உலகத்தில் எல்லோரும் வரப்போகின்ற புது வருஷத்திற்காக காத்திருந்த டிசம்பர் மாதம். ஆனால்,அவன் ஒருவன் மட்டும் ஒரு குறுஞ்செய்திக்காக காத்திருந்தான்.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தவன், வந்த வேகத்திலேயே அம்மாவுடைய போனை எடுத்து முதல் வேலையாக அவளுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி வைத்துவிட்டு அவள் பதிலுக்காக(reply) காத்து கொண்டு இருந்தான். அவனுடைய இந்த காத்திருப்பு சாதாரணமானது இல்லை.
அந்த கிறிஸ்துமஸ்க்கு இரண்டு மாதத்திற்கு முன்னர் தான் அவளின் தொடர்பு எண் அவனுக்கு கிடைத்திருந்தது .
அதற்கு முன்னதாக நான்கு வருடங்கள் அவளிடம் மீண்டும் பேச வேண்டும் என்கிற எண்ணம் தவிர எந்த முயற்சியும் இல்லாமல் எந்த முயற்சிக்கும் வழியில்லாமல் காத்திருந்தவன் அவன்.
இந்த இரண்டு மாதங்களிலும் கூட அவன் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்து செல்லும் போது மட்டுமே அவளிடம் பேச முடியும் என்கிற சூழல். நான்கு வருடங்களாக காத்திருந்தவன், ஒரு விடுமுறைக்கும் அடுத்த விடுமுறைக்குமான இடைவெளியில் காத்திருக்க மாட்டானா என்ன!
விடிந்தால் கிறிஸ்துமஸ், அன்று மாலை இருவரும் பேசிக்கொண்டிருந்த பொழுது, சரியாக சொல்ல வேண்டுமென்றால் குறுஞ்செய்திகள் வழியாக அரட்டை அடித்துக்கொண்டிருந்த பொழுது;
‘Happy Chirstmas’ என்று ஒரு குறுஞ்செய்தியை தட்டி விட்டுவிட்டு, அலைபேசியை கீழே வைக்காமல், கால்களையும் கீழே வைக்காமல், அவன் உட்கார்ந்திருந்த நாற்காலியின் முன் இரண்டு கால்களுக்கு மேல் அவன் இரண்டு கால்களை ஒய்யாரமாய் வைத்துக்கொண்டு அவளின் குறுஞ்செய்திக்காக காத்திருந்தான்.
அப்போது, அவன் கையில் இருந்த அலைபேசி தீடீரென்று குதூகலம் அடைந்துது போல் ஒரு சிலிர்ப்பு சிலிர்த்து; அந்த அலைபசியின் அத்தனை led விளக்குகளும் ஒளிர ஒரு சிரிப்பு சிரித்து நொடிகளில் அத்தனையையும் மறைத்துக்கொண்டது. அந்த அலைபேசியை எடுத்து அவன் பார்த்த நொடியில், அந்த அலைபேசி சற்று முன் காட்டிய அறிகுறிகளை அவனும் காட்ட தொடங்கினான்.
அதே சிலிர்ப்பு, மொத்தமாக ஆயிரம் எல்.ஈ.டி. விளக்குகள் ஒளிர்ந்ததை போல் அந்த முகத்தில் அத்தனை பிரகாசம். அத்தனை பிரகாசமாய் அந்த முகம், முன் எப்போதும் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
‘Merry Christmas டா ‘ என்று அவளிடம் இருந்து வந்திருந்த குறுஞ்செய்தி தான் அவன் முகத்தில் அத்தனை விளக்குகளை ஏற்றி வைத்து இருக்கின்றது.
அவனுக்கு இருப்பு பொறுக்கவில்லை; உட்கார்ந்திருந்த நாற்காலியை விட்டு எழுந்தான்; கையில் அந்த அலைபேசியை இறுக்கமாய் பிடித்துக்கொண்டான்; இந்த பக்கமாய் ஒரு நான்கு அடிகள் எடுத்து வைத்தான்; திரும்பி வந்த பக்கமாய் ஒரு நான்கு அடிகள் எடுத்து வைத்தான்,
“Merry christmas!!”
“Merrrrrry christmas!!”
“Merry christmas!!”
வாய் நிறைய புன்னைகைகள் அவன் வாய் போதாமல் வழிந்துக்கொண்டு இருக்க அவன் மனம் சொல்லிக்கொண்டே இருந்தது,”Merry christmas!!”
“Merry christmas!!” அவனால் முடியவில்லை! அத்தனை உற்சாகம்; அத்தனை பரவசம்.
ஒரேயொரு ஆள், தனியாக எத்தனை சந்தோசத்தை தான் தாங்க முடியும்.அந்த சந்தோசத்தை அவன் கீழே வைக்க விரும்பவில்லை; அந்த அலைபேசியையும் அவன் கீழே வைக்கவில்லை.
8298581793 வேகமாக அலைபேசியில் இந்த எண்களை தட்டினான், கிரிங்க் கிரிக்..முடிந்து சொல்லுடா என்று விமலின் குரல் கேட்டது தான் தாமதம்.
“விமலு! merry christmas விமலு!”
என்ன நடந்தது என்பதை தெரியாத விமல், ஏதோ நடந்து இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு, இவனை நினைத்து ஒரு சிரிப்பும் சிரித்தபடி “Merry christmas டா ” என்றான்.
விமலுக்கு பின் செல்வா, இந்த கதை இப்படியே தொடர்ந்து கொண்டு இருந்தது.
“கிறிஸ்துமஸுக்கு போய் யாராவது ஹாப்பி கிறிஸ்துமஸ் சொல்லுவாங்களா?! Merry Christmas !” அவன் மண்டையின் ஒரு மூலையில் இந்த பாட்டு ஒலித்துக்கொண்டு இருக்க, அந்த அலைபேசியை எடுத்து, வேகமாக
“Advance Happy New Year ” என்று தட்டி அவளுக்கு அனுப்பி வைக்க; இன்னும் வேகமாய் அவள் பதில் அனுப்பினாள். மீண்டும் அந்த அலைபேசியில் அதே சிலிர்ப்பு
“Advance Happy New Year da
Wishing you a successful Year Ahead
Mdu வரப்ப message பண்ணு”
புத்தாண்டு விடுமுறைக்கு அவன் ஊரில் இருக்கபோவதில்லை என்பதால் இந்த வாழ்த்து பரிமாற்றம்.
நீங்கள் மேலே பார்த்தது போலவே தான் அவள் அந்த குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தாள். இவன் அடுத்த பாட்டுக்கு தயாராகி விட்டான், ” ‘successful year’ யாராக்காவது இப்படி வாழ்த்த தோனுமா! நம்ம தான் பேச நினைச்சுட்டு இருந்தோம் அவளும் பேச நினைச்சு தானே ஊருக்கு வரப்ப மெசேஜ் பண்ண சொல்றா”
இந்த கதை, 2010 இல் தொடங்கிய கதை இல்லை. அதற்கும் சில பல வருடங்களுக்கு முன்பு தொடங்கிய கதை. ஆனால், கதையின் தொடக்கம் எது என்பதை தான் தீர்மானமாக சொல்ல முடியாது.
காரணம், அவன் அவளை எப்போது முதன் முதலில் சந்தித்தான்; எப்போதிருந்து அவள் மேல் இத்தனை நேசம்? ஏன் இந்த நேசம்?இது எதுவும் அவனுக்கு தெரியாது.
அவனுக்கு ஒரு 16 வயது இருந்தபொழுது, தினமும் அவளை அவன் பார்க்கும் இடத்தில் இனி பார்க்க முடியாத சூழல் உருவாகிறது.
“இனிமே அவளைப் பார்க்க முடியாதா!” என்கிற எண்ணம் அவனை ஏதோ செய்கிறது. இனி எந்த தொடர்பும் இல்லாமல் போய்விடுமோ! என்று அவன் மனதின் அடி ஆளத்தில் ஒரு பயம் ஒட்டிக் கொள்கிறது.
அவனுள் இந்த எண்ணங்கள் தோன்றிய அதே நாள், அவன் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து ஒரு பத்தடி தூரத்தில் படிக்கட்டின் பக்கமாய் ஒரு சத்தம் கேட்டது . யாரோ அந்த படிக்கட்டின் வழியாக மேலே ஏறி வந்து கொண்டு இருந்தார்கள். அந்த சத்தம் யாரோ மேலே ஏறி வரும் சத்தம் மட்டும் தானே ஒழிய அந்த சத்தத்தில் எந்த மனித குரலும் இல்லை.
அவளே தான் வருகிறாள் என்று அவன் தீர்மானிக்க அந்த சத்தம் மட்டுமே அவனுக்கு போதுமானதாக இருந்தது. நாயகன் வரும் முன் திரையில் பின்னனி இசை ஒலிக்க தொடங்கும்; அந்த இசை ஒலிக்க தொடங்கிய நொடியிலேயே நமக்கு தெரிந்துவிடும் நாயகன் வரப்போகிறான் என்று. கதாநயகன் திரையில் தோன்றப்போகிறான் என்பது தெரிந்தும் திரையில் கதாநாயகன் தோன்றும் அந்த நொடியில் ஒரு சிலிர்ப்பு வருமே அது மாதிரி.
சத்தம் கேட்டதும் அவன் தீர்மானித்ததும் தான் தாமதம்; அவள் மேலே வந்துவிட்டாள். அவள் மேலே வந்த நொடியில் அவனுள்ளும் அதே சிலிர்ப்பு.அதைவிட ஒரு பரவசம்.
அவன் உடல் கொஞ்சமும் அசையவில்லை; மனம் முன்னமே படிக்கட்டு வரை சென்று திரும்பிவிட்டது.மனம் சொன்னதை சரிபார்க்க வேண்டும், வந்திருப்பது அவள் தானா என்பதை பார்த்துவிட வேண்டும்.அவன் பார்ப்பதை யாரும் பார்க்க கூடாது. அவன் கொஞ்சமும் அசையவில்லை,அவன் தலைத்திருப்பாமல்; கண் அசைக்காமல், ஏன்! அவன் கருவிழிகளை கூட அவள் இருக்கும் பக்கம் திருப்பாமல், கொஞ்சமாக நிமிர்ந்து நேராக பார்த்தான்,
“Yes!அவளே தான்!” அவன் மனம் அத்தனை சத்தமாய் கூச்சலிடுகிறது. அவனை காண்பதற்காகவே அவள் மீண்டும் வந்திருப்பாள் போல் இருந்தது அவனுக்கு.
நேராக பார்த்த அவனின் பக்கவாட்டு பார்வையில்,அந்த ஒரு பழுப்பு படர்ந்த அடர் இரத்த சிவப்பு நிற சுடிதார் பதிய; சட்டென 2 டிகிரி மட்டுமே நிமிர்ந்த அவன் தலை, அவளே தான் என்று தெரிந்து கொண்டு தானாய் குனிந்தது.
மேகங்கள் கூடும் பொழுது நம் உடலின் மேற்பரப்பை ஒரு குளுமையான தென்றல் தீண்டுமே? அது மொத்தமாக அவன் நெஞ்சுகுழியில் புகுந்து விளையாடிக்கொண்டிருந்தது.
அவன் நுரையீரலில் யாரோ cooler பொருத்தியது போல, அவன் உள்ளே சென்ற அத்தனை oxygen துகள்களும், அவன் இதயத்தை மென்மையாக வருடிக்கொடுக்க, அவனின் அந்த நெஞ்சுக்குழியில் தான் எத்தனை ஆனந்தம்!
கண் இமைக்கும் நொடிகளுக்குள் இத்தனையும் நிகழ்ந்தேறுகிறது.
இந்த நாளுக்கு முன்னர் வரை அவன் இப்படியொரு சந்தோசத்தை; இப்படியொரு பரவசத்தை உணர்ந்திருக்கவில்லை. அவள் இனி வாழ்க்கையில் வர மாட்டாளா? என்கிற சந்தேகத்திற்கு பின் அவளைப் பார்த்த நொடியில் வந்த இந்த சந்தோசம், அவனுக்குள் நிறைய கேள்விகளை எழுப்பியது.
“ஒரு பெண்ணை பார்த்தவுடன் பிடித்து, இந்த பொன்னு அழகா இருக்கு ல” என்கிற எண்ணம் ஏற்பட்டு; இப்படியெல்லாம் தானே காதல் வர வேண்டும்? இத்தனை நாளும் பார்த்து அவள் அழகாக இருக்கின்றாள் என்கிற எண்ணம் ஒன்றும் வரவில்லையே. ஒரு பெண்ணுடன் பழகி அவளோடு ஒரு நட்பு ஏற்பட்டு அந்த நட்பு காதலாக மாறலாம், நம்ம தான் பேசிக்கிட்டதே இல்லையே?”
இப்படி அவனுள் அநேகமான கேள்விகள், இத்தனை நாள் அவளைப் பார்த்தும் அவள் அழகாக இருக்கின்றாள் என்கிற எண்ணம் தனக்கு வரவில்லையே என்று அவன் நினைப்பது ஒரு விதத்தில் தவறாக இருக்கலாம்.
காரணம், பாலின ஈர்ப்போடு ஒரு ஆண், பெண்ணை பார்ப்பதை; இரசிப்பதை sight அடிக்கிறது என்றோ அல்லது அதற்கும் மேல் என்றோ எடுத்துக்கொண்டால், அந்த வகையில் ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் எதையெல்லாம் கவனிப்பானோ அது எதுவும் அவன் கவனத்தில் இருந்ததே இல்லை.
அவள் யாரோ ஒருத்தியாக இருந்து அவளைப் போன்று ஒரு பெண் அவனை கடந்து சென்று இருந்திருந்தால் அவன் திரும்பி பார்த்திருக்க கூட வாய்ப்பு இல்லை.
அந்த பார்வை துளியும் எதிர்பாலின ஈர்ப்பை தரும் அழகை தேடவேயில்லை.
ஆண்களும் சரி! பெண்களும் சரி! சாமியைப் பார்க்கும் பொழுது எப்படிப் பார்ப்பார்கள் ? சாமியின் கை தனியா கால் தனியா என்றா பார்ப்பார்கள். மொத்தமாக அது அவர்களுக்கு சாமி! கண் முன்னே இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு காண்பார்கள். அவனும் கூட வண்ணங்கள் மட்டுமே காட்டும் வெற்று கண் கொண்டு அவளைப் பார்த்தது இல்லை. எதிரில் கடவுள் இருக்கும் பொழுது கண்ணை மூடிக்கொண்டு அந்த கடவுளை காண்பவர்கள் போலவே தான் அவன் அவளை கண்டான்.
அந்த நெற்றி, அதிலிருந்த சின்ன பொட்டு அதற்கு மேல் இருந்த சந்தனம், அதற்கு கீழ் இருந்த கண்கள் இதை தாண்டி அவன் மனதில் ஒன்றும் பதியவில்லை. அந்த கண்களையும் கூட அவன் நேரில் அதிகம் பார்த்ததில்லை. அந்த பொட்டு; அந்த சந்தனம் அது தான் அவள்.
பள்ளிக்காலம் முடிந்து நான்கு வருடங்கள் அவளோடு எந்த தொடர்பும் இல்லாமல் இருந்த காலத்திலும், யாரைப் பார்த்தாலும் அவனுடைய கண்கள் முதலில் நெற்றிக்குத்தான் செல்லும், “அந்த நெற்றியில் அந்த சின்னப் பொட்டு இருக்கா? அதற்கு மேல் சந்தனம் இருக்கா”
அதைத்தான் தேடும்.
அந்த இரண்டும் இல்லை என்றால் அவன் பார்வை சட்டென்று திரும்பிவிடும். அவன் பார்க்கும் நெற்றிக்களில் நூறில் ஒன்று இரண்டு நெற்றியில் சந்தனம் இருந்தாலும். இது அது இல்லை என்றே அவன் மனம் சொல்லும்
அனுமன் ஒரு முறை தனக்கு பரிசாக கிடைத்த முத்து மாலையை கையில் எடுத்து; ஒரு ஒரு முத்தாக உற்று நோக்கி; பிய்த்து எறிந்தாராம். காரணம், ஒன்றில் கூட ராமன் தெரியவில்லையாம்.அனுமன் ராமன் மீது கொண்டிருந்தது போல் ஒரு காதல். அந்த சந்தனம் இருக்கும் நெற்றியை தவிர அந்த நான்கு வருடங்களில் அவன் எதையும் தேடவில்லை.
தேடத்தானே செய்வான்!அந்த நெற்றியில், யாருமே! அவளைப்போன்று அவ்வளவு எளிமையாக அவ்வளவு அழகாக சந்தனம் வைக்க முடியாது.
ஒரு குண்டூசியின் தலை அளவு விட்டத்தில் சின்னதா ஒரு பொட்டு வச்சு; விரல் நகத்தின் நுனியில் சந்தனம் தொட்டு, பொட்டுக்கு மேல் ஒரு விரல் இடைவெளி விட்டு, விரல் நகம் மட்டுமே பதிய, நகத்தின் நுனியில் இருக்கும் சந்தனம் மட்டும் அந்த நெற்றியில் ஒட்டிக்கொண்டால் அது எத்தனை மெல்லிதாய் இருக்கும்! அத்தனை மெல்லிதாய் இருக்கும் அந்த நெற்றியில் அவள் வைத்திருக்கும் சந்தனம்.
அழகு!
மற்ற பெண்களை போல் அவள் அதிகம் ஒப்பனை செய்து கொள்பவள் இல்லை, ஆனால், அந்த சந்தனம் வைக்க அவள் மெனக்கெடும் அளவிற்கு யாரும் மெனக்கெட்டு இருக்க மாட்டார்கள்.
அவள் செய்யும் அத்தனையிலும் அவனுக்கு ஒரு பரிபூரணம் தெரியும்.
Small things Make perfection, but perfection is no small thing.
அது தான் அவள்.
“அழகா கூட இல்ல;ஆனா எனக்கு ஏன் இவ்வளவு பிடிச்சுருக்கு? நான் ஏன் அவளை love பண்றேன்?” இப்படியெல்லாம் நினைத்து கொண்டிருந்த அவனுக்கு அவளைத் தவிர யாரும் அழகாக தெரியவில்லை.
மனித மனம் இப்படித்தான்.அது எதிலாவது தானாக மூழ்கிவிட்டால்; அதில் எதாவது குறைதேடி; “இல்லை! அது ஒன்றும் பெரிய குறை இல்லை” என்று தானே நியாயம் கற்பித்து கொள்ளும். ஆள்மனதின் அகங்காரம் செய்யும் வேலைகள்.
“எனக்கு போய் எப்படி ஒரு பெண்ணை சாதரணமா பிடித்தது? சாதாரணமா எல்லாம பிடிக்கலை அவள் அழகு கூட இல்லை ஆனா அவள் சாதரணமாவள் இல்லை அவளை மாதிரி யாரும் இல்லை” இது அவன் ஆள்மனதின் ego அவனுக்கு சொல்லும் நியாயங்கள்.
“இந்த நாலு வருஷத்தில் யாராவது propsoe பண்ணிருப்பாங்களே இன்னும் பண்ணலையா?”
“நிறைய fans இருந்திருப்பாங்க வேற! அந்த fans வரிசையில கடைசியா என்னையும் சேர்த்துக்கோங்க madam” என்று அவன்சொல்லி முடிக்க
“அதெல்லாம் யாரும் propose பண்ணலை! உன் கண்ணுக்கு தெரிஞ்ச மாதிரி யார் கண்ணுக்கும் நான் தெரியல போல” என்றாள்.
சரி தான்! அவன் கண்களுக்கு தெரிந்த அந்த மெல்லிதான சந்தனத்தின் அழகு! யார் கண்களுக்கும் தெரியவில்லை தான்.
அந்த பொண்ணு யார் என்று கேட்ட ஒரு மூன்று பெண்களிடம், அவள் யார் என்று சொன்னான். சொன்ன மாத்திரத்தில் , அவர்களின் முகம் கொஞ்சம் சுருங்கியது,”உங்க taste இவ்வளவு மோசமா இருக்கு” என்றார்கள்.
இதைத்தான் பெண்களே பொறாமைப்படும் அழகு என்று சொல்வார்களோ என்னவோ?
ஆனால், அவளும் இதையே தான் அவனிடம் சொன்னாள்.
“யாரவது உன்கிட்ட வந்து propose பண்ணா என்ன பண்ணுவ” என்று அவன் அனுப்பிய குறுஞ்செய்திக்கு அவளிடம் இருந்து வந்த பதில், “அவனுக்கு இவ்வளவு மோசமான taste அ என்று நினைப்பேன்” என்றாள் .
இந்த இடத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னதாக கேள்விப்பட்ட ஒன்று நினைவிற்கு வருகிறது,
“அழகு என்று எதை நினைக்கிறீர்களோ தெரியாது; யாரைப் பற்றி நினைத்தால் மனதிற்கு இன்பமாக இருக்குமோ அவர்கள் எல்லாம் அழகானவர்கள் தான் “
chirstmas க்கு ஒரு மாதத்திற்கு முன்னர் நடந்த chat இது.அவளும் அதே கேள்வியை அவனிடம் கேட்டாள். “நீ சொல்லு நீ என்ன பண்ணுவ?”
“என்ன யாரு love பண்ணுவா!”என்று சலித்துக்கொண்டான்
“உனக்கு என்ன டா! கூட்டத்திலேயே அழகான ஒருத்தனா நீ தான் இருப்ப. சரி! சொல்லு, நீ என்ன பண்ணுவ?”
அவள் பெயர் ஸ்ரீ. கேள்வியை கேட்டது ஸ்ரீ இல்லை.
இங்கே இப்படியெல்லாம் ஒரு பேச்சு போய்க்கொண்டிருப்பது கூட ஸ்ரீ க்கு தெரியாது. ஆனால், இந்த உரையாடல் இப்பொழுது நடந்துகொண்டிருப்பதற்கு ஸ்ரீ தான் காரணம். ஆனால், அவளுக்கும் கூட தெரியாது, இவர்கள் இத்தனை தூரம் பேசிக்கொண்டு இருப்பது.
சரி! அவள் என்ன கேட்டாள்?
“நீ சொல்லு உன்கிட்ட யாரும் வந்து propose பண்ணா நீ என்ன பண்ணுவ?”
அவன் என்ன சொல்லியிருக்க வேண்டும்? என்ன சொல்லி இருப்பான்? ஸ்ரீ யாரு? அந்த சிம்பிளான தேவதை யாரு? உங்கள் ஒவ்வொருவரையும் இத்தனை நேரம், எல்லோரும் எப்படி சந்தனம் வைப்பாங்க என்று சிந்திக்க வைத்த நெற்றி யாருடையது.
அடுத்த பகுதியில் பார்க்கலாமா? ம்ம் ?