ஸ்ரீ, அவனிடம் ‘Digital Signal Processing’ பாடம் கேட்க வேண்டும் என்று கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தால். அவன் வகுப்பில் இருந்த முப்பத்திமூன்று பேர்களில் கிட்டத்தட்ட 20 பேருக்கு அவன் அந்த பாடத்தை விளக்கியிருப்பான்.ஸ்ரீ, இருபத்தியோராவது ஆள்.
ஸ்ரீ அனுப்பிய குறுஞ்செய்தி ஒருபுறம் இருக்க, “உன்கிட்ட வந்து யாராவது propose பண்ணா என்ன செய்வ?”என்கிற கேள்விக்கு, “நான் கேட்டதுக்காக அதே கேள்வியை என்கிட்ட கேக்குற?” என்று அவன் மழுப்பலாக பதில் அனுப்பிக்கொண்டு இருந்தான்.
அலைபேசியின் LED வெளிச்சத்தை “சொல்லு!” என்கிற வார்த்தை மறைத்து நின்று ,பதில் சொல்ல சொல்லி அவனை அழுத்தமாய் வற்புறுத்தியது.
“எனக்கு பிடிச்சிருந்தா… அந்த பொன்னு வீட்ல ஒத்துக்கிட்டா… கல்யாணம் தான்!”
“வீட்ல ஒத்துக்கலைன்னா?” வேகமாக அவளிடம் இருந்து அடுத்த கேள்வி வந்தது.
“யாராவது உன்னை காதலிப்பதாக சொன்னால் என்ன செய்வாய்” என்கிற கேள்வியை இவன் அவளிடம் கேட்டதற்கு இருந்த அதே காரணம், அவளிடமும் கூட இருந்திருக்கும். அவன் மண்டைக்கு அது உரைக்கவில்லை,
“வீட்ல ஒத்துக்கலைன்னா கஷ்டம் தான், சந்தோசமா ஆரம்பிக்க வேண்டிய வாழ்க்கைய பெரியவங்க சாபத்தோட ஆரம்பிக்கனுமா?” அவள் மனதில் இவனுக்கென்று ஒரு இடம் இருந்திருந்தால், அந்த இடத்தை தானாக அவன் காலி செய்து கொண்ட தருணம், இந்த பதிலை அவன் அனுப்பிய நொடியாகத் தான் இருக்கும்.
“அவனா நீ?” நக்கலாக கேட்டு வைத்தாள். அதுவும் அந்த மர மண்டைக்கு உரைக்கவில்லை.
அவள் மனதில் இவனிடம் காதலை சொல்லவேண்டும் என்கிற எண்ணம் இருந்ததோ இல்லையோ? என்பது இவனுக்கு தெரியாமலேயே போனது.
ஆனால், யாரேனும் உன்னை காதலிப்பதாக சொன்னால் என்ன செய்வாய் என்று பரஸ்பரம் கேட்டுக்கொண்ட அந்த இருவரில் ஒருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை.
“யாராவது என்ன யாரவது ! நீ சொல்லு! நான் ஏத்துக்கிறேன்” என்று இருவரில் ஒருவரேனும் சொல்லியிருக்கலாம். இவன் நிச்சயமாக சொல்லியிருக்க வேண்டும். நாம் விரும்பும் எதையும், நாம் ‘if condition’ களுக்குள் எடுத்துச் செல்லக்கூடாது. காதலும் தத்துவம் தான், எனினும் அது தத்துவம் பேசிக்கொண்டு திரிபவர்களுக்கானது அல்ல.
நான்கு வருடங்களாக என்னிடம் வைத்த விண்ணப்பத்திற்கு ஒரு வழி செய்து கொடுத்தால் நீயாக அதை கெடுத்துக்கொண்டாய் என்று அந்த இறைவனும் கூட சலித்துக்கொண்டு இருந்திருப்பான்.
இது முதல்முறை அல்ல; இத்தகைய முட்டாள்தனங்களை அவன் முன்னமும் கூட செய்திருக்கின்றான்.
பள்ளிக்காலத்தில், “லீவு ல என் வீட்டுக்கு வா! நம்ம கணக்கு பாடம் படிக்கலாம்” என்று அவளே அழைத்தும் எனக்கு வீடு தெரியாதே என்பது போல் பாவனை செய்த முட்டாள் அவன்.
