வீராவும் ஷாராவும், வீராவின் வீட்டில் இருந்து ஒன்றாய் வெளியே கிளம்பினார்கள். மாடியில் இருந்து வேகமாக வீரா கீழே இறங்க அவனைத் தொடர்ந்து ஷாராவும்  கீழே இறங்கினாள்.

 

தன் அண்ணனைத் தவிர்த்து எந்த ஆண் பிள்ளைகளுடனும்  சேர்ந்து நடந்திருக்காத ஷாராவும் தன் தங்கையைத் தவிர்த்து எந்த பெண்  பிள்ளைகளுடனும் சேர்ந்து நடந்திருக்காத வீராவும் படியில் இருந்து ஒன்றாய் நடந்து வருவதை, வாய் திறந்து பார்த்துக்கொண்டிருந்தது வீரா வீட்டின் வாயிற் கதவுகள். ஒன்றாய் நடந்த அவர்கள் இடையில் ஒரு ஆள் தூரம் இருந்தது.அவர்கள் இருவருக்குமிடையில் இருந்த தூரம் அந்த எப்போதும் போல் அங்கேயேயே இருந்தது.

 

கொஞ்சம் தூரம் நடந்த அவர்கள், அவர்கள் படித்த பள்ளியை கடந்தார்கள். இருவரும் அந்த பள்ளியில் படித்துக்கொண்டிருந்த  சமயத்தில்  ஒருநாளும் அந்த பள்ளியில் சந்தித்துக்கொண்டதில்லை. அந்த பள்ளியில் படித்த வருடங்களில், அவர்கள் இடையே எந்த அறிமுகமும் கூட இல்லாமல் தான் இருந்தது.ஸ்ரீ கலா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு அடுத்ததாக அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் ஒன்றாக படித்த இரண்டாவது பள்ளி அது.

 

பன்னிரண்டு வயது இருக்கும் அவர்கள் ஒருவரை ஒருவர் தெரிந்த கொண்ட பொழுது.

 

வீரா அந்த பள்ளியில் இருந்து  வேறொரு பள்ளிக்கு மாறிவிட்ட பின்,சில வருடங்கள் கழித்து,ஷாரா படித்துக்கொண்டிருந்த அந்த பள்ளியில் நடந்த ஒரு கண்காட்சிக்கு வீராவின் பள்ளியில் இருந்து மாணவர்களை அழைத்துச் சென்றிருந்தார்கள் . அந்த மாணவ கூட்டத்திற்குள் வீராவும் இருந்தான். கண்காட்சிக்காக எல்லா வகுப்பறைகளிலும் சில மாற்றங்கள் செய்து எல்லோருக்கும் விடுமுறை அளித்து இருந்தார்கள்.

 

கண்காட்சி வந்த மாணவர்களை ஒவ்வொரு வகுப்பறைக்கும்  அழைத்துச்சென்றார்கள். அங்கே ஒவ்வொரு வகுப்பறையிலும் இரண்டு பேர் அல்லது மூன்று பேர் இருந்து விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த எந்த பொருட்களும், எந்த புகைப்படங்களும் வீராவின் கவனத்தில் இல்லை.எந்த விளக்கங்களையும் அவன் காதுகள் உள்வாங்கிக் கொள்ளவில்லை.அவன் கண்களும் கவனமும் ஷாராவை மட்டுமே தேடியது. அவன் இறுதியாக ஒரு வகுப்பறைக்குள் சென்றான். அங்கே ஷாரா நின்றுகொண்டிருந்தாள்.அவளை கவனித்த அந்த நொடி  மட்டும் தான் அவன் ஷாராவைப் பார்த்தான்.

