2011-பிப்ரவரி 11ம் தேதி. அன்று என்ன தேதி என்பதெல்லாம் வீராவின் சிந்தையில் இல்லை. அன்று வெள்ளிக்கிழமை; அது அந்த வாரத்தின் கடைசி வேலை நாள் என்பது மட்டும் தான் அவன் எண்ணத்தில் இருந்தது. அன்றைய தினத்தின் ஒவ்வொரு மணி நேரமும் இந்த நாள் முடிவதற்கு இன்னும் எத்தனை மணி நேரம் இருக்கிறது என்று வீரா எண்ணிக்கொண்டிருந்தான்.
அன்று கல்லூரியில், அவனைக் கடந்து சென்றுக் கொண்டிருந்த ஒவ்வொரு நொடியையும் பிடித்துத் தள்ளிக் கொண்டிருந்தான் வீரா.ஒரு வழியாக மணி ஐந்து ஆனது.தன் அறைக்குச் சென்று, அங்கிருந்து அவன் ஊருக்கு கிளம்பி வீடு சென்று சேர இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. அதனால், வீட்டிற்கு வந்த பிறகும் கூட அவனால், ஷாராவிடம் பேச முடியவில்லை.வீரா, இன்னும் ஒரு இரவை கடக்க வேண்டும்.விடிந்ததும் அவளிடம் பேசிவிடலாம், உடனே பார்த்துக்கொள்ளலாம் என்று சுலபமாக நினைத்துக்கொண்டு, போனை சார்ஜில் போட்டுவிட்டு தூங்கச் சென்றான்.
அவன் நினைத்தது போல் எதுவும் சுலபமாக நடந்துவிடவில்லை.
விடிந்தும் விட்டது. வீரா எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த சனிக்கிழமை வந்தும் விட்டது. எப்போதும் போல் அந்த ‘குட் மார்னிங்’ மெசேஜை அனுப்பிவிட்டு, காத்துகொண்டு இருந்தான். ஷாராவிடம் இருந்து ஒரு பதிலும் வரவில்லை.எப்போதும் போல அவளுடைய ‘குட் மார்னிங்’ தாமதமாக தான் வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தான்.
சூரியன் உச்சிக்கு வந்து பிறகும் கூட அவளிடம் இருந்து ‘குட் மார்னிங்’ வரவில்லை.
“என்ன ஆச்சு! ஏன் மெசேஜ் பண்ணல?” இந்த சிந்தனைகளோடு அவளுக்கு இன்னும் சில மெசேஜ்களை அனுப்பிவிட்டு பத்து நிமிடத்திற்கு ஒரு முறை போனை எடுத்துப் பார்த்துக்கொண்டான். ஒரு போன் பண்ணி என்ன ஆச்சு என்று கேட்கும் தைரியம் வீராவிற்கு இல்லை.
நீங்கள் ஒருவரை நேசிக்கும் பொழுது; அவரிடம் அதைபற்றிச் சொல்லாமல் இருக்கும் பொழுது; உங்களுடைய எந்த செயலும் அவரை பாதித்துவிடக்கூடாது என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கும் பொழுது; உங்களுடைய எந்தவித நடத்தையும் அவர்களுக்கு உங்கள் மீது வெறுப்பை உண்டாக்கி விடக்கூடாது என்கிற பயம் இருக்கின்ற பொழுது; உங்களால் அத்தனை சுலபமாக அவர்களிடம் பேசிவிட முடியாது. எத்தனை பெரிய வீரர்களாலும் இருந்தாலும், அவர்களாலும் கூட முடியாது.
இந்த பயமும் தயக்கமும் ஷாராவிடம் பேசும் பொழுதுகளிலெல்லாம் வீராவிடம் தென்பட்டது. “சனிக்கிழமை ஊருக்கு வரேன் பார்க்கலாம்”என்று பேசி வைத்திருந்த பிறகும், அந்த சனிக்கிழமை ஷாராவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. தொலைபேசியில் அழைத்து என்னவென்று கேட்பதற்கு வீராவிற்கு தைரியமும் வரவில்லை.உரிமையாக நாம் பழக நினைப்பவர்களிடம் தான் உரிமை எடுத்துக்கொள்ள அதிகம் பயம் கொள்ள வேண்டியதாக இருக்கின்றது. இருக்கின்ற உரிமையும் போய்விடக்கூடாது என்கிற பயம் தான் அதற்கு காரணமாக இருக்க முடியும்.
