வருஷம் 2012-பிப்ரவரி மாதம்.
ஏழாவது செமஸ்டர் தேர்வின் மறுபதிப்பீட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு இருந்தது.
“என்ன வீரா! revalution ல result ல பாஸ்ஸா” என்றான் விஜய்.
உள்ளுக்குள் அத்தனை அதிர்ச்சியும் சோகமும் இருந்தாலும் பெரிதாக வெளிக்காட்டிக்கொள்ளாமல், “இல்லை டா!” என்றான் வீரா.
“கண்ணை மூடிக்கிட்டு போய் பரீட்சை எழுதினாலும் இந்த வீரா பாஸ் ஆகிடுவான்” சில மாதங்களுக்கு முன்னர், இதே விஜயிடம் வீரா சொன்னது வீராவின் நினைவிற்கு வந்தது.
“மோனி! நீ பாஸ் ஆகிட்டியா” விஜய் கேட்டதற்கு தலையசைத்துவிட்டு சென்ற மோனி வீராவிடம் ஒன்றும் பேசவில்லை. மோனி வீராவிடம் ஏதேனும் பேசியிருக்க வேண்டும். அவள் பேசாமல் கடந்ததை கவனித்த வீராவின் மனம் மோனியிடம் இருந்து ஆறுதல் வார்த்தைகளை எதிர்பார்த்திருந்திருக்கும்.
“எனக்கும் அதான்டா ஆச்சரியமா இருக்கு! அந்த புள்ள பாஸ் ஆகிடுச்சு இவனுக்கு பெயில் போட்டானுங்க! இவன் மயிரு! எழுத்தா எழுதி வச்சிருந்தான்” என்று நோபல் சார் மற்ற மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது பேசாமல் சென்ற விட்ட மோனிகாவைப் பார்த்துக்கொண்டிருந்தான் வீரா.
மோனிகாவும் வீராவும் நண்பர்கள் இல்லை தான்; விமலும் செல்வாவும் வீராவின் நண்பர்களாக ஆகியிருக்காவிட்டால், வீரா மோனிகாவிடம் பேசியிருக்க வாய்ப்பில்லை தான்; நான்கு வருடங்களில் அவன் முதல் முறையாக மோனிகாவிடம் பேசியது மூன்றாம் வருடத்தில் தான். அதுவும் கூட விமல், செல்வா, மோனிகா இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் தருணங்களில் அங்கே வீராவும் இருக்க நேர்வதால் நடக்கும் எதார்த்தமான விசாரிப்புகள்; அதைத் தாண்டி,வீராவின் ரெகார்ட் நோட்கள் தேவைப்படும் பொழுதுகளைத்தவிர , மோனிகாவும் வீராவும் பேசிக்கொண்டதேயில்லை தான்.ஆனாலும் அந்த தருணத்தில் மோனிகா தன்னிடம் பேசியிருக்க வேண்டும் என்று வீரா எதிர்பார்த்ததில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை.
“உங்க அவங்க சும்மா கூட ஒரு வார்த்தை கேட்கலை டா!” விமல் மோனிகாவிடம் இதைப்பற்றி பேசுவான் என்று தெரிந்தே விமலிடம் தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினான் வீரா.
சரியாக ஒரு மாதத்திற்கு முன்னர்,ஏழாவது செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருந்தது.
வகுப்பிற்குள் வந்த நோபல் சார், “எனக்கு ரிசல்ட் போச்சு! நீயெல்லாம் எப்படி டா பெயில் ஆன? அதுவும் என் பேப்பர் ல தான் ஆகனுமா!” என்று வீராவைப் பார்த்து கேட்டார்.
“அந்த புள்ள அது பேர் என்ன? ஆஹ்ன் மோனிகா அதுவும் பெயில் ஆகிருக்கு” என்று நொந்து கொண்டார் நோபல் சார்.
வீராவிற்கு அருகில் நின்றுகொண்டிருந்த விமல் கொஞ்சம் அதிர்ச்சியானான்.
“ஒன்னும் பிரச்சனை இல்லை சார் revaluation போடுவோம்” கொஞ்சமும் அதிர்ச்சியாகாத வீரா நோபல் சாரிடம் இப்படி சொல்லிக்கொண்டு இருந்தான்.
“நீ எழுத்து ஒழுங்கா எழுதுனா பரவாயில்ல! பேப்பர் வாங்கு பாப்போம்” என்று நோபல் சார் நகர்ந்துவிட்டார்.
உணவு இடைவேளைக்கு பின் எல்லோரும் கிளம்பிவிட்டார்கள். விமல், “இரு டா போகலாம்” என்று வீராவை இழுத்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தான்.
அங்கே ஒரு வகுப்பறையை நெருங்கிய பொழுது அந்த வகுப்பறையின் ஜன்னல் வழியே விமலின் பார்வை போனதை தொடர்ந்து வீராவின் பார்வையும் போனது. விமல் ஏன் சுற்றிக்கொண்டிருந்தான் என்பதை வீரா புரிந்துகொண்டான்.
யாருமில்லாத அந்த வகுப்பறையில் மோனிகா மட்டும் தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். எப்போதும் கலகலவென இருக்கும் விமலால் இப்போது கலகலவென இருக்க முடியவில்லை.
“சரி! அழுகாத ” என்பதைத்தவிர அவனால் வேறெதுவும் பேச முடியவில்லை.
வீரா பேச ஆரம்பித்தான். மோனிகாவால் அதற்கு மேல் அழுக முடியவில்லை. வீரா பேச ஆரம்பித்த சில நிமிடங்களில் வந்த சிரிப்பை இப்போது அவளால் அடக்கவும் முடியவில்லை.அவள் கண்ணீரின் கடைசி துளிகளை துடைத்துவிட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.
“உனக்கு விளையாட்டா இருக்கா? உன்னால எப்படி இப்படி இருக்க முடியுது!” என்று தன் சோகம் மாறியதை ஏற்றுக்கொள்ள முடியாமல் வீராவைப்பார்த்து சிரித்துக்கொண்டே இந்த கேள்விகளை கேட்டாள் மோனிகா.
“அப்படியே இருந்துட்டேன்! விளையாட்டவே .நாளைக்கு வரும் பொழுது சாக்லேட் வாங்கிட்டு வர! அப்பறம் எனக்கும் சேர்த்து pray பண்ணிக்கோ” என்று சொல்லிவிட்டு விமலையும் கிளப்பிக்கொண்டு அந்த வகுப்பறையை விட்டு வீரா வெளியேறினான்.
சில நாட்களில் நோபல் சார் கைகளுக்கு வீராவுடைய தேர்வுத்தாள் பிரதியும் மோனிகாவுடைய தேர்வுத்தாள் பிரதியும் வந்து சேர்ந்தது. அவருடைய மதிப்பீட்டிலும் கூட மோனிகாவால் தேர்ச்சி அடையமுடியவில்லை.
வீரா தேர்ச்சி அடையவேண்டிய மதிப்பெண்களை விடவும் கொஞ்சம் அதிகம் பெற்றிருந்தான்.
ஆனால், பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த மறுமதிப்பீட்டு முடிவுகள் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது.தேர்வுத்தாள் பிரதியைப் பார்த்தவர்கள் வீரா தேர்ச்சியடைந்து விடுவான் என்றே தான் நினைத்துக்கொண்டு இருந்தார்கள்.மாறாக மோனிகா தேர்ச்சி அடைந்திருந்தாள். அவள் துவண்டு இருந்த பொழுது அவள் சோகத்தை மாற்றி சிரிக்க வைத்த வீராவிடம் தான் மோனிகா சம்பிரதாயத்துக்கு கூட ஏதும் பேசாமல் நகர்ந்து சென்றாள்.
அவள் அந்த இடத்தை விட்டு மறைந்ததும் வீராவும் மனதில் இருந்த அந்த ஏமாற்றமும் மறைந்தது.ஆனால், அவன் மனதில் மறையாமல் இருக்கும் ஷாரா பற்றிய நினைவுகள் வந்தது.
2011 அக்டோபர் மாதம், அந்த விடுமுறை முடிந்து கிளம்பும் பொழுது, “இந்த போன் நான் வச்சுக்கிறேன்” என்று அம்மாவின் போனை எடுத்துக்கொண்டு ஊருக்கு கிளம்பினான்.
ஒரு மாதம் கழித்து ஷாரா அனுப்பிய ‘HI’ மெசேஜை தவறவிட்ட வீரா, இனி எப்போதும் போன் நம் கையில் இருக்க வேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டான்.
கடைசி செமஸ்டர். நண்பர்களுடன், வெளியில் தங்கிக்கொள்கிறேன் என்று சொல்லி மாமா வீட்டில் இருந்த தன் உடமைகளை எடுத்துக்கொண்டு கண்ணன் இருந்த அறைக்கு இடம்பெயர்ந்தான். இதற்கு முன்னரும், செமஸ்டர் தேர்வுகளின் பொழுது வீராவும் நண்பர்கள் கூடுவது கண்ணனின் அறையில் தான்.
கையில் போன் அவள் மீண்டும் பேசுவாள் என்கிற நம்பிக்கையில் தினமும் ஷாராவிற்கு ஒரு மெசேஜ். வீராவின் நாட்கள் இப்படி நகர்ந்து கொண்டிருந்தது.
2011 நவம்பர் 12ம் சனிக்கிழமை. முதல் நாள் ஒருத் தேர்வை எழுதி முடித்திருந்த நண்பர்கள் எல்லோரும் கூடி படம் பார்ப்பதும் அரட்டை அடிப்பதுமாக இருந்தார்கள்.அது அவர்கள் எப்போதும் செய்வது தான் என்பதால் அன்று புதிதாய் ஒரு முயற்சியில் இறங்கினார்கள்.
தங்களுக்கு தெரிந்த மற்ற நண்பர்களுக்கு அவர்களுக்கு தெரியாத எண்ணில் இருந்து அழைத்து பேசி அவர்களை மிரட்டுவது கலாய்ப்பது என்று ஆரம்பித்தார்கள். திலக்கும் வீரா என்ன பேச வேண்டுமென்று மேலோட்டமாய் சொல்ல கண்ணன் ஒவ்வொரு எண்ணிற்கும் அழைத்துப் பேசிக்கொண்டிருந்தான்.
கொஞ்ச நேரத்தில் அவர்கள் யாருக்கு பேசுவது என்று தெரியாமல், ஒவ்வொருவரின் போனையும் எடுத்து customer care க்கு அழைத்து அவர்களை கலாய்க்கலானார்கள்.
வீரா: சார்! குட் ஈவினிங் சார்
customer care : சொல்லுங்க சார்! குட் ஈவினிங்
வீரா: என்ன தெரியுதா சார்?
customer care : தெரியல சார்
வீரா: இப்ப உங்களுக்கு குட் ஈவினிங் சொன்னேன் ல அது நான் தான் சார்..
கண்ணன் : சார் அவனை விடுங்க என்னை தெரியுதா?
customer care : இல்லை சார்
கண்ணன் : உங்களுக்கு குட் ஈவினிங் சொன்னான் ல அவனோட friend சார்.
கண்ணன் அதை சொன்ன தொனியில் சிரிப்பை அடக்க முடியாமல் எதிர்முனையில் இருந்தவர் “சொல்லுங்க சார் என்ன வேண்டும்” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
இப்படியே ஒவ்வொருவர் போனில் இருந்தும் customer care க்கு அழைத்து அவர்களை கலாய்த்துக்கொண்டிருந்தார்கள். சில நேரங்களில் இவர்களின் அழைப்பை ஏற்றவர்களும் இவர்களை ரசித்து சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
மணி 12 அடித்தது, ரமேஷ் உள்ளே இருந்து கேக் ஐ எடுத்துக்கொண்டு வந்தான்.இங்க வேணாம் “வெளிய வச்சு வெட்டுவோம்” என்றான் வீரா. தெருவில் வைத்து கேக் வெட்டி பாலாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பித்தது.
கேக் ஐ மூஞ்சியில் பூசிக்கொள்ளும் விளையாட்டுகளை முடித்துவிட்டு பிரதான சாலையில் இருக்கும் டீக்கடைக்கு நடக்க ஆரம்பித்தார்கள்.
திலக் எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தான். டீக்கடையை வந்து அடைந்தவுடன், வீராவிற்கு மட்டும் ஒரு பெப்சி சொல்லிவிட்டு மற்ற எல்லோருக்கும் டீ சொல்லிவிட்டு ஒரு சிகரட் வாங்கிக்கொண்டான் சந்தோஷ்.
வேகமாக சந்தோஷிடம் வந்த வீரா, “மச்சி அதை கொடு” என்று சந்தோஷ் பற்ற வைத்த சிகரெட்டை வாங்கிக் கையில் வைத்துக்கொண்டு திலக்கை புகைப்படம் எடுக்கச் சொன்னான்.
“யப்பா தம்பி போட்டோ எடுத்தது போதும் சிகரெட்ட கொடு” என்று சிகரெட்டை வாங்கிக்கொண்டு நகர்ந்தான் சந்தோஷ்.
மீண்டும் அறைக்கு வந்த இந்த கூட்டத்தின் கொண்டாட்டம் இன்னும் முடியவில்லை.வீராவின் போனை எடுத்து customer care ஐ அழைத்தார்கள்.
“என்ன டா சும்மா கையில வச்சுருந்துக்கே அந்த வாடை அப்படியே இருக்கு ” என்று சொல்லிக்கொண்டே வீரா தன் விரல்களை கழுவிக்கொண்டு வெளியே வந்தான்.
“அது அப்படித்தான் இருக்கும்” என்று சிரித்தான் சந்தோஷ்.
“எனக்கே இப்ப தான் என் ஆளு மெசேஜ் பண்ணுது அதுக்குள்ள நீங்க ஒரு நாளைக்கு 100 மெசேஜ் ன்னு லிமிட் பண்ணிடீங்க”இந்த முறை வீராவின் போன் airtel customer care ஐ அழைத்து கண்ணன் பேசிக்கொண்டிருந்தான்.
“TRAI regulation என்ன பண்ணனும் சொல்றீங்க?”
எதிர்பக்கம் ஒரு பெண் கொஞ்சம் வெறுப்புடனும் கோபத்துடனும் பேசுவதை கவனித்தான் வீரா.
அந்தப் பெண் பேசும் விதம் வீராவிற்கு ஷாராவை நினைவுபடுத்தியது “போதும் டா” என்று கண்ணனிடம் சொன்னான் வீரா.
ஷாரா என்ன மாதிரியான வேலையில் சேர்ந்திருக்கிறாள் என்பது வீராவிற்கு தெரியாது. அவள் சில மாதங்களாக வீராவிடம் பேசுவதும் இல்லை.
“ஒரு வேளை அவள் இது போன்று கால் சென்டர் பணியில் தான் இருப்பாளோ?” இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டே வீரா தூங்கச்சென்ற பொழுது மணி 3 அடித்தது.
நவம்பர் 13ம் தேதி, எல்லோருக்கும் முன்னமே பாலா எழுந்து குளித்து இருந்தான்.
“கோவிலுக்கு போறேன் வரியா? வெயிட் பண்றேன்” என்றான் பாலா.
“இல்ல டா” என்று அவனிடம் சொல்லிக்கொண்டே அவசரமாய் ஷாராவின் எண்ணிற்கு அழைத்தான் வீரா.
“சரி டா நான் போய்ட்டு வரேன்” என்று பாலா சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது வீராவின் முகம் மாறியது.
“என்ன ஆச்சு? ஆமா எங்கள்ட்ட நீ சொல்ல மாட்ட வேற சரி நான் வரேன்” என்று பாலா கிளம்பினான்.
இடது கையில் போனை வைத்துக்கொண்டு வலதுகையில் தலையை அழுத்தமாய் கோதிய படி ஷாராவின் எண்ணிற்கு மீண்டும் அழைத்தான்.
“நீங்கள் அழைக்கும் தொலைபேசி எண்ணானது தற்சமயம் உபயோகத்தில் இல்லை” இதைக்கேட்ட வீரா போனை தலையணை மேல் வீசிவிட்டு இரு கைகளாலும் தலையை கோதி,காதுகளை அழுத்தி முகத்தை மூடி திறந்து அந்த போனைப் பார்த்தான்.
“your message to shara not delivered” என்று வந்திருந்தது.
மீண்டும் முயற்சித்தான் ஒரு பயனும் இல்லை. “என்ன நடந்திருக்கும்? என்ன ஆச்சு?” இது மட்டுமே தான் அவன் மண்டையில் ஓடிக்கொண்டிருந்தது.
ஷாராவை வீரா மீண்டும் தேடவேண்டும். இதற்கு முன்னாள் தேடிய பொழுதெல்லாம் ஒரு நம்பிக்கை இருந்தது. இந்த முறை வீராவிடம் அந்த நம்பிக்கை இல்லை.தன்னிடம் பேசிக்கொண்டிருந்தவள் எந்த காரணமும் சொல்லாமல் பேசுவதை நிறுத்திக்கொண்டாள். அவள் பேசுவதை நிறுத்திக்கொண்ட சில மாதங்களில் அவள் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவள் வேலை செய்யும் நிறுவனத்தின் பெயரைத் தவிர வீராவிற்கு எதுவும் தெரியாது.அப்பொழுதெல்லாம் அவர்களுக்கு இடையே பெரிதாக எந்த நட்பும் வளர்ந்திருக்கவில்லை. முன்பு அவளைத் தேடிய பொழுதெல்லாம் அவர்களுக்குள் பெரிதாக எந்த நட்பும் வளர்ந்திருக்கவில்லை. அதனால் அங்கே எந்த வெறுப்பும் இல்லை.இப்போது ஷாரா பேசமால் இருந்ததற்கு என்ன காரணம் என்று வீராவிற்கு தெரியாமலேயே இருந்தது. இப்படியான தருணத்தில் தான் அவளை மீண்டும் தேட வேண்டிய இடத்திற்கு வந்து நிற்கிறான் வீரா.
“என்ன ஆச்சு? ஏன் பேசலை? இப்ப நம்பருக்கு என்ன ஆச்சு? போன் நம்பர் பிளாக் பண்ணா இப்படி வருமா?” இது மட்டுமே தான் வீராவின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
“அது என்ன course ? . NET (டாட் நெட் )அதில் சேர வேண்டும். IT துறையில் வேலைக்கு சேர வேண்டும்” இப்படி நினைத்துக்கொண்டான் வீரா.
மறுநாள்,நவம்பர் -14ம் தேதி power system protection and switchgear பாடத்திற்கான செமஸ்டர் தேர்வு. வீரா கண்ணைமூடிக்கொண்டு தேர்வெழுதச் செல்லவில்லை. தன்னைத் தொலைத்து தேர்வு எழுதச் சென்றான்.அந்த தேர்வில் தோல்வியுற்றான்.
டாட் நெட் கோர்ஸில் சேர வீட்டில் வாங்கிய பணத்தைக்கொண்டு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து இருந்தான். அதுவும் அவனுக்குச் சாதமாக அமையவில்லை.என்ன காரணத்திற்காக ஷாரா தன்னிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டாள் என்று தெரியாமல்; அவளிடம் மீண்டும் எப்படி பேசுவது என்பதைப்பற்றிய சிந்தனை மட்டுமே கொண்டிருந்த வீரா தன் வாழ்வின் மீதான கவனத்தை இழந்திருந்தான்.அதனாலேயே அதுவரை அவனுக்கு சாதகமாக இருந்த சூழல்கள் அவனுக்கு பாதகமாக ஆனது.
பிறக்கும் பொழுது அவன் கொண்டு வந்த வரங்கள் எல்லாம் அவனுடைய அதிர்ஷ்ட தேவதை அவனிடம் காரணம் சொல்லாமல் பிரிந்ததும் மறைந்துவிட்டது என்று நம்பத் தொடங்கினான்.
வீரா வேலைக்குச் செல்ல வேண்டுமென்றாலும் இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறது.அதற்குள் அவளை எப்படி நேரில் சந்திப்பது? இது தான் வீரா மனதிற்குள் இருந்த கேள்வியாக இருந்தது. எப்படியும் அவளே அவனை அழைப்பாள் என்று அந்த தொலைபேசி எண்ணை அவன் மாற்றிக்கொள்ளாமல் காத்துகொண்டு இருந்தான்.
ஷாராவை வீரா மீண்டும் பார்த்தானா? ஷாரா அவளாகவே அவனிடம் வந்து பேசினாளா ? தொடர்ந்து படியுங்கள்.