 

கோவிலுக்குள் சென்று கண்ணை மூடி க்கொள்ளும் பக்தன் போல, அவள்  அங்கு இருக்கிறாள் என்பதை தெரிந்த கொண்ட பின் அவளை அவன் பார்க்கவேயில்லை பார்க்க வேண்டுமென்பதும் இல்லை. வீராவும் மற்ற மாணவர்களும் ஷாரா இருந்த இடத்தை நெருங்கினார்கள். வரிசையாக ஒரு பக்கம் மாணவர்கள் நின்று கொண்டிருக்க மறுபக்கம் ஷாரா நின்றுகொண்டிருந்தாள். அவர்களுக்கிடையில் எப்போதும்போல் அந்த இரண்டடி தூரம் இருந்தது.அந்த மாணவ கூட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்தது போல் காட்டிக்கொள்ளவில்லை. இத்தனை  நேரமும் இந்த பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறையிலும் “இந்த முகத்தை தான் தேடிக்கொண்டிருந்தேன்” என்பதை வீராவும் காட்டிக்கொள்ளவில்லை.

 

அங்கு வைக்கப்பட்டு இருந்த ஒரு காட்சியின் மாதிரியை ஷாரா விளக்கிக் கொண்டிருந்தாள். இப்போதும் வீராவின் காதுகள் எதையும் கவனிக்கவில்லை.ஷாராவை காணும் ஒவ்வொரு முதல் நொடியிலும் அவன் மனம் அதிலேயே உறைந்து நின்றுவிடுவதுண்டு.அன்றும் அதே தான் நடந்தது.

 

பார்வையை அவள் பக்கம் இருந்து திருப்பிக்கொண்டு, எத்தனை அழகாய் அவள் விவரிக்கின்றாள் என்று எண்ணிக்கொண்டான். அன்று அதே போன்ற விளக்கங்களையும் விவரிப்புகளையும்  முன்னர் அவன் கடந்த வகுப்புகளிலும்  கொடுத்தார்கள் தான், ஆனால், அவள் மட்டும் ஏதோ பகீரத பிரயத்தனப்பட்டு அதை செய்துகொண்டிருப்பது போன்ற எண்ணம் வீராவிற்கு.

 

வெளியில் வந்த பின், அவன் மனதில் நின்ற காட்சியை பார்த்த படி நடந்து கொண்டிருந்தான்,அவன் மனதில் நின்றுவிட்ட அந்த ஒரு காட்சியில்,இரட்டை ஜடையில்  ஷாரா நின்றுகொண்டிருந்தாள். அவள் கண்களும் முகமும் சற்றே சோர்வாக இருந்தது. அன்று அவள் அதிக நேரம் நின்று இருந்திருப்பாளோ! “பாவம் ல”என்று கவலை கொண்டான். ஆனால், அவள் எதிரே நின்று கொண்டிருந்த பொழுது அவனுக்கு இந்த சிந்தனைகள் எதுவும் எழவில்லை.

 

இந்த கண்காட்சி நடந்த அந்த பள்ளி ஷாராவும் வீராவும் ஒன்றாய் நடந்து செல்வதை மலைத்துப் பார்த்துக்கொண்டிருந்தது. அவர்கள் வேகமாக அந்த பள்ளியை கடந்தார்கள். மணி பிற்பகல் 3 அடித்திருக்கும். ஆனாலும், சூரியன் தாளவில்லை, அவர்கள் நடந்து சென்ற அந்த அக்கிரஹாரத்தில் இருந்த பெரிய பெரிய மாடிவீடுகளுக்கிடையில் எட்டிப்பார்த்தபடி அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை கேட்க அவர்களை பின் தொடர்ந்து கொண்டிருந்தான் சூரியன்.

“எப்பவும் இப்படி வேமா நடப்பீயா?” இதைகேட்படி ஷாரா வீராவைப் பார்த்தாள்.

 

வீரா அவள் பக்கமாக திரும்பினான், அவர்களின்  கண்கள் நான்கும் சந்தித்துக்கொண்ட அந்த தருணத்தில், “இன்னிக்கு உங்க கூட நடக்கிறதால கொஞ்சம் மெதுவா தான் நடக்கிறேன்” என்று நடந்துகொண்டே பதிலளித்தான்.

 

வீராவுடன் ஷாரா  நடக்கும் அந்த தருணத்தில் கடவுளே பக்கம் இருந்திருந்தாலும் வீராவின் கவனத்தில் இருந்திருக்க மாட்டார். அன்று ஷாராவிற்கும் அதே நிலை தான். அவளுடன் சேர்ந்து நடப்பதாலேயே அவளுடன் சேர்ந்து நடக்கிறோம் என்பதை மறந்திருந்தான் வீரா. அவனுடைய அந்த வேகமான நடையை அவளும் கூட ரசிப்பாள் என்று நினைத்தே கூட அவன் அப்படி பதிலளித்து இருந்திருப்பான்.