காலையில் கையில் எடுத்த போனை வீரா கீழே வைக்கவேயில்லை. ஷாராவிற்கு அனுப்பிய சில மெசேஜுகள் தவிர்த்து அவன் வேறெதுவும் செய்யவும் இல்லை. சூரியன் மேற்கில் மறைய தொடங்கியிருந்தான். அவன் அலைபேசியின் ஆற்றலும் மங்க தொடங்கியிருந்தது. போனை சார்ஜ் இல் போட்டு விட்டு நகர்ந்தான். அந்த போனை விட்டு ஒரு பத்தடி தூரம் நகர்ந்திருப்பான், போன் அதிர்ந்த சத்தம் கேட்டது. எத்தனை மெதுவாய் போனை விட்டு பத்தடி தூரம் நகர்ந்து சென்றானோ? அதை விட நூறு மடங்கு வேகமாக வந்து அந்த போனை கையில் எடுத்தான்.அது airtel இல் இருந்து வந்திருந்த மெசேஜ். அந்த மெசேஜ் வந்த நொடியில் அவனிடமும் அந்த போனிடமும் இருந்த அந்த பிரகாசம் airtelமெசேஜ் என்று தெரிந்து பின் காணாமல் போனது.
இரவு எட்டு மணி ஆனது. வீட்டில் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.வீராவிற்கு சாப்பிட மனம் வரவில்லை. மணி ஒன்பது ஆனது; எல்லோரும் தூங்க தயாரானார்கள் . வீரா மட்டும் போனை கையில் வைத்துக்கொண்டு ஒரு அறையில் அடைந்து கிடந்தான். விளக்கை அணைத்து எல்லோரும் தூங்க தொடங்கியிருந்தார்கள். வீராவிற்கு தூக்கமும் வரவில்லை. ஆனால், சோர்வாக இருந்தான். உங்களுடைய எதிர்பார்ப்பு ஒரு உச்சியில் இருக்கும் பொழுது உங்களை அங்கே இருந்து கீழே தள்ளினால் எப்படி இருக்கும்?! வீராவிற்கும் தன்னை யாரோ அப்படி கீழே தள்ளிவிட்டது போல இருந்தது.
ஷாராவின் வீட்டு வாசலில் ஷாராவும் வீராவும் சந்தித்துக்கொண்டு மூன்றரை வருடங்கள் முடியப்போகிறது.அந்த சந்திப்பிற்கு பின் வீரா சந்தித்த ஒவ்வொரு நாளிலும் அவளை மீண்டும் சந்திக்கும் நாள் எதுவாக இருக்கும் என்று தேடிக்கொண்டிருந்தான் வீரா.
இந்த சனிக்கிழமை அவளைக் காண போகிறோம் என்கிற பெரும் ஆவலோடு அதை எதிர்நோக்கி, அந்த வாரத்தின் ஒவ்வொரு நாளையும் எதிர்பார்ப்போடு கடந்த வீரா, அந்த நாளில் அவளிடம் பேச கூட முடியாமல் போன ஏமாற்றத்தில் பெரும் சோர்வுடன் இருந்தான்.
நாற்காலியில் அமர்ந்துகொண்டு; காலை மேசை மேல் வைத்துக்கொண்டு; அந்த போனை கீழே வைக்காமல், விளக்கையும் அணைக்காமல் உட்கார்ந்திருந்தான் வீரா.சட்டென்று ஒரு நொடியில் ஒரு அதிர்வு, “எந்திரி டா அவ மெசேஜ் அனுப்பிட்டா” என்று போனும் வீராவுடன் சேர்ந்து காத்திருந்தது போல அத்தனை நேரம் ஒளியில்லாமல் இருந்த அந்த போனிலும் கூட அத்தனை வெளிச்சம்.
“Good evening டா இன்னிக்கு ஒரு job fair. ராஜா காலேஜ் ல இப்ப தான் வந்தேன்”
இந்த மெசேஜை பார்த்த நொடியில்,விரல்களை கொண்டு கன்னங்களை தடவியபடி வாயை மறைத்துக்கொண்டு புன்னகைத்து மேலே பார்த்த படி பெரு மூச்சு விட்டான் வீரா.
“இரு. கொஞ்சம் நேரத்துல மெசேஜ் பண்றேன்” என்றும் அவளிடம் இருந்து இன்னொரு மெசேஜ் வந்து இருந்தது.
