வருஷம்-2023.
வீராவுடைய மின்னஞ்சலுக்கு ஷாராவுடைய மின்னஞ்சலில் இருந்த வந்த முதல் மின்னஞ்சல் அது தான்.
மெயில் அனுப்பிட்டேன் செக் பண்ணு என்று ஷாரா சொன்னதற்கு பத்திரமாக வந்து சேர்ந்தது என்றான் வீரா.
(நீங்கள் பத்தாவது பகுதியில் படித்த காட்சியே தான்)
போனை கையில் எடுத்தான் வீரா, வேகமாக ஜிமெயிலை திறந்தான். முதல் மின்னஞ்சலாக ஷாராவின் மின்னஞ்சல் அங்கே இருந்தது. வெள்ளிக்குறுந்திரையில் தடித்த எழுத்துக்களில் அவனுடைய மின்னஞ்சல் இன்பாக்ஸில் அவள் பெயர்.
அவன் அந்த மின்னஞ்சலை திறக்கவில்லை. மின்னஞ்சலை திறந்துவிட்டால் தடித்த எழுத்துக்களில் தெரியும் அந்த பெயர் சாதாரணமாக எழுத்துக்களாக மாறிவிடும்.
போனை கையில் வைத்துக்கொண்டு அறையில் இருந்து கூடத்திற்கு வந்தான்; அங்கே இடது பக்கம் ஒரு கண்ணாடி இருந்தது.லேசாக திரும்பிக் கண்ணாடியைப் பார்த்தவன் அந்த புன்னகையை காண முடியாமல் திரும்பிக்கொண்டான்.நாலடி நடந்தவன் கூடத்தை கடந்து அடுப்படியை வந்து நின்றான். அங்கே அந்த வீட்டில் அந்த தருணத்தில் யாருமே இல்லை. சுவர்களுக்கு தெரியாமல் புன்னைக்க நினைத்த வீரா ஒரு பக்கமாக இருக்கவில்லை. நடந்தான் சுற்றியும் பார்த்தான். அந்த வீட்டின் அத்தனை ஜன்னல்களும் பூட்டியே இருந்தது.மகிழ்ச்சியில் பறந்துகொண்டிருந்தான் வீரா.
“you know how happy I am ! Just to see your name in my inbox and that too in that bold fonts in white background”ஷாராவின் மனதிற்கு கேட்கும் என்று அவன் மனம் அவன் மனதிற்குள்ளேயே உதிர்த்த வார்த்தைகள் அது.
“you know how happy I am ! Just to see your name in my inbox and that too in that bold fonts in white background”
‘ஷாராவிற்கு கேட்டிருக்குமா?’ அவன் மனம் இன்னும் பேசியது. “எல்லாக் கதவும் பூட்டி தான் இருக்கு” மகிழ்ச்சியில் அவன் மனம் கத்தியது. அவன் மனம் பேசியதை எழுதினான் ஷாரா பார்க்கும் படியாய் status வைத்தான்.
அறைக்கதவுகளெல்லாம்
பூட்டியே இருக்கிறது
ய(ஜ)ன்னல்களிலும் கூட வழியில்லை
அங்கேயே தான் இருக்கிறேன் நான்
அங்கு இருந்தபடியே பறக்கிறேன் நான்
சுவர்களுக் கெல்லாஆம் வெளியில்
பரந்த வாஆன வெளியில்
சிரிக் கும்நடச்த் திரங்களை
பார்க்காமல் சிரித்தபடி
எனை சிரிக்க வைத்த நொடியதனை
நினைத்து இரசித்து படி
வெண்ணொளியைஇய் மறைத்து
தடித்த தட்டச் செழுத்தால்
உன் பெயரை கண்ட நொடி
அதை நினைத்து இரசித்த படி
பறக்கிறேன் நான்
இருந்த இந்த இடத்தில் இருந்தபடி
இருந்தபடியே இடைவெளியில் ஒரு நொடியில்
சுற்றியும் பார்க்கிறேன் நான்
பூட்டியே இருக்கிறது
என் அறைக்கதவுகளெல்லாம்
கதவுகள் தான் என்ன செய்யும்!