“chair ல ஏன்.. ஒழுங்கா உட்காரல? ” வீரா கேட்க

“அம்மா எல்லாம் கீழ உட்கார்ந்து இருந்தாங்க” அவள் பதிலளித்தாள்.

 

கைப்பிடித்துக்கொள்ளாமல்; ஒட்டி உரசாமல்; இப்படி கொஞ்சத்திலும் கொஞ்சமாக பேசி வேகமாக நடந்த அவர்கள், பேருந்து நிறுத்தத்தை வந்தடைந்தார்கள்.

ஷாராவை வீரா தேடிக்கொண்டிருந்த காலங்களில் ஒரு நாளும், பேருந்திற்காக அவள் காத்திருக்கும் நேரத்தில் நாமும் அந்த நிறுத்தத்தில் இருக்க மாட்டோமோ என்று தேடியிருக்கின்றான் வீரா.அவள் கல்லூரி பெயர் தாங்கி வரும் பேருந்துகளின் வெறுமையான ஜன்னல்களில் அவளைத் தேடியிருக்கின்றான். இன்று அந்த நிறுத்தத்தில் இருவரும் ஒன்றாய் ஒரே பேருந்திற்காக காத்துகொண்டு இருந்தார்கள்.

 

 

“friend வரா, wait பண்ணலாம்” என்று ஷாரா சொல்ல “யாரு வினோ வா? “என்று கேட்டான் வீரா.

“இல்ல அபி” என்றவளிடம் “வீட்ல என்ன சொன்னீங்க” என்றான் வீரா.

 

“சொல்லிட்டா வருவாங்க! இந்த மாதிரி ஒரு பையன் பாக்க போறேன் ன்னு” என்று ஷாரா சின்னதாய் சிரித்த பொழுது அந்த நான்கு கண்களும் மீண்டும் சந்தித்துக்கொண்டது.அவனுக்காக அவள் பொய்யெல்லாம் சொல்கிறாள் என்று அந்த பதிலையையும் அந்த கண்களில் இருந்த சிரிப்பையும் காண கொள்ளாமல், அவனால் அடக்க முடியாத அவன் புன்னகைகளை அவள்  மேலும் பார்த்து விடாதபடிக்கு, அண்ணாந்து மேலே வானத்தைப் பார்த்து கொட்டிக்கொண்டு இருந்தான். அந்த புன்னகைகளோ மீண்டும் அவன் மேலேயே  வந்து விழுந்தது.

 

புன்னகைகளால் அவன் நனைந்து கொண்டிருந்த பொழுது,”Project  சென்டர்  போகணும் சொல்லிட்டு , சரி அதான் அவளையும் வர சொல்லிட்டு , எல்லாம் சேர்ந்து அங்க பக்கத்துல கடையில் ரோஸ் மில்க் வாங்கி சாப்பிட்டு அப்பறம் project சென்டர் போகலாம் தான் பிளான்” என்று ஷாரா பேசுவதை கேட்க கேட்க அங்கே அவன் மகிழ்ச்சி கடலில் மிதந்து கொண்டிருந்தான்.

வந்த சிரிப்பை அடக்கிய படி, “எங்க” என்றான்.

“கோர்ட் கிட்ட” என்கிற பதிலை கேட்ட அவன், மேலும் எதையும் கேட்க வில்லை; எதையும் பேசவில்லை.அவனால் பேசமுடியவில்லை. அவள் பேசினாள்.

“எங்கோ பார்த்த மாதிரி …அப்ப நீ வெள்ளையா இருந்தீயா!” என்ற அவள் கண்கள் அவள் அணிந்திருந்த கண்ணாடிக்கு இடையில் இருந்த இடைவெளிக்கு மேலே விரிந்து கொண்டு இருந்தது. அவள் வாசலில் நுழைந்த பொழுது வீராவை கண்ட முதல் நொடியில் அவள் மனதில் தோன்றிய எண்ணங்களைப்  பற்றித்தான்  சொல்லிக்கொண்டு இருந்தாள்.