வீரா பயன்படுத்திக்கொண்டிருந்த அவனுடைய அம்மாவின் போனில் இருந்து அவளை அழைத்துப் பேசுவதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தது.மெதுவாக அறையை விட்டு வெளியே சென்ற வீரா, தூங்கிக்கொண்டிருந்த அவனுடைய அப்பாவின் தலைமாட்டில் இருந்த போனை எடுத்துக் கொண்டு வந்து, அதே அந்த அறையில் அதே நாற்காலியில், இரண்டு போன்களையும் கையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டான்.
“சொல்லு டா” என்று அவளிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது.
வேகமாக அப்பாவுடைய போனில் இருந்து அவளுக்கு அழைத்தான். பேசுவதற்கு ஏதுவாக கட்டிலில் படுத்துக்கொண்டான்.
முதல் ரிங் முடிவதற்குள்ளாகவே அவள் இணைப்பில் வந்தாள்.
வீரா ஹலோ சொன்னான், அவள் ஹெல்லோ என்று இழுத்தாள், வெடித்துக்கொண்டு வந்த புன்னகைகளை அடக்கிக்கொண்டு மீண்டும் ஹெல்லோ சொன்னான் வீரா. அவள் இன்னும் ராகமாக ஹெல்லோ சொன்னாள், அந்த விளையாட்டை இன்னும் தொடர வேண்டும் என்கிற ஆசை வீராவிற்கு.ஆனாலும், கூட அது தந்த தாளாத சந்தோசத்தை தாங்க முடியாமல் பெரும் மூச்சோடு சிரித்துவிட்டு , அவளை கிண்டலடிப்பதாய் நினைத்துக்கொண்டு, “ஹலோ சொல்லி விளையாட எல்லாம் காசு இல்ல” என்று அவன் சொல்ல, ” சரி வை நான் அடிக்கிறேன் ” என்றாள்.
“அந்த நம்பருக்கு அடிங்க “என்று வீரா முடித்தவுடன்
landline இல் இருந்து அழைப்பு வந்தது,
அந்த அறையில் வெண்ணொளியை பரப்பிக்கொண்டிருந்த விளக்கு அணைக்கப்படாமல் இருந்தது. ஆனால், வீராவின் முகமோ அதை விட பிரகாசமாக மலர்ந்தது.வீராவால் இனி நிற்கவும் கூட முடியாது. எப்படி படுத்துக்கொண்டு இருப்பான்! அவளிடம் இருந்து வரும் முதல் அழைப்பு அது.
வீரா: landline ல இருந்து கூப்பிடுறீங்க? பில் வரும் பொழுது யார் நம்பர் எதுக்கு இவ்வளவு நேரம் பேசின ன்னு கேட்டா?
ஷாரா : ப் ..ச்… அது. வரும்
வீரா: சரி! வேலை கிடைச்ச பிறகு எதுக்கு job fair.
ஷாரா : வேற நல்ல வேலை கிடைச்சா?
வீரா: இந்த வேலை கிடைச்சதுக்கு ட்ரீட் கேட்டேன்…பார்க்கலாம் சொன்னேன்!
ஷாரா : ரொம்ப tired அ இருக்கு…அடுத்து நீ எப்ப வருவ?
வீரா: இந்த தடவை இந்த இரண்டு நாள் லீவு ல வந்ததே பார்க்கிறதுக்கு தான்.( அழுத்திச் சொன்னான்)
ஷாரா : இதோ வரேன்! (அந்த பக்கம் யாருக்கோ பதில் சொன்னாள்) லைன் ல இரு டா வரேன்..
வீரா இருந்த அறை முழுதும் மகிழ்ச்சியும் புன்னகையும் நிரம்பி இருந்தது. அந்த அறையில் வீரா மட்டும் இல்லை.
வீராவின் இடது காதில் போன் இருந்தது, அந்த போனுக்குள் ஷாரா இருந்தாள், அங்கே தான் வீராவின் மனமும் இருந்தது. பக்கமாகவும் தூரமாகவும் கேட்ட அவளின் குரலை கேட்ட படி அவள் அங்கே என்ன செய்துகொண்டிருக்கின்றாள் என்று கவனித்துக்கொண்டிருந்தான். இணைப்பை துண்டிக்காமல் அவள் மற்ற வேலைகளை செய்துகொண்டிருந்ததில் அத்தனை பரவசம் வீராவிற்கு.
ஷாரா : அண்ணா வேலைக்கு கிளம்பினான்.. சாவிய எடுத்துட்டு போகல. அம்மா கொடுத்துட்டு வர சொன்னாங்க.
வீரா : ஆஹ் ஹான்! சரி கோவிலுக்கு போகலாமா?