“எங்க வீடு அந்த கருப்பசாமி கோவில் பக்கம்” என்று யாரிடமோ எப்போதோ அவள் சொன்னதை அவன் மறந்துவிடவில்லை. அந்த கோவிலை தாண்டித்தான் கடைத்தெருவிற்கு செல்ல வேண்டும். அவள் யாரிடமோ சொன்னதை அவன் கேட்ட நாளில் இருந்து, “கடைக்கா? நான் போயிட்டு வரேன்” என்று கிளம்பி விடுவான். ஒவ்வொரு முறை கடைக்கு செல்லும் பொழுதும் அந்த கோவிலை ஒட்டிய ஒவ்வொரு சந்துகள் வழியாக சென்று வருவான்.
வீட்டுச் சுவரின் வண்ணம் தெரியாமல்; வீட்டு எண் தெரியாமல்; என்ன தெரு என்பதும் தெரியாமல்; ஒரு பெரிய வீதியில் இருக்கும் ஒரு சிறிய கோவிலை அடையாளம் வைத்துக்கொண்டு அந்த வீட்டை தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் அவனுக்கு.
எதுவும் தெரியாமல், யாரிடமும் கேட்காமல் எப்படி அந்த வீட்டை கண்டுபிடிக்க முடியும்! இந்த சந்தேகம் அவன் மனதில் எழவே இல்லை.
அந்த கோவிலின் சுற்றுவட்டாரத்தில், ஒரு 10 சிறிய சந்துகள் இருக்கும், தோராயமாக சந்துக்கு நான்கு வீடுகள். இந்த வீடு தேடும் முயற்சியில் பையை தூக்கிக்கொண்டு, “நான் கடைக்கு போறேன்” என்று அவன் கிளம்பி, முதல் முறை ஒரு சந்து வழியே சென்று வேறு ஒரு சந்து வழியே திரும்பினான் அந்த இரண்டு சந்துகளிலும் அவன் எதையும் உணரவில்லை. அந்த சுற்றுவட்டாரத்தில் கொஞ்சம் நேரம் சுற்றியிருந்தால், அன்றே கூட அவள் வீட்டை கண்டுபிடித்திருந்திருப்பான் .
ஆனால், அது அவன் கௌரவத்துக்கு இழுக்கு! “நான் சும்மா கடைக்கு வந்தேன் ங்க” என்று சொல்லும்படியாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம். ஒரு முறை கடைக்கு செல்லும் பொழுது இரண்டு சந்துகள் அது தான் அவன் இந்த தேடுதல் படலத்திற்கு வைத்துக்கொண்ட அளவீடு.
மீண்டும் அடுத்த வாரம், அதே பை! அதே சைக்கிள்! அதே முயற்சி! கடைக்கு செல்லும் பொழுது மீண்டும் ஒரு புதிய சந்து.
“இல்லை! இங்கு அவள் இல்லை” என்றது அவன் மனம்.
கடைக்கு சென்று விட்டு திரும்பும் பொழுது, மனதளவில் சோர்வு அடைந்தவன், ஒரு வீடு; ஒரு கடை மட்டுமே இருக்கும் ஒரு சந்தின் வழியே திரும்புகிறான். அங்கே “சிவா workshop” என்கிற பெயர் பலகை அவன் கண்ணில் பட்டது, அந்த பெயர் பலகை கொண்ட கடைக்கு பக்கமாய் இருந்த ஒரு வீட்டின் வாசல் அவனைப்பார்த்து, “நான் இங்க இருக்கேன் நீ என்ன பக்கத்து சந்துல தேடிட்டு இருக்க!” என்று அவன் மனதில் ஒரு குட்டு வைத்து, “என்னைத்தான் நீ தேடிக்கொண்டு இருந்தாய்” என்று சொன்னது.
நம்மை சுற்றியிருக்கும் எல்லாவற்றிக்கும் ஒரு உயிர் இருக்கின்றது. உயிர் கொண்ட அந்த வீடும்; கடவுளும்; அவனுக்கு அந்த வீட்டை அறிமுகம் செய்துவைத்தார்கள்.
பச்சைநிற கதவுகள்; அவன் வணங்கும் கடவுளே அவனுக்கு வழிகாட்டியது போல், “சிவா workshop” என்னும் பெயர் பலகை; அந்த பச்சைநிற கதவில் அந்த வீட்டின் எண்ணும் அதன் பக்கத்தில் ‘உமாபதி’ என்றும் எழுதப்பட்டு இருந்தது.