அவள் வீராவின் வலது பக்கம் நின்று கொண்டிருந்தாள், பேருந்தும் வலது பக்கம் இருந்து தான் வர வேண்டும். ஆனால், வீரா இடது பக்கமாக திரும்பிக்கொண்டிருந்தான்.வீராவால் அவள் பக்கம் திரும்பவே முடியவில்லை. வானத்தைப்பார்த்து சிந்தும் புன்னகைகள் அவன் மேலேயே மீண்டும் விழுந்து அவனை காட்டிக்கொடுக்கிறது என்று அவன் இடது பக்கமாக திரும்பிக்கொண்டிருந்தான்.

அவளாலும் கூட இயல்பாக பேச முடியவில்லை. அது தான் அந்த “எங்கோ பார்த்த மாதிரி …அப்ப நீ வெள்ளையா இருந்தீயா” என்ற நிறைவு பெறாத வாக்கியங்களாலான பேச்சுக்கு காரணம். அவர்கள் பேசிக்கொள்ளும் பொழுது எந்த வாக்கியங்களும் நிறைவுபெறுவதில்லை. ஆனாலும், அவர்களுக்கு புரிந்து கொள்வதற்கு அது போதுமானதாகவே இருந்தது.

 

தன் இடது பக்கமாக இருக்கும் வானம் இன்னும் எத்தனை தூரம் தள்ளி முடிகிறது என்று வீரா பார்த்துக்கொண்டிருக்க, அவன் அணிந்திருந்த அந்த பச்சை நிற முழுக்கை  சட்டையின் மேல் புறத்தில்; அவன் வலது கையில் ஒரு விரலின் நுனி அளவிற்கு  மட்டும் அவன் உயிரின் மொத்த கவனமும் குவிய, சட்டென அவன் திரும்பி பார்ப்பதற்குள் அவன் வலது கையை தொட்டு அழுத்திய அவளின் வலது கை ஆள் காட்டி விரல் அவளுக்கு வலது பக்கமாய் சென்று ஒளிந்துகொண்டது.

 

“அபி!” வீராவிற்கு அபியை அபி என்று அறிமுகம் செய்த பொழுது, சிரித்துக்கொண்டே ஷாராவின் தோள்கள் அழுந்த அவள் மீது சாய்ந்தபடி அபி ஷாராவின் காதோரம் ஏதோ சொல்ல, ஷாராவைப் பார்த்து என்னவென்று கேட்டான் வீரா.

 

“நம்ம  ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு ஓட்டுது” பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், சர்வ சாதாரணமாக ஒன்றுமில்லாதது தானே என்பது போல ஷாராவால் அதை சொல்ல முடிந்தது. ஆனால், அதை கேட்ட வீராவிற்கு தான் வெட்கம் தாளவில்லை.

 

வலது புறம் வந்துகொண்டிருந்த பேருந்தை கவனிக்காமல், அவன் கவனம் மீண்டும் இடது புறம் திரும்பியது.யாருமே சொல்லாததை அபி மட்டுமே விளையாட்டாக சொல்ல, அதை ஷாரா பெரிதுபடுத்தவே இல்லை.அபி சரியாக என்ன சொன்னாள் என்பதையும் அவள் சொல்லவில்லை.

 

வந்த பேருந்துகள் எல்லாம் கூட்டமாகவே வந்தது. அவர்கள் ஏறப்போகும் அந்த பேருந்தும் கூட கூட்டமாகவே வந்தது, அதுவரை வீராவிற்கு மனிதர்களும் கட்டிடங்களும் பேருந்துகளும் கண்ணுக்கு தெரியவேயில்லை. எப்போதும் போல் அன்றும் பேருந்தின் பின் படிக்கட்டுகள் வழியாகவே ஏறினான் வீரா. அபியும் ஷாராவும் முன் பக்கம் ஏறினார்கள்.