ஷாரா : சீக்கிரமே எந்திரிக்கனும்… சைக்கிள் இருந்தா கூட சல்ன்னு வந்துருவேன்.
வீரா: என்கிட்டயும் வண்டி இல்லை…ஓட்டவும் தெரியாது. தெரிஞ்சா friends ட்ட வாங்கிட்டு வரலாம்.
ஷாரா :இந்த விவேக் காமெடி ல மாதிரி.. வண்டி ல கூட்டிட்டு போய் எங்கயாவது தள்ளிவிட்டுட்டு . கூட்டத்தோடு போய் நின்னுக்கலாம் ன்னு பாக்கிறீயா?😉😀
வீரா : நானே தான் ஓட்ட தெரியாதுன்னு சொல்லிட்டேனே. சரி வீட்டுக்கு வாங்க நம்ம அப்பறம் என்னனு பேசிக்கலாம்.
இப்படியே தொடர்ந்து கொண்டிருந்த அவர்களின் அந்த பேச்சு முடிந்த பிறகும் கூட எங்கு எப்படி சந்திப்பது என்று அவர்கள் தீர்மானிக்கவில்லை.
மறுநாள் மதியம் வரை அவளிடம் இருந்து எந்த மெசேஜ் உம் வரவில்லை. வீராவும் ஊருக்கு கிளம்ப வேண்டும். அவளுடன் எங்கேனும் வெளியில் சென்று விட்டு ஊருக்கு கிளம்ப நினைத்திருந்தான். ஆனால் இனிமேல் அது சாத்தியமில்லை.
“இப்ப தான் டா கிளம்பினேன் பஸ் எடுத்துட்டேன் வந்துட்டு சொல்றேன் ” என்று பிற்பகலின் பிற்பாதியில் அவளிடம் இருந்து மெசேஜ் வந்தது.
“பஸ்ஸை விட்டு இறங்கிட்டேன் டா” என்ற மெசஜை பார்த்தவுடன் வீரா வாசலுக்கு சென்று விட்டான்.அங்கே மாடிப்படியில் நின்றுகொண்டு அந்த பெரிய வாசலைப் பார்த்துக்கொண்டு இருந்தான்.
“வந்துட்டேன் டா ” என்று அவள் அனுப்பிய மெசஜைப் பார்த்துவிட்டு அவன் நிமிர்ந்த அந்த நொடியில், அந்த வாசலின் இடது பக்க சுவருக்கு பின்னால் இருந்து அவள் வெளிப்பட்டாள். அவள் வருகிறது பற்றி எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்திருந்தாலும்; எத்தனை வருடம் ஆனாலும்; வீராவால் அவளை அடையாளம் கண்டிருக்க முடியும்.ஆனால், மாடியில் அந்த படிக்கட்டுகளின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தது வீரா தான் என்பதை சந்தேகமில்லாமல் ஷாராவால் தீர்மானிக்க முடியவில்லை.
மூன்றரை வருடங்கள் கழித்து நடக்கும் சந்திப்பு. அவள் தலையை நிமிர்த்தி மேலே பார்த்த பொழுது,வீராவின் பார்வை வேகமாக அவளின் நெற்றியை தேடியது, அங்கே அந்த சின்ன பொட்டுக்கு மேல் இன்னமும் அந்த மெல்லிதான சந்தனம் அப்படியே இருந்தது. அவள் எதிலுமே தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. நடு வகுடு எடுத்தே தான் தலை வாரியிருந்தாள். எப்போதும் போல எளிமையாக சாதாரணமான ஒரு வெள்ளை நிறத்தில் பச்சை படர்ந்த சுடிதார்.மென்சிவப்பு இளஞ்சிவப்பு என்று அதிகம் சிவப்பு நிறங்களிலேயே பள்ளிக்காலங்களில் அவள் உடுத்தும் உடைகள் இருந்திருக்கிறது.அது ஒன்றைத் தவிர அவளிடம் ஒரு மாற்றமும் இல்லை.
உள்ளே சென்ற வீரா ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டான்.
“சும்மா உட்காரு ப்பா! “ஹாலில் நடுநாயகமாக போடப்பட்டிருந்த நாற்காலியில் அவளை உட்காரச்சொல்லிவிட்டு கீழே அமர்ந்தார் வீராவின் அம்மா. அந்த நாற்காலிக்கு நேராக இருந்த ஒரு அறையின் வாசலில் வீரா நின்று கொண்டிருந்தான்.
“இப்ப எங்க இருக்கீங்க? இந்த வீடு என்ன ஆச்சு?” வீராவின் அம்மா ஷாராவிடம் நலம் விசாரித்துக்கொண்டிருந்தார்.
“அப்பா இறந்தோன அந்த வீட்டை வித்துட்டோம்” என்று அவள் சொல்லிக்கொண்டிருந்த பொழுது, “அப்பாக்கு என்ன ஆச்சு?” என்று அவளிடம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தும் வீரா கேட்காமல் வைத்திருந்த அந்த கேள்வியை கேட்டான். அவளுடைய அப்பா இறந்த சமயத்தில் வீராவும் ஷாராவும் தொடர்பில் இல்லாமல் இருந்தார்கள். ஆனால், அவர் இறந்து சில மாதங்கள் கழித்தே வீராவிற்கு அது தெரிந்திருந்தது.
அந்த செய்தி கேட்டதில் இருந்து ,அவளுடைய சோகத்தை நினைத்து வருந்தினான் வீரா. உணர்வு மிகுதிகளை கவிதையாக்கும் வீரா, அந்த சோகத்தையும் கவிதையாக்கி வைத்திருந்தான். ஆனாலும் இத்தனை நாளில் அவளிடம் அதைப்பற்றியெல்லாம் அவன் பேசயிருக்கவில்லை. “அப்பாக்கு என்ன ஆச்சு?” என்கிற கேள்வியையும் அவள் அருகில் இருக்கும் பொழுது தான் கேட்க வேண்டும் என்று நினைத்து அன்று வரை கேட்காமல் இருந்தான்.ஆனால், அதை கேட்ட பொழுதும் கூட அவர்கள் இடையே ஒரு தூரம் இருக்கவே செய்தது.
“கிட்னி failure” என்று வீரா நின்ற தூரத்திற்கு மட்டும் கேட்கும் படியாய் அவள் சொன்ன பொழுது, அவள் கண்களைப் பார்த்துக்கொண்டிருந்த வீராவின் கண்களை அவளுடைய கண்கள் பார்த்தது. கண்கள் பேசும் உணர்வுகளை வார்த்தைகளால் பிரதிபலிக்க முடிவதேயில்லை.
அன்று அதுவரை அவர்கள் பெரிதாக பேசிக்கொள்ளவும் இல்லை.அதுவரை வீராவின் அம்மாவிடமும் தங்கையிடுமே தான் அவள் பேசிக்கொண்டு இருந்தாள்.
“இது தான் வினோ” அவள், அவளுடைய Xpress மியூசிக் போனை எடுத்து அதில் இருந்த அவள் தோழியின் படத்தை திறந்து வீரா கையில் அந்த போனை கொடுத்தாள்.
வீராவிற்கு அது தேவையில்லதா ஆணி.
“யாருமே உங்களுக்கு ப்ரொபோஸ் பண்ணலயா?” என்று வீரா ஒரு நாள் கேட்ட பொழுது, “எங்க group ல வினோ க்குத் தான் நிறைய பேர் ப்ரொபோஸ் பண்ணுவாய்ங்க; நடந்து போகும் போது லெட்டர் எல்லாம் அ தூக்கி போடுவாய்ங்க” என்று அவள் சொல்லியிருக்கின்றாள்.
அப்போது வீரா அவளிடம், “அந்த friend அ எனக்கு intro கொடுங்க. பாக்கிறேன்! எனக்கு ஓகே ன்னா நானும் ஒரு application போட்டு வைக்கிறேன் ” என்று விளையாட்டாக சொன்னது தான் அவள் வினோவை அறிமுகம் செய்ததற்கு காரணம்.
ஆனால், இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஷாராவும் வீராவும் பேசிக்கொள்ள கிடைத்த ஊறுகாயாய் இருந்ததைத் தவிர வினோவிற்கு அங்கே ஒரு முக்கியத்துவமும் இல்லை.வினோவிற்கு பெரிய முக்கியத்துவத்தை தந்த அந்த கல்லூரியின் மாணவர்களுக்கு இந்த ஊறுகாய் விஷயம் தெரிந்தால் நிச்சயம் வருத்தப்படுவார்கள்.
வினோ, அழகா?இல்லையா? என்கிற வாதத்திற்கு எல்லாம் வீரா செல்லவில்லை. அவன் அந்த படத்தையும் கூட பெரிதாக கவனிக்கவில்லை. அந்த நொடியில் அவன் கையில் ஷாராவுடைய போன் இருந்தது. அந்த தருணத்தில்,வீராவிற்கு அந்த தருணத்தை விட அழகானதாக எதுவும் இருந்திருக்காது.வீராவிடம் தன்னுடைய போனை கொடுப்பதில் ஷாராவிற்கு எந்த தயக்கமும் இல்லை. அதில் இருந்த மற்றொரு புகைப்படத்தில் ஷாராவின் அம்மா இருந்தார்கள்.ஷாராவின் அப்பாவைத் தவிர ஷாராவின் குடும்பத்தில் உள்ள மற்றவர்களை முன்னமே பார்த்திக்கிறான் வீரா.அந்த போனில் அவளுடைய அப்பாவைத் தேடினான் கிடைக்கவில்லை.
“சட்டையை போடு ” வீராவின் அம்மா, குரல் கொடுத்த அந்த நொடி வரை வீரா வேறு ஒரு உலகத்தில் இருந்தான்.அம்மாவின் குரல் கேட்ட பின்னர் தான், தான் பனியனுடன் இருப்பது அவனுக்கு உரைத்தது.
“சட்டை எங்க இருக்கு ” வேகமாக கேட்டான் வீரா.
“அங்க தான் அயர்ன் பண்ணி இருக்கு” என்று அவன் ஊரில் இருந்து அணிந்து வந்த அதே பச்சை சட்டையை அவனுக்கு காட்டினார் வீராவின் அம்மா.
ஒரே நிறத்தில் உடை உடுத்த வேண்டும் என்கிற திட்டமிடுதல் அவர்களிடம் இல்லாமல் இருந்தாலும் அவர்கள் ஒரே நிறத்தில் உடை உடுத்தும்படியாய் அன்று அமைந்தது . ஆனால், அது சார்ந்த எந்த சிந்தனையும் வீராவிடத்தில் அப்போது இல்லை.
“சாப்பிட சொன்னதுக்கு சாப்பிடல?”அவள் கண்களைப் பார்த்து வீரா கேட்க,”அம்மா கோலா உருண்டை கொடுத்தாங்க சாப்பிட்டேன்” என்று அவன் கண்களைப் பார்த்துக்கொண்டே பதில் சொன்னாள் ஷாரா .
அந்த நொடியில் வீரா அவள் அணிந்திருந்த கண்ணாடியை கவனித்தான். அது பள்ளிக்காலத்தில் வீரா அணிந்திருந்த அதே மாதிரியான தனித்துவமான கண்ணாடி. அந்த கண்ணாடியின் காதுகளை இரண்டு பக்கமாகவும் மடக்க முடியும்.தன்னுடைய ஞாபகத்தில் தான் அதே மாதிரியான கண்ணாடியை வாங்கியிருப்பாளோ என்கிற எண்ணம் வீராவிற்கு . மனித மனம் இப்படியான கற்பனைகளை எப்போதும் நிறுத்திக்கொள்வதில்லை.
இப்படியான கற்பனைகள் தான் நம்மை மகிழ்ச்சியுடனும் பயத்துடனும் வைத்துக்கொள்கிறது.வீரா அப்படி நினைக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்.
அறைக் கதவை ஒரு பக்கமாக சாத்திவிட்டு ஊருக்கு கிளம்பினான் வீரா.
“ஒரு ஆட்டோ புடிச்சு அனுப்பி விடுங்க அப்படி தானே வச்சுருக்கீங்க இன்னும் சின்ன பிள்ளை மாதிரி” என்று சிரித்துக்கொண்டே வீராவின் அம்மாவிடம் சொன்னாள் ஷாரா.அவளுடைய பார்வையில் தன்னைப் பற்றி இருக்கும் இந்த பிம்பத்தை வீரா ரசிக்கவில்லை. அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கினான் வீரா.ஆனால் அன்றே மாறிவிடவில்லை.
வீரா ஊருக்கு கிளம்பினான், வீராவோடு சேர்ந்து ஷாராவும் கிளம்பினாள், அவர்கள் திட்டமிட்டும் திட்டமிடாத அந்த சந்திப்பு வீராவின் வீட்டிலேயே நிகழ்ந்தது.ஆனால், அன்று அது அங்கேயே முடிந்துவிடவில்லை.
ஒன்றாய் கிளம்பிய அவர்கள் எதுவரை ஒன்றாய் சென்றார்கள்.? எங்கே சென்றார்கள்? அவர்களின் பயணம் எப்படி தொடர்ந்தது? தொடர்ந்து படியுங்கள்.