வெள்ளமாய் புரண்டோடும்
என் புன் நகைகளை!
எனை தேடி ஓடி வரும்
மகிழ்வான தருணங்களை!
என்னுள் உள்ள உன்னையும்
இறகில்லாமல் பறக்கும் என்னையும்
கதவுகள் தான் என்ன செய்யும்!
தீராத இந்த சந்தோசத்தை
தீரவே தீராத என் இந்நேசத்தை
‘வெண்ணொளியைஇய் மறைத்து தடித்த தட்டச் செழுத்தால் உன் பெயரை கண்ட நொடி’-her name in bold fonts in that white background.
ஒரு வழியாக அந்த மின்னஞ்சலை திறந்து, அவள் அனுப்பிய resume ஐ திறந்து பார்த்துவிட்டு,அவளின் அந்த மின்னஞ்சலை unread என்று குறித்து, ‘ஸ்பெஷல்’ என்கிற ‘லேபிள்’ போட்டு வைத்தான்.
whatsapp இல் அனுப்பிய resume இல் அவன் செய்யச்சொன்ன மாற்றங்களை அவளே செய்து அனுப்பியிருந்தாள்.
மனதில் இருப்பதை, இருந்ததை ஷாராவிடம் பேசவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த வீரா, அவனுடைய அப்பாவின் பிரிவுக்கு பின், மனசு போல் வாழ்க்கையை எல்லோரும் வாழ்ந்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தை கொண்டிருந்தான். யாரிடமும் எதையும் சொல்லாமலோ பேசாமலோ இருந்து விடக்கூடாது என்கிற தீர்மானத்தில் இருந்த வீராவிடம் முன்பிருந்த தயக்கமும் அச்சமும் கொஞ்சம் மாறியிருந்தது.
இப்போதெல்லாம் அவன் மனதில் பட்டதை கொஞ்சமேனும் ஷாராவிடம் பேசவோ கேட்கவோ செய்துவிடுகிறான்.
“எனக்கு கேட்கனும் தோனுது கேட்டுறேன் ப்ளீஸ்!
எனக்கு எப்பவாவது இப்படி மத்த friends கிட்ட வேலை கேட்கிறது resume prepare பண்ணி தரது இதெல்லாம் பண்ணீங்களா?”என்று ஷாராவை கேட்டான் .
“எனக்கும் அப்ப resume எல்லாம் prepare பண்ண தெரியாது. ஆனா நான் தான் உனக்கு refer பண்ணேன், நீ என் கம்பனிக்கு இன்டெர்வியூக்கு வந்த” ஷாராவிடம் இருந்து வந்த இந்த பதிலை, வீரா சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவனுக்குள் அன்று வரை இருந்த மாயயைகளில் ஒன்று, அன்று அந்த நேர்காணலில் அவன் எழுதிய அந்த தேர்வை மதிப்பீடு செய்தது அவளாக இருக்குமோ என்கிற எண்ணம். அவளே தான் அவனை அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற வைத்திருப்பாளோ என்கிற எண்ணம் அவனுக்கு எப்போதும் இருந்தது.இன்று ஷாராவிடம் இருந்து வந்த பதில் அன்று அப்படிதான் நடந்ததா என்று அவனை வியக்க வைத்தது.
“நான் பார்க்கவே இல்லையே” அவன் மனம் பின்னோக்கி சென்றது.
வருஷம் 2012.
வேலை தேடி பெங்களூருக்கு சென்று விட்டு திரும்பிய வீரா, ஷாரா வேலைக்கு கிளம்பும் நேரத்தில் அவள் ஏறக்கூடும் அதே பேருந்தில் ஏறினால் அவளைப் பார்த்துவிடலாம் என்கிற திட்டத்தில் தோல்வியடைந்திருந்தான்.
வீட்டிற்கு வந்தவன், ‘அவள் வேலை செய்யும் நிறுவனத்தை தேடிச் சென்றால் என்ன?’ என்று நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது தாடியுடன் வந்த ஒருவர், அன்றைய செய்தித்தாளை வீராவின் வீட்டில் வீசிவிட்டுச் சென்றார்.
எப்போதும் போல், கடைசிப்பக்கத்தில் இருந்து அந்த செய்தித்தாளை புரட்டினான் வீரா.ஆட்கள் தேவை விளம்பர பகுதியில் அவள் வேலை செய்யும் நிறுவனத்தின் பெயரை கண்டதும் கடவுளே காரணம் தேடித்ததந்தது போல் இருந்தது அவனுக்கு.
‘சனிக்கிழமை நேர்காணல்’ நிமிர்ந்து காலண்டரைப் பார்த்தான் வீரா ‘நாளைக்கு தான் சனிக்கிழமை’ .
அன்று அவன் அந்த நேர்காணலுக்கு செல்லப் போவது பற்றி யாரிடமும் சொல்லவில்லை.
வீட்டில் இருந்து கிளம்பும் போதிலிருந்தே அவனிடம் ஒரு தயக்கம். ஷாரா காரணம் சொல்லாமல் அவனிடம் பேசுவதை நிறுத்தி ஒரு வருடம் ஆகிறது. அவளைத் தொடர்பு கொள்ள முடியாமல் போய் சில மாதங்கள் ஆகிறது. இந்தச் சூழலில், வீரா வேலை கிடைக்க வேண்டும் என்று அந்த நேரக்காணலுக்கு கிளம்பவில்லை. அவளைப்பார்த்துவிட வேண்டும் என்றே தான் கிளம்புகிறான். அது அவனுள் பல்வேறு எண்ணங்களையும் தயக்கங்களையும் எழுப்பியது. ஒருவேளை அவளைப் பார்த்துவிட்டால், அவள் என்ன பேசுவாள், நாம் என்ன பேசுவது, என்று கேள்விகேட்டு படபடத்துக்கொண்டிருந்தது அவன் இதயம். “அவளே அந்த நேர்காணலை நடத்துகிறவளாக இருந்தால்?” அவன் மூளை அவன் இதயத்தை இன்னும் படபடக்க செய்தது.
அத்தனையும் உள்ளே வைத்துக்கொண்டு எப்போதும் போல் இல்லாமல் மெதுவாக நடக்கத்தொடங்கினான். அவள் அலுவலகத்திற்கு செல்லும் பேருந்து வந்து நின்றது. ஆனால், அவள் வீட்டின் பக்கம் இருந்து வரும் பேருந்து இல்லை, அதனால் அவன் அதில் ஏறவில்லை. அடுத்த சில நிமிடங்களில் அவளின் வீட்டின் பக்கம் இருந்து அவள் அலுவலகம் செல்லும் பேருந்தை தூரமாக பார்த்த நொடியில் வீட்டிற்கு திரும்பிவிடலாம் என்று யோசித்து கையில் வைத்திருந்த கோப்புகளை இறுகப் பற்றிக்கொண்டான்.அந்த பேருந்து வந்து நின்றது. “உள்ளே அவள் இருந்தால்?” அவன் இதயம் வேகமாக துடித்தது. அவன் மெதுவாக அந்த பேருந்தின் அருகில் சென்று மெதுவாக ஏறினான். சுற்றியும் பார்க்காமல் சுற்றியும் கவனித்தான். அந்த பேருந்தில் அவள் இல்லை.அவன் இதயம் கொஞ்சம் நிதானித்தது.
வீட்டில் இருந்து கிளம்பியது முதல் வீராவின் கவனம் வீராவிடம் மட்டுமே தான் இருந்தது. யாரோ தன்னை கவனித்து கொண்டிருப்பது போன்ற உணர்வில் இருந்த வீரா யார் முகங்களையும் பார்க்கவில்லை.அம்பிகா திரையரங்கு நிறுத்தத்தை பேருந்து வந்தடைந்தது. நிதானமாக இறங்கினான் வீரா. அவள் அலுவலகத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று வழி தெரியாமல் நின்றுகொண்டிருந்தான் வீரா. வழிகேட்டால் வழி சொல்லும் ஊர், ஆனால், அவன் யாரிடமும் கேட்கப்போவதில்லை.
சுற்றியும் கட்டிடங்கள், ஒரு முச்சந்தியில் தனியாக கையில் போனை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தான் வீரா. அந்த ஊரில் கூகிள் மேப்பை பயன்படுத்தி அந்த அலுவலகத்திற்கு சென்ற முதல் ஆள் வீராவாக தான் இருக்க முடியும். இன்னும் கொஞ்சம் தூரம் தான் என்றதும் வீராவால் நகர முடியவில்லை. “அவள் என்ன சொல்வாள்? என்ன கேட்பாள்?” வீராவின் மனதில் ஓடிக்கொண்டிருந்த லட்சம் கேள்விகளும் எண்ணங்களும் நின்றபாடில்லை. நின்றுகொண்டிருந்த வீரா மீண்டும் நடக்க ஆரம்பித்தான்.யாரும் அவனை பின் தொடர்கிறார்களோ என்கிற எண்ணம் அவனுக்குள்.”நீ ஏன் அவ கம்பெனி interviewக்கு போற?” யாரும் அவனை கேட்கப்போவதில்லை ஆனாலும் யாரேனும் ஒருவர் இந்த கேள்வியை கேட்டுவிட்டால் என்ன செய்வது என்கிற அச்சம் வீராவிற்கு.
“காதலித்துப் பார் காக்கை கூட உன்னை கவனிக்காது ஆனால் இந்த உலகம் உன்னையே கவனிப்பதாய் உணர்வாய்” வைரமுத்துவின் குரல் ஒரு வீட்டின் தொலைக்காட்சி பெட்டியில் இருந்து வீதிவரை ஒலித்துக்கொண்டிருந்தது.
போனைப்பார்த்த படியே நடந்துகொண்டிருந்த வீராவிடம் கூகிள் மேப் , “you have reached your destination” என்றதும் நிமிர்ந்தான் வீரா.
அவன் தேடி வந்த destination ஐ அவன் இன்னும் காணவில்லை. அவன் தேடி வந்தது ஷாராவை, அவன் கண்முன் தெரிந்ததோ ஒரு வீடு, “இது தான் அவ கம்பெனியா? போர்டு கூட இல்ல வீடு மாதிரி இருக்கு” என்று மேலே பார்த்துக்கொண்டிருந்தவன் கொஞ்சமாக தலையை கீழே கொண்டுவந்து நேரே பார்த்த பொழுது, அங்கு இன்னும் பலர் நேர்காணலுக்கு வந்திருந்ததை கண்டான்.
வாசலில் அவள் இல்லை. அவனை மேலே மாடிக்கு செல்லச் சொன்னார்கள்.படிகளை ஏறும் பொழுது எந்த உணர்வும் அவனுக்கு ஷாரா அங்கிருப்பதாக சொல்லவில்லை.
“இன்னும் வேலைக்கு வரலையா இல்ல இன்னிக்கு வரலையா? இல்ல வேற வேலைக்கு மாறிட்டாய்ங்களா?” கேள்விகளை அடுக்கிக்கொண்டே போவதை அவன் மனம் நிறுத்தவேயில்லை.
வீரா மேலே சென்றான். அங்கே மொட்டைமாடியில் கூடாரம் போடப்பட்டு ஒரு பக்கம் லாக்கர்களும் மறுபக்கம் பெஞ்சுகளும் இருந்தது. நேர்காணலுக்கு வந்தவர்கள் எல்லாம் அந்த பெஞ்சில் அமர்த்தப்பட்டார்கள். வீரா அந்த லாக்கர்கள் இருந்த பக்கத்தில் இருந்து சற்றே தள்ளி அமர்ந்தான்.
முதல் சுற்று எழுத்துத்தேர்வு அதில் தகுதிபெறுபவர்கள் இரண்டாம் சுற்று தனிப்பட்ட நேர்காணலுக்கு தகுதி பெறுவார்கள் என்று விளக்கிக்கொண்டிருந்தார் அங்கு வந்த ஒருவர். அவர் பேசிய வார்த்தைகள் வீராவின் காதுகளில் விழுந்தாலும் கவனத்தில் இல்லை. அவன் இன்னும் ஷாராவை காணவில்லை. எழுத்துத் தேர்வு ஆரம்பித்தது. முழுக்க முழுக்க ஆங்கில இலக்கணம் சார்ந்த கேள்விகள்.அங்கிருந்த அத்தனை பெஞ்சுகளில் வீராவை சுற்றி எத்தனை பெண்கள் இருந்தார்கள் எத்தனை ஆண்கள் இருந்தார்கள், அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவோமோ என்கிற எந்த அலட்டலும் வீராவிடம் இல்லை. எல்லோரும் தேர்வு எழுதிக்கொண்டிருந்த பொழுது அங்கே இரண்டு பெண்கள் அங்கிருந்த லாக்கரில் அவர்கள் பொருள்களை வைக்க வந்தார்கள். அவர்கள் அங்கு பணிபுரியும் பெண்களே தான்.அந்த லாக்கரை ஒட்டி ஒருத்தி வந்து நின்றதும் வீராவின் கவனம் விரிந்தது இதயம் படபடத்து, வீராவின் குனிந்த தலை நிமிரவில்லை; மெதுவாக பேசிய அவர்களின் குரலும் விரிந்திருந்த வீராவின் காதுகளை சரியாக எட்டவில்லை. அவன் கண்கள் தேர்வுத்தாள் மீது தான் இருந்தது. ஆனால்,முழுக்கவனமும் அந்த இரண்டு பெண்கள் மீது இருந்தது.
“அவங்க இல்லை” அவன் மனதிற்குள் ஏமாற்றத்துடன் ஒலித்த குரலோடு அவன் விட்ட பெரு மூச்சில் அவன் இதயத்தின் வேகம் கொஞ்சம் குறைந்தது.
எல்லோருடைய தேர்வுத்தாள்களையும் வாங்கிக்கொண்டு கீழே எடுத்துச்சென்றார் ஒருவர்.
அவர் திரும்பி வருவதற்குள், ‘அவ்வளவு தான்! மறுபடி பார்க்கிறதுக்கு இருந்த கடைசி வாய்ப்பு இதுலயும் பார்க்க முடியலை’ என்று வீரா நினைத்துக்கொண்டிருக்க அங்கே வந்த ஒருவர் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றவர்களின் பெயர்களை வாசிக்கலானார்.
அங்கு இருந்த எல்லோரும் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். வீரா எதையும் சட்டை செய்யவில்லை.
“வீர சந்திரன்” என்றதும் சட்டென்று நிமிர்ந்தான் வீரா. அவனுக்கு ஆச்சரியம். அவனுடைய தேர்வுத்தாள் ஷாராவின் கைகளுக்கு சென்றிருக்குமோ? அவளே தான் தன்னை இரண்டாம் சுற்றுக்கு தேர்ந்தெடுத்திருப்பாளோ? என்றெல்லாம் நினைத்தான்.
அவன் கையில் ஒரு படிவத்தை கொடுத்து விவரங்களை பூர்த்தி செய்யச்சொன்னார்கள். எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்துவிட்டான், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் யாரையேனும் தெரிந்தால் அவர்கள் பெயரை குறிப்பிடச் சொல்லி கேட்டிருந்தார்கள். அவனுக்கு ஷாராவுடைய பெயரை எழுத வேண்டும் போல் இருந்தது.பேனாவை புடித்துக்கொண்டிருந்த அந்த விரல்கள் எழுதாமல் இருந்தது. ஒரு புள்ளி வைக்க போன பொழுது,!”எப்படி தெரியும்? ஷாரா யாரு ன்னு கேட்டா என்ன சொல்லுவ?” அவன் மனதிற்குள் இருந்து ஒருவன் கேட்டான்.
“அது இருக்கட்டும் உன்கிட்ட பேசவே இல்லை இப்ப இங்க தான் வேலை பாக்கிறாங்களா தெரியாது அப்படியே வேலைப்பார்த்தாலும் உன்னை தெரியாதுன்னு சொல்லிட்டா?” வீரா மனதிற்குள் இன்னொரு குரல் கேட்டது.
“எல்லாத்தையும் விடு! உன்கிட்ட பேசாததுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கு இதுல அவங்கள பார்க்கிறதுக்காகவே இன்டெர்வியூ வந்தது தெரிஞ்சா பார்த்தாலும் பேசவே மாட்டாய்ங்க”வீராவின் மனதிற்குள் இப்படியான பல குரல்கள் பல கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தது.
அவனுடைய விரல்கள் தளர்ந்து பேனாவில் இருந்து பிடியும் தளர்ந்து பேனா சாய மீண்டும் பேனாவை இறுக பற்றினான்.’எழுதிறலாம், நீ வந்தது தெரிஞ்சு அவங்களே உன்ன செகண்ட் ரவுண்டு க்கு செலக்ட் பண்ணிருந்தா?”வீரா மனதில் ஓடிக்கொண்டிருந்த குரல்கள் ஓயவில்லை.
எல்லோரும் அந்த படிவத்தை திருப்பிக்கொடுத்துவிட்டார்கள்.வீராவின் மனது அந்த ஒரு சில நிமிடங்களில் அந்த படிவத்தில் ஓராயிரம் முறை அவள் பெயரை எழுதியது, ஆனால் வீரா எழுதவில்லை. “அவங்க இங்க வேலை பாக்கிறாங்களா கேளு”அவன் அடி மனதில் இருந்து ஒரு குரல் தைரியம் சொன்னது.
வீரா அந்தப்பெயரை; ஷாராவின் உண்மையான பெயரை; எழுதாமலேயே கொடுத்தான். அவன் அந்த பெயரை யாரிடமுமே தான் சொல்வதில்லையே! (அப்பறம் எப்படி நமக்கு தெரியும்)
வீராவை தன் பின்னால் வரச்சொன்னவர், அன்று வீராவை விட வேகமாக நடந்து முன்னே சென்றார். அவர்கள் அந்த மொட்டைமாடியில் இருந்து கீழே இறங்கினார்கள். எப்படியும் அவளை கண்டுவிடலாம் என்று வீரா நினைத்துக்கொண்டிருக்க, கீழே இறங்கியவர் படிக்கட்டில் இருந்து இடதுபுறம் திரும்பினார். வலதுபுறம் கண்ணாடி கதவுகளுக்கு அந்தப் பக்கம் அலுவலகம் இயங்கிக்கொண்டிருந்தது. அந்த படிக்கட்டில் இருந்து வீரா இறங்கும் பொழுதே, அவன் கண்கள் அந்த கண்ணாடி கதவுகளை துளைத்து ஷாராவைத் தேடியது. அவர்கள் அந்த கண்ணாடி கதவை நெருங்கிய பொழுது, அங்கே அந்த கதவுகளுக்கு வலது பக்கம் இருந்த ‘card reader’ வீராவிற்கு வெறுப்பூட்டியது. பணியாளர்கள் தவிர யாரும் அந்த கதவுகளைத் தாண்டி செல்ல முடியாது. வீராவின் கண்கள் சென்ற தூரம் வரையில் ஷாரா இல்லை.இடதுப்பக்கம் திரும்பியவரை அழைத்து,”நம்மை உள்ள போகலையா ன்னு” வீராவிற்கு கேட்க வேண்டும் போல் இருந்தது;அவரோ வீராவை விட நான்கு அடி தள்ளிச் சென்று ஒரு கதவின் அருகே நின்று வீராவிற்காக காத்துக்கொண்டிருந்தார். வீரா வேகமாக நடந்தான். அந்த கண்ணாடி கதவின் அருகே நின்று வீராவின் மனம் தலையில் அடித்துக்கொண்டு வீராவை தொடர்ந்து சென்றது.
மிகச் சிறிய ஒரு அறையில், இரண்டு நாற்காலிகள் ஒன்றில் அவர் அமர்ந்துகொண்டு மற்றொன்றில் வீராவை அமரச்சொன்னார்.எப்போதும் போல், மொத்த நாற்காலியும் ஆக்கிரமித்துக்கொண்டு உட்கார்ந்தான் வீரா. “இப்ப என்ன புடுங்க போற” என்ற மூச்சிறைக்க கேட்டது அவனை தொடர்ந்து ஓடி வந்த வீராவின் மனம்.
வருஷம் 2023.
“அப்ப நீங்க செலக்ட் பண்ணி தான் செகண்ட் ரவுண்டு செலக்ட் ஆனேனா? நான் உங்களை பார்க்கவே இல்லையே! பார்த்திருந்தா என்கிட்ட வந்து பேசியிருக்கலாம் நான் உங்க பேரை reference ல எழுதிருப்பேன் நானும் IT guy ஆகிருப்பேன்” நிஜமாகவே அவள் சொல்லித்தான் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றோமோ என்று நினைத்து வீரா பரவச கேள்விகளை கொட்டினான் வீரா.
வீராவின் மனம் அந்த நேர்காணல் நடந்த அறைக்கு சென்றது. அவரின் கண்களை வீரா பார்க்கவே இல்லை. “நான் வேலை தேடி வரலை, ஷாரா எங்க இருக்கா ன்னு சொல்லுங்க”என்று அவன் மனம் பேசும் உண்மைகளை அவனால் பேச முடியவில்லை.அவன் மனத்திரையில் இந்த காட்சிகள் ஓடிக்கொண்டிருந்த பொழுது,
“reference ல பேர் போட்ருந்த கிடச்சருக்கும்” ஷாராவிடம் இருந்து பதில் வந்தது.
“அதெல்லாம் விஷயம் இல்லை உள்ள போய் பேசினது அப்படி” என்று வீரா அன்று நடந்ததை விவரித்தான்
கேள்வி :’ஏன் இவ்வளவு நாள் வேலைக்கு போகலை?’
வீரா: என் field ல வேலை தேடிட்டு இருந்தேன்
கேள்வி: அப்ப ஏன் இங்க வந்தீங்க
வீரா : உங்க விளம்பரம் பார்த்தேன் வேலை கிடைக்கிற வரை இந்த வேலைக்கு போகலாம் ன்னு வந்தேன்
இதை ஷாராவிடம் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது, அந்த பதிலில் உண்மை இல்லை என்பதை ஷாராவிடம் குறிப்பிட்டு சொன்னான் வீரா.
கேள்வி : அப்ப உங்க field ல வேலை கிடைச்சா போயிடுவீங்க?
வீரா: உடனே எப்படி கிடைக்கும் ? ஒரு வருஷம் இல்லை இரண்டு வருஷம் கண்டிப்பா இருப்பேன்
மீண்டும் பொய் சொன்னான் வீரா.ஷாரா அங்கு தான் இருக்கிறாள் என்பது நிச்சயமாக தெரிந்திருந்தால் அந்த நிறுவனத்தை விட்டு அவர்கள் துரத்தினாலும் போகாமல் இருந்திருப்பான்.
“பாப்போம் வீரா! கால் பண்றோம்!” என்று கைகொடுத்து கைவிட்டு அனுப்பி வைத்தார்கள்.
அன்று நடந்ததை வீரா சொல்லி முடித்தததும்.அந்த பதிலால் தான் உன்னை எடுக்கவில்லை என்றாள் ஷாரா.
“நிஜமா நான் வந்தது தெரியுமா ? எப்படி தெரியும் ” குழந்தை மாதிரி வீரா விடாமல் கேட்க ,”இல்ல எனக்கு தெரியாது ” என்று முடித்தாள் ஷாரா.
ஷாராவின் செயல்களும் பதில்களும் எப்போதும் வீராவிற்கு புதிராக இருப்பது போலவே இந்த பதிலும் புதிராக ஆனது.
அவள் ஏன் பேசாமல் பிரிந்தாள் என்பதற்கும் கூட வீராவிற்கு விடை கிடைக்கவில்லை. இப்போது அவள் சொன்ன இரண்டு பதில்களில் எது உண்மையாக இருக்கும்?
என்ன தான் நடந்தது. 2023 இல் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள், இடையில் என்ன நடந்தது?
தொடர்ந்து படியுங்கள்.