பக்கத்தில் நின்றிருந்த பொழுது வானத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தவன். கூட்டத்தில் அவளைத் தேடினான். பின் படிக்கட்டுகளுக்கு நேராக நின்று கொண்டிருந்த அவன் கண்களில், முன் படிக்கட்டுகளுக்கு பக்கமாய் இருந்த கைப்பிடியை பிடித்திக்கொண்டிருந்த சிவப்புக்கயிறு கட்டியிருந்த ஒரு கை மட்டும் தெரிந்தது. அந்த கைக்கும் அவன் கண்களுக்கும் இடையில் இருந்த வேறேதும் அவனுக்கு தெரியவில்லை.

அவள் தன்னை தேடுகிறாளா என்று அவன் தேட , அந்த நெரிசலுக்கு இடையில் அவள் அவனைப்பார்த்த பொழுது, அவன் கையில் இருந்த பயணசீட்டுகளை காண்பித்தான், டிக்கெட் எடுத்துட்டேன் என்று சைகை காட்டினான்.மீண்டும் கூட்டத்தில் அவள் முகம் மறைந்து போனது. அந்த சிவப்பு கயிறு மட்டும் வீராவின் கண்களுக்குள்ளேயே இருந்தது.

 

மூன்று வருட காத்திருப்புக்கு பின்னான சந்திப்பில் அவர்கள் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவர்களின் கண்கள் ஒரு நான்கு முறை சந்தித்துக்கொண்டிருந்திருக்கும் அவ்வளவு தான்.அந்த சந்திப்பும் கூட இன்னும் இரண்டு நிறுத்தங்களில் முடிந்துவிட போகிறது. வீரா பேருந்து முனையத்தில் இறங்க வேண்டும், அவர்கள் அதற்கும் முன்னதாக நீதிமன்ற நிறுத்தத்தில் இறங்கி விடுவார்கள்.அவர்களுடன் இறங்கி விடலாம் என்றெல்லாம் வீராவிற்கு உரைக்கவில்லை. அவளும் கூட  அதை கேட்கவில்லை.

மாநகராட்சி வளாகத்தை பேருந்து கடந்துவிட்டது. ஒரு விசில் சத்தம் கேட்டது அடுத்த சில வினாடிகளில் நீதிமன்ற நிறுத்தத்தில் வந்து நின்றது அந்த பேருந்து. அந்த மொத்த கூட்டத்தில் அந்த நிறுத்தம் வரை யாருமே இறங்கவில்லை. அந்த நிறுத்தத்திலும் கூட அபியும் ஷாராவும் மட்டுமே இறங்கினார்கள் அவர்களோடு  வீராவின் கண்களும் மனதும் இறங்கியது. அன்று ஞாயிற்றுக்கிழமை, நீதிமன்ற நிறுத்தத்தில் ஒருவரும் இல்லை.

 

இறங்கிய இரண்டு பேரும், பேருந்து இருந்த பக்கம் திரும்பி சாலையை கடக்கத் தயாரானார்கள். வீராவின் கண்கள் கடக்க மனமில்லாமல், ஷாராவைப் பார்த்துக்கொண்டிருந்தது,ஷாராவின் கண்கள் அவனை தேடுகிறதா? என்று வீராவின் கண்கள் தேடிக்கொண்டு இருந்தது.அவள் திரும்பவேயில்லை; வீராவை தேடவும் இல்லை. இரண்டு விசில் சத்தம் கேட்டது, பேருந்து நகரத் தொடங்கியது.

 

பேருந்தின் முன் படிக்கட்டு தொடங்கி ஒவ்வொரு இருக்கை வரிசையும் அபியையும் ஷாராவையும் கடந்துகொண்டிருந்தது, கடைசி வரிசைக்கு முன்னாள் வீரா நின்றுகொண்டிருந்தான். ஷாரா வீராவின் பக்கம் திரும்பவே இல்லை.

இன்னும் இரண்டு மூன்று வரிசை கடந்துவிட்டால் வீராவும் ஷாராவை கடந்துவிடுவான்.

