வருஷம்-2011
எப்போதும் போல், எல்லா நாளும் போல், அன்றும் சீக்கிரம் எழுந்துவிட்டான் வீரா.அது அந்த ஆங்கில மாதத்தின் தொடக்க நாள், வாரத்தின் கடைசி வேலை நாள்.
மாடிப்படியின் பக்கத்தில் இருந்த சாவியை எடுத்து வாயிற்கதவுகளை திறந்து வெளியில் வந்தான் வீரா. விடியலின் பரபரப்பு இன்னும் எந்த வீட்டிற்குள் இருந்தும் வெளி வரவில்லை.
அவனுடைய பிரஷை எடுத்து அதில் பேஸ்ட் வைத்துக்கொண்டு எப்போதும் போல், இடுப்பளவு உயரம் கொண்ட சுற்றுச்சுவரின் மீது அமர்ந்துகொண்டு பல் துலக்க ஆரம்பித்தான்.அவனுக்கு வசதியாக வீடுகளில் புழங்கும் நீர் வடியும் வாய்க்கால் அந்த சுவற்றை ஒட்டி நிறுவப்பட்டிருந்தது.
அந்த வீதிக்குள் வருபவர்கள் எல்லாம் அந்த வீட்டின் இடது புறமாக இருந்து தான் வர வேண்டும்.வீட்டுச் சுவற்றில் இருந்து வீதியின் அந்த இடது புறத்தைப் பார்த்தப் படி, அவன் பல் துலக்கிக்கொண்டிருந்த பொழுது,அந்த இடது புறத்தில் நான்கு வீடுகள் தள்ளி இருந்த ஒரு இரண்டு மாடி வீட்டிற்கு கொஞ்சம் மேலே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த சூரியனைப் பார்த்த வீரா, வாயில் ப்ருஷை வைத்தபடி அப்படியே நின்று சின்னதாய் புன்னகைத்துக்கொண்டான்.
சூரியன் தினமும் பிறப்பதில்லை. ஆனால், ஓவ்வொரு நாளும் ஒரு விடியல் பிறக்கிறது. ஒவ்வொரு விடியலையும் பார்த்து வீரா இப்படிப் புன்னகைத்திருக்க மாட்டான்.
அதே புன்னகையோடு கிளம்பி, கூடத்தில் இருந்த தேதி காலண்டருக்கு அருகே வந்து. அந்த தேதித்தாளை, இடதுபுறத்தில் கீழ்ப்பக்கம் பிடித்து, கொஞ்சமாய் இழுத்து, சட்டென்று கிழித்து, சில நொடிகள் நின்று,கொஞ்சம் தலைசாய்த்து, அந்த தேதியைப்பார்த்து குதூகலம் அடைந்தான். அன்று வெள்ளிக்கிழமை.
“வீட்டுக்கு வந்துட்டு கூட சீக்கிரம் கிளம்பலாம் ல” வீராவின் மாமா கேட்டார்.
“இல்ல மாமா லேட் ஆகிடும், நான் காலேஜ் முடிஞ்சு நேரா அப்படியே ஊருக்கு போறேன்” வீரா முன்னம் எடுத்த முடிவில் தீர்மானமாய் இருந்தான்.
வீரா அவனுடைய மாமா வீட்டில் தங்கித்தான் படித்துக்கொண்டிருந்தான். கல்லூரியில் சேர்ந்த மூன்று வருடங்களில், ஒரு முறை கூட வெள்ளிக்கிழமையன்றே கல்லூரியில் இருந்து நேராக அவன் ஊருக்கு கிளம்பியதில்லை. இந்த முறை கிளம்ப வேண்டும், இந்த நாளில் இப்படி கிளம்ப வேண்டும் என்பதை அவன் தீர்மானித்து 7 மாதங்களுக்கு மேல் ஆகிறது.
எப்போதும் வேகமாக நடக்கும் வீரா மனதில் எண்ணங்களை சுமந்து கொண்டு அவசரமே இல்லாமல் நடந்து பேருந்து நிறுத்தத்தை அடைந்தான். அவனைப் பேருந்து நிறுத்தத்தில் கண்ட அவனுடைய கணக்கு வாத்தியார், அவனை அவர் வண்டியில் ஏற்றிக்கொண்டார். இது அவ்வப்போது நடக்கும் ஒன்று தான்.
கூட்டமான பேருந்தில் அன்று சென்றிருந்தாலும் கூட வீரா தனி உலகத்தில் இருந்திருப்பான். கூட்டமில்லாமல், தனியாய் கணக்கு வாத்தியார் பின்னாடி அமர்ந்துகொண்டு பைக்கில் பயணம். சுற்றியும் வானம். அவன் சிரிப்பை அவனே கண்ணாடியில் பார்த்துக்கொண்டான்.
அந்த வண்டி அவர்களின் கல்லூரியை அடைந்தது. வீராவின் மனமோ மாலை ஊருக்கு கிளம்ப போவது பற்றிய கனவுலகிலேயே தங்கிவிட்டது.
முதல் இரண்டு மணி நேரம் முடிந்து இடைவெளியில் எல்லோரும், இரண்டு மூன்று பேராய் வகுப்பறையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்கள்.செல்வா, விமல் வீரா கடைசி பெஞ்சில் இருந்து கிளம்பி வெளியில் செல்ல போகும் பொழுது, முதல் பெஞ்சில் தனியாக உட்கார்ந்திருந்த மோனிகாவிடம் பேசுவதற்கு நின்றான் செல்வா. அவன் நிற்பதற்கு முன்னாள் நகர்ந்த வீராவும் விமலும், செல்வா நின்றுவிட்டதை கவனித்து அவர்களும் நின்றுவிட்டார்கள்.
செல்வாவிடம் பேசிக்கொண்டிருந்த மோனிகா அந்த முதல் பெஞ்சில் இருந்து தள்ளி ஜன்னலோரம் நின்றுகொண்டிருந்த வீராவை அழைத்து, “என்ன ஜீனியஸ் இன்னிக்கு உங்க அவங்களுக்கு பிறந்த நாள்! ட்ரீட் எங்க? ஒரு மிட்டாய் கூட வாங்கித்தரல” என்றாள்.
“அவன் எங்களுக்கே ஒன்னும் வாங்கித் தரல” சிரித்துக்கொண்டே சொன்னான் செல்வா.
“வைப்போம்” என்று சொல்லும் போதே வீராவை வெட்கமும் சந்தோஷமும் தள்ளாட வைத்தது. ஆனாலும் அவன் தள்ளாடவில்லை.
“நமக்கு தோனவே இல்லையே!” அவன் மனம் சொன்னது.
ஷாராவிற்கு பிறந்தநாள் அன்றே அவளிடம் பேசிவிட வேண்டும் என்பதற்காகவே அன்று மாலையே ஊருக்கு செல்ல தீர்மானித்து இருந்தான்.அந்த நாள் வருவதற்கு முன்னதாகவே விமல் போனில் இருந்து ஒரு பத்து முறை அட்வான்ஸ் வாழ்த்து செய்திகள் அனுப்பியிருப்பான். பதினோரு பேர் கொண்ட குழுக்களின் உதவி இல்லாமல் அத்தனை வாழ்த்துச் செய்திகள் அவனாகவே எழுதி அனுப்பிக்கொண்டிருந்தான்.
கல்லூரியில் சேர்ந்த மூன்று வருடங்களில்,அவனுடைய பிறந்தநாளுக்கே கூட கல்லூரி நண்பர்களுக்கு எதுவும் செய்ததில்லை. அவனுடைய எல்லா பிறந்தநாளுக்கும் அவன் ஊருக்கு சென்றுவிடுவதுண்டு.
நம்முடைய பிறந்தநாளை நாமே கொண்டாடுவதில் என்ன மகிழ்ச்சி இருந்துவிட போகிறது. இன்று ஷாராவின் பிறந்தநாள். இது ஒன்றே வீராவை எல்லையற்ற மகிழ்ச்சியில் வைத்திருக்க; அதை கொண்டாட மோனிகா ஒரு வழி கோரியிருக்கின்றாள்.
உணவு இடைவேளை வந்தது. வீரா கொண்டு வந்த சாப்பாடு, இடைவேளைக்கு முன்னமே முடிந்திருந்தது. நண்பர்களுடன் வெளியில் சாப்பிட சென்று விட்டு திரும்பும் பொழுது, கல்லூரிக்கு வெளியே இருந்த கடைக்கு விமலை அழைத்துச் சென்றான்.
அப்பா செலவுக்கு கொடுக்கும் காசை மரியாதை நிமித்தமாக வீரா அவன் மாமாவிடம் கொடுத்துவிடுவது வழக்கம். அவனுடைய மாமா, தினமும் சரியாக பேருந்து செலவிற்கு ஆகும் காசை மட்டுமே வீராவிற்கு கொடுப்பார். கணக்கு வாத்தியார் தயவிலும் நண்பர்கள் தயவிலும் சேரும் காசை சேர்த்து வைத்து வீரா நண்பர்களை வெளியில் அழைத்துச்செல்லும் பொழுது செலவழிப்பதும் வழக்கம்.
அன்றுவரை அவனிடம் சேர்ந்திருந்த காசு நான்கு டைரி மில்க் சாக்லேட் வாங்குவதற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.
கடையை விட்டுத் தள்ளிவந்ததும் ஒரு சாக்லேட் ஐ விமல் செல்வா வீரா மூன்று பேரும் பிரித்துக்கொண்டார்கள்.மோனிகாவிடம் மற்ற மூன்று சாக்லேட்களையும் கொடுத்தான்.
விமல் கொடுத்த சாக்லேட் ஐ வாங்கிக்கொண்டு “என்ன மூனு சாக்லேட், இருக்கு” ஆச்சிரியமாய் கேட்டாள் மோனிகா.
“உனக்கு மட்டும் சாக்லேட் கொடுத்து! உன் பக்கத்துல உட்கார்ந்து இருக்க ரெண்டு பேரை என்ன பண்ணுவ? அவய்ங்களுக்கு கொடுத்தா கொடு இல்ல நீயே வச்சு சாப்பிடு” என்றான் வீரா.
“ஈவினிங் ஊருக்கா?” என்று மோனிகா கேட்க, “ஆமா நேரா காலேஜ் ல இருந்து” என்று பதிலளித்தான் வீரா.
விமல் செல்வா மோனிகா தவிர அந்த வகுப்பில் யாருக்கும் ஷாராவிற்கு பிறந்தநாள் என்பது தெரியாது. அவர்களுக்குமே கூட ஷாராவின் நிஜப்பேர் தெரியாது.ஷாராவிற்கு வீரா வைத்திருக்கும் ஷாரா என்கிற பெயரும் தெரியாது.
“வீராவுக்கு ஸ்கூல் டைம் ல இருந்து ஒரு பொண்ணை பிடிக்கும், பேர் கேட்டா சொல்ல மாட்டான், டாட்”. இந்த அளவில் மட்டுமே தான் அந்த வகுப்பறையில் இருந்தவர்கள் தெரிந்துவைத்திருந்தார்கள். அந்த ‘டாட்’ என்பதையே அவர்கள் ஷாராவின் பெயராக ஆக்கிக்கொண்டார்கள்.
வீரா வேகமாகவே தான் கிளம்பினான். ஆனால், அன்று அந்த மாலையில் நேரம் மட்டுமே வீராவை விட வேகமாக நகர்ந்தது.
கல்லூரியில் இருந்து பேருந்து நிலையத்திற்கு செல்வதற்குள் அத்தனை போக்குவரத்து நெரிசல், இறங்கி ஓடி விடலாம் என்று அவன் நினைத்த பொழுது மெதுவாக நகர ஆரம்பித்த வாகனங்கள் வீராவின் பொறுமையை பெரிதும் சோதித்தது. இது, தினமும் வாடிக்கையான ஒன்று தான் என்றாலும், வீராவால் அன்று அந்த நெரிசலை ஏற்படுத்திய தாமதத்தை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
ஒரு வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தான். அவன் ஊருக்கு செல்லும் பேருந்து மீண்டும் அந்த நெரிசலுக்குள் சென்று மீள வேண்டும் என்ற எண்ணம் வந்த பொழுதே அவனுக்கு கோபம் வந்தது. அந்த கோபத்தால் உடனடியாக ஆகப்போவது ஒன்றும் இல்லை.
அவன் வீடு வந்து சேர்ந்து போனை கையில் எடுத்த பொழுது கடிகாரத்தின் சிறிய முள் ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது.அவளுக்கு ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்பிவிட்டு அவள் பதிலனுப்ப காத்துக்கொண்டிருந்தான்.
வேலை முடிந்து வீடு திரும்பிய அவள் அனுப்பிய பதில்களில் அவளின் சோர்வு வெளிப்பட்டது.
“யாரும் கிப்ட் எல்லாம் கொடுக்கலயா?”
அவளுக்கு ஏதேனும் வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று வீராவிற்கு ஆசை. ஆனால், அது அவனே சம்பாதித்தாக இருக்க வேண்டும் என்று நினைத்ததாலும், அன்று அவர்கள் சந்தித்துக்கொள்ள வாய்ப்பில்லாமல் போனதாலும் அவன் ஏதும் வாங்கவில்லை. நிறைவேறாத நம் மனதின் ஆசைகளும் எண்ணங்களும் பிறர் மூலம் நிகழும் பொழுதும் கதைகளில் படிக்கும் பொழுதும் மனம் கொஞ்சமாக திருப்பதிப் பட்டுக்கொள்ளும். அந்த திருப்திக்காக ஒரு ஆர்வத்தோடு வீரா ஷாராவிடம் கேட்ட கேள்வி தான், “யாரும் கிப்ட் எல்லாம் கொடுக்கலயா?”
வீரா கேட்டதற்கு வேறு காரணங்களும் கூட இருந்திருக்கலாம். வீராவைப் போல்,ஷாராவின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் மோசமான ரசனைக்கு சொந்தக்காரர்கள் யாரும் இருக்கிறார்களா என்று தெரிந்து கொள்வதற்காகவும் கூட வீரா அதை கேட்டிருக்க கூடும்.
“யாரும் ஒன்னும் கொடுக்கலை” என்று பதில் அனுப்பிவிட்டு அவள், “தூங்க போறேன்” என்று மெசேஜ் அனுப்பினாள்.
அவளிடம் அன்று எந்த உற்சாகமும் இல்லை. வீராவிடம் பேசுவதிலும் கூட அவள் பெரிதாக அக்கறை காட்டவில்லை.அதை புரிந்து கொண்டதால் வீரா அவளை போனில் அழைத்துப்பேசவில்லை.எந்த காரணங்களுக்க்காவும் வீராவின் செயல்கள் அவளுக்கு எரிச்சலூட்டி விடக்கூடாது என்பதிலும் வீரா கவனமாக இருந்ததாலேயே பல நேரங்களில் அவன் பேச நினைத்ததை பேசியதில்லை. சில நேரங்களில் பேச வேண்டும் என்கிற எண்ணம் இருந்தும் பேசியதில்லை.
விடிந்தது, வேகமாக எழுந்து கிளம்பி ஷாராவிற்கு, ‘குட் மார்னிங்’ அனுப்பிவிட்டு காத்துக்கொண்டிருந்தான் வீரா.
அன்று சனிக்கிழமை, அவளுக்கு அன்றும் வேலை நாள் . அவள் எப்படியும் கிளம்பிவிட்டு மெசேஜ் அனுப்புவாள் என்று எதிர்பார்த்தே தான் வேகமாக எழுந்து கிளம்பி குட் மார்னிங் அனுப்பிவிட்டு காத்துக்கொண்டிருந்தான் வீரா.
கிளம்பும் பொழுது எப்படியும் அவள் மெசேஜ் அனுப்புவாள் என்று நம்பிக்கொண்டிருந்த வீரா,அவள் மெசேஜ் அனுப்பினால், மில் நிறுத்தத்தில் அவள் பேருந்தில் ஏறும் நேரத்தை தெரிந்துகொண்டு வீட்டில் இருந்து கிளம்பி, தபால் அலுவலகத்திற்கு பேருந்து வரும் பொழுது அதே பேருந்தில் அவனும் ஏறிவிடலாம் என்று எண்ணிக் காத்துக்கொண்டிருந்தான் வீரா. அவன் மனதில் இருந்த இந்த திட்டத்தை அவன் ஷாராவிடம் சொல்லவில்லை.
ஆங்கிலத்தில் surprise என்று சொல்வார்களே, அப்படி surprise ஆக அவளைச் சந்திக்க வேண்டும் என்று ஆவலோடு காத்துக்கொண்டிருந்தான் வீரா.குளித்து கிளம்பித் தயாராக இருந்தவன் கட்டிலில் படுத்தபடி போனை எடுத்துப் பார்த்துக்கொண்டே இருந்தான். அவளிடம் இருந்து ஒரு மெசேஜும் வரவில்லை. முதல் நாள் பயணம், காலையில் சீக்கிரமாக எழுந்தது என்று எல்லாம் சேர்த்து அவனை அறியாமல் அவன் கொஞ்சம் அயர்ந்து தூக்க நிலைக்கு செல்ல,அவன் போன் அதிர்ந்தது. அது அவனின் தூக்க நிலையை கலைக்க போதுமானதாக இல்லை. சில நிமிடங்கள் கழித்து, கண் விழித்த வீரா, தான் தூங்கிவிட்டதை உணர்ந்து வேகமாக போனை எடுத்து மணிப் பார்த்தான்.
இந்நேரத்திற்கு அவள் அலுவலகத்தை அடைந்திருப்பாள். அவள் அனுப்பிய குட் மார்னிங்குமும் கூட அவள் அலுவலத்தில் இருந்து அனுப்பியதே. வீரா நினைத்தது போல் கிளம்பும் பொழுது ஷாரா வீராவிற்கு எந்த மெசேஜ் உம் அனுப்பவில்லை. surprise ஆக ஷாராவைச் சந்தித்து அவளோடு அவள் அலுவலகம் வரை பயணிக்க நினைத்த வீராவிற்கு surprise ஆக மிஞ்சியது ஏமாற்றம் தான்.
அவள் பிறந்தநாள் அன்று அவளிடம் பேச வேண்டுமென்று நினைத்த வீராவால் பேசவும் முடியவில்லை. மறுநாள் சந்தித்துவிட வேண்டும் என்று நினைத்த வீராவிற்கு அந்த சந்திப்பும் கைகூடவில்லை. அவன் மீண்டும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். ஆனால், அந்த வருடத்திற்குள் என்னவெல்லாம் நடக்கும் என்பதை வீரா அறிந்திருக்கவில்லை. காலம், அடுத்த ஓரிரு மாதத்திற்குள்ளாகவே வீராவிற்கு பெரிய பெரிய surprise ஏமாற்றங்களை பரிசாக வைத்துக் காத்துக்கொண்டிருந்தது. அது தெரியாமல் வீரா காத்துக்கொண்டிருந்தான்.
வீரா ஷாரா வாழ்க்கையில், அடுத்த ஓரிரு மாதத்தில் என்ன நடந்தது? தொடர்ந்து படியுங்கள்.