“அவ initial, ‘U’ தான! இது தான் அவ வீடா?” சந்தேகத்துடனும் சந்தோஷத்துடனும் தீர்மானித்துக்கொள்கிறான்.
வீடுதான் தெரியுமே! பின் ஏன் அந்த பாவனை? “யார் சொல்லித்தெரியும்? எப்படி தெரியும்?” என்கிற கேள்விகளை சமாளிப்பதற்காகவே தான் அந்த பாவனை.
அவனுக்கு அந்த வீட்டிற்கு செல்ல வேண்டும். ஆனால், வீடு தெரிந்தது போல் காண்பித்துக்கொள்ள கூடாது. அவனுடைய தங்கைக்கு அவள் வீட்டிற்கு செல்ல வழி தெரியும்.
தங்கையை கூட்டிக்கொண்டு, அவன் அவளுடைய வீட்டிற்கு கிளம்பியது தான் தாமதம்; அவன் மனம் அந்த பச்சை நிற கதவுகளை கொண்ட வீட்டின் வாசலுக்கே சென்று விட்டது.
“இந்த பக்கம் தான் வீடா?” தன் யூகம் சரியாக இருந்ததை எண்ணி ஒரு சந்தோஷம் அவனுக்கு. ஆனாலும், காட்டிக்கொள்ளவில்லை.அவன் யூகித்து வைத்திருந்த வீட்டின் வாசலையே தான் அவனுடைய தங்கை அவனுக்கு காண்பித்தாள்.
“இதே தான் வீடா இல்ல இது தான் அவ வீடா? ன்னு கேட்டேன்”
அந்த பச்சைக்கதவின் நிலையை எட்ட இரண்டு படிகள் ஏற வேண்டும். அவனுக்குள் ஒரு பரவசம்; தயக்கம்; அடுத்த நொடி என்ன நடக்கும் என்கிற பதட்டம்; இது எதையும் வெளிகாட்டிக்கொள்ளாமல் அந்த இரண்டு படிகளில் ஏறி அந்த பச்சை நிற கதவுகளுக்கு மிக நெருக்கமாக நின்று கதவுகளின் உள் பக்கமாக பார்த்தான், அங்கே இன்னும் பல படிகள் இருந்தது. சரி தான்!தேவதைகள் எப்போதும் மேல்மட்டத்தில் தானே இருப்பார்கள்!
சூரியனும் கூட அந்த இரண்டு படிக்கட்டுகளை தாண்டாமல் தயக்கத்தோடு அந்த வாசலை தாண்டாமல் தான் நின்று கொண்டு இருந்தான். அதனால், அந்த பச்சை கதவுகளுக்கு உள் பக்கமாக அத்தனை ஒளி இல்லை. மேல் படிக்கட்டுகள் கிட்டத்தட்ட இருள் அடைந்து இருந்தது.
சூரியனே தயங்கிக்கொண்டிருக்கும் பொழுது சந்திரன் என்ன செய்வான்! ஆம்! அவன் பெயர் சந்திரன்! வீரசந்திரன்! .
அவனை எல்லோரும் ‘வீரா!’ என்று அழைப்பார்கள். நிஜமான வீரர்களும் கூட தான் விரும்பும் பெண்களிடம் பேச தயங்குவார்கள். பெயரளவில் மட்டும் வீரனான இவன் என்ன செய்வான்! நிச்சயம் தயங்கவே தான் செய்வான்.
தயங்கி தயங்கி அந்த கதவுகளுக்கு மிக நெருக்கமாக வந்து நின்றிருந்த அவன், அந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான். பொதுவாக வீடுகளில் உள்ள அழைப்பு மணியை அழுத்தினால், “யா…… ..ஆ ர்ரு..உ..” என்கிற சத்தம் தான் முதலில் வரும். ஆனால், அந்த வீட்டில், அவன் அந்த அழைப்பு மணியை அழுத்திய அந்த நேரத்தில், அந்த படிகளில் இருந்த இருளை விலக்கிக் கொண்டு வேகமாக ஒரு தேவதை வந்தாள்.
ஆறு மாதத்திற்கு பிறகு அந்த தேவதையை அவன் காண போகும் தருணம் அது. அவள் அந்த படிகளில் இருந்து இறங்கி வந்த அந்த ஒரு 3 நொடிகளில் அவன் இதயம் ஒரு முப்பது முறை துடித்துஇருக்கும்.
அவள் வீட்டில் அத்தனை வேகமாய் படியிறங்கி வருவதற்கு அவளைத் தவிர யாரும் இருந்திருக்கவில்லை. ஆனாலும், அவள் அத்தனை வேகமாக வந்ததற்கு அது மட்டும் காரணமாக இருந்திருக்காது.அவன் இதயம் துடித்த அதே வேகத்தில் அவளுடைய இதயமும் கூட துடித்து இருந்திருக்கலாம்.
தேவதையே இறங்கி வந்த பின் நாமும் இறங்கித்தானே ஆக வேண்டும்! அவன் அந்த இரண்டு படிகளை விட்டுக் கீழே இறங்க, அந்த கதவுகளை திறந்து அவள் இன்னும் கீழே இறங்கி வந்தாள். மேகங்களை விலக்கிகொண்டு சூரியனும் வெளியே வந்தான். ஆனாலும், சந்திரன் பாதம் பதிந்திருந்த அவள் வாசலில் சூரியனுக்கு இடம் கிடைக்கவில்லை.
அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரேயொரு படி இருந்தது. எப்போதும் அவர்கள் இருவருக்கும் இடையில் எதாவது ஒன்று இருந்து கொண்டு தான் இருந்தது. இப்போது போல் எப்போதும் அவள் அவனை விட ஒரு படி மேலே தான் இருந்தாள். அவளுடைய முகத்தில் அப்படி ஒரு புன்னகை, அவள் இவனையும் , இவள் அவனையும் பார்த்துக்கொண்ட அந்த நொடியில், அவள் முகத்தில் அத்தனை புன்னகை; அத்தனை பரவசம்.
மிரர் நியூரான் (mirror neuron ) என்று ஒன்று, எதிரில் இருப்பவர்கள் செய்வதை நம்மை திரும்ப செய்யவைக்கும் வேலையை செய்யக்கூடியது. அதன் காரணமாகவே கொட்டாவி விடுபவர்களை கண்டால் நாம் கொட்டாவி விடுகிறோம்.
அவள் முகத்தில் வெளிப்பட்ட, அத்தனை சந்தோசத்திற்கும், பரவசத்திற்கும் அந்த mirror neuron கள் கூட காரணமாக இருந்திருக்கலாம். அவனுடைய பார்வை வேகமாக அந்த சந்தனத்தைத் தேடி அவளின் நெற்றிக்கு சென்றது. அவளோ அந்த சமயத்தில் முகம் கூட கழுவியிருக்கவில்லை.அவள் முகத்தில் சிறிது சிறிதாய் சில பொறிகள். ஆனால், அவன் பார்வையில் எல்லாமே அழகாக இருந்தது.
“எழுபத்திரண்டு டியூஷன்! இதுல உன் வீட்டிற்கு வந்து வேற நம்ம கணக்கு படிக்கணுமா? லீவு இருந்தா நான் பாட்டுக்கும் பசங்களோட விளையாட போவேன்!” இதை சொல்வதற்காக அவன் அங்கே செல்லவில்லை. ஆனாலும், வீரப்பாக இதை அவன் சொல்ல காரணம்,உரிமையோடு அவனை கண்டித்து, “அடுத்த வருஷம் விளையாட போலாம். இப்ப படிக்கலாம் வா!” என்று அழைப்பாள் என்கிற பேராசை.
இதை விட்டால் அவளுடனான தொடர்பை தொடர; அவளுடனான நட்பை வலுப்படுத்திக்கொள்ள அவனுக்கு வேறு சந்தர்ப்பம் வாய்க்காது. அதை எண்ணியே கூட அவளும் அவனை அழைத்திருக்கக்கூடும்.இது எதையும் யோசிக்காமல், அவள் கண்டிப்போடு வற்புறுத்த வேண்டும் என்கிற ஆசை அவனுக்கு.
அவள் எந்த மறுப்பும் சொல்லவில்லை.
“சரி வரேன்!” என்று அவன் வாசலோடு கிளம்பிவிட்டான். அப்போதும் அவள் அவனை நிறுத்துவாள் என்கிற எண்ணம் அவனுக்கு. அவள் அவனை நிறுத்தவில்லை சரி என்று வழியனுப்பி வைத்தாள்.
இத்தனை நேரமும் அவர்கள் இருவரோடும் அதே வாசலில் நின்றுகொண்டிருந்த அவனின் தங்கை யார் ஒருவரின் கவனத்தையும் பெறவில்லை.நீங்களும் கூட தேடியிருக்க மாட்டீர்கள். நினைவு வந்த அவன் தேடினான், பக்கத்திலேயே இருந்த அவன் தங்கையை.
“தப்பு பண்ணிட்டோம்!” அவன் மனம் சொல்லிக்கொண்டே வந்தது;சொல்லிக்கொண்டேஇருந்தது. ஆனாலும், அவனுக்குள் இருந்த எந்த உணர்வையும் அவன் வெளிகாட்டிக்கொள்ளவில்லை. அவர் தான் வீரர் ஆயிற்றே.வெங்காயம்!
கிடைத்த வாய்ப்பை விட்டுவிட்டு மீண்டும் பையை தூக்கிக்கொண்டு கடைக்கு கிளம்பினான்.
‘என்றாவது ஒரு நாள்; அந்த வாசல் வழியாக ;அவள் வெளியே வர மாட்டாளா?’ என்கிற எண்ணத்தோடும் ஏக்கத்தோடும் அடிக்கடி அந்த சந்தின் வழியே சென்று வருவதை வழக்கமாக்கி கொண்டான்.
ஒரு நாள், அவனுக்கு ஆச்சரியம் அளிக்கும் வண்ணம் அந்த வாசலில் இருந்து ஒருவர் ஒரு பெரிய வண்டியை வீட்டிற்குள் ஏற்றிக்கொண்டு இருந்தார்.அவளுடைய அண்ணன் தான் அது. முன்னமே நல்ல பழக்கம். இருந்தாலும் கூட அந்த சமயத்தில் அவரிடம் சென்று நலம் விசாரிக்கும் தைரியம் அவனுக்கு வரவில்லை. காரணம், காரணமே இல்லாமல் அவன் அந்த வழியே வந்ததைப் பற்றி கேள்வி எழுந்தால் அதற்கு அவனிடம் பதில் இல்லை. கடைக்கு வந்தேன் என்று சொன்னால் யாரும் எதுவும் கேட்டிருக்க மாட்டார்கள் தான் . ஆனால், அவன் மனதிற்கு தெரியும், அந்த வழியாகத் தான் கடைக்கு சென்று வரவேண்டும் என்பதில்லை என்று.
“சரி வரேன்!” என்று அவளிடம் சொல்லிவிட்டு கிளம்பியவன். 3 வருடங்களாக அவ்வழியே கடைக்கு போவதும் வருவதுமாக இருந்தான்.
ஒருநாளும் அந்த வாசலில் அவளை அவன் காணவில்லை.
மூன்று வருடங்களாக அவளிடம் மீண்டும் பேசுவதற்கான வழியை தேடிக்கொண்டிருந்த அவனுக்கு இறைவன் காட்டிய வழி தான் ஸ்ரீ.
வீராவின் மூன்று வயதில் இருந்தே அவனுக்கு ஸ்ரீ யை தெரியும். இப்போது வீராவிற்கு 20 வயது. இத்தனை வருடத்திலும், நல்ல பழக்கம் இருந்தும் கூட அவன் ஸ்ரீ இடம் அதிகம் பேசிக்கொண்டதில்லை. 2010 வருடம் தான் அவன் ஸ்ரீயிடம் கொஞ்சம் அதிகம் நட்பு பாராட்டினான். காரணம் ஸ்ரீ படிக்கும் அதே இடத்தில் தான் அவளும் படித்துக்கொண்டு இருக்கின்றாள் என்பதை அவன் அப்போது தான் தெரிந்துகொண்டான்.
ஆனாலும் அவன் ஸ்ரீ யிடம் நேரடியாக அவளின் போன் நம்பர் வாங்கி தரச்சொல்லி கேட்கவில்லை. இல்லாத நொண்டி சாக்குகளைத் தேடி அவன் தங்கையிடம் சொல்லி ஸ்ரீயிடம் கேட்டு அவள் போன் நம்பர் வாங்க சொல்லி சொல்லியிருந்தான். இது அத்தனை சாதாரணமான விஷயமில்லை.அவனுடைய நட்பு வட்டத்தில் பெண் பெயர்கள் இருந்ததே இல்லை. அவன் அதிகமாக அவன் வயதொத்த பெண்களிடம் பேசியதும் இல்லை. ஸ்ரீ க்கும் சரி! அவனுடைய தங்கைக்கும் சரி அவன் அவளிடம் பேச நினைப்பது பற்றி எந்த சந்தேகமும் எழக்கூடாது.இப்படியெல்லாம் அவன் தான் யோசித்துக்கொண்டு இருந்தானே தவிர, அவர்கள் இதைப்பற்றி பெரிதாக யோசித்திருக்கவே மாட்டார்கள். ஒரு பெண்ணை ஒருவன் விரும்பும் பொழுது அவன் மனம் இல்லாத விஷயங்களை எல்லாம் கற்பனை செய்துகொள்ளும்.
“நிவாஷினி உன் நம்பர் கேட்டுச்சு” என்றவுடன், ஒரு பஸ் டிக்கெட் ஐ எடுத்து அதில் 9984538995 என்று எழுதி, ஸ்ரீ கையில் கொடுத்தாள். ஸ்ரீ யுடைய அலைபேசியில் இருந்து அந்த எண்கள் வீராவின் வீட்டிலிருந்த அலைபேசியை வந்தடைந்தது.இத்தனை சாதாரணமாக முடிந்த விஷயத்திற்காக அவன் அத்தனை வருடம் காத்து இருந்தான். ஆனால், காரண காரியம் இல்லாமல் எதுவும் நிகழ்வதில்லை. அவள் சில மாதங்களுக்கு முன்னராக தான் தனியாக அவளுக்கென்று ஒரு அலைபேசி வைத்துக்கொள்ள ஆரம்பித்து இருக்கின்றாள்.
போன் நம்பர் கிடைத்தும் கூட அந்த பஸ் டிக்கெட் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் அவனுக்கு.கிடைத்திருந்தால், அவளின் கையெழுத்து பதிந்த காகித கட்டுக்களை பத்திரப்படுத்தி வைத்திருப்பதோடு அந்த பஸ் டிக்கெட்டையும் பத்திரப்படுத்தி வைத்திருப்பான்.
மூன்றிலிருந்து நான்கு வருடங்கள் வரை எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தவன்; அவள் அந்த பச்சை நிற கதவுகளை கொண்ட வீட்டை காலி செய்ததும் கூட தெரியாமல் இருந்தவன், இப்பொழுது , “Merry christmas டா ” பார்த்து அவன் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டு இருக்கின்றான். காரணம் ஸ்ரீ தான்.
நூற்றியோராவது ஆளாக வந்து ஸ்ரீ ‘Digital signal processing’ பாடத்தை விளக்கச் சொல்லி கேட்டு இருந்தால் கூட சலிக்காமல் விளக்கியிருப்பான்.
ஸ்ரீ யை சனிக்கிழமை வீட்டிற்கு வர சொல்லிவிட்டு அவளுடனான பேச்சை தொடர்ந்தான்.
“உன் நம்பர் அ என்ன பேர் ல save பண்ணிருக்கேன் தெரியுமா?”அவனுக்கு என்ன பெயரில் அவளின் தொடர்பு எண்ணை பதிவு செய்து வைத்து இருக்கின்றான் என்பதை அவளுக்கு சொல்லிவிட வேண்டும்.
அவளிடம் இருந்து ஒரு “கேள்விக்குறி (?)” வரும் வரை அவன் காத்துகொண்டு இருக்கவில்லை, முன்னமே ‘Shara’ என்று தட்டி அனுப்புவதற்கு தயாராக வைத்துக்கொண்டான். அவளுக்கு அவன் வைத்த பெயர் ‘Shara’.
“என்ன டா புது பேரே வச்சுட்ட” அவளிடம் இருந்து வந்த இந்த வார்த்தைகளைப் பார்த்து அவனுக்கு ஒரே பூரிப்பு.
“உன் போன் ல என் நம்பர் என்னன்னு save பண்ணிருக்க” அதே பூரிப்போடு கேட்டான்.
‘Veera’ இந்த பதிலைப் பார்த்து அவன் பூரிப்பு கொஞ்சம் புஸ் ஆனது.
“சரி! என் friend number ல இருந்து பேசுவேனே! அது?”
‘Veeraa’ கூடுதலாக ஒரு ‘A’ கொஞ்சம் செல்லமாக இருப்பதாக அவனாக நினைத்துக்கொண்டான். அவளிடம் பேசும் பொழுது அதிக நேரம் அவனால் புஸ் என்று இருக்க முடியாது.
சரி! ஏன் அவளுக்கு இவன் புதுசா ஒரு பேர் வைக்கணும்? அவள் பெயர் தான் என்ன? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.