சரியாக வீரா நின்றிருந்த வரிசை அவளை நெருங்குவதற்கு   ஒரு வரிசை முன்னதாக கொஞ்சமாக தலை நிமிர்த்திய ஷாரா, அத்தனை நொடிகளும் அவள் கண்களை அவன் கடக்கும் நொடிக்காகவே காத்திருந்தவள் போல், தலை திருப்பாமல்; கண் அசைக்காமல்; கொஞ்சமாக அவள் கருவிழிகளை மேல் உயர்த்தி; ஒரு கையில் அவள் தோழியின் வலது கையை பற்றிக்கொண்டு; மறு கையை கொஞ்சமும் உயர்த்தாமல்,அவளின் உள்ளங்கை தரையை பார்க்கும் படி விரித்து.கண் இமைக்கும் அளவில் மட்டுமே அதை அசைத்து; வாய் திறக்காமல்; கண்களை அசைக்காமல் அவனுக்கு ஒரு ‘bye’ சொன்னாள்.

 

அந்த பேருந்து நெரிசலில் இருந்த கொஞ்ச நஞ்ச இடைவெளிகளையும் கூட வீராவிடம் இருந்து வழிந்து கொண்டிருந்த புன்னகைகள் நிரப்புக்கொண்டிருந்தது.அவள் திரும்பி அவனைத் தேடி விடைபெற்றுக்கொண்டிருந்தாலும் கூட வீரா அத்தனை பரவசம் கொண்டிருந்திருக்க மாட்டான்.

 

பேருந்து முனையத்தை அடைந்து அவன் ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறிய அவன் கண்களுக்குள் அந்த சிவப்பு கயிறும், கண்களால் அவள் சொன்ன “bye” மட்டுமே  இருந்தது.

 

அத்தனை நேரமும் உலகம் மறந்து கிடந்தவன் சுயநினைவுக்கு வந்தான்.

 

“ப் ச் !” எப்பவும் வேகமா தான் நடப்பீயா என்று கேட்ட பொழுது வேகமாக நடப்பது அவளுக்கு சிரமமாக இருந்ததை அவள் கண்கள் சொன்னது அவனுக்கு உரைத்தது.

 

“நம்ம கறுப்பாகிட்டோமா?” என்று அந்த சந்திப்பில் அவன் மனதில் நின்று விட்ட தருணங்களை அசைபோட்ட படி ஊர் வந்து சேர்ந்தான். ஆனாலும் அவன் இன்னும் முழுதாக தெளியவில்லை.

 

மறுநாள் காலை கல்லூரிக்கு வெள்ளை சட்டை அணிந்து அவன் வகுப்பிற்குளே நுழைந்தவுடன் , “என்ன வீரா? யாருக்கு இந்த reservation” என்று அரசன் கேட்க,

 

“என்ன reservation?” புரியாமல் கேட்டான் வீரா.

 

“இன்னிக்கு valentines day அதுனால தான் நான் black போட்டு வந்து இருக்கேன்” என்று அரசன் விவரிக்க ஆரம்பித்த பொழுதில்,’இன்னிக்கு valentines day’ என்பதை கேட்டவரை  தான் வீராவின் கவனம் அரசன் பேசுவதில் இருந்தது.

 

“அப்ப இத்தனை வருஷம் கழிச்சு மீட் பண்ணது? நேத்து என்ன dress?” நாலாபக்கமும் நாலு எண்ணங்களும் கேள்விகளும் வீராவை சூழ்ந்தது.

அவளைப் பார்க்கப்போகிறோம் என்கிற மிதப்பில் இருந்தவனுக்கு நாள் கிழமையெல்லாம் கவனத்தில் இல்லாதது பெரிய ஆச்சிரியம் ஒன்றும் இல்லை.ஆனால், அவனுடைய எண்ணம் இதெல்லாம் ஷாரா கவனத்தில் கொண்டிருந்து அதை அவன் கவனிக்காமல் விட்டுவிட்டானோ என்பது தான்.

 

ஷாராவுடனான எந்த தருணத்தையும்  வீரா மறக்க போவதில்லை, அரசன் தேதியை சுட்டிக்காட்டிய பின், அவர்கள் சந்தித்துக்கொண்ட தேதியும் கூட அவன் மறந்துவிட போவதில்லை.

 

இந்த சந்திப்பிற்கு பின்னால் அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் எப்போது பேசிக்கொண்டார்கள்? தொடர்ந்து படியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *