டி அவன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது ஷாராவின் அழைப்பை.
எட்டு வருடங்களாக ஷாராவிடம் இருந்து எப்படியும் ஒரு அழைப்பு வரும் என்று மொபைல் எண்ணை மாற்றாமல் வைத்துக்கொண்டிருந்த வீரா, திருமண நாள் அன்று அந்த ஷாரா தொடர்புகொண்டு அவனை வாழ்த்துவாள் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தான். இப்படியான வேடிக்கையான நம்பிக்கைகளை கொள்வது வீராவின் வழக்கமாகவே இருந்தது.2003 கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதி போட்டியில், 9 விக்கெட்கள் வீழ்ந்த பின் நெஹ்ரா அடித்த இரண்டு பௌண்டரிகளைப் பார்த்து இப்படியே அடித்தால் கூட இந்தியா ஜெயித்துவிடும் என்று பத்தாவது விக்கெட் வீழும் வரை அந்த ஆட்டத்தை பார்த்த வீராவின் நம்பிக்கை எத்தனை வேடிக்கையானதோ அதே மாதிரியானது தான் எட்டு வருடங்கள் அவன் மாற்றாமல் வைத்திருந்த அந்த எண்ணிற்கு ஷாரா அழைப்பாள் என்று நம்பிக்கொண்டிருந்ததும்.
வீரா இந்தியா வந்து இறங்கியது முதல் ஷாராவிடம் இருந்து எந்த மெசேஜூம் வரவில்லை. எந்த அழைப்பும் வரவில்லை. கல்யாண வேலைகளில் பரபரப்பாக இருப்போம் என்று எண்ணி அவள் அழைக்காமல் இருந்திருக்கலாம் என்று வீரா நினைத்துக்கொண்டான். வீராவின் இந்த நம்பிக்கைக்கு வீராவும் ஒரு காரணம், அவன் செல்ல முடியாத நண்பர்களின் திருமணநாள் அன்று அவர்களை தொடர்புகொண்டு வாழ்த்துவது அவன் வழக்கமாக இருந்தது. அதே வழக்கத்தை எல்லோரும் கொண்டிருப்பார்கள் என்று நம்பிக்கொண்டிருந்தான்.
கிரிக்கெட் ஆட்டம் 50 ஓவர்களில் வீராவின் வேடிக்கையான நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். ஆனால், ஷாராவை பொறுத்தவரையில் வீராவின் இந்த வேடிக்கையான நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளியே கிடையாது.
கபினிக்கு மருதாணி வைத்தது முதல், அவன் காலுக்கு செருப்பு வாங்கியது வரை ஷாராவிற்கு தெரியப்படுத்த அவன் whatsapp இல் status போட்டுக்கொண்டிருந்தான்.
அவன் போன் சிணுங்கும் போதெல்லாம், வேகமாக திறந்து பார்த்து ஏமாந்துகொண்டிருந்தான்.அவனுடைய அந்த போனில் ஷாராவின் பெயர் வரவேயில்லை. 2011இல் ஷாரா பேசாமல் விலகியது முதல் அவன் போனில் மணி அடிக்கும் பொழுதெல்லாம் ஷாராவை தேடிக்கொண்டிருந்த வீரா எட்டு வருட இடைவெளிக்கு பின் இன்னும் எட்டு மணி நேரத்தில் திருமணத்தை வைத்துக்கொண்டு அதே தேடலில் இருந்தான்.
இதெல்லாம் நடக்கும் இப்படியெல்லாம் நடக்கும் என்று அவனும் கூட நினைத்திருக்கவில்லை. “ஷாரா மீண்டும் பேசினால் என்ன செய்வ?” என்று கபினி வீராவிடம் கேட்ட கேள்விக்கு காலம் பதில் சொல்லிக்கொண்டிருந்தது.
கபினியின் தோழி, கபினியையும் வீராவையும் படமெடுத்து அதை அவர்களுக்கு அனுப்ப, உடனே வீரா அதை whatsapp status இல் பதிவேற்றினான். ஒருவழியாக அந்த புகைப்படத்தை பார்த்த ஷாரா, “good” என்று அனுப்பியிருந்தாள். அந்த good, வீராவிற்குள் எல்லா good ஹார்மோன்களையும் சுரக்க செய்தது.
“ஒரு வழியா முடி வெட்டிட்ட?” ஷாரா கேட்டாள். “ஆமா, வெட்ட வச்சுட்டாங்க” என்று புன்னகை மாறாமல்,கொஞ்சம் விரக்தியோடு பதிலனுப்பினான் வீரா.
“எனக்கு எண்பதுகளில் ரஜினி வைத்திருந்ததை போல், அப்பாவை போல் நிறைய முடி வளர்த்துக்கொள்ள ஆசை” என்கிற வீராவின் மெசேஜைப் பார்த்த ஷாரா, “உங்க அப்பாவுக்கு அது நல்லா இருந்தது; உனக்கு இது தான் நல்லா இருக்கு ” என்று பதிலனுப்பினாள்.அவள் “நல்லா இருக்கு” என்று சொன்ன அந்த வார்த்தைகள் போதும் இன்னும் இரண்டு நாட்கள் வீரா நன்றாகவும் அழகாவும் இருப்பான். அவனுக்கு எந்த அலங்காரங்களும் தேவைப்படாது.அவளிடம் இருந்த வந்த இரண்டு வார்த்தைகள் அவனை அவனின் திருமண நாள் முழுதும் அத்தனை வசீகரமாய் வைத்திருந்தது.
அந்த வசீகரத்தோடு வந்தவர்களை வரவேற்றுக்கொண்டிருந்த அவன், அவனுடைய சித்தப்பாவிற்காக காத்திருந்து அவரிடம் சண்டைபோட்டுவிட்டு அவருக்காக வாங்கிவந்திருந்த மொபைலை போன் ஒன்றை, அருகில் ஒருவரிடம் கொடுத்து, “இந்தாங்க அண்ணா அவர் கேட்டார்ன்னு வாங்கிட்டு வந்தேன் ” என்றுவிட்டு அவன் மொபைலை எடுத்துப்பார்த்துவிட்டு மேடையேறினான், எந்த வாழ்த்துச்செய்திகளும் வரவில்லை. அந்த “இது நல்லா இருக்கு” மெசேஜ் அவனை மீண்டும் நல்லா ஆக்கியது.
எல்லா நிறைகளிலும் சில குறைகள் இருக்கும், அத்தனை நிறைவாய் நடந்த திருமணத்தில்,சில குறைகள் இருக்கவே செய்தது, அதில் சில குறைகள் தவிர்க்க இயலாதது, அந்த தவிர்க்க இயலாத குறைகளை தவிர்த்து விட்டால் வீராவிற்கு குறையாக இருந்தது அவன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அழைப்பு வராமல் இருந்தது தான்.
இன்னும் நான்கு நாட்களில் அவன் வேலைக்கு திரும்ப வேண்டும். அந்த நான்கு நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறை அவன் போனில் மணி ஒலிக்கும் பொழுதும் வீராவை ஒரு பரபரப்பும் எதிர்பார்ப்பும் பற்றிக்கொண்டிருந்தது.
வீரா நினைத்துக்கொண்டிருந்தது போல், அவன் மீண்டும் ஷாராவை சந்திக்க இருந்த வாய்ப்பு அவனுடைய திருமண நிகழ்வு,அது நடக்கவில்லை. அவன் மீண்டும் ஷாராவிடம் பேச இருந்த வாய்ப்பாக அவன் நினைத்ததும் இப்போது நடக்கவில்லை. அவனாக அவளுக்கு மெசேஜ் அனுப்பி “busy?” என்று கேட்டான். அவள் ஆம் என்றதும், நான் இன்னும் அந்த பழைய நம்பரை வைத்திருக்கிறேன் என்று அவளிடம் சொன்னான்.அவள் ‘ok’ என்று முடித்துக்கொண்டதும் மீண்டும் மறுநாள் அவளுக்கு மெசேஜ் அனுப்பி “busy?” என்று கேட்டான்,அவள் ஆம் என்றதும்;அதை டைப் பண்ண கூட நேரமில்லையா? புதன்கிழமை கிளம்புறேன் என்று அவன் அனுப்பிய மெசேஜ் க்கு ஒரு பதிலும் இல்லை.
மறுநாள் மீண்டும் மெசேஜ் அனுப்பினான்.கடவுளே! busy?என்று கேட்டான். கடவுளிடம் நாம் பேசிக்கொண்டே இருப்போம், அவர் நமக்கு நேரடியான பதில்களை தருவதில்லை. வீராவிடம் மீண்டும் பேச ஆரம்பித்த பின் எல்லா நேரங்களிலும் ஷாரா வீராவிற்கு பதில் அனுப்பியதில்லை, சில நேரங்களில் அவன் கேள்விகளுக்கு அவள் அளிக்கும் பதில்களும் கூட புதிர்களாவே இருந்திருக்கின்றது. ஷாராவின் பதில்கள், அனேகமாக எமோஜிகளாகவே இருந்திருக்கின்றது. இதைச்சுட்டி,ஷாராவிடம் மீண்டும் பேச ஆரம்பித்த பொழுது விளையாட்டாக அவளிடம் வீரா இப்படிச்ச்சொன்னான். “When I look at things, It seems, you are my God. Because God will not reply you, he Sends you back signs like this” ஷாரா அதற்கும் ஒரு எமோஜி அனுப்ப, வீரா தொடர்ந்தான்,”with hope, without knowing what would be the reaction, devotees send their message to god in daily basis “. அதை அவன் கவிதையாகவும் எழுதி வைத்தான்.
வரங்களை பெறுவது போல்
வார்த்தைகளை பெறமுடிவதில்லை
பதில்களாய்!
கடவுளின் பதில்கள் வார்த்தைகளாய் இருப்பதில்லை
வார்த்தைகளாய் இல்லாத பதில்கள் பிடிபடுவதும் இல்லை
பிடிபடாத பதில்களை வேண்டி
கிடைத்த வரத்தை கீழே வைத்து
பிடித்துக்கொண்டிருக்கின்றேன் நான் பார்க்கும் கடவுள் உன்னை.
அவள் பேசினால், போதும் என்று கடவுளிடம் வரம் கேட்டு நின்ற வீரா அவள் பேசியவுடன், அவள் ஏன் பேசாமல் இருந்தாள் என்பதை தெரிந்து கொள்ள நினைத்தான்.ஆனால், அது போல் அவனுள் இருந்த அநேகமான கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கவே இல்லை.
வீரா சொன்னது போல், வீரா ஷாராவிற்கு எப்போதும் அப்படி மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்தான்.with hope, without knowing what would be the reaction.இந்த உரையாடலுக்கு பிறகு அவ்வப்போது அவளை அவன் கடவுள் என்று சுட்டுவது உண்டு. அப்படித்தான் அன்றைய அந்த உரையாடல் தொடர்ந்தது.
வீரா: கடவுளே! busy?
ஷாரா: Yes
வீரா: எப்ப கடவுளே free அ இருப்பீங்க?
ஷாரா: சொல்லுங்க
வீரா:’Sir’ விட்டீங்க கடவுளே! call பண்றேன் சொன்னீங்க?
ஷாரா: நீங்க busy அ இருப்பீங்களா sir! புது மாப்பிள்ளை வேற?!
வீரா:கடவுளே அவ்வளவு busy லையும் நான் மெசேஜ் பண்ணேன் நீங்க ரிப்ளை கூட பண்ணலை.
ஷாரா:சொல்லுங்க சார்! நான் call பண்ணலைனாலும் என் வாழ்த்து எப்போதும் உங்களுக்கு உண்டு சார்
வீரா:இப்ப ஒரு call வரவும் நீங்களான்னு பாத்தேன் கடவுளே! கடைசி ‘கஷ்டம்’ர் கேர் கடவுளே. அந்த புக் ஆவது ரீட் பண்ணுவீங்களா?
ஷாரா: ஒரே டென்ஷன் சார்! டென்ஷன் ல ரீட் பண்ணா புரியாது.
“உங்க அண்ணன் எங்கையோ பறந்துகிட்டு இருக்கான் அவனை கொஞ்சம் புடி புள்ள” கபினியின் குரல் கேட்டு சிரித்துக்கொண்டே அந்த மகிழ்ச்சியில் கபினியின் கன்னங்களை பற்றிக்கொண்டான் வீரா.ஷாரா மீது வீரா கொண்டிருந்த அந்த காதலை வீராவை விட சரியாக புரிந்துகொண்டது கபினியாகத்தான் இருக்க முடியும்.கபினி செல்லமாக வீராவிடம் பொய் கோபம் கொண்டாள், “கிளம்பப்போற அங்க பேசிகிட்டு பறந்துகிட்டு இருக்க!”என்று.
ஊருக்கு சென்ற சேர்ந்த அதே நாள் மாலை, ஷாராவிடம் பேசிய வீரா ஷாராவிடம் இருந்த அவன் எதிர்பார்த்த அந்த call ஐ பற்றி எடுத்துச்சொல்ல, கபினியின் பொய் கோபம் பற்றி பேசினான் “ஊருக்கு கிளம்பறது ஒரு மாதிரி இருந்தது கூட, கபினி நான் நீங்க பேசலைன்னு தான் அப்படி இருக்கேன் கோபப்பட்டாள்” என்று அவன் சொன்னது தான் தாமதம், “நீ எனக்கு, நிறைய importance கொடுக்கிற, பொண்ணுங்களுக்கு அது பிடிக்காது” என்று ஷாரா அறிவுரைகளை அடுக்க ஆரம்பித்ததும் வீராவை பதற்றம் தொற்றிக்கொண்டது, அவன் ஒன்று நினைத்து கபினியின் பொய் கோபத்தை சொல்ல ஷாரா அதை வேறு மாதிரி எடுத்துக்கொண்டதை அவன் புரிந்துகொண்டான். இந்த காரணத்திற்காகவே அவள் இனி மீண்டும் பேசாமல் இருந்துவிடுவாள் என்று பயம் கொள்ளத் தொடங்கினான்.
“இல்லை அவளுக்கு தெரியும்! அவ எனக்கு முக்கியம்ன்னு” என்று வீரா சொன்ன சமாதானங்கள் எடுபடவில்லை. பெண்கள் அதைவெளிப்படுத்திக்கொள்ள மாட்டார்கள் என்றாள் ஷாரா. வீராவிற்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை,இன்னும் ஒரு பத்து வருடங்கள் பேசாமல் இருந்துவிடுவாளோ என்கிற அச்சம் வந்தது. அவன் இந்த தொடர்பு இந்த அளவில் இப்படியே இருந்த்தாள் போதும். ஆனால், இனி அதுவும் கூட இல்லாமல் போக வாய்ப்பு இருக்கிறது. ஷாராவின் பிறந்தநாளுக்கு அவளை அழைத்து வாழ்த்த வேண்டும் என்று வீராவிற்கு ஆசை. இதுவரையில் நடந்தது இல்லை. இன்னும் பத்து நாட்களில் அவள் பிறந்த நாள். ஆனால், இனி அவள் பேசுவாளா என்றே தெரியாது.
வீரா, கபினி ஷாரா. கபினி புரிந்த கொண்ட வீரா ஷாரா மேல் கொண்டிருக்கும் காதல் என்ன எப்படியானது? கபினிக்கும் வீராவிற்கும் இடையில் உள்ள புரிதலும் காதலும் எப்படியானது? தொடர்ந்து படியுங